கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 5

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே!

அத்தியாயம் 5

செவிகளில் விழுந்த அந்தக் கிசுகிசுப்பான குரலைக் கேட்டதும் நந்தினியின் உடல் மீண்டும் நடுங்க ஆரம்பித்தது.

பொன்னி, அந்த நேரத்தில் உள்ளே நுழைந்து நந்தினியின் அருகில் வந்தாள்.

" அக்கா, அக்கா, என்னக்கா ஆச்சு? உடம்பு ஏன் இப்படி நடுங்குது? காலையில் கொஞ்சம் நல்லா இருந்ததா வெளியே இருக்கற நர்ஸ் சொன்னாங்களே? இப்ப திடீர்னு என்னாச்சு? உடம்பு வேறத் திரும்பவும் அனலாக் கொதிக்குதே? இருங்க, நர்ஸைக் கூட்டிட்டு வரேன்" என்று சொல்லி விட்டு வெளியே ஓடினாள் பொன்னி.

நர்ஸ் வந்து பார்த்து விட்டு டாக்டரைக் கூப்பிடப் போனாள். கொஞ்ச நேரத்தில் டாக்டர்.ஸலோனி அங்கு நுழைந்தாள்.‌ நந்தினியைச் சோதித்துப் பார்த்து விட்டு,

" நர்ஸ், இந்த இஞ்செக்ஷனை உடனே போடுங்க" என்று சொல்லித் தன் கோட்டில் இருந்து ஒரு சிறிய மருந்து சீசாவை எடுத்துக் கொடுத்தாள்.

இஞ்செக்ஷன் ஸிரிஞ்சில் மருந்தை ஏற்றி விட்டு, வெளியே காற்றில் ஒரு துளி மருந்தைச் சிந்தி அதனைப் பரிசோதித்து விட்டு, நந்தினியின் அருகே நெருங்கினாள் அந்த நர்ஸ்.

அப்போது திடீரென்று தனது படுக்கையில் எழுந்து உட்கார்ந்த நந்தினி, தனது கண்களை உருட்டி அந்த நர்ஸை வெறித்துப் பார்த்தாள். தன்னருகே நெருங்கியவளைப் பிடித்து வெறித்தனமாகக் கீழே தள்ளினாள். நந்தினியின் சாந்தமான முகம் எப்படியோ கொடூரமாக மாறிக் கோபத்துடன் ஜிவுஜிவென்று சிவந்து காணப்பட்டது.

இதனைச் சற்றும் எதிர்பாராத அந்த நர்ஸ் தடாரென்று கீழே விழ, அவள் கையில் இருந்த சிரிஞ்ச் தரையில் விழுந்து நொறுங்கிப் போனது.

சலோனி, அந்த நர்ஸுக்கு எழுந்திருக்க உதவி செய்தாள். சரியாக அந்த சமயத்தில் ராஜசேகர் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

" என்ன நடக்குது இங்க? டமால் டுமீல்னு ஏதோ விழுந்து உடைஞ்ச சத்தம் வெளியே காரிடார் வரைக்கும் கேட்டது. யார் விழுந்தது? என்ன விழுந்தது" என்று கேட்டுக் கொண்டே, கீழே உடைந்து கிடந்த சிரிஞ்சைப் பார்த்தான். அவன் பார்வை ஸ்டூலில் வைக்கப்பட்ட மருந்து சீசாவில் பட, அதைக் கைகளில் எடுத்துப் பார்த்தான்.

" அது வந்து டாக்டர் அவங்க திடீர்னு என்னைப் பிடிச்சுத் தள்ளி விட்டாங்க" என்று நந்தினியைக் காட்டினாள் நர்ஸ். நர்ஸின் முகத்தில் பயம் தெரிந்தது. நந்தினியின் முகபாவம் அதற்குள் திரும்பவும் மாறி நார்மலாக ஆகியிருந்தது. அமைதியான முகத்துடன் அங்கே இருந்தவர்களைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

' அப்பப்பா, என்னமா நடிக்கறாங்க இவங்க' என்று வியந்து கொண்டே," நான் இவங்களுக்கு இஞ்செக்ஷன் போட இவங்க பக்கத்தில போனேன். என்னைப் புடிச்சுத் தள்ளி விட்டுட்டாங்க" என்று நந்தினியின் பக்கம் கை காட்டினாள் நர்ஸ்.

" ஏன் நந்தினி அவங்களைத் தள்ளி விட்டே? இஞ்செக்ஷன்னா அவ்வளவு பயமா? இல்லையே? இன்னைக்குக் காலையில கூட நல்லபடியாத் தானே போட்டுக்கிட்டே? நானே பாத்தேனே? ஆமா, ஸிஸ்டர் இந்த மருந்தை எதுக்குப் போட்டீங்க?"

" அவங்களுக்கு நல்ல காய்ச்சல் இருந்தது. அது தான் டாக்டர் போடச் சொன்னாங்க" என்றாள் நர்ஸ்.

" இதையா கொடுத்தாங்க? இது காய்ச்சல் மருந்தே இல்லையே? இதைப் போட்டிருந்தா விபரீதமா இல்லை ஆயிருக்கும்? உடைஞ்சதே நல்லது தான். எந்த டாக்டர் இதை பிரிஸ்கிரைப் செஞ்சாங்க?" என்று கேட்டதும் நர்ஸ் பதில் சொல்லாமல் சலோனியைப் பார்த்தாள்.

" ஓ ஸாரி, மை மிஸ்டேக் டாக்டர். நான் தான் என்னோட கோட் பையில இருந்து இந்த மருந்தை எடுத்துக் கொடுத்தேன். இருங்க பாக்கறேன். இது பக்கத்து ரூம் பேஷண்டோட மருந்து. பை மிஸ்டேக் நான் தான் மாத்திக் கொடுத்திருக்கேன். ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி" என்று சொன்னாள்.

" ஹௌ இர்ரெஸ்பான்ஸிபிள் சலோனி! உன் கிட்டயிருந்து நான் இதை எதிர்பாக்கலை. நர்ஸ், இனிமே என் மனைவிக்கு எந்த மருந்தும் என்னைக் கேக்காம யாரும் கொடுக்க வேணாம். ஏதாவது தப்பா ஆயிருந்தா நம்ம ஹாஸ்பிடலுக்கு எவ்வளவு கெட்ட பேர் ஆயிருக்கும்? ஃப்யூச்சரில கேர்ஃபுல்லா இரு சலோனி. ஸிஸ்டர், நீங்களும் தான்" என்று கடிந்து கொண்டான்.

ராஜசேகர் பேச்சின் ஊடே, ' என்னுடைய மனைவி' என்று சொன்ன வார்த்தை, காதில் தேனாகப் பாய, அப்படியே அதை ரசித்துக் கொண்டு மகிழ்ச்சியாக உணர்ந்தாள் நந்தினி.

" அப்புறம் டாக்டர், உங்க மனைவிக்கு ஏதோ மென்டல் பிராப்ளம் இருக்குன்னு நெனைக்கிறேன். அவங்க முகபாவம் திடீர் திடீர்னு மாறுது" என்று சொன்ன சலோனியை எரிச்சலுடன் பார்த்தான் ராஜசேகர்.

" வாட் ஹேப்பன்ட் டு யூ சலோனி. வெரி வெரி அன் புரொஃபஷனல் ஆட்டிடியூட் un professional attitude). அதுவும் ஒரு ரெண்டு தடவை நந்தினியை மீட் பண்ணின உடனேயே இந்த மாதிரி கருத்தை, ஒரு பொறுப்பான டாக்டர் சொல்லலாமா? ஷி இஸ் பெர்ஃபெக்ட்லி நார்மல். வெரி ஹை ஃபீவர் இருந்தா இந்த மாதிரி இருக்கறது சகஜம் தானே? எத்தனை பேஷண்டுகளை நாம தினம் பாக்கறோம்? " என்று சொல்லி, சலோனியின் கருத்தை உடனே தள்ளுபடி செய்தான். வேறோரு மருந்தை வரவழைத்துத் தானே அவளுக்கு ஊசி போட்டு விட்டுத் தான் அங்கிருந்து நகர்ந்தான்.

நந்தினியின் மனது இப்போது தெளிவாக இருந்தது. நடந்தவற்றை எல்லாம் அலசிப் பார்க்கும் போது தன் கணவனுக்குத் தன் பேரில் வெறுப்பு இல்லை என்பதும் அது மட்டுமல்லாமல் அக்கறையும் இருக்கிறது என்பதையும் உணர்ந்து கொண்டாள்.

இந்த டாக்டர்.ஸலோனி பேரில் ஏதோ சந்தேகம் மனதில் வருகிறது. மருந்தைத் தற்செயலாக மாற்றிக் கொடுத்தாளா, இல்லை வேண்டுமென்று செய்தாளா என்று தெரியவில்லை. இவர்கள் பேசிக் கொண்டதைப் பார்த்தால் நமக்குள் ஏதோ சக்தி புகுந்து தவறான மருந்தைத் தடுத்திருக்கிறது. அப்படியென்றால் காதில் கேட்கும் குரல் நம்முடைய நன்மைக்காகத் தான் நம்மிடம் ஏதோ சொல்ல வருகிறதா? அடுத்த முறை மனதில் பயமில்லாமல் தைரியமாக அந்தக் குரலைக் கேட்க வேண்டும்.

சித்ரா தேவி சொன்னது போல் முருகனின் வேலை நினைத்துக் கொண்டால் மனதில் பயம் இருக்காது. ஆனால் இப்போது சித்ரா தேவி மேலேயே சந்தேகம் வந்து விட்டதே?

' கொற்றவை தேவியே! நீயே என்னை வழி நடத்து' என்று வேண்டிக் கொண்டாள். ஓரத்தில் நின்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த பொன்னி, நந்தினியின் அருகே வரவே பயப்பட்டாள்.

" பொன்னி, என்ன பயந்துட்டயா? எனக்கு ஒண்ணும் இல்லை. தைரியமா வா" என்று சொன்னதும் பொன்னி, நந்தினியின் அருகே வந்தாள்.

அவள் கொண்டு வந்திருந்த கஞ்சியை எடுத்துக் குடித்தாள்.

" எனக்குள்ளே என்னல்லாமோ ஆகுது. எனக்கு என்னன்னு புரியலை. காய்ச்சல் வந்தா இப்படி ஆகுமா?" என்றாள்.

" கவலைப்படாதீங்க அக்கா. ஏதோ கெட்ட நேரம். சரியாயிடும். நான் நாளைக்கு வீட்டுக்குப் போறப்பப் பக்கத்தில் இருக்கற கோயிலில இருந்து துண்ணீறு கொண்டு வாரேன். சரியா? ஒங்க மொகம் மாறினதை நானும் பாத்தேன். ஆனா ஒடனே திரும்பப் பழையபடி மாறிட்டீங்க! அதையும் பாத்தேன். ஆனா உங்களை அந்த ஊசியில இருந்து தடுக்க ஏதோ தெய்வீக சக்தி உங்களுக்கு ஒதவி செஞ்சிருக்கலாமே? கவலைப் படாதீங்க" என்றாள்.

" உங்கிட்ட ஒண்ணு கேப்பேன். மறைக்காம உண்மையைச் சொல்லுவியா? என்னை அக்கான்னு கூப்பிடறது நிஜம்னா ஒழுங்கா பதில் சொல்லணும்."

" கேளுங்கக்கா. எனக்குத் தெரிஞ்ச விஷயம்னா கண்டிப்பா நான் சொல்லிடுவேன்" என்றாள் பொன்னி.

" ஐயாவோட, அதான் இளைய ஜமீன்தாரோட மூத்த சம்சாரம் அந்த அபலா அக்கா இருந்தாங்க இல்லை? அவங்க எப்படி இறந்து போனாங்கன்னு சொல்லறயா?" என்று நந்தினி கேட்டதும் திடுக்கிட்டுப் போனாள்.

" அது வந்து அக்கா, அவங்களைப் பத்தி உங்க கிட்டப் பேசக் கூடாதுன்னு ஜமீன்தாரிணி அம்மா சொல்லிருக்காங்களே? அவங்களுக்குத் தெரிய வந்தா என்னைக் கோவிச்சுக்குவாங்களே?" என்றாள் பொன்னி தயக்கத்துடன்.

" நான் எதுவும் தெரிஞ்ச மாதிரியோ, உன் கிட்டப் பேசின மாதிரியோ அவங்க கிட்டக் காமிச்சுக்க மாட்டேன். நீ தைரியமாச் சொல்லு" என்று நந்தினி மீண்டும் வற்புறுத்தியதும் பொன்னி சொல்ல ஆரம்பித்தாள்.

" அபலா அக்காவும் ரொம்ப நல்லவங்க. உங்களை மாதிரி சாதாரணக் குடும்பத்தைச் சேந்தவங்க தான் அவங்களும். எங்க கிட்ட எல்லாம் ரொம்பப் பிரியமாப் பேசுவாங்க. அவங்க ஜாதகம் ரொம்ப ஒசத்தியான ஜாதகம்னு சொல்லித் தான் அவங்களை ஜமீன் வீட்டு மருமகளாத் தேர்ந்தெடுத்தாங்களாம்.

அவங்க கல்யாணம் ஆகி வந்த புதுசில சந்தோஷமாப் பேசிச் சிரிச்சு மாளிகையில சுத்திட்டு இருந்தாங்க. எப்பப் பாரு தோட்டத்தில போயி, மரம், செடி, கொடி கூடல்லாம் பேசிட்டே இருப்பாங்க. நீங்க அன்னைக்குப் பாத்தீங்களே அந்த ஊஞ்சலில தான் எப்பப் பாத்தாலும் ஆடிக்கிட்டே இருப்பாங்க. ஒரு சின்னக் கொழந்தை மாதிரி தான் அவங்க நடந்துப்பாங்க. தான் இருக்கற எடத்தை நல்லாக் கலகலப்பா மாத்திருவாங்க.

அவங்களைக் கல்யாணம் ஆன புதுசில சின்ன ஜமீன்தார் மதிக்கவே இல்லை. கண்டுக்கவே மாட்டார். பிரியமாப் பேசக் கூட மாட்டாரு. அப்புறம் நாளாக நாளாக அவரோட மனசு மாறிடுச்சு. ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தாங்க. அபலாக்கா கர்ப்பமாவும் ஆனாங்க. ஜமீன் மாளிகையே சந்தோஷத்தில குதிச்சுது. எல்லோரும் அபலா அக்காவை நல்லா கவனிச்சுக்கிட்டாங்க. ஜமீன்தார் ஐயாவும், சித்ராம்மாவும், நாங்க தாத்தா, பாட்டியாகப் போறோம்னு அவங்களைத் தலையில தூக்கி வச்சுக் கொண்டாடினாங்க.

மலையடிவாரத்தில் ஜமீன்தார் சொத்தான இன்னொரு பெரிய வீடு இருக்கு. வீட்டுக்குப் பின்னால ஆத்தாங்கரை. நிறைய மரங்கள், செடிகள். நந்தவனமா இருக்கும் அந்த இடம். அங்கே நடுநடுவில போயித் தங்குவாங்க. அப்படித் தான் அந்த வாட்டியும் சின்ன ஜமீன்தார் மனைவியோட அங்கே போனாரு. ரெண்டு நாள் நல்லபடியாப் போச்சு. அடுத்த நாள் காலையில, அபலா அக்கா தோட்டத்தில இறந்து கெடந்தாங்க.

ஐயா தலையில அடியோடப் படுக்கையறையில் மயக்கமாக் கெடந்தாரு. அபலாக்கா உடம்பில ஒரு காயம் இல்லை. ஆனா உடம்பில் ஏதோ விஷம் இருந்ததாச் சொன்னாங்க. உடம்பு நீலம் பாரிச்சு இருந்துச்சாம். நிறைமாத கர்ப்பிணியான அவங்களை விஷப்பாம்பு கடிச்சிருக்கலாம், இல்லை ஏதோ பேய் அடிச்சுருக்கலாம்னு பேசிக்கிட்டாங்க.
இது தான் எனக்குத் தெரிஞ்சு நடந்தது. அதுக்கப்புறம் ஐயா கொணமே மாறிடுச்சு. சிடுசிடுன்னு ஆயிட்டாரு.

ஏதோ சின்னையா வெளிநாடு போக ஆசைப்பட்டதாவும் எல்லோரும் பேசிக்கிட்டாங்க. ஆனா பெரிய ஐயா, அம்மா ஒத்துக்காம இரண்டாம் கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சு வச்சிட்டதாவும் சொன்னாங்க" என்று தனக்குத் தெரிந்த விஷயங்களை மறைக்காமல் சொன்னாள் பொன்னி.

" அந்த வீட்டுக்கு என்னை ஒரு நாள் கூட்டிட்டுப் போறயா பொன்னி?" என்று நந்தினி கேட்டதும் பொன்னி பதறிப் போனான்.

" அச்சச்சோ, வேற வெனையே வேணாம். என்னை வெட்டியே போட்டுருவாரு ஐயா. ஜமீன்தார் ஐயாவுக்குக் கோபம் வந்தாக் கண்ணு, மண்ணு தெரியாமக் கத்த ஆரம்பிச்சிருவா. அப்புறம் அந்த வீட்டில தான் அபலா அக்காவைப் புதைச்சு வச்சிருக்காங்க. வீட்டுக்குப் பின்னாடி அவங்க கல்லறை இருக்கு. வேணாம் அக்கா. அங்கே போகணும்னு ஆசைப்படாதீங்க அக்கா. உங்க கிட்ட விஷயத்தை ஏண்டா சொன்னோம்னு எனக்கு இப்ப பயமா இருக்கு" என்று சொன்ன பொன்னியின் குரலில் நிஜமாகவே கலவரம் தெரிந்தது.

' இவ கிட்ட இதுக்கு மேலே கேட்டுப் பிரயோசமில்லை. நாமாவே வேற ஏதாவது முயற்சி எடுக்கலாம்' என்று மனதிற்குள் முடிவு செய்த நந்தினி அமைதியானாள்.

கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போனாள் நந்தினி. பொன்னியும் அப்படியே தரையில் படுத்துத் தூங்கிப் போனாள்.

கண்ணை விழித்துப் பார்த்த போது இருட்டியிருந்தது. 'பொன்னி இன்னமுமா தூங்கறா? சரி, நாமே எழுந்து விளக்கைப் போடலாம்' என்று நினைத்த போது, கதவைத் திறந்து கொண்டு யாரோ உள்ளே வந்தார்கள். நந்தினி கண்களை மூடியபடி காத்துக் கொண்டிருந்தாள்.

வந்தது யாரோ தெரியவில்லை. இருட்டில் சரியாக உருவம் தெரியவில்லை. வந்த உருவம் முகத்தில் வெறியுடன் ஒரு தலையணையை எடுத்து, நந்தினியின் முகத்தில் வைத்து அழுத்த ஆரம்பித்தது. நந்தினி மூச்சு விட முடியாமல் தவித்துப் போனாள். உடல் துடிக்க ஆரம்பித்தது.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்,

 
Top