கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 3

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே

அத்தியாயம் 3

பொன்னி, பூக்களைப் பறித்து உள்ளே கொண்டு போய் வைத்துவிட்டுத் திரும்பி வந்தாள். நந்தினியைக் கண்கள் தேடின. ஊஞ்சல் மட்டும் படுவேகமாக ஆடிக் கொண்டிருந்தது. நந்தினியை அங்கே இல்லை.

" அக்கா இங்கே தானே ஊஞ்சலில ஆடிக்கிட்டு இருந்தாங்க? எங்கே போனாங்க? புது இடம் வேற! அவங்களுக்கு ஒண்ணுமே தெரியாதே!
ஊஞ்சல் இன்னும் ஆடிக்கிட்டு இருக்கறதைப் பாத்தா, இப்பத் தான் எறங்கிப் போயிருக்கணும். ஒருவேளை வீட்டுக்குள்ள திரும்பிப் போயிட்டாங்களா? எதுக்கும் இங்க, ஒருதடவை தேடிப் பாத்துட்டு அப்புறமா உள்ள போயித் பாக்கலாம்" என்று வாய் விட்டுப் புலம்பிக் கொண்டே அங்குமிங்கும் கண்களைச் சுழற்றினாள்.

அருகிலிருந்த ஒரு மரத்தின் கீழ் நந்தினி சுருண்டு படுத்துக் கிடந்தாள். பொன்னி, நந்தினியின் அருகில் பதட்டத்துடன் ஓடிப் போய்ப் பார்த்தாள்.

" அக்கா, அக்கா, என்னாச்சுக்கா? அச்சச்சோ, நெத்தியில எங்கேயோ இடிச்சுக்கிட்டீங்க போல இருக்கே? இரத்தம் வருதே! என்னக்கா இப்படி? சும்மாச் சும்மாச் சின்னக் குழந்தை மாதிரி அடி பட்டுக்கிறீங்களே நீங்க? " என்று புலம்பியபடி, அவளை உலுக்கி எழுப்பினாள்.

கன்னத்தில் தட்டித் திரும்பத் திரும்பக் கூப்பிட்டதன் பிறகு, நந்தினி மெல்லக் கண் திறந்தாள். பயந்து போயிருந்தாள்.
எழுந்து உட்கார்ந்தாள்.

" என்னக்கா ஆச்சு? ஊஞ்சல் தானா ஆடிக்கிட்டு இருக்கு. நீங்க வாட்டுக்குக் கீழே விழுந்து கெடக்கறீங்க? எப்படி விழுந்தீங்க? பேலன்ஸ் போயிடுச்சா? ஊஞ்சலில் ஆடற போது இவ்வளவு வேகமாக ஆடலாமா? பழக்கம் இல்லையாக்கா?" என்று பொன்னி ஆதரவாகப் பேசினாள்.

" இல்லை பொன்னி. நான் கிராமத்தில் வளந்த பொண்ணு தானே? இந்த மாதிரி மரத்தில கட்டின ஊஞ்சலில தினம் தினம் ஆடுவேனே? இந்த ஊஞ்சல் என்னவோ தானாவே ரொம்ப வேகமா ஆடத் தொடங்கிடுச்சு. யாரோ பின்னாலிருந்து அசுரத்தனமா ஆட்டின மாதிரி எனக்குத் தோணுச்சு. என்னால நிறுத்தவே முடியலை. காதில வேற ஏதோ கொரல் கேட்ட மாதிரி இருந்தது" என்றாள்.

" சரி, சரி, உள்ளே வாங்க. பெரியம்மா பாத்தா என்னைத் தான் கோவிச்சுக்குவாங்க. ரூமுக்குப் போய் நெத்திக் காயத்துக்கு மருந்து போட்டுட்டு வந்துருவோம். எதையோ பாத்து ரொம்ப பயந்து போயிருக்கீங்க. அதுனால தான் உங்க மனசுக்கு என்னல்லாமோ தோணுது" என்று நந்தினி சொன்ன விஷயத்தை அப்படியே தள்ளுபடி செய்து விட்டு, அவளைக் கூட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் பொன்னி.

மீண்டும் முகம் கழுவிக் கொண்டு, காயம் பட்ட இடத்தில் லேசாக டெட்டால் போட்டு சுத்தம் செய்து விட்டுத் தலையைப் பின்னிக் கொண்டு பூஜையறைக்கு வந்தாள் நந்தினி. மாலை நேரமாகி விட்டதால் விளக்கேற்றி வைத்தாள். மாமியார் வந்து தலை நிறையப் பூ வைத்து விட்டாள். மாமியாரின் கால்களில் விழுந்து நந்தினி நமஸ்காரம் செய்தாள்.

" தொங்கத் தொங்கத் தாலியோடு தீர்க்க சுமங்கலியா சந்தோஷமா இரும்மா. இந்த வீட்டிலயும் சந்தோஷத்தைப் பரப்பும்மா" என்று சொல்லி மனதார வாழ்த்தினாள். மாமியாரின் ஆசிகளைக் கேட்டு, நந்தினியின் உடல் சிலிர்த்தது.

அடுத்தடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்து கல்யாணம் விசாரித்து விட்டுப் போனார்கள். சிரித்த முகத்துடன் அழகுச் சிலையாக உட்கார்ந்திருந்த மருமகளைப் பார்த்துப் பார்த்து சித்ரா தேவி பூரித்துப் போனாள்.

" முருகப் பெருமானே! இந்தப் பொண்ணாவது நீண்ட ஆயுளோடு இந்த வீட்டில சந்தோஷமா வாழணும். குழந்தை குட்டிகளைப் பெத்துத் தந்து எங்க வம்சத்தைத் தழைக்க வைக்கணும்" என்று பூஜையறைக்குச் சென்று இஷ்ட தெய்வத்திடம் விண்ணப்பம் போட்டு வைத்தாள்.

இரவு உணவு சமயத்தில் எல்லோருமாக டைனிங் டேபிளைச் சூழ்ந்து உட்கார்ந்தார்கள்.‌ ஜமீன்தார் மகேந்திர பூபதி, ஜமீன்தாரிணி சித்ராதேவி, இளைய ஜமீன்தார் ராஜசேகர பூபதி, அவரருகில் நந்தினி, இவர்களைத் தவிர திருமணத்திற்கு வந்திருந்த சில நெருங்கிய சொந்தங்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

சித்ரா தேவி, நந்தினியைப் பார்த்துக் கண்களைக் காண்பித்ததும், நந்தினி எழுந்து பால் பாயாசத்தை எல்லோருக்கும் பரிமாறினாள். '"போதும், இனிமேல் உட்கார்ந்து நீயும் சாப்பிடலாம்" என்று சித்ரா தேவி சொல்லி விட, நந்தினியும் வந்து கணவனருகில் உட்கார்ந்தாள். கணவன் வழக்கம் போல இறுகிய முகத்துடன் இருந்தான். அவள் பக்கம் திரும்பிப் பார்க்கவோ, புன்னகைக்கவோ இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக மாறுவான், மாற்ற முயற்சி செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் அவனைப் பார்த்து விட்டு நந்தினியும் சாப்பிட ஆரம்பித்தாள்.

வகை வகையான பதார்த்தங்கள் கண் முன்னே. நந்தினிக்குப் பழக்கம் இல்லாததால், தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டாள். நந்தினியும் அவளுடைய தந்தையும் எளிமையான உணவு தான் உண்பார்கள். அதுவும் இரவில் கண்டிப்பாக எளிமையான, விரைவில் ஜீரணிக்கும் உணவுகள் தான் எடுத்துக் கொள்வார்கள்.

புதிய சூழ்நிலைக்கேற்பத் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்; மாமனார், மாமியார், கணவரின் விருப்பங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு சமையல் செய்து தரவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

" என்னம்மா படிச்சிருக்கே நந்தினி?" என்று மகேந்திர பூபதி கேட்டார்.

" பி.காம். முடிச்சிட்டு ஐ.சி.டபிள்யூ.ஏ. (ICWA) பரீக்ஷைக்குத் தயார் செஞ்சுக்கிட்டிருந்தேன் மாமா" என்று பணிவுடன் பதில் அளித்தாள் நந்தினி.

" பரவாயில்லையே! நாகலிங்க வாத்தியார் கிராமத்துக்காரரா இருந்தாலும் பொண்ணை நல்லாப் படிக்க வச்சிருக்காரே? ராஜசேகரா, கொஞ்ச நாள் கழிச்சு என் மருமகளே கணக்கு வழக்கெல்லாம் பாத்துக்குவான்னு நெனைக்கிறேன்" என்று சொல்லி விட்டுப் பெருமையுடன் புன்னகைத்தார் மகேந்திர பூபதி‌. ராஜசேகர் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல், சரியென்று தலையசைத்தான்.

சாப்பாடு முடிந்ததும் நந்தினி, தனது அறைக்குச் சென்றாள். ஒருவிதத் தவிப்புடன் உட்கார்ந்திருந்தாள். பொதுவாகத் திருமணத்தன்றே இரவில் சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவார்கள். ஆனால் இங்கே பார்த்தால் அதற்கான எந்த ஏற்பாடோ, அலங்காரமோ செய்யப்பட்ட மாதிரி தெரியவில்லை.

'இன்று இரவு அந்த ஃபங்ஷன் இருந்தால் இவ்வளவு நேரம் தெரிந்திருக்குமே? இல்லை ஒருவேளை இரண்டாவது கல்யாணம் என்பதால் யாரும் அந்த நிகழ்ச்சியைப் பெரிதாக நினைக்கவில்லையோ? என் கணவருக்கு இரண்டாம் கல்யாணமாக இருந்தாலும் எனக்கு இது முதல் கல்யாணம் ஆச்சே? ஒரு விதத்தில் இன்னைக்கு இல்லைன்னா நல்லது தான். இன்னும் கொஞ்ச நாட்கள் அவரோடு பேசிப் பழகி அவரைப் பத்திக் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்ட பிறகு, அவரைத் தனிமையில் சந்திச்சா நல்லது' என்று யோசித்து யோசித்துக் குழம்பினாள் நந்தினி.

அவளுடைய குழப்பத்தைத் தீர்க்க, சித்ரா தேவியே வந்தாள் அங்கு. "இன்னைக்கு சாந்தி முகூர்த்தம் வைக்க வேணாம்னு நம்ப ஜோசியர் சொல்லிருக்காரு. அவர் நல்ல நாள் பாத்துச் சொன்னதுக்கப்புறம் தான் சாந்தி முகூர்த்தம். நீ இந்த அறையிலேயே தூங்கறயா? இங்கே சௌகர்யமா இருக்கா? இல்லை வேற அறைக்கு மாத்திக்கறயா?" என்று சித்ரா தேவி சொன்னதும், நந்தினிக்கு நிம்மதியாக உணர்ந்தாள்.

" இங்கேயே தூங்கறேன் மா. சௌகர்யமா இருக்கு" என்றாள்.

" புது இடம். பழகக் கொஞ்சம் சமயம் பிடிக்கும். தனியாத் தூங்க பயமில்லையே? பயமா இருந்தாத் தயங்காமச் சொல்லும்மா. பொன்னியை இராத்திரி இங்கயே தங்கச் சொல்லறேன். உனக்குத் தேவையிலைன்னா வீட்டுக்கு அனுப்பிடுவேன்" என்று பரிவுடன் கேட்டாள்.

" அனுப்பிடுங்க அத்தை. எனக்கு ஒண்ணும் பயமில்லை" என்று சொல்லி விட்டாள். ஆனால் மனதில் ஊஞ்சலில் ஆடும் போது காதில் கேட்ட கிசுகிசுப்பான குரலின் ஞாபகம் வந்த போது மனதில் திகீரென்றது.

சித்ரா தேவி வந்த கொஞ்ச நேரத்தில் ராஜசேகர பூபதி அங்கு வந்தான். அடுத்த அறையில் தூங்குவதற்காகத் தனது சாமான்களை எடுத்துக் கொண்டு போக வந்திருந்தான்.

" இங்கே பாரு நந்தினி. உன்னைப் பார்க்கவோ, பேசவோ, பழகவோ எனக்குப் பிடிக்கவேயில்லை. அம்மா, அப்பா என்னை வற்புறுத்தி, இமோஷனல் பிளாக்மெயில் செஞ்சு என்னைக் கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சாங்க. என் கிட்டயிருந்து பிரியத்தையோ, நெருக்கத்தையோ எதிர்பாக்காதே. நீயாவே இங்கயிருந்து போயிடு. அது தான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது. வந்தவுடனே என்னை என் ரூமிலிருந்து துரத்தறே! ஆனா, நான் உன்னைக் கூடிய சீக்கிரம் என் வாழ்க்கையில் இருந்து துரத்தறேன்" என்று கடுகடுவென்று அவளிடம் பேசிவிட்டு அங்கிருந்து போனான். ஆசைக் கணவன், அவளுடன் முதன்முதலில் பேசிய சொற்களே வெறுப்பில் தோய்ந்த தீக் கங்குகளாக அவள் மீது எறியப்பட்டன. விக்கித்துப் போய் நின்றாள் நந்தினி.

படுக்கையில் படுத்து நீண்ட நேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். தோட்டத்தைப் பார்த்திருந்த ஜன்னலின் கதவுகளைத் திறந்து வைத்திருந்தாள்.

எப்போது கண்ணயர்ந்தாள் என்று தெரியவில்லை. நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தவளுக்கு, திடீரென்று தூக்கம் கலைந்து விட்டது. தாகம் நாவை வறட்ட, படுக்கையின் அருகேயிருந்த ஸ்டூலில், ஒரு ஜக்கில் வைக்கப்பட்டிருந்த நீரை எடுத்துக் குடித்தாள்.

உடம்பெல்லாம் தகதகவென்று எரிந்தது. காற்று விர்விர்ரென்று சுழற்றி அடிக்க, அறையில் இருந்த திரைச்சீலைகள் பட்பட்டென்று அடித்துக் கொண்டன. மீண்டும் அந்தக் குரல் இப்போது இன்னும் சத்தமாக ஒலித்தது.

" போயிடு, போயிடு இங்கேயிருந்து. உசுரு மேலே கொஞ்சமாவது ஆசையிருந்தாப் போயிடு உடனே. என் வார்த்தையை மீறித் தங்கினேன்னா , கொடூரமாச் சாகடிக்கப் படுவே" என்று அந்தப் பெண்ணின் குரல் உறுமியது. அந்தக் குரல் அவளுக்குள் ஊடுருவி நடுங்க வைத்தது அவளை.

காதெல்லாம் அடைத்தது. நா வறண்டது. தொண்டையில் ஏதோ செய்தது. மூச்சு முட்டியது போல இருந்ததால், ஜன்னலின் அருகே சென்று நின்றாள். தோட்டத்தில் இருந்து வரும் இயற்கையான வெளிக்காற்று ஜில்லென்று முகத்தில் பட்டால், சரியாகும் என்று நினைத்தாள்.

அங்கே, தோட்டத்தில் ஊஞ்சலின் மீது ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். தீயில் எரிந்து கொண்டிருந்தது போல, அவளுடைய உருவம் தகதகதவென்று ஒளிர்ந்தது. செந்நிறத்தில் தீப்பிழம்பாகத் தெரிந்தாள். கண்கள் செக்கச் செவேரென்று கோபத்துடன் அவளைப் பார்த்தன. கலகலவென்று சிரித்தபடி கைகளை அவளை நோக்கி நீட்டினாள் அந்தப் பெண். கைகள் அப்படியே நீண்டு நீண்டு அவளருகில் வந்தன. " வா, வா, என்னருகே வா" என்று குரல் அவளது செவிகளில் விழுந்தன.

பயந்து போய்ப் பின்னால் வந்தாள். ஜன்னலை வேகமாக அடைத்து விட்டுத் திரும்பினாள். எதிரே சுவரில் இருந்த படத்தில், அபலாவின் கண்கள் தெறித்து விடுவது போல விழித்து அவளைப் பார்த்தன.

நந்தினியின் வாய், அவளுக்குத் தெரிந்த தேவி துதியை ஜபிக்க ஆரம்பித்தது. கைகள், அவளுடைய திருமாங்கல்யத்தில் இருந்த சிவலிங்கத்தை இறுகப் பிடித்தன. அப்படியே மயங்கி விழுந்தாள்.‌

தொடரும்,
புவனா சந்திரசேகரன்,
 
Top