கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 24

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே! 24

அத்தியாயம் 24

"உதியா, மரியா, உணரா, மறவா,விதி மால் அறியா விமலன் புதல்வா, அதிகா, அநகா, அபயா, அமராபதி காவல,
சூர பயங்கரனே! "

"உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே!"

கந்தர் அநுபூதியில் இருந்து எடுத்து இரண்டு பாடல்கள் - அருணகிரிநாதர் அருளியது

நந்தினியின் கதை தொடர்கிறது

நந்தினி குடும்பத்தினரின் நேரம் எப்படிப் போனதென்றே தெரியவில்லை. தலைகீழாக நின்று சில காரியங்களைச் சாதித்தார்கள். குழந்தைகள் பத்திரமாகத் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் ஒன்று தான் அவர்கள் மனதில் இருந்தது. எல்லோருமாக உட்கார்ந்து தீவிரமாகப ்
பேசி நீண்ட நேரம் சாதக, பாதகங்களை விவாதித்து, கொஞ்சம் கூட உணர்ச்சிவசப்படாமல் சில முடிவுகளை எடுத்தார்கள்.

இதோ நந்தினி தனியாகக் கிளம்பி விட்டாள். வாகனத்தில் இரண்டு பெரிய பயணப் பைகள் ஏற்றப்பட்டன. இறுகிய முகத்துடன் வண்டியைக் கிளப்பினாள் நந்தினி. அவளுடைய மனதில் கலவையான உணர்ச்சிகள். தான் செய்யப் போகும் செயல் சரியா, தவறா என்று அவளுக்குத் தெரியவில்லை. குழந்தைகளின் உயிரை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என்ற கவலை மனதை வாட்டியது. இரயில்வே ஸ்டேஷனை நோக்கிச் செல்லும் சாலையில் வண்டி விரைந்தது.

ஸ்டேஷனுக்குச் சற்று முன்னே, திடீரென்று யாரோ வண்டியின் குறுக்கே வர, சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள். பதறிப் போய் காரை நிறுத்திய நந்தினி பதைபதைப்புடன் இறங்கிப் பார்த்தாள். குறுக்கே வந்தவருக்கு அடி பட்டிருக்கிறதா என்று நந்தினி பார்க்க யத்தனித்தபோது, அவளுடைய காருக்குப் பின்னால் மற்றொரு கார் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கியவர்கள் நந்தினியைத் தாங்கள் வந்த வண்டியில் வலுக்கட்டாயமாக ஏற்றினார்கள். அவளுடைய பைகளும் ஏற்றப்பட்டன. என்ன நடக்கிறதென்று நந்தினிக்குப் புரிவதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. நந்தினியின் கண்களைத் துணியால் மறைத்து விட்டார்கள்.

புதிய வண்டியில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் பயணம் செய்த பின்னர், வண்டி நின்றது. ஏதோ ஒரு புதிய இடத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டாள் நந்தினி.
கண் கட்டு அவிழ்க்கப்பட்டபோது, வெற்றிச் சிரிப்புடன் எதிரே அபிராஜ் தெரிந்தான். பல வருட சிறைவாசத்தில் வயது ஏறியிருந்ததே ஒழிய, முகம் முன்னால் இருந்த மாதிரியே கொடூரமாகத் தான் தெரிந்தது நந்தினியின் கண்களுக்கு. பேராசை மின்னுகிற விழிகள் மாறவேயில்லை.

நந்தினி கொண்டு வந்த பைகள், அபிராஜிடம் கொடுக்கப்பட்டன. இரண்டு பைகளையும் திறந்து பார்த்தான் அபிராஜ். அத்தனையும் கோயில் நகைகள். பளபளவென்று மின்னிய அந்த ஆபரணங்களை, அந்த இடத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அடியாட்களின் விழிகளும் பிரமிப்பில் விரிந்தன. ஆனால், அபிராஜின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.

" வேல் எங்கே நந்தினி? " உறுமினான் அபிராஜ்.

" கொடுக்கறேன். ஆனால், அதுக்கு முன்னால என் குழந்தைகளை பத்திரமாகத் திருப்பி அனுப்பு. நீ கேட்டதெல்லாம் கொடுத்தாலும் நீ குழந்தைகளை எதுவும் செய்யாமல் திருப்ப அனுப்புவயான்னு எங்களுக்கு சந்தேகமா இருந்தது. சந்தேகம் என்ன? உன் காரியம் நிறைவேறியதும் எங்க எல்லாரையும் நீ கொல்லத் தயங்கமாட்டே. அதுனால அதை மட்டும் நிறுத்தி வச்சிருக்கோம்" என்று தைரியமாக பதில் கூறிய நந்தினியை எரிச்சலோடு பார்த்தான் அபிராஜ்.

" அதெல்லாம் அனுப்ப முடியாது. குழந்தைகளோட உயிர் என் கையில் ஊசலாடிட்டு இருக்குன்னு உனக்குப் புரியலையா நந்தினி? "

" நானும் அதுனால தான் பேசறேன். அதைக் கொடுத்தாலும் நீ அவங்களை ரிலீஸ் பண்ணுவேன்னு என்ன உத்தரவாதம்? நீ முதலில் குழந்தைகளை விடுவிச்சு வீட்டுக்கு அனுப்பு. அப்புறம் தான் உனக்கு வேல் கிடைக்கும் " என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டாள் நந்தினி.

கோப அக்னி ஜொலித்தது அபிராஜின் முகத்தில். கோபத்தை அடக்கிக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டான். சிறிது நேரம் யோசித்து விட்டு மீண்டும் அவளை மிரட்டத் தொடங்கினான்.

" உன்னோட கண்ணெதிரே குழந்தைகளைச் சித்திரவதை செஞ்சா உன்னால் பொறுக்க முடியாது நந்தினி "

" என்ன ஆனாலும் சரி. நான் வழிபட்டு வரும் தெய்வத்தின் மேல் எனக்குப் பரிபூரண நம்பிக்கை உண்டு. அதுனால நான் தைரியமா இப்போ உன் முன்னால் நிக்கறேன். இந்தத் தடவை உன் மந்திர, தந்திரம் எதுவும் பலிக்காதுன்னும் எனக்குத் தெரியும் " என்று உறுதியாகச் சொன்னாள் நந்தினி.

" ஏன் முடியாது? மந்திர, தந்திரம் எல்லாம் என்னால் உபயோகிக்க முடியும். ஊஞ்சலில் ஆடும்போது உன் பொண்ணுக்கு ஆன அனுபவம் மறந்து போச்சா? "

" நல்லா ஞாபகம் இருக்கு. நீ முயற்சி தான் செஞ்சே. ஆனால் உன்னோட முயற்சி வெற்றி பெறாமல் ஏதோ ஒரு நல்ல சக்தி உனக்கு எதிரா வேலை செஞ்சதுன்னும் எங்களுக்கு நல்லாப் புரிஞ்சது. அதே நல்ல சக்தி இப்பவும் எனக்கு உதவி செய்யும். அதோடு சேர்ந்து தெய்வ சக்தியும் எனக்குத் துணையா இருக்கு எப்பவும். ஆனால் நாங்க அநாவசியமா எங்களோட சுயநலத்துக்காக எந்த சக்தியையும் தொந்தரவு செய்ய மாட்டோம் " என்று ஆணித்தரமாகப் பேசிய நந்தினியின் வார்த்தைகளால் அரண்டு போனான் அபிராஜ்.

அவள் கூறியதும் உண்மை தான். சரண்யா, அன்று ஊஞ்சலாடும்போது அவனை எதிர்த்துப் போராடிய நல்ல சக்தியின் முன்னால் அவன் தோற்றுத் தான் போனான். அதுவும் சிறை வாசத்தில் நாட்களைக் கழித்தபோது மந்திர, தந்திரங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவு அவனால் அந்த தேவைகளுக்கான வழிபாடுகளையோ, அவற்றில் கடைப்பிடிக்க வேண்டிய கடுமையான நியம, நிஷ்டைகளையோ சரிவரச் செய்ய முடியவில்லை. அவன் வழிபடும் துஷ்ட தேவதைகள் அவனுக்கு முன்பு செய்தது போல உதவி செய்வது சந்தேகம் தான்.

இந்த முறை அபிராஜ் கோதாவில் இறங்கியிருப்பது தன்னுடைய பணபலத்தாலும், மற்றும் குறுக்குத்தனமாக யோசித்துத் தீய வழிகளைக் காட்டும் புத்தியின் வீர்யத்தாலும் மட்டுமே. அவனுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் சிலை கடத்தும் இன்டர்நேஷனல் குழுவிற்கும் அவனுடைய திட்டங்களில் அதிருப்தி ஏற்பட்டிருந்தது. இந்த முறை தோல்வி அடைந்தால், அவர்களே அவனை தண்டிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. அவர்களுடைய தண்டனைகள் மிகவும் கொடூரமாக இருக்கும். அவர்களுடைய வழிமுறைகளில் மன்னிப்போ, இரண்டாவது முயற்சி செய்யும் வாய்ப்போ கிடையவே கிடையாது. அதைப் பற்றி நினைத்ததுமே அபிராஜின் உடல் நடுங்கியது. அதுவும் குழந்தைகளைக் கடத்தியது அவர்களுக்கே பிடிக்காத செயல். குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கும்பல் அது. வேறு வழியில்லை. நந்தினியின் நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.

இவை மட்டுமே காரணங்கள் இல்லை. இவை அனைத்துக்கும் மேலான காரணம் ஒன்று இருக்கிறது. அதை அவனால் வெளிப்படுத்த முடியாது. குழந்தைகள் இங்கே அபிராஜ் வசம் இல்லை. குழந்தைகளின் பொறுப்பை யாரிடம் ஒப்படைத்திருக்கிறானோ, அவர்கள் முன்னிலையில் குழந்தைகளைத் துன்புறுத்துவது கடினமான செயல். ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.
ஆனால், நந்தினியின் நிபந்தனையை அப்படியே ஏற்றுக்கொள்வது அவனுடைய பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி விடும் என்பதால் ஆழ்ந்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

" நீ சொல்லறதை முழுமையாக ஒத்துக் கொள்ள முடியாது. மூணு பேரில் ஒருத்தரை மட்டும் ரிலீஸ் பண்ணறேன். ஒரு நல்ல அம்மாவா, உன்னோட குழுந்தைகள் ரெண்டு பேரில் ஒருத்தரைத் தானே நீ முதலில் காப்பாத்த விரும்புவே? யார் அந்த அதிர்ஷ்டசாலி? சரவணனா இல்லை சரண்யாவா? " என்று எகத்தாளமாகக் கேட்டான்.

" நீ சொல்லறதை என்னால ஒத்துக்க முடியாது. வேல் கிடைக்கணும்னு மனசில் ஆசை இருந்தால் , மூணு பேரையும் நீ உடனே ரிலீஸ் பண்ணு"

" அதெல்லாம் முடியாது. நேரத்தை வீணாக்காதே. திரும்பத் திரும்ப நீ ஆர்க்யூ பண்ணினால் குழந்தைகளோட சித்ரவதையை நான் ஆரம்பிக்க வேண்டி வரும். உனக்கு முடிவைச் சொல்ல ஒரு நிமிடம் டயம் தரேன். அதுக்குள்ள நீ பதில் சொல்லலைன்னா, ஒவ்வொரு குழந்தையையும் சித்திரவதை செய்ய ஆரம்பிச்சுருவாங்க. முதலில் கண்களைத் தோண்டச் சொல்லிச் சொல்லி இருக்கேன் " என்று பயமுறுத்தினான் அபிராஜ். நந்தினியும் அதற்கு மேலே நேரத்தைக் கடத்த விரும்பாமல் தனது முடிவைச் சொல்லிவிட்டாள்.

" முதலில் ஸலோனியின் மகன் மகிழனை ரிலீஸ் பண்ணு. அவன் பத்திரமா வீடு போய்ச் சேந்த தகவல் எனக்குக் கிடைச்சதும், நவரத்தின வேல் பத்தின க்ளூ உனக்குக் கிடைக்கும் " என்று நந்தினி சொல்லிவிட, அபிராஜ் தன்னுடைய மொபைலை எடுத்துக் கொண்டு அடுத்த அறைக்கு விரைந்தான்.

அவன் மொபைலில் இரகசியமாகப் பேசிவிட்டுத் திரும்பி வந்தான். அதற்குள் நிலைமை மாறிப் போயிருந்தது. வாசலில் காவலுக்கு நின்றிருந்த அடியாட்கள் பதறியபடி உள்ளே ஓடி வந்தார்கள்.

" அண்ணே, அண்ணே, பெரிய ஆபத்து அண்ணே! போலீஸ் இந்த இடத்தைச் சுத்தி வளைச்சுட்டாங்க. நம்மால இங்கிருந்து உசுரோட தப்பிக்க முடியுமான்னு தெரியலை. எவ்வளவோ ஜாக்கிரதையா இருந்தும் இந்த இடத்தை எப்படிக் கண்டுபிடிச்சாங்கன்னு தெரியலை " என்று பதைபதைத்தார்கள். திகைத்துப் போன அபிராஜ், நந்தினியைப் பார்க்க, அவளோ வெற்றிப் புன்னகை சிந்தினாள்.

" நான் உன் கிட்டப் பேரம் பேசகனது எதுக்காகன்னு இப்போப் புரியுதா? போலீஸ் வர வரைக்கும் உன்னை இங்கே நிறுத்தி வைக்கத்தான். அவங்களோட ஆபரேஷனுக்குத் தேவையான நேரத்தை அவங்களுக்குத் தரணும்னு தான் அப்படியெல்லாம் கெஞ்சினேன். உன்னிடம் பயந்து போய் நீ சொன்னதெல்லாம் நாங்க கேப்போம்ணு நீ நெனைச்சே இல்லையா? " என்று நந்தினி சொன்னபோது, அவளைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தான் அபிராஜ்.

" இன்னும் நீ என்னிடம் இருந்து தப்பிக்கலை. உன் குழந்தைகளும் என்னோட ஆட்களோட கஸ்டடியில் தான் இருக்காங்க. அந்த உண்மையை மறந்துட்டுப் பேசறே நந்தினி. அவங்களை உசுரோடத் தப்ப விட்டாத் தானே நீ ஜெயிப்பே? இதோ, என்ன செய்யறேன்னு பாரு" என்று சொல்லிவிட்டு மொபைலை எடுத்தான் அவன்.

" அபிராஜ், நீ ஒரு சரியான முட்டாள். குழந்தைகளை எப்பவோ காப்பாத்தியாச்சு. உனக்கு எல்லாத் திசைகளிலும் தோல்வி தான். அவங்களைக் காப்பாத்தி பத்திரமான இடத்துக்கு அனுப்பியாச்சு. கிரிமினலான உன்னாலயே என்னவெல்லாமோ யோசிக்க முடிஞ்சதுன்னா, எங்க பக்கம் இருக்கற நல்ல சக்திகள் எல்லோரும் உன் திட்டங்களை முறியடிக்க எவ்வளவு யோசிச்சிருப்பாங்க. எங்களைச் சரியானபடி வழிநடத்த எங்களுக்கு முருகனின் அருளும், குருசாமியின் ஆசிகளும் இருக்கே? எங்களுக்கு என்ன கவலை? " என்றாள் நந்தினி.

" குழந்தைகளை எப்படிக் காப்பாத்த முடியும்? நீங்க கண்டுபிடிக்க முடியாத இடத்தில் அவங்களை ஒளிச்சு வச்சிருக்கேன். நீங்க கெஸ் பண்ண முடியாத இடம்" என்று திக்கித் திணறினான் அபிராஜ்.

" அப்படியா? அவ்வளவு கஷ்டமா என்ன கண்டுபிடிக்கறது? அப்படி எங்கே ஒளிச்சு வச்சே? எங்கே நான் கெஸ் பண்ணக் கொஞ்சம் முயற்சி பண்ணறேனே ப்ளீஸ், ப்ளீஸ். உன்னோட மனைவியின் வீட்டில் தானே குழந்தைகளை ஒளிச்சு வச்சிருந்தே ? என்ன கரெக்டா கெஸ் பண்ணிட்டேனா? அதிர்ச்சியா இருக்கா? நான் உன் ஆட்களோட இங்கே வரதுக்குக் கொஞ்ச நேரம் முன்னாலேயே குழந்தைகளைக் காப்பாத்திட்டோம். அதுக்கெல்லாம் தேவையான ஜி பி எஸ் உபகரணங்களை அவங்க டிரஸ்லயே பொருத்தி வச்சுட்டாரு எங்க ஃப்ரண்ட். அவர் யார்னு தெரிஞ்சுக்கணுமா?

தில்லியில் பெரிய பிரைவேட் டிடெக்டிவ். பயங்கர புத்திசாலி. சத்யனுக்குத் தெரிஞ்சவர். அவருக்கு இந்தியா முழுவதும் ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க. எவ்வளவோ பயங்கரமான கிரிமினல்கள், தீவிரவாதிகளைப் பிடிச்ச அவருக்கு உன்னை மாதிரி ஆளை மடக்கறதுல்லாம் ஸிம்பிள் மேட்டர். உனக்கு மட்டும் தான் வெளிநாட்டு மாஃபியா கும்பல் ஹெல்ப் பண்ணுமா? அவருக்கு இன்டர்நேஷனல் லெவலில் நிறைய டிடெக்டிவ்களை நல்லாத் தெரியும். போதுமா இந்தத் தகவல்கள்? அவரை மீட் பண்ணலாமா? உனக்காக அவரே நேரில் வந்துருக்கார். வெளியில் காத்துகிட்டு இருக்கார். கூப்பிடட்டுமா ? " என்று நந்தினி கேட்டதும் அவளை நம்பமுடியாமல் பார்த்தான் அபிராஜ்.

அப்போது தான் துணிச்சலுடன் அடுத்த காரியத்தைச் செய்யத் துணிந்தான்.

" எல்லா விஷயங்களையும் அவசரப்பட்டு என்னிடம் சொல்லி மிகப்பெரிய தப்பு செஞ்சிருக்கே நந்தினி. சபாஷ், நீ ரொம்ப தைரியசாலி தான். ஆனால் ஓவர் கான்ஃபிடன்டா எல்லாத்தையும் என் கிட்டக் கொட்டியிருக்க வேணாம். நீயே நான் தப்பிக்க இப்போ உதவி செய்யப் போறே? எனக்கு வேணுங்கற பொக்கிஷம் கிடைச்சாச்சு. நீயும் என் கிட்ட வசமா மாட்டிருக்கே? உன் உதவியோட நான் இப்போது தப்பிக்கப் போறேன் பாரு" என்று சொல்லிவிட்டு, கோயில் நகைகள் இருந்த பைகளைத் தூக்கிக் கொள்ளச் சொல்லி இரண்டு அடியாட்களிடம் கண்களால் சைகை செய்தான். நந்தினியின் நெற்றிப் பொட்டில் தனது நவீன ரகத் துப்பாக்கியை வைத்து அழுத்தியபடி வாசலை நோக்கித் தன் அடியாட்களோடு நடக்க ஆரம்பித்தான்.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.

 
Top