கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தலைமைச் செயலகம் 15

Akhilanda bharati

Moderator
Staff member
(இந்த அத்தியாயத்தில் நான் எழுதியிருக்கும் சம்பவங்களும் பெயர்களும் முழுக்க முழுக்க கற்பனையே. யாரையும் குறிப்பிடுவதோ வேறு எந்த உண்மை நிகழ்வுகளையும் பற்றியதோ இல்லை)


தலைமை 15

"இந்த விவகாரம் முதன்முதல்ல ஆரம்பிக்கும் போது கண்டிப்பா நமக்கு நிறைய தலைவலி இருக்கு அப்படின்னு தோணுச்சே ஒழிய, இந்த அளவுக்கு என்னோட வேலைக்கும் குடும்பத்தோட பாதுகாப்புக்கும் ஆபத்து வரும்னு நினைச்சுப் பார்க்கல. அரசுத் துறைல இருக்கும் பொழுது எத்தனையோ சிக்கல்கள் வர்றது சகஜம்தான் இல்லையா.. அதை மாதிரி ஒன்னுன்னு தான் இதையும் நினைச்சேன்" என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார் ஜனார்த்தனன்.

பிரகல்யாவும் குணாவும் அனுஸ்ரீயின் மனநிலைகள், அவளுக்கு வரும் கனவுகளை எடுத்துக் கூறி அவள் எழுதிய கதையின் பகுதிகளையும் காட்டிய பின், சிறுவர்கள் இவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்தோமே, தப்புக் கணக்கு போட்டு விட்டேன் இவர்கள் நிறைய தெரிந்து வைத்திருக்கிறார்கள் புதிது புதிதாய் யோசிக்கிறார்கள் என்று பெருமையாக இருந்தது ஜனார்த்தனனுக்கு.

"அனுஸ்ரீயும் வந்துடட்டுமா.. அவளுக்கும் சேர்த்து ஒரே தடவையா சொல்லிடலாம்" என்று காசிராஜன் கேட்க,

"இல்ல அங்கிள்! அதில் இன்னொரு சின்ன சட்டச் சிக்கல் இருக்கு" என்றாள் பிரகல்யா சிரிப்புடன்.

"சட்டச் சிக்கலா?"

"அனுவுக்கு பழைய நினைவுகள், ஆழ்மனசுல இருக்குற சம்பவங்கள் காரணமா கனவு வருதுன்னு தெரிஞ்சுகிட்டு அன்னைக்கு நாங்க அவளுக்கு தெரியாம ஒரு குட்டி பிளான் பண்ணினோம். சில விஷயங்களை அவளுக்கு திருப்பியும் ஞாபகப் படுத்தினா கனவு வருதான்னு டெஸ்ட் பண்ணினோம். நான் எதிர்பார்த்த மாதிரியே கனவு வந்துச்சு" என்று பொதுவாகச் சொன்ன குணா, ஜனார்த்தனன் புறம் திரும்பி,

"அங்கிள்! சாரி இப்படி மேனிபுலேட் (manipulate) பண்ற மாதிரி நடந்துக்கிட்டதுக்கு‌. இப்படி கனவு வர்ற மாதிரி பேசி தூண்டலாமா, அது அவளுடைய மனசை பாதிக்குமான்னு ஒரு சைக்காலஜிஸ்ட் ஃப்ரண்டு கிட்ட கேட்டேன். அதெல்லாம் ஒன்னும் இல்ல, கனவுகள் வருவது பலவிதத்தில் ஒரு லெட் அவுட் (let out) ஆகத் தான் இருக்கும்னு அவர் சொன்னப் பிறகுதான் அந்த பிளான் போட்டோம்" என்றவன் தங்கள் மலைக்கோயில் சுற்றுலா பற்றி சுருக்கமாகச் சொன்னான். பின்,

"அன்னிக்கு வந்த கனவு தான் இப்ப அனு கடைசியா எழுதின பகுதி. சில விஷயங்கள் லேசுபாசா தெரிந்ததை வச்சுத் தான் அவளுக்குப் பெரிய கதை மாதிரி கனவு வருது. நடந்ததை முழுக்க அவளுக்கு சொல்லி முடிச்சிட்டோம்னா அப்புறம் அவளுக்குக் கனவு வராது. என்னோட அடிப்படை எண்ணமே என்னன்னா இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடுறதுக்கு கனவு மூலமா ஏதாவது தீர்வு அவ சொல்லுவா. அதனால நாம மட்டும் பேசலாமே அங்கிள்.. அப்புறம் அதுல சில விஷயங்கள் மட்டும் அவகிட்ட சொல்லலாம்" என்றான் குணா.

சரியென்றே பட்டது காசிராஜனுக்கும் ஜனார்த்தனனுக்கும். ஜனார்த்தனன் தொடர்ந்தார்.

"நம்ம முன்னாள் முதல்வர் வெங்கடாஜலபதி சார் நிஜமாவே அப்பழுக்கு இல்லாத நேர்மையான அரசியல்வாதி. இந்தக் காலத்தில் இப்படி ஒரு அரசியல்வாதியாக பார்க்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். அவருடைய மரணம் நாட்டுக்கு ஒரு பெரிய இழப்புன்னா தனிப்பட்ட முறையில் எனக்கு பெரிய இடி. சமீப கால அரசியலை கவனிச்சுப் பாத்தீங்கன்னா மற்ற அரசியல்வாதிகள் மேல சொல்லப்படுற எந்த புகாரும் இவர் மேல சொல்ல முடியாது. மிஞ்சிப் போனா கோபப்பட்டார், எதிர்க் கட்சிக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் அப்படி வேணா ஏதாவது சம்பவம் நடந்திருக்கும். அதைப் பெருசாக்கி நியூஸ் போட்டிருப்பாங்க. இருந்தாலும் ஒரு கட்சியோட தலைவராகவும் ஒரு சில அட்ஜஸ்மென்ட்ஸ் பண்ணித் தானே ஆகணும். அதனால வேற வழி இல்லாம சில டெண்டர் கான்ட்ராக்ட் விஷயங்களில் மட்டும் கட்சிக்காரர்களுக்கு ஆதரவா நடந்தே ஆக வேண்டியிருக்கும். அவர் பண்ணின இன்னொரு தப்பு அறிவரசனை ரொம்ப ரொம்ப நம்பி அவரை ரைட் ஹாண்டா வச்சது. அறிவரசனுக்கு இப்ப மிஞ்சிப் போனா முப்பத்தொன்பது இல்ல நாப்பது வயசு தான் இருக்கும். ஆனால் அனுபவசாலிகளைத் தூக்கி சாப்பிடுற அளவுக்கு விவரம். ரொம்ப ரொம்ப ஸ்மார்ட்டான ஆளு. அவ்வளவு சுறுசுறுப்பு. எள்ளுங்குறதுக்கு முன்னாடி எண்ணையா நிப்பார். அவரையும் தன்னைப் போல நேர்மையானவர் அப்படின்னு சிஎம் நினைச்சிருந்தார். ஆனால் அது பசுத்தோல் போர்த்தின புலின்னு லேட்டா தான் புரிஞ்சுகிட்டார். அதுவும் அவரோட மரணப்படுக்கையில்" என கூறி நிறுத்தியவர் சற்று நேரம் அந்த சிந்தனைகளில் ஆழ்ந்தார்.

"அறிவரசன் முதல்வருக்குப் பக்கத்துல இருந்துகிட்டு அவர் சொல்றத அப்படியே கடைபிடிக்கிற மாதிரி நடந்துக்கிட்டு சைட்ல இல்லீகல் வேலை நிறைய பார்த்தாரு. சொல்லப் போனா மல்டிபிள் பர்சனாலிட்டி மாதிரி இரண்டு விதமான வாழ்க்கைன்னு கூட சொல்லலாம். ஒன்னு ரெண்டு விஷயத்துல அவரை கூப்பிட்டு முதல்வர் கண்டிச்சார். கருப்புப் பண விவகாரம், இல்லீகல் மைனிங், அது இதுன்னு ஏகப்பட்ட விஷயத்துல காலை வச்சிருந்த அறிவரசனுக்கு முதல்வருக்கு தெரிய ஆரம்பிச்சிருச்சு, இனிமே ஜாக்கிரதையா இருக்கணும், மாட்டிக்கக் கூடாதுன்னு ஒரு பதட்டம். அதனால முதல்வர் அடக்குறதுக்கு தனக்கு ஒரு டிரம்ப் கார்டு வேணும்னு சில மாதங்களாக ஒரு பெரிய திட்டத்தை நடத்தி முடிச்சார். அதுக்கு அவர் பயன்படுத்திக்கிட்டது முதல்வர் மனைவியோட, அதாவது அபிராமி மேடத்தோட கடவுள் பக்தி" என்று ஜனார்த்தனன் கூறியவுடன் பிரகல்யாவும் குணாவும் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டனர்.
அனுவின் கதையில் வந்த சிவகாமசுந்தரியும், அவருக்கும் அந்த ரயிலில் பயணம் செய்த மனிதருக்குமான அலைபேசி இணைப்புகளும் மனதில் வந்து போனது. அவளது அம்மா கோவிலுக்கு வா என்று சொல்லும் போதெல்லாம் அனு அடிக்கடி 'அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி திருக்கோவில் தெய்வங்கள் நீதானம்மா' என்ற பாடல் வரிகளை விளையாட்டாய் பாடுவாள்.

"அறிவரசன் பண்ணின எத்தனையோ இல்லீகல் ஆக்டிவிட்டீஸ்ல ஒன்னு தான் சிலைக் கடத்தல். அவர் நேரடியா ஈடுபடலைன்னாலும் அவருடைய ஆசீர்வாதத்தோடு தான் அது நடந்தது. விஜயகாந்த் ஒரு படத்துல முட்டைக் கணக்கு சொல்லுவாரே, சத்துணவுல கொடுக்கிற முட்டை விஷயத்துல எவ்வளவு ஊழல் நடக்குதுன்னு. அப்புறம் உடனே அந்த மினிஸ்டர் அந்த கான்ட்ராக்ட்டை என் சின்ன வீட்டுக்குக் கொடு அப்படின்னு சொல்வாரு. அதைத் தான் அறிவரசன் பண்ணினார். சிலைக் கடத்தல் வழக்குகள் சம்பந்தமான சில டீடெயில்ஸ் அவருக்கு வர, அட இதுக்கு வெளிநாட்டில் இவ்வளவு மார்க்கெட் இருக்கா, அப்ப தாராளமா பண்ணுங்க பாழடைஞ்ச கோவில்கள்லயும், மக்கள் இல்லாத ஊர்களையும் இருந்து இந்த சிலைகள் என்ன பண்ணப் போகுது.. எடுத்து வித்துருங்க அப்படின்னு சொன்னார். அப்ப ஒரே வாரத்தில் மூன்று கோயில்களில் சிலை காணாமப் போச்சு. நான் அப்ப பள்ளிக் கல்வித் துறையில் இருந்தேன். எனக்கு அடிஷனல் சார்ஜா இதையும் என்னென்னு பார்க்கச் சொல்லி சிஎம் ஸ்பெஷலா ஆர்டர் போட்டார். நான் உடனே அந்தக் கோவில்களுக்கு விசிட் பண்ணி, சிலைக் கடத்தல் சிறப்புப் போலீஸ் அதிகாரிகளுடன் பேசி ஃபாலோஅப் பண்ணிட்டு இருக்கும்போது அறிவரசன் தரப்பிலிருந்து எனக்கு மிரட்டல் வந்தது, இதைக் கண்டுக்காம விட்டுடச் சொல்லி. அப்பக் கூட அறிவரசனுக்கு இவ்வளவு டைரக்ட் கான்டாக்ட் இருக்கும்னு நான் யோசிக்கலை. எனக்குக் கிடைச்ச டீடைல்ஸ் எல்லாம் சிஎம் கிட்ட ஷேர் பண்ணப் போனேன். அப்ப அவங்களே எனக்கு ஒரு நம்பர்ல இருந்து சில ஃபோட்டோக்களை அனுப்பினாங்க. அது என்னன்னா, கடத்தப்பட்ட சிலைகள்ல ஒன்னை சி.எம்மோட மனைவி ஒரு தனி இடத்தில வச்சு பூஜை பண்ணிக்கிட்டு இருக்கிற ஃபோட்டோஸ் தான் அது. அப்புறம் தோண்டிப் பார்த்தப்பதான் தெரிஞ்சது, முதல்வருக்கு ஏதோ தீவிரமான வியாதி இருக்கிறதாவும், கூடவே ஜாதகரீதியா அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு ஆபத்து இருக்கிறதாகவும் அபிராமி மேடம் கிட்ட நம்ப வச்சிருக்காங்க. அதுவும் அவங்களுக்கு பழக்கமான சாமியார் ஒருத்தர் வச்சு. இந்த சிலையை நீங்க தனியா ஒரு இடத்துல வச்சு யாரு கண்ணிலையும் படாம 40 நாள் பூஜை பண்ணுங்க, சிஎம்க்கு குணமாயிடும். அப்புறம் அவர் இன்னும் முப்பது வருஷத்துக்கு உயிரோட இருப்பார். அடுத்த ஏழு வருஷத்துக்குள்ள நாட்டோட பிரதமர் இவர் தான். அப்படி இப்படின்னு கதை விட்டு நம்ப வச்சிருக்காங்க. அபிராமி மேடம் கண்மூடித்தனமா இதை நம்பிட்டு அந்த பூஜை பண்ணிட்டு இருந்திருக்காங்க. கடத்தப்பட்ட சிலைகள்ல ஒன்று சிஎம் கிட்ட தான் இருக்கு அப்படின்னு நாங்க நியூஸ் வெளிய விட்ருவோம் அப்படின்னு எனக்கு இன்டைரக்ட்டா வந்த மிரட்டல் தான் அது. இது எதையும் நான் சிஎம் காதுக்குக் கொண்டு போக கூடாது அப்படின்னு எனக்கு அனானிமஸ் ஃபோனும் வந்துச்சு. அடுத்த ஆறு மாசத்துல சட்டமன்றத் தேர்தல் வர்றதா இருந்துச்சு. அப்ப எனக்கு வெங்கடாஜலபதி சார் மேல அவ்வளவு அபிமானம்னாலும் அவர் கட்சி தோத்துப் போகணும்னு வேண்டிகிட்டேன். அப்பதான் நான் பல தர்மங்கடமான சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க முடியும்னு தோணுச்சு. இந்த மாதிரி கையாலாகாத சமயங்கள்ல எல்லா நேர்மையான அதிகாரிகளும் பண்றதை நானும் பண்ணினேன். அந்த சிலைக் கடத்தல் விஷயத்தை அப்படியே கிடப்பில் போட்டேன். என்னுடைய பள்ளிக்கல்வித்துறையை மட்டும் பார்த்துக்கிட்டு சிலைக் கடத்தல் பிரிவில கவனம் செலுத்துகிறதைக் குறைச்சிட்டேன். அறிவரசன் மேல இருந்த நம்பிக்கை போனதால என்னோட பள்ளி கல்வித்துறையிலும் அதுவரை நான் கவனிக்காத நிறைய விஷயங்கள் கண்ணுல பட்டுச்சு. பிரைவேட் ஸ்கூல்க்கு அனுமதி கொடுக்கிறதுல அவ்வளவு கோல்மால் நடந்திருக்கு. கிட்டத்தட்ட அந்த ஆட்சியை ஆரம்பிச்சதிலிருந்து நல்லா இயங்கிக்கிட்டு இருக்கிற அரசு பள்ளிகளை புகுந்து குழப்பம் பண்றதையே ஒரு ப்ராஜெக்டா ஒரு டீம் பண்ணி இருக்காங்க. சில ஸ்கூல்ஸை தேர்ந்தெடுத்து, அதுல காலியா இருக்கிற இடங்கள்ல எல்லாம் இவங்க சில ஆட்களை நியமிச்சு அந்த ஆட்கள் உள்ள போய் ஏரியாக்குத் தகுந்த மாதிரி ஒரு ஸ்கூல்ல ஜாதிப் பிரச்சனை, இன்னொரு ஸ்கூல்ல மதப் பிரச்சனை, இரண்டும் இல்லைன்னா பில்டிங் இடிஞ்சு‌ விழுறது அந்த மாதிரி நிறைய உள்ளடி வேலை பண்ணி நிறைய ஸ்கூல்ஸை மூட வச்சிருக்காங்க. சற்றே பெரிய கிராமங்கள்ல, டவுன்கள்ல நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் மாணவர் சேர்க்கையை அந்த மூணு வருஷத்துல ரொம்பவே குறைச்சுட்டு ஆட்சியோட நாலாவது வருஷத்துல அதே ஊர்கள்ல ஒரு பெரிய கார்ப்பரேட் போய் ஸ்கூல் திறக்குது. இந்த செயல்படுத்த‌ கையெழுத்து போடுறதுக்கு பல கோடி ரூபாய் கை மாறியிருக்கு. அறிவரசனுக்கு இட்டாலி பக்கம் ஒரு தனித்தீவு இதுக்காக பரிசா கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வந்துச்சு. வெறுத்துப் போயிட்டேன்"
என்றார் ஜனார்த்தனன். அவர் சொல்லச் சொல்ல புலனாய்வுப் பத்திரிகைகளில் படித்த சில செய்திகள் கண் முன் படமாக விரிந்தன குணாவுக்கு. நேரடியாக அருகிலிருந்து பார்த்த ஒரு நபரே இவ்வளவு சொல்லும் போது பிரம்மிப்பாக இருந்தது.

அடுத்து காசிராஜன் பேச ஆரம்பித்தார். "இந்த சமயத்தில் தான் அனுஸ்ரீ பாப்பாவுக்கு அடி பட்டது. நான் எதேச்சையா சாருக்கு கால் பண்ணும் போது அவர் அனுவுக்கு லேசா அடிபட்டு தையல் போட்டிருக்காங்க அப்படின்னு சொல்லி ஹாஸ்பிடல் பேரைச் சொன்னார். உடனே அங்கே போனேன். அப்போ சாரோட வைஃப் ஹாஸ்பிடல் வளாகத்தில் இருந்த கோயிலுக்கு போயிருந்தாங்க. அதனால நானும் சாரும் மனசு விட்டு சில விஷயங்களை பேசிக்க்கிட்டோம். அனுவோட ஆக்சிடென்ட்டுக்கே இந்த அறிவரசன் குரூப் எதுவும் காரணமா இருக்குமோ அப்படின்னு கூட எனக்கு சந்தேகம் இருக்குன்னு நான் சொன்னேன். அதெல்லாம் இல்ல பாப்பா தெரியாம தான் தவறி விழுந்திருக்கா. ஆனா அறிவரசன் குரூப் என்ன வேணா பண்ணக்கூடியவங்கதான் அப்படின்னு சார் சொல்ல, அப்படியே பேச்சு வளர்ந்து நாங்க சில விஷயங்களைப் பேசிக்கிட்டோம். அப்ப நான் சொன்ன ஐடியா தான் இது. அதாவது செக்ரட்டரியேட் உள்ளே ரெண்டு மூணு பேரை வேலைக்குப் போடுற மாதிரி போட்டு இந்த பைல்ஸ் எல்லாம் அவங்க கிட்ட கொடுத்து வெளியே லீக் பண்ண வச்சிடலாம். அது போக செக்ரட்டரியேட்லயே ஒரு ரூம்ல சில சர்ச்சைக்குரிய ஃபைல்ஸைப் பூட்டி வச்சிருக்கிறதாகவும் அதை அப்படியே மறைக்கிற விதமா அந்த ஏரியாவையே சுவர் கட்டி எழுப்பற பிளான் நடக்கிறதாவும் ரூமர் அடிபட்டுச்சு. அதையும் நான் சார் கிட்ட சொன்னேன். இதெல்லாம் தூங்கிகிட்டு இருந்த அனுஸ்ரீ காதுல விழுந்திருக்கும்னு நினைக்கிறேன்" என்றார் காசிராஜன்.

அப்போது குணா, "அங்கிள்! அனுஸ்ரீக்கு அப்ப எடுத்த ட்ரீட்மென்ட்டோட டிஸ்சார்ஜ் சம்மரியை பிரகல்யா எனக்கு ஃபோட்டோ எடுத்து அனுப்பி வச்சா. அதுல பாருங்க, propofol, fentanyl னு ரெண்டு மருந்துகளை வச்சு மைல்டா மயக்கம் கொடுத்து தையல் போட்டு, ஃப்ராக்சருக்கு மாவுக்கட்டுப் போட்டதா எழுதியிருக்காங்க. அந்த ஆனஸ்தீசியா எபெக்ட்ல இருந்து வெளியே வரும் பொழுது கனவும் நனவுமான ஒரு நிலை இருக்குமாம். அப்ப காதுல விழுற சில விஷயங்கள் மறுபடியும் அப்படி ஒரு கனவும் நினைவுமான நிலையில் ஞாபகம் வரலாம்னு கூகுள்ல படிச்சேன் அங்கிள். அதுதான் அனுவோட கனவுகளுக்குக் காரணம்" என்றான் குணா.

பெருமிதத்துடன் அவனைப் பார்த்தார் ஜனார்த்தனன். "என்ன ஒரு லாட்டரல் திங்க்கிங்! இந்த சிந்தனைகள் நாட்டுக்கு உபயோகப்படனும். ஐஏஎஸ் வேண்டாம். பல சமயங்களில் அரசியல்வாதிகள் ஆசைக்கு வளைஞ்சு குடுக்கணும். நீ அரசியல் சேர்ந்துடு. நேர்மையாகவும் இருந்தேன்னா நாட்டுக்கு ரொம்ப நல்லது"

கேட்டுக் கொண்டிருந்த பிரகல்யாவிற்கு ஒன்று தோன்றியது. "அங்கிள்! அனு எழுதுவதற்காக தலைமைச் செயலகம் கதையில இன்னொன்னு வருது கவனிச்சீங்களா? அதாவது கொரோனா டைம்ல இதே மாதிரி மறைவா ஒரு ஹாஸ்பிடல்ல ஒரு விங் (wing) இருந்ததாகவும் அதுல ஏதோ சீக்ரெட் வேலை நடந்ததாகவும், வினோதா அதில் போய் வேலை செஞ்சதாவும் எழுதியிருக்காளே? அது மாதிரி எதுவும் நிஜத்தில் நடந்துச்சா? அத பத்தியும் அன்னிக்கு பேசினீங்களா?"

"ஆமாம்மா முன்னாள் முதல்வர் வெங்கடாஜலபதி சாரோட மரணத்துல சில பக்கங்கள் இன்னும் மர்மமாவே தான் இருக்கு. அவர் இறந்து போனதும் அந்த ஹாஸ்பிடல்ல தான். நாங்க அனுவுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்ததும் அந்த ஹாஸ்பிடல்ல தான். ரொம்ப கரெக்டா என்ன பேசினோம்னு நினைவு இல்ல.. ஆனா காசிராஜன் செக்கரட்டரியேட்டில் மறைவா ஒரு பகுதி இருக்குன்னு சொன்னவுடனே, இந்த ஹாஸ்பிடல்லையும் அப்படி இருந்துச்சுன்னு நான் சொன்னேன். அங்கே கொரோனா டைம்ல இதே மாதிரி ஒரு ஹிட்டன் விங்ல சில அனுமதிக்கப்படாத சிகிச்சைகள் நடந்துக்கிட்டு இருந்துச்சு. உதாரணமா கோவிட் பேஷன்ட்ஸ் இருக்காங்க, யாரும் உள்ளே போகக் கூடாதுன்னு சொல்லிட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்துச்சு. பேசப் பேச வந்துகிட்டே இருக்கும்மா.. ஒண்ணைத் தொட்டு ஒண்ணு, அதைத் தொட்டு இன்னொண்ணுன்னு குற்றங்களுக்கு முடிவே இல்லாம நிறைய வரும்" என்று பெருமூச்சு விட்டபடி வருத்தத்துடன் கூறினார் ஜனார்த்தனன்.

"அந்த பீரியட்ல நடந்த ஸ்காண்டல்ஸ் எல்லாத்தையும் என்னன்னு குறிச்சு வைக்கிறதுக்காக நிறைய நியூஸ் படிச்சேன். இந்த கிட்னி மாத்தி ஆபரேஷன் பண்றதுக்காக வெயிட்டிங் லிஸ்ட் இருக்கும். ஆனா பணக்காரங்க அதை எல்லாம் மீறி முன்னாடி வந்துடுவாங்க, அந்த பீரியட்ல இந்தியா முழுக்க இருந்த பணக்காரர்கள் சென்னை வந்து ஆபரேஷன் பண்ணிக்கிட்டதா ஒரு நியூஸ் இருந்தது. அதுவா இது" என்றாள் பிரகல்யா.


"ம்.. ஆமா. அப்போ திருட்டுத்தனமா அப்படி நிறைய சர்ஜரிஸ் பண்ணி இருக்காங்க. அதுலயும் நிறைய காசு கை மாறியிருக்கு. அறிவரசன் அந்த ஹாஸ்பிடல் டைரக்டர்ஸ்ல ஒருத்தர் ஆயிட்டார்"

அதுவும் மிகப்பெரிய கார்ப்பரேட் மருத்துவச் சங்கிலி தான் .‌ அதிலுமா அறிவரசன் நுழைந்து விட்டான் என்று எரிச்சல் வந்தது பிரகல்யாவுக்கு.

"இவ்வளவும் பண்ணிட்டு இன்னும் நல்லவன்கிற இமேஜ் வச்சிருக்கானே சார்? அவன் தான் அடுத்த முதல்வர் வேட்பாளர்னு பேச்சு அடிபடுது. இவனைப் பத்தி ஒரு நியூஸும் வெளியே வரலயே" என்று குணா கேட்க,

"அதுக்குத் தான் தம்பி நாங்க தீவிரமா முயற்சி பண்றோம். ஆனால் எந்த விதத்திலயாவது லாக் பண்ணிடறாங்க. இப்ப காசிராஜன் ஃபேமிலிக்கும் ரெண்டு தடவை லேசா மிரட்டல் வந்திருக்கு. அவங்க வீட்டுக்கு முன்னாடி உள்ளேயும் போக முடியாதபடி பெரிய குழி தோண்டி வச்சிருக்காங்க. நாங்க என்ன வேணா செய்வோம் அப்படின்னு காட்டுறதுக்காக. இப்ப அடுத்த கட்சி ஆட்சிக்கு வந்திருச்சு. பழைய பிரச்சினைகளை கையில் எடுத்து விசாரிக்க ஆரம்பிச்சிருக்காங்க. இவங்களும் இவங்களுக்கு லாபம் எதுன்னு தான் யோசிக்கிறாங்க. இப்ப என்னை சஸ்பெண்ட் பண்ணி இருக்கிறது அந்த பிரைவேட் ஸ்கூல்ஸ்க்கு அனுமதி குடுத்த விவகாரத்தில் தான். அது பத்தி நான் நேரடியாகவே சில ரிப்போர்ட்டர்களை கூப்பிட்டு நியூஸ் குடுத்துட்டேன். அது தெரிஞ்சு சஸ்பென்ஷன் பண்ணியிருக்காங்க"

"இப்ப நிறைய அரசியல்வாதிகள் உங்க வீட்டுக்கு வரவும் போதுமா இருக்காங்களே? அது ஏன் அங்கிள்?" என்று பிரகல்யா கேட்க,

"இப்ப இருக்குற ஆளுங்கட்சியில இருந்து வந்து நாங்க உங்க சஸ்பென்ஷனை கிளியர் பண்ணி விட்டுடறோம், ஆனா நீங்க வாலண்டரி ரிட்டயர்மென்ட் வாங்கிகிட்டு எங்க கட்சியில் சேர்ந்திடுங்க. போன் ஆட்சியில் நடந்த ஊழல்களை எல்லாம் சொல்லுங்க, அடுத்த தடவையும் எங்க கட்சி தான் ஜெயிக்கணும்னு வந்து சொல்றாங்க. இன்னொரு பக்கம் சில உதிரிக் கட்சிகள் சேர்ந்துகிட்டு நாங்கல்லாம் தனி அணி அமைக்கப் போறோம், நீங்க அதுக்குத் தலைவரா இருக்க வர்றீங்களா அப்படின்னு கூப்பிடுறாங்க. இவங்க ரெண்டு பேரும் என்னை எதிர்பார்க்கிறதுக்குக் காரணம் ரெண்டு ஆட்சியோட நெகட்டிவ் பக்கங்களும் எனக்குத் தெரியும்னு தான்"

"அப்புறம் நீங்க நேர்மையானவருங்கற இமேஜ் இருக்கு அங்கிள்! அதனால உங்களை முதல்வர் வேட்பாளரா அறிவிச்சா அந்த மூன்றாவது அணி ஜெயிக்கக் கூட வாய்ப்பிருக்கு" என்றான் குணா.

ஜனார்த்தனனின் நீண்ட நாள் நண்பரான அரசியல் விமர்சகர் ஒருவரும் அவரைத் தொடர்பு கொண்டு இதே கருத்தைக் கூறியிருந்தார். "இனிமே உன்னை நிம்மதியா சர்வீஸ்ல இருக்க விட மாட்டாங்க, பேசாம ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்திடு" என்றார். அதே கருத்தை இவனும் சொல்கிறானே இந்த சின்ன வயதில் இவ்வளவு தொலைநோக்காக சிந்திக்கிறானே என்று நினைத்தார் ஜனார்த்தனன்.

இதற்குள் அவர்கள் வந்து வெகு நேரமாகி விட்டிருக்க அனுஸ்ரீயும் விழித்து விட்டாள். பிரகல்யா அனுப்பியிருந்த 'யுவர் ஃபாதர் அரைவ்ட். கோயிங் டு மீட் ஹிம்'' என்ற குறுந்தகவலைப் பார்த்துவிட்டு வேகமாகக் கிளம்பி தந்தையை சந்திப்பதற்காக வந்தாள்.

கனவுகள் பூக்கும்
❤️
 
Last edited:
Top