கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 25

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே! 25

அத்தியாயம் 25

அவனி தனிலே பிறந்து மதலையெனவே தவழ்ந்து அழகு பெறவே நடந்து இளைஞோனாய்

அருமழலையே மிகுந்து குதலைமொழி யே புகன்று அதி விதமதாய் வளர்ந்து பதினாறாய்

சிவகலைகளாக மங்கள் மிகவு மறை ஓதுமன்பர் திருவடிகளே நினைந்து துதியாமல்

தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகு கவலையா யுழன்று திரியுமடியேனை யுன்றாய்

தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீதணிந்த மகதேவர்

மனமகிழவே யணைந்து ஒருபுறமதாக வந்த மலைமகளுக்கு மாற துங்க வடிவேலா

பவனி வரவே யுகந்து மயிலின் மிசை யே திகழ்ந்து படியதிரவே நடந்த
கழல்வீரா

றிந்த பரமபத மேசெ முருகனென வேயு கந்து பழநிமலை மேலமர்ந்த பெருமாளே!

பொருள்

இந்த பூமியிலே பிறந்து குழந்தையாகத் தவழ்ந்து அழகு பெறும் வகையில் நடை பழகிய இளைஞனாய்

அரிய மழலைச் சொல்லே மிகுந்து குதலை மொழிகளே பேசி, பல விதங்களிலும் வயதுக்கு ஒப்பாக வளர்ந்து வயது பதினாறு ஆகி ,

சைவ நூல்கள் , சிவ நூல்கள் . ஆகமங்கள், மிக்க வேதங்களை ஓதும் அன்பர்களுடைய திருவடிகளையே நினைந்து துதிக்காமல்,

மாதர்களின் மீது ஆசை மிகுந்து அதன் காரணமாக மிக்க கவலையுடன் அலைந்து திரிந்த அடியேனை,

உனது திருவடிகளில் சேர்க்க மாட்டாயா? சும்மா இரு என்ற மெளன உபதேசம் செய்த சம்பு!

பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை, தும்பைப்பூ ஆகியவற்றைத் தன் மணி முடியின் மேலணிந்த மகாதேவர்,

மனமகிழும்படி அவரை அணைத்துக் கொண்டு அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்த பார்வதியின் குமாரனே!

பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலினை உடையவனே! இவ்வுலகைச் சுற்றிவரவே ஆசை கொண்டு

மயிலின் மேல் ஏறி விளங்கி, பூமி அதிரவே வலம் வந்த வீரக் கழல் அணிந்த வீரனே!

முக்தி எனப்படும் வீடுபேற்றில் பொருந்தி நின்று முருகன் என்ற திருநாமத்துடன் விளங்கி, பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே!

றிந்த பரமபதமேசெ என்பதை செறிந்த பரமபதமே என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.


நந்தினியின் கதை தொடர்கிறது

சிறிது நேரத்தில் அங்கே நடந்த போராட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்தன. எதிர்பாராத திருப்பங்கள் இருந்தாலும், உயிர்ச் சேதம் எதுவும் இல்லாமல் முடிந்தது வியப்பிற்குரிய விஷயம் தான்.

நந்தினியை ஒரு கையால் இழுத்துக் கொண்டு அபிராஜ் வாசலை அடைந்தபோது அங்கே ராஜசேகருடன், காவல் துறையினர் பலரும், ஆயுதங்களுடன் தயாராக நின்று கொண்டிருந்தார்கள். ராஜசேகரின் அருகில் நின்று கொண்டிருந்த புதிய இளைஞன் தான் நந்தினி சொன்னவனாக இருக்கவேண்டும். தில்லியில் இருக்கும் ஏதோ ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தின் தலைவனான அவனை நந்தினி ஏகமாகப் புகழ்ந்து தள்ளினாளே? யாராக இருந்தாலும் எனக்கு என்ன ? அவனைத் தானே வென்று விட்டதாக எண்ணி, மமதையுடன் ராஜசேகரைப் பார்த்தான் அபிராஜ்.

" நீயும் உன்னோட இருக்கற செக்யூரிட்டி, போலீஸ் படை எல்லாருமே நான் போக வழிவிட்டு ஒதுங்கிடுங்க. யாராவது குறுக்கே வந்தால் நந்தினியின் உயிருக்கு ஆபத்து " என்றான். ராஜசேகர் அசையாமல் நின்றான்.

" வழியை விடு ராஜசேகர். நான் ஆசைப்பட்ட பொக்கிஷம் என் கைக்கு
வந்துடுச்சு. நந்தினியை என் கூடக் கூட்டிட்டு உங்க எல்லாரோட கண் முன்னால நான் தப்பிச்சுப் போகப் போறேன். நீ என்ன செய்யறேன்னா, உன்னிடம் பத்திரமா வச்சிருக்கற நவரத்தின வேலைக் கொண்டு வந்து எனக்குக் குடுத்துட்டு நந்தினியைக் கூட்டிட்டுப் போலாம். அதுவரை உன் அருமை மனைவி என் வசம் இருக்கா" என்று திமிருடன் பேசினான்.

" என் கிட்ட உன்னோட அருமை மனைவி இருக்காளே? அவ உனக்கு வேணாமா?" என்று ராஜசேகர் சொன்னபோது, அபிராஜ் நம்பிக்கை இல்லாமல் அவனைப் பார்க்க, ராஜசேசரின் கை காட்டிய திசையில் காமினி நின்று கொண்டிருந்தாள்.

" ஓ, காமினி தான் என் மனைவிங்கற உண்மை உங்களுக்குத் தெரிஞ்சுருச்சா? பரவாயில்லை, அவளோட வேலை முடிஞ்சது. எனக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ண முடியுமோ, அவ்வளவு ஹெல்ப் அவளும் பாவம் பண்ணி முடிச்சுட்டா. இனிமேல் அவளால் எனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவளை நீ கொன்னாலோ, வெட்டிக் கண்டதுண்டமாக்கிக் காக்காய்க்குப் போட்டாலோ எனக்குக் கவலையில்லை. நான் வெளிநாடு எங்கேயாவது தப்பிச்சுப் போய் வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்குவேன்" என்று அலட்சியமாகப் பேச, அவனுடைய சொற்களைக் கேட்ட காமினியின் முகம் வாடிப்போனது.

" அடப்பாவி, நீ மோசமானவன்னு தெரிஞ்சும் உன்னைக் கல்யாணம் செஞ்சுகிட்ட பலனை அனுபவிக்கிறேன். எங்கம்மா எவ்வளவோ சொல்லிப் பாத்தாங்களே? நான் தான் அவங்க பேச்சைக் கேட்காமல் உன்மேல கண்மூடித்தனமான அன்பு செலுத்தினேன். அதுக்கு நல்ல பிரதிபலன் கிடைச்சது. ஆனால் குழந்தைகளைத் துன்புறுத்த மட்டும் உனக்கு நான் நிச்சயமாக அனுமதி தந்திருக்க மாட்டேன் . நந்தினி அக்கா ரொம்ப நல்லவங்க தெரியுமா? நந்தினி அக்காவோட அப்பா நாகலிங்கம் தான் என் படிப்புக்கு உதவினார். அப்படியும் நந்தினி அக்கா குடும்பத்துக்கு எதிராக, சில காரியங்களைச் செஞ்சதுக்கு இன்னைக்கு நான் வெட்கப்படறேன். நீ குழந்தைகளைக் கொல்லத் துணிஞ்சாலும் துணிவேங்கற பயத்துல நானே குழந்தைகளை அவங்க கிட்ட ஒப்படைச்சேன் தெரியுமா? அவங்க உசுரோட நீ விளையாட உனக்கு வாய்ப்பு நிச்சயமாத் தரக்கூடாதுன்னு நான் எப்பவோ முடிவு செஞ்சிருந்தேன். உனக்குத் தெரியாத இன்னொரு உண்மையைச் சொல்லவா? " என்று கோபத்துடன் கத்தினாள் காமினி.

" வேண்டாம் காமினி, வேண்டாம், அதை வெளியே சொல்ல வேண்டாம்" என்று நந்தினி பதிலுக்குக் கத்தினாள்.

" இல்லைக்கா, நான் சொல்லியே தீருவேன். இந்த அயோக்கியன் சாகறதுக்கு முன்னால உண்மையைத் தெரிஞ்சுக்கட்டும். நீ சரண்யா ஊஞ்சலில் ஆடும்போது மந்திர சக்திகளை ஏவிக் கொல்லப் பாத்தே இல்லையா? அந்த சரண்யா உன்னோட ரத்தம்டா. உனக்கும் எனக்கும் பிறந்த குழந்தை " என்று விம்மினாள் காமினி.

" நம்ம குழந்தை பிறந்ததும் இறந்து போச்சுன்னு சொன்னயே? அது பொய்யா? " என்று அதிர்ச்சியுடன் கேட்டான் அபிராஜ்.

" ஆமாம், பொய் தான். குழந்தை பிறந்தபோது நீ ஜெயிலில் இருந்தே. எனக்கும் நந்தினி அக்காவுக்கும் ஒரே சமயத்தில் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைக் கொன்னுட்டு நானும் தற்கொலை பண்ணிக்க முயற்சி செஞ்சபோது நந்தினி அக்கா தான் தடுத்துத் தானே குழந்தையை வளக்கறதா எனக்கு ப்ராமிஸ் பண்ணினாங்க. எனக்கும் அவங்க ஹாஸ்பிடலில் வேலை போட்டுத் தந்தாங்க. ரெண்டு குழந்தைகளையும் ஒரே மாதிரியான பாசம் காட்டி வளத்துட்டு வராங்க. நீ என்னடான்னா தப்புக்கு மேல தப்பு செய்யறே? " என்றாள் காமினி.

" அதுனால என்ன? அது பொண் குழந்தை தானே? எனக்குத் தேவையில்லை. எனக்கு வாரிசாக ஒரு பையன் தான் வேணும். என்னோட மகள் உசுரோட இருக்கறதை வச்சு நீங்க யாரும் என்னை இமோஷனல் பிளாக் மெயில் செய்யமுடியாது. ஐ டோன்ட் கேர். எனக்குப் பொண்டாட்டியும் தேவையில்லை. பொண்ணும் தேவையில்லை. எனக்கு இந்தப் பொக்கிஷம் போதும் " என்று கோயில் நகைகள் வைக்கப்பட்டுள்ள பயணப்பைகளைக் காண்பித்தான் அபிராஜ்.

அப்போது அவனைப் பார்த்து ராஜசேகர் ஏளனமாகச் சிரித்தான்.

" அதை நீ மார்க்கெட்டில் விக்கப் பார்க்கும்போது உனக்கு இன்னும் அதிர்ச்சியா இருக்கப் போகுது மை டியர் ஃப்ரண்ட். அத்தனையும் போலி நகைகள். திறமையாக உருவாக்கப்பட்ட டூப்ளிகேட் செட். அது எப்படி, நீ கேட்டவுடனே நாங்க கோயில் நகைகளைத் தூக்கிக் கொடுத்துருவமா என்ன? இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் தேவைப்படும்னு தான் பல வருடங்களுக்கு முன்னாலயே தயார் பண்ணி வச்சிருக்கோம். கோயில் நகைகள் எல்லாமே பத்திரமான இடத்தில் அப்படியே இருக்கு" என்று ராஜசேகர் சொன்னபோது, அபிராஜின் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்தான். அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியும், நகைகள் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றமும் சேர்ந்து அவனுடைய கவனத்தைச் சிதறடித்தன.

அந்த ஒரு நொடி, ராஜசேகரின் அருகில் நின்றிருந்த புதியவனுக்குப் போதுமானதாக இருந்தது. அபிராஜின் மேல் பாய்ந்து அவனுடைய கையில் இருந்த துப்பாக்கியைத் தட்டிவிட, நந்தினி அவனுடைய பிடியில் இருந்து தப்பித்து ஓடி வந்து ராஜசேசரின் அருகில் நின்றாள். காவல் துறை அதிகாரிகளும் அபிராஜையும் அவனுடைய அடியாட்களையும் எளிதாக அடக்கி விட்டனர். சமூக விரோதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

நந்தினி, காமினியின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள். " நீ இன்னைக்கு செஞ்ச மாதிரி இன்னொரு தடவை செய்யாதே. சரண்யா எதிரில் உண்மையை உளறிடாதே. எனக்கு சரவணன், சரண்யா ரெண்டு பேரும் ஒண்ணு தான். ப்ளீஸ் புரிஞ்சுக்கோ" என்று உருக்கமாகப் பேசினாள்.

" மாட்டேன் அக்கா. நீங்க கவலைப்படாதீங்க. நான் வளக்ஙறதை விட நீங்க வளக்கறது தான் அவளுடைய எதிர்காலத்துக்கும் நல்லது. நான் எங்க அம்மாவைக் கூட்டிட்டு இந்த ஊரை விட்டே கிளம்பப் போறேன். வடக்கே எங்கேயாவது தொலைதூரத்துக்குப் போய் செட்டிலாகப் போறேன். என்னோட படிப்பு உங்க அப்பா எனக்குப் போட்ட பிச்சை. அந்தப் படிப்பை வச்சு நான் பிழைச்சுக்குவேன். என் பொண்ணோட வாழ்க்கையில் நான் என்னைக்குமே குறுக்கே வரமாட்டேன்" என்று சொல்லி விட்டு, அங்கிருந்த அனைவரையும் பார்த்துக் கைகளைக் கூப்பி நன்றி தெரிவித்த காமினி, அந்த இடத்தை விட்டு அகன்று சென்றாள். தளர்ந்து போயிருந்த அவளுடைய நடையே அவளுடைய மனநிலையை மற்றவர்களுக்குப் பறைசாற்றியது.

ராஜசேகரின் மாளிகையில் அன்று இரவு சிறப்பான விருந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சப் இன்ஸ்பெக்டர் கரிகாலன் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். தில்லியில் இருந்து வந்த அகரன் டிடெக்டிவ் ஏஜன்சியின் தலைவன் அகரனும் தனது உதவியாளர்களுடன் கலந்து கொண்டான்.

சத்யனும், ஸலோனியும் கூட வந்து கலந்துகொண்டார்கள். குழந்தைகள் திரும்பி வந்தவுடன் பாதுகாப்பான இரகசிய இடத்தில் குழந்தைகளுடன் சென்று தங்கிய இருவரும் பிரச்சினைகள் தீர்ந்த பிறகு திரும்பி வந்தார்கள். இப்போது மலர்ந்த முகங்களுடன் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

சத்யன், அகரனுக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்து வைத்தான். மகேந்திர பூபதியும், சித்ராதேவியும் விருந்தினர்களை வரவேற்றுப் பேசிவிட்டு மனநிறைவுடன் உள்ளே சென்று விட்டார்கள். குழந்தைகளையும் உள்ளே அனுப்பி விட்டு பெரியவர்கள் எல்லோரும் உட்கார்ந்து நீண்ட நேரம் அரட்டை அடித்தார்கள்.

கரிகாலன், ராஜசேகரைப் பெருமையுடன் பார்த்தார்.

" சார், என் பசங்க ரெண்டு பேரும் உங்களைப் பாத்து ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டாங்க. ரெண்டு பேருக்கும் மெடிக்கல் லைனில் தான் போணுமாம்" என்று பெருமிதத்துடன் பேசினார்.

" நல்ல விஷயம் தானே? படிச்சுட்டு வந்து நம்ம ஊர் ஜனங்களுக்கே உதவி செய்யலாமே? அடுத்த தலைமுறையை நாம இதுக்காக சரியானபடி கெயிட் பண்ணனும். உங்க பசங்க இப்படிச் சொன்னாங்களா? என் பசங்க பெரியவங்களாகி ஐபிஎஸ் எக்ஸாம்
தரணுமாம். பெரிய போலீஸ் அதிகாரி இல்லைன்னா பிரைவேட் டிகெக்டிவ் ஆகணுமாம். நம்ம அகரன் மாதிரி " என்று ராஜசேகர் சொன்னபோது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

" நந்தினி, நீங்க உங்க பொண்ணு சரண்யா இன்னும் கொஞ்சம் பெரியவளானதும் அவளிடம் உண்மையை வெளிப்படையாச் சொல்லிடறது நல்லது. நாம சொல்லாமல் வேற யார் மூலமாகவோ அவளுக்குத் தெரியவந்தா விளைவுகள் விபரீதமாகலாம். அதே மாதிரி அவளை லீகலாவும் உங்க பொண்ணா அடாப்ட் பண்ணிக்கோங்க. பயலாஜிகல் அப்பா சம்மதம் இல்லாமல் பண்ணனுமேன்னு பயப்பட வேணாம். காமினி சம்மதிப்பாங்க. நல்ல லாயரா நான் ஏற்பாடு பண்ணறேன் " என்றான் அகரன்.

" கரெக்ட் தான். நான் பாத்துக்கறேன்" என்ற நந்தினிக்கு ஏனோ அதை நினைத்தால் பயமாக இருந்தது.

" அப்புறம் கொஞ்ச நாட்களுக்குக் குழந்தைகளை வேற பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி பத்திரமாப் பாத்துக்கோங்க. சத்யன், நீங்களும் உங்க ஃபேமிலியோட வேற இடத்துக்கு ஷிஃப்ட் ஆகணும். இப்போது உங்களைப் பத்தின தகவல்கள் மிகப் பெரிய இன்டர்நேஷனல் லெவல் கிரிமினல் நெட்வொர்க் இருக்கிற மாஃபியாவிடம் கசிஞ்சிருக்கறதுனால நாம் சில முக்கியமான முடிவுகள் எடுக்கணும். வேற இடத்துக்கு நீங்க மாற வேண்டியதற்கான இரகசியமாக ஏற்பாடுகளை நான் செஞ்சு தரேன். ஆக்சுவலி அந்த மாஃபியா ஆட்கள் குடும்பங்களையோ குழந்தைகளையோ சாதாரணமாத் துன்புறுத்த மாட்டாங்க. இருந்தாலும் நாம ரிஸ்க் எடுக்கவே கூடாது" என்று அகரன் சொன்னபோது எல்லோரும் அக்கறையுடன் கேட்டுக் கொண்டார்கள்.

" என்னடா இது புதுக்குழப்பம்னு நினைக்க வேண்டாம். என்னதான் நாம அபிராஜைப் பிடிச்சுட்டாலும் இதில் ஒரு புது மாஃபியா சிலை திருடறதுக்காகவே நுழைஞ்சிருக்கு. இந்தத் தடவை அவங்க முயற்சி தோல்வி அடைஞ்சாலும் திரும்பும் கூடிய விரைவில் முயற்சி செய்வாங்க. அவங்களோட நடவடிக்கைகளை முறியடிக்க சில முன்னேற்பாடுகள் செஞ்சுரணும். கோயில் பாதுகாப்பை பலப்படுத்தணும். ஸிஸிடிவி கேமராக்களை அங்கங்கே ஃபிக்ஸ் பண்ணனும். நல்ல செக்யூரிட்டி ஏஜன்சியாப் பாத்து அரேஞ்ச் பண்ணனும். நான் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கேன். வீ வில் மேனேஜ் எவரிதிங்" என்று அகரன் அவர்களுக்கு உறுதியளித்த போது அவர்களுக்கும் நிம்மதியாக இருந்தது.

அடுத்த நாள் முருகன் சந்நிதியில் அனைத்து நகைகளையும் சாற்றி, முருகனுக்கு மிகச் சிறப்பாக அலங்காரம் செய்தார்கள்.

"முருகா, முருகா" என்று மக்கள் கோஷமிட்டபோது அந்த இடத்தில் பக்தி வெள்ளம் கரை புரண்டோடியது.

கையில் வேலுடன், யாமிருக்க பயமேன் என்று புன்முறுவலுடன் உறுதி அளித்தார் அந்த ஆறுமுகக் கடவுள்.

இரண்டு நாட்கள் கழித்து, மகேந்திர பூபதி தூக்கத்திலேயே உயிரை இழந்தபோது தான், குருசாமி சொன்ன இழப்பு இது தானென்று நந்தினியின் குடும்பத்திற்குப் புரிந்தது.

மருத்துவமனையின் புதிய பகுதிக்கு, தந்தையின் பெயரையே சூட்டினான் ராஜசேகர். குழந்தைகளுக்கான அந்தப் புதிய பகுதியில் ஏழைக் குழந்தைகளுக்காக இலவச மருத்துவம் வழங்குவதாக அறிவித்தார்கள்.
மகேந்திரபூபதி என்கிற அந்த நல்லவரின் ஆத்மா , நிச்சயமாக என்றும் அந்தக் குடும்பத்திற்கு நல்வழி காட்டும் !

"என்னப்பனே, என் அய்யனே,
கந்தப்பனே கந்தக் காருண்யனே!

பன்னிரு கை வேலவனே
பன்னிரு கை வேலவனே!

கன்னி வள்ளி மணவாளனே
வேல் வேல் வேல் வேல்
வேல் முருகா வேல் ...
வேல் வேல் வேல் வேல்
வேல் முருகா வேல்

வேல் முருகா மாப்பழனி வேல் முருகா வேல் வேல்


கால்களில் பொற் சிலம்பு முருகன் ... கைகளில் பொற் சதங்கை

கல் கல் கல் என வருவான்

வேல் வேல் வேல் வேல் வேல் முருகா வேல்

வேல் முருகா மாப்பழனி வேல் முருகா வேல் வேல்!

நிறைவு!

புவனா சந்திரசேகரன்.

தொடர்ந்து வாசித்து ஆதரவு தந்த அனைத்து வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி🙏💕

கூடிய விரைவில் அடுத்த கதையைப் பதிவு செய்கிறேன்.

 

Puvana Chandrasekaran

Moderator
Staff member
அருமையான கதை, முருகனருளால் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. 🙏🙏🙏🙏🙏
தொடர்ந்து படித்து ஆதரவு தந்ததற்கு மனமார்ந்த நன்றி🙏💕
 
Top