கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 6

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே! 6

அத்தியாயம் 6

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொன்னி, ஏதோ சலசலப்புச் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தாள். நல்ல இருட்டாக இருந்தது.

'அடடா, இவ்வளவு நேரம் அடிச்சுப் போட்ட மாதிரி இல்லை தூங்கிருக்கேன்? லைட்டைக் கூடப் போடலை. அக்கா கூடத் தூங்கறாங்க போல இருக்கு. இல்லை ஒருவேளை கரண்ட் போயிருச்சோ? சேச்சே, இந்த மாதிரி ஆஸ்பத்திரில எல்லாம் கரெண்ட் போனா ஏதாவது மாத்து ஏற்பாடு செஞ்சு வைப்பாங்களே?'
என்று பல்வேறு சிந்தனைகள் மனதில் ஓடப் பதறியடித்துக் கொண்டு எழுந்தாள். பொன்னியின் கண்கள், நந்தினியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொண்டிருந்த உருவத்தின் மேல் பட்டது.

" ஏய் யாரு நீ! அக்காவை என்ன பண்ணறே?" என்று கத்திக் கொண்டே நந்தினியின் உதவிக்கு விரைந்தாள் அவள்.

பொன்னியின் குரலைக் கேட்டு அந்த உருவம் தனது முயற்சியைக் கைவிட்டு விட்டுக் கதவை நோக்கி விரைந்தது. பின்னாலேயே ஓடினாள் பொன்னி. ஆனால் மனதை உடனடியாக மாற்றிக் கொண்டு நந்தினிக்கு ஒருவேளை உதவி தேவைப்படுமோ என்ற
சந்தேகத்தில் அறைக்குள் ஓடி வந்தாள்.
விளக்குகளை ஆன் செய்ததும், அறைக்குள் நல்ல வெளிச்சம் பரவியது.

ஏற்கனவே பலவீனமாக இருந்த நந்தினி, இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்து போயிருந்தாள். முகம் வெளிறிக் களையில்லாமல் இருந்தது.

ஒரு கிளாஸில் குடிக்கத் தண்ணீர் கொடுத்து, அவளைப் படுக்கையில் சாய்ந்தபடி உட்கார வைத்து ஆசுவாசப் படுத்தினாள். நந்தினியின் முகத்தில் கொஞ்சம் தெளிவு வந்தது.

" தேங்க்யூ பொன்னி. நீ மட்டும் பக்கத்தில இல்லைன்னா எனக்கு என்ன ஆகியிருக்குமோ தெரியலை " என்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு பேசிய நந்தினியின் குரல் தழுதழுத்தது.

" என்னக்கா தேங்க்ஸ்லாம் சொல்லிக்கிட்டு? எனக்கே, எப்படி இந்த மாதிரி தூங்கிப் போனேன்னு வருத்தமா இருக்கு! நீங்க வேறே! ஏதோ தூக்க மாத்திரை சாப்பிட்ட மாதிரி இல்லை தூங்கிருக்கேன். நீங்களும் என்னை எழுப்பலை" என்றாள் பொன்னி வருத்தத்துடன்.

" நானும் நல்லாத் தூங்கிட்டுத் தான் இருந்தேன். இப்பத் தான் முழிச்சேன். ஒரே இருட்டா இருந்துச்சு. உனக்குக் குரல் கொடுக்கலாம்னு நினைச்சுக்கிட்டே, கண்ணைத் தொறக்காமப் படுத்துக்கிட்டு இருந்தேன். அந்த சமயத்தில் யாரோ கதவைத் திறந்த சத்தம் கேட்டது. வந்தது யாருன்னு தெரியலை, என் முகத்தில தலகாணியை வச்சு அமுத்த ஆரம்பிச்சுட்டாங்க. மூச்சுத் திணறித் தவிச்சுப் போயிட்டேன்" என்றாள்.

'ரெண்டு பேரும் இந்த மாதிரி தன்னை மறந்து தூங்கியிருக்கோம்னா, யாரோ தூங்கறதுக்கு மருந்து குடுத்துருப்பாங்களோ' என்ற சிந்தனை இருவரின் மனங்களிலும் ஒரே சமயத்தில் ஓடியது. இருவரும் மனதிலிருந்ததை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

பொன்னி, வெளியே போய் காரிடாரில் எட்டிப் பார்த்தாள். அந்த இடமே ஹோவென்று இருந்தது. நர்ஸ்கள் இருந்த கௌன்டர் அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் இருந்தது. நிச்சயமாக பக்ஷி பறந்து விட்டது. உடனேயே பின்னால் ஓடி இருந்தால் கண்டுபிடித்திருக்கலாம்.

ஆனால் அந்த சமயத்தில் நந்தினிக்கு உதவி தேவையிருக்கலாம் என்று தான் பொன்னி திரும்பினாள். பொன்னியின் மனதில் ஒரு சின்ன சந்தேகம் இருந்தது. அதை எப்படித் தெளிவு படுத்திக் கொள்வது என்று தான் அவளுக்குத் தெரியவில்லை. நிச்சயமாக வந்தது யாராக இருந்தாலும் இந்த மருத்துவமனையைச் சேர்ந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று பொன்னி மனதிற்குள் நினைத்தாள்.

கொஞ்ச நேரத்தில் அங்கு ராஜசேகர் வந்தபோது, பொன்னி அவனிடம் நடந்ததைச் சொன்னாள். அவன் நம்பத் தயாராக இல்லை ‌.

" என்ன ஆச்சு பொன்னி உனக்கு? நந்தினிக்குத் தான் உடம்பு சரியில்லை. காய்ச்சல் அதிகமாக இருந்ததால, மனசில குழப்பமா இருக்கா, ஏதேதோ கற்பனை செஞ்சுக்கறான்னு நெனைச்சேன். இப்ப நீயும் இப்படி ஆரம்பிச்சுட்டயே? வெளியே யார் கிட்டயும் சொல்லாதே. சிரிக்கப் போறாங்க. காலையில டாக்டர்.ஸலோனி சொன்னதைக் கேட்டே இல்லையா? நீ அந்த நேரத்துல இங்க இருந்தயான்னு எனக்குத் தெரியலை. நந்தினிக்கு சித்தப்ரமை பிடிச்சிருக்குன்னு சொன்னா. அவளும் ஒரு நல்ல டாக்டர் தான். இப்ப யோசிச்சுப் பாத்தா, அவ சொன்னதையும் கன்ஸிடர் பண்ணனும் போல இருக்கு" என்று கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு பேசினான்.

அவன் பேசியபோது அவன் கைகளைப் பார்த்த நந்தினி, திடுக்கிட்டுப் போனாள். அவனுடைய கைகளில் கீறல்கள் தெரிந்தன. நகக் கீறல்கள் போல இருந்தன. மனதில் கப்பென்று பயம் வந்துவிட்டது. ஏனென்றால் அவளுடைய முகத்தைத் தலையணை வைத்து அழுத்தியவனை அல்லது அழுத்தியவளைத் தள்ளி விட நந்தினி போராடிய போது கை நகங்களால் கீறல் ஏற்பட வாய்ப்பிருந்தது.

' காலையில் தான் இவர் மனதில் என் பேரில் அக்கறை இருக்குன்னு சந்தோஷப் பட்டேன். இதைப் பாத்தா வேற மாதிரி இருக்கே? என்னைக் கொல்லற அளவுக்கு இவர் மனசில வெறுப்பு இருக்கா என்ன?' என்று யோசித்துப் பார்த்து நொந்து போனாள்.

" என்னை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கே அனுப்பிடறீங்களா? எனக்கு இங்கே இருக்க பயமா இருக்கு" என்றாள் நந்தினி.

" இன்னைக்கு லேட்டாயிடுச்சு. இப்ப வேணாம். நாளை காலை வரை பாக்கலாம். காய்ச்சல் திரும்ப வரலைன்னா காலையில் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். இன்னைக்கு நைட் நல்லாத் தூங்கி ரெஸ்ட் எடு. உன்னோட உடம்பைச் சரியாக்காம வீட்டுக்கு அனுப்பினா, அம்மாவும், அப்பாவும் என்னைச் சும்மா விட மாட்டாங்க. பயமா இருந்தா, பொன்னியும் நைட் இங்கயே இருக்கட்டும்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்.

" சரிக்கா, இன்னைக்கு ஒரு ராத்திரி தானே? எப்படியாவது தைரியமா இருந்துடுவோம். நீங்க பயப்படாதீங்க அக்கா. நான் ராத்திரி தூங்காம முழிச்சுட்டு இருக்கப் போறேன்" என்று சொல்லித் தன்னைத் துணிச்சலானவளாகக் காட்டிக் கொள்ள முயற்சி செய்தாலும் பொன்னியின் குரலில் பயம் எட்டிப் பார்க்கத் தான் செய்தது.

இரவில் டாக்டர்.அபிராஜ் ரௌண்ட்ஸுக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் நந்தினிக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. அவருடைய பரிவான வார்த்தைகளும், கனிவான பார்வையும் மனதில் நம்பிக்கையைத் தந்தன.

" ஹலோ மிஸஸ்.ராஜசேகர், ஏன் இப்படி பயந்து போயிருக்கீங்க? முகமெல்லாம் வெளிறிப் போய்க் கிடக்கு. யாராவது ஏதாவது சொன்னாங்களா? காலையில என்னவோ செஞ்சு அந்த நர்ஸையும், ஸலோனியையும் கூட பயமுறுத்திட்டீங்க போல இருக்கே?" என்று சொல்லி நகைச்சுவையாகப் பேசி நிலைமையை சகஜமாக்க முயற்சி செய்தான்.

" கேலி பண்ணறீங்களா டாக்டர்? டாக்டர்.ஸலோனி வேற எனக்கு மூளை சரியில்லை, நான் பைத்தியமோன்னு சந்தேகப் படறாங்க?" என்றாள் மனதில் வருத்தத்துடன்.

" அப்படியா சொன்னா அவ? அதையெல்லாம் பெருசா எடுத்துக்க வேணாம். விட்டுத் தள்ளுங்க. ஸலோனி சொன்னதை மறந்துடுங்க. அவளுக்கு ராஜசேகர் மேல ஒரு கண்ணு. அதுனால தான். அவ மனசில, ராஜசேகருக்கு சரியான ஜோடி அவ தான்னு ஒரு நெனைப்பு. காலேஜில படிக்கும் போதே ரெண்டு பேரும் ஒண்ணாச் சுத்தினவங்க தானே? ஆனா, ஜமீன்தார் குடும்பத்தில இருக்கறவங்க அவளை ஏத்துக்கத் தயாரில்லை. ஏதோ ஜாதகம் சரியா இல்லைன்னு சொல்லி ஒதுக்கிட்டாங்க. ஆனா இந்தப் பொண்ணோட மனசு இன்னும் அதை ஏத்துக்கலை.

என்னடா இது, தங்கச்சியைப் பத்தியே நம்ம கிட்ட இப்படிப் பேசறேன்னு நெனைக்காதீங்க. அவ ஒரு சின்னக் குழந்தை மாதிரி. மனசில எதையோ நெனைச்சுக்கிட்டுப் பிடிவாதமா அதையே பிடிச்சுக்கிட்டு நிக்கறா. கிட்டாதாயின் வெட்டென மறக்க வேணாமா? நீங்க கவலைப்படாதீங்க. ராஜசேகர் அவளை எப்பயோ ரிஜெகட் பண்ணிட்டாரு. நானும் அவளுக்குப் புரிய வைக்க முயற்சி செஞ்சுக்கிட்டே இருக்கேன். சீக்கிரம் புரிஞ்சுக்குவா" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் அபிராஜ்.

தன்னுடைய தங்கையாகவே இருந்தாலும் அவளுடைய தவறை எடுத்துச் சொல்லித் தனக்கும் ஆறுதல் சொன்ன‌ அபிராஜை நந்தினிக்கு மிகவும் பிடித்தது.

ஆனால் அவனையே பார்த்துக் கொண்டு இருந்த பொன்னியின் முகம் என்னவோ வெளிறிப் போனது. அவன் பேசின‌ எதுவுமே அவளுக்குப் பிடிக்காதது போல நந்தினிக்குத் தோன்றியது.

" என்னாச்சு பொன்னி? இந்த டாக்டரை அப்படியே வெறிச்சு வெறிச்சுப் பாத்துக்கிட்டே இருந்தயே? என்ன விஷயம்? நல்லவரா இருந்தார் இல்லையா? தங்கை பண்ணறது தப்புன்னு தைரியமாச் சொல்லறாரே?" என்று சொன்ன நந்தினிக்கு, பொன்னி பதில் எதுவும் தரவில்லை.

அவளுக்கு என்னவோ அபிராஜ் பேசியது செயற்கைத்தனமாகத் தெரிந்தது. ' சரி, பெரிய எடத்து விஷயம், நமக்கென்ன?' என்று அலை பாயும் மனதை அடக்கினாள்.

நந்தினி, இரவு தூங்கப் போவதற்கு முன்னால் தனக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லி விட்டுப் படுத்துக் கொண்டாள். கௌரி, நந்தினியின் படுக்கை அருகிலேயே ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். டாக்டர், நர்ஸ் விஸிட் முடிந்ததும், கதவை நன்றாக மூடினாள்.

தான் கஞ்சி கொண்டு வந்த பாத்திரத்தைக் கதவின் அருகே வைத்தாள். ஒருவேளை தன்னையறியாமல் தூங்கிப் போனால், யார் வந்தாலும் அந்தப் பாத்திரம் சத்தம் போட்டு எழுப்பி விடும் என்று நினைத்தாள்.

" பரவாயில்லையே பொன்னி, நல்ல ஐடியா தான். நீயும் பயப்படாமத் தூங்கு. ஒண்ணும் ஆகாது. எனக்கு ஆபத்து வரும்போதெல்லாம் ஏதோ கண்ணுக்குத் தெரியாத சக்தி வந்து என்னைக் காப்பாத்தற மாதிரி எனக்குத் தோணுது" என்று சொல்லியும், பொன்னி கேட்கவில்லை. ஆனால் கொஞ்ச நேரத்தில் பொன்னியும் தன்னையறியாமல் தூங்கி விட்டாள். ஆனால் நந்தினிக்குத் தான் தூக்கம் வரவில்லை. யோசித்துக் கொண்டே படுத்துக் கொண்டிருந்தாள்.

தன்னைச் சுற்றிப் பல்வேறு சதி வலைகள் பின்னப் படுகின்றன? இதில் யாரெல்லாம் நல்லவர்கள்? யாரெல்லாம் கெட்டவர்கள்? என்று தான் தெரியவில்லை.

நாயகன் படத்தில் அந்தக் குழந்தை, கமலஹாசனிடம் கேட்பது போல, " தாத்தா, நீங்க நல்லவரா? கெட்டவரா?" என்று கேட்பது போலக் கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்? நினைத்துப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள் நந்தினி.

அன்றைய இரவு அமைதியாகக் கழிந்தது. அடுத்த நாள் காலையில் டாக்டர்கள் அறிவுரைப்படி அவளை டிஸ்சார்ஜ் செய்தார்கள். நந்தினியும் ஜமீன் மாளிகைக்கு வந்து சேர்ந்தாள்.

அடுத்த நாள் மாலையில், சித்ரா தேவி நந்தினியை முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றாள். ஆற்றங்கரையில் இருந்த கோயிலில் முருகப் பெருமான், வள்ளி, தெய்வயானை சகிதம் காட்சி அளித்தார். வேலுக்குத் தனி சந்நிதி இருந்தது. இரண்டு சந்நிதிகளிலும் சிறப்பாக விசேஷ அர்ச்சனைகள் செய்யப் பட்டன. நெற்றியில் முருகன் பிரசாதமான திருநீறு அணிந்ததும், நந்தினியின் மனதில் துணிவு பிறந்தது.

வரும் வழியில் கார் ரிப்பேராக, நிறுத்தி டிரைவர் என்ன பிரச்சினை என்று பார்த்தார். நந்தினியும், சித்ரா தேவியும் காரிலிருந்து இறங்கி இயற்கைக் காற்றை அனுபவித்தார்கள். எதிரே மிகவும் அழகான வீடு ஒன்றைப் பார்த்தாள் நந்தினி. கேரள பாணியில் கூரைகள் வைத்துக் கலை நயத்துடன் கட்டப் பட்டிருந்தது.

" அந்த வீடு ரொம்ப அழகா இருக்கு இல்லை அத்தை?" என்றாள் நந்தினி.

" அதுவா? நம்ப வீடு தான் அதுவும்?" என்றாள் சித்ராதேவி.

" இப்படியே காலாற நடந்து அந்த வீட்டைப் போய்ப் பாக்கலாமா அத்தை?" என்று நந்தினி கேட்டதும் சித்ரா தேவியின் முகம் மாறியது. நந்தினி கேட்டது அவளுக்குப் பிடிக்கவில்லை என்று நந்தினியை , சித்ரா தேவியின் முகபாவம் நினைக்க வைத்தது.

" ராத்திரி நேரத்தில அங்கெல்லாம் போகக் கூடாது. ஆத்தங்கரையில காத்து, கருப்பு இருக்கலாம். இன்னொரு நாள் பாத்துக்கலாம்" என்று சொல்லி விட்டு சித்ராதேவி காரில் ஏறிக் கொண்டாள். அதைப்பற்றி மேலும் பேசுவதற்கு சித்ராதேவிக்கு விருப்பமில்லை போலத் தோன்றியது நந்தினிக்கு.

ஆர்வத்துடன் அந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி. அவள் கண் முன்னே அந்த வீட்டின் கூரை மீது அழகான பெண் ஒருத்தி தோன்றினாள். இரு கைகளையும் விரித்து அவளை வாவென்று அழைத்தாள். ஏதோ பேசுவது போல வாய் அசைந்தது. அந்தரத்தில் நின்று கொண்டிருந்தாள்.

பயந்து போன நந்தினி, சட்டென்று கார் கதவைத் திறந்து காரில் உட்கார்ந்து கொண்டாள். உள்ளே ஏற்கனவே உட்கார்ந்திருந்த சித்ராதேவியின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. தவிப்புடன் என்ன பேசுவதென்று தெரியாமல் பார்த்தாள் நந்தினி.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்,

 
Top