கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 8

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே! 8

அத்தியாயம் 8

குருசாமியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து போய் நாகலிங்கம், அவருடைய முகத்தைப் பார்த்தார்.

" என்ன சாமி சொல்லறீங்க? நான் பணத்துக்கெல்லாம் ஆசைப்படலையே? பெரிய இடத்தில் இருந்து தானா வந்து கேட்டாங்க. நந்தினியின் கோயிலில் வச்சுப் பாத்திருக்காங்க. அவளோட ஜாதகம் கேட்டாங்க. அதை வாங்கிப் பாத்துட்டு, மகனோட ஜாதகத்தோட ரொம்ப நல்லா பொருந்ததுதுன்னு சொல்லி சம்பந்தம் பேசினாங்க. பேசிப் பழகின போது நல்ல மனுஷங்களாத் தான் தெரிஞ்சாங்க. பணக்காரங்கற மமதை அவங்க நடந்துக்கறதுல எனக்குத் தெரியலை. என்ன ஒரு விஷயம் மட்டும் யோசனையா இருந்தது. ரெண்டாம் கல்யாணம் அப்படிங்கற விஷயம் தான் மனசை உறுத்திச்சு. ஆனா மாப்பிள்ளையை நேரில் பாத்ததும் அந்தக் குழப்பமும் போயிடுச்சு. டாக்டரா இருக்காரு. நல்லவராத் தெரிஞ்சாரு.

பாக்கவும் நம்ப நந்தினியோட ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கும்னு மனசுக்குப் பட்டது. நீங்க அந்த நேரத்தில் இங்க இல்லை. இருந்திருந்தா உங்களைக் கலந்து பேசாம நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டிருக்கவே மாட்டேன். அவங்களும் அவசரப் படுத்தினதால மறுக்க முடியாமல் தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன் சாமி. மத்தபடி பணத்தாசையெல்லாம் இல்லை. என்ன, மகள் வசதியான எடத்தில் வாழட்டும்னு நெனச்சது மட்டுமே உண்மை" என்றார் வருத்தத்துடன்.

" அதெல்லாம் சரி. ஆனா இப்போது நந்தினி தான் பெரிய ஆபத்தில் இருக்கிறாள். ஏம்மா நந்தினி, உன்னோடு புகுந்த வீட்டில் நடந்த சில விஷயங்கள் உனக்கு மனதுக்குக் குழப்பமாகவும், நெருடலாகவும் இருந்தனவா? "என்று நேரடியாக நந்தினியைப் பார்த்தே கேட்டார்.

" ஆமாம் சாமி, சில விஷயங்கள் அப்படித் தான் இருந்துச்சு" என்றாள் நந்தினி. அவள் பேசும் போது தந்தையின் முகத்தைத் திரும்பிப் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள். தனது அனுபவங்களை அவர் முன்னால் குருசாமியிடம் பகிர்ந்து கொண்டால், தந்தையும் மனம் வருந்துவாரோ என்று நந்தினி தயங்கினாள்.

" பரவாயில்லைம்மா. உங்கப்பாவுக்கும் விஷயங்கள் தெரிய வேண்டிய நேரம் நெருங்கிடுச்சு. கவலைப் படாதே. நடந்ததை எண்ணிக் கலங்க வேண்டாம். இனி நடக்க வேண்டிய விஷயங்களைப் பார்ப்போம். நான் வணங்கும் கொற்றவை தேவியின் அருளால் நாம் எதிரிகளை வெல்லலாம். துணிந்து நமது முயற்சிகளைத் தொடங்க வேண்டிய வேளை வந்துவிட்டது " என்று அவர் கூறியது, நந்தினியின் மனதில் நம்பிக்கையை உருவாக்கியது.

நந்தினி மனதில் இருந்த தயக்கத்தைத் தகர்த்தெறிந்தாள். குருசாமியை இப்போது எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் துணிவுடன் பார்த்தாள். அவர் கூறுவதை கவனத்துடன் கேட்க ஆரம்பித்தாள்.

" நான் சொல்லப் போகும் விஷயங்களை கவனமாகக் கேள்.‌ நீ திருமணம் செய்து கொண்டு போயிருக்கும் ஜமீன் குடும்பத்தில் பரபம்பரையாக சில வழக்கங்கள் இருக்கின்றன. அதைத் தொடர எப்போதும் முயற்சி செய்கிறார்கள். அந்த பாரம்பரிய வழக்கங்களுக்காக, சில போராட்டங்கள் நடக்கின்றன. சில அப்பாவி உயிர்கள் பலியாகின்றன. இவற்றை எல்லாம் நான் தெளிவாக எடுத்துச் சொல்ல மாட்டேன். என்னுடைய கொள்கைகளின் படி நடக்கப் போகும் சில விஷயங்களை நான் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. நீயாகவே உன்னுடைய அறிவையும், உனது தெய்வ பக்தியையும் வைத்துக் கண்டுபிடிக்க வேண்டும்.

நீ இப்போது உன்னுடைய புகுந்த வீட்டுக்குத் திரும்பிப் போகும் போது இவ்வளவு நாட்கள் திரைமறைவில் நடந்து கொண்டிருந்த யுத்தம் ஒன்று தீவிரமாக மாறும். அதில் நீயும் பங்கேற்கும் நாள் நெருங்கி விட்டது. இந்த யுத்தத்தில் உன்னுடைய எதிரிகள் யார் என்பதை நீயே விரைவில் தெரிந்து கொள்வாய். உனக்கு சில அறிவுரைகள் மட்டும் நான் தருவேன். நீ கவனமாக அவற்றைக் கேட்டுக் கொண்டு அதன்படி நடக்கவேண்டும். முதலில் இந்த யுத்தத்தின் பின்னணியில் இருக்கும் காரணத்தை உனக்குப் பூடகமாகச் சொல்ல முயற்சி செய்கிறேன்.

"யோகியின் புதல்வன் அவன்
துயில்பவனின் மருகன் அவன்
கையதனில் ஏந்தி நின்றான் ஒரு
வினையறுக்கும் ஆயுதத்தை!
தொலைத்தவரோ தேடுகிறார்
கண்டறியத் துடிக்கின்றார்!
பெண்ணவளின் பெருந்துணையால்
மீட்டிடுவர் ; சேர்த்திடுவர் அவனிடமே!
தீவினைகள் அகன்றோடும் அன்று!
தெய்வமும் மனம் கனிந்தருளும்!"

என்று குருசாமி சொன்னதை நந்தினி ஒரு காகிதத்தில் குறித்துக் கொண்டாள். அவளுக்குப் புரிவது போலத் தான் இருந்தது.

" நீ எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். உன்னுடைய புகுந்த வீட்டை மனதில் வைத்து யோசித்தால் புரிந்து விடும்.‌ இதற்காகவே நீயும் சில முயற்சிகள் செய்ய வேண்டும்" என்று சில அதிர்ச்சி தரும் விஷயங்களை அவர்களிடம் எடுத்துச் சொன்னார்.

" இவற்றிலிருந்து மீண்டு வர நீயும் சில பிரயத்தனங்கள் எடுக்க வேண்டி வரும். இரண்டு நாட்களில் நீ திரும்பிச் சென்று விடுவாய். நாளை பௌர்ணமி.‌ நீ திரும்பியதும் கொற்றவையை மனதில் வேண்டிக் கொண்டு, உனது புகுந்த வீட்டின் இஷ்ட தெய்வத்தையும் வேண்டிக் கொண்டு ஒரு விசேஷ பூஜையை ஆரம்பிக்க வேண்டும். நானும் இங்கே அதே சமயத்தில் பூஜையைத் தொடங்குவேன்.

பௌர்ணமி கழிந்து வரும் ஷஷ்டி அன்று உன்னுடைய பூஜையை முடிக்க வேண்டும். ஷஷ்டி அன்று மாலை ஆற்றங்கரையில் குளித்து விட்டு, அங்கு மரங்களில் பூத்திருக்கும் கார்த்திகைப் பூவென்று அழைக்கப்படும் செங்காந்தள் மலர்களையும், ஆற்றில் இருந்து குடத்தில் நீரும் கொண்டு போய் நான் சொல்லும் இடத்தில் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

அப்போது அங்கே ஒளிந்திருக்கும் அந்தப் பொருள் உன் கண்களில் படும். அதைக் கொண்டு போய் நீ அதற்குரிய இடத்தில் சேர்த்து விட்டால் உன்னுடைய பூஜை முடிந்து உனக்குப் பலன் கிடைக்கும். அதன் பிறகு உன்னைச் சுற்றிக் கூத்திடும் தீய சக்திகள் உன்னை விட்டு அகன்று விடும்.

இந்த விதிமுறைகளைக் கேட்டு உனக்கு இவை எளிதாக இருப்பதாக மனதிற்குத் தோன்றலாம். ஆனால் உன்னைப் பூஜையில் மனதார ஈடுபட விடாமல் பல்வேறு தடங்கல்கள் தோன்றும். மாயையான சில காட்சிகள் தோன்றலாம். தீய சக்திகள் வேறு உருவம் எடுத்து உன்னைத் திசை திருப்ப முயற்சி செய்யலாம். உன்னைப் பூஜையை முடிக்க விடாமல் நம்ப முடியாத நிகழ்வுகளை மாயையாக உன் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தலாம். நீ மனதை ஒருமைப்படுத்தி தேவியை வேண்டிக் கொண்டு பூஜையை முடிக்க வேண்டும். உனக்கு உதவி செய்ய சில நல்ல சக்திகளும் முன் வரலாம். நீ எப்படியாவது அன்றிரவு அந்த பூஜையை முடித்து விட்டால் அதன் பிறகு உனக்கு வெற்றி தான். இனிமையான வாழ்க்கையை நீ அனுபவிக்கலாம்" என்று சொல்லி விட்டு ஒரு சிவப்புக் கயிறை தேவியின் பாதத்தில் வைத்து வணங்கி எடுத்தார். அவளுடைய இடது கையில் கட்டி விட்டார்.

" கவனமாக இரு. பூஜை முடியும் வரை நீ பவித்திரமாக இருக்க வேண்டும். நீ ஜமீன் மாளிகைக்குத் திரும்பிய உடனே உனது பூஜையை ஆரம்பித்து விடு. ஒருவேளை உணவு மட்டும், அதுவும் சாத்வீகமான உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை இரண்டு நேரமும் தேவியின் துதிகளைப் பாடிப் பூஜையைத் தொடர வேண்டும். எக்காரணம் கொண்டும் பூஜையை நிறுத்தக் கூடாது. கையிலிருக்கும் இந்தக் கயிறை அவிழ்க்கக் கூடாது. உனக்குத் தேவையான மனோதிடத்தை தேவி அருள்வாள்" என்று சொல்லி குருசாமி அவளுக்கு ஆசிகள் வணங்கினார்.

நந்தினி மனதில் ஏற்கனவே இருந்த குழப்பங்களுடன் இன்னும் கொஞ்சம் குழப்பங்களும் சேர்ந்து கொண்டன. ஆனால் குருசாமியைச் சந்தித்துப் பேசி விட்டு வந்த பிறகு, மனதில் நம்பிக்கையும் துணிவும் தானாகவே பிறந்தன. நாகலிங்கம் தான் மிகவும் வருத்தப்பட்டார்.

" பெரிய இடம்னு நெனைச்சு உன்னோட வாழ்க்கையை நானே கஷ்டமாக்கிட்டேனாம்மா? இந்த ஏழை அப்பாவை மன்னிச்சுரும்மா. நல்ல இடம், நல்ல மனுஷங்கன்னு நெனைச்சுத் தான்மா ஜமீன்தார் வீட்டுக்கு உன்னை அனுப்பற முடிவை எடுத்தேன். உனக்கு இவ்வளவு கஷ்டங்கள் வந்ததை ஏம்மா எனக்கு சொல்லலை? உன் உயிருக்கே ஆபத்து வந்திருக்கே? உனக்குத் துணையா இருந்த அப்பாவிப் பொண்ணையும் யாரோ கொன்னுருக்காங்களே? நடந்ததை எல்லாம் யோசிச்சுப் பாத்தா அநியாயமா இருக்கே? மனசில பீதி கெளம்புதே?" என்று புலம்பித் தள்ளினார்.

" அப்பா, அநாவசியமாக் கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக்காதீங்க. நாளைக்குப் பௌர்ணமி. பௌர்ணமியில் இருந்து சரியாக ஆறே நாட்கள். ஷஷ்டி அன்னைக்கு நான் பூஜையை நல்லபடியா முடிச்சுட்டேன்னா, எல்லாப் பிரச்சினையும் தீந்துடும். நீங்க எனக்கு ஓர் உதவி செய்யணும். நான் பூஜையை முடிக்கற வரைக்கும் நீங்களும் பத்திரமா இருக்கணும். குருசாமி சொன்னதைக் கேட்டீங்க இல்லையா? என்னோட பூஜையை நிறுத்த உங்களை வச்சுக் கூட முயற்சி செய்வாங்க. அதுனால ஒண்ணு நீங்க என் கூடக் கெளம்பி வந்துடுங்க இல்லை வர இஷ்டம் இல்லைன்னா, குருசாமியோட சேந்து கோயிலுக்குள்ளயே இருங்க. அது தான் உங்களுக்குப் பாதுகாப்பான இடம். இதை மட்டும் நீங்க எனக்காகச் செய்யணும்" என்று சொன்னாள் நந்தினி.

" உன்னோட புகுந்த வீட்டில் வந்து தங்கறது நம்ம வழக்கத்துக்குப் புறம்பானது. அது நமக்கு மரியாதையும் இல்லை. நான் குருசாமியோட சேந்து கோயிலிலேயே தங்கிக்கறேன். நீ கவலைப்படாமப் போயி உன்னோட பூஜையை குருசாமி சொன்னபடி வெற்றிகரமா முடிசசுடும்மா" என்று சொல்லி விட்டார் நாகலிங்கம்.

அடுத்த நாள் இரவு பௌர்ணமி பூஜையை குருசாமி முடித்தார். அதற்கு அடுத்த நாளே காலையில் ராஜசேகர பூபதி தனது மனைவியை அழைத்துப் போக வந்தான். பெற்றோரின் வற்புறுத்தலாலும் , நாகலிங்கம் ஏற்கெனவே சொல்லி விட்டு வந்திருந்ததாலும் ராஜசேகருக்கு வரவேண்டிய கட்டாயம். கடுகடுவென்ற முகத்துடன் தான் வந்தான்.

இரண்டு பேருமாகக் கிளம்பி, கொற்றவை கோயிலுக்குப் போய் தேவியை வணங்கி விட்டுக் கிளம்பினார்கள். குருசாமி அந்த சமயத்தில் அங்கு இல்லாததால் அவரை மட்டும் சந்திக்க முடியவில்லை.

அடுத்த பூஜைக்கு முன்னால் கொல்லி மலையில் இருக்கும் கொற்றவையின் கோயிலுக்குப் போயிருப்பதாகவும், அன்று மாலையே வந்து பூஜையைத் தொடங்கப் போவதாகவும் கோயிலில் இருந்தவர்கள் கூறினார்கள்.

அதிக நேரம் ராஜசேகரால் காத்திருக்க முடியாதென்பதால் கிளம்பி விட்டார்கள். பிரிய மனமேயில்லாமல் நாகலிங்கம் விடை கொடுத்தார். குருசாமி சொன்ன வழிமுறைகளின் படி நந்தினி தனது பூஜையை சிறப்பாக முடிக்க வேண்டும் என்று தேவியைப் பிரார்த்தனை செய்து கொண்டார். நாகலிங்கத்தால் அது ஒன்று தான் செய்ய முடிந்தது.

நந்தினியின் கருத்தை ஏற்றுத் தனக்குத் தேவையான சாமான்களுடன் வந்து கோயிலிலுக்குள் இருந்த அறை ஒன்றில் தங்கிக் கொண்டு கோவில் பணிகளில் தன்னால் ஆன உதவிகளைச் செய்யத் தொடங்கினார்.

நந்தினி திரும்பியவுடன் அன்று மாலையே முருகன் கோயிலுக்கு ஒருமுறை சென்று, அவளுடைய புகுந்த வீட்டினரின் இஷ்ட தெய்வமான முருகனை மனதார வேண்டிக் கொண்டு வந்தாள். கையில் வேலுடன் நின்ற கதிர்வேலன் புன்னகையுடன் நந்தினிக்கு அருள் புரிந்தார். அவருடைய புன்முறுவல் தவழும் முகத்தையும், அவருடைய தோற்றத்தையும் கண்டு அவளுடைய மனதில் இருந்த சில சந்தேகங்கள் தானாக விலகி ஓடின. தெளிவான பாதை கண்முன்னே தெரிந்தது.

"வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை
மனமே மனமே மனமே!"

என்று கந்தனை எண்ணி வாய் விட்டு நந்தினி பாடியதும் அவள் மனதில் தெம்பு தானாகவே வந்தது.

யோகி என்பது யோக நிஷ்டையில் இருக்கும் சிவனையும், துயில்பவன் என்பது திருப்பாற்கடலில் துயிலும் திருமாலையும் குறிப்பதால் முருகன் கையில் தாங்கி இருக்கும் வேலைப் பற்றிய பாடல் அது என்பது நந்தினிக்குச் சட்டென்று புரிந்தது.

குடும்பச் சொத்தான வேல் எதுவோ தொலைந்து போயிருக்கலாம் என்றும் அதைத் தேடி எடுத்து முருகன் கையில் சேர்க்க வேண்டியது தன்னுடைய கடமை என்றும் புரிந்து கொண்டாள்.

அடுத்த நாளே பூஜையையும் விரதத்தையும் தொடங்க நந்தினி ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்த போது முதல் தடங்கல் சித்ராதேவியிடம் இருந்தே வந்தது.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்,

 
Top