தனிமை - கமலி ஐயப்பா
"அப்பா! இந்தச் சிங்கம் தூங்குது. வேற சிங்கம் கிட்ட கூட்டிட்டுப் போங்க!" என்று அந்த உயிரியல் பூங்காவில் சிங்கம் அடைத்துவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் நின்று, தன் தந்தைக்கு ஒரு சிறுமி கட்டளையிட்டுக்கொண்டிருக்க, "இங்க இந்த ஒரு சிங்கம் தான் இருக்கு பாப்பா" என்றார் அந்தத் தந்தை.
"அப்போ இந்தச் சிங்கத்தை எழுப்பு. இந்தச் சிங்கம் தாடி எல்லாம் நிறைய வச்சிக்கிட்டு நம்ப லயன் கிங்ல வர முஃபாஸா மாதிரி இருக்குல்ல" என்று சொல்லிக்கொண்டே, கம்பியைப் பிடித்துக்கொண்டு, "ஹேய் முஃபாஸா. எனக்கு உர்.. உர் சவுண்ட் பண்ணிக்காட்டு. ஹேய் என்ன பண்ண மாட்ற? நீ லயன்கிங் தான. இது கூடப் பண்ண முடியாதா? " என்று அந்தச் சிறுமி கேட்டுக்கொண்டிருக்க, அந்தச் சத்தம் கேட்டு எழுந்தது அங்குக் காட்சிப்பொருளாய் வைக்கப்பட்டிருந்த சிங்கம்.
பார்வையாளர்களுக்கும், சிங்கத்துக்கும் நடுவில் செங்குத்தான பெரிய பள்ளம் ஒன்றிருக்க, அப்பள்ளத்தின் விளிம்பில் நின்ற சிங்கம் கரஜித்தது. அந்த ஒலியில் பயந்து நடுங்கி, தன் தந்தையின் கால்களை இறுக கட்டிக்கொண்டு, "நீ முஃபாஸா இல்ல. நீ அந்தக் கெட்ட ஸ்கார்" என்று திட்டிக்கொண்டே, அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.
"சும்மா மூச்சு விட்டதுக்கே பயந்துடுச்சு இந்த மனுஷக்குட்டி. சுத்து வட்டாரம் ஆறு கிலோமீட்டர்க்கு கேட்குற மாதிரி நான் கர்ஜிக்கறதை கேட்டா என்ன ஆகுமோ?" என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு, மீ்ண்டும் தான் முன்பு படுத்திருந்த இடத்திலே வந்து படுத்துக்கொண்டது.
மீண்டும் அந்தச் சிங்கம் கண் மூடப்பார்க்க, பறந்து வந்து ஒரு பிளாஸ்டிக் கப் அதன் அருகே விழ, "இதெல்லாம் எப்பவும் நடக்குறது தான். நடுவுல இருக்குற அந்தப் பள்ளம், என்கிட்ட இருந்து அவங்கள காப்பாற்றவா? இல்லை அவங்க தொல்லையிலிருந்து நான் கொஞ்சம் தள்ளி இருக்கவான்னு தெரியல!
அப்புறம் அந்த மனுஷக்குட்டி ஏதேதோ பேர் சொல்லுச்சே, அதெல்லாம் இல்லை. என் பேர் 'ஆளி'. ஆனா இங்க வர யாரும் அதை என்கிட்ட கேட்குறதே இல்லை. அவங்க இஷ்டத்துக்கு பெயர் வச்சுப்பாங்க. நேத்து கூட ஒரு மூதேவி, ‘நீ துரைசிங்கமா இல்ல குணசிங்கமா!’ன்னு கேட்டுட்டுப்போனான். இங்க வந்த தொடக்கத்துல இது மாதிரி ஆளையெல்லாம் பார்த்து உறுமியதுண்டு. ஆனா இப்போதெல்லாம் இது மாதிரி முட்டாள்களைக் கண்டுக்கறதில்லை".
"என்னடா இவன் தனியா பேசிட்டு இருக்கான்னு யோசிக்கறீங்களா? இங்க வந்து பத்து வருஷமா தனியா தான் பேசிட்டு இருக்கேன். எனக்குத் தான் பேச்சு துணைக்குக் கூட இங்க ஆள் இல்லையே. இதோ பக்கத்துக் குகைல என் பங்காளி புலி இருக்கான். அவன் இங்க இருந்தாலாவது பேச்சு துணையா இருக்கும். அவனையும் தனியா அடைத்து வச்சிட்டாங்க இந்த மனுஷப்பயலுக.
ஆனா என் பங்காளக்கு தனியா இருக்கறது அவ்வளவு கஷ்டமாயிருக்காது. ஏன்னா அவன் காட்டுக்குள்ளேயே தனியா தான் சுத்துவான். ஆனா நான் தான் பெரிய கூட்டுக்குடும்பத்துல வாழ்ந்துட்டு, இவனுங்க கிட்ட மாட்டிக் கஷ்டப்படுறேன்.
ஆமாம். எங்க குடும்பம் கூட்டுக்குடும்பம். நான், எனக்கு ராணியா 5 பெண் சிங்கங்க, அப்புறம் என் சிங்கக்குட்டிங்க பத்துப்பேர்'ன்னு பெரிய ஜனகட்டோட வாழ்ந்த எனக்கு இங்க தனியா இருக்கறது கஷ்டம் தான்" என்று ஆளி தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருக்க, அதற்குத் தடையாய் அமைந்தது, "பார்த்தியாடி. எப்படி கெத்தா இருக்கு. ஆம்பள சிங்கம்டி" என்று பார்க்க வந்த எவனோ தன் காதலியிடம் சொல்லிக்கொண்டிருக்க, "மூடுடா. ஆம்பள சிங்கம் பார்க்கத் தான் கெத்து. ஆனா, பெண் சிங்கம் தான் வேட்டையாடிச் சாப்பாடு கொண்டு வரும், குட்டிய பார்த்துக்கும். இந்த ஆண்சிங்கம் எல்லாம் பெண்சிங்கம் கொண்டு வர்ற சாப்பாட்டை தின்னுட்டு உக்கார்ந்திருக்க தான் லாயக்கு" என்று காதலனை திட்டுவது போல் ஆண் சிங்க இனத்தையும் சேர்த்து திட்டிக்கொண்டிருக்க, அதை எண்ணி சிரித்துக்கொண்டது ஆளி.
"அட கிறுக்குப்பயபுள்ள. முழுசா தெரியாம பேசுது பாத்தியா. இந்த மனுஷப்பயலுகளே இப்படித்தான்.
பெண் சிங்கம் வேட்டையாடிப் பார்த்திருக்க சரி. ஆனா, பெண் சிங்கத்தால அந்த இரையை ஜெயிக்கமுடியலைன்னா ஆண்சிங்கத்தை கூப்பிடறதை பார்த்ததில்லையா? அதில்லாம ஒரு குடும்பத்தில் இருக்க பெண் சிங்கம் எல்லாம் சேர்ந்து தான் வேட்டையாடும். அவங்க எல்லோரும் சேர்ந்து கொல்ல முடியாம போனா ஆண்சிங்கத்தை கூப்பிடுவாங்க. அந்த ஆண்சிங்கம் தனி ஆளா நின்னு வெறித்தனமா வேட்டையாடும். வேட்டையாடத் தெரியாம இல்லை. புள்ளைப்பூச்சி கிட்டயெல்லாம் வீரத்தை காட்ட கூடாதுன்னு தான் இருக்கோம்" என்று வீரமாய் கர்ஜித்தது ஆளி.
அந்தக் காதலனோ, "அதில்ல பேபி. பிடரி எல்லாம் வச்சிட்டு, பார்க்கச் செமயா இருக்குன்னு சொன்னேன். வேற ஒன்னுமில்லை" என்று காதலியைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட, "பிடரியா? பார்க்க நல்லா தான் இருக்கும். இதை பார்த்துத் தான என் ராணிங்க எல்லாம் மயங்குனதே!" என்று பெருமிதம் கொண்டு, பிடரிமுடியை தடவிக்கொண்டது.
அந்த நேரம் அந்த உயிரியல் பூங்கா ஊழியர்கள் ஆளி'க்கான இன்றைய உணவோடு வர, "வந்துட்டாய்ங்கயா" என்று அவர்கள் வீசிப்போன உணவுக்கு அருகில் சென்றது. இரண்டு மூன்று கறித்துண்டுகள் கிடக்க, "ப்ச்! இன்னைக்கும் பழைய கறி. ஆமா, தினம் இப்படி தான், ஐஸ்ல வச்ச பழைய கறித்துண்டு போடுவாய்ங்க. அது அரைவயிறு கூட நிரம்பாது. எப்போவாது ஒரு தடவை தான் வயிறு நிரம்பற மாதிரி முழு மிருகம் போடுவாங்க. அதுவும் ஃபிரெஷ்ஷா இருக்காது. என்னைக்கோ செத்த மிருகத்தைக் கொண்டு வந்து போடுவாங்க போல.
இருந்தாலும் பசியில முழுசா சாப்பிடுவேன். எலும்புல ஒட்டியிருக்க மாமிசத்தை கூட விடாம. அதைப் பார்த்து இந்த உயிரியல் பூங்காவில் வேலை செய்யுற ஒருத்தன், 'சிங்கத்துக்குச் சந்தோசத்தை பார்த்தியா! எப்படி மிச்சம் விடாம சாப்பிடுது பாரு'ன்னு சொல்லிட்டு போவான்.
அடப்பாவி. சந்தோசமா சாப்பிடறதுக்கும், வேற வழி இல்லாம பசியில சாப்பிடறதுக்கும் வித்தியாசம் தெரியாத மனுஷனாடா நீயின்னு நெனச்சிக்குவோம். எங்க வேட்டை பழக்கம் பத்தி என்னடா தெரியும் உங்களுக்கு? பசிச்சா மட்டுமே வேட்டையாடி அன்றைக்கு வேட்டையாடிய உணவை அன்றைக்கே சாப்பிடுற வகையறாடா நாங்க. ரத்தம் சொட்ட சொட்ட புது மாமிசம் சாப்பிடுறவங்க. பசி எடுக்கலைன்னா பல நாட்கள் வேட்டையாடாம கூட இருப்போம்.
அதுவும் இல்லாம, காட்டுக்கு ராஜாடா நாங்க. நாங்க வேட்டையாடுன உணவா இருந்தாலும், அதை முழுசா சாப்பிட மாட்டோம். முக்கியமா எலும்புல ஒட்டியிருக்க சதையெல்லாம் அப்படியே மத்த மிருகங்க சாப்பிடட்டும்ன்னு விட்டுட்டு வர ராஜபரம்பரைடா நாங்க.
எங்களையும் இப்படி அடச்சி வச்சி, பழைய கறி போட்டு, உங்கள மாதிரியே பசிக்காட்டியும் தினம் சாப்பிட பழகவச்சிட்டீங்களே, அது கூடப் பரவாயில்ல டா. முழுசா சாப்பிடாம மத்த மிருகங்களுக்கு மீதி வச்சிட்டு போற எங்களை, இப்படி எலும்புல ஒட்டியிருக்கறத கூட விடாம சாப்பிடவச்சி, எங்க உணவு பழக்கத்தையே மாத்தி, அதுக்கு சந்தோசமா சாப்பிடறதுன்னு பேர் வேற வச்சிக்கறீங்க பாருங்க. அதைத் தான் டா ஏத்துக்கவே முடியல.
இது மாதிரி ஃபிரெஷ் மாமிசம் கிடைக்காம நான் ஏங்கிட்டு இருக்க, ஒரு நாள் ஒரு மான் ஆர்வக்கோளாறுல இந்தப் பக்கம் வந்துடுச்சு. இன்னைக்கு நமக்கு விருந்து தான்டான்னு நானும் அந்த மானைத் துறத்திட்டு ஓடுனேன். இங்க வேடிக்கைப் பார்க்க வந்த அம்புட்டு பயலும், 'கடவுளே! அந்த மானை எப்படியாவது அந்தக் கொடூர சிங்கத்துக்கிட்டயிருந்து காப்பாத்துப்பா'ன்னு வேண்டிக்க ஆரம்பிச்சிட்டானுங்க.
எனக்குச் சிரிப்பு தான் வந்துச்சு. ஒரு மிருகத்தை இன்னொரு மிருகம் கொன்னு சாப்பிடற மாதிரி படைச்ச கடவுள் கிட்ட அந்த மானைக் காப்பாத்துன்னு கருணை எதிர் பாக்குறாங்க. அன்னைக்கு ஏதோ அந்த மானுக்கு நல்ல காலம். இந்த ஜூ’காரங்க வந்து காப்பாத்திட்டாங்க. வேடிக்கை பார்த்த மனுஷங்களோட பார்வையில், மத்த மிருகங்களைக் கொன்னு சாப்பிட்டு உயிர் வாழுற மாதிரி எங்களைப் படைத்த கடவுள், கருணையின் உருவம். ஆனா, அவர் அப்படி படைத்தக் காரணத்தால், மற்ற உயிரைக் கொல்லுற நாங்க கொடூரத்தின் உருவம்.
அதையும் சொல்றது யாரு பாருங்க. சைவ உணவைச் சாப்பிட முடிந்தும், கறிக்கடை வாசலில் லைன் கட்டி நிற்கும் இந்த மனுஷங்க. இந்தக் கொடுமையை நான் எங்க போய்ச் சொல்றது" என்று நினைவுகளை ஓடவிட்டவாறே உணவை உட்கொண்ட ஆளி, எழுந்து இரண்டு நடை நடந்தது.
"தன்னோட ராஜ்ஜியத்தை வரையறுத்து, அதைத் தினமும் சுத்திப் பார்த்து, வேற குடும்பத்து சிங்கம் நுழையாம பார்த்துக்கறது தான்டா ஒரு ஆண் சிங்கத்தோட முதல் கடமையே. பாதி காட்டை என் ஆளுமையின் கீழ் வைத்து, தினமும் ராஜ்ஜியம் முழுக்க சுத்தி திரிந்தவன்டா நானு. என்னை இப்படி சின்ன இடத்துக்குள்ள அடைத்து வாக்கிங் போக வச்சிட்டீங்களே டா.
ஆனா, இது கூடப் பரவாயில்லன்னு தோன்ற வைப்பது, என்னோட தாத்தா எனக்குச் சொன்ன சர்க்கஸ் கதை. இங்கேயாவது கொஞ்சம் உலாவிவிட்டு வர அளவுக்கு இடம் இருக்கு. நான் பிறப்பதற்கு முன்ன, எங்க முன்னோர் ஒருத்தரை சர்க்கஸ்காரங்க பிடிச்சிட்டு போனார்களாம். அங்க ஒரு சின்னக் கூண்டுல தான் அடைத்து வைப்பார்களாம். நாலு அடியெடுத்து வைக்கற அளவுக்குக் கூட இடம் இருக்காதாம். அதுக்கும் மேல, நெருப்பு வளையத்துக்குள்ள புகுந்து போகுற கொடுமையையெல்லாம் செய்யச் சொல்லி, மனுஷங்க இந்தக் கொடுமையை எல்லாம் வேடிக்கை பார்த்து கைத்தட்டுவாங்களாம். அதுக்கு இதுவே பரவாயில்லைல" என்று மீண்டும் ஓரிடத்தில் படுத்தது ஆளி.
"என்னோட பாதி வாழ்நாள் இங்கேயே போய்டுச்சு. மீதியிருக்கும் கொஞ்ச காலமும் இப்படியே போய்டும். அடுத்த ஜென்மத்திலும் இதே மாதிரி சிங்கமா தான் பிறக்கணும்.
ஆனா, இப்படியே இல்லை.
ஒன்னு, எங்களை மாதிரி மிருகங்களை எங்க குடும்பத்துக் கிட்ட இருந்து பிரிச்சி, காட்சிசாலைகளில் அடைத்து, குடும்பம் குடும்பமா வந்து வேடிக்கை பார்க்கும் இந்த மனிதர்களுக்கு,
வாழ்நாளில் பாதி, தன் இனத்தைச் சேர்ந்த ஒரு முகத்தை கூடப் பார்க்காம, தான் பேசுவதை புரிந்துகொள்ளும் ஒருவர் கூடச் சுற்றி இல்லாத
இந்தத் தனிமை எவ்வளவு கொடுமை'ன்னு புரிய வைக்கும் வல்லமையோடு பிறக்கணும்.
இல்லைனா, ஒரு காலத்துல கூட்டு குடும்பமா வாழ்ந்து, இப்போ அந்தக் கூட்டை உடைத்து தனியா வந்து, அதுக்கு நாகரீகம், ப்ரைவசி’ன்னு அந்தத் தனிமைக்கு அழகா பெயர் சூட்டி ஏற்றுக்கொண்ட இந்த ஆறறிவு ஜீவன்களோட இந்த பண்பைக் கொண்டு பிறக்கணும்" என்று எண்ணிக்கொண்டே உறங்கியது ஆளி.