கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 20

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே! 20

அத்தியாயம் 20

நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ர சொரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி

நாம சம்புகுமாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்பிரம வீர நமோநம ...... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்

ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலுங்குண ஆசார நீதியும் ஈர முங்குரு சீர்பாத சேவையு ...... மறவாத

ஏழ் தலம் புகழ் காவரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பீர நாடாளுநாயக ..... .வயலூரா

ஆதரம்பயி லாரூரர்தோழமை
சேர்தல் கொண்டவரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மா
கயிலையிலேகி

ஆதி யந்தவு லாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவூர் நானாடதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் ...... பெருமாளே..........

பாடலின் பொருள்

லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி!

வேதங்கள் , மந்திரங்கள்,இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி!

பேரறிவுக்குத் தலைவனானதெய்வமே, போற்றி, போற்றி!

பல கோடிக் கணக்கான திருப் பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே போற்றி,போற்றி!

அனைத்து உயிர்களுக்கெல்லாம் இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே போற்றி, போற்றி!

தன் காலால் பாம்பை அடக்கிக் கட்டி மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி!

எதிரிகளான சூரர்களைத் தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி,போற்றி!

இசை ஒலி எழுப்பும் சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி,போற்றி!

மிகவும் பராக்ரமமான போர்வீரனே, போற்றி, போற்றி!

மலைகளுக்கெல்லாம் அரசனே,
திருவிளக்குகளின் மங்களகரமான ஒளியே, போற்றி, போற்றி!

தூய்மை மிகுந்த பரவெளியில் லீலைகள் புரிபவனே, போற்றி, போற்றி!

தெய்வயானையை மணாட்டியாகப் பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி!

உனது திருவருளைக் கொடுத்து அருள்வாயாக!

தானம், பல சிறப்பான பூஜைகள் செய்தல், நல்ல நூல்களைப் படித்தல், நற்குணம், ஒழுக்கம், நியாயம்,
கருணை, குருவின் திருப்பாதங்களைச் சேவித்தல் ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும் சோழமண்டலத்தில்,

ஏழு உலகங்களில் உள்ளோரும் மெச்சுகின்ற காவேரி நதியால் செழித்து வளமுறும் சோழ மண்டலத்தில்,

மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் ராஜகெம்பீரம் என்னும் நாட்டை ஆளுகின்ற அரசனே!

வயலூருக்குத் தலைவா!

தன் மீது அன்பு வைத்த திருவாரூராரின் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்பை
நாடியவராய், அவருடன் முன்பொருநாள்,
ஆடலில் சிறந்த, விரும்பத் தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் அங்கே, கயிலை எனப்படும் அழகிய (கயிலாய ஞானக் ) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய ,

சேரர் பெருமானாம் ( சுந்தரரின் நண்பர்) நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து வைகாவூர் அதாவது திருக்கற்குடி அல்லது உய்யக்கொண்டான் என்று அழைக்கப்படும் தலத்தில் வீற்றிருக்கும் மற்றும்,

திருஆவினன்குடி (பழநிமலை) என்னும் தலத்தில் வாழ்வுகொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே போற்றி போற்றி!

( திருப்புகழ் பாடலும் விளக்கமும்)

நந்தினியின் கதை

சத்யன் கூறிய தகவல்கள் அதிர்ச்சியோடு ஆச்சர்யத்தையும் சேர்த்துத் தூண்டின. இப்படி கூட நடக்குமா என்று ஆச்சர்யப்படுவதைக் காட்டிலும் நடந்திருக்கிறதே என்று பயப்பட வேண்டி இருந்தது.

" சலோனி என்னிடம் நடந்ததை எல்லாம் சொன்னபோது எனக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. பல வருடங்களாகத் திட்டம் போட்டு செயலில் இறங்கின அபிராஜ் மாதிரி ஆளெல்லாம், ஜெயிலுக்குள்ள அடக்க ஒடுக்கமா உக்காந்திருக்கற டைப் இல்லைன்னு எனக்கு மனசுல உறுதியாத் தோணிடுச்சு. ஊருக்கு வந்ததும் அவனைப் பற்றி விசாரிச்சுத் தெரிஞ்சுகிட்டு உங்களையும் எச்சரித்து வைக்கலாம்னு நெனைச்சேன். சில முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் எடுக்க ஆரம்பிச்சேன். அது என்னன்னு அப்புறமாச் சொல்லறேன்.

நாங்க இந்தியா வரலாம்னு யோசிச்சு திடீர்னு தான் முடிவெடுத்தோம். அதுவும் விடுமுறை சமயமா இருந்ததுனால கிளம்பினோம். எங்க கூடவே அப்பா, அம்மாவும் உற்சாகமாக ஊரைப் பாக்க விருப்பப்பட்டுக் கிளம்பினாங்க. இந்தச் சாக்கில் மகளோடயும் சில நாட்கள் கழிக்கணும்னு அவங்க நெனைச்சதிலயும் தப்பில்லையே? என்னால மறுக்க முடியலை. நாங்க பெரியவங்க நாலு பேர், மகிழன் சேத்து அஞ்சு டிக்கெட். நீண்ட பயணம். வயசானவங்களைக் கூட்டிட்டு வரதுனால அவங்களோட சௌகர்யத்தையும் பாக்கணுமே?

ஒரே ஏர்லைன்ஸில் டிக்கெட் கெடைக்கறது குதிரைக்கொம்பா இருந்துச்சு. சரி, இனிமேல் கஷ்டம், அடுத்த வருஷம் பாத்துக்கலாம்னு நெனைச்சபோது திடீர்னு டிக்கெட் கிடைச்சது. எங்களுக்குத் தெரிஞ்ச டிராவல் ஏஜன்ட், யாரோ அஞ்சு டிக்கட்டை கரெக்டா கேன்ஸல் பண்ணறாங்க. எப்படியாவது தெரிஞ்சவங்க மூலமா உங்களுக்கு வாங்கித் தந்துடறேன்னு சொன்னான். ஆச்சர்யமா இருந்தாலும் சந்தோஷமா அக்ஸெப்ட் பண்ணினோம். எந்தவிதமான எக்ஸ்ட்ரா பணமும் இல்லாமல் ஈஸியா டிக்கெட் அரேஞ்ச் ஆயிடுச்சு. இது முதல் நெருடல். எங்களுக்கு அப்போ புரியலை" என்று நிறுத்தினான் சத்யன். அடுத்து ஸலோனி ஆரம்பித்தாள்.

" அடுத்த பிரச்சினை ஹாஸ்பிடலில் இருந்து வந்தது. ரெண்டு பிஸியான டாக்டர்களுக்கு ஒரே சமயத்தில் லீவு தரமாட்டோம்னு தகராறு பண்ணினாங்க. என்ன பண்ணறதுன்னு முழிச்சுட்டு நின்ன சமயத்தில் திடீர்னு லீவ் அதுவும் பெயிட் வெகேஷன் ரெண்டு பேருக்கும் கொடுத்துட்டாங்க. இது ரெண்டாவது நெருடல்.

மூணாவதா, மகிழன் எங்களோட வரத் தயாராக இல்லை. அவனோட ஃப்ரண்ட் வீட்டில் தங்கிக்கறேன்னு சொன்னான். இந்தியா வர அவனுக்கு இஷ்டமில்லை. அவனோட ஃப்ரண்ட் வீட்டிலயும் மகிழன் வந்து எங்க வீட்ல தாராளமாய் தங்கிக்கட்டும்னு சொன்னாங்க. ஆனா திடீர்னு அவங்களும் வெகேஷனுக்கு யு.கே . போறதாச் சொன்னதும் மகிழன் வேற வழியில்லாமல் எங்களோட வருவதற்கு சம்மதிக்க வேண்டிய சூழ்நிலை. இது மாதிரி குட்டிக் குட்டியா நிறைய சம்பவங்கள். முதலில் இயல்பா நடந்த மாதிரி இருந்தாலும் ஏதோ ஒரு சக்தி நாங்க இந்தியா வரதுல ரொம்ப ஈடுபாடு காட்டிருக்குன்னு அப்புறமாப் புரிஞ்சுது" என்று நிறுத்தினாள் ஸலோனியும்.

" இது எல்லாமே தற்செயலாக நடந்ததா இருக்கலாமே? உங்களுக்கு ஏன் இந்த மாதிரி சந்தேகம் வந்ததுன்னு சரியாப் புரியலை. நீங்க எதையோ நினைச்சு வீணாக் கற்பனை பண்ணிக் கவலைப்பட்டிருக்கலாம்னு எனக்குத் தோணுது. என்னைத் தப்பா நினைக்காதீங்க" என்ற ராஜசேகரை வருத்தத்துடன் பார்த்தான் சத்யன்.

" நான் சொல்லப் போறதை முழுசாக் கேட்டுட்டு உங்களோட கருத்தைச் சொல்லுங்க. இதுக்கெல்லாம் ஹைலைட்டா நடந்த விஷயம் தான் எங்களுடைய சந்தேகத்தின் அடிப்படைக் காரணம். நானும், சலோனியும் ஃப்ளைட்டில் வேற வேற வரிசையில் உட்கார்ந்திருந்தோம். பக்கத்துப் பக்கத்து சீட் கிடைக்கலை. அப்பா, அம்மா ரெண்டு பேரும் பிஸினஸ் கிளாஸ்ல உக்காந்திருந்தாங்க. மகிழனோட டிக்கட்டும் அப்கிரேடாகி அவனும் பிஸினஸ் கிளாஸ்ல உக்காந்திருந்தான்.

சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் இறங்கின ஒருத்தர் என் கையில் சட்டுன்னு ஒரு பேப்பரைத் திணிச்சுட்டுப் போயிட்டார். அவரைக் கூப்பிட முயற்சி செஞ்சேன். வேகமா இறங்கிப் போயிட்டார். இதே மாதிரி அனுபவம் ஸலோனிக்கும். அவளுக்குக் கிடைச்ச அந்த பேப்பரையும் எடுத்துட்டு என் சீட்டுக்கு வந்தா. ரெண்டு பேரும் படிச்சோம். ரெண்டிலயும் எழுதிருந்த விஷயம் ஒண்ணு தான்.

' உங்களை எப்படியாவது இந்தியா வர வைக்கணும்னு நிறைய முயற்சிகள் செஞ்சிருக்கோம். நீங்க விஸிட் செய்யப் போற திருவிழாவில் முருகன் கோயிலுக்குப் போவீங்க. அங்கே இருக்கற நகைகள் எல்லாமே நியாயமா எனக்குச் சேரவேண்டிய பொக்கிஷத்தின் பகுதி. நான் எப்படியாவது இந்த முறை அந்தப் பொக்கிஷத்தைக் கைப்பத்திடுவேன். நீங்க ரெண்டு பேரும் எனக்கு உதவி செய்யணும். நீங்க உதவி செய்யலைன்னாலும் நான் என்னுடைய முயற்சியில் வெற்றி அடைவேன். எனக்கு நீங்க கோவாபரேட் செய்யலைன்னா விளைவுகள் மோசமா இருக்கும். உங்க மகன் மேல உண்மையில் பாசம் இருந்தால் எனக்கு உதவி செய்யுங்க. மறுத்தீங்கன்னா உங்க வாரிசை மறந்துடுங்க. கோபத்துல நான் என்ன செஞ்சாலும் நீங்க வருத்தப்பட வேண்டி இருக்கும்' அப்படின்னு எழுதிருந்தது. அது ஒரு மிரட்டல் கடிதம். ஒருவழியாக எங்களோட அதிர்ச்சியை மறைச்சுகிட்டு அம்மா, அப்பா, மகிழன் முன்னால இயல்பா இருக்க முயற்சி செஞ்சோம்"
என்று சத்யன் கூறி முடிக்க, அவர்களுடைய மனநிலை மற்றவர்களுக்கு நன்றாகப் புரிந்தது.

" இங்கே நாங்க வந்தபோது நீங்கள் எல்லோரும் உற்சாகத்தோட எங்களை வரவேற்று இயல்பா இருந்தீங்களா? அநாவசியமா உங்களை பயமுறுத்த வேண்டாம்னு முடிவு செஞ்சதுனால உங்க கிட்ட இதைப் பத்தின பேச்சே எடுக்கலை" என்று ஸலோனியும் தங்களுடைய நிலையை எடுத்துச் சொன்னாள்.

" எங்களுக்கும் சில மிரட்டல்கள் வந்தன. ஏற்கனவே அபிராஜ் மதுரை ஜெயிலில் இருந்து தப்பிச்சு ஓடின செய்தி வந்ததில் இருந்து மனசுக்குள்ள கலவரம் எட்டிப் பாத்தது. அதுக்கு அப்புறம் அவன் கிட்டயிருந்து மிரட்டல் வேற. அதில இன்னும் கொஞ்சம் அரண்டு போனோம். நீங்க குடும்பத்தோட வந்ததில் இருந்து வீட்டில் கலகலப்பு திரும்பி வந்திருக்கு. உங்க எதுத்தாப்பல மனசுல இருக்கற கவலைகளை வெளியே காமிச்சுக்க வேண்டாம்னு முடிவு செஞ்சு சந்தோஷமா இருக்கற மாதிரி நாடகமாடினோம். இப்போ உண்மை எப்படியோ வெளியே வந்துடுச்சு " என்று கூறி நந்தினி, நீண்ட பெருமூச்சுடன் முடித்தாள்.

" இப்பவும் ஒண்ணும் நிலைமை நம் கைகயை விட்டு மீறலை. போலீஸ் டீம் அவனைத் தீவிரமாத் தேடிட்டு இருக்கு. நானும் செக்யூரிட்டியை அதிகரிச்சுருக்கேன். வெளிப்படையா எல்லார்க்கும் தெரியாதபடி ரகசியமா நம்மைச் சுத்தி நம்ம பாதுகாப்புக்காக, தேர்ந்த ஆட்கள் நடமாடிட்டு இருக்காங்க. மதுரையில் இருக்கற என் ஃப்ரண்ட் மூலமா ஒரு ஸ்பெஷல் டீம் களத்தில் இறங்கியிருக்கு. துடிப்பான இளைஞர்கள். நாம பயப்படக் கூடாது. மனசுக்குள்ள பயமோ, கவலையோ இருந்தாலும் வெளியே காட்டவே கூடாது. இயல்பா சிரிச்சுப் பேசிட்டு இருக்கற மாதிரியே காட்டிக்குவோம். நாம அலட்சியப்படுத்தறதைப் பாத்து அவன் கலவரமடைவான். பதட்டத்தில் தப்பு செய்வான். பிடிபடுவான்" என்று சொன்னான் ராஜசேகர்.

" வெரி குட். அது தான் சரி. மிரட்டலுக்கு பயந்து அநியாயத்துக்குத் தலை வணங்கக் கூடாது. இருந்தாலும் அவன் ஜெயிலில் இருந்த சமயத்தில் என்னென்னவோ முயற்சிகள் எடுத்துப் பெருசா வளந்திருக்கான். ஸலோனி வெளிநாட்டில் இருக்கற விஷயம், அவ திருவிழாவுக்கு வரப்போற விஷயம் எல்லாம் அவனுக்குத் தெரிஞ்சுருக்கு. வெளிநாட்டில் வசிக்கற ஆட்களின் மூலமா எங்களையும் தீவிரமாக் கண்காச்சிருக்கான்னா தற்சமயம் அவனுக்குப் பண பலமும், செல்வாக்கும் கூடியிருக்குன்னு தோணுது. யாரோ பெரிய கிரிமினல் கும்பல் இதுல சம்பந்தப்பட்டு இருக்காங்க. இந்தக் கோயில் பொக்கிஷம் மட்டும் தான் அவங்க நோக்கமா இல்லை வேற ஏதாவது விஷயம் இருக்கா? " என்று சத்யன் கேட்டான்.

" பொக்கிஷத்தைக் கைப்பத்தறது தான் அவனோட நோக்கம். அது தன்னோட வம்சத்துக்கு உரியதுன்னு நினைக்கறான். மாந்திரீகத்தை உபயோகிச்சு ஒவ்வொரு தலைமுறையிலும் அதை அடைய அவனுடைய குடும்பத்தினர் முயற்சி செய்யறாங்க. அதுவும் முருகனோட நவரத்தின வேல் அவனுக்கு முக்கியமா வேணும். வேல் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டது. அதனோட எடை நிச்சயமா முப்பது கிலோவுக்கு மேல இருக்கும். பல கோடி ரூபாய்க்கு மேல தங்கம் மாத்திரம் இருக்கு. அதைத் தவிர அதிலிருக்கற விபூதிப்பட்டையில் பெரிய பெரிய வைரக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கு. வைரக் கற்களைத் தவிர மற்ற நவரத்தினக் கற்கள், இவை எல்லாமே விலை மதிப்பில்லாதவை. இந்தக் காரணத்தைத் தவிர அந்த வேல், பல வருடங்கள் தொன்மையானதுங்கற காரணத்தால ஆன்டிக் வேல்யூ வேற அதிகம். நம்ம கோயிலில் இருக்கற முருகனின் சிலை கூட விசேஷமானது தான்.

மதுரையில் இருக்கும் மீனாட்சியின் சிலை மரகதத்தால் ஆனது. உத்தரகோசமங்கையில் வீற்றிருக்கும் நடராஜர் சிலை மரகதத்தால் ஆனது. பழனி முருகன் சிலை நவபாஷாணத்தால் உருவானது. சித்தர்களால் உருவாக்கப்பட்டது. அதுனாலயே பழனி முருகனின் விபூதிக்கு மருத்துவ குணங்கள் உண்டு. அதே போல நம்முடைய கோயில் முருகன் சிலைக்கும் ஏதோ விசேஷமான சக்தி இருக்கறதா நம்பப்படுது. அதுக்காகவே அந்தச் சிலையையும் சேத்துக் கடத்த உதவறதா வாக்குத் தந்து, சிலைக் கடத்தல் கும்பல் எதையாவது அபிராஜ் உள்ளே புகுத்தி இருக்கலாம். அவங்களோட இன்டர்நேஷனல் மாஃபியா நெட்வொர்க் உதவியோட ஸலோனி குடும்பத்தை மிரட்டியிருக்கலாம்" என்று மகேந்திரன் கூறியதும் அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மகேந்திரன் வாயைத் திறந்து பேசிய போது அவர் நாவிலிருந்து தெறித்த ஒவ்வொரு சொல்லும் முக்கியமானதாகவும், உண்மையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.

" ஸோ, இந்தப் பிரச்சினை நம்ம குடும்பப் பிரச்சினையோ, இல்லை இந்த ஊரோட பிரச்சினையோ இல்லை. நம்ம நாட்டோட மானப் பிரச்சினை. கோஹினூர் வைரத்தைப் பறிகொடுத்த மாதிரி, சோமநாதர் ஆலயம் மாதிரி பல்வேறு கோயில்களின் பொக்கிஷத்தை அந்நியர்கள் கொள்ளையடிக்கறதைப் பாத்துகிட்டே பரிதாபமா நின்ன மாதிரி இந்த முறை நிக்கக் கூடாது " என்றான் ராஜசேகர்.

" நானும் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜன்சி கிட்ட உதவி கேட்டுருக்கேன். அந்த பிரைவேட் டிடெக்டிவ் ஏஜன்சிக்கு தில்லியில் சென்ட்ரல் கவர்ன்மென்ட் லெவலில் நிறைய செல்வாக்கு இருக்கு. நிறைய ஸென்ஸேஷனல் கேஸ்களில் குற்றவாளிகளை மடக்க அவங்க தில்லி போலீஸுக்கும், ஸிபிஐக்கும் உதவி செஞ்சிருக்காங்க. அவங்க கிட்ட இப்பவே பேசி இந்தத் தகவல்களையும் தரலாம். அவங்க தேவையான ஏற்பாடுகளைச் செய்வாங்க" என்று சத்யன் உறுதியான குரலில் கூறினான்.

" சரி, நம்பர் சொல்லுங்க சத்யன். நான் இப்பவே கூப்பிடறேன்" என்ற ராஜசேகர் , தனது மொபைலை எடுத்தான்.

" நோ ராஜசேகர்" என்று அலறினான் சத்யன். நந்தினியும் அவனை முறைத்துப் பார்த்தாள். அவனுடைய அலறலின் காரணம் அவளுக்குப் புரியவில்லை.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.

 

sankariappan

Moderator
Staff member
காரணம் இல்லாமல் அலறுவானா? அந்த சஸ்பென்ஸ் அடுத்த அத்தியாயத்தில் தானே தெரியும் .
 
Top