தனிமையைத் தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே...
-கனவு காதலி ருத்திதா
ஆம்.. தனிமை... எனக்கு விருப்பமானதொன்றும், உடன்பிறந்ததொன்றும், திணிக்கப்பட்டதொன்றும்.
கருவில் தருவிக்கப்பட்டதிலிருந்தே தரப்பட்டது தனிமை. கண்விழித்து பார்க்கும்முன்னரே இருட்டில் நான் உணர்ந்தது தனிமை.. தனிமை.. தனிமை...
தரப்பட்ட தனிமையை தனியே சீர்தூக்கி பார்க்க விழைகையில் உறியப்பட்டு செலுத்தப்பட்ட ஒரு உயிர்நீரில் நான் மட்டுமே கருவில் உருவானேன்... ஆம் அங்கேயே தனிமை என்னை தத்தெடுத்துகொண்டது போலும்.
பெற்றோர் யாரென தெரியவில்லை என்பதை விட கண்டுகொள்ளப்படவில்லை என்பதே உத்தமம்... இதனாலேயே நானும் என் போன்ற சிலரும் அந்த அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டோம்..
கருவிலிருந்தே தனிமையை ருசிக்க தொடங்கிய எனக்கு அது ஒரு வித்தியாசமானதொரு அனுபவம்... அங்கே பலர் இருந்தனர் என்னைப்போல... ஆயினும் அவர்களின் அவலக்குரலில் யாரைப்பற்றியும் அறிந்துகொள்ளும் அவா எனக்குள் தோன்றவில்லை...
நானும் என்போன்றோரும் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட, பலர் பரலோகம் சென்றுவிட நான் மட்டும் பிழைத்துக்கொண்டேன் போலும்.... இல்லையேல் தனிமையை தனியே தவிக்கவிட்டு இத்தரணியைவிட்டு தப்பிச்சென்றிருப்பேன்...
உயிர்பிழைத்த என்னை சுதந்திரவெளியில் வேலிக்குள் அடைத்தே காட்சிப்பொருளாக்கி விலைபேசப்பட்டேன்... விவரம் தெரிந்த நாளில் நான் ஒரு வீட்டில் கொண்டு விடப்பட்டேன்.
"அம்மா... இவனை எனக்கு பிடிச்சிருக்குது... இவனை இங்கேயே வச்சிக்கலாம்..." என அந்த வீட்டெஜமானியின் மகள் எனக்காக பரிந்து பேசுகையில் ஏனோ எனக்கு அவளை பிடித்துப்போனது...
"ச்சை... கருமம்... என்னத்த போட்டு..." என வீட்டெஜமானி முகத்தை சுழிக்க, எனக்காக அவள் பரிந்து பேசுவாள் என அவள் முகம் நோக்கினேன்..
"அவதான் ஆசைப்படுறால்ல... இருக்கட்டும்..." என அவளது சகோதரனும் சேர்ந்துகொள்ள எனக்கு அவனையும் சற்றே பிடித்துப்போனது... (இவள் அளவுக்கு அல்ல...)
"இனி எனக்கு தனிமை இல்லை..." என மார்தட்டிக்கொண்டிருக்கையில் தான் அந்த வீட்டில் அவளை பார்த்தேன். அவளும் என்னை போன்றவள் தான். சில வாரங்களுக்கு மட்டுமே என குத்தகை எடுக்கப்பட்டிருக்கும் ஈனபிறவி.
கண்டதும் காதல்... காதலிப்பதற்கு அரசனாய் இருந்தால் என்ன அடிமையாய் இருந்தால் என்ன? காதல்.. அது வந்தேதான் விட்டது... அடிமையாய் இருந்துகொண்டு அரசியை காதலித்தால் தானே தவறு... அவள் அரசியாய் இருந்தால் நானவள் அரசனாகிவிட்டுப்போகிறேன்.. அவள் அடிமையாய் இருந்தால் நானவள் அடிமையாகிவிட்டுப்போகிறேன்.. காதலென்று வந்த பிற்பாடு பிரிவினைகளுக்கு இடமேது?
அவள் பளீச்சென்ற நிறமுடையவள் அல்ல, சற்றே மழுங்கிய நிறமுடையவள் தான். ஆனால் என்னை விட சுறுசுறுப்பானவள். புதிதாக வந்த போது சிறு சத்ததிற்கு கூட நான் பயந்து நடுங்கும் வேளையில் அவள் தான் தைரியமாக வெளியே அடியெடுத்து வைத்தாள்.
ஆரம்பத்தில் நான் சற்று சோர்வாக காணப்பட்டாலும் அந்த வீட்டில் சகஜமாக பழக அவள் தான் எனக்கு தைரியமூட்டி ஆறுதல் அளித்தாள்.
ஆம் அவளது வரவால் என் தனிமை தூள்தூளானது... இணையாய் என் உயிர்த்துணையாய் உயிர்போகும் வரை வருவாள் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்தேன்....
காலம் செல்ல செல்ல.... எங்கள் இருவருக்கும் குத்தகைக்காலம் நீண்டு கொண்டே போனது. எப்போது தப்பித்துச்செல்வோம் என்றெண்ணிய எனக்கு நிரந்தரமாக இங்கேயே தங்கிவிடக்கூடாதா என அல்பமானதொரு ஆசை துளிர்த்தது...
குத்தகைக்காலம் காலம் நீளநீள எனக்கு அவள்மேல் இருந்த ஈர்ப்பு காதலாய் உருவெடுத்தது...
நாளுக்குநாள் நானும் அந்த வீட்டினருடன் வாழப்பழகி கொண்டேன். அவளுடனே நடக்க தொடங்கினேன். நான் இல்லாமல் அவள் எங்கு வேண்டுமானாலும் செல்வாள். அவ்வவ்போது என் தைரியத்தை வளர்க்கும் பொருட்டு என்னை வேண்டுமென்றே தனியாக விட்டு செல்வாள். ஆனால் நான் தான் காந்தத்தை ஒட்டிக்கொள்ளும் இரும்பைப்போல ஒட்டியே நிற்பேன்.
எந்த அளவிற்கு என்றால் என் தேகநிறம் அவளது பட்டுவண்ண தேகத்தில் ஆங்காங்கே நிரந்தரமாக ஒட்டியிருக்கும் அளவிற்கு. அதற்கு அவள் என்றுமே தடை விதித்ததில்லை. ஏனென்று நானும் வினவவில்லை.. அவளும் விளக்கவில்லை...
அவளும் என்னை காதலித்தாள். ஆனால் சொல்லிக்கொள்ளவில்லை. கண்களால் காதலை கடத்தியபின்னர் இதழ்களால் உரைப்பதற்கென்ன அவசியம்?
அவளிடம் வம்பு செய்யும் பொருட்டு அவள் எடுத்து வந்த உணவை நானே தின்று தீர்ப்பேன்... சில வேளைகளில் உண்ணாமல் அடம்செய்வேன்...
அவளும் என்னிடம் ஏமாந்து போவதாய் நடிப்பு காட்டி விட்டு கொஞ்சமாய் சாப்பிடுவாள். எனக்கு வெயிலில் படுத்து சூரியக்கதிர்களை வாங்குவது பிடிக்கும் என்பதால்தான் யாருமில்லா நேரங்களில் நீட்டிப்படுத்துக் கொள்வேன். என் பாதுகாப்பு கருதி என்னை சுற்றி சுற்றி வருவாள்.
ஆணாக இருந்து கொண்டு அடிப்படை தேவைகளுக்காக பெண்ணை சார்ந்திருக்கிறேன் என்று என்னை ஏளனமாக நினைத்து சிரித்தால் அது உங்கள் முட்டாள்தனம். என்னவளிடம் தேவைக்காக ஏங்கி நிற்பது கூட சுகம் தானே... நான் அதை ரசிக்கிறேன்... நீங்கள் அவமானமாய் நினைக்கிறீர்கள்.
அன்று தொடர்ந்த விடுமுறை நாள்... வீட்டில் உள்ளவர்கள் எங்களை நாள் முழுவதும் தனியாக இருக்க அனுமதித்தனர். எங்களது பணிகளை விடுத்து ஓடி விளையாடுவது, அசுத்தம் செய்வது என்று இல்லாத ரகளைகளை செய்து கொண்டு சுற்றி திரிந்தோம் அந்த கொடிய நாழிகை வரும்வரை...
அந்த கோர நொடி... என்னவளை என்னிடமிருந்து பிரித்தெடுத்து மீண்டும் தனிமையையே நிரந்தரமாய் தரப்போகும் அந்த நொடி.... அது வந்தே தான் விட்டது...
என்னிடம் முக்கியமான மற்றும் வருங்கால வாழ்வை பற்றிய விஷயம் கூற வேண்டும் என்றும் அவளை துரத்தி பிடித்து நான் வெற்றி பெற்றால் மட்டுமே கூறுவேன் என்று நிபந்தனை போட்டாள் என்னவள்...
நானும் ஒப்புக்கொண்டேன்... அவள் எனக்கு பாசாங்கு காட்டி ஓடிக்கொண்டிருக்கிறாள். இதோ இன்னும் சில நிமிடங்களில் அவளை நெருங்கி விடுவேன்...
என்னவளை கட்டியணைத்து காதல் சொரிந்து காலமெல்லாம் கண்ணுக்குள் வைத்து பார்த்திருக்க எண்ணி நெருங்கிய அந்த நொடியில் கண்ணிமைக்கும் நேரத்தில் என்னவளை கவ்வி சென்றது அந்த கோர உருவம்...
சாதாரணமாக யாரிடமும் மாட்டாமல் அலேக்காக தப்பிக்கும் அவள் இன்று தப்பித்துக்கொள்ள இயலாது தவித்தாள். அதே வேகத்தில் என் கண்ணில் இருந்து மறைந்துவிட என்னால் கூடிய மட்டும் சத்தமிட்டேன்.
என் சத்ததினால் வெளியே வந்தவர்கள் அந்த கோர உருவத்திடம் இருந்து என்னவளை மீட்டுவந்தனர்... இதுவரை அவளின்றி அணுவும் அசையாதிருந்த நான் இன்று ஏதோ ஒரு தைரியத்தில் வீட்டை விட்டு வெளியே வந்து நிற்கிறேன் என்னவளை காண..... அவள் தோய்ந்த விழிகளுடன் பேச திராணியில்லாமல் என்முகம் நோக்கினாள்
அவள் விழிகள் உரைத்தது தேக்கியிருந்த காதலையும், தேகரணத்தின் வேதனையையும்...
அதற்கு மேல் அவளை அந்நிலையில் பார்க்க என்னால் இயலவில்லை... நிலைகுலைந்த நிலையில் நின்ற இடத்திலேயே நின்றேன். பின் என் இருப்பிடத்தில் என்னை விட்டுவிட்டு அவளுக்கு சிகிச்சையளிக்க முனைந்தனர்...
பின் என் சத்தத்தை கேட்டு அவள் எழுவாள் என்ற நம்பிக்கையில் அவள் அருகில் கொண்டு விட்டனர். நான் பார்க்க கூடாது என்று இருவருக்கும் இடையே திரையொன்று வைத்து என்னைமட்டும் பேசப் பணித்தனர்...
என் எஜமானியாலேயே அவளை பார்க்க முடியாமல் உடைந்து போயிக்க நான் எப்படி இருப்பேன். முடிந்த மட்டும் கதறினேன். என்னோடு வந்து விடுமாறு அழுதேன். கடைசியாக ஒரே ஒரு முறை அவளை பார்க்க காயத்தை கைகளால் மறைத்து தூங்குவது போல பாவனை செய்தாள்.
அவள் குடல் வெளியே வந்திருந்ததாம். அந்த நிலைமையில் கூட அவள் நம்பிக்கை இழக்காமல் தலைதூக்கி நின்றாளாம். ஒருநாள் முழுவதும் அவளை காப்பாற்ற முயற்சி செய்து தோற்று விட்டனராம்... இதுவும் அவர்கள் பேசும் போது கேட்டது தான்.
இன்று அவள் இவ்வுலகில் இல்லை. அவள் இல்லாத இருப்பிடம் பிடிக்கவில்லை. பித்து பிடித்தவன் போல மதிலை உடைக்க முயற்சிக்கிறேன். அவள் இல்லாத இடத்தில் நடமாட கூட முடியவில்லை.
என் எஜமானி என்னை தனிமையை உணரவிடாமல் அவரது கொலுசு சத்ததினால் என்னை திசை திருப்ப முயற்சி செய்கிறார். அது அவளுடைய இடத்தை பதிலீடு செய்யும் என நம்புகிறார்.
நானும் அவரது நம்பிக்கையை உடைக்க விரும்பாது நடிக்க கற்றுக்கொண்டேன். என்றாவது ஒருநாள் என்னவள் என்னைத்தேடி வருவாள். எனக்காக உணவு சேமித்து தருவாள். என் சூரியக்குளியலுக்கு பாதுகாப்பு தருவாள். என்னோடு சேர்ந்து அசுத்தம் செய்து சேட்டைகளை பெருக்க வருவாள் என்ற நம்பிக்கையோடு நான்...
மீண்டும் தனிமையே தவம்புரிந்தென்னை தத்தெடுத்துக்கொண்டது போலும்...
ஆம்.. தனிமை... எனக்கு விருப்பமானதொன்றும், உடன்பிறந்ததொன்றும், திணிக்கப்பட்டதொன்றும்.
இப்படிக்கு...
இளஞ்சிவப்பு நிறக் கோழிக்குஞ்சு....
என்னவள்: ஆரஞ்சு நிறக் கோழிக்குஞ்சு
கோர உருவம்: மனிதர்கள் பூனை என்று அழைப்பர்.
தனிமை... தனிமை... தனிமை... தனிமையைத் தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே...