கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தலைமைச் செயலகம் 16

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 16

தன் நோட் பாடையும் பேனாவையும் எடுத்த குணா கடகடவென்று சிலவற்றை எழுதினான். "அனுஸ்ரீ முன்னாடி ஒரு தடவை சொல்லி இருக்கா அங்கிள்! ஏதோ பழைய ஃப்ரெண்டை சந்திக்கணும்னு ரொம்ப நாளா தோணுச்சாம். ஒரு நாள் ஒரு கல்யாண வீட்டுக்கு போனாளாம். அங்கே ரொம்ப நேரம் ஸ்பெண்ட் பண்ணிட்டு வந்தா அன்னைக்கு நைட்டு அவளோட பழைய ஃப்ரெண்டை அதே மாதிரி ஒரு கல்யாண வீட்ல சந்திக்கிற மாதிரி கனவு வந்துச்சாம். இன்னிக்கு ஒரு விளம்பரம் பாத்தேன். பக்கத்து காலேஜ்ல ஒரு ஃபங்க்ஷனுக்கு அறிவரசனை சீஃப் கெஸ்டா கூப்பிட்டிருக்காங்க.. அதனால நாம என்ன பண்ணுவோம், இந்த ஃபங்கஷனுக்கு வா, பாட்டு டான்ஸ் பாத்துட்டு வரலாம்னு சொல்லி அனுவைக் கூட்டிட்டு போயிருவோம். யாரு கண்டா.. அறிவரசன் வந்து கனவுல அவ பக்கத்திலேயே உட்கார்ந்து ஏதாவது தன்னிலை விளக்கம் கொடுத்தாலும் கொடுக்கலாம்" என்றான் குணா.

"நீ இந்த கனவை உருவாக்குற கான்செப்ட் விடவே மாட்டியா?" என்றாள் பிரகல்யா. "எனக்கு இப்போதைக்கு தெரிஞ்சது அது ஒண்ணு தான். அதைத்தான் ரொம்ப சீரியஸா ஆராய்ச்சி பண்ணிருக்கேன். வேற என்ன பண்ணுவேன் நானு?" என்றான் அவன் பாவமாக.

யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கவும், "அங்கிள் இன்னொரு கேள்வி இருக்கு.. அனுவோட கதைல வினோதாவும் அவளோட ரிப்போர்ட்டர் ஃப்ரெண்ட்ஸூம் கொரோனா டைம்ல ஒரு ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ணினதாவும், அங்கே மறைவா ஒரு ப்ளாக் இருந்ததாவும், அதுல ஏதோ சட்டத்துக்குப் புறம்பா நடந்ததாவும் எழுதியிருக்கா.. நாங்க சர்ச் பண்ணினதுல அதே காலகட்டத்தில் இந்தியா முழுக்க இருந்து விஐபிஸ், பணக்காரங்க வந்து கிட்னி ட்ரான்ஸ்பிளான்ட் சர்ஜரி பண்ணிட்டுப் போனதா ஒரு நியூஸ் பார்த்தேன், கதையில வினோதா சொல்ற நியூஸ் அது தானா? அப்படின்னா.. அதுவும் ஒருவேளை நீங்க அரேஞ்ச் பண்ணினதா?" என்று கேட்டான்

"கிட்டத்தட்ட அப்படி ஒரு விஷயம் நடந்துச்சு. அதுல சில விஷயங்களை காசிராஜன் பிரஸ்சுக்கு லீக் பண்ணினார். மறைவா ஒரு ப்ளாக் அப்படிங்கறது அனுவோட கனவுல ரெண்டு தடவை வருது. அப்படி எதுவும் நாங்க பண்ணல, ஆனா கொரோனா ஸ்பெஷல் வார்ட்னு சொல்லிட்டு இந்த மாதிரி ட்ரான்ஸ்பிளான்ட் சர்ஜரிஸ் நடந்தது உண்மை. எப்படி இவ்வளவு பிசுறில்லாம இவ்வளவு துல்லியமா உங்களால கெஸ் பண்ண முடிஞ்சதுன்னு எனக்கு இப்பவும் ஆச்சரியமா இருக்கு... அதையும் நாங்க அன்னைக்கு அனு அட்மிட் ஆயிருக்கும் பொழுது பேசினோம். இல் லீகலா நிறைய சர்ஜரீஸ் நடந்துச்சு. அதுவும் வெளியே கொண்டு வர வேண்டிய ஸ்கேண்டல் தான்"

தூரமாக அனுஸ்ரீ நடந்து வருவது தெரிந்தது. இன்னொரு பேப்பரை எடுத்து கடகடவென்று நான்கைந்து வார்த்தைகளை எழுதினான். "இங்கே பாருங்க! இப்ப நாம டிஸ்கஸ் பண்ணியிருக்கிற விஷயங்கள்ல செலெக்ட்டிவா சில விஷயத்தை மட்டும் அனுஸ்ரீக்கு சொல்லுவோம். முழுசா சொல்ல வேண்டாம். ப்ளீஸ் எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்து பாருங்க. அடுத்த ஃபியூ டேஸ்க்கு நான் தான் டைரக்டர். நீங்க எல்லாம் ஆக்டர்ஸ்" என்று கிட்டத்தட்ட கெஞ்சினான் குணா.

"முழுசா எல்லா விஷயங்களையும் அனுவுக்கு சொல்றதுக்கு எனக்கும் விருப்பமில்லை. ஏன்னா அவ‌ டென்ஷனாயிடுவா, அடுத்து உடனே அவங்க அம்மா கிட்ட சொல்லிடுவா.. அவங்க அம்மா அதை விட பயங்கர டென்ஷன் பார்ட்டி. கூடவே தனக்குத் தெரிஞ்சதை கோயில், குளம்னு போறப்ப பாக்குறவங்க 10, 20 பேர் கிட்டையாவது சொல்லிடுவாங்க. அதனால ஐ அக்ரீ வித் யூ" என்று முதலில் சொன்னது ஜனார்த்தனன்.

"நீங்க சொல்றது கரெக்ட் தான் அங்கிள்! ஆனால் ஆன்ட்டிக்கும் நான் ஒரு ரோல் வச்சிருக்கேன்" என்றாள் பிரகல்யா.

"சொல்லும்மா!"

"அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு டீடைல் சொல்லுங்க. நம்ம எக்ஸ் சீஃப் மினிஸ்டரோட வைஃப் அபிராமி மேடம் எதுவும் கோயிலுக்கு இப்ப வழக்கமாப் போறாங்களா?" என்க,

"இப்ப வியாழக்கிழமை வியாழக்கிழமை சாய்பாபா கோவிலுக்கு போறதா கேள்விப்பட்டேன்" என்றார் காசிராஜன்.

"எஸ் எக்ஸாக்ட்லி! இந்தத் தகவல் தான் எனக்கு வேணும். குணா, உன்னோட டைரக்ஷன்ல நான் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்துக்கிறேன். இந்த சீன் மட்டும் நான் டைரக்ட் பண்றேன். அங்கிள்! நீங்க என்ன பண்றீங்க, நம்ம ஆண்ட்டிகிட்ட சாய்பாபா கோவிலுக்கு போக சொல்றீங்க, அபிராமி மேடம் கூட க்ளோஸாக சொல்றீங்க. ஏன் எதுக்குன்னு கேட்காதீங்க. ஏதோ மனசுக்கு தோணிச்சு. அப்புறமா மத்ததைப் பாக்கலாம்" என்றாள் பிரகல்யா பரபரப்பாக.

அதற்குள் அனுஸ்ரீ வந்துவிட அனைவரிடமும் கண்ணாலேயே அனுமதி கேட்ட குணா அவளிடம், "அனு! உன்னை விட்டுட்டு நிறையப் பேசிட்டோம்.. இந்தா, இதெல்லாம் தான் நாங்க பேசுனதுல முக்கியமான பாயிண்ட்ஸ்!" என்று அவன் கடைசியாக எழுதிய பேப்பரைக் காண்பித்தான்.

அதில்,

சிலைக் கடத்தல்

பள்ளிக்கூடங்களுக்கு அனுமதி

மருத்துவமனை பேச்சு

முக்கிய அரசியல் புள்ளி தொடர்பு

என்று நான்கைந்து வார்த்தைகள் இருந்தன. அவற்றை மட்டும் விலாவாரியாகச் சொல்லிவிட்டு அறிவரசன்‌ தான் தாங்கள் சந்தேக லிஸ்டில் இருக்கும் முக்கியமான நபர் என்பதைச் சொல்லாமல் விட்டு, யாரோ ஒரு அரசியல்வாதி, அதைத் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று முடித்தான் குணா.

இதைப்பார்த்தே சோர்வடைந்து விட்டாள் அனு. அவளை சமாதானம் செய்து தங்களுக்கு ஒரு வழக்கறிஞருடன் அப்பாயிண்ட்மெண்ட் இருப்பதாகக் கூறிவிட்டு அனைவரும் சேர்ந்து உணவையும் உண்டு ஜனார்த்தனனும் காசிராஜனும் விடை பெற,

"அடுத்து நம்ம பிளான் என்ன?" என்றாள் அனு.

சற்று நேரம் யோசித்த பிரகல்யா, "அனு இப்ப நமக்கு ரெண்டு டாஸ்க். உங்க அப்பாவுடைய சஸ்பென்ஷன் கேன்சல் பண்றதுக்கு முடிஞ்ச அளவு ஹெல்ப் பண்ணனும். அப்புறம் இந்தக் கதை விவகாரம் பெருசா போய் நமக்கு ஆபத்து வராத அளவுக்குக் கதையைக் கொண்டு போய் முடிக்கணும். கதையை அப்படியே ஸ்டாப் பண்ணினா இன்னும் தான் நிறைய சர்ச்சை வரும். ஏற்கனவே இதுக்காக ஸ்பெஷலா டிவியில ப்ரோக்ராம் வைக்கிற அளவுக்கு கதை ஃபேமஸ் ஆயிடுச்சு. இந்த நிலைமைல நீ நிறுத்த சம்மதிப்பியா என்ன?" என்று கேட்க

"கண்டிப்பா மாட்டேன்! ஏதாவது ஒரு விதத்தில் முடிக்கணும். அந்த முடிவு ரீடர்ஸுக்கும் ஏற்புடையதா இருக்கணும். நமக்கும் தொந்தரவு இருக்கக் கூடாது" என்றாள் அனு.

"இப்ப ரீசண்டா வந்துச்சே த்ரிஷ்யம் 2 மலையாளப் படம்.. அதுல நடக்கப் போற இன்சிடென்ட் எல்லாம் கதையா எழுதி முன்னாடியே பப்ளிஷ் பண்ணிடுவாங்க. அந்த மாதிரி எதுவும் நம்ம கதையில செஞ்சுடக்கூடாது. ஏன்னா அப்புறம் நமக்கும் அந்தக் குற்றங்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்னமோன்னு சந்தேகம் வந்துரும்" என்றாள் பிரகல்யா.

குணா, "அனு! உன்னோட கதையிலிருந்துதான் நாங்க இன்வெஸ்டிகேஷனுக்கு பாயிண்ட்ஸ் கலெக்ட் பண்றோம். இப்ப, லேட்டஸ்ட்டா நீ எழுதி பிரகல்யா தனியா கண் பண்ணி வச்சிருக்கிற பார்ட்டை திரும்பிப் பாரேன், ஃபேஸ்புக் குரூப்ஸ் உள்ள போய் வினோதா புதுசா ஒரு டாக் கிளப்பி விடுறதா வருது, அதான் நம்மளோட அடுத்த அஜென்டா (agenda). அதுல வினோதா பண்ணின அதே ஸ்ட்ரேட்டஜியை நாமளும் அடாப்ட் பண்ணப் போறோம்" என்க,

"எதுக்குப்பா.. இப்ப தான் அப்பா பத்தின நியூஸ் கொஞ்சம் அடங்கி இருக்கு. மீடியா, சோஷியல் மீடியா ரெண்டையும் இன்வால்வ் பண்ணாமலே இதைக் கொண்டு போகலாமே" என்று அனுஸ்ரீ கேட்க,

"இது ஒரு சின்ன டிராப் தான். இப்ப எல்லாமே மக்களுக்கு லேசா போயிடுச்சு. பெரிய பெரிய ஊழல்கள் கூட அவங்களுக்கு ஜஸ்ட் ஒரு நாள் பிரேக்கிங்கா கேட்டுட்டுப் போற நியூஸ் தான். இப்ப நமக்கு தெரிஞ்சிருக்கிறது சிலைக் கடத்தல் அப்புறம் ஸ்கூல் விவகாரம். இந்த ரெண்டும் அவ்வளவா மக்களை ஈர்க்கும்னு சொல்ல முடியாது. அதனால இது கூட வெயிட்டா ஒரு விஷயத்தை மிக்ஸ் பண்ணி நியூஸ் பரப்பப் போறேன். உன் கதையில ஒரு இடத்துல நீ சொல்லியிருக்க பாத்தியா.. 'அந்த இரண்டு ஃபோல்டர்களைப் பார்த்துவிட்டு மூன்றாவது ஃபோல்டரைப் பார்த்த போது பவித்ரா ஆச்சரியப்பட்டாள்' அப்படின்னு.. நீ கதையில சொன்ன ரெண்டு விஷயம் இப்ப நிஜத்திலும் இருக்கு. மூணாவது விஷயம்னு ஒன்னு இருக்கலாம், இல்ல இல்லாமலும் இருக்கலாம். நான் இப்ப எடுத்திருக்கிற விஷயம் சென்சேஷனுக்காகத் தான். அதுவே உண்மையாவும் இருக்கலாம். ஆனா நிச்சயம் மக்களைப் பேச வைக்கும். இது கூட உன்னோட கதையிலிருந்து எடுத்ததுதான். நிறைய பேர் ஷேர் பண்ணுவாங்க, பெரிய மனுஷங்க யாராவது ஒருத்தர் ட்வீட் (tweet) பண்ணினா ஃபாலோயர்ஸ் ரீட்வீட் (re tweet) பண்ணி அப்படியே வைரலாக சான்ஸ் இருக்கு", என்றவன்,

ஜனார்த்தனன் மற்றும் காசிராஜன் இருக்கும் பொழுது சொன்னது மாதிரியே, "எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்களேன்! ப்ளீஸ்!" என்றான்.

அரைமனதாக அனுஸ்ரீ தலையாட்ட, "பிரகல்யா! நீ அன்னைக்கு சொன்னேல்ல, ஃபேஸ்புக்ல நிறைய ஃபேக் ஐடி வச்சிருக்கேன்னு.. அதை எங்கேயிருந்து கிரியேட் பண்ணின, அடிக்கடி ஆபரேட் பண்ணியிருக்கியா? அதுல இருந்து போஸ்ட் போட்டு எதுவும் கம்ப்ளைன்ட் ஆகி டிராக் பண்ணினா உன்னோட ஐபி அட்ரஸ் எதுவும் காட்டுமா?" என்றான்.

"இல்ல.. அப்படி காட்டாதுன்னு தான் நினைக்கிறேன்.‌ மொத்தம் நாலு ஃபேக் ஐடி வச்சிருந்தேன். ரெண்டைத் தான் அனுவோட கதையை மார்க்கெட் பண்றதுக்கு யூஸ் பண்ணிக்கிட்டோம். இன்னும் ரெண்டு அப்படியே க்ரியேட் பண்ணினதோட இருக்கு. ஒரு ஃபங்க்ஷனுக்காக வேற ஊருக்குப் போயிருந்தப்ப ஜாலியா ஒரு கம்ப்யூட்டர் சென்டர்ல வச்சு க்ரியேட் பண்ணினேன். என்னோட ஸ்கூல்மேட் ஒருத்தி ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஓபன் பண்றது எப்படின்னு எதுவுமே எனக்குத் தெரியாதுன்னு சொன்னா, வான்னு சொல்லி கண்ணுல பட்ட ஒரு பிரவுசிங் சென்டர்க்கு கூட்டிட்டுப் போயிட்டேன். அது எங்க சொந்த ஊர் கூட கிடையாது, எத்தனையோ பேர் வந்து போகக்கூடிய ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் தான். அதனால என்னை குறிப்பிட்டு யாரும் கண்டு பிடிக்க முடியாது" என்றாள்.

"அப்ப அந்த ஐடி பாஸ்வோர்ட் எல்லாத்தையும் என்கிட்ட கொடு.. நான் சில நியூஸ் சோஷியல் மீடியால பரப்பப் போறேன்" என்றான்.

"தாராளமா! ஆனா எது செஞ்சாலும் சொல்லிட்டு செய்!" என்று பிரகல்யா கூற,

'அட டுபாக்கூர்களா! எவ்வளவு ஃப்ராடு பண்றீங்க' என்று பார்த்தாள் அனுஸ்ரீ.
"உனக்கும் அடுத்து பிராக்டிக்கல்ஸ் ஸ்டார்ட் ஆயிடுமே.. ஏன் தேவையில்லாத விஷயத்துல டைம் வேஸ்ட் பண்ற?" என்றாள் அனு குணாவிடம்.

"நான் போடப் போற போஸ்ட்டை ரெடி பண்ண மட்டும் தான் போறேன். நம்ம சிஷ்ய கோடிகள் சில பேர் லீவுக்காக ஊருக்குக் கிளம்புவானுங்க, அவங்களுக்கு அனுப்பினா போற வழியில ரெண்டு மூணு ஊர்ல இறங்கி நெட் சென்டரைப் பார்த்து அப்லோட் பண்ணச் சொல்ல வேண்டியதுதான்.‌ அப்புறம் அதை நிறைய பேர் ஷேர் பண்ண வைக்கிறது எப்படின்னு எனக்குத் தெரியும். ஃப்ரெண்டு ஒருத்தன் டெலி மார்க்கெட்டிங் லைன்ல இருக்கான், பாத்துக்கிட்டே இரு.. இன்னும் ரெண்டு நாள்ல தமிழ்நாடு முழுக்க இத பத்தி தான் பேச போகுது" என்றான்.

'நம்ம முன்னாள் முதல்வரோட டெத் ஆனிவர்சரி வரப்போகுது. ஏற்கனவே நிறைய பேர் அவருடைய முதலாம் ஆண்டு நினைவஞ்சலின்னு அவரைப் பத்தி நினைவலைகளைப் பகிர்ந்துக்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்ப நான் என்ன பண்ணப் போறேன்.. முன்னாள் முதல்வரோடது இயற்கை மரணம் இல்லைன்னும், அதுக்கு இந்த ரெண்டு மூணு கேஸ்க்கும் சம்பந்தம் இருக்கலாம்னு சொல்லப் போறேன். ரிஸ்க் எடுத்துட வேண்டியது தான். மெசேஜ் ஸ்ப்ரெட் ஆன அப்புறம் அணுவுக்கும் பிரகல்யாவுக்கும் தெரிஞ்சா போதும்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் உறுதியாக.


"எல்லாம் இருக்கட்டும்.. நெக்ஸ்ட் அப்டேட் எப்ப எப்பன்னு அந்த ஸ்டோரி எழுதற த்ரெட்ல கேட்டுக்கிட்டே இருக்காங்களே? நாம இப்போதைக்கு கதையை எப்படி நகர்த்துறது? இந்த பொலிட்டிக்கல் டீடைல்ஸ் எல்லாம் எழுத வேண்டாம் என்று சொன்னியே?" என்று அனுஸ்ரீ பிரகல்யாவிடம் கேட்டாள்.

"அவனவனுக்கு ஆயிரம் கவலைன்னா உனக்கு இருக்கிற கவலையைப் பாரு" என்றான் குணா.

"இல்ல குணா.. நீ நினைக்கிறது தப்பு. அனுஸ்ரீயோட சின்சியாரிட்டி தான் எனக்கு அவ கிட்ட ரொம்பப் பிடிச்ச விஷயம். எதை எடுத்தாலும் அந்த கமிட்மெண்டுக்கு உண்மையா இருப்பா. இத்தனை ரீடர்ஸ் எதிர்பார்ப்போட இருக்காங்களே, அவங்களை சந்தோஷப் படுத்தணும்னு நினைக்கிறவ அவ.‌ இந்த ஓவர் சின்சியாரிட்டி தான் அவளோட மனக் குழப்பங்களுக்கெல்லாம் காரணமோன்னு எனக்குத் தோணும்" என்றவள்,

"அனு, பேசாம கதைல காமெடி, லவ் அந்த மாதிரி ஒன்னு ரெண்டு எபிசோடு வையேன்" என்றாள்.

"இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே?" என்று அனுஸ்ரீ கேட்க,

"கதையில் இருக்கிற லீடு (lead) கேரக்டர்ஸ் எல்லாமே யங்ஸ்டர்ஸ்.. அவங்களுக்குள்ள காதல் வர்றதுக்கு சொல்லியா தரணும்? சும்மா ட்ரை பண்ணு. இப்போதைக்கு வினோதாவும் சண்முகசுந்தரமும் தான் இன்வேஸ்டிகேஷனில் இறங்கி இருக்காங்க. அதனால அவங்க ரெண்டு பேருக்கும் லவ் ஃபார்ம் ஆகுதுன்னு ஒரு டிராக் ஓட்டுவோம்" என்று பிரகல்யா சொல்ல,

"சண்முகசுந்தரத்துக்கு பவித்ரா மேலல்ல ஒரு 'இது'?" என்றாள் அனுஸ்ரீ.

"அப்படியா? எப்ப? நான் கவனிக்கலையே?" என்று பிரகல்யா ஆர்வத்துடன் கேட்க,

"இல்லை இல்லை பவித்ராவுக்குத் தான் சண்முகசுந்தரம் மேல 'அது'" என்றான் குணா.

'இது எப்ப?' என்று அனுஸ்ரீயே பார்த்தாள்.

"ரீடிங் பிட்வீன் த லைன்ஸ்னு சொல்லுவாங்களே.. அது எனக்கு நல்லா வரும். உன் கதையை முதல்ல இருந்து நீயே படிச்சுப் பாரு. அப்புறம் யோசி. நான் இப்ப எடுத்துக்கிட்ட கடமையை முடிக்கப் பார்க்கிறேன். உன்கிட்ட இருந்து அந்த ஒரு நல்ல குவாலிட்டியாவது நான் படிச்சுக்குறேன்" என்றபடி எழுந்தான் குணா.

"எங்க மிஸ் பண்ணினேன்?" என்றபடி பிரகல்யா மொபைலை எடுத்து அனுஸ்ரீ இதுவரை எழுதி இருந்த பகுதிகளைப் புரட்டிப் பார்க்க அடுத்து என்ன எழுதுவது என்று அனுஸ்ரீக்கு நன்றாகவே பிடிபட்டது. புன்னகையுடன் அடுத்த அத்தியாயத்தை எழுத ஆயத்தமானாள்.

அனுஸ்ரீயின் கூகுள் டிரைவில் இருந்து:

'நம்ம துப்பறியிற படலம் கிணத்துல போட்ட கல்லா இருக்கே.. எதுவும் சொல்லக் காணோம். வேலையும் இல்லை‌ நான் என்னதான் செய்வேன்? வேறு வேலை தேடலாமா? இந்த ரூம்ல எத்தனை நாளைக்கு இருக்க முடியும்? இந்த செல்லப்பா இப்ப பார்த்து எங்க போய் தொலைஞ்சாரு? சரோஜாக்காவைக் கையிலே பிடிக்க முடியலையே.. உலகத்திலேயே வெட்டியா இருக்கிறது நான் மட்டும்தானா? அதுவும் பெரிய மிஷனோட மிடில்ல இப்படி செய்றதுக்கு ஒண்ணுமில்லாம சுத்துறனே' காலையிலிருந்து புலம்பல் இன்னும் நிற்கவில்லை பவித்ராவுக்கு.

அலைபேசியை எடுத்து அஜித் குமாரை அழைத்தாள். "டேய் நீ சண்முகசுந்தரம் அபார்ட்மெண்ட்ல தானே இருக்கே?" என்க,


*அங்க தான் இருக்கேன்.. ஆனா இப்ப இல்ல. வெளியே இருக்கேன்" என்றான்.

"சரி உன்னை நான் பாக்கணும். எப்ப அங்க வர்றியோ அப்ப சொல்லு"

"என்னைத் தான் பாக்கணும்னா அங்கேயே தான் வரணுமா? நான் இப்ப அதைவிட உங்க ஹாஸ்டலுக்கு பக்கமா ஒரு ஹோட்டல்ல இருக்கேன்" என்று அவன் இடத்தைச் சொல்ல,

"இல்ல டா நீ அங்க அப்பார்ட்மெண்டுக்கு போன பிறகு சொல்லு" என்றாள் பவித்ரா.

"என்னைப் பாக்கணுமா? அண்ணனைப் பாக்கணுமா?" என்று பாயிண்டுக்கு நேரடியாக வந்தான் அஜித்குமார்.

"உன்னை.. அவரை..‌ இல்ல உன்னைத் தான் பாக்கணும். அங்க வச்சுப் பாக்கணும்" என்று பவித்ரா தடுமாற,

"அக்கா! எப்பயும் உளறாத அக்கா ஏன் இன்னைக்கு வாயால டைப் அடிக்குது?" என்றான் அஜித்குமார்.

அதற்குள் சுதாரித்த பவித்ரா, "நீ ஏன் அந்த ஹோட்டல்ல இருக்கே? அங்க எதுவும் ஃப்ரீயா சாப்பாடு போடுறாங்களா?" என்றாள் பேச்சை சகஜமாகும் பொருட்டு.

"இல்ல இல்ல எங்க ஊர்ல உள்ள பெரியப்பா ஒருத்தர் அன்னைக்கு செக்ரெட்டரியேட்ல வச்சு காமிச்சேனே.. திரவியம்னு.. அவர்தான் பிளேடு போட்டுக்கிட்டு இருக்கார். ஏற்கனவே அவரோட டகால்டி வேலைக்கு என்னைக் கூட்டாளி ஆக்கலாம்னு முயற்சி பண்ணினார். இப்ப நான் வேலை இல்லாம வேற இருக்கேனா? நிறைய சம்பாதிக்கலாம், அக்கா கல்யாணத்துக்கு வளையல் வாங்கிடலாம் வா அப்படி இப்படின்னு ஆசையை தூண்டிகிட்டு இருக்கார். வளையல் வாங்க வைக்கப் போறாரா, இல்லை என் கையில காப்பு மாட்ட ஏற்பாடு பண்ணுவாரான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்" என்றான்.

"டேய் இப்படி ஒரு கேரக்டர் இருக்கிறதை இவ்வளவு நாள் மறந்துட்டேனே.. இவரை வச்சு நாம எவ்வளவோ காரியம் சாதிக்கலாமே.. செகரட்டரியேட்ல இவருக்கு நிறைய ஆள தெரியும்னு சொன்னேல்ல? அவரையும் கூட்டிட்டு அப்பார்ட்மெண்ட் வாடா.. நாம எல்லாரும் சேர்ந்து பேசி முடிச்சிடலாம்.. நானு, நீ, சண்முகசுந்தரம், அப்புறம் உங்க பெரியப்பா" என்றாள்.

"அப்ப வினோதாக்கா?"

"அவ கிடக்கா.. அவளுக்கு ஆயிரம் வேலை இருக்கும்" என்ற பவித்ராவின் குரலில் திடீரென்று முளைத்த ஒரு கோபம் தென்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் குழுவில் வினோதாவின் முக்கியத்துவம் அதிகமானது போல் தெரிந்தது. இவர்கள் நான்கு பேருக்குமாக ஒரு வாட்ஸ்அப் குழுவை ஆரம்பித்திருந்தார்கள். வினோதா இதைச் செய்யுங்கள் அதை செய்யுங்கள் என்று இவர்களுக்கு உத்தரவுகள் கொடுப்பதும், இவர்கள் செய்வதைப் பார்த்து இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்பது போல் கமெண்ட் கொடுப்பதுமாக இருந்தாள். அதுவும் சண்முகசுந்தரம் ஏதாவது செய்தால் மட்டும் சூப்பர், ஆசம், ஹாட்ஸ் ஆஃப் என்பதும் சில சமயம் ஷேன், ஷேன் என்று அவனை சுருக்கமாக கூப்பிடுவதும் பவித்ராவுக்குப் பிடிக்கவில்லை. 'இந்த இன்வேஸ்டிகேஷனுக்கு இவ தலைவரா, நான் தலைவரா? ரொம்ப பண்றா' என்று வினோதா மேல் அவளுக்கு ஒரு கோபம் வந்திருந்தது.

"ஏ! நீ பேசுறதெல்லாம் பார்த்தா எனக்கு சரியா தோணலையே? எதுவும் சம்திங் சம்திங்கா?" என்றான் அஜித்.

"டேய்! தலைக்கு மேல வேலை இருக்கு. விளையாட்டு காட்டிட்டு இருக்கியா? வேலையைப் பார்ப்போம் டா! வினோதா ஏற்கனவே ஏதோ வேலைல பிஸியா இருக்கா.. அவ ஒரு அதிரடி பார்ட்டி. நாம நம்ம ரூட்டிலேயே போவோம்"

"என்னைப் பொறுத்த வரைக்கும் நீயே அதிரடி பார்ட்டி தான். நாங்க எல்லாம் சாத்வீகம். சண்முகசுந்தரம் அண்ணன் என்னை விட சாத்வீகம்" என்றான்.

அருகில் இருந்த திரவியம் பெரியப்பா, "யாருடா தம்பி! உன் கூட வேலை பார்த்துச்சே அந்தப் பொண்ணா?" என்க,

"எனக்கு என்னமோ இவரு உபயோகமா இருப்பார்னு தோணுதுடா. அவரையும் கூட்டிட்டு நீ அப்பார்ட்மெண்ட் வா ப்ளீஸ்" என்றாள் பவித்ரா.

"சரி சரி வரேன்! இந்த ஆளு சாப்பாடு வாங்கித் தரேன்னு சொன்னா எங்கேயும் வருவாரு.. ஸ்விக்கி சொமேட்டோல ஆர்டர் போட்டு எல்லாரும் சாப்பிட வேண்டியது தான். அண்ணன் தான் நமக்கு ஒரு அட்சய பாத்திரம் இருக்கானே!"

'வர வர இவனும் அறிவாளியாகிவிட்டான் அப்படியா நம்ம மைண்ட் செட் ஈஸியா கெஸ் பண்ற மாதிரி இருக்கு? இவன் அங்கே வந்து ஏதாவது உளறி வைக்கக் கூடாது. நான் ஏன் இப்படி நடந்துக்குறேன்? வினோதாவை நான் தானே கூப்பிட்டேன்.‌ இப்ப கோபப் படலாமா?" என்று சுய அலசலில் ஈடுபட்டாள் பவித்ரா.

கூடவே, 'உனக்கெல்லாம் லவ்வோ அட்ராக்ஷனோ எதோ ஒரு கழுதை வரலாமா? நீ எல்லாம் ஒரு ஆளா? அவன் எவ்வளவு பெரிய வசதிக்காரன், எவ்வளவு படிப்பாளி? இன்னைக்கு தேதிக்கு நீ கேர் ஆஃப் பிளாட்பார்ம். ஒரு சொந்தமும் கிடையாது, அட்ரஸும் கிடையாது, உனக்கு ஏன் இந்த ஆசை' என்று அவளே திட்டிக் கொண்டாலும் ஆசை வெட்கமறியாதல்லவா? சண்முகசுந்தரத்தை இரண்டு மூன்று நாட்களுக்குப் பின் பார்க்கப் போகும் மகிழ்வுடன் பஸ்ஸைப் பிடித்தாள் பவித்ரா.


கனவுகள் பூக்கும் ❤️
 
Last edited:

Latha S

Administrator
Staff member
பவித்ராவுக்கு சுந்தரத்திற்கும் காத்ல்.. நம் அனுவுக்கும் குணா வுக்கும் கூடத்தான்
 
Top