கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 7

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே! 7

அத்தியாயம் 7

சித்ரா தேவியின் கண்ணீரைப் பார்த்து நந்தினியின் மனம் கலங்கியது.

" என்ன ஆச்சு அத்தை? நான் ஏதாவது தப்பாக் கேட்டுட்டேனா? உங்க மனசு வருத்தப்படற மாதிரி நடந்துகிட்டேனா? மன்னிச்சுருங்க அத்தை" என்று கேட்டாள் நந்தினி.

" இல்லைம்மா. நீ ஒண்ணும் சொல்லலை. ஏதோ பழைய ஞாபகம் மனசுக்குள்ள எட்டிப் பாத்துச்சு" என்றபடி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

" அப்படி என்னத்தை பழைய ஞாபகம்? என் கிட்ட சொல்லக் கூடிய விஷயம்னா சொல்லுங்க அத்தை. அதுனால உங்க மனசு லேசாகலாம் " என்றாள் நந்தினி.

" உன் கிட்ட சொல்லாம என்ன? நீ எங்க வீட்டுப் பொண்ணாயிட்டே? ஒரு நாளைக்கு உனக்குத் தெரியத் தான் போகுது. என்னோட முதல் மருமகள் அபலா ஞாபகம் வந்தது. என் பொண்ணா நெனைச்சுத் தான் அவ மேலே அவ்வளவு பிரியம் வச்சேன். ஒரு குழந்தை மாதிரி தான் எல்லார் கிட்டயும் இனிமையாப் பழகுவா. சிரிச்சுக்கிட்டே ஒரு நாள் இந்த வீட்டுக்குக் கெளம்பி வந்தா.

திரும்ப நான் அவளைப் பொணமாத் தான் பாத்தேன். அவளை இழந்த துக்கத்தை என்னால இன்னும் விழுங்க முடியலை. உன் கிட்ட இதையெல்லாம் பேசி வருத்தப்பட வைக்க வேண்டாம்னு நெனைச்சேன். இப்பத்தான் உனக்கு உடம்பு சரியாயிருக்கு. இதையெல்லாம் நெனைச்சு நீ மனசைப் போட்டு உழப்பிக்காதே" என்று சொல்லி முடித்தாள் சித்ரா தேவி.

" இல்லை அத்தை. அப்படியெல்லாம் நினைக்க மாட்டேன்" என்று சொல்லிப் பேச ஆரம்பித்தவளை, சித்ராதேவி வாயில் விரலை வைத்து, எதுவும் பேச வேண்டாம் என்று சைகை காட்டினாள்.

காரில் இருந்த மெகானிகல் பிரச்சினையை சரி செய்து விட்டு, டிரைவர் காரில் ஏறினான். டிரைவர் எதிரில் வீட்டு விஷயத்தைப் பேசுவதைத் தவிர்க்கத் தான் அப்படி சொல்கிறாள் என்று நந்தினி புரிந்து கொண்டாள்.

அதற்குப் பிறகு இரண்டு பேரும் ஒன்றும் பேசிக் கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்தார்கள்.

" நீ ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துக்கோ நந்தினி. சாப்பிடும் நேரம் வந்ததும் எழுந்து வந்தால் போதும்" என்று சொல்லி நந்தினியை அவளுடைய அறைக்கே அனுப்பி வைத்தாள் சித்ரா தேவி.

" அபலா அக்கா மேலே அத்தைக்கு நிஜமாகவே பாசமும், அக்கறையும் நிச்சயமா இருந்திருக்கு. அவங்களோட கண்ணீர் போலியாத் தெரியலை எனக்கு. அதே போல எங்கிட்ட அவங்க பேசறதுலயும் எனக்கு எந்தவிதமான செயற்கைத்தனமும் தெரியலை.

அப்படின்னா அன்னைக்கு ஹாஸ்பிடலில் அத்தை மேலே பழி போட்டுப் பேசினவங்க யாரா இருக்கும்? எதுக்காக அப்படி அவங்க பேசணும்? ஒருவேளை நான் அங்கே நிக்கறதை கவனிச்சுட்டு, என் மனசில அத்தை மேல வெறுப்பை உண்டாக்கறது தான் அவங்க திட்டமோ? ஒண்ணுமே புரியலையே? மண்டை குழம்புது.

கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். நாளை பொன்னி வேலைக்கு வந்ததும் அத்தைக்கும் அபலா அக்காவுக்கும் உறவு எப்படி இருந்ததுன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். பொன்னிக்கு நிச்சயமா வீட்டு விஷயங்கள் தெரிஞ்சிருக்கும். குழந்தையில இருந்து இங்க வேலைக்கு வரதாச் சொன்னாளே?" என்று நினைத்து மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள் நந்தினி.

ஆனால் முதல்நாள் காலையில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பி வந்ததில் இருந்தே பொன்னி ஏதோ அமைதியாகவே இருந்தாள். அவள் முகத்தைப் பார்த்தால் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போலவே நந்தினிக்குத் தோன்றியது.

" என்ன ஆச்சு பொன்னி? எனக்குத் தான் உடம்பு சரியில்லைன்னா உனக்கு என்ன ஆச்சு? எப்பப் பாரு ஏதோ யோசிச்சுக்கிட்டே இருக்கயே? ஆஸ்பத்திரியில் நடந்ததை எல்லாம் பாத்து பயந்து போயிட்டயா? " என்று பொறுக்க முடியாமல் நந்தினி கேட்டாள்.

" இல்லைக்கா, மனசுக்குள்ள என்னவோ குழப்பமா இருக்கு. கண்ணு முன்னால் தெரியற ஏதோ ஓர் உண்மை நமக்குப் புரியலை. அது என்னவா இருக்கும்னு மனசு யோசிச்சுக்கிட்டே இருக்கு. ஏதோ மனசை சங்கடப்படுத்துது" என்றாள் பொன்னி. முகத்தை ஸீரியஸாக வைத்துக் கொண்டு பதில் சொன்னாள்.

" அட, பெரிய துப்பறியும் புலியாயிட்டே போல இருக்கே பொன்னி? சரி, சரி, கண்டுபிடிச்சதும் எனக்கும் சொல்லு" என்று சொல்லி விட்டாள்.

அடுத்த நாள் மாலையில் நந்தினியும், சித்ரா தேவியும் முருகன் கோயிலுக்குப் கிளம்பிய போதே பொன்னியும் வீட்டுக்குக் கிளம்பி விட்டாள்.

" அம்மா, வீட்டில ஏதோ பூஜை இருக்கு. அப்பா முடிஞ்சாச் சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொன்னாரு" என்று சித்ரா தேவியிடம் அனுமதி கேட்டாள்.

" சீக்கிரம் கெளம்பணும்னா கிளம்பிக்கோ பொன்னி. இங்க வேலையெல்லாம் தான் முடிஞ்சுருச்சே? நாங்களும் கிளம்பி முருகன் கோயிலுக்குப் போகப் போறோம். நந்தினிக்கும் உடம்பு இன்னைக்கு எவ்வளவோ பரவாயில்லை" என்று சொல்லி விட, பொன்னியும் கிளம்பி வீட்டுக்குப் போய் விட்டாள்.

அடுத்த நாள் காலையில் பொன்னிக்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தாள் நந்தினி. தன் மனதில் எழுந்த சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக, பொன்னியிடம் பேசி சித்ரா தேவிக்கும், அபலாவிற்கும் நடுவில் உறவு எப்படி இருந்தது என்று கேட்டுத் தெரிந்து கொள்ள நினைத்தாள்.

வழக்கமாக பொன்னி காலையில் வரும் நேரம் தாண்டியது. மதியமும் ஆகி விட்டது. பொன்னி வரவேயில்லை. ஏதோ உடம்பு சரியில்லையாக இருக்கும் என்று நந்தினி நினைத்துக் கொண்டாள்.

மதியம் மூன்று மணி அளவில் ஜமீன்தார் மகேந்திர பூபதிக்கு ஏதோ ஃபோன் வந்து அவசர அவசரமாகக் கிளம்பிப் போனார். போகும் போது சித்ரா தேவியிடம் தனியாக அழைத்து ஏதோ ரகசியமாகவே பேசி விட்டுப் போனார்.. இரண்டு பேர் முகங்களும் வெளிறிப் போயிருந்தன. வந்தது நிச்சயமாக நல்ல செய்தி இல்லை என்று தெரிந்தது.

மாலை ஐந்து மணி அளவில் ஜமீன்தார் வீட்டுக்குத் திரும்பி வந்த போது தான் அவர்களுக்கு முழு விவரங்களும் தெரிய வந்தன. செய்தியைக் கேட்டு நந்தினி அரண்டு போய் விட்டாள். பயங்கர அதிர்ச்சியான செய்தி அது. பொன்னியை யாரோ கொலை செய்து அவர்களுடைய அந்த இன்னொரு வீட்டின் தோட்டத்தில் சடலத்தைப் போட்டிருந்ததாக அவர் சொன்னதைக் கேட்டு இடிந்து போனாள் நந்தினி.

நந்தினி, புகுந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து அவளுக்கு உற்ற தோழியாக இருந்து, 'அக்கா' என்று வாய் நிறைய அழைத்தவள் இப்போது உயிரோடு இல்லையா? அதுவும் கொலை செய்யப் பட்டிருக்கிறாளா?, நினைத்துப் பார்க்கையில் நந்தினிக்கு நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது.

" நம்ப எஸ். ஐ. கொஞ்ச நேரத்தில் இங்க விசாரணைக்கு வரப்போறதாச் சொல்லிருக்காரு. பொன்னி அந்த வீட்டுக்கு எதுக்காகப் போனான்னு தெரியலையே? வீட்டில் ஏதோ பூஜை இருக்குன்னு சீக்கிரம் கிளம்பிப் போனதாக நீ சொன்னே இல்லையா சித்ரா?

பொன்னியின் அப்பா அந்த மாதிரி பூஜையெல்லாம் ஒண்ணுமே இல்லையேங்கறாரு. இங்கே வேலை நெறைய இருந்து, இங்கேயே ராத்திரி தங்கிட்டான்னு நெனைச்சுக்கிட்டு அமைதியாக இருந்தாராம். பொன்னி அன்னைக்கு ராத்திரி வீட்டுக்கே போகலையாம்.

நம்ம கிட்டயும் பொய் சொல்லிட்டு, தன்னோட வீட்டுக்கும் போகாம, பூட்டிக் கிடந்த நம்ப வீட்டுத் தோட்டத்துக்கு ஏன் போனான்னு தெரியலையே? அதுவும் நம்ம மருமக அபலாவோட கல்லறை மேல தான் அவளோட சடலம் கிடைச்சிருக்கு.

அவங்க அப்பா, காலையில் நம்ம வீட்டுக்கு ஃபோன் செஞ்சப்பத் தான் அவருக்கு பொன்னி இங்கும் இல்லை, நேத்து சாயந்திரம் சீக்கிரம் கிளம்பிப் போயிட்டாங்கங்கற விஷயமே தெரிஞ்சுருக்கு. அதுக்கப்புறம் தான் பதறியடிச்சுப் போய்த் தேட ஆரம்பிச்சாராம்.

நம்ப வீட்டுத் தோட்டத்தில பொன்னியின் சடலம் கடந்த இடத்துக்கு மேலே பறவைகள் நிறைய சுத்தி சுத்தி வந்து கத்தினதாலே அக்கம் பக்கத்தில் இருக்கறவங்க சந்தேகப்பட்டுப் போய்ப் பாத்திருக்காங்க. பொன்னியின் உடலைப் பாத்து அதிர்ச்சி ஆகி போலீஸைக் கூப்பிட, அது நம்ப வீடுங்கறதால என்னையும் போலீஸ் கூப்பிட்டாங்க" என்று சொல்லி முடித்தார். சித்ரா தேவி தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

" அபலாவோட கல்லறை மேல பொன்னியோட இரத்தம் நிறையப் பரவிக் கிடந்ததை என் கண்ணால பாத்தேன்" என்றார் மகேந்திர பூபதி. அதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனாள் நந்தினி.

நேற்று மாலை அந்த வீட்டுக் கூரையில் அந்தப் பெண் அந்தரத்தில் நின்று கொண்டு, அவளைக் கைகளை நீட்டி, வா, வா என்று அழைத்தது நந்தினிக்கு ஞாபகம் வந்ததும் திகீரென்றது அவளுக்கு.

'அங்கே போயிருந்தால் பொன்னியின் கதி தான் தனக்கும் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்தாள். ஒருவேளை எனக்காக விரிக்கப்பட்ட வலையில் தான் பொன்னி மாட்டிக் கொண்டாளோ? இல்லை, நேத்து பொன்னியின் பேச்சில் இருந்து ஒரு விஷயம் நடந்திருக்கலாம்னு தோணுது. . அவள் எதையோ தற்செயலாகக் கண்டுபிடிச்சு அதை உறுதிப்படுத்திக் கொள்ள ஏதோ செஞ்சிருக்கா. அசட்டுத் துணிச்சலோட அவள் செஞ்ச துப்பறியும் வேலை தான் அவள் உயிரைக் காவு வாங்கியிருக்கு' என்பதை நந்தினி தெளிவாகப் புரிந்து கொண்டாள்.

நிச்சயமாக அபலாவின் மற்றும் பொன்னியின் கொலைகள், தன் மீது நடந்த தாக்குதல்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் யாரோ ஒரு கொடியவன் அல்லது கொடியவளின் சதி நிச்சயமாக இருக்கிறது என்பதை நந்தினி புரிந்து கொண்டாள்.

கொஞ்ச நேரத்தில் எஸ். ஐ. வந்தார். பொன்னி, நந்தினி திருமணமாகி வந்ததில் இருந்து நந்தினியுடன் தான் அதிக நேரம் செலவிட்டாள் என்பதால் விசாரணையை நந்தினியிடம் ஆரம்பித்தார். தனது மனதில் இருந்த சந்தேகங்கள் எதையும் அவரிடம் நந்தினி சொல்லவில்லை. வீட்டில் பொன்னியைத் தெரிந்த எல்லோரிடமும் விசாரணையை முடித்துக் கொண்டு அவர் கிளம்பினார்.

அன்று இரவு நந்தினிக்குத் தூக்கம் வரவில்லை. " அக்கா, என்னைக் காப்பாத்துங்க அக்கா, ப்ளீஸ் காப்பாத்துங்க" என்று பொன்னி கதறும் குரல் அவளுடைய செவிகளில் வீழ்ந்து கொண்டே இருந்தது.

' நிச்சயமாக இந்த இரண்டு கொலைகளையும் செய்த குற்றவாளியை அது யாராக இருந்தாலும், இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தாலும் கண்டு பிடித்து சட்டத்தின் முன்னால் கொண்டு வந்து நிறுத்துவேன்' என்று மனதில் உறுதி பூண்டாள்.

அடுத்த நாள் காலையில் நந்தினியின் தந்தை வந்தார். நந்தினியைப் பிறந்த வீட்டுக்கு அழைத்துச் போக வந்திருந்தார்.

" நான் முன்னாலயே சொல்லியிருந்தபடி பௌர்ணமி பூஜைக்கு குருசாமி நிச்சயமாக வருவாரு. அவரைப் பாத்து நந்தினி ஆசி வாங்கணும். கல்யாண சமயத்தில் அவர் அங்கே இல்லை. மாப்பிள்ளையும் வந்தா நல்லா இருக்கும். ஆனா அவரால் வேலையை விட்டுட்டு வர முடியாது. ரெண்டு நாளைக்கு நான் நந்தினியை அங்கே பிறந்த வீட்டில வச்சுக்கிட்டு அனுப்பறேன். அதுக்குள்ள கொற்றவை கோயிலில் குருசாமியும் வந்துருவாரு. நந்தினியைத் திரும்பக் கூட்டிப் போறதுக்கு முடிஞ்சா, மாப்பிள்ளையும் வந்தார்னா ரெண்டு பேரும் ஜோடியாக அந்தக் கொற்றவை தேவி கோயிலில பூஜை செய்யலாம். மறு வீடு கூட்டிட்டுப் போற வழக்கம் மாதிரி தானே இதுவும்?கொஞ்சம் நந்தினியை அனுப்பி வையுங்க" என்று வேண்டிக் கொண்டார் நாகலிங்கம்.

மகேந்திரரும், சித்ரா தேவியும் சம்மதம் தர, உடனே நந்தினி தந்தையுடன் அவளுடைய பிறந்த வீட்டுக்குக் கிளம்பி விட்டாள். ராஜசேகர் அதிகாலையிலேயே கிளம்பி மருத்துவமனைக்குப போயிருந்ததால் அவனிடம் ஸெல்ஃபோனில் பேசி சம்மதம் வாங்கிக் கொண்டாள் நந்தினி. அவனுக்கென்ன, சந்தோஷமாக விடை கொடுத்தான்.

திருமணத்திற்குப் பிறகு தனது பிறந்த வீட்டிற்கு வந்த நந்தினி நிம்மதியாக உணர்ந்தாள். ஆனால் அந்த நிம்மதி எல்லாம் குருசாமியை நேரில் சந்திக்கும் வரை தான் என்பது நந்தினிக்குத் புரியவில்லை. பௌர்ணமிக்கு முதல் நாள் குருசாமியும் கோவிலுக்கு வர, நாகலிங்கம், மகளை அழைத்துக் கொண்டு அவரைச் சந்திக்கச் சென்றார்.

" என்ன நாகலிங்கம், பெரிய இடம்னு ஆசைப்பட்டு நீங்களே உங்கள் மகளைப் பெரிய ஆபத்தில் கொண்டு போய் மாட்டி விட்டுருக்கீங்களே? அக்னிக் குழியில் இல்லை உங்க பொண்ணு இப்ப நிக்கறா? அது தெரியுமா உங்களுக்கு? " என்று குருசாமி கோபமாகவும் கேட்டதும் நாகலிங்கம் திகைத்துப் போய் நின்றார்.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்,

 
Top