கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 9

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே! 9

அத்தியாயம் 9

அதிகாலையில் குளித்து விட்டுப் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து, முதல் நாள் தானே கட்டிய மலர் மாலைகளை தெய்வங்களுக்குச் சாற்றி, மனதில் கொற்றவை தேவியை நினைத்துத் துதித்த பின்னர் தனக்குத் தெரிந்த துதிகளையும் பாடல்களையும் பாடித் தனது பூஜையும், விரதத்தையும் தொடங்கினாள் நந்தினி.

பூஜையறையில் இருந்து எழுந்த மலர்களின் நறுமணமும், மணியின் நாதமும் சேர்ந்து வீட்டில் தெய்வீக மணத்தைப் பரப்பியது. கால்களில் பொற்சிலம்பும், கைகளில் பொற்சதங்கையையும் ஆட்டியபடி மனமுவந்து முருகன் குழந்தை வடிவில் ஜல்ஜல்லென்று குதித்து ஓடியதாகவே நந்தினியின் மனக்கண்ணில் தோன்றியது.

சித்ரா தேவி எழுந்து வந்து பூஜையறையைப் பார்த்து விட்டு ஆச்சர்யப் பட்டாள்.

" என்னம்மா ஆச்சு நந்தினி? இன்னைக்கு சீக்கிரம் எழுந்திருந்து பூஜை, பூமாலைன்னு, பாட்டுன்னு அமக்களப் படுதே? என்ன விஷயம்?" என்று கேட்டாள்.

" அது வந்து அத்தை, நான் எங்க ஊருக்குப் போயிருந்த போது எங்க கோயிலில் இருக்கற குருசாமி வர சஷ்டி வரைக்கும் விரதம், பூஜை இருந்தால் வீட்டுக்கு நல்லதுன்னு சொன்னாரு. அதுனால தான் அத்தை இன்னைக்குச் சீக்கிரம் எழுந்திருச்சேன் " என்றாள் நந்தினி பணிவான குரலில்.

" நல்லதாப் போச்சு. இன்னைக்கு நாள் நல்லா இருக்குன்னு ஜோசியர் சொல்லிருக்காரு. இன்னைக்கு உங்களுக்கு சாந்தி முகூர்த்தம் வைச்சுடலாம்னு இருக்கோம். உன்னோட விரதத்தை ரெண்டு நாள் கழிச்சு ஆரம்பிச்சுக்கோ" என்றாள் சித்ரா தேவி.

அப்படியே பேயறைந்தது போல நின்றாள் நந்தினி. குருசாமி, 'பவித்திரமாக இருந்து பூஜையை முடிக்கணும்னு படிச்சுப் படிச்சுச் சொல்லியிருக்கும் போது, அத்தை இப்படிக் கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்காம சாந்தி முகூர்த்தம், அது, இதுன்னு இப்பப் போயிச் சொல்லறாங்களே? வந்தது வரட்டும். இதை எதுத்துத் தான் ஆகணும்' என்று மனதிற்குள் நந்தினி முடிவு செய்து கொண்டாள்.

" இல்லை அத்தை, நான் ஏற்கனவே பூஜையை ஆரம்பிச்சுட்டேன். இனிமே மாத்த முடியாது. ஷஷ்டிக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் தான் இருக்கு. என்னால பூஜையைத் தள்ளிப் போட முடியாது" என்று உறுதியான குரலில் நந்தினி பதில் தந்ததும், சித்ரா தேவிக்குக் கோபம் தலைக்கேறியது.

" என்ன இது பெரியவங்களைக் கேக்காம, அவங்களோட கலந்தாலோசிக்காம நீயாவே முடிவு எடுத்திருவயா? கல்யாணம் ஆகி வந்து ஒரு வாரத்திலேயே இப்படி நடந்துக்கறயே?" என்று கோபத்துடன் காச் மூச்சென்று கத்தத் தொடங்கினாள்.‌ சித்ரா தேவியின் குரலைக் கேட்டு ஜமீன்தார் மகேந்திர பூபதியும் எழுந்து வந்து விட்டார். மருத்துவமனைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த ராஜசேகர் அங்கு வந்தான்.

" என்னம்மா ஆச்சு? ஏதோ கோபமாப் பேசற மாதிரி குரல் கேட்டதே?" என்றவுடன் சித்ரா தேவி அவனிடமும் சாந்தி முகூர்த்தத்தைப் பற்றிச் சொன்னாள். ராஜசேகருக்குத் திக்கென்றது.

நல்ல வேளையாக நந்தினியின் மூலமாகவே அதற்கு எதிர்ப்பு வந்ததைக் கேட்டதும், அவனுக்கு மனதிற்குள் குதூகலமாகத் தான் இருந்தது. எப்படியோ சாந்தி முகூர்த்தம் நடக்கப் போவதில்லை என்று நினைத்து நிம்மதி அடைந்தான்.

" இது தானா விஷயம்? என் எதிரில தாம்மா கோயிலில சொன்னாங்க.‌ நான் தான் நந்தினியை இன்னைக்கே பூஜையையும், விரதத்தையும் ஆரம்பிக்கச் சொன்னேன். அவ அத்தை கிட்ட ஒரு வார்த்தை கேக்கணும்னு தான் சொன்னா. நான அம்மா கிட்ட சமயம் பாத்துச் சொல்லிடறேன். நீ பாட்டுக்குக் கவலையில்லாமல் விரதத்தை ஆரம்பின்னு சொன்னேன்.‌ அவ கிட்ட இந்த மாதிரி சொல்லிட்டு அதுக்கப்புறம் நான் இதை மறந்தே போயிட்டேன். என்னோட தப்பு தான் முழுக்க முழுக்க. நந்தினியும் நான் உங்க கிட்ட சொல்லிட்டேன்னு நெனச்சுக்கிட்டு இருந்திருப்பா. இது ஒரு பெரிய விஷயமா? ஷஷ்டி முடிஞ்சப்புறம் திரும்ப நாள் பாத்தாப் போச்சு. கவலைப் படாதீங்க. சரி, நேரமாச்சு. நான் கெளம்பறேன். வரேன் நந்தினி" என்று தன் மனைவியைப் பார்த்துக் கண்ணடித்து விட்டுக் கிளம்பிப் போனான்.

சித்ரா தேவியும், மகனே இந்த மாதிரி சொல்லி விட்டதால் அதற்கு மேல் நந்தினியை ஒன்றும் சொல்ல முடியாமல் உள்ளே போய் விட்டாள்.‌

மகேந்திர பூபதியும், " நீ மனசில ஒண்ணும் வச்சுக்காதம்மா. அவளுக்குக் கோபம் வந்தா இப்படித் தான் படபடன்னு பேசுவா. ஆனா கொஞ்ச நேரத்தில் தானாவே சரியாயிடுவா, நீ கவலைப்படாமப் போ. நீ இவ்வளவு தெய்வ பக்தியோட இருக்கறது எனக்கு மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீ உன்னோட ஆசைப்படி பூஜையை நல்ல படியாச் செஞ்சு முடி. ஏதாவது சாமான் வேணும்னா வீட்டு வேலைக்காரங்க கிட்ட சொல்லி வாங்கி வரச் சொல்லி நீயே சொல்லு. உனக்கு இந்த வீட்டில அதுக்கான உரிமையும், சுதந்திரமும் பரிபூரணமா இருக்கு" என்று அன்போடு அவளிடம் பேசி விட்டுச் சென்றார்.

நந்தினிக்கு ராஜசேகர் தனக்காக சித்ரா தேவியிடம் பரிந்து பேசியதில் உள்ளம் நிறைந்து விட்டது. அதன் பிறகு மாமனாரும் தன்னுடன் பிரியமுடன் பேசி சமாதானம் செய்தது இன்னும் அதிக மகிழ்ச்சியைத் தந்தது.

மகேந்திர பூபதி சொன்னது போலவே நடந்தது. சிறிது நேரத்தில் கோபம் தணிந்து வந்த சித்ராதேவி அவளிடம் சகஜமாகவே நடந்து கொண்டாள்.

" அத்தை, எனக்குப் பூஜைக்காக செங்காந்தள் மலர்கள் மட்டும் வேண்டும். அந்தப் பூக்களை வச்சு மாலைகளைக் கட்டி ஒண்ணு முருகனுக்கும், ஒண்ணு தேவிக்கும் சாத்தணும். அதுவும் சஷ்டி அன்னைக்கு நடக்கப் போற இறுதி பூஜைக்கு நிறையவே தேவையா இருக்கும். எங்கே கிடைக்கும்? நம்ப தோட்டத்திலயாவது இல்லை அந்த இன்னொரு வீட்டுத் தோட்டத்திலயாவது இருக்கா? கெடைக்குமா?" என்று கேட்டவுடன் சித்ராதேவியின் மனம் குளிர்ந்து போனது. அவளுடைய ‌உதவிக்கு வந்து விட்டாள்.

" நீ கவலையே படாதேம்மா. நான் நம்ம வீட்டுல வேலை செய்யறவங்களை அனுப்பிப் பறிச்சுட்டு வரச் சொல்லறேன். மலை அடிவாரத்தில் கிடைக்கும். இல்லைன்னா கொஞ்சம் மலையில ஏறினாக் கெடைச்சுரும்" என்று சொல்லி இரண்டு ஆட்களை உடனே மலைப்பக்கம் அனுப்பி விட்டாள்.

அவர்களும் மதியத்திற்குள் ஒரு கூடை நிறைய செங்காந்தள் மலர்களைக் கொண்டு வந்து தந்தார்கள். காலையில் இருந்து ஒன்றுமே சாப்பிடாமல் இருந்த நந்தினி, மாலையில் தானே கட்டிய மலர் மாலையை எடுத்துக் கொண்டு முருகன் கோயிலுக்குக் கிளம்பினாள். கார் வேண்டாம் என்று சொல்லி விட்டு நடந்தே போனாள். முருகனுக்கு அந்தக் கார்த்திகை மலர்களாலான மாலையைச் சாற்றி வணங்கி விட்டு, வரும் வழியில் அந்த வீட்டுக்கும் துணிச்சலுடன் போனாள். பின்னால் தோட்டத்துக்குப் போய் அபலாவின் சமாதியின் அருகே கண்களை மூடி நின்று வேண்டினாள்.

தான் கொண்டு வந்திருந்த செங்காந்தள் மலர்களை அபலாவின் சமாதி மேலும் தூவி அவளையும் தெய்வமாக எண்ணி வணங்கினாள்.

" அபலா அக்கா, நான் எடுத்துக் கொண்டிருக்கும் இந்த வேலையில் நீங்கள் தான் எனக்கு தெய்வமாக நின்று உதவி செய்ய வேண்டும். நீங்களும் அடிக்கடி என்னுடன் பேசி ஏதோ செய்தியைச் சொல்ல முயற்சி செய்யறீங்க. நாம ரெண்டு பேரும் ஒரே குடும்பத்தைச் சேந்தவங்க இப்ப. நம்ப குடும்பத்தை உங்க துணையோடு நான் காக்க நெனைக்கிறேன். நீங்க மனம் கனிந்து எனக்கு உதவி செய்யணும்.

பொன்னி உங்க மேல உசுரையே வச்சுருந்தா. எனக்கும் அவ தங்கை மாதிரி தான். அவளைக் கொன்னவங்களையும் நான் அடையாளம் கண்டு பிடிச்சு தண்டனை வாங்கித் தரணும். பொன்னி, நீயும் ஒரு நல்லாத்மாவா நின்னு இந்த அக்காவுக்கு உதவி செய்யணும்" என்று மனதார வேண்டினாள்.

சமாதிக்கு நேர் பின்னால் இருந்த அந்த வேப்ப மரத்தையும் சென்று வணங்கினாள்.

'குருசாமி சொன்ன இடம் இதுவாகத் தான் இருக்கணும்' என்று மனதில் நினைத்துக் கொண்டு அந்த மரத்தடியிலும் பூக்களைத் தூவி வழிபட்டாள். பின்னர் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து இரவு பழங்களும், பாலும் மட்டும் எடுத்துக் கொண்டாள்.

ஒருவேளை பழங்கள் மற்றும் பால்.‌ இரவில் தரையில் படுத்துத் தூங்குவது, இரண்டு வேளையும் பூஜை , தினமும் நடந்து சென்று முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது , அந்த வீட்டுக்கும் போய் சமாதியில் வழிபடுவது என்று மிகவும் கடுமையாகத் தன்னுடைய விதிகளை வகுத்துக் கொண்டு அதன்படி நடந்தாள். இம்மியளவும் பிசகாமல் கடுமையாக விரதத்தை அனுஷ்டித்தாள்.

அங்கே குருசாமியும் தனது விசேஷ பூஜையை ஆரம்பித்துச் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தார். நாகலிங்கமும் கோயிலிலேயே தங்கி, குருசாமிக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தார். இரண்டு முறை குருசாமி மலை மேலிருந்த கொற்றவை கோயிலுக்கும் போய் வந்தார்.

அன்று அப்படித் தான் குருசாமி மலைக் கோயிலுக்குப் போயிருந்த சமயத்தில், நாகலிங்கம் கோயிலின் உள்ளே தனியாக உலாத்திக் கொண்டிருந்தார்.
வாசலில் இருந்த காவற்காரன் அவரிடம் வந்து,

" உங்க மகளோட புகுந்த வீட்டில் இருந்து யாரோ உங்களைப் பாக்க வந்திருக்காங்க" என்று சொன்னதும் வாசலுக்கு விரைந்து வந்தார். வந்தவனைக் கோயிலுக்குள் கூப்பிட அவன் உள்ளே வர மறுத்து விட்டான்.

" அவசரமாக் கெளம்பி வந்திருக்கேன். கோயிலுக்குள்ள இன்னொரு நாள் நிதானமா வரேன். நந்தினி அம்மா இன்னைக்கு மாடிப்படியில் உருண்டு கீழே விழுந்துட்டாங்க. தலையில் பலமா அடி பட்டிருக்கு. பேச்சு மூச்சில்லாமக் கெடக்கறாங்க. ஆஸ்பத்திரில சேத்துருக்காங்க. உங்களைக் கையோடக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க. சின்னம்மாக்கு ரொம்ப ஸீரியஸா இருக்காம். பொழைக்கறது கஷ்டம்னு ஆஸ்பத்திரியில் பேசிக்கறாங்க. கெளம்புங்க போகலாம். நான் காரை எடுத்துட்டு வந்துருக்கேன். அதிலயே போகலாம். வாங்க" என்று பரபரப்போடு அழைத்ததும், நாகலிங்கத்திற்கு நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது.

ஏற்கனவே நந்தினிக்குப் புகுந்த வீட்டில் நிறைய ஆபத்துகள் ஏற்பட்டதாகவும், இன்னும் நிறைய ஆபத்துகள் வரக் காத்துக் கொண்டிருப்பதாகவும், குருசாமி அவரிடம் சொன்னது அவருக்கு ஞாபகம் வந்தது.

பல விஷயங்களைத் தன்னிடம் சொல்லாமல் நந்தினியும், குருசாமியும் மறைப்பதாகத் தான் அவருக்கு ஏற்கெனவே மனதில் எண்ணம் இருந்தது. இப்போது இந்தச் செய்தி அவர் தலையில் இடியாக இறங்கியதும்
பதறிப்போய் நின்றார்.

" இருப்பா, குருசாமி திரும்பி வர நேரம் ஆயிடுச்சு. அவர் வந்ததும் அவர் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி உத்தரவு வாங்கிக்கிட்டு வரேன். அவர் இல்லாத சமயத்தில் கெளம்பறது நல்லா இருக்காது " என்று அந்தக் குழப்பமான சமயத்திலும் நிதானத்தை இழக்காமல் நாகலிங்கம் பேசினவர்.

வந்தவன் அப்படியே கொந்தளித்து விட்டான். " என்னங்க பெத்த பொண்ணு இப்படிக் கண்ணைத் தொறக்காம, நெனைவேயில்லாம உயிருக்குப் போராடிட்டு இருக்கான்னு சொல்லறேன். கொஞ்சம் கூட உங்க மனசில பாசம் இல்லையா? என்னவோ குருசாமி, உத்தரவு, அது, இதுன்னு வெவரமே இல்லாமப் பேசறீங்களே? மனசாட்சியே இல்லையா உங்களுக்கு?" என்று கத்தத் தொடங்கி விட்டான்.

உடனே வாயடைத்துப் போன நாகலிங்கம், சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போலச் சென்று அவன் கொண்டு வந்திருந்த காரில் ஏறி உட்கார்ந்தார். காரும் கிளம்பி விட்டது.

கார் கிளம்பித் தெருமுனையில் கூடத் திரும்பியிருக்காது. குருசாமி மலைக் கோயிலில் இருந்து திரும்பி வந்துவிட்டார்.

" என்ன கார் சத்தம் கேட்டுச்சு?" என்று காவலாளியைக் கேட்க, அவனும் நாகலிங்கம் கிளம்பிப் போன விஷயத்தைச் சொன்னார். கோபத்துடன் காலை நிலத்தில் ஊன்றி நின்றபடி , " கொற்றவைத் தாயே! உன் குழந்தைகளை நீ தான் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டிக் கொண்டு கார் சென்ற திசையில் வேகமாக நடந்து போனார்.

காவலாளி பயத்துடன் அவரைப் பார்த்தான். குருசாமியின் சாந்தமான முகத்தைப் பார்த்துப் பழகிய அவனால் கோபக்கனல் வீசிய அவருடைய முகத்தின் உக்கிரத்தைப் பார்க்க முடியவில்லை.

குழப்பத்துடன் அவர் நடந்து போன திசையை வெறித்துப் பார்த்துக் கொண்டே நின்றான்.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்,
 
Last edited:

Kothaisuresh

Well-known member
அச்சோ அவ அப்பாவுக்கு ஆபத்து உண்டாக்கி அவ பூஜைக்கு தடங்கல் ஏற்படுத்த பாக்கறாங்களா
 
Top