கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 22

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே! 2

அத்தியாயம் 22

தாமரையின் மட்டு வாசமல ரொத்த தாளிணை நினைப்பில் ......

அடியேனைத் தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப தாருவென மேத்திய ......

விராலிமாமலையி நிற்ப நீ கருதி யுற்று வாவென அழைத்தேன் ......

மனதாசை மாசினை யறுத்து ஞானமு தளித்த வாரமினி நித்த ......

மறவேனே காமனை யெரித்த தீ நயன நெற்றி காதிய சுவர்க்க ......

நதி வேணி கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட காதுடைய அப்பர் ......

குருநாதா சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க சோலைபுடை சுற்று ......

வயலூரா சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து சூர்தலை துணித்த ...... பெருமாளே..........

பொருள்

தாமரைப் பூவிலேயே நிரம்பிய மணம் வாய்ந்த மலருக்குச் சமமான உன் இரு திருவடிகளின் நினைப்பே இல்லாத அடியேனை, மகரந்தப் பொடி விரியும் சுரபுன்னை, மகிழமரம் இவையெல்லாம் கற்பக விருட்சங்கள் போல வளர்ந்து நிறைந்த விராலிப் பெருமலையில்
யாம் நிற்கிறோம். நீ அதை மனத்தில் நினைத்து அந்தத் தலத்திற்கு வருவாயாக என்று அழைப்பு விடுத்து, என் மனத்திலுள்ள ஆசை என்னும் குற்றத்தை ஒழித்து, ஞானாமிர்தப் பிரசாதம் அளித்த அன்பை இனி என்றைக்கும் யான் மறக்கமாட்டேன். மன்மதனை எரித்த நெருப்புக் கண் உள்ள நெற்றியையும், வேகமாக வந்த ஆகாய கங்கையைத் தாங்கிய ஜடாமுடியையும், காட்டிலுள்ள புற்றில் படமெடுத்து ஆடும் பாம்பை அணிந்த காதையும் உடைய சிவனாரின் குருநாதனே!

சந்திரனும், சூரியனும், நக்ஷத்திரங்களும் உயரச் சோலைகள் சுற்றியும் உள்ள வயலூரானே! அகன்ற திருக்கை வேலினைக் கொண்டு, அதைச் செலுத்தி சூரனது சிரத்தைக் கொய்தெறிந்த பெருமாளே!

வயலூர் என்கிற திருத்தலம் திருச்சிக்கு அருகில் உள்ளது. அங்கே வரச்சொல்லி முருகனே அருணகிரிநாதரைப் பணித்ததாக வரலாறு கூறுகிறது.

நந்தினியின் கதை தொடர்கிறது

"எந்தவிமான ஆபத்து வந்தாலும் எங்களுக்கு பயமில்லை. வேலும், மயிலும் துணைக்கு நிற்கையில் மனதில் பயமும், சஞ்சலமும் பயந்தோடிவிடும்" என்று தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றது நந்தினியின் குடும்பம்.

சூர சம்ஹாரம் நிகழ்ந்த நாளன்று மாலையில் குழந்தைகள் அசுரவதத்தின் கதையைக் கூறுமாறு அனத்த ஆரப்பாத்தார்கள். பெரியவர்கள் எல்லோரும் நந்தினியின் பக்கம் கைகாட்டி விட நந்தினியும் இரத்தினச் சுருக்கமாகக் குழந்தைகளுக்கு முருகனின் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள். சொல்லச் சொல்ல இனிக்கும் முருகனின் திருநாமத்தை மனதிற்குள் மீண்டும் மீண்டும் நினைவு கூர்நதபடி, முருகனின் அருளுடன் கதையை ஆரம்பித்தாள்.

" பழைய காலத்தில் இருந்தே அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் யுத்தம் நடந்துகிட்டே இருந்தது. தாரகாசுரன் என்கிற பெயர் கொண்ட அரக்கன், சிவனை எண்ணித் தவமிருந்து சிவகுமாரனால் மட்டும் தான் தனக்கு அழிவுன்னு வரம் வாங்கியிருந்தான். சிவனின் மனைவியான சதிதேவி தட்சனின் யாக குண்டத்தில் குதித்து உயிர் விட்டதும் இனிமேல் தனக்கு அழிவில்லைன்னு அசுரனுக்கு பயங்கர சந்தோஷம். சதிதேவி பார்வதியாப் பொறந்து தவமிருந்து சிவனைத் திருமணம் செஞ்சுகிட்டாங்க. சிவன், பார்வதியோட சக்தி இணைஞ்சு ஜோதி ஸ்வரூபமா ஒரு புதிய சக்தி உருவெடுக்க, அதைக் கையில் தூக்கிட்டுப் போன அக்னி தேவன் அதோட வெப்பத்தைத் தாங்க முடியாமல் தண்ணிக்குள்ள போட்டார். அது ஓர் அழகான குழந்தையா மாறிடுச்சு. கார்த்திகைப் பெண்களின் கண்களுக்கு ஆறு உருவங்களைக் காட்சி தந்த ஞானக் குழந்தையான முருகன், கொஞ்சம் வளந்ததும் அம்மா, அப்பா கிட்டப் போயிச் சேந்தார். தாரகாசுரனை அழிக்க முருகன் கையில் வேல் கொடுத்து பார்வதி தேவி அனுப்பினாங்க. இந்தச் சின்னக் குழந்தையால என்னைக் கொல்ல முடியுமான்னு கேலி பேசின அசுரனை வேலெறிந்து கொன்னுட்டாரு நம்ம முருகன். சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகன் ஆகிய மூன்று அசுர சகோதரர்களையும் கொன்னதைத் தான் சூரசம்ஹாரம்னு கொண்டாடறாங்க" என்று கூறி முடித்தாள் நந்தினி.

" வாவ், நம்ம புராணக் கதைகளே ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கே? " என்று வியந்தான் மகிழன்.

" ஆமாம், நம்ம புராணங்களிலும் இதிகாசங்களிலும் இல்லாத விஷயங்கள் இல்லை. எவ்வளவோ கொட்டிக் கிடக்கு. வெளிநாட்டுக்காரங்க நம்மைக் கொண்டாடற அளவு உள்நாட்டுல யாரும் கண்டுக்கறதே இல்லை. அட, கொண்டாடலைன்னாலும் பரவாயில்லை. துவேஷத்தைப் பரப்பாமல் இருந்தாலே சரியாக இருக்கும் " என்று பெருமூச்சுடன் முடித்தாள் நந்தினி.

" நாளைக்குத் தேர்த் திருவிழாவில் நாம் கலந்துக்கப் போறதைப் பத்திக் கொஞ்சம் பேசணும். குழந்தைகளைத் தூங்கறதுக்கு அனுப்பிட்டு வந்துடறேன். பெரியவங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க " என்று ஏதோ ஒரு பீடிகையுடன் சொன்ன நந்தினி,

" பசங்களா வாங்க, மூணு பேரும் பால் கிளாஸைக் கையில் எடுங்க. எடுத்த வேகத்துடன் குடிச்சு முடிக்கணும். நாளைக்குத் திருவிழாவோட கடைசி நாள். நீங்க தேர்முட்டியில் போய்ப் பாத்த தேர் நாளைக்குத் தெருவலம் வரதைப் பாக்கவே ஜாலியா இருக்கும். இப்போ நல்லாத் தூங்கி ரெஸ்ட் எடுத்தீங்கன்னா, நாளைக்கு முழுவதும் ஓடியாடி என்ஜாய் பண்ணலாம். இன்னயோட கோட்டாவாகக் கதை கூடச் சொல்லியாச்சு" என்று சொன்னதும், ஏற்கனவே களைத்துப் போயிருந்த குழந்தைகள் மூவரும் தூங்கப் போய்விட்டார்கள். சரவணன், சரண்யா தூங்கும் அறையிலேயே இன்னொரு கட்டிலைப் போட்டு, மகிழன் தூங்குவதற்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவன் வந்த நாளில் இருந்து மூன்று குழந்தைகளும் ஒரே அறையில் தான் தூங்குகிறார்கள். அடுத்த நாள் போட்டுக் கொள்ள ஒரே நிறத்தில் தங்களுடைய ஆடைகளையும் தேர்ந்தெடுத்து வைத்துவிட்டுத் தான் தூங்க ஆரம்பித்தார்கள்.

குழந்தைகள் தூங்க ஆரம்பித்ததும், நந்தினி வரவேற்பறைக்கு வந்து ஸோஃபாவில் உட்கார்ந்தாள். பெரியவர்கள் எல்லோருமே நந்தினி இப்போது புதிதாக என்ன சொல்லப் போகிறாளோ என்ற பதைபதைப்புடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.

" போன மாசம் நான் என்னோட சொந்த ஊரில் இருக்கிற கொற்றவை கோயிலுக்குப் போயிருந்த சமயத்தில் குருசாமியைச் சந்திச்சேன். இப்பல்லாம் அவர் அடிக்கடி அங்கே வரதுல்லைன்னு அங்கேயிருக்கற ஜனங்க தங்களுக்குள் பேசிக்கிட்டதை நான் கேட்டிருக்கேன். அதுனால அந்த சமயத்தில் அவரைப் பாத்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது " என்று நந்தினி சொல்ல ஆரம்பித்தபோது ஸலோனி குறுக்கிட்டாள்.

" உனக்குச் சின்னக் குழந்தையிலிருந்தே வழி காட்டறவர்னு சொல்லுவயே? அவரா? உனக்கு சோதனைகள் வரும்போதெல்லாம் முன்கூட்டியே எச்சரிக்கை தந்து உதவிகளும் செஞ்சார் இல்லையா? " என்று கேட்டாள் ஸலோனி.

" ஆமாம், அவரே தான். அவருடைய வழிகாட்டுதலும், உதவியும் இல்லாமல் என்னால இவ்வளவு சோதனைகளைத் தாண்டி வந்திருக்கவே முடியாது. இப்போ யோசிச்சுப் பாத்தா என்னைச் சந்திக்கறதுக்காகவே அன்னைக்கு வந்திருப்பாரோன்னு தோணுது" என்று கூறிவிட்டுத் தொடர்ந்தாள்.

" என் குடும்பத்தைப் பத்தி அக்கறையோடு விசாரிச்சவர், திருவிழா பத்திப் பேசினார். 'உனக்கு நெருங்கியவங்க இந்தமுறை கலந்துக்கப் போறாங்க. நீங்க எல்லோரும் எச்சரிக்கையோட இருக்கணும். உன்னோட எதிரி இந்த முறை அதிக பலத்தோட வந்து மோதுவான். நீ என்னதான் முயற்சி செய்தாலும் சில இழப்புகள் ஏற்படறதைத் தடுக்க முடியாது. இழப்புகள்னால மனசைத் தளர விடாமல் தைரியமா நீயும் உன் குடும்பத்தாரும் நிக்கணும். என்ன நடந்தாலும் உங்க குடும்பத்துக்கிட்ட இருக்கற எதையும் விட்டுக் கொடுத்திடாதே. குழந்தைகளை ஜாக்கிரதையாப் பாத்துக்கோ' அப்படின்னு அவர் சொன்னபோது என்னையறியாமல் என் உடல் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு.

' என்ன சாமி இப்படி சொல்லி பயமுறுத்தறீங்க? நடக்கப் போறதைத் தடுக்க எதுவும் வழியில்லையா? 'ன்னு நான் கேட்டேன்.

' அவரவர் கர்மாப்படி நடக்கப் போறதை மாத்த யாராலும் முடியாது. உன்னை இனிமேல், நான் வழிபடற சிவனும், கொற்றவையும், நீங்க வழிபடற முருகனும் காப்பாத்தட்டும்'ன்னு சொல்லி என் நெத்தியில் திருநீறு பூசி விட்டார்" என்று சொல்லி முடித்தாள் நந்தினி. அனைவர் முகங்களிலும் பயம் அப்பிக் கொண்டது.

" எதுக்காகவும் பயப்படக் கூடாது. விதியை மதியால் வெல்லற வழியை அந்த முருகன் நமக்குக் காட்டுவான். இவ்வளவு நாட்கள் அமைதியாப் போனதால நாளைக்கு நிச்சயமாக ஏதாவது நடக்கும். முன்னெச்செரிக்கை ஏற்பாடுகளோட நாம் தயாரா நிற்போம். இத்தனை பயமுறுத்தின குருசாமி, எனக்கு ஆசீர்வாதம் செஞ்சு குழந்தைகள் கையில் கட்டக் காப்புக்கயிறுகளையும் கொடுத்தார். நான் மகிழன் ஊரில் இருந்து வந்ததுமே மூணு குழந்தைகள் கைகளிலும் கயிறு கட்டிட்டேன். இந்தத் தடவை சூரனை சம்ஹாரம் செஞ்சு முடிக்கணும்னு என் மனசுல வெறி வருது" என்றாள் நந்தினி. அதன்பிறகு தீவிரமாகப் பேசி சில முடிவுகளை எடுத்துவிட்டுத் தான் பெரியவர்கள் தூங்கப் போனார்கள்.

அடுத்த நாள் காலையில் தேர்த் திருவிழாவைப் பார்க்கக் குதூகலத்துடன் கிளம்பினார்கள் எல்லோரும். உற்சவமூர்த்தியான முருகன், தன்னுடைய இரண்டு பக்கங்களிலும் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் புரியக் கிளம்பி விட்டான். மயில் வாகனம், சேவற்கொடி, அழகான மலர்களால் கூடாரம் போன்று வேயப்பட்டிருந்த அலங்காரம் எல்லாமே சிறப்பாக இருந்தன. பூக்களின் நறுமணம் காற்றில் கலந்து அந்தச் சூழலின் பக்தியையும், பரவசத்தையும் ஒருங்கே கூட்டியது.

வழிபாடு செய்து முடித்துவிட்டுத் தேர்வடத்தைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தார்கள் பக்தர்கள். " கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேல், வேல், வெற்றி வேல்" என்று ஆனந்தக் கூச்சலிட்டபடி பக்தர்கள் தேரை இழக்கத் தொடங்கியதும், பிரம்மாண்டமான தேரும் அசைந்து அசைந்து மிகவும் அழகாக நகர ஆரம்பித்தது.

தேர் கிளம்பும் போது பிரமாதமான வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டு மக்கள் மனங்களை மகிழ்வித்தன. தேர் நகர நகர, அரோகரா என்கிற கோஷம் எழுந்து விண்ணைத் தொட்டது. தேர், ஊரை வலம் வந்தபோது, தேருக்கு முன்னால் கொஞ்சம் இடைவெளி விட்டு, கரகாட்டம், புலி ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகிய கிராமியக் கலைகளும் நிகழ்த்தப் பட்டன. தேரை இழுப்பதில் பங்கெடுத்துக் கொள்ள முடியாத மக்கள், தேரைத் தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருந்தார்கள். நந்தினியின் குடும்பமும் தேரின் பின்னே தான் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தது.

ராஜசேகர் தேர் இழுக்க விரும்பினாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவனைக் காவல்துறையினர் தடுத்து விட்டார்கள். சத்யன் மட்டும் தேருக்கு முன்னால் போய் தேர் நகர்வதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான். நந்தினி, ராஜசேகர் முன்னால் நடக்கக் குழந்தைகளுடன் ஸலோனி நடுவிலும், மகேந்திரன், சித்ராதேவி அவர்களுக்குப் பின்னாலுமாக ஒரு வட்டத்தை அமைத்து அப்படியே நிதானமாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் தேருக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் மக்கள் பலர் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

ஊரின் முக்கிய தெருக்களில் வலம் வந்து கிட்டத்தட்டக் கோயிலைத் தேர் நெருங்கும் சமயத்தில் ஒரு குழப்பம் ஏற்பட்டு விட்டது. டமாலென்று ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து நந்தினி குடும்பத்தினருக்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் திடீரெனத் திரும்பி ஓடிவர ஆரம்பித்தார்கள். என்னவென்று யாருக்கும் புரியவில்லை. ஓடி வந்தவர்களில் ஒருத்தரை நிறுத்தி நந்தினி, என்ன நடக்கிறது என்று விசாரித்தாள்.

" திடீர்னு தேருக்கு முன்னால் யாரோ தேங்காய் ஒடைச்சாங்க. அப்போ ஒரு புகை மாதிரி அந்த இடத்தில் கிளம்பிப் பரவிடுச்சு. அந்தப் புகையால எல்லோரோட கண்களும் தகதகன்னு எரிய ஆரம்பிச்சுடுச்சு. தேர் வடத்தைப் பிடிச்சிட்டிருந்தவங்க அதை விட்டுட்டு அங்குமிங்கும் ஓட ஆரம்பிச்சுட்டாங்க. தேர் லேசாக் குலுங்கி ஒரு பக்கமா சாயற மாதிரி இருக்கு. எந்த நிமிஷமும் சாயலாம். அப்படி சாஞ்சதுன்னா தேரும் பாதிப்பு அடையும். நிறைய உயிர்ச்சேதமும் ஏற்படலாம். நாங்கள்ளாம் உசுரைக் காப்பாத்திக்கத் தேரை விட்டுத் தள்ளி ஓடிப் போயிட்டிருக்கோம். நீங்களும் எதிர்ப் பக்கமாப் போயிடுங்கம்மா" என்று மூச்சிரைக்கச் சொல்லிவிட்டு எதிர் திசையில் ஓட ஆரம்பித்தார் அந்தப் பெரியவர்.

நந்தினி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள்.

" சத்யன் தேருக்கு முன்னால் நிக்கறாரே? " என்று ஸலோனி பதற ஆரம்பித்தாள்.

" ஸலோனி, டென்ஷனாகாதே! நான் முன்னால போயி என்ன நடக்குதுன்னு பாக்கறேன். நீங்க எல்லாரும் குழந்தைகளைக் கூட்டிட்டு இந்தக் குறுக்கு வழியில் நடந்து போயி நம்ம கார் இருக்கற இடத்துக்குப் போய்ச் சேந்து உடனே வீட்டுக்குக் கெளம்பிடுங்க. ஜாக்கிரதை, குழந்தைங்க கையை எக்காரணம் கொண்டும் விட்டுர வேணாம் " என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான் ராஜசேகர்.

எவ்வளவோ தடுத்தும் கேட்காமல், மகேந்திரனும் மகனோடு சேர்ந்து கிளம்பினார். பெண்கள் மூவரும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி குறுக்குச் சந்தில் நுழைந்து ஓடினார்கள். சந்தில் பாதி தூரம் போய்க் கொண்டிருந்தபோது திடீரென்று தெருவிளக்குகள் அணைந்து அந்தச் சந்தே கும்மிருட்டாகி விட்டது. நந்தினியின் தலையில் யாரோ ஓங்கி அடிக்க, அவளுடைய கண்களின் முன்னே நட்சத்திரங்கள் பறந்தன. தலையைப் பிடித்தபடி கீழே மயங்கி விழுந்துவிட்டாள் நந்தினி. கீழே விழுவதற்கு முன்னால் ஸலோனியின் அலறலும், குழந்தைகளின் கத்தலும் அவளுடைய செவிகளில் வலுக்கட்டாயமாக வந்து விழுந்தன.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.












.

 
Top