கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சிறைப்பறவை...இலக்கியா சுப்ரமணியம்

Latha S

Administrator
Staff member
சிறைப்பறவை

-இலக்கியா சுப்பிரமணியன்




"அம்மா இன்னைக்கு ஈவ்வினிங் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு வர லேட் ஆகும் "என்று கத்திக்கொண்டே சார்ஜ் போடப்பட்ட தன் மொபைலை எடுத்த சாரா நடையின் வேகத்தை கூட்டி வாயில் நோக்கி நடக்க சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த ஓர் வயோதிக உருவத்தின் விழிகள் ஏனோ ஏக்கமாக அவளையே பார்த்தது. சாரா வெளியேறிய அடுத்த ஐந்து நிமிடத்தில் சாராவின் தந்தை முகிலனும் மனைவியிடமிருந்து விடைப்பெற்று அலுவலகம் கிளம்பிட முகிலனையும் அவ்வயோதிக உருவத்தின் விழிகள் ஒரு வித ஆவலுடன் நோக்க ஆனால் துர்திருஷ்ட வசமாக முகிலனும் அவ்வுருவத்தை கவணித்தார்போல் தெரியவில்லை.

ஒரு வழியாக கணவனையும் மகளையும் பயணப்படுத்திவிட்ட திருப்தியில் பூங்குழலி தனக்கான அன்றாட வேலையினை தொடங்கினாள். அடுத்த அரைமணி நேரத்தில் அவளும் வேகவேகமாக மதிய உணவை தன் கருஞ்சிவப்பு நிற லெதர் ஹேண்ட் பேக்கில் திணித்தப்படி அவ்வயோதிக உருவத்திடம் ஓர் கண்ணசைவை சிந்தியபடியும் இதழில் சம்பிரதாய புன்னகையை தவழவிட்டும் வெளியேறினாள்.



மகன்,மருமகள், பேத்தி என தன்னை சுற்றியுள்ள உறவுகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக தங்களுக்கான காலச்சக்கரத்தில் ஓட அவ்வயோதிக உருவத்தின் விழிகள் அனிச்சையாக சுவரில் மாட்டப்பட்ட கருப்பு இராட்சத உருவ கடிகாரத்தின் புறம் திரும்ப அது 8.45 என நேரத்தை காட்டியது. கடிகாரத்திலிருந்து மூன்று மீட்டர் இடைவெளியில் தொங்க விடப்பட்ட அந்த காலத்து கருப்பு வெள்ளை புகைப்படமொன்றில் இளம் வயது தோற்றத்தில் மறைந்த தன் மனைவியோடு நெருங்கி அமர்ந்து புன்னகைக்கும் தன்னையும் தன்னவளையும் ஒரு வித தாங்க இயலா துயரோடு அவர் விழி நோக்க சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்தவர் தன் கண் கண்ணாடியை சரிசெய்தபடி அப்புகைப்படத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.



அப்புகைப்படம் ஏனோ அவருக்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகளை எழுப்பியது.

அவர் எண்ண அலைகள் முப்பத்தைந்து வருடங்கள் பின்னோக்கி நகர்ந்தது.



"ஏய் சாந்தி வெந்நீர் போட்டியா,டிஃபன் ரெடியா, நேத்து லாண்டரிக்கு போட்டுருந்த டிரஸை வாங்கி வச்சியா அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியபடி காலை நேரத்திற்கே உண்டான பரபரப்பை காட்டியபடி சிவராமன் அலுவலகத்துக்கு கிளம்பிக்கொண்டிருக்க அவனின் மனையாள் சாந்தியும் சிறிதும் தளராமல் அவனுக்கு ஈடுக்கட்டி பணிவிடை செய்துக்கொண்டு இருந்தாள்.



அவன் வீட்டை விட்டு கிளம்ப எத்தணிக்கையில் சாந்தி சிறிய தயக்கத்துடனே "ஏங்க நான் கேட்டது என்னாச்சிங்க" என்றாள்.



சிவராமனுக்கு அவள் எதைப்பற்றி கேட்கிறாள் என்று நன்றாக புரிந்தாலும் வேண்டுமென்றே புரியாதவன் போல் நீ எதை பத்தி சொல்ற சாந்தி எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லு ஆஃபீஸ்க்கு டைம் ஆச்சு" என்று நடையில் வேகத்தை காட்டினான்.



சாந்தியின் முகம் இலேசாய் சுருங்கிட இருப்பினும் அதை பற்றி எந்த கவலையும் கொள்ளாதவனாய் சிவராமன் தன் எந்திர புரவியை எட்டி உதைத்து கிளம்பிவிட்டான்.



இது தினசரி நடப்பது தான் "அவள் நீண்ட நாட்களாகவே தையல் பயிற்சி வகுப்புக்கு செல்ல வேண்டும்" என்று அவனிடம் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறாள். ஆனால் சிவராமனுக்கு இதில் துளியும் விருப்பமில்லை. அதை நேரடியாக மனைவியிடம் கூறாமல் ஏதேதோ சாக்குப்போக்கு சொல்லி இழுத்தடித்து கொண்டிருக்கிறான்.



வழக்கமான நாட்களை போலவே இன்றும் அவளது நாள் காலையில் அடுப்பங்கறையிலும் அதன் பிறகு ராணி, பாக்யா,தினமணி என சில கதை புத்தகங்களுடனும் மதியம் ஒரு குட்டி தூக்கத்துடனும் கழிந்து போனது. மாமனார், மாமியார் இருவரும் சொந்த ஊரில் இருக்க பணியிடம் சிவராமனுக்கு வெகு தூரம் என்பதால் கணவனும் மனைவியும் மட்டும் இப்போது இங்கு தனியாக இருக்கிறார்கள்.



மாலை நேரந்தனில் தன்னவன் எப்போது வருவான் என கடிகாரத்தையும் வாயிலையும் மாறி மாறி பார்த்தவளை ஏமாற்ற விரும்பாமல் சிவராமன் வீட்டுக்குள் புகுந்திட புன்னகைத்தப்படியே அவனை நோக்கி ஓடியவளை நிமிர்ந்து கூட பார்க்காதவன் குளியலறை நோக்கி நடந்தப்படியே இஞ்சி டீ போடு சாந்தி என்று சென்றுவிட்டான்.



அடுத்த அரைமணிநேரத்தில் டீயை அருந்தியப்படியே நாற்காலியில் சாய்ந்தமர்ந்து அலுவலகம் சம்பந்தப்பட்ட சில கோப்புகளை அவன் ஆராய்ந்தப்படியிருக்க அவனையே ஏக்கமாக பார்த்தவளின் விழிகளை பனிபூத்திட இரவு சமையலை செய்திட மீண்டும் அடுக்கலைக்குள் நுழைந்துக்கொண்டாள்.



சமையலுக்கு இடை இடையே சாந்தியின் விழிகள் சிவராமனை நோக்கிட ஆனால் அவனோ கடமையே கண் கொண்ட தெய்வமென வேலையிலே மூழ்கி போய்க்கிடந்தான்.



இரவு உணவின் போதும் மீண்டும் ஒரு முறை அவனுக்கு நியாபகப்படுத்த அவனோ சற்று கோவத்துடனே ,"இங்க பாரு சாந்தி நான் வேலைக்கு போய் சம்பாதிக்கிறதே நமக்கு போதும்" நீ தையல் கிளாஸ் போயி அதுக்கப்புறம் சம்பாதிச்சி கொட்டனுன்னு அவசியம் இல்லை என முகம் சுளித்திட சாந்தியின் முகம் வெளிரி நின்றது.



உடைந்து போன குரலுடன் அவள் திக்கியபடி 'இல்லங்க வீட்டுல எவ்வளவு நேரம் தான் தனியாவே இருக்கிறது ஒரு மாதிரி பைத்தியம் புடிக்கிற மாதிரியே இருக்குங்க' என்றிட சிவராமனுக்கு இப்போது உச்சத்துக்கும் கோவம் ,"நல்லா பேசுவடி பேசுவ உனக்கு சம்பாதிச்சி போட்டு வீட்டுல ராணி மாதிரி பாத்துக்கிட்டா நீ சும்மா இருக்கிறது பைத்தியம் புடிக்குத்துன்னு சொல்லுவியா உனக்கெல்லாம் ஏத்தம் தாண்டி என்று கடுகு போல் பொரிந்துவிட்டு போய் படுத்துக்கொண்டான்.



அன்று மட்டுமல்ல அதன்பிறகு வந்த நாட்களிலும் கூட அவர்களுக்கு இடையில் ஒரு பனிப்போர் நடந்தபடி இருக்க ஒவ்வொரு முறையும் சாந்தி தான் விட்டுக்கொடுத்து போக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாள்.



ஓரளவுக்கு கணவனின் மனநிலை சாந்திக்கு புரிந்ததால் அதன்பின் வந்த நாட்களில் அவள் இதைப்பற்றி பெரிதாய் அவனிடம் பேசவில்லை. அவளின் வாழ்க்கையின் பெரும்பாலான நேரங்களில் அவள் முடங்கியது சமையலறையில் மட்டும் தான்!



அவர்களின் காலக்கட்டத்தில் பெற்றோர்களால் பேசி தீர்மானிக்கப்பட்ட திருமணம் என்பதாலோ என்னவோ ஒரு சில முரண்பாடுகளுக்குள் சாந்தி பெண் என்ற திரைச்சீலை போட்டு முடக்கி தள்ளப்பட்டாள்.

சிவராமனோ தன் மனைவி தன்னை புரிந்து தன்னுடைய வாழ்க்கைக்கு ஏற்றார்போல் வாழ பழகிக்கொண்டாள் என்று நினைத்துக்கொண்டார். ஒரு எந்திரமயமான வாழ்க்கையை தான் தன் மனைவி வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள் என்பது அவருக்கு ஏனோ புரியவில்லை.

சிறைப்பறவையாக்கப்பட்ட அவள் ஆண்குழந்தையை பெற்றெடுக்க காலங்கள் உருண்டோடியது!



அவளுக்கு பெரும்பான்மையான நேரங்களில் இப்போதெல்லாம் ஆறுதல் அளிப்பது மகனின் துணை மட்டுமே!



கணவன் எப்போதும் வேலையென்றும் தனக்கான கேளிக்கை கொண்டாட்டங்களிலும் தனித்திருக்க அதுவரை ஆறுதலாக உடன் இருந்த மகனும் மேற்படிப்பிற்க்காய் ஹாஸ்டல் என்று சென்றிட மீண்டும் அவள் வீடெனும் சிறையிலே தள்ளப்பட்டாள்.



ஒட்டி உறவாட விரும்பாத அக்கம் பக்கத்தினரும் வேலைக்கு அனுமதிக்காத கணவனும் அவளுக்குள் ஒரு விரக்தியை ஏற்படுத்தினாலும் தன்னவனின் மீதான அவளின் அன்பும் அக்கறையும் மட்டும் அவளுக்கு என்றுமே குறைந்ததில்லை.



இதோ மகன் முகிலனும் வளர்ந்து விட்டான். திருமண வயதை நெருங்கியவன் காதலில் விழுந்திட மனைவியின் மனம் புரியாத சிவராமனுக்கு ஏனோ கடவுள் மகனின் மனதை மட்டும் புரியவைத்திட காதலித்தவளையே கரம் பிடித்து விட்டான்.



முகிலனுக்கும் பூங்குழலிக்கும் திருமணம் நடந்திட உத்யோகம் காரணமாக இருவருமே தனிக்குடித்தனம் செல்வது என்று தீர்மானித்திட உள்ளுக்குள் பெற்றோர்களுக்கு வருத்தம் இருந்த போதிலும் மகனின் விருப்பம் மற்றும் மகிழ்ச்சி கருதி மறுப்பு தெரிவிக்காமல் சந்தோஷமாய் அனுப்பி வைத்தனர்.



விதி வலியது தான் போல! மகனும் மருமகளும் தனியாக குடியேறிய அடுத்த ஒரு சில தினங்களிலே சாந்தி மாரடைப்பால் மரணத்தை தழுவிட முதன்முதலில் சிவராமனின் கல் இதயம் கரைந்து வடிந்தது.



தன்னுடன் அவள் இருந்த காலத்தில் எத்தனையோ மன துயரங்களை அவள் அனுபவித்து இருக்கிறாள் என்பதை அவர் அறிந்த போதும் அவளிடம் ஆறுதலாக பேசியது கூட இல்லை! ஒவ்வொரு நொடியும் தனக்காகவே வாழ்ந்த தன் மனையாள் இப்படி தனியாக தவிக்கவிட்டு சென்ற பின் தான் முதன் முதலாக சிவராமனுக்கு உள்ளூர ஒரு நெருடல் தொடங்க ஆரம்பித்தது.



இதோ வருடங்கள் பல கழிந்து அந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தின் முன் தன் மனையாளின் ஆசைமுகத்தை கண்களில் கண்ணீர் நிரைந்தபடி பார்த்தவரின் மனம் குற்ற உணர்வில் துடித்தது.



தொழில்நுட்ப வசதிகள் பெருகி கிடக்கும் இந்த காலத்திலேயே தன்னால் தன் வீட்டுக்குள்ளேயே பேச்சுதுணையின்றி முடங்கி கிடக்க இயலவில்லையே தன்னவள் எப்படி இத்தனை வருடங்கள் இதை சகித்து கொண்டிருந்தாள் என்பதே அவருக்கு அப்போது பெரும் ஆச்சரியமாக இருந்தது.



அவளிடம் ஆசையாக கூட அவர் பேசியதில்லை! அதிகமாக வெளியில் கூட்டிக்கொண்டு சென்றதில்லை ஆனால் இத்தனையும் பொறுத்துக்கொண்டு தன்னுடன் வாழ்ந்தவளின் அருமை இப்போது தான் அவருக்கு புரிகிறது!



மாலையில் மீண்டும் மகன், மருமகள், பேத்தி மூவரும் வீடு திரும்பினாலும் அவர்களும் எப்போதும் போல அவர்களுடைய அன்றாட வேலையை தான் கவணிப்பார்கள் என்பது அவர் அறிந்த ஒன்றே! மனைவி இறந்த பின் தான் தனிமை என்ற ஒன்று என்னவென்பதே அவருக்கு புரிந்து போனது!வீட்டுக்குள் தனியாக இருப்பது பைத்தியம் பிடிப்பது போல் இருக்கிறது என்று தன்னவள் அன்று உரைத்த வார்த்தையின் வலியை தன்னுடைய முதுமையில் இன்று ஒவ்வொரு நாளும் அவர் அனுபவித்து தான் கொண்டிருக்கிறார்.

ஒரு வழியாய் தன் மனைவி சந்தித்த அதே தனிமையின் வலியின் ஆழம் அவருக்கு இன்று புரிந்துவிட்டது விழலுக்குக்கிறைத்த நீராய்….



-முற்றும்
 

Sudha Ravi

Moderator
இருக்கும் போது அதன் அருமை அறியாது இழந்த பின் உணர்வது தான் நிஜம்..அருமை :love: :love: :love:
 

mrida mohan

Well-known member
Wow super baby😍😍😍😍 நம்ம பக்கத்தில் இருக்கும்போது அதன் அருமை புரியாது சொல்வது எவ்வளவு உண்மை 👌👌 வாழ்த்துக்கள் மருமகளே 💐💐💐💐
 
Top