கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சங்கரி அப்பன் சிறு கதைகள் திரி

sankariappan

Moderator
Staff member
சிறுகதை.



வெளிச்சத்தை நோக்கி ~




பத்து நாள் பெய்த மழை நின்றுவிட்டது. வெராண்டாவில் விரித்து வைத்திருந்த குடையை மடக்கி உள்ளே வைத்தாள் சாரு.

“அம்மா...மழைத் தண்ணீர் வடிந்துவிட்டதான்னு பார்த்து வைமா. அப்புறம் குடை கிழிந்து விடப் போகிறது. பழைய குடை...” என்றாள் மகள் கீர்த்தனா. ஆறு வயது தான் ஆகிறது....இப்பவே பொறுப்பாக இருக்கிறாள்.

“வடிஞ்சுவிட்டதடி....டிபன் பாக்ஸ்யை எடுத்துக்கோ. இன்னிக்கு இட்லி தான். தொட்டுக்க எள்ளு முளகாப்படி...ஸ்கூல் பஸ் வந்ததும் பத்ரமா ஏறிப் போ. போய் போன் பண்ணு...என்னென்னவோ நடக்கு பயமா இருக்கு. சூதானமா இரு. அம்மா ஆபிஸ் கிளம்பறேன்...” மகளுக்கு எச்சரிக்கை பண்ணிவிட்டு தெருவில் இறங்கி நடந்தாள் சாரு. வானத்தைப் பார்க்க அழகாய் இருந்தது. சூல் கொன்ட கருப்பு மேகங்களை விரட்டி விட்டு வானம் சூரியனுக்கு இடம் கொடுத்திருந்தது. நச நச ஈரம் மண்டிய தெரு காயத் தொடங்கி இருந்தது. மரங்கள் மழை நீரால் கழுவப் பட்டு ஊட்டி மலர் கண்காட்சி போல் மரம் கண்காட்சி நடத்தலாம் போல் பளிச்சென்று இருந்தன மரங்கள். இயற்கையின் கொடை தானே மரங்கள். சூரியனின் இதமான வெப்பம் உடலுக்கு சுறு சுறுப்பைத் தந்தது.

அந்த தெருவாசிகள் இப்பொழுது அவரவர் வீட்டில் கணவனை பிள்ளைகளை கல்லுரி, பள்ளி அலுவலகம் அனுப்ப முனைப்பாக இருப்பார்கள். கொஞ்ச நேரம் ஆனதும் வெளியில் வந்து அரட்டைக் கச்சேரியை ஆரம்பிப்பார்கள். அவர்களின் சூடான டாபிக் அவள் குடும்பம் தான். ஐந்து வருடமாக இது தான் அலசப்படுகிறது. அவள் தான் கதாநாயகி போலும். அல்லது வில்லியா?

சாரு வேப்ப மரத்தைக் கடந்த போது அந்த நொண்டி மனிதன் அவளைப் பார்த்து சினேகமாக சிரித்தான். நொண்டி என்றால் நடக்கமுடியாத நொண்டி இல்லை. சற்றே விந்தி விந்தி நடப்பான்.

தெருவில், உடைந்து போன தேர் மாதிரி அந்த அவன் எப்பொழுதும் வேப்பமர நிழலில் உட்கார்ந்து கொண்டு தெரு வாசிகளுக்கு ஒரு பாதுகாவல் போல் கண்காணித்தபடி இருப்பான். தெருவில் புதிதாக யாராவது நுழைந்தால் “நீங்க யாரு? யார் வீட்டிக்கு போணும்? என்ன விஷயமா பார்க்கப் போறீங்க?” என்று போலீஸ் அதிகாரி போல் விசாரிப்பான். அவனைத் தாண்டி எந்த திருடனோ கொள்ளைக்காரனோ வரமாட்டான் என்று அந்த தெரு வாசிகள் நம்பினார்கள். அவனுக்கு மிலிட்டரி என்று பேர் வைத்திருந்தார்கள். யாருக்கும் அவன் நிஜப் பெயர் தெரியாது. ஓரளவு சுத்தமாக உடை அணிந்திருப்பான். தெருக் குழாயில் வெள்ளனே குளித்து விடுவான். விபுதி பூசிக் கொண்டு அழுக்கில்லாத ஆடை உடுத்திக் கொண்டு சிரித்த முகமாக இருப்பான். ஓடிப் போகவிருந்த கிருஷ்ணவேணி அம்மாளின் மகளை காப்பாற்றினான். காணாமல் போன மைதிலியின் முன்று வயது மகனை போலீஸ் வரை சென்று அதிகாரிகளிடம் பேசி துரித நடவடிக்கை எடுத்து கண்டு பிடிக்க உதவினான். காய்கறி வாங்கித் தருவான். பால் பழம் வாங்கித் தருவான். நாணயமாக இருப்பான். இப்படியாக அவன் தெரு வாசிகளின் பாதுகாவலனாக அல்லது அடிமையாக? இருந்தான். அந்தத் தெருவில் முப்பது வீடுகள் எதிர் எதிரே இருந்தன. எல்லாரும் நல்ல உத்தியோகஸ்தர்கள். வாசலில் பைக்...சிலர் கார் என்று நிப்பாட்டி இருப்பார்கள். முறை வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி வீடுகளில் போய் சாப்பாடு வாங்கிச் சாப்பிடுவான். சாரு மட்டும் அவனுக்கு எதுவும் கொடுக்க மாட்டாள். அவனிடம் பேசவும் மாட்டாள். எந்த உதவியும் கேட்கமாட்டாள்.

“ஏன் கீர்த்தனாம்மா நீங்க மட்டும் மிலிட்டரிக்கு சாப்பிட எதுவும் கொடுப்பதில்லை. உங்களை கஞ்சம்னு கிண்டல் பண்றாங்க...” என்றாள் துளசி. அவள் தான் அந்தத் தெருவில் உண்மையானவள். வம்பு பேச மாட்டாள். சாருவுக்கு அவளை மிகவும் பிடிக்கும்.

“சொல்லிட்டுப் போகட்டும் துளசி. இந்த மாதிரி கேலி பேச்சு எனக்கு புதுசா என்ன? பழகிப் போச்சு. அவனுக்கு சோறு போட்டோ பணம் கொடுத்தோ அவனை நான் சோம்பேறியாக்க விரும்பவில்லை. ஏதாவது உருப்படியா உழைத்து பிழைக்கட்டுமே.” என்றாள். அவளை கேலி செய்வதே பிழைப்பாக கொண்டிருக்கிறார்கள் சிலர். என்ன செய்வது அவள் வீட்டில் தான் வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அவள் கணவன் ராமலிங்கம் அடித்த கூத்து எல்லோருக்கும் விருந்தாக இருந்தது. ராமலிங்கம் ஒரு வேலையிலும் நிலைத்து இருப்பதில்லை. பழ வியாபாரம் செய்தான்....தண்ணீர் கேன் கொண்டு சென்றான்....காஸ் கம்பெனியில் சேர்ந்தான்.....கடைசியில் யாரோ ஒரு பணக்கார பெண்ணுடன் காணாமல் போனான். தெரு பூராவாக அவள் மண்டை தான் உருண்டது. புருஷனை காப்பாத்திக்க துப்பில்லை...வேலை செய்யாத புருஷனை கண்டபடி வைதிருக்கிறாள்...அவன் ரோஷம் வந்து ஓடிவிட்டான்...சாரு தான் காரணம்...என்று வேப்பமர நிழலில் நின்று அளந்தார்கள்.. மிலிட்டரி எல்லாவற்றையும் பார்த்தபடி இருப்பான். சாரு கடந்து சென்றால் “வரா வரா..மெதுவா பேசுங்க. அவ காதிலே விழப் போறது.” என்று அவள் காது கேட்கும் படி சொல்வார்கள். அவளும் காது கேட்காதது போல் சென்று விடுவாள். “அசஞ்சி கொடுக்கிறாளா பார்....ஒரு சொட்டு கண்ணீர்...ஒரு வருத்தம் ஒண்ணுமில்லை...இவ ஒருவேளை எவன் கூடவோ சிநேகம் வச்சிருக்கா போலிருக்கு...அதான் ஓடிட்டான்....” என்று அவள் மௌனத்திற்கு காரணம் கற்பிப்பார்கள். “கீர்தனாம்மா...நாக்கை பிடுங்கற மாதிரி நாலு வார்த்தை கேளுங்கள்...அப்ப தான் சும்மா இருப்பார்கள்.” என்று துளசி சொல்வதுண்டு. “விடு துளசி...அவர்களுக்கு பொழுது போனால் சரி...” என்று பதிலளிப்பாள் சாரு. இரவு அவள் சிந்தும் கண்ணீர் ஒருவருக்கும் தெரியாது. அனுதாபம் பெறுவதற்கு அவள் விரும்பவில்லை. அதை விட தூற்றிவிட்டுப் போகட்டும்...அது இன்னும் ஒரு வைராக்கியத்தைக் கொடுக்கும். காலம் பதில் சொல்லும் என்று இருந்தாள். அதற்கும் வந்தது வினை. ஒரு நாள் ராமலிங்கம்....

“சாரு...நான் உன் புருஷன் பேசறேன்...”

“அப்படியா...என் பெயர் கூட நியாபகம் இருக்கா.?”

“தப்பு செய்திட்டேன் சாரு...மன்னிச்சுக்கோ. இனி அப்படி நடக்காது. குழந்தை நல்லா இருக்காளா? அவளை பார்க்கணும் போல இருக்கு. நான் வரட்டுமா?” என்றான். சாரு உடனே “சரி வாங்களேன்...கீர்த்தனாவிற்கு அப்பாவா இருந்தாலே போறும்.” என்றாள் .

“உனக்கு கோபமில்லையே சாரு?”

“இல்லை நீங்க கட்டின தாலி இன்னும் என் கழுத்தில் தான் தொங்குகிறது. அதற்கு அர்த்தம் வரா மாதிரி நடந்தா சரி.....வாங்க...” சாருவின் பதில் அவனைக் கூசிக் குறுக வைத்தது. நன்றாக திட்டி இருந்தால் தேவலை என்று பட்டது. வீட்டிற்கு வந்தான். அம்மா சொல்படி கீர்த்தனா அவனை “வாங்கப்பா...” என்று வரவேற்றாள். கீர்தனாவை பள்ளியில் விடுவது....காய்கறி வாங்கி வருவது....வீட்டில் தண்ணிர் பிடித்து வைப்பது...மாவாட்டி வைப்பது என்று ஏகத்துக்கு உதவினான். “பரவாயில்லையே...நீங்க நிஜமாத்தான் மாறிட்- டீங்க...” என்று சாருவே பாராட்டும் படி நடந்து கொண்டான்.

“நான் நினைக்கவே இல்லை சாரு நீ என்னை ஏற்றுக் கொள்வாய் என்று...”

“கடவுளுக்கு ஒரு சான்ஸ் கொடுத்தேன்...என் புருஷனை பொறுப்பாக்குவது உன் கடமை என்றேன்...என் வேண்டுகோள் கேட்டுவிட்டது போல...”

எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்தது...அது அந்த தெரு வாசிகளுக்குப் பிடிக்குமா? “என்ன....சாரு புருஷன் செட்டில் ஆகிட்டான். நல்ல வேஷம் போடறானா...இல்லை தப்பு தண்டா பண்ணிட்டு ஒளிந்து கொண்டிருக்கானா? என்னவோ இருக்கு...” என்று ஆரம்பித்தார்கள். ஜோடியாக அவர்கள் கோ—விலுக்குப் போவது, சினிமாவிற்கு போவது....என்று சாரு குடும்பம் குதூகலம் கண்டது அவர்களுக்குப் பொய்யாகப் பட்டது. அவன் வடக்கே போய் யாரையோ கொலை பண்ணிவிட்டோ இல்லை ரேப் பண்ணிவிட்டோ வந்திருக்கான்...சாரு மூடி மறைக்கிறாள் என்று யாரோ கிளப்பி விட..”.அப்படியா...” என்று பெண்கள் பலர் அவன் வரும்போது தங்கள் மகள்களை ‘ஏய்...உள்ள போங்கடி...எவன் கண்ணிலும் பட்டு வைக்காதேங்க. ரேப் பண்றவங்கல்லாம் சுத்திட்டு இருக்காங்க.....பிறகு உயிரைத்தான் விட வேண்டும்...” என்று ராமலிங்கம் காது பட பேசினார்கள். உள்ளம் உடைந்த ராமலிங்கம் தன்னைத் தான் சொல்கிறார்கள் என்று புரிந்து அவமானத்தில் கூசிப் போனான். இந்த ராகிங் தொடர்ந்தது....அதன் விளைவு அவன் தூக்கில் தொங்கி விட்டான். ஆயிற்று அது நடந்து ஒரு வருடம் போய்விட்டது. சாரு வழக்கம் போல் கண்ணையும் மனசையும் துடைத்துக் கொண்டு மகளுக்காக மனம் உடையாமல் நிமிர்ந்து நின்றாள். “ இவள் தான் ஏதோ சொல்லி அவன் தூக்கு மாட்டிக் கொண்டான் என்று அதற்கும் அவள் மேல் பழி சொன்னார்கள். வம்பளந்தார்கள். மகள் அழும்போது...”அழாதே கீர்த்தனா...நீ நல்ல படித்து பெரியாளா வந்து காட்டணும். காலம் இப்படியே போகாது. மரியாதை தானா வரும். காத்திருக்கணும்...” என்று சொல்வாள்.

இப்படி சூழ்நிலையில் ஒரு நாள் சாருவிடம் துளசி வந்து பேசினாள்.

“கீர்த்தனாம்மா...அந்த மிலிட்டரியின் கதை தெரியுமா? அவன் நேர்மையானவன். ஆனால் அவன் மகன் ஒரு ப்ராடு. கள்ள நோட்டு அடித்து மாட்டிக்கிட்டான். ஜெயில் வாசம். மகனின் மனைவி, குழந்தைகளுடன் பிறந்த வீட்டுக்குப் சென்றுவிட்டாள். அவமானம் தாங்காமல் ஊரை விட்டு இவன் இங்கு ஓடி வந்து வாழ்றான்...” சாரு மனம் நெகிழ்ந்தது.

“கீர்த்தனா..அம்மா கடைக்கு போயிட்டு வரேன்...நீ படித்துக் கொண்டிரு.” என்று விட்டு தெருவில் இறங்கினாள் சாரு...”நம்ம கதாநாயகி வருது...பொட்டைப் பார்...டிரெஸ்ஸைப் பார்...கொஞ்சமாவது புருஷன் இறந்த துக்கம் தெரியுதா? பூ வாங்கறா பார்...தலையிலே வைக்கறா பார்.. தூ...பொம்பளையா அவ...”

வழக்கம் போல் ஒரு கூர் பார்வை பார்த்துவிட்டு நடந்து விட்டாள் சாரு. மிலிட்டரிக்கு தாங்கவில்லை. “ஏம்மா நீங்கள்ளாம் மனுஷா தானா? அது பாட்டிலே போகுது. வாய்க்கு வந்தபடி பேசினா என்ன அர்த்தம்? மூலையிலே விழுந்து கிடந்தா அவங்க புள்ளையை யார் படிக்க வைக்கிறது? பாட வைக்கிறது....கவனிச்சுக்கறது?...வெளிலே வீதியில போக வேண்டி இருக்கு. அழுது வடிஞ்சிட்டா போக முடியும்? வாயை மூடுங்க....ஓவரா போறீங்க...” என்று ஓங்கி சொன்னான். “‘ஒ...உனக்கு ஒரு வாய் கஞ்சி ஊத்தாதவளுக்கு நீ என்னடா சப்போர்ட் பண்ணுறே? .யார் யாரை வச்சிட்டிருக்காங்கன்னே தெரியலை. உன் கதை தெரியாதா? கள்ள நோட்டு அடித்து மாட்டிக்கிட்ட கும்பல் தானே. இங்க வந்து நல்ல வேஷம் போடறே? இனம் இனத்தோட சேரும். அதான் அந்த மேனா மினுக்கிக்கு ஆதரவா பேசறே...நீ தான் அவளுக்கு கள்ளப் புருஷனா? இப்ப தானே தெரியுது உன் யோக்யதை. ..கர்மம்..” துணிந்து ஒரு வம்பி இப்படி சொல்ல...மற்ற பெண்கள் சிரித்தார்கள்...அவன் அவமானம் தாங்காமல் தலை குனிந்தான். எல்லோருக்கும் விஷயம் தெரிந்து விட்டது. மானம் போய்விட்டது. கண் காணாத இடத்துக் வந்து வாழ்ந்தாலும் நிம்மதியாக இருக்க விட மாட்டார்களா? எங்கு போனாலும் மகனால் மரியாதை இழந்த வாழ்க்கை தானா! தாங்கிக் கொள்ள மனைவியும் இல்லை. புண்ணியவதி போய்ச் சேர்ந்து விட்டாள், மகன் ஜெயிலுக்குப் போன அதிர்ச்சி தாங்காமல். அவன் நொந்தான். இனி வேறு எங்கு போவது?

மறு நாள் அதிகாலை நாலு மணிக்கு சாரு ஒரு கல்யாணத்துக்கு கிளம்பினாள். இப்போ பஸ் பிடித்தால் தான் முகூர்த்த நேரத்துக்கு போய்ச் சேர முடியும்...விரைவாக நடந்தாள். மிலிட்டரி வேப்ப மரத்தில் கயற்றை கட்டிக் கொண்டிருந்தான். சாரு பதறிப் போய். “முட்டாள் என்ன காரியம் செய்றே?” என்று தடுத்திருக்காவிட்டால் இந்நேரம் அவன் கதை முடிந்திருக்கும். அவள் அனுதாபத்துடன் அவனைப் பார்த்தாள்.

“நாளையிலிருந்து நீ என் வீட்டில் தோட்ட வேலை செய். மானமா பிழைத்து வாழ்ந்து காட்டு. உன் நேர்மை அவர்களுக்குப் புரியும். ஈனர்களின் சொல்லுக்கு பயந்து நீ ஏன் உயிரை விடத் துணிந்தே? அவர்களின் இருள் மனதுக்கு எதிரி நம் தன்னம்பிக்கை தான். நான் இல்லை? எவ்வளவு என்னைப் பற்றி பேசியிருப்பார்கள்? உழைத்து வாழ். தன்னம்பிக்கையோடு வாழ். யாரிடமும் கை ஏந்தி வாழாதே. உன் கால் தான் நொண்டி உன் மனசில்லையே?.....வாழ்ந்து காட்டு. வெளிச்சத்தை நோக்கி நம் பயணம் இருக்க வேண்டும். இருளுக்கு டாட்டா சொல்லிவிடு. இந்தா வீட்டுச் சாவி. நான் வரும்வரை வீட்டைப் பார்த்துக் கொள்.” சொல்லிவிட்டு சாரு கம்பீரமாக நின்றாள்.

அவள் சொன்ன வரிகள் திருக்குறள் போல் அவனை வழிகாட்டியது. “சரிங்கம்மா.” கை கூப்பினான். சாருவின் தைரியம் அவனுக்கும் வந்தது.

எச்சில் துப்பியவர்கள் மேலேயே அவர்கள் எச்சில் விழப் போகிறது. புறம் பேசியவர்கள் நாக்குகள் உலர்ந்து போகும். ஏனென்றால் உழைப்புக்கு என்றும் மதிப்பு உண்டு.



சங்கரி அப்பன்.

 
Last edited:

sankariappan

Moderator
Staff member
சிறுகதை.

பார்வை ஒன்றே போதுமே.....




என் பிறந்த நாள் அன்று நீல நிறப் பட்டுப் பாவாடையும். ரோஸ் நிற ஷிபான் தாவணியும் அணிந்து...ஜிம்மிக்கிகள் அசைய, சுந்தர் வீடிற்கு பலகாரம் எடுத்துப் போனேன்.

“ஹாய் பேபி....நீயே ஸ்வீட்.. இத்தனை ஸ்வீட்ஸ் கொண்டு வந்திருக்க..” என்று தட்டில் உள்ள பாதாம் பர்பி எடுத்துக் கொண்டபடி சொன்னான் சுந்தர். அத்தனை அருகில் சுந்தரை நான் பார்ப்பது இதுதான் முதல் முறை. கண்களும் மனசும் சந்தோஷப்பட்டது. கால்கள் மட்டும் பின்னுக்கு நகர்ந்து என் பெண்மையின் நிறையை காப்பாற்ற முயற்சித்தது..

“பிறந்த நாள் வாழ்த்துக்கள் பேபி...” என்றான்.

“ஹேமா...பட்டுப் பாவடையும் மஞ்சள் பூச்சுமாக மகாலட்சுமி மாதிரி இருக்கேடி...” என்று சுந்தரின் அம்மா சீதா திருஷ்டி கழித்தார்.

“உன்னை மாதிரி மருமகள் என் வீட்டுக்கு வரணும்...” என்று என் தலை கோதிவிட்டார். அப்படியே ஐஸ்கிரீம் போல் மனசு ஜிலீரென்றது. சுந்தர் என்னை ரசனையுடன் பார்த்தான்.

“பார்....நான் வரைஞ்சதை....உன் மாதிரி இல்லை.?..” என்று ஒரு பேப்பரை நீட்டினான். நீல நிற ஷிபான் தாவணியும். ரோஸ் நிற தாவணியும் அணிந்தவளாக வாய் கொள்ளா சிரிப்புடன் ஜொலித்தது பெண் ஓவியம். பறக்கும் பட்டாம் பூச்சி போல் உயிர்புடன் காட்சி அளித்தது.

பேப்பரை பறித்துக் கொண்டு ஓடிவந்திவிட்டேன். வீட்டுக்கு வந்து நன்றாகப் பார்த்தேன். அதில் மிஸஸ் சுந்தர் என்று எழுதியிருந்தது. என்னை மாதிரி இருப்பதாகத் தானே சொன்னான். அப்ப அவன் மனசில் நான் இருக்கேன். என் கொலுசின் சிணுங்கல் போல் என் மனசு சிணுங்கி சிணுங்கி புதுப் புனலாய் காதல் வசப்பட்டது.



நான் பெரியவளாகி மூணு மாசம் தான் ஆகுது. இப்ப தான் சுந்தர் என்னை கவனிக்க ஆரம்பிச்சிருக்கான். சாயங்காலம் அஞ்சு மணிக்கு கரெக்டா அலுவலகம் முடிஞ்சு அவன் வர்ற நேரம் நான் வாசல்ல பூ பறிக்கிற மாதிரி நின்னுட்டு இருப்பேன். அப்ப பார்த்து யாராவது வந்திட்டா எனக்கு எரிச்சல் பொத்துக்கிட்டு வந்திடும். என்னோட அத்தை மகன் கௌசிக் எப்பப்பார் அந்த நேரம் தான் எங்க வீட்டுக்கு வருவான்.

இப்பவும் வந்திட்டான்.

“என்ன ஹேமா நித்தியமல்லி பூவெல்லாம் பறிச்சிட்டே....அப்புறம் செடிக்கிட்டே நின்னுட்டு என்ன பண்றே? என்னைப் பார்க்கத் தான் தவமிருக்கியா? அத்தானுக்கு ஒரு கப் காப்பி கிடையாதா?” என்றான்.

அவன் பேச்சு எனக்கு வெறுப்பாக இருந்தது. சுந்தர் வருகிற நேரம்....நந்தி மாதிரி இவன். ச்சே வேண்டா வெறுப்பா வீட்டுக்குள் திரும்பினேன். சுந்தரின் பைக் சத்தம் தட தடத்தது. அப்படியே கௌசிக்கை கொன்னுடலாம் போல் இருக்க, ஜன்னல் வழியே பார்த்தேன். சுந்தரின் பார்வை என் முகம் தேடி காணாமல் ஏமாத்தம் அடைந்து வாடியது புரிந்தது. கௌசிக் வில்லனாகத் தெரிந்தான். சூடான காப்பியை லொட்டென்று வைத்தேன்.

“கௌசிக்....காப்பிலே இருக்கிற சூட்டைவிட ஹேமா கண்ணிலே தான் சூடு அதிகமா இருக்கு. என்ன சேட்டை பண்ணினே? சமாதானப்படுத்து...”

என்று அப்பா சிரித்தார். எனக்கு கொஞ்சம் கோபம் தணியுது. எனக்கு அப்பாவை ரொம்பப் பிடிக்கும். ஏன்னா அவர் எனக்காகவே இன்னொரு கல்யாணம் பண்ணிக்காம இருக்கார். அம்மா இறந்து ஒரு வருஷம் போயிருச்சு. சோகமான விஷயம்தான். அது தெரியாம வளர்க்க அப்பா ரொம்ப மெனக்கிடறார். என்னுள் அன்பு சுரக்குது. அப்பான்னா அப்பா தான்.

சுந்தர் ஒரு முறை எனக்கு அட்டை போட பிரவுன் பேப்பர் வாங்கிக் கொடுத்தான். சொன்னான்.

“பதினாறு வயது குழந்தை.....சின்னப்பூ சின்னப்பூ நீ. கவிதை எழுதியிருக்கேன் பார்...” சென்று விட்டான். கவிதையை படித்தேன்.

“ஆகாயத்தில் ஆயிரம் ஆயிரம் நட்சத்திரங்கள். தரையில் ஒரே நட்சத்திரம் நீ.”

அந்தக் கவிதையை என் பாக்ஸில் பத்திரப்படுத்றேன். அதில் வேறு என்னவெல்லாம் இருக்கு தெரியுமா? சுந்தர் டென்னிஸ் மட்டையுடன் காட்சி அளிக்கும் புகைப்படம். தவறி விழுந்த அவன் கைகுட்டை.....அவன் வரைந்த ஓவியம்...எல்லாம் எனக்கு பொக்கிஷம்.

அன்று ஸ்கூல் யூனிபாரம் மாட்டிக் கொண்டிருந்தேன். டார்க் நீல மிடி. நீலக்கோடு போட்ட காலர் வச்ச வெள்ளைக் ஷர்ட். கருப்பு பூட்ஸ். நீல சாக்ஸ். ரெட்டை பின்னல்.. ரெடி...சுந்தர் அலுவலகம் செல்ல பைக்கில் இப்போ என் வீடு கடந்து செல்வான். அவன் புன்னைகையை மனதில் சிறை பிடிக்கப் போறேன். ஏதாவது சாக்கு வைத்துக் கொண்டு வாசலுக்கு வந்து விடுவேன். அந்த நேரம் எனக்கு சுந்தரை பாக்காட்டி ஸ்கூல்லில் ஒண்ணுமே ஓடாது. பயித்தியம் பிடித்த மாதிரி இருக்கும்.

“அம்மா ஹேமா.....கொஞ்சம் தண்ணி கொண்டுவாம்மா...”

அப்பாவுக்கு நான் தண்ணீர் கொடுத்த நேரம் பைக் வீட்டைத் தாண்டி போய்விட்டது. ஓடிவந்தும் அவன் பறந்துவிட்டான். வெறுமையாக உணர்கிறேன். கண்ணீர் குதித்துக் கொண்டு வந்தது. அப்பா பதறிவிட்டார்.

“என்னம்மா ஹேமா? ஏம்மா அழறே?” எதுக்கு அழுதேன்னு சொன்னா செருப்படி விழலாம்....பொய் தாராளமாக வந்தது. அதில் கொஞ்சம் உண்மையும் இருந்தது.

“அம்மாவை நினைச்சுக்கிட்டேன்பா....” வேறு என்ன சொல்ல?

இரண்டு நாளாக சுந்தரை காணவில்லை. வீடு பூட்டி இருந்தது. என் மனசு வெடிச்சிடும் போல இருக்கு. யார்கிட்டே கேக்க? சுந்தர் எப்ப வருவான்?

அப்பா வந்தார். அவர் முகத்தில் சிரிப்பு.

“ஏம்மா...இந்தக் கல்யாணப் பத்திரிகையை பார்த்தியா? பிரமாதமா இல்லே. உன் கல்யாணப் பத்திரிகையையும் இப்படித்தான் க்ராண்டா அடிப்பேன்...”

“யாருதுப்பா அது?”

“எடுத்துப் பாரு. உனக்குப் புரியும்.”

எடுத்துப் பார்த்தேன். “சுந்தரேசன் வெட்ஸ் பிரமலதா” என்று போட்டிருந்தது.

“புரியலை...யாருது?”

“அடே....தெரியலை. பக்கத்து வீட்டு சுந்தர் தான். கோயமுத்தூரில் கல்யாணமாம். கல்யாண பத்திரிகை வைக்கத் தான் இப்ப சொந்த ஊருக்குப் போயிருக்காங்க. அவன் அம்மாவும் அவனும் நேத்து நம் வீட்டுக்கு வந்து பத்திரிகை வச்சிட்டு அவசியம் வரணும்னு அழைச்சாங்க. ‘உங்க பொண்ணு மாதிரியே அழகும் அடக்கமும் நிறைஞ்ச மருமக வரணும்னு ஆசைப்பட்டேன். அதே மாதிரி அமைஞ்சுப் போச்சு’ ன்னு உன்னைப் பெருமையா பேசினாங்கம்மா....என் குட்டித் தேவதையையும் கல்யாணத்துக்கு அழைச்சிட்டு வரணும்னு சுந்தர் சொன்னான். நீயும் வரியாம்மா?” அப்பா திருப்தியா சிரித்தபடி சொன்னார்.

அதிர்த்தேன். சுந்தர்...என் சுந்தருக்கா கல்யாணம்! எப்படி என்னை ஏமாற்றிவிட்டான்? காவிரி வெள்ளம் போல் என்னுள் துக்கம் பொங்கிற்று.

“சுந்தர் நியாயமா? நீ பார்த்த பார்வைகள் வெறும் நீர்க்குமிழி தானா? மிஸஸ் சுந்தர் என்று வரைந்து, என் மாதிரி இருக்குன்னு சொன்னியே அது வெறும் மணல் வீடு தானா? என் ஆசையை தூண்டும் விதமா பார்த்தியே அது வெறும் ஜாலிகுத் தானா? கேள்விகள் என்னுள் முட்டி மோதியது.

விடக் கூடாது....கேட்டுவிடத் தான் வேண்டும். கல்யாணத்தை நிறுத்திதான் ஆக வேண்டும். சுந்தர் எனக்குத் தான்...

ஊரிலிருந்து சுந்தர் வந்துவிட்டான். மூன்று நாட்கள் கழித்து அவன் வீட்டு மொட்டை மாடியில், நிலவின் ஒளிக் கற்றை குளுப்பாட்ட சுந்தர் காற்று வாங்கிக் கொண்டிருந்தான். இது தான் சந்தர்ப்பம். அப்பா தூங்கி கொண்டிருந்தார். மெல்ல சரசரவென்று அவன் வீடு சென்று...பின் வழிப் படிக்கட்டு வழியாக மொட்டை மாடியை அடைந்தேன்.

“ஹேமா....என்ன இப்படி? இங்க நீ?...”

ஆச்சர்யமாக பார்த்தான். அவன் ஷர்ட் காலரைப் பிடித்தேன். பத்திரிகையை காட்டினேன். ஆவேசமாக மெல்ல அதிர்வுடன் கேட்டேன்.

“என் இது? என்னை காதலிச்சிட்டு இப்படி யாரையோ கல்யாணம் பண்ணிக்கப் போறியே...விட மாட்டேன். கல்யாணத்தை நிறுத்து நிறுத்து...” உடைந்து போய் கேவினேன். அழுகையை நிப்பாட்ட முடியவில்லை.

அவன் அதிர்ச்சியுடன் பார்த்தான். மௌனமாக நின்றான். கவலையுடன் என்னைப் பார்த்தான். சொன்னான்...

“ஹேமா...என்ன இது? நான் உன்னை காதலிச்சேனா? ஏமாற்றினேனா? நீ குழந்தைடா? உன்னைப் போய் எப்படி காதலிப்பேன்?”

அவன் வரைந்த ஓவியம். எழுதிய கவிதை...அவன் பார்வைகள் என் மனசில் ஏற்படுத்திய தாபங்களை எழுதி வைத்த டைரி. எல்லாம் காண்பித்தேன்.

“இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?”

“ஹேமா....எனக்கு வயது முப்பது. உனக்கு வெறும் பதினாறு. உன்னைப் போல் பெண் வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நீ வேண்டும் என்று நினைக்கவில்லை. நீ குழந்தைம்மா. உன்னைப் பார்க்காமல் உன் வீடு தாண்ட கஷ்டப்படுவேன்.....உன் குழந்தை முகம் எனக்கு குதூகலத்தை கொடுக்கும். அதனால் தான் பார்த்தேன். அது காதல் பார்வையில்லை. நீ இன்னும் பிறை நிலா. நீ பூரணத்துவம் அடைந்து, உன் வயதுக்கு தகுந்த சிறப்பான மணமகனை கல்யாணம் செய்து கொள்ளணும். நான் வாழ்த்திட்டே இருப்பேன். ப்ளீஸ் புரிஞ்சுக்கோ ஹேமா. முற்றின தேங்காயும் இளநீரும் ஜோடி சேர முடியாது ஹேமா...”

பாலில் நீர் தெளித்தவுடன் அடங்குவது போல் அமைதியானேன்.

“போ...போய் நல்லா தூங்கு. கல்யாணத்துக்கு வா. சந்தோஷமா இரு. உனக்கான ராஜகுமாரன் தக்க சமயத்தில் வருவான். அவனை முழுதாக நேசி. நல்லப் படி. இப்படி பள்ளங்களில் தேங்காதே. அவசரப்பட்டு உன் பெண்மையான மென்மை மனசை நீயாக மலர்திக்காதே. அது தானா கனியும். அதுவரை காத்திரு. குட் லக். சமர்த்தில்லே....ஓடு ஓடு...இந்தக் குப்பையெல்லாம் வீசிடு....”

என் பொக்கிஷம் என்று நான் கொண்டு வந்ததை சுந்தர் மாடியிலிருந்து தெருவில் குப்பைத் தொட்டியில் வீசினான். அவன் வார்த்தைகள் என்னை பண்படுத்திற்று. என் அபத்தம் புரிந்தது.

“ஸாரி...” என்று முணுமுணுத்தேன். அவன் முன் நிற்கவே கூச்சமாக இருந்தது. இவன் என் தோழனா? ஆசிரியனா? ஒரு வேளை சகோதரன்? இல்லை எதுவும் இல்லை. நல்ல மனுஷன்.

அதற்கப்புறம் நான் சுந்தரை பார்க்கவேயில்லை. ஆனால் என் மனசு அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கிறது. பிறை நிலவை மெல்ல மெல்ல பூரண நிலவாக்கியது அவன் தானே!

இதோ....வேணுவை நான் பூரணத்துவம் நிறைந்த பக்குவ மனதோடு, என் இருபத்தி ரெண்டாவது வயதில் கை பிடிக்கிறேன் என்றால் அதுக்கு சுந்தரின் வழிகாட்டலே காரணமாகும். வேணு என்னைப் பார்த்தபோது காதல் என்பது என்ன என்று எனக்குப் புரிந்தது.



சங்கரி அப்பன்



 
Last edited:
Top