கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 4

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே!

அத்தியாயம் 4

அடுத்த நாள் காலை நேரம். பொழுது விடிந்தது. கதிரவனின் கதிர்கள் அன்றைய நாளின் பரபரப்பான நிகழ்வுகளுக்காக, உலக மாந்தரைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தன.

மாளிகையில் காலை நேரத்தில் எல்லோரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். ஜமீன்தாரிணி பூஜை அறையில் நந்தினிக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். எல்லோரும் குளித்துத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். காலை உணவு கமகமவென்று சமையலறையில் தயாராகிக் கொண்டிருந்தது. உணவின் மணம் காற்றில் பரவி வீடு பூராவும் வியாபித்து நின்று எல்லோருக்கும் பசியைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தது.

நீண்ட நேரமாகக் காத்துக் கொண்டிருந்தும் நந்தினி வராததால் சித்ரா தேவிக்கு நந்தினியின் மேல் எரிச்சல் வந்தது. ' ஏழை வீட்டுப் பெண். பாத்தா நல்லாப் பண்போட நடந்துக்கறான்னு நெனைச்சது தப்பாயிடும் போல இருக்கு. காலையில இவ்வளவு நேரமா ஒரு பொண்ணு, அதுவும் புகுந்த வீட்டுக்கு வந்த மொதல் நாளே தூங்குவா?' என்று யோசித்துக் கொண்டே பொன்னியை அழைத்தார்.

" நந்தினி இன்னும் எழுந்து வரலை. போய்க் கொஞ்சம் பாக்கறயா? சீக்கிரமாக் குளிச்சுத் தயாராகிப் பூஜை ரூமுக்கு நான் வரச்சொன்னதாச் சொல்லறயா?" என்று மெல்லிய குரலில் சொல்லி அவளை அனுப்பினாள்.

பொன்னி கதவைத் தட்டிப் பார்த்து, நந்தினி திறக்காததால் தானே கதைவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே போனாள்.

ஜன்னலருகில் தரையில் சுருண்டு கிடந்தாள் நந்தினி. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. கண்களை மூடிக் கிடந்தாள். வாய் மட்டும் ஏதோ அரற்றிக் கொண்டிருந்தது. தெளிவாக வராமல் சொற்கள் குளறலாகக் கேட்டன.

உடலைத் தொட்டு எழுப்ப, நந்தினியின் மேல் கை வைத்தாள் பொன்னி. உடல் அனலாய்க் கொதித்தது. ஓடிப்போய் சித்ராதேவியிடம் பொன்னி சொல்ல, சித்ராதேவி பதறிப்போய் வந்தாள்.

" ராஜசேகரா, ராஜசேகரா" என்று கத்திப் பார்த்தாள். அவன் வரவில்லை.

" ஐயா, இன்னைக்குக் காலையில் சீக்கிரமாகக் கெளம்பி ஹாஸ்பிடல் போயிட்டாரும்மா. ஏதோ அவசரமா எமர்ஜென்சி கேஸ் வந்திருக்கறதாச் சொன்னாரு" என்றாள் பொன்னி.

" சரி, காய்ச்சல் ரொம்ப அதிகமா இருக்கு. நெனைவே இல்லாம கெடக்கறா. இப்படியே விட்டா நல்லதில்லை. ஜன்னி கண்டுரும். நேரா நம்ப ஹாஸ்பிடலுக்கே கொண்டு போயிடலாம். வாங்க, அவளை எப்படியாவது காரில் ஏத்துங்க" என்று அங்கிருந்தவர்களிடம் ஆணை பிறப்பித்து விட்டுக் கணவரிடம் சென்று சொன்னார்.

ஜமீன்தார், டிரைவரை அழைத்து வண்டியை எடுக்கச் சொல்ல, சித்ராதேவி, மகேந்திர பூபதி , இவர்களுடன் பொன்னியையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தார்கள்.

ராஜசேகர பூபதி ஒரு டாக்டர் தான். இதயச் சிகிச்சை நிபுணனன். அவர்கள் இருந்த ஊர், கிராமமும் இல்லாமல், பெரிய நகரமும் இல்லாமல் ஓரளவு வளர்ச்சி பெற்ற சின்ன ஊர். சுற்று வட்டாரங்களில் நல்ல மருத்துவமனை இல்லாத காரணத்தால், ராஜசேகர பூபதி படித்து முடித்ததும், மகனுக்காகவே ஜமீன்தார் அந்த மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலை அங்கு கட்டினார். நல்ல பிரபலமாகி விட்டது.

ராஜசேகர பூபதி, தன்னுடன் படித்த சலோனியையும், அபிராஜையும் தன்னுடைய மருத்துவமனையில் இழுத்துப் போட்டுக் கொண்டான். இரண்டு பேரும் நல்ல திறமைசாலிகள். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள். சலோனி கைனகாலஜிஸ்ட். அபிராஜ் , எம்.டி. மெடிசின்ஸ். மருந்துகள் பரிந்துரைப்பதில் எக்ஸ்பர்ட்.

மூன்று பேரின் உழைப்பால் மருத்துவமனை வளர்ந்து வந்தது. அன்று காலை அந்த ஊரில் இருக்கும் ஒரு வி.ஐ.பி. பேஷண்ட், ஹார்ட் அட்டாக் வந்து அட்மிட் ஆகியிருந்த தகவல் வந்ததால் தான் ராஜசேகர் சீக்கிரமாகக் கிளம்பி வந்திருந்தான்.

ஹாஸ்பிடலை அவர்கள் அடைந்தபோது, ராஜசேகர் பிஸியாக இருந்ததால், அவனால் உடனே வர முடியவில்லை. சலோனி தான் வந்து உதவி செய்தாள்.

" காய்ச்சல் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. உடனே இஞ்செக்ஷன் போட்டுட்டேன். ரொம்ப வீக்கா இருக்காங்க. எதுக்கும் ரெண்டு நாள் இங்கயே எங்களோட அப்ஸர்வேஷனில இருக்கறது நல்லதுன்னு நெனைக்கிறேன். நீ என்ன சொல்லறே அபிராஜ்?" என்று அண்ணனைக் கேட்டாள். அபிராஜ், சலோனிக்குப் பெரியப்பா மகன் என்ற உறவில் அண்ணன் முறை. கஸின் ப்ரதர்.

" கரெக்ட் தான். எதுக்கும் ராஜசேகர் வந்து பாத்து ஒபினியன் சொல்லட்டும். அதுவரை வெயிட் பண்ணுவோம்" என்றான் அபிராஜ்.

அதற்குள் நந்தினி லேசாகக் கண் விழித்தாள்.

" ஹலோ நந்தினி, நான் தான் டாக்டர்.சலோனி. உங்க கணவரோட ஃப்ரண்ட். இது டாக்டர்.அபிராஜ். இப்ப எப்படி ஃபீல் பண்ணறீங்க? கொஞ்சம் பெட்டரா? உங்க கல்யாணத்துல வந்து கலந்துக்க முடியலை. ஹாஸ்பிடல் வேலை. இன்னைக்கு சாயந்திரம் வந்து நேரில பாத்து வாழ்த்து சொல்லலாம்னு நெனைச்சா, நீங்களே இப்படி இங்க வந்துட்டீங்களே? யு லுக் ஸோ ப்யூட்டிஃபுல். கிராமத்து ப்யூட்டி. என் ஃப்ரண்ட் ரொம்ப லக்கி" என்று சொல்லிக் கண்ணடித்தாள்.

நந்தினிக்கு நினைவு வந்து, தான் எங்கே இருக்கிறோம், என்ன நடக்கிறது தன்னைச் சுற்றி என்று எதுவும் புரிவதற்குள் படபடவென்று ஊசிப் பட்டாசாகப் பொரிந்த அந்த இளம்பெண்ணைப் பார்த்து முதலில் மலங்க மலங்க முழித்தாலும், உடலில் சக்தியை வரவழைத்துக் கொண்டு அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள். கைகளைக் குவித்து வணக்கம் சொன்னாள்.

" ஏய் சலோனி, அவங்களே மயக்கமா இருந்து இப்பத் தான் கண் விழிக்கறாங்க. அவங்களைப் பாத்து நீ இத்தனை கேள்விகள் கேட்டால் இன்னும் கொஞ்சம் பயந்துர மாட்டாங்களா? நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க ஸிஸ்டர். இவ எப்போதுமே இப்படித் தான். கடுகு வெடிக்கற மாதிரி பொரிஞ்சு தள்ளுவா? பரவாயில்லையே, உடம்பு சரியில்லாத போது கூடக் கஷ்டப்பட்டு எழுந்திரிச்சு எங்களுக்கு வணக்கம் சொல்றீங்களே? ஐ அப்ரிஷியேட் யூ" என்று சொன்னான் அபிராஜ்.

" ஜமீன்தாரிணியாச்சே? அதெல்லாம் பாத்துத் தான் பெரிய ஜமீன்தாரிணி மகனுக்குத் தேர்ந்தெடுத்திருப்பாங்க, இல்லையா? அன்பு, பண்பு, அழகு நிறைந்த குணசாலி" என்று சொன்ன சலோனியின் குரலில் லேசாக கேலியும், இளக்காரமும் எட்டிப் பார்த்ததாகத் தோன்றியது நந்தினிக்கு. படபடவென்று பேசிய சலோனியை விட, மென்மையான குரலில் பேசிய அபிராஜின் மீது மதிப்பு வந்தது நந்தினிக்கு.

நல்லவேளையாக மாமனார், மாமியார் அருகில் இல்லை. அவள் பேசியதைக் கேட்கவில்லை. அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது சித்ரா தேவியும், மகேந்திர பூபதியும் மகனுடன் உள்ளே வந்தார்கள்.

" நீங்க இன்ட்ரட்யூஸ் பண்ணறதுக்குள்ள உங்க வைஃப் வந்து எங்களை மீட் பண்ணிட்டாங்க டாக்டர் ஸார்?" என்று சலோனி கேலியாகப் பேசினாள். அபிராஜ், நந்தினியின் உடல்நிலை பற்றி ராஜசேகரிடம் சொல்லி விட்டு சலோனியைக் கூட்டிக்கொண்டு அங்கிருந்து போனான்.

" ஒரு சாதாரணக் காய்ச்சலுக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா? நானே வீட்டுக்கு வந்து பாத்திருப்பேனே? இங்கே கூட்டிட்டு வந்து இப்படி இவ தான் என்னோட மனைவின்னு தம்பட்டம் அடிக்கணுமா?" என்று சிடுசிடுத்தான் ராஜசேகர்.

" கண்ணை முழிக்காமக் கெடந்தாப்பா? குளிர் ஜுரம் மாதிரி ஒடம்பெல்லாம் நடுங்குச்சு. வாய் வேற கொளறுச்சு. அது தாம்பா, பயந்து போயிட்டோம். எங்களுக்கு என்ன தெரியும் இந்தக் காய்ச்சல் பத்தியெல்லாம்?" என்று சித்ரா தேவி சொன்னதும் அமைதியானான்.

நந்தினியின் கேஸ் ஷீட்டை எடுத்துப் பார்த்தான். அவளுடைய கையைப் பிடித்து பல்ஸ் பார்த்தான். ஸ்டெத் வைத்து செக் பண்ணினான். கண்களைப் பரிசோதனை செய்தான்.

" சரி, வந்தது வந்தாச்சு. ஒரு நாள் இங்க இருக்கட்டும். நாளை காலையில் எப்படி இருக்கான்னு பாத்துட்டு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம். நீங்க வீட்டுக்குக் கெளம்புங்க. ரொம்பக் கூட்டம் போட வேணாம். வீட்டுக்குப் போய் இவளுக்குச் சாப்பிட லைட்டாக் கஞ்சி மாதிரி ஏதாவது கொடுத்து விடுங்க. இங்க இப்போ ஸுப் ஏதாவது கொடுக்கச் சொல்லறேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான். அவன் கூடவே மாமனார் வெளியே நடக்க, சித்ராதேவி அருகில் வந்து,

" நீ கண்ணை முழிச்சதும் தாம்மா நிம்மதியா இருக்கு. நீ விழுந்து கிடந்ததைப் பாத்து பயந்தே போனேன். என்ன ஆச்சு ராத்திரி அப்படி? தலைவலி ஏதாவது இருந்ததா?" என்று பரிவுடன் கேட்டாள்.

" இல்லை அத்தை. எனக்கே எதுவும் ஞாபகம் வரலை. காத்துக்காக ஜன்னலைத் தொறந்து வச்சிருந்தேன். ஜன்னல் கிட்டயிருந்து ஏதோ சத்தம் வந்த மாதிரி இருந்தது. ஜன்னலை மூடப் போனேன். அவ்வளவு தான் எனக்கு ஞாபகம் இருக்கு" என்றாள் பரிதாபமாக.

" சரி, பயப்படாம தைரியமா இரு. உடம்பு சரியானதும் முருகன் கோயிலுக்கு ஒரு தடவை கூட்டிட்டுப் போறேன். வேலை மனசில நெனைச்சுக்கோ. பயமெல்லாம் ஓடியே போயிடும். நான் பொன்னியை இப்ப எங்கூடக் கூட்டிட்டுப் போயி, அவ கையில உனக்குக் கஞ்சி கொடுத்து விடறேன். அதுக்கப்புறம் பொன்னி உன் கூட இங்கயே தொணைக்கு இருக்கட்டும். பொன்னி வர வரைக்கும் ஏதாவது வேணும்னா நர்ஸைக் கூப்பிட்டுக்கோ. ராஜசேகரைக் கூட நீ இண்டர்காமில கூப்பிட்டுத் தேவைன்னா பேசலாம். நான் கெளம்பறேன்" என்று சொல்லி விட்டு, சித்ரா தேவி கிளம்பினாள்.

தாயில்லாமல் வளர்ந்த நந்தினிக்கு, சித்ரா தேவி பரிவோடு பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவளைத் தனது தாயாகத் தான் நினைக்க வைத்தது. தனக்காக ஆண்டவன் அனுப்பிய தாய் என்று மனதில் உறுதியாக நம்பினாள். அந்த நம்பிக்கை விரைவில் தவிடுபொடியாகப் போகும் விஷயம் பாவம் அந்த நிமிடம் நந்தினிக்குத் தெரியவில்லை.

பொன்னி கிளம்பிப் போனதும் அவளுக்கு ஹாஸ்பிடல் கிச்சனில் இருந்து காய்கறிகள் போடப்பட்ட ஸுப் வந்தது. மிளகு தூள் சேர்ந்த அந்த ஸுப், மிளகு ரசம் போல வாய்க்கு ருசியாக இருந்தது. அதைக் குடித்ததும் உடம்பில் தெம்பு வந்த மாதிரி இருந்தது. காய்ச்சலும் குறைந்த மாதிரி இருந்தது. அவள் இருந்தது தனி ரூம். விசாலமாக இருந்தது. வி.ஐ.பி. ரூம் போல சகல வசதிகளுடன் இருந்தது. என்ன தான் இருந்தாலும், ஹாஸ்பிடல் ஓனரின் மனைவியாயிற்றே அவள்?

மெல்லப் படுக்கையில் இருந்து எழுந்து நடந்து பார்த்தாள். நடக்க முடிந்தது தெம்பாக இருந்தது. கணவன் வந்து அவளை ஒரு டாக்டராகவே அவளைத் தொட்டாலும், அவனுடைய தொடுதல், அவளுக்கு சிலிர்ப்பைத் தந்தது. ஆனால் அவன் தன்னுடைய முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. ஒரு பேஷண்டாகத் தான் அவளை நினைத்த மாதிரி இருந்தது.

மெல்ல நடந்து ஜன்னலருகே சென்றாள். அங்கிருந்த சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அங்கு நந்தினி உட்கார்ந்தாள். வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். யாரோ இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்த உரையாடல் அவளுடைய காதில் விழுந்தது.

" அந்த ஜமீன்தார் வீட்டுப் புது மருமகள் இன்னைக்கு இங்கே வந்து அட்மிட் ஆயிருக்காங்க, பாத்தியா? இந்தப் பொண்ணும் ரொம்ப அழகா இருக்கா. என்ன அழகு இருந்து என்ன? அல்பாயுசில போகப் போறா? மூத்த மருமகளும் அப்படித் தானே? எம்புட்டு அழகு அந்தப் பொண்ணு! அப்படியே மகாராணி மாதிரி இருந்தாங்க. நிறைமாச கர்ப்பிணியா இருந்தப்ப இல்லை செத்துப் போச்சு? அந்தக் குடும்பமே கொலைகாரக் குடும்பம் தான். அந்தப் பெரியம்மா அப்படியே நாக்கில தேனைத் தடவிக்கிட்ட மாதிரி அவ்வளவு இனிமையாப் பேசுவாங்க. ஆனா மனசு பூரா விஷம் தான். அவங்களே மருமகளைக் கொன்னுருப்பாங்க" என்று பேசிக் கொண்டே நகர்ந்து போனார்கள்.

நந்தினியால் நம்பவே முடியவில்லை. அம்மாவாக நினைத்த சித்ரா தேவி கொலைகாரியா? அதிர்ச்சியுடன் நின்றாள். கல்யாணம் ஆகி வந்தவுடன் எத்தனை அதிர்ச்சிகள் அவளை வந்து ஒவ்வொன்றாகத் தாக்குகின்றன! கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டு வேகமாகப் படுக்கைக்கு வந்து படுத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.

" போயிடு, இங்கேயிருந்து போயிடு. உனக்கு இங்கே இருக்கிறது நல்லதில்லை" என்று அந்தப் பெண்ணின் கிசுகிசுப்பான குரல் மீண்டும் செவிகளில் விழுந்தது.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்,

 
Top