கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 2

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே!

அத்தியாயம் 2

பிரம்மாண்ட மாளிகை. கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்ட அந்த மாளிகை, பணச்செழுமையை மூலைக்கு மூலை பறைசாற்றியது. பெரிய பெரிய ஓவியங்கள் சுவற்றை அலங்கரித்தன.
பெரிய பெரிய பூங்கொத்துகள் ஆங்காங்கே காட்சியளித்தன. லாந்தர் விளக்குகள், தேக்கு மரத்தில் செய்யப்பட்டுப் பித்தளைக் குமிழ்கள் வைக்கப்பட்டிருந்த கதவுகள்.

பெரிய பெரிய ஸோஃபாக்கள், கட்டில்கள், மேஜைகள் எல்லாமே பணக்காரத்தனத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன.

பூஜையறையில் கூட்டிப் போய் நந்தினியை விளக்கேற்ற வைத்தார்கள். அவர்களுடைய இஷ்ட தெய்வமான முருகன் மற்றும் தேவிகளின் படங்களும் பூஜையறையில் இருந்தன. இரண்டு பெரிய வெள்ளி விளக்குகள் ஜோடியாக இருந்தவற்றை நந்தினி ஏற்றியதும், ஜமீன்தாரிணி சித்ரா தேவி தீபாராதனை காட்டினாள்.

அதன் பிறகு, நந்தினியை அவளுடைய அறையில் கொண்டு போய் விட்டார்கள். பெரிய அறை. அந்த அறையே அவளுடைய மொத்த வீட்டை விடப் பெரியதாக இருந்தது. மாமியார் வந்து அறையில் இருந்த பொருட்களை அவளுக்குக் காண்பித்து விட்டுப் போனாள்.

" இதோ இந்த அலமாரியில் உனக்குத் தேவையான புடவைகள், நகைகள் எல்லாமே இருக்கு. தொறந்து பாத்து உனக்குப் பிடிச்ச புடவை ஏதாவது எடுத்து மாத்திக்கோ. நகைகளைக் கழட்டி உள்ளே பத்திரமா வச்சுக்கோ. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டதுக்கப்புறம் வெளியே வா. நல்ல புடவையாவே கட்டிக்கோ. நகைகளையும் கொஞ்சமாவது போட்டுக்கிட்டு வா. கல்யாணப் பெண்ணைப் பாக்கணும்னு அக்கம் பக்கத்தில் இருக்கறவங்க ஒவ்வொருத்தரா வந்து போயிட்டே இருப்பாங்க. இரவு உணவு எல்லாருமாச் சேந்து உக்காந்து சாப்பிடறது இங்க வழக்கம். இன்னைக்கு நீ தான் எல்லாருக்கும் இனிப்பு பரிமாறணும்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.

" அப்புறமா ஒரு விஷயம். என் பையனுக்கு ரெண்டாவது கல்யாணத்துல இஷ்டமில்லை. அவனைக் கொஞ்சம் வற்புறுத்தித் தான் கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சோம். அதுனால உங்கிட்டக் கொஞ்சம் கடுமையா அவன் பேசலாம். முன்னே பின்னே நடந்துக்கலாம். நீ கொஞ்சம் அதையெல்லாம் பொருட்படுத்தாமப் பொறுமையா நடந்துக்கோம்மா. நாளாக ஆக அவனே சரியாயிடுவான். நான் வழிபடற அந்த வெற்றி வேல் முருகன் ஒரு வழி விடுவான். ஆனானப்பட்ட முருகனே ரெண்டு கல்யாணம் செஞ்சுக்கலையா? நீ ஒண்ணும் இதை நெனைச்சுக் கவலைப்படாதே. ஒன்னோட முகத்தைப் பாத்தா, நீ இதையெல்லாம் ஜெயிச்சு வருவேன்னு எனக்கு மனசுக்குள்ள தோணுதும்மா" என்று சொல்லி விட்டுப் போனாள்.

மாமியார் என்ற அதிகாரமோ, இந்தப் பெரிய மாளிகையின் ஜமீன்தாரிணி என்ற தோரணையோ கொஞ்சம் கூட இல்லாமல் அவளிடம் பிரியமாகவே பேசினாள் ஜமீன்தாரிணி சித்ரா தேவி.

" ஓ, இது தான் காரணமா? காலையில தாலி கட்டினபோது கூட அவர் முகம் இறுக்கமா இருந்துச்சு. கொஞ்சம் கூட முகத்தில் சந்தோஷம் இல்லையேன்னு நெனைச்சேன். கொல்லி மலைப் பாவையே! கொற்றவை தேவியே! நீ தாம்மா இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வச்சு என் கணவரை என் கூட சேத்து வைக்கணும்" என்று நினைத்தவள் உடை மாற்றிக் கொள்ள எழுந்தாள்.

அலமாரியில் விதவிதமான புடவைகள். அத்தனையும் விலை உயர்ந்தவை. கொஞ்சம் ஜரிகை குறைந்த எளிமையான புடவை ஒன்றை மாற்றிக் கொண்டாள். கழுத்தில் ஒரு முத்துமாலையும், கைகளில் பவழமும், முத்தும் வைத்த வளையல்களையும் அணிந்து கொண்டாள். தலையைத் தளரப் பின்னிக் கொண்டாள். படுத்துக் கொள்ள மனமில்லாமல் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

புகுந்த வீட்டில் வந்தவுடனே போய்ப் படுத்துக் கொள்ள அவள் மனது கேட்கவில்லை. அவளுடைய கண்கள் எதிரே இருந்த ஒரு பெண்ணின் அழகோவியத்தில் படித்தது. சாந்தம் ததும்பும் முகத்துடன், அடக்கமான அழகுடன் பேரழகுப் பெட்டகமாக இருந்தாள் அந்தப் பெண். விழிகளில் கருணை பொங்கி வழிந்தது.

' இந்தப் பெண் தான் என் கணவரோட முதல் மனைவியா இருக்கணும். எவ்வளவு அழகாக இருக்காங்க? பாவம் இந்தக் குடும்பத்தில் வாழக் கொடுத்து வைக்கலையே அவங்களுக்கு? ' என்று நினைத்தாள்.

அவள் பார்த்துக் கொண்டிருந்த போதே அந்தப் பெண்ணின் கண் விழிகள் உருள ஆரம்பித்தன. முகத்தில் திடீரென ஒரு கோபம் தெரிந்தது. கண்கள் செக்கச் செவேலென மாறின. அந்தப் பெண்ணுடைய கைகள் அவளை நோக்கி நீண்டன. கழுத்தை நெறிக்க ஆரம்பித்தன.

வீலென்று கத்திக் கொண்டு மயங்கி விழுந்தாள்.

" சின்னம்மா, சின்னம்மா, எழுந்திருங்க" என்று யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. முகத்தில் சிலீரென்று தண்ணீர் பட்டது. கண்களைக் கஷ்டப்பட்டு விழித்துப் பார்த்தாள்.

எதிரே ஒரு சின்னப் பெண் நின்று கொண்டிருந்தாள்.

" என்னம்மா? சேரில் சாய்ஞ்சுக்கிட்டே தூங்கிப் போயிட்டீங்களா? அசதியா இருக்கா? " என்று கேட்டாள்.

' அவளிடம் நடந்ததைச் சொல்ல வேண்டாம். சொன்னால் யாரும் நம்புவாங்களோ என்னவோ தெரியலை. ஒருவேளை எனக்குத் தான் மனபிரமையோ என்னவோ? ' என்று யோசித்துக் கொண்டே கைகளால் கழுத்தைத் தடவினாள். கழுத்தில் எரிச்சலும் வலியும் தெரிந்தன.

' அப்படின்னா பிரமை இல்லை. நடந்தது உண்மை தான்' என்று நினைக்கும் போதே அடி வயிற்றில் சிலீரென்றது. பயம் வந்து வாயில் கப்பென்று பந்து போல் அடைத்தது.

" என்னக்கா, மாலையெல்லாம் போட்டு நகையெல்லாம் போட்டதில வலிக்குதா?" என்று அந்தப் பெண் கேட்க, "ஆமாம்" என்றாள்.

" என் பேரு பொன்னி. இந்த வீட்டில கொழந்தையில் இருந்து வேலை பாக்கறேன். மறந்து போய் உங்களை அக்கான்னு கூப்பிட்டுட்டேன் சின்னம்மா" என்றாள் பொன்னி வருத்தத்துடன்.

" அதுனால பரவாயில்லை பொன்னி. இனிமே அக்கான்னே கூப்பிடு. அதுவே நல்லாருக்கு. என் பேரு நந்தினி. எனக்குக் கூடப் பொறந்தவங்க யாருமே இல்லை. அதுனால நீ அக்கான்னு கூப்பிட்டது மனசுக்கு சந்தோஷமாவே இருந்தது. அப்படியே கூப்பிடு. நந்தினின்னும் கூப்பிடலாம். இல்லை அது கஷ்டமா இருந்தா, நந்தினிக்கான்னு கூடக் கூப்பிடலாம்" என்று நந்தினி சொன்னதும், அந்த அப்பாவிப் பெண்ணின் முகம், சாக்கலேட்டைக் கண்ட குழந்தை முகம் போல மலர்ந்து போனது.

" கழுத்தைக் காமிங்க அச்சச்சோ, இம்புட்டுச் செவந்து கெடக்கே! இருங்க தேங்காயெண்ணெய் தடவி விடறேன்" என்று சொல்லி விட்டு, எண்ணெயை எடுத்து மென்மையாகத் தடவினாள். இதமாக இருந்தது நந்தினிக்கு. கண்களை அப்படியே மூடிக் கொண்டாள்.

" அக்கா, சொல்ல மறந்துட்டேனே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. அபலா அக்காவும் ரொம்ப அழகா இருப்பாங்க" என்று சொன்னவள், நாக்கைக் கடித்துக் கொண்டு தலையில் தட்டிக் கொண்டாள்.

" யாரு அபலா அக்கா. அவரோட மூத்த சம்சாரமா? அதோ, அந்தப் படத்தில இருக்காங்களே, அவங்க தானே?" என்று கேட்டாள் நந்தினி.

" ஆமாம், அவங்களே தான். உங்க எதிரில அவங்களைப் பத்திப் பேச வேணாம்னு பெரியம்மா சொன்னாங்க. மறந்தே போயிட்டேன்" என்றாள் பொன்னி.

" பரவாயில்லை, நீ சொன்னதை நான் மறந்துட்டேன். நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். நீ எனக்கு அதுக்கு பதிலா ஒரு ஹெல்ப் செய்யணுமே? செய்வயா?"

" கண்டிப்பாச் செய்யறேன். சொல்லிப் பாருங்களேன்" என்றாள் பொன்னி.

" இந்த ஜன்னல் வழியாப் பாத்தா, வீட்டைச் சுத்தி அழகாத் தோட்டம் தெரியுதே? என் கூட வந்து சுத்திக் காமிக்கறயா?" என்று கேட்டதும், துள்ளிக் குதித்துக் கொண்டு கிளம்பினாள் பொன்னி.

நந்தினி எழுந்ததும், வலது கால் கட்டைவிரல் சுரீரென்று வலித்தது. குனிந்து பார்த்தாள். காலையில் இடித்துக் கொண்ட இடத்தில் தோல் வழண்டு, லேசாக வீங்கியும் இருந்தது.

" என்னக்கா இப்படி? வந்ததும் வராததுமா இப்படிக் காயம் பட்டுக்கிட்டிருக்கீங்களே? பாத்து வரக் கூடாதா? நீங்க நடந்து வந்த இடமெல்லாம் ரத்தமாச் சொட்டி இருந்தது" என்று செல்லமாக அவளைக் கடிந்து கொண்டு கால் காயத்தைச் சுத்தம் செய்து மருந்து போட்டு விட்டாள்.

இரண்டு பேரும் தோட்டத்துக்குச் சென்றார்கள். வகை வகையான பூச் செடிகள். வண்ண வண்ண ரோஜாக்கள் பூத்துக் குலுங்கின. மல்லிகை, முல்லை, இருவாட்சி, ஜாதி அனைத்தும் மொட்டுக்களாகக் கொடிகளில் மணம் பரப்பின. சாமந்திப் பூக்கள் பாத்திகளில் அழகாகச் சிரித்தன.

அவற்றைத் தவிர நிறைய மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அடர்ந்த கிளைகளுடன் நிழல் பரப்பிக் கொண்டிருந்தன.

அப்படிப்பட்ட ஒரு மரத்தில் ஊஞ்சல் கட்டப் பட்டிருந்தது. அதில் போய் நந்தினி, சின்னக் குழந்தை போல மகிழ்ச்சியுடன் உட்கார்ந்து கொண்டு ஆட ஆரம்பித்தாள்.

" சரி, நீங்க அப்படியே ஊஞ்சலாடிக்கிட்டு இருங்க. நான் போய் சாயந்திர பூஜைக்கு மாலை கட்டக் கொஞ்சம் பூப் பறிச்சுட்டு வரேன்" என்று அவளை அங்கே தனியாக விட்டு விட்டு, அங்கிருந்து பொன்னி நகர்ந்தாள்.

சுற்றிலும் கண்களைச் சுழல விட்டு, இயற்கையை இரசித்துக் கொண்டே, நந்தினி ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தாள்.

திடீரென்று ஊஞ்சல் படுவேகமாக ஆடியது. பயங்கரமான வேகத்துடன் விர்விர்ரென்று ஊஞ்சலாட, நந்தினியால் கட்டுப்படுத்த முடியவில்லை. நேரமாக ஆக, ஊஞ்சலின் வேகம் அதிகரித்துக் கொண்டே போனது. பயத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டாள். காதில் யாரோ வந்து, " போயிடு இங்கிருந்து. சீக்கிரமே போயிடு. அது தான் உனக்கு நல்லது" என்று ஒரு பெண்ணின் குரல் கிசுகிசுத்தது. நந்தினியின் கண்கள் அப்படியே சொருகின.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்,

 
Top