கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 21

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே! 21

அத்தியாயம் 21


அகரமுமாகி அதிபனுமாகி அதிகமு மாகி ...... அகமாகி

அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி ...... அவர் மேலாய்

இகரமுமாகி யெவைகளுமாகி
இனிமையுமாகி ...... வருவோனே!

இருநிலமீதி லெளியனும் வாழ
எனது முன்னோடி ...... வரவேணும்!

மகபதியாகி மருவும் வலாரி
மகிழ்களி கூறும் ...... வடிவோனே!

வனமுறை வேடனருளிய பூஜை மகிழ் கதிர்காம ...... முடையோனே!

செககண சேகு தகுதிமி தோதி
திமியென ஆடு ...... மயிலோனே

திருமலிவான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே!

பொருள்

எழுத்துக்களில் அகரம் முதலில் நிற்பது போல எப்பொருளுக்கும் முதன்மையாகி, எல்லாவற்றிற்கும் தலைவனாகி, எல்லோருக்கும் மேம்பட்டவனாகி, யாவர்க்கும் உள்ள யான் என்னும் பொருளாகி, பிரமன் என்னும் படைப்பவன் ஆகி, திருமால் என்னும் காப்பவன் ஆகி, சிவன் என்னும் அழிப்பவனாகி, அம்மூவருக்கும்மேலான பொருளாகி,

இங்குள்ள பொருட்கள் யாவுமாகி, எவைகளும்ஆகி , எங்கெங்கும் உள்ள பொருட்களும், இனிமை தரும் பொருளாகி வருபவனே!

இந்தப் பெரிய பூமியில் எளியவனாகிய இந்த அடியேனும் வாழ எனது முன் ஓடி வரவேண்டும். யாகங்களுக்குத் தலைவனாக விளங்கும் இந்திரனை (வலாசுரப் பகைவன் என்பதால் ), மகிழ்ச்சியும் களிப்பும் அடையச் செய்த, அழகிய வடிவம் கொண்டவனே!

காட்டில் வசித்த வேடனான அந்திமான் செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற, கதிர்காமத்தில் வீற்றிருப்பவனே!

செககண சேகு தகுதிமி தோமி, திமி என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே! லக்ஷ்மிகரம் நிறைந்த பழமுதிர்ச்சோலை மலையின் மீது வீற்றிருக்கும் பெருமாளே!

முருகனது வேலுக்குப் பெருமை தன்னால்தான் என்று அகந்தை கொண்ட பிரமனை முருகன் சபிக்க, பிரமன் அந்திமான் என்ற வேடனாக இலங்கையில் பிறந்தார். தான் கொல்ல முயன்ற பிப்பலாத முனிவரால் அந்திமான் ஞானம்பெற்று, கதிர்காம வேலனை கிருத்திகை விரதம் இருந்து வணங்கி, அருள் பெற்ற வரலாறு இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.


நந்தினியின் கதை

மொபைலை எடுக்கப் போன ராஜசேகர், தன்னைத் தடுத்த சத்யனை வெறித்துப் பார்த்தான்.

" ஸாரி ராஜசேகர், தடுத்து திறுத்தணுங்கற பதட்டத்தில் அலறிட்டேன். வேற ஒண்ணும் இல்லை. உங்க மொபைலை தயவு செஞ்சு இந்த விஷயத்துக்கு யூஸ் பண்ணாதீங்க. இவ்வளவு நேரம் அதை ஹேக் பண்ணிருப்பாங்க. வெயிட்" என்று கூறியவன் தன்னுடைய குர்த்தாவின் பையில் இருந்த ஒரு மொபைலை வெளியே எடுத்தான்.

" அவங்க கிட்டப் பேசறதுக்கு இதை மட்டுமே நாம யூஸ் பண்ணனும். ஸ்ட்ரிக்டாச் சொல்லிருக்காங்க. இந்த ஸெல்ஃபோனை , ஏர்போர்ட்டிலயே என்னிடம் கொடுத்துட்டாங்க " என்று கூறிய சத்யன், அவனுடைய டிடெக்டிவ் கொடுத்திருந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்தான்.

நடந்த அனைத்தையும் அவர்களுக்கு எடுத்துச் சொன்னான்.

" டோன்ட் வொர்ரி சத்யன் ப்ரோ. வீ ஆர் ஆல் ரெடி ஆன் டு இட். என்னோட மதுரை பிராஞ்ச் ஆட்கள் உங்க ஊருக்குள்ள வந்துட்டாங்க. திருவிழா அட்டென்ட் பண்ண வந்தவங்க மாதிரி அங்கங்கே தங்கிக் களத்தில் இறங்கிட்டாங்க. இன்ஃபாக்ட் உங்க ஃப்ரண்ட் ராஜசேகர் ஸெக்யூரிட்டிக்காக அரேஞ்ச் பண்ணி இருக்கிற ஏஜென்சியை நடத்தறதும் என்னோட ஃப்ரண்ட் தான். அவர் கிட்ட ஃபோனைக் கொடுங்க" என்றான் மறுமுனையில் இருந்தவன்.

தனக்குத் தேவையான சில விவரங்களை ராஜசேகரிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டான்.

" ராஜசேகர் ப்ரோ, உங்களுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறவன் பெரிய கிரிமினல். அவனுக்கு உதவி செய்யற கும்பலை நாங்கள் ஐடென்டிஃபை பண்ணிட்டோம். சீக்கிரம் சுத்தி வளைச்சுடுவோம். நான் சொல்லற சில விஷயங்களை மனசுல வச்சுக்கங்க. நான் சொல்லறபடி நடந்துக்கோங்க. என்ன நடந்தாலும் பொறுமையா எதிர்கொள்ளுங்க. பயப்படாதீங்க" என்று கூறியவன் அவர்களுக்கு நிறைய அறிவுரைகளை அள்ளி வழங்கி விட்டுத் தான் ஓய்ந்தான்.

தங்களுடைய திட்டங்களையும் ஏற்பாடுகளையும் பற்றிப் பெரியவர்கள் எல்லாரும் விலாவாரியாக நீண்ட நேரம் விவாதித்தார்கள். இரவு நீண்ட நேரம் செலவழித்தாலும், 'சரியான திசையில் தான் போகிறோம், முருகனின் வேலும் மயிலும் துணைக்கு வரும்போது பயம் தேவையில்லை' என்ற துணிச்சல் மனதில் ஆட்சி செய்ததால் நிம்மதியாகத் தூங்கி, புத்துணர்ச்சியுடன் அடுத்த நாள் காலை எழுந்தார்கள்.

அடுத்த நாள் காலையில் கோயிலில் கொடியேற்றித் திருவிழா ஆரம்பிக்கப் போவது அறிவிக்கப்பட்டது. நல்ல நேரத்தில் காப்புக் கட்டி ஆரம்பிக்கப்பட்ட திருவிழாவும் களை கட்டியது. கோயிலின் முக்கிய பொறுப்பைக் கையாளும் குடும்பத்தின் தலைவர் என்ற முறையில், மகேந்திர பூபதிக்குப் பரிவட்டம் சூட்டி முதல் மரியாதை செய்தார்கள்.

கோயிலை ஒட்டிய மண்டபத்தில், ஊர் மக்கள் அனைவருக்கும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்துச் செலவுகளையும் ராஜசேகருடைய குடும்பம் ஏற்றுக் கொண்டிருந்தது. கோயிலில் இருந்து சற்றுத் தொலைவில் இருந்த திடலில் திருவிழாவிற்கே உண்டான சிறப்பான கேளிக்கைகளும் கடைகளும் மக்கள் கூட்டத்தைக் கவர்ந்தன. அதே திடலில் இருந்த மேடையில் தினமும் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இசை, நாட்டிய நிகழ்ச்சிகள், கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற கிராமியக் கலைகள், கதாகாலட்சேபம், நாடகங்கள், ஆன்மீகச் சொற்பொழிவுகள், சிலம்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் மேடையிலும், கிராமத்துத் தெருக்களிலும் சிறப்பாக நடைபெற்றன.

குழந்தைகளுக்கான குடை ராட்டினம் போன்ற விளையாட்டு அம்சங்கள், வளையல் கடைகள், ஏழை, எளியவர்களுக்காக குறைந்த விலையில் துணிமணிகள், பாத்திர பண்டங்கள், பலகாரங்கள் போன்றவற்றை விற்கும் கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை விற்கும் கடைகள், பயாஸ்கோப் பெட்டி போன்ற திருவிழாவிற்கே பிரத்யேகமான விஷயங்கள் அனைத்தும் இடம் பெற்றிருந்தன. ஊரே கூடிக் குதூகலித்து நின்றது.

திருவிழாவின் ஊடே, சூர சம்ஹாரம், தெய்வானை திருமணம், வள்ளி திருமணம் இவற்றையும் கோயிலில் சிறப்பாக நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடந்து கொண்டிருந்தன.
இறுதியாகத் தேர்த் திருவிழா நடைபெறும். ஊரே கூடித் தேரை இழுப்பது கண்கொள்ளாக் காட்சியாக அமையும்.

வள்ளி, தெய்வயானை சமேதராக முருகன் தேரில் அமர்ந்து வீதி வலம் வருவார். பூக்களால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் தேர் அசைந்து அசைந்து வருவதைப் பார்க்க ஆயிரம் கண்கள் போதாது. தேர் கிளம்புவதற்கு முன்னால் நடக்கும் வாணவேடிக்கை, குழந்தைகளை உற்சாகப்படுத்தும்.

பூ வியாபாரம், கயிறு திரிக்கும் தொழில், பட்டாசு தயாரிப்பு, வளையல், அலங்காரப் பொருட்கள் உற்பத்தி, பொம்மைகள், மண்பாத்திரங்கள் செய்யும் குயவர்களின் தொழில், பழ வியாபாரம், தின்பண்டங்கள் தயாரிப்பு என்று பல்வேறு தொழில்களையும் ஒரு திருவிழா வளர்க்கிறது.

அன்றிலிருந்து பள்ளியும் விடுமுறை
என்பதால் குழந்தைகளுக்குக் காலையில் இருந்து கொண்டாட்டம் தான்.

" டேடி, இன்னைக்குத் தேர் பாக்கக் கூட்டிட்டுப் போறீங்களா? தேரைப் பத்தி இவங்க சொல்லறதைக் கேட்டதுல இருந்து எனக்குப் போய்ப் பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு" என்று ஆரம்பித்தான் மகிழன்.

" கண்டிப்பாக் கூட்டிட்டுப் போறேன். ஆனா டேடின்னு கூப்பிடறதை நிறுத்தணும். அப்பான்னு கூப்பிட்டால் தான் நீ சொல்லறதை நான் கேப்பேன்" என்று புன்முறுவலுடன் கூறிய தந்தையைப் பார்த்துத் தலையசைத்தான் மகிழன். சத்யனும், ஸலோனியும் குழந்தையில் இருந்தே அவனைத் தாய்மொழியில் மட்டுமே வீட்டில் பேச வேண்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிறார்கள். அப்படியும் மகிழன் சில சமயம் மறந்து விடுகிறான்.

" செரிப்பா" என்று மகிழன் மகிழ்ச்சியுடன் கூற, அனைவரும் மாலை நேரச் சிற்றுண்டியை முடித்த பின்னர், தேர்முட்டி என்று அழைக்கப்படும் தேர் நிறுத்தப் பட்டிருந்த இடத்துக்குக் கிளம்பினார்கள்.

தேர்முட்டியில் தேரைப் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. தூசி எல்லாம் தட்டி, தேரில் செதுக்கப் பட்டிருந்த சிற்பங்கள் நன்றாகத் தெரியும் விதத்தில் தூய்மைப்படுத்திப் பளிச்சென்று ஆக்கிக் கொண்டிருந்தார்கள். பெரிய பெரிய சக்கரங்கள், இரும்பு அச்சுகள், தேரை இருப்பதற்கான வடம், தேரை அலங்கரிப்பதற்காக வண்ண வண்ணத் தொம்பைகள், திரைச்சீலைகள் அங்கே காட்சி அளித்தன. இரண்டு பெரிய குதிரை பொம்மைகள் தேருக்கு முன்னால் பொருத்துவதற்காக வைக்கப் பட்டிருந்தன.

" இந்தத் தேரை அலங்கரிக்கும் ஒவ்வொரு பொருளோட எடையையும் பாத்துப் பாத்துத் தேர்ந்தெடுக்கறாங்க தெரியுமா? இவ்வளவு பெரிய தேரின் அசைவிலும், வடிவமைப்பிலும் நிறையத் தொழில்நுட்பம் மற்றும் கணிதம் இருக்கு. அதைத் திசை திருப்புறதுக்குக் கூட நல்லா யோசிச்சு வழியமைச்சிருக்காங்க"
என்று ராஜசேகர் சொன்னதும்,

" அது எப்படிப்பா செஞ்சாங்க? தேரில் கூட நம்ம காரில் இருக்கற மாதிரி பிரேக், ஸ்டியரிங்க் எல்லாம் இருக்கா என்ன? என் கண்ணுக்குத் தெரியலையே? " என்று ஆர்வத்துடன் கேட்டான் சரவணன்.

" அதெல்லாம் இல்லை. அதுக்குக் கூட ஒரு ஸ்பெஷல் ஐடியா பண்ணிருக்காங்க தெரியுமா? நான்கு வீதிகள் சந்திக்கும் இடத்தில் தான் தேர் திரும்பும் நீளம், அகலம், பருமன் எனக் கணக்கிட்டுச் செய்த பெரிய இரும்புத் தகட்டின் மீது கிரீஸைக் கொட்டித் தயாராக வைத்திருப்பார்கள். தேரை வலப்புறமாகத் திருப்பவேண்டுமானால், இடப்பக்கச் சக்கரத்தை ஜாக்கியால் தூக்கிச் சாரடிக் கட்டையில் தாங்கி வைப்பார்கள். வலப்பக்கத்துச் சக்கரத்தின் வேகத்தை முட்டுக்கட்டை உபயோகித்துக் கட்டுப்படுத்தி வைப்பார்கள். பின்பு இடப்பக்கச் சக்கரங்களை கிரீஸ் மேல் சுலபமாக வழக்கிக் கொண்டு போகும்படி பின்பக்கம் புல்டோஸரால் இடிப்பார்கள்.இடப்பக்க வடங்களை மட்டும் முன்பக்கமாக இழுப்பார்கள். இதனால் சட்டென்று குலுங்கும் தேர் 90 டிகிரி கோணத்தில் திரும்பும் காட்சி பார்க்க மிக அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கும். பரப்புக் கட்டைகள், சாரடிக் கட்டைகள், முட்டுக் கட்டைகள் போன்றவை தேரின் வேகத்தைக் கட்டுப்படுத்த உபயோகப் படுத்துகிறார்கள் " என்று ராஜசேகர் கூறிய விளக்கங்களும் அறிவுபூர்வமாக இருந்தன.

தேரில் செதுக்கப்பட்டிருந்த யாளியின் உருவத்தைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தான் மகிழன்.

" அட, இது டிரேகன் தானே? இல்லை டைனாசரா? அந்தக் காலத்தில் நம்ம ஊரில் இருந்துச்சா? " என்று ஆச்சரியத்துடன் கேட்டான் மகிழன்.

" இது டிரேகனும் இல்லை. டைனொசரும் இல்லை. யாளின்னு சொல்வாங்க. அந்தக் காலத்தில் இருந்துச்சாம். பெரிய பெரிய கோயிற் சிற்பங்களில் யாளியின் சிற்பம் செதுக்கி வச்சிருக்காங்க" என்று சரண்யா, தன் பங்குக்குத் தனக்குத் தெரிந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள்.

"தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி, இந்துத் தொன்மக் கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்ற காட்சியைச் சிற்பங்களில் காணலாம். இது சீன தேசத்து டிரேகன் போல, சிற்பிகளின் கற்பனையில் உருவான ஒரு விலங்கு என்கிற கருத்து நிலவுகிறது. சிம்ம யாளி, யானை யாளி, மகர யாளி போன்ற பலவகை யாளிகளைச் சிற்பங்களில் பார்க்கலாம். மதுரை மீனாட்சி கோயிலில் நிறைய யாளிகளின் சிற்பங்களைப் பார்க்கலாம். அடுத்த தடவை போகும் போது மறக்காமல் பாருங்க" என்று நந்தினியும் விளக்கினாள்.

" கோயிலுக்குப் போனா இவ்வளவு விஷயங்கள் கத்துக்கலாமா? " என்று ஆச்சரியத்துடன் மகிழன் கேட்டான்.

" ஆமாம்பா, கோயில்ங்கற அமைப்பின் அடிப்படைக் காரணம் மகத்தானது. வெறும் மதத்தை வளக்கணும், பக்தியை மேம்படுத்தணும் என்கிற காரணங்களை மட்டும் மனசுல வச்சு நம்ம முன்னோர்கள் கோயில்களைக் கட்டவில்லை. இன்றைய காலத்தில் சமுதாயக் கூடங்கள் அதாவது கம்யூனிட்டி சென்டர்கள் ஒவ்வொரு குடியிருப்பிலும் வேணும்னு மக்கள் விரும்பறாங்களே அந்த சமுதாயக் கூடங்களாகத் தான் கோயில்கள் செயல்பட்டிருக்கு. ஏழை, எளியவர்களுக்கு உணவு அளிக்கற அன்னதானச் சத்திரங்கள், இசை, நாட்டியம், இலக்கியங்கள், வேதம், இவற்றைக் கற்பிக்கும் கல்வி மற்றும் கலைக் கூடங்கள், சிற்பங்களையும், ஓவியங்களையும் போற்றுகிற நுண்கலைக் கல்லூரிகள், மழை, புயல், வெள்ளம் வந்தால் அடைக்கலம் தரும் பேரிடர் மீட்பு மையங்கள், திருமணம், காதுகுத்து போன்ற சடங்குகள், சம்பிரதாயங்கள் நடக்கிற பொது மண்டபங்கள், ஊர்த் தலைவர் மக்களைச் சந்தித்துப் பேசி உரையாற்றும் பொதுமேடை என்று எத்தனையோ அவதாரங்கள் எடுக்கிற கோயில்களின் உன்னதத்தைப் புரிஞ்சுக்காம மதச் சாயம் பூசி அவற்றை ஒதுக்கறது தவறான கண்ணோட்டம் " என்று வலியுறுத்திய நந்தினியின் நீண்ட உரையாடலை, சத்யனும், சலோனியும் கை தட்டி அவளைப் பாராட்டினார்கள்.

" கோயில் பத்திப் பேசினாலே நந்தினி ரொம்ப இமோஷனலாக மாறிடுவா. ஆனாலும் அவள் சொன்ன ஒவ்வொரு கருத்தும் உண்மை தான். அவளுடைய உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கும் குமுறல் அவ்வப்போது வெளியே தலைநீட்டிப் பார்க்கும்" என்று பெருமிதத்துடன் ராஜசேகர் சொல்ல, அன்றைய மாலைப் பொழுது சிறப்பாக முடிந்தது.

அடுத்தடுத்த நாட்களில் சூரசம்ஹாரம், தெய்வானை திருமணம், வள்ளி திருமணம் போன்ற நிகழ்வுகளைக் குடும்பத்தினர் கண்டு மகிழ்ந்தனர். பெரிதாக சஞ்சலப்படுத்தக் கூடிய சம்பவம் எதுவும் நிகழாமல் நாட்கள் அமைதியாகவே கழிந்தன.

ஆனாலும் நந்தினியாலும், அவளுடைய குடும்பத்தினராலும் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. நிம்மதியாக நாட்களைக் கழிக்க முடியவில்லை. புலி பதுங்குவது பாய்வதற்குத் தான் என்கிற எச்சரிக்கை உணர்வு அவர்களுடைய மனங்களில் ஆட்சி செய்தது.

தேர்வலம் முடிந்ததும் திருவிழா முடிவுக்கு வரும் என்பதால் காவல் துறையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்தக் குறையும் வைக்கவில்லை. ஊருக்குப் புதிதாக வந்தவர்கள் அனைவரும் தீவிரக் கண்காணிப்பிற்கு ஆளானார்கள். அன்னதானத்தில் மக்களுக்குப் பரிமாறப்பட்ட உணவையும் முழுமையாக சோதனை செய்த பின்னரே விநியோகித்தார்கள். பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் ராஜசேகர் குடும்பத்தினர் உறுதியாக இருந்ததால் ஜாக்கிரதையாக செயல்பட்டார்கள்.

ஆபத்து அவர்களை மெல்ல மெல்ல நெருங்கிக் கொண்டு தான் இருந்தது. சரியான நேரத்தில் தாக்க வேண்டும் என்பதிலும், அடி பலமாக விழ வேண்டும் என்பதிலும் ஆபத்தை ஏவியவன் குறியாக இருந்தான்.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.

 
Top