கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

செகப்பி.....பூர்ணிமா கார்த்திக்

Latha S

Administrator
Staff member
செகப்பி

ஆசிரியர் : பூர்ணிமா கார்த்திக் ’பூகா’



“அடியேய் ஆண்டாலு, உம் புருசன் செகப்பிய ஆஸுபத்திரிக்கு ஓட்டிக்கிட்டு போறான்டி வந்து ஆலதி எடு. அந்த சிறுக்கிக்கு இது ஒண்ணு தான் கொறவு” என்று வாயில் இருந்த வெற்றிலையை பொளிச்சென்று துப்பியபடி பேசினார் ஆண்டாளின் மாமியார் மங்கையர்க்கரசி.



“செகப்பி! இந்த முறையாவது ஏமாத்தாம நல்ல சேதி சொல்லு ஆத்தா” என்று பசு செகப்பிக்கு ஆரத்தி எடுத்து, நெற்றியில் குங்குமத் திலகமிட்டு அனுப்பினாள் ஆண்டாள்.



“இந்தாருடா அந்த டாக்டராண்ட கட் அண்ட் ரைட்டா பேசிட்டு வந்துடு, இதுதான் கடேசி சொல்லிட்டேன்” என்றபடி தன் முந்தானை நுனியில் கர் கர் என்று மூக்கைச் சிந்தினார் மங்கையர்க்கரசி.



“ம்ம் சரி ஆத்தா!” என்று சொன்ன முருகனின் முகம் இரும்பை விட இறுகிப் போயிருந்தது. செகப்பியை அவன் நடத்தி செல்கிறானா? இல்லை இழுத்து செல்கிறானா? என்று தூரம் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆண்டாளால் கண்டறிய முடியவில்லை.



“இதுவரைக்கும் நாலஞ்சு முறை ட்ரை பண்ணியாச்சு முருகன், இதுக்கு மேல ட்ரை பண்ணா மாட்டோட உடம்பு கெட்டுப் போயிடும்” என்று சொல்லியபடி செயற்கை கருவூட்டல் ஊசியை மாட்டிற்கு போட்டார் கால்நடை மருத்துவர்.



“என்னங்கய்யா செய்யுறது? இது இயற்கை முறையில எந்த ஆண் துணையோடையும் சேர மாட்டேங்குது, காள மாட்ட அடி வயித்துல ஓங்கி மிதிச்சும், கொம்பால காயப்படுத்தியும் தப்பிச்சு ஓடிவந்துடுது. அதான் செயற்கையா முயற்சி செய்யுறோம். இதுவரை ஊசி போட்ட காசுத்தேன் தண்டம், இன்னும் நல்ல சேதியக் காணும்” என்று நொந்து கொண்டே கணிசமான தொகையை மருத்துவரிடம் கொடுத்துவிட்டு, செகப்பியை வீட்டிற்கு ஓட்டிச் சென்றான் முருகன்.



“ஏலே முருகா டாக்டரு என்னலே சொன்னாரு, இந்த முறையாது ஏதாச்சும் தேறுமா?” என்று வெற்றிலையைக் குதப்பியபடி செகப்பியைச் சுற்றி வந்து அவள் அங்கங்களை ஆராய்ந்த படி கேட்டார் மங்கையர்க்கரசி.



“பாப்போம் ஆத்தா! எல்லாம் அவன் விட்ட செயல், இதான் கடைசி முறைன்னு டாக்டரு சொல்லிட்டாரு” என்று மேல் நோக்கி கையைக் காட்டியபடி சுரத்தில்லாமல்‌ சொன்னான் முருகன்.



“ம்ம் இந்த சிறுக்கிக்கு இன்னும் எம்மா நாளு பருத்திக்கொட்டை, புண்ணாக்குன்னு தெண்டத்துக்கு அழ முடியும். இன்னும் ரெண்டே மாசம் தான் முருகா, அதுக்கு பெறவும் இவ நல்ல செய்தி சொல்லலைன்னு வையீ அடிமாட்டுக்கு தான், நினைப்பு வச்சுக்கோ. எனக்கு வந்ததும் சரியில்ல, வாச்சதும் சரியில்ல” என்று ஆண்டாளை பார்த்துக் குத்தலாக சொல்லியபடி விருட்டென்று உள்ளே சென்றுவிட்டார் மங்கையர்க்கரசி.



முருகனுக்கும் அவன் தாய் சொல்வது சரி எனப்பட்டது. செகப்பி நோய்வாய்ப்பட்டு இறக்கும் முன்னர், அவளை அடிமாட்டுக்கு விற்றால் தங்களின் பஞ்சமாவது சிறிதளவு தீரும் என்று எண்ணினான்.



வாரம் மாதங்களாக உருண்டோட, இரண்டு மாதங்கள் கடந்தும் செகப்பி கருத்தரிக்கவில்லை.



அடுத்து நடக்கப்போவது என்னவென்று ஆண்டாள் முன்கூட்டியே கணித்துவிட்டாள்.



“செகப்பி ஏன் இப்புடி முரண்டு புடிக்கிற? உனக்கு என்னதான் பிரச்சனை? உனக்கு நல்ல தரமான பருத்திக்கொட்டை, புண்ணாக்கு எல்லாம் என் கையால தான வைக்கிறேன்,அப்புறம் உனக்கு மாசமாக என்ன கேடு? காளையை அண்ட விடமாட்டேங்குற, டாக்டர் ஊசிக்கும் மசிய மாட்டேங்குற” என்று செகப்பியின் நெற்றியை ஆதரவாக நீவி விட்டபடி தன் ஆதங்கத்தைக் கொட்டினாள் ஆண்டாள்.



அதற்கு செகப்பி, மாட்டேன் என்பதன் அடையாளமாய் இடமும் வலமும் வேகமாக தலையை ஆட்டியது.



“அடியேய் ஆண்டாளு! அங்க என்னடி அது கூட கொஞ்சிக்கிட்டு நிக்கிற? மணி இப்பமே எட்டாவது, நைட்டு பதினோரு மணி வாக்குல, செல்வம் வந்து இதை கூட்டிட்டு போகணும். அதுக்குள்ள எங்கேயாவது ஓடிடப் போகுது, நல்லா இறுக்கிக் கட்டி வையு” என்று சொல்லியபடி செகப்பியை விற்றதால் வந்த காகித நோட்டுக்களை, எச்சில் தடவி சுவாரசியமாக எண்ணிக் கொண்டிருந்தார் மங்கையர்க்கரசி.



ஒரே நாளில் செகப்பி அவளில் இருந்து, அதுவாகிப் போனதை நினைத்து விரக்தியாய் சிரித்தாள் ஆண்டாள்.



செகப்பி சம்பாதித்து தந்த மூவாயிரம் ரூபாயை, முந்நூறு தடவை எண்ணி முடித்த திருப்தியுடன், தலையணைக்கடியில் அந்த பணத்தை வைத்துவிட்டு படுத்தவுடன் குறட்டை விடத் தொடங்கினார் மங்கையர்க்கரசி.



முருகனும் மாட்டை விற்ற பணத்தில் கணிசமான தொகையை குவாட்டருக்கும் வாட்டருக்கும் செலவழித்துவிட்டு, வீட்டு வாயிலில் மயங்கிக் கிடந்தான்.



ஆண்டாள் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தாள். கிராமத்து ஜனம் அனைத்தும் இரவு எட்டு மணிக்கே கதவடைத்து உறங்கியது அவளுக்கு வசதியாகப் போயிற்று. அவள் வீட்டிலிருந்த ஓட்டைக் கடிகாரம் ‘டங், டங்’ என்று பத்து முறை அடித்து ஓய்ந்த நேரத்தில், சத்தம் போடாமல் மெதுவாக எழுந்தவள் செகப்பியின் கயிற்றை மெல்ல அவிழ்த்து விட்டாள்.



“செகப்பி, இதுதான் சரியான நேரம் எந்திரி எந்திரிச்சு ஓடு!” என்று செகப்பியை உலுக்கி எழுப்பினாள் ஆண்டாள். மெல்ல எழுந்து நின்ற செகப்பி, அசையாமல் நிற்க, “செகப்பி! சீக்கிரம் இங்கேருந்து போயிடு,இங்கேயே இருந்தா நீ நாளைக்கு கண்டந்துண்டமாக வெட்டப்பட்டு பிரியாணி ஆயிடுவ” என்று செகப்பியை உந்தித் தள்ளினாள் ஆண்டாள்.



அப்போதும் செகப்பி அசையாமல் நிற்க, அடுத்து என்ன செய்ய என்று யோசித்த ஆண்டாள், அருகில் இருந்த முருங்கை மரத்தின் கிளையை ஒடித்து செகப்பியின் முதுகில் ஓங்கி அடித்தாள்.



“போன்னு சொல்றேன்ல இங்கயே நின்னுகிட்டு இருக்க! நீ மலடியாம்,உன்னால ஒரு சொம்பு பால் கூட கறக்க முடியலயாம், பத்து பைசா பிரயோஜனம் இல்லையாம். உன் நிலைமைதான் நாளைக்கு எனக்கும் உன்னையாவது அடிமாட்டு விலைக்கு வித்துட்டாங்க, எனக்கு அதுவும் இல்ல” என்று இன்னும் திறவாத தன் கருவறையை எண்ணி மாட்டுத் தொழுவத்தின் தரையில் அமர்ந்து அழுத்தொடங்கினாள் ஆண்டாள்.



என்ன நினைத்தாளோ, மறுபடி சற்று நேரத்திற்கெல்லாம் தன் கையில் உள்ள முருங்கைக் கொம்பால், செகப்பி முதுகில் தன் பலம் கொண்ட மட்டும் அடித்தாள் ஆண்டாள். செகப்பியின் சிவந்த மேனியில் அங்காங்கே தடிமனான சிவப்பு நிறக்கோடுகள் உருவானது.



‘மா’, என்ற மெல்லிய குரலோடு கண்ணீர் வழிய நின்றிருந்தாலும், அங்கிருந்து ஒரு அடி கூட வைக்காமல் அப்படியே நின்று கொண்டிருந்தது செகப்பி.



சில நிமிடங்களில், ‘பீப், பீப்’ என்று வண்டி சத்தம் வாயிலில் கேட்க, விருட்டென்று எழுந்து நின்ற ஆண்டாள், தன்னால் ஆன மட்டும் செகப்பியை பின்னிருந்து தள்ளினாள். அதுவரை அசையாது நின்றிருந்த செகப்பி, வண்டியைப் பார்த்ததும் மெல்ல நகர்ந்து முன்னேறியது.



“அப்பாடா! இப்பவாச்சும் உனக்கு புத்தி வந்துச்சே, சீக்கிரம் ஓடு” என்று அதன் காதருகில் குனிந்து சொன்னாள்.



முன்னேறிச் சென்ற செகப்பி வண்டிக்கு அருகே சென்று, திறந்திருந்த பின் கதவின் வழியே எந்தவித சலனமுமின்றி

வண்டியில் ஏறிக்கொண்டது.



“எலே முருகா நீ படுல, செகப்பி எந்த சிரமமும் கொடுக்காம, வண்டி ஏறிட்டா பெறவு பாக்கலாம்” என்று குடிபோதையில் தள்ளாடியபடி எழுந்து நின்ற முருகனிடம், படுக்கச் சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினான் செல்வம்.



ஆண்டாள் அதிர்ச்சியில் அசையாமல் நிற்க, வண்டியில் நின்று கொண்டே பயணித்துக் கொண்டிருந்த செகப்பியின் கண்களில் கந்தனின் பிம்பம் நிறைந்தது.



கந்தனென்னும் காளையே, செகப்பியின் முதல் இணையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இருவரையும் அவரவர் உரிமையாளர் ஒன்று சேர்க்க, ஒரு சிறிய புறம்போக்கு வயல்வெளியில் விட்டனர்.



பார்த்தவுடன் தங்கள் இணையை இருவருக்கும் பிடித்து போக, இருவரும் நெருங்கி தங்கள் கொம்புகள் உரசிய படி நடந்தனர். வயலில் அங்குமிங்கும் நடந்து மனதால் ஒன்றிப்போயினர். அப்படி நடந்து வயல்வெளியின் வரப்பை கடக்கும் வேளையில், ஏற்கனவே அறுந்து கிடந்த மின்கம்பியில் கால் வைத்தான் கந்தன்.



அடுத்த நொடியே கந்தன், ‘மா’ என்ற பெரிய அலறலுடன் தூக்கி வீசப்பட்டான். ஒன்றும் புரியாமல் அவனருகில் ஓடிச்சென்று, அவனை முகர்ந்து பார்க்க நினைத்தாள் செகப்பி.



எங்கே தன் மேலுள்ள மின்சாரம் செகப்பியின் மேல் பாய்ந்துவிடுமோ என்ற அச்சத்தில், அவளை தூரமாக உதைத்து தள்ளிய கந்தன், அடுத்த சில நொடிகளில் தன்னுயிரைத் துறந்தான். தான் இறக்கும் தருவாயிலும் தன் செகப்பியைக் காத்தான் கந்தன்.



கண் முன்னால் தன் இணையை இழந்த செகப்பி, அதன்பிறகு வேறு எந்த காளையையும் தன் இணையாய் ஏற்கவில்லை. அவளின் கருவறையும் வேறு எந்த கருவையும் ஏற்க ஒத்துழைக்கவில்லை.



இத்தனை நாள் தான் பூண்டிருந்த தனிமைத் தவம், நிறைவடையப் போவதை எண்ணி தன் கண்களிலும், நெஞ்சிலும் கந்தனைச் சுமந்தபடி மாட்டிறைச்சிக் கூடம் நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறாள் செகப்பி.



செகப்பி விரைவில் தன் கந்தனுடன் சேருவாள் என்று நம்புவோமாக!



தானே தேர்ந்துடுக்கும் வேளையில்

தனிமை இனிமையானது

தன் துணையின்றி தவிக்கும் வேளையில்

தனிமை கொடுமையானது



தனிமை மனிதர்களுக்கு மட்டுமா சொந்தம்?






 
Top