கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சிறார் கதைகள் கதை திரி - ரியா மூர்த்தி

Rhea Moorthy

Moderator
Staff member
images (80).jpeg
பேராசை பெரு நஷ்டம்

ஒரு ஊரில் ஒரு விவசாயியும் அவரது மனைவியும் தங்கள் நிலத்தில் விவசாயம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆண்டுகள் பல கடந்தாலும், கஷ்ட நஷ்டங்களை இருவரும் ஒன்றாக சேர்ந்து கடந்ததால், இப்போது இருவருக்கும் அறுபது வயதாகி விட்டது.

அவர்கள் இருவருக்கும் வயதாகிவிட்டதால் முன்பு போல சுறுசுறுப்போடு வேலை செய்ய முடியவில்லை. சில நாட்களில் வருமானம் இன்றி வாடவும் நேர்ந்தது.

இருவரில் ஒருவருக்கு உடல்நிலை மோசமானாலும் மரணம் தங்களின் துணையை பிரித்து விடுமோ என்று அவர்கள் இருவருமே பயந்தார்கள்.

ஒரு நாள் விவசாயி, "நாம இதுக்கு அப்புறம் விவசாயம் செய்ய முடியாது. பேசாம நான் பக்கத்து ஊர் சந்தைக்கு போய் ஒரு நல்ல பசுமாடு வாங்கிட்டு வரேன். அதை வச்சு பால் வியாபாரம் செய்யலாம், நமக்கும் வருமானம் தடையில்லாம கிடைக்கும்.." என்று தன் மனைவியிடம் யோசனை கேட்டார்.

அவர் மனைவிக்கும் அந்த முடிவு சரி என்று தோன்ற, தங்களின் ஒரே ஒரு சொத்தான தங்கச் சங்கிலியை விற்று பசுமாடு வாங்க சம்மதித்தார் அவர்.

அடுத்த நாள் விவசாயி பக்கத்து ஊர் சந்தைக்கு மாடு வாங்கச் சென்றார். அவர் பாதி வழி சென்று இருக்கையில் திடீரென்று அடைமழை பொழிய ஆரம்பித்தது.

மழையிலிருந்து தப்பிக்க நினைத்த விவசாயி வழியிலிருந்த ஒரு பாழடைந்த மண்டபத்திற்குச் சென்றார். அது ஊருக்கு வெளியில் இருந்ததால், ஆள் நடமாட்டம் இல்லாமல் பாழடைந்து கிடந்தது.

மழை விடாமல் பொழிந்ததால் அங்கேயே நெடு நேரம் உலவிக் கொண்டிருந்தார் விவசாயி. நேரமாக நேரமாக பசியும் சேர்ந்து அவரை சோர்வடையச் செய்தது.

சும்மா இருப்பதற்கு பதிலாக, சாப்பிட ஏதேனும் கிடைக்கிறதா என்று மண்டபத்தை சுற்றித் தேடிப் பார்க்கலாம் என்று நினைத்தார். அப்படி சுற்றி திரிந்தவரின் கண்களுக்கு, கொஞ்சம் தள்ளி ஒரு பெரிய மாமரம் பட்டது.

கடவுள் தன்மேல் கருணை கொண்டு இம்மரத்தை இந்நேரத்தில் தன் கண்ணில் காட்டியதாக நினைத்துக் கொண்ட விவசாயி, வேகமாகச் சென்று மரத்தில் இருந்து ஒரு பழத்தைப் பறித்துத் தின்றார்.

ஆனால், அதைத் தின்றவுடன் அவர் உடல் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் இளமையாய் மாறத் துவங்கியது. இப்போது, அவருக்கு இருபத்தைந்து வயது..

அவர் இளமை தரும் அதிசய மாமரத்தை தான் கண்டுபிடித்ததை உணர்ந்தார்!..

மழையையும் மறந்து மகிழ்ச்சியுடன் அவர் தன் வீட்டிற்கு ஓடினார், முதலில் அவர் மனைவியால் அவரை அடையாளம் காணவே முடியவில்லை.

விவசாயி தன் மனைவியிடம் தான் இளமையாக மாறிய ரகசியத்தைக் கூறி அவருக்கும் ஒரு பழத்தைக் கொடுத்தார்.

பழத்தை சாப்பிட்டதும் விவசாயினுடைய மனைவியின் வயதும் பாதியாய் குறைந்துவிட்டது. ஆனால் அவர் மனைவியின் ஆசை அதோடு அடங்கவில்லை.

இருபத்தைந்து வயதிற்கு பதிலாக பதினெட்டு வயதிற்கு மாற நினைத்தார்.

விவசாயி, "நாம் உழைத்து வாழ இந்த வயதே போதும், இதற்கு மேல் எதுவும் வேண்டாம்.." என்று எவ்வளவோ எடுத்துக் கூறினார்.

ஆனால் அவர் மனைவி விவசாயியின் பேச்சைக் கேட்காமல் அம் மாமரத்தைத் தேடிச் சென்றார்.

சொல் பேச்சு கேட்காமல் செல்லும் தன் மனைவியைத் தேடி வந்தார் விவசாயி. மனைவிக்கு பதில் மாமரத்தின் அடியில் அழுது கொண்டிருந்த ஒரு சிறிய குழந்தையே அவருக்கு கிடைத்தது.

விவசாயிக்கு விஷயம் புரிந்தது, அவர் மனைவி ஆர்வ மிகுதியால் மீண்டும் ஒரு பழத்தைத் தின்றதால் அவர் பச்சைக் குழந்தையாய் மாறிவிட்டார்.

இருப்பதைக் கொண்டு திருப்தி அடையாமல், இன்னும் இன்னும் வேண்டும் என்று ஆசைப்பட்ட தன் மனைவியின் நிலையை எண்ணி மனம் நொந்த விவசாயி, அக்குழந்தையை தூக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

கதை பிடித்திருந்தால் லைக்கவும், கமெண்ட்டில் நாலு வார்த்தை நச்சுனு தட்டிப் போடவும்.

 
Last edited:
Top