கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கோடுகள் 4

Jeyalakshmi Karthik

Moderator
Staff member
கோடுகள் 4

நம்ம மனசுக்கு சரின்னு படுற நல்லதை நாம எப்பவும் செய்யணும். அப்படி நாம செய்யற நல்லது அறமாகும். அந்த அறம் நமக்கு மிகப்பெரிய சிறப்பைக் கொடுக்கும். நாலு பேருக்கு முன்னாடி நாம எதிர்பார்க்காத மரியாதையையும் பொருளையும் கூட ஈட்டித்தரும். அதனால நாம எப்பவுமே நம்மளால முடிஞ்ச நல்லதை உலகத்துல உள்ளவங்களுக்கு செய்யணும். அதை விட மேன்மையானது இந்த உலகத்துல உண்டா என்ன?

- பொதுமறையில் பொதிந்தவை

◆4◆

அந்த லைப்ரரி அறை மிக வித்தியாசமானது. லைப்ரரியில் என்ன வித்தியாசம் என்று யோசிக்கிறீர்களா? அந்த அறையில் ஒரு பகுதி முழுவதும் புத்தகங்களால் அலங்கரிக்கப் பட்டிருக்குமானால் மற்றொரு பகுதியில் தனியே ஒரு கணினியில் பல வருடங்களாக சேர்த்த திரைப் பாடல்கள், ஹிந்துஸ்தானி,கஸல் என்று கானங்களை சேகரித்து வைத்திருப்பர்.

அழகான ரெக்லைனர் சோபாவில் அமர்ந்து காதில் மெல்லிய கஸல் பாடல்களைக் கேட்டபடி தனக்குப் பிடித்த புத்தகத்திற்குள் மூழ்கிப்போக சுஷாந்த்துக்கு மிகவும் பிடிக்கும். இது அவன் அன்னை பழக்கி விட்ட பழக்கம். மனம் புத்தகத்தில் லயித்தாலும், வெளி சத்தம் பாதிக்காது இனியமையான கானத்தோடு கூடிய ஏகாந்த நேரம் அது.

சுஷாந்த் ரெக்லைனர் சோபாவில் சாய்ந்தபடி காதில் கானமும் கையில் ஒரு புத்தகமும் என்று வேறு உலகத்திற்குள் மூழ்கி இருந்தான். அவனை எட்ட நின்று முறைத்துக்கொண்டிருந்தார் சுக்லாவின் தாயான ரோமா பாய்.

அவனைக் கண்ட அவரின் மனம் கொதிநிலையில் இருந்தது. யார் சொத்தை யார் அனுபவித்துக் கொண்டிருப்பது? எங்கோ தெருவில் இருக்க வேண்டியவனை மாளிகையில் வைத்து வளர்ப்பதே பெரிய விஷயம். இதில் இவன் இந்த சொத்துக்கு வாரிசாம்.. நினைக்க நினைக்க பற்றி எரிந்தது ரோமாவுக்கு.

அவர் மகன் மட்டும் அவர் பேச்சைக் கேட்டு இரண்டாம் திருமணம் முடித்திருந்தால் கண்டவனும் வந்து இந்த சொத்தை ஆளா முடியுமா? அவர் குடும்ப வாரிசல்லவா ஆண்டுகொண்டிருக்கும்!

எல்லாம் அவர் மகனால் வந்த வினை. அவர் மனைவி மேல் வைத்த காதலால் விளைந்த கொடுமை. இல்லாது போனால் பிள்ளை இறந்ததை மறைத்து, எங்கோ பணம் கொடுத்து ஒரு கைக்குழந்தையை வாங்கி அதை இப்படி சீரும் சிறப்புமாக வளர்ப்பானா? அவன் மனைவி பாயல் சாகும் வரை அவளுக்கு உண்மை தெரியாமல் மறைத்தே வைத்திருப்பானா? அவர் அதை அறிந்தது மிகப் பெரிய கதை.

சரி அவள் தான் போய்த் தொலைந்தாள், இவனும் தொலைவான் என்று பார்த்தால், என் மனைவி உயிராய் வளர்த்ததால் அவன் என் மகன், அவனுக்காகவே வாழ்வேன் என்று மறுமணம் செய்யாமல் சினிமா வசனம் பேசி அவரை பாடாய்ப்படுத்தி விட்ட மகனை ஒன்றும் செய்ய இயலாத அவரின் கையாலாகாத நிலையை சுஷாந்த்தை திட்டியும், விரட்டியும் போக்கிக் கொள்ள நினைக்க, அதையும் மகன் கண்டறிந்து அவனுக்குக் காவலாக எங்கிருந்தோ ஒருத்தியை ஆசிரியை என்று பிடித்து வந்து வைத்துவிட கோபம் கட்டுக்கடங்காமல் போனது ரோமாவுக்கு.

அவளையும் ஒரு வழியாய் பேசியே துரத்தி அடிப்பதற்குள் சுஷாந்த் தைரியமானவனாகவும், அவரை எதிர்க்கும் துணிவுள்ளவனாகவும் வளர்ந்து விட, அவரின் கோபம் அவனிடம்
செல்லாக் காசாகிப்போனது.

அப்படி ஒருமுறை அவனைத் திட்டும்போது தான், அவன் தான் சொல்வதற்கு நேரெதிராக நடக்கிறான் என்றுணர்ந்து, வேண்டுமென்றே எதிர் வாதம் செய்து, அவனை தனக்கு வேண்டியதை செய்ய வைக்க ஆரம்பித்தார்.

மகனை விட்டு இவன் தள்ளி இருந்தாலே மகன் இவனை மறந்து தன் சொல்லுக்கு செவி மடுப்பான், எப்படியாவது மறுமணம் செய்து அவனுக்கே அவனுக்கென்று ஒரு பிள்ளை வந்தால் இவனை மறந்து விடுவான் என்று அவர் போட்ட திட்டமெல்லாம் தவிடுபொடியானது.

இவனை படிப்புக்கு வெளிநாடு போக வைத்து மகனை நெருங்கினால், அவன் மகன் நினைவால் அவ்வப்போது அவனைக் காணச் சென்று விட்டான். என்ன செய்தும் சுக்லா சுஷாந்த் மீது வைத்த அன்பையும் மாற்ற முடியவில்லை, அவருக்கு வேறு திருமணமும் செய்ய முடியவில்லை.

இப்போது ரோமாவின் மனதில் இருப்பது ஒன்றே ஒன்று தான், இவனைத் துரத்திவிட்டு, தன் சொந்தத்தில் ஏதோ ஒரு பையனை மகனுக்கு வாரிசாக்கி விட வேண்டும். இத்தனை சொத்துக்களும் யாரோ ஊர் பேர் தெரியாத ஒருவனுக்கு செல்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை.

இவனைக் கிளப்ப அவர் கண்டறிந்த ஒரு வழிதான் தொழிலை நீ தான் பார்க்கவேண்டும் என்று பார்க்கும் போதெல்லாம் அவனைக் குடைவது. அப்போது தான் அந்த தொழில் தனக்கு வேண்டாம் என்பான், அதை வைத்து மகன் மனதை மாற்றிவிட எண்ணியிருந்தார்.

அதையும் கெடுக்கும் விதமாக சுஷாந்த் சுக்லாவிடம், தனக்கு தனியே தொழில் தொடங்கிக்கொள்வதாக பேசும்போது இவரின் பேச்சையும் சேர்த்து சொல்லிவிட, மகனிடம் வகையாய் வாங்கிக் கட்டிக்கொண்டவர் இனி என்ன செய்வது என்று தெரியாமல், இவனை முறைத்த வண்ணம் இருந்தார்.

சுக்லா ஒரு மெர்சென்ட் பைலை எடுக்க அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தவர் லைப்ரரி வாயிலில் தாயைக் கண்டதும் துணுக்குற்றவராக அங்கே வர, அவரின் காலடி ஓசையை கணித்த ரோமா, மெல்ல அங்கிருந்து நகர்ந்து அடுத்த அறைக்குள் சென்று விட்டார்.

அவர் சென்றதும் மனம் தாளாமல் வாசிப்பறையை நோக்கி வந்தவர், உள்ளே மகன் இருக்கக் கண்டதும் அவர் முகம் பூவாக மலர்ந்தது.

தொழில் முறை நண்பர் திருமணத்திற்கு நிறைமாத மனைவியோடு சென்னை சென்ற சுக்லா எதிர்பாராத விதமாக அவளுக்கு பிரசவ வலி வந்துவிட மருத்துவமனையில் சேர்த்தார். குழந்தை இறந்தே பிறந்ததில் துடித்துப்போனார்.

ஏற்கனவே தாயின் பல சுடுசொற்களுக்குப் பின் திருமணத்தின் இரண்டாம் ஆண்டு கருவுற்ற அவர் மனைவி பாயல், அந்த குழந்தைக்கு மிகவும் ஏங்கி இருந்தாள். குழந்தை இறந்தது தெரிந்தால் துடித்தே உயிர் விட்டுவிடுவாள் என்று பயந்து அங்கிருந்த வேலையாள் ஒருவரிடம் பிறந்த குழந்தை கிடைக்குமா என்று கேட்க, அவரின் செழுமையான உடையை வைத்தே பணக்காரர் என்று கண்டுகொண்டவன் ஒரு ஆளை அறிமுகம் செய்து வைத்தான்.

பணத்தைக் கொடுத்தால் தருவேன் என்று அவன் சொன்னபோது அவர் சொன்ன ஒரே கண்டிஷன், பிறந்த குழந்தையாக இருக்க வேண்டும், யாரிடமும் திருடவோ, பிரச்சனையுள்ள குழந்தையோ கூடாது என்பதை மட்டுமே.

ஆனால் அவனே அறியாமல் திருடப்பட்ட குழந்தை தான் அவனுக்குக் கிடைத்தது. அது இன்றளவும் சுக்லா அறியாத ஒன்று.

அவன் கொண்டு வந்து கொடுத்த அந்த பச்சிளம் பிஞ்சை கையில் ஏந்தியபோது தனக்கே குழந்தை பிறந்து கைகளில் தவழ்ந்த நிம்மதி அவருக்குக் கிடைத்தது. அது இனி பாயல் நன்றாக இருப்பாள் என்ற நிம்மதியா? இல்லை அவருக்கும் குழந்தை ஒன்று வந்து அவரைப் பப்பா என்று அழைக்கப்போகும் நிறைவா? என்று பிரித்தறிய இயலவில்லை.

அன்று முதல் இன்று வரை சுக்லாவின் கண்களுக்கு சுஷாந்த் அந்த பஞ்சுப் போதி போன்ற மெல்லிய மலர் தான். வளர்ந்து விட்டானே தவிர அவருக்கு இன்னும் அவன் குழந்தை தான்.

தன் எண்ணங்களுக்கு ஊடே மெல்ல நடந்து மகனின் அருகில் அமர்ந்தார்.

புத்தகத்தில் மூழ்கி இருந்தவன் தன் அருகில் தந்தை அமர்வதை உணராது இருக்க, அவன் சிகையை மெல்லக் கோதினார். தந்தையின் மெல்லிய தீண்டலில் காதிலிருந்த ஹெட்சேட்டை எடுத்து விட்டு, புத்தகத்தை மறுகையால் மூடியவன், "பப்பா" என்று வேகமாய் அவர் புறம் திரும்பினான்.

"பேட்டா, என்ன உலகமே மறந்து இருக்க போல?" என்று கிண்டலாக அவர் கூற,

"பப்பா" என்று ராகம் பாடினான் மைந்தன்.

"பேட்டா, சொல்றேன்னு தப்பா நினைக்காத, நீ ஆசைப்பட்ட படிப்பை பப்பா படிக்க வச்சேன் தானே? நீ தொழில் தொடங்க நினைக்கிறதை நான் தப்பு சொல்லல, ஆனா பப்பா தொழிலை யார் பார்ப்பாங்க? உன்னை விட்டா யார் இருக்கா எனக்கு? என் அம்மா சொல்றத பெருசா எடுத்து நீ என்னை கஷ்டப்படுத்துற பேட்டா. கொஞ்சம் யோசி. என்னோட தொழில்ல உன் படிப்பை வச்சு ஏதாவது புதுசா பண்ண முடியும்ன்னா, அதுக்கு தனி ஆபிஸ் போட்டு கொடுக்கறேன். நீ அதை கவனிச்சுகிட்டே கொஞ்ச கொஞ்சமா நம்ம பிஸ்னஸை டேக் ஓவர் பண்ணிக்கோ.ப்ளீஸ்" என்று இறைஞ்சுதலாக அவர் கேட்டகும் போதே பதறிவிட்டது சுஷாந்த்துக்கு.

"சாரி பப்பா. நான் உங்களை இப்படி கேட்க விட்டிருக்கக் கூடாது. உங்க பேச்சை முன்னாடியே கேட்டிருக்கணும். நாளைல இருந்து நான் நம்ம ஆபிஸ் வர்றேன் பப்பா. அப்பப்போ ஜூவல்லரியும் நான் போய் பாக்கறேன் பப்பா. சாரி ஃபார் ஆல் மை ரூட் பிஹெவியர்" என்று மன்னிப்பு வேண்டியதும்,

"நீ ஒன்னும் என்னைக் கோவிக்கல சோனு. என்கிட்ட பொறுமையா தான் சொன்ன, அம்மாவைப் பத்தி பேசும்போது தான் உனக்கு கோபம் வரும்" என்று நமுட்டு சிரிப்பொன்றை உதிர்த்தார்.

"பப்பா.." வென்று சிணுங்கியவன், "என்னை நீங்க சோனுன்னு கூப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சில்ல பப்பா.." என்று ஏக்கமாக வினவினான்.

"உன் அம்மா இருந்தவரை வாய் நிறைய உன்னை சோனு சோனுன்னு கூப்பிட்டுட்டே இருப்பா. அவ போனதும் என்னால மனசு நிறைய உன்னை அப்படி கூப்பிட முடியல பேட்டா, எனக்கு அவ நினைவு வந்தா அந்த நாள் அதோட முடிஞ்சிடும். மீதி நிமிஷங்கள் எல்லாமே அவளோட நினைவு மட்டுமே இருக்கும். ஆனா நான் அப்படி இருந்துட்டா, என்னை நம்பி இருக்கற தொழிலாளிகள் வாழ்க்கை என்ன ஆகறது? அதான் முடிஞ்சவரை இராத்திரில மட்டும் உங்க அம்மா நினைவோட கழிப்பேன். பகல் என்னை நம்பிய மனிதர்களுக்காக ஓடுவேன்." என்று பெருமூச்சு விட்டவரின் கரத்தை ஆதுரத்துடன் பற்றி,

"இனி நானும் உங்களோட எல்லாம் சேர்ந்து செய்வேன் பப்பா." என்று சொன்னதும் மகனை அன்பாய் அணைத்துக்கொண்டார் சுக்லா.

***

அன்று இந்துவை டயாலிசிஸ் அழைத்துச் செல்லும் நாள், மாதம் ஒருமுறை டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இந்துவின் உடல்நிலை இருந்தது. அவள் வேலை பார்க்கும் உணவு விடுதியில் மாலை மருத்துவமனை செல்ல அவள் பர்மிஷன் கேட்டு நிற்க, அவரோ,

"ஏதோ' கஷ்டப்படுறேன், முடியல, வேலை வேணும்'ன்னு நீ கேட்டு வந்ததால தான் சரி போனா போகட்டும்ன்னு வேலை கொடுத்தேன். நீ என்னடான்னா போன வாரம் வேலை நேரத்துல, ஒரு இன்டெர்வியூ போகணும் பர்மிஷன் வேணும்ன்னு கேட்டு வர்ற, இப்போ அம்மாவுக்கு முடியலன்னு சொல்ற? என்ன என்னை பார்த்தா ஓசில சம்பளம் தர்ற பைத்தியக்காரன் போல இருக்கா?" என்றதும் அவ்வளவு நேரம் பொறுமையாக நின்றிருந்த ஹர்ஷி முகம் கோபத்தில் சிவந்தது.

"சார் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பேசுங்க சார். நான் ஒன்னும் வேணும்ன்னு வெளில சுத்த பர்மிஷன் கேட்கல. அம்மாவுக்கு ஹாஸ்பிடல்ல இன்னிக்கு டயாலிசிஸ் பண்ண அப்பயின்மெண்ட் இருக்கு. போகணும் அதான் கேட்டேன். அதே மாதிரி, போன வாரம் வேற பொய் சொல்லிட்டு கூட என்னால அந்த இன்டெர்வியூ போயிருக்க முடியும். ஆனாலும் பொய் சொல்லி ஆரம்பிக்கற எதுவும் விளங்காதுன்னு எங்கம்மா சொல்லுவாங்க. அதனால தான் உண்மையை சொன்னேன். இன்டெர்வியூ போனா என்ன சார், அதோட வேலை நேரம் வேற. என் அம்மாவோட உடல்நிலை பிரச்சனைக்காக தான் நான் வேலைக்கே வந்தேன். ஆனா அந்த வேலையாலையே எங்கம்மாவை பார்த்துக்க முடியாம போகும்ன்னா அந்த வேலை எனக்கு எதுக்கு சார்? நான் ஒன்னும் உங்க ஹோட்டல்ல சும்மா நின்னுட்டு சம்பளம் வாங்கல. அதை நீங்க உங்க சூப்பர்வைசர் கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. நான் இனிமே வேலைக்கு வரல சார். கணக்கை முடிச்சு காசு கொடுங்க. நான் போறேன்" என்று கனலாய் அவள் தகித்தாள்.

அவரோ, "கையில ஒத்த பைசா காசு இல்ல, ஆனா ரோஷம் மட்டும் இவ்ளோ இருக்கு? பொம்பளப்பிள்ளைக்கு இவ்ளோ கோபம் ஆகாதும்மா. என்ன இன்னிக்கு பர்மிஷன் தானே? போயிட்டு வா. அதுக்காக வேலைக்கு வரலன்னு சொல்லிக்கிட்டு" என்று அவர் வேலையை கவனிக்க, அவள் அமைதியாகிப் போய்விடுவாள் என்று அவர் நினைத்து கூறிய வார்த்தைகள் இன்னும் அவளைக் கோபத்தில் தள்ளியது.

"ஏன் சார்? ஏன் பொம்பளப்புள்ள ரோஷப்படக்கூடாதா? ஆம்பளைக்கு தான் கோபம் முழு சொத்துன்னு எழுதி வச்சிருக்காங்களா? என் அம்மாவுக்காக படிப்பை விட்டுட்டு, உங்க ஹோட்டல்ல வர்ற போறவங்க கிட்ட பொறுமையா வாட் டு யூ வான்ட் டு ஹாவ் சார் ன்னு கேட்டுட்டு இருக்கேன்னா அது அவங்க டயாலிசிஸ் பண்ண பணம் வேணும்ன்னு தான். இன்னிக்கு அந்த டயாலிசிஸ் பண்ண போக முடியாம போக இதே வேலை காரணமாகுதுன்னாக் கூட எனக்கு கோபம் வரக்கூடாதா சார்? சும்மா சம்பளம் தர சொல்லி நான் உங்களைக் கேட்டேனா? நீ அப்படி பேசும்போதும் பொறுத்து போகணும்ன்னு எனக்கு இல்லை சார். நான் அப்படி பொண்ணும் கிடையாது. வேலை தான சார் போனா போகட்டும். ஆனா என் சுயமரியாதையை எந்த காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டேன். அதென்ன பொம்பளப்புள்ளன்னு பேசறீங்க?? எனக்கு கணக்கு பார்த்துக் கூட நீங்க செட்டில் பண்ண வேண்டாம். பொண்ணுங்களை இவ்ளோ குறைவா நினைக்கிற ஒருத்தரோட காசு எனக்கு வேண்டாம்" என்று விறுவிறுவென்று அவர் அறையை விட்டு அவள் வெளியேறிவிட்டாள்.

இன்றைய டயாலிசிஸ்ஸுக்கு பணம் ஏற்கனவே கட்டியாகி விட்டது. கவலையில்லை. நாளை வேறு வேலை தேட வேண்டும். எதிர்காலம் அவளை மருட்ட தன்னாலான அனைத்தையும் செய்து பார்த்தது. ஆனால் இயல்பில் தைரியசாலியான ஹர்ஷி துளியும் துவளாமல் அடுத்து என்ன என்று யோசிக்கத் துவங்கினாள்.

இந்துவை அழைத்துக்கொண்டு மருத்துவமனை வந்தவள், அவரை உள்ளே அழைத்துச் சென்றதும் மெல்ல நடந்து வெளியே வந்தாள். வாசலில் வினை தீர்க்கும் விநாயகன் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். அவர் அருகே சென்றவள்,

"எனக்கு கஷ்டம் புதுசில்ல. ஆனா நான் ஒரு முடிவோட படிப்பை விட்டுட்டு அம்மாவை பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேன். ப்ளீஸ் பணத்துக்காக மறுபடி என்னை யார் முன்னாடியும் தாழ்ந்து போக வைக்காத பா. சிலருக்கு லட்சியம் உயிர்மூச்சு மாதிரி. ஆனா எனக்கு அப்படி இல்ல. அது என்னோடவே கலந்து போன ஒன்னு. அது கண்டிப்பா நடக்கும். ஆனா ஒரு பொண்ணா என் அம்மாவுக்கு நான் செய்யவேண்டிய கடமையை என்னை செய்யவிடு. நாளைக்கு வேற வேலை தேடணும். சீக்கிரமா நல்ல வேலையா அமையணும். அதனால நாளைக்கு நல்ல விடியலா எனக்கு இருக்கணும். ப்ளீஸ்" என்று நண்பனுடன் உரையாடுவது போல அவள் உரையாட, அதை கேட்டுக்கொண்டு நின்றிருந்த சித்தார்த் முகத்தில் மெல்லிய புன்னகை.

அவன் அலுவலக நண்பன் திடீரென்று மயக்கம் போட்டுவிட அந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அவனை அள்ளிக்கொண்டு வந்து சேர்த்தவன், அவனுக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்த பின்னால் தான் சீரான சுவாசத்துடன் வாசலுக்கு வந்து நின்றான்.

அவன் கண்களில் ஒரு இளம்பெண் அங்கிருக்கும் கணபதி சிலையை நோக்கி நடந்து செல்வதைப் பார்த்ததும் ஆர்வமிகுதியில் அவளைப் பின் தொடர்ந்து வந்தான். அவள் பேசிய வார்தைகளைக் கேட்டதும், அவளின் நிலை புரிய, அவள் அங்கிருந்து நகர்ந்து மீண்டும் மருத்துவமனைக்குள் செல்வதை வேடிக்கை பார்த்தவன் உள்ளம் யோசனையில் இருந்தது .

அவளை அவன் கண்கள் பின்தொடர்ந்தது. அவள் நெப்ரோலஜி பிரிவுக்குச் செல்வதைக் கண்டவன், தன் செல்போனை காதுக்குக் கொடுத்தான்.

பேசிவிட்டு உள்ளே நுழைந்தவன் நேராக நெப்ரோலஜி பிரிவுக்குச் செல்ல அங்கே டயாலிசிஸ் ரூமுக்கு வெளியே இருந்த இருக்கையில் அவள் அமர்ந்திருந்தாள்.

அவளருகில் சென்ற சித்தார்த், "ஹாய் மா. ஐ ஆம் சித்தார்த். சீனியர் மேனேஜர் அட் அகினோ சொல்யூஷன்ஸ்" என்று அறிமுகம் செய்துகொண்டான்.

அவனைத் தெரியாது என்பதால் முகத்தில் குழப்பமும் அதே நேரம் அவனிடம் தென்பட்ட கண்ணியம் தைரியத்தையும் வரவழைக்க, "ஹலோ சார்" என்றாள் ஹர்ஷி.

"என் பிரெண்ட்டை இங்க அட்மிட் பண்ணி இருக்கேன். நீங்க விநாயகர் கிட்ட பேசுனது என் காதுல விழுந்தது. ப்ளீஸ் கோபிக்க வேண்டாம் கேட்கற தொலைவில் இருந்ததால விழுந்ததே தவிர நான் ஒட்டுக் கேட்கலை. என் பிரெண்ட் கம்பெனில ஒரு வேகேன்ஸி இருக்கு. ஆனா அது உங்களுக்கு செட் ஆகுமான்னு தெரியல. இந்தாங்க அவனோட விசிட்டிங் கார்ட். போய் பாருங்க. உங்களுக்கு செட் ஆகும்ன்னா உங்க பிரெண்ட் சித்தார்த் அனுப்பினார்ன்னு சொல்லுங்க." என்று விசிட்டிங் கார்டை அவளிடம் நீட்டினான்.

தயக்கத்துக்குப் பின் அதைப் பெற்றவள் "சாரி சார். நான் மெடிக்கல் பீல்டுல படிச்சேன். ஆனா இந்த பீல்டுல வேலை எனக்கு செட் ஆகுமான்னு தெரியல. ஆனா எனக்கு உதவ நினைச்சத்துக்கு நன்றி சார்" என்று சொன்னதும்,

"நாம என்ன படிக்கிறோம்ன்னு முக்கியம் இல்லம்மா நமக்கு கத்துக்க மனசு இருக்கான்னு தான் பார்க்கணும். யாரும் படிச்ச படிப்புக்கு இங்க வேலை பார்க்கல. என்ஜினீயரிங் முடிச்ச பசங்க பீசா டெலிவரி பண்ணிட்டு இருக்காங்க. அதுனால படிப்பு வெறும் இன்டெர்வியூ அட்டெண்ட் பண்றதுக்கான பாஸ் மட்டும் தான். அங்க கேட்கற கேள்விக்கு எவ்ளோ ஸ்பான்டேனியஸ்ஸா பதில் சொல்றோமோ அதுக்கு தான் வேலை கிடைக்குது. கத்துக்கொடுங்க நான் நல்லா வேலை செய்வேன்னு சொல்லி பாருங்க. உங்க தைரியத்துக்கே சில இடங்களில் வேலை கிடைக்கும்." என்று அவளுக்கு ஆதரவாகப் பேசியவன்,

"என் வைஃப் காத்துட்டு இருப்பா மா. நான் கிளம்பணும். இது என்னோட கார்ட். ஏதாவது வேணும்ன்னா தாராளமா என்னை நீ கூப்பிடலாம்" என்று சொல்லி எழுந்ததும் சித்தார்த் மேல் பெரிய மரியாதை வந்தது ஹர்ஷிக்கு.

"நன்றி சார் கண்டிப்பா நாளைக்கு அட்டெண்ட் பண்ணிட்டு உங்க கிட்ட பேசுறேன். இட்ஸ் அ டைம்லி ஹெல்ப் சார்" என்று கரம் குவித்தாள்.

"என் பையனை விட சின்னப் பொண்ணா இருப்ப மா நீ. ஆனா இவ்ளோ பொறுப்பா இருக்கல்ல. அதான் உனக்கு உதவி செய்ய சொல்லி மனசு சொல்லிச்சு. மனசு எப்பவும் நமக்கு சரியானதை மட்டுமே தான் காட்டும். அதான்" என்று சிரித்தவன் ஒரு தலையசைப்போடு விடைபெற்றான்.

அவன் போகும் திசையை பார்த்திருந்த ஹர்ஷியை அழைத்த இந்து "போகலாமா?" என்று கேட்க, அவரோடு வீடு நோக்கி பயணமானாள்.

அவளுக்கு உதவிய திருப்தியில் நண்பனிடம் விடைபெற்று கிளம்பிய சித்தார்த்துக்கு மகன் மாலை அவனை வரச் சொன்னது அப்போது தான் நினைவு வர, ஐயோ என்று பதறியபடி வீட்டுக்கு ஓடியவன் பெயர் கூடத் தெரியாத அப்பெண்ணை
அப்படியே மறந்து போனான்.

- இணையுமா??

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

-குறள் 31
 
Top