கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 23

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே! 23

அத்தியாயம் 23

திருப்புகழ் பாடல்

"கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரிகப்பிய கரிமுகன் அடிபேணி

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும்

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனைமட்டு அவிழ் மலர்கொ(ண்)டு பணிவேனே!

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்முற்பட எழுதிய முதல்வோனே!

முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்அச்சு அது பொடிசெய்த அதிதீரா

அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும்அப்புனம் அதனிடை இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே!"

பொருள்

கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம்,அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி ஏற்கிறேன்!

அறிவைப் பெருக்கும் நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவனே!

நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே,என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில் ஓடிப் போய்விடும்.

ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும் சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும்,

மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு துதிப்பேன்!

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல்
முதல்முதலில் எழுதிய முதன்மையானவனே,

(அசுரர்களின்) திரிபுரங்களையும் எரித்த அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரனே!

வள்ளி மீது கொண்ட காதலுடன்
துயரத்தோடு உன் தம்பியாகிய சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப்
புனத்திடையில் யானையாகத் தோன்றி,

அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச் சிறிய முருகவேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள் பாலித்த பெருமாளே!

நந்தினியின் கதை தொடர்கிறது

நந்தினி கண் விழித்த போது வீட்டில் தன்னுடைய அறையில் இருந்தாள். அவளுடைய படுக்கைக்குப் பக்கத்தில் கண்ணீருடன் அமர்ந்திருந்த சித்ராதேவி மட்டுமே கண்களுக்குத் தெரிந்தாள். தலையில் விண்விண்ணென்று வலி தெறிக்க, கைகளை வைத்துப் பார்த்துக் கட்டுப் போடப்பட்டிருந்ததை உணர்ந்தாள். அதற்குள் நந்தினி கண் விழித்ததை கவனித்து விட்டார் சித்ராதேவி.

" எப்படிம்மா இருக்கே நந்தினி? நீ எப்போ கண் திறக்கப் போறேன்னு கவலையோட உக்காந்திருந்தேன். இப்பத்தான் நிம்மதியா இருக்கு" என்று பேசிய சித்ராதேவியின் குரலில் வழக்கமான துடிப்பு இல்லை. ஒரு செயற்கைத் தனம் இருந்தது.

" குழந்தைகள் எங்கே? ஸலோனி எங்கே? மத்தவங்கள்ளாம் எங்கே? " என்று பலவீனமான குரலில் நந்தினி கேட்க,

"அது வந்து, அது வந்து... " என்று தடுமாறினார் சித்ரா. அதற்கு மேல் பேச முடியவில்லை அவரால். கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை மட்டும் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது அந்த அறையில் புயலாக நுழைந்தாள் ஸலோனி.

" கண்ணு முழிச்சிக்கட்டயா? நீ கண் முழிச்சதும் உன்னைக் கேள்வி கேக்கணும்னு தான் நானே வெயிட் பண்ணிட்டிருந்தேன். இப்போ நிம்மதியா உனக்கு? எல்லாத்தையும் துணிச்சலோட சமாளிக்கறேன்னு பெரிய ஜான்சிராணி மாதிரி நெஞ்சை நிமித்திட்டுத் திரிஞ்சயே? இப்போ என்ன செய்யப் போறே? " என்று ஸலோனி பைத்தியம் பிடித்தவள் போலக் கத்தத் தொடங்கியதும், நந்தினி ஒன்றும் புரியாமல் திருதிருவென்று முழித்தாள்.

" என்ன ஆச்சு ஸலோனி? ஏன் இப்படிக் கத்தறே? என் கிட்ட இவ்வளவு தூரம் நீ கோபப்படற அளவு நான் என்ன தப்பு செஞ்சேன்? கொஞ்சம் புரியறமாதிரி எனக்குச் சொல்லறயா? " என்று நந்தினி அழாத குறையாய்க் கெஞ்சினாள் ஸலோனியிடம்.

" ஸலோனி, அவளே இப்பத்தான் கண் முழிச்சிருக்கா. அவ கிட்ட இந்த மாதிரி நீ பேசறது சரியில்லை " என்று அதட்டினார் சித்ரா தேவி.

" பரவாயில்லைம்மா. அவ பேசட்டும். ஏதோ ஆதங்கத்துல அவ பேசறா. சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கப்படும். எனக்கு ஒண்ணுமில்லை" என்று உடல் சோர்ந்திருந்த நேரத்திலும் பொறுமையைக் கடைப்பிடித்தாள் நந்தினி.

" என்ன நடந்ததுன்னு கேக்கறயா? குழந்தைகளைக் காணோம். யாரோ கடத்திட்டாங்க. போதுமா? சத்யனும் எங்கே போனாருன்னே தெரியலை. அவரோட கேமரா மட்டும் கீழே கெடந்ததுன்னு யாரோ கொண்டு வந்து தந்தாங்க. நான் என்ன செய்வேன்னு தெரியலையே? தடங்கல்களை மீறி இங்கே வந்தது தப்போன்னு என் மனசு அடிக்குக்குதே? நான் துடிச்சுப் போய் நிக்கறேன்? என் மாமனார், மாமியார் வேற இப்போ ஃபோன் பண்ணுவாங்களே. நான் என்ன பதில் சொல்லுவேன்? " என்று புலம்பித் தள்ளினாள் ஸலோனி.

தன் குடும்பத்திற்கு ஆபத்து என்று வரும்போது படித்த பெண்ணோ, படிக்காத பெண்ணோ உணர்ச்சி வசப்பட்டு ஒரே மாதிரி நடந்துகொள்கிறார்கள். ஸலோனியின் சீற்றத்திற்கான காரணத்தைப் புரிந்து கொண்ட நந்தினியும் வாயடைத்துப் போனாள்.

' இவ்வளவு பேரைக் காணவில்லையா? அபிராஜ் தான் கடத்தியிருப்பான்! எவ்வளவோ முன்னேற்பாடுகள் செய்தும் பயன் இல்லையா? போலீஸ் டீம், பிரைவேட் டிடெக்டிவ் டீம் எல்லோருடைய கண்களிலும் எப்படி அவன் மண்ணைத் தூவினான்? மண் கூட அல்ல. மிளகாய்த்தூள் அல்லவா தூவியிருக்கான்? குருசாமி வேற ஏதோ இழப்பு நேரும்னு சொன்னாரே? ஒருவேளை இவங்க எல்லோரையும் இழந்துருவோமோ? ' என்று ஒருகணம் எதிர்மறை சிந்தனைகளில் நந்தினியின் மனம் ஆழ்ந்துபோக நடுநடுங்கிப் போனாள் அவள்.

அதற்குள் ராஜசேகரும் அங்கே நுழைந்தான். அவனும் ஸலோனியிடம் ஏதோ சமாதானமாகப் பேச முயற்சி செய்தான். ஸலோனியோ யாருடைய பேச்சையும் ஏற்கத் தயாராக இல்லை.

" ஸலோனி, ஏன் இந்த மாதிரி நடந்துக்கறே? நந்தினி பேரில் எந்தத் தப்பும் இல்லை. அவங்க எல்லோருமே குழந்தைகளை நெனைச்சுக் கவலைப்பட்டுட்டு இருக்காங்க. நீ வேற நந்தினி மேல பழி போடாதே" என்று அதட்டியபடி சத்யன் அங்கு வந்தான். கணவனைக் கண்ட ஸலோனி ஓடிப்போய் சத்யனைக் கட்டிப்பிடித்தபடி ஓவென்று அழ ஆரம்பித்தாள். சத்யனின் உடலில் ஆங்காங்கே சிராய்ப்புகள், சின்னச் சின்னக் காயங்கள் இருந்தன. ராஜசேகர் காயங்களைத் துடைத்து சிகிச்சை தர ஆரம்பித்தான்.

" ஐயோ, இவ்வளவு காயங்கள் உடம்பில் எப்படி வந்துச்சு? கேமராவைக் கூடக் கீழே போட்டுட்டு எங்கே போனீங்க? குழந்தைகளைக் காணோம்னு உங்களுக்குத் தெரியுமா? அதிர்ச்சியால நிலைகுலைஞ்சு போய் நிக்கறேன் நான்" என்று புலம்பினாள் ஸலோனி.

" யாரோ தேருக்கு முன்னால் தேங்காய் உடைச்சாங்க. அப்போ ஏதோ டமால்னு சத்தம் கேட்டது. முதலில் சத்தத்தைக் கேட்டு, வாணவேடிக்கை செஞ்சவங்க தான் வெடி வெடிக்கறாங்கன்னு நாங்க நெனைச்சோம். ஆனால், ஏதோ புகை மாதிரிக் கிளம்பி எல்லாருக்கும் கண் எரிய ஆரம்பிச்சுடுச்சு. தேர்வடத்தைப் பிடிச்சுட்டு நின்னவங்க கூட வடத்தை விட்டுட்டுக் கண்களைக் கசக்கினாங்க. நல்ல வேளையா எல்லாரும் அப்படி செய்யலை. சில பேர் மட்டுமே அப்படி செஞ்சாங்க.தேர் ஒரு மாதிரி பேலன்ஸ் இல்லாமல் ஆடின மாதிரி இருந்துச்சு. மக்கள் பயந்து போய், குறுக்கும் நெடுக்குமாக ஓடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.

அந்த நேரத்தில் தான் எனக்கு திடீர்னு இது எதிரிகள் சதியா இருக்கும்னு தோணுச்சு. நீங்க இருக்கற பக்கம் ஓடி வந்தேன். கண், மண் தெரியாமல் மக்கள் ஓடிவந்ததுல என்னை இடிச்சுத் தள்ளிட்டாங்க. கையில் இருந்த கேமரா தெறிச்சு எங்கயோ போயிடுச்சு. நான் அதைக் கண்டுக்காமல் ஓடி வந்தேன். பக்கத்துல இருக்கற ஒரு சந்தில் இருந்து ஒரு கார் விருட்டுன்னு கெளம்பிப் போச்சு. அதுக்குள்ள இருந்து, ' ஹெல்ப், ஹெல்ப்' ங்கற குரலும், குழந்தைங்களோட அழுகைச் சத்தமும் கேட்டுச்சு. அது பின்னாலேயே ஓடினேன். ஆனால் காரோட வேகத்துக்கு என்னால் ஓட முடியலை. பின்னால் இருந்து யாரோ என்னைத் தாக்கிக் கீழே தள்ளி விட்டுட்டுப் போயிட்டாங்க" என்று சொல்லி முடித்தான்.

சத்யனைப் பார்த்ததில் ஸலோனி பாதிக்கு மேல் அமைதியாகி விட்டாள். உணர்ச்சிவசப்பட்டுப் பேசியதையும், அவசரப்பட்டு நந்தினியைக் குற்றம் சாட்டியதும் தவறு என்பதையும் மனதார உணர்ந்து விட்டாள். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி நேரத்தை வீணாக்காமல் அடுத்த காரியத்தில் முழு மூச்சுடன் இறங்க வேண்டிய தருணம் இது என்பது அவளுக்குப் புரிந்துவிட்டது. நந்தினியின் அருகில் சென்றாள்.

" ஸாரி நந்தினி, மகிழனையும், சத்யனையும் காணோம்னு ரொம்ப பயந்துபோயிருந்தேன். எல்லாத்துக்கும் நீ மட்டுமே காரணம்னு பழியையெல்லாம் உன் மேல தூக்கிப் போட்டு, கன்னா பின்னான்னு திட்டிட்டேன். வெரி வெரி ஸாரி நந்தினி. நீயும் தானே இப்போ குழந்தைளைத் தொலைச்சுட்டுப் பரிதவிக்கறே! புரிஞ்சுக்காமல் உளறிட்டேன்" என்று வருத்தம் தோய்ந்த குரலில் பேசியபோது முழுக்க முழுக்கப் பழைய ஸலோனி திரும்ப வந்திருந்தாள்.
நந்தினி எழுந்து உட்கார்ந்தாள்.

"உன் இடத்தில் நான் இருந்திருந்தாலும் இப்படித்தான் நடந்து கொண்டிருப்பேன். என்னால உன்னோட மனநிலையைப் புரிஞ்சுக்க முடியுது. விட்டுத் தள்ளும்மா. அடுத்து என்ன செய்யணும்னு யோசிக்கலாம். எனக்கு ஒரு விஷயம் புரியலை. நாமும் எவ்வளவோ முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செஞ்சிருந்தோம். ஸெக்யூரிட்டி வேற பலமா இருந்துச்சு. காவல் துறையினர் தவிர அவ்வளவு பிரைவேட் டிகெக்டிவ் ஏஜன்சியோட உதவியும் அரேஞ்ச் பண்ணினோம். அப்படியும் எப்படி அவனால கடத்த முடிஞ்சது? அபிராஜ் சரியான கில்லாடி தான் " என்று ஆச்சரியத்துடன், அதே சமயத்தில் வருத்தத்துடன் பேசினாள் நந்தினி.

" அதெல்லாம் அவங்க சும்மா இல்லை. எதிர் நடவடிக்கை எடுத்துட்டுத்தான் இருக்காங்க. ஒரே ஒரு விஷயம் நமக்கு பாதகமா அமைந்தது. அதுல தான் நம்ம ஸைட் வீக்காயிடுச்சு. தேர் சாஞ்சிடுமோன்னு பதறிட்டோம். அப்படி சாஞ்சால், அதை மக்கள் ஒரு கெட்ட சகுனமா எடுத்துக்குவாங்க. அது மட்டுமில்லாமல் நிறைய உயிர் சேதம் ஆயிடுமோன்னு பயந்துட்டோம். அதுனால அங்கே இருந்த போலீஸ், அப்புறம் நாம ஏற்பாடு செஞ்ச பிரைவேட் செக்யூரிட்டி ஆட்கள் எல்லாரையும் கூப்பிட்டுத் தேர்வடத்தைப் பிடிச்சுக்கச் சொல்லிக் கேட்டோம். எங்களோட கவனமெல்லாம் தேர் மேல இருந்ததை அவன் அட்வான்டேஜா எடுத்துக்கிட்டான். நம் கவனத்தைத் திசை திருப்பிக் குழந்தைகளை எப்படியோ கடத்திட்டான். ஆனால், குழந்தைகளை ஒண்ணும் செய்யமாட்டான். அவனுக்குத் தேவை கோயில் பொக்கிஷம், முக்கியமா முருகனோட வேல். குழந்தைகளுக்கு ஏதாவது சின்னக் காயம் பட்டால் கூட அவனோட நோக்கம் நிறைவேறாதுன்னு அவனுக்கு நல்லாவே தெரியும். இப்போ நாம வெயிட் பண்ணறது அபிராஜோட அடுத்த மூவுக்காகத் தான் " என்று ராஜசேகர் நடந்த விஷயங்களைத் தெளிவாக விளக்கியதோடு திட்டவட்டமாகத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினான்.

அவர்கள் எதிர்பார்த்தபடி அன்று இரவு அபிராஜிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை. தூக்கமே இல்லாத இரவும் முடிந்து, புதிய காலை உதயமானது.
காலையிலும் எந்தத் தகவலும் வரவில்லை.

பகலில் தான் தகவல் வந்தது. அதுவும் மருத்துவமனைக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. " ராஜசேகரின் தனிப்பட்ட கவனத்திற்கு- ஸ்ட்ரிக்ட்லி கான்ஃபிடென்ஷியல்" என்று அடையாளப்படுத்தப் பட்டிருந்த அந்தக் கடிதத்தை மருத்துவமனையில் இருந்து கொண்டு வந்து தந்தார்கள். ராஜசேகர் எடுத்து அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தான். அபிராஜிடம் இருந்து தான் வந்திருந்தது.

" 'கோயில் நகைகள் எதுவுமே என் பொறுப்பில் இப்போது இல்லை. என்னால் ஒன்றும் செய்ய முடியாது'ன்னு எந்த சால்ஜாப்பும் சொல்லாமல், நகைகளோடு முருகனின் வேலையும் சேர்த்து நந்தினியிடம் கொடுத்து அனுப்பினால் உன் குழந்தைகளும், ஸலோனியின் மகனும் உயிரோடு கிடைப்பாங்க. அதுக்கு மேல உன்னோட இஷ்டம். நந்தினியை ஒரு காரில் நம்ம ஊர் ரயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பி வை. அவளே காரை ஓட்டிட்டு வரட்டும். வேற யாரும் அவ கூட வரக்கூடாது. ரயில்வே ஸ்டேஷனுக்கு அவ வந்து சேந்ததும் அவளுக்கு அடுத்த தகவல் கிடைக்கும். நந்தினி இன்னைக்கு சாயந்திரம் அஞ்சு மணிக்குள்ள நான் சொன்ன இடத்துக்கு வந்து சேரலைன்னா நடக்கப் போற எதுக்கும் நான் பொறுப்பு இல்லை" இவ்வளவு தான் அதில் எழுதியிருந்தது.

அதைப் படித்துவிட்டு அதிர்ந்து போனார்கள். மாலை ஐந்து மணிக்குள் நகைகளையும், வேலையும் எப்படிக் கொண்டு வருவது? திருவிழாச் சமயத்தில் முருகனுக்கு சாற்றிய நகைளை எப்படி அவர்களிடம் இருந்து கேட்டு வாங்குவது? என்ன செய்வதென்று அறியாமல் குழம்பிப் போய் நின்றார்கள்.

அவர்களுடைய நடவடிக்கைகளை அபிராஜின் ஆட்கள் எங்கிருந்தாவது தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு தான் இருப்பார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அவர்களை ஏமாற்றிவிட்டுக் காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் பேசுவதோ அவர்களுடைய உதவியைப் பெறுவதோ இயலாத காரியம். காவல்துறை என்ன, ் அவர்களுக்கு உதவி செய்ய வந்திருக்கும் தனியார் துப்பறியும் நிறுவனத்திற்கும் தெரியப்படுத்த முடியுமா என்றும் புரியவில்லை.

" முருகா, நீ தான் ஒரு வழி விடவேண்டும் " என்று மனமுருகி வேண்டி நின்றார்கள்.
நந்தினி கிளம்ப வேண்டிய நேரமும் வந்தது. முருகனை வேண்டிக் கொண்டு அவன் காட்டிய வழியில் நடக்க முடிவு செய்தாள் நந்தினி. ஆபத்துகள் அவளை அரவணைக்கக் காத்துக் கொண்டிருந்தன. அசுர வதம் நடக்குமா, அற்புதங்கள் நிகழுமா என்ற கேள்விக்கு விடை, கந்தனுக்கு மட்டுமே தெரியும்.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.

 
Top