கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தலைமைச் செயலகம் 19 2

Akhilanda bharati

Moderator
Staff member
19 2

"சீஃப் கெஸ்டா? யாரது?" என்ற கேள்விக்கு சற்று நேரத்தில் பதில் கிடைத்தது. வந்தவர் சொல்லப்பா.

"நம்ம ஜர் சாரு!" என்றபடி அவருக்கு கதவை திறந்து விட்டான் அஜித்குமார்.

வினோதாவைக் கேள்வியாய் அவர் பார்க்க, "அது என் தங்கச்சி சார். சித்தி பொண்ணு" என்றான் சண்முகசுந்தரம்.

எல்லாரும் அவன் முகத்தை ஒரே சமயத்தில் பார்த்தனர். அவ்வளவு மோசமாகவா பொய் சொல்கிறேன் என்பது போல் சண்முகசுந்தரம் விழிக்க,

வினோதாவை ஏற்கனவே அறிந்தவர் போல் பார்த்தார் செல்லப்பா. "நாம ஏற்கனவே சந்திச்சிருக்கோமா?" என்று கேட்ட வினோதா எழுந்து வந்து செல்லப்பாவின் கையைப் பற்றிக் குலுக்கினாள்.

"கடைசி இந்த மிஷன்லயும் நீ வந்துட்டே" என்றார் செல்லப்பா.

"புரியலையே?"

"வழக்கமா கதையோட கடைசில ஏதாவது ஒரு கேரக்டர் வந்து எல்லா உண்மைகளையும் சொல்லுமே ,அந்த சீன் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன். நீங்க பண்ணினதுக்கெல்லாம் ஏதாவது ஃபிளாஷ்பேக் வச்சிருப்பீங்களே.. கொட்டுங்க சார் கொட்டுங்க" என்றான் அஜித்குமார்.

"நான் முதல்ல சாதாரண கிளார்க்கா தான் கவர்மெண்ட் வேலையில் சேர்ந்தேன். படிப்படியா உயர்ந்து இன்னைக்கு அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் போஸ்ட்க்கு வந்திருக்கேன். மொத்தம் மூணு டிபார்ட்மென்ட்ல இருந்த இந்தப் பயணத்துல நிறைய நல்லவர்களுடன் நட்பு கிடைச்சாலும், ஒரு அரசு ஊழியனா என்னால நான் ஆசைப்பட்டதை செய்ய முடியாத நிலைமை எப்பவுமே இருந்துச்சு. மேல கீழன்னு நிறைய பேரு கரப்ஷன் பண்றவங்களா இருக்க, நடுவுல என்ன மாதிரி ஒன்னு ரெண்டு பேர் எதுவும் செய்ய முடியாமல் முழுச்சுக்கிட்டு இருக்கோம். இப்படியே சர்வீஸ் முடிச்சிட்டு ரிட்டையர்டு ஆயிடுவோமோ அப்படின்னு ஃபீலிங் இருந்தப்ப தான் நான் படிச்ச எங்க கிராமத்து பள்ளிக்கூடத்தோடு முன்னாள் மாணவர் சந்திப்பு நடந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிச்சு வெளிய வந்த ஸ்கூல் ஒரு பிரைவேட் ஸ்கூலோட படையெடுப்பால மூடுற நிலைமையில் இருக்குன்னு சொன்னாங்க. அப்புறமா அந்த சந்திப்பில் சந்திச்சு கிட்ட நண்பர்கள் நிறைய பேர் அவங்க இப்ப வசிக்கிற பகுதிகளையும் ஒரே மாதிரியான பிரச்சனைகள் இருக்கிறதா சொன்னாங்க. எல்லா ஊர்களிலும் யுனிவர்சல் மாடல் ஸ்கூல்னு பேர்ல ஒரே நிறுவனம் ப்ரைவேட் ஸ்கூல் திறந்திருந்துச்சு.


"அரசாங்கத்தோட ஆதரவில்லாமல் இப்படி செய்ய முடியாது. ஏதோ ஒரு பெரிய கை இருக்கணும். நீ அங்கே செக்ரட்டரியேட்ல தானே டா இருக்க.. ஏதாவது பாரேன். ஒரு சதி நடக்கிற மாதிரி தெரியுது அப்படின்னு கல்வியாளர்களா இருந்த சில ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. நம்பாம தான் நான் அந்த டிபார்ட்மெண்ட் ஆளுங்க மூலமா சில ஃபைல்ஸ் எடுத்துப் பார்த்தேன். எனக்குப் பெரிய அதிர்ச்சி. பள்ளி கல்வித்துறைல பல பேர் திடீர் பணக்காரங்களா ஆயிட்டாங்க. சில பேர் கட்டாயமா இடம் மாற்றப்பட்டு இருந்தாங்க. பல முன்னேற்றங்களைக் கொண்டு வந்த ஒரு நல்ல ஐஏஎஸ் ஆபிஸர் பதவியில் இல்லை. எல்லா நடவடிக்கைகளும் கர்ணபிரபுவைக் கை காட்டுச்சு. அப்புறம் விசாரிக்க விசாரிக்க இந்த விவகாரத்தில் ஒன்னு ரெண்டு கொலைகள் கூட பண்ணி இருந்தாரு. மனசு கேட்காம இன்னொரு ஆபிஸர் கிட்ட பேசும்போது தான் அவர் சிலை கடத்தல்லயும் கர்ணபிரபுவுக்கு லிங்க் இருக்குன்னு சொன்னார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிலிருந்து ஒரு டி எஸ் பி ஆக்சிடென்ட் என்கிற பெயரில் இறந்துட்டார். அப்பவும் கர்ணபிரபு பெயர் அடிபட்டுச்சு" என்றவர் அஜித்தை நோக்கி, "அப்புறம் அஜித் என்ற சரவணன் தம்பி! நீ.."

"ஓ தெரிஞ்சிருச்சா.."

"ம்.. நீ வந்த மூணாவது நாளே நீ சரவணன் இல்லைன்னு தெரிஞ்சுடுச்சு.. அதை விடு.. நீ போய் பென் டிரைவ் குடுத்துட்டு வருவியே.. அந்த ஐபிஎஸ் ஆபீஸர் கூட பேசி அவர் அவருக்குத் தெரிஞ்ச கான்டாக்ட்ஸ் மூலமா சிலைக் கடத்தல் சம்பந்தமான இன்னும் நிறைய ஃபைல்ஸும் எடுத்தோம். சில ஃபைல்ஸ் கம்ப்யூட்டர்ல பழைய ஃபார்மட்ல இருந்துச்சு எனக்கு ஏதாவது ஒரு எக்ஸ்பர்ட்டோட உதவி தேவைப்பட்டுச்சு. ஆனா இதையெல்லாம் எப்படி மக்கள்கிட்ட கொண்டு போறதுன்னு தெரியலை. என்னோட ஃப்ரண்ட் சின்னதா ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி நடத்துறான்.‌ சண்முகசுந்தரம் வேலை பார்க்கிறது அந்த கம்பெனியில் தான். இப்படி எக்ஸன்ட்ரிக்கா ஒரு பையன் இருக்கான், அவனுக்கு பயங்கர நாலெட்ஜ். ஆனா யாரு கூடயும் அவனுக்கு ஒத்து போக முடியலை. வேலையை விட்டுப் போறேன்னு வேற சொல்றான், ரொம்ப நல்ல பையன்னு சொன்ன உடனே அவனோட இமெயில் ஐடி வாங்கி மெயில் அனுப்பினேன். என்னோட ப்ராஜெக்ட்டுக்கு யூஸ் பண்ணிக்கிட்டேன். பவித்ராவைப் பத்தி சரோஜா எங்க அம்மா கிட்ட சொல்லி இருக்காங்க, 'அந்தப் பொண்ணுக்கு ஏதாவது உதவி பண்ணுடா'ன்னு எங்க அம்மாவும் சொல்ல, பவித்ராவோட கஷ்டத்தையும் நான் பயன்படுத்திக்கிட்டேன். சரோஜாவுக்கு ஒரு நாள் பவித்ரா பேசினதை ரெக்கார்ட் பண்ணி அதே மாதிரியான வாய்ஸை ஒரு வாய்ஸ் சேஞ்சர் ஆப் வெச்சு உருவாக்கி அவளுக்கு ஒரு வேலை வாங்கி கொடுக்கிற ஏஜென்சி மாதிரி கால் பண்ணினேன். அப்புறம் சரவணனையும் ஃப்ரண்டு ஒருத்தர் சஜஸ்ட் பண்ணினாரு"

"அந்த சரவணனுக்கு வச்ச பொறியில் அவனுக்கு பதிலா மாட்டின எலி தான் நானு" என்றான் அஜித்.

"உங்க யாரையும் மாட்டி விடணும்னு எண்ணம் இல்ல. ஆனா அன்னைக்கு கரெக்டா தோணின பிளான் இப்ப சொதப்பலா தோணுது. ஏன் இப்படி பண்ணினேன் அப்படின்னு இருக்கு. உங்களை தேடி போலீஸ் வந்த பிறகு எனக்கு பதட்டமா இருக்கு. அப்பத்தான் என்னை சந்தேகப்படறாங்களோ, என் கூட அந்த பழைய ஆபீஸ்ல வேலை பார்க்கிற உங்களையும் தொடர்ந்து வந்தாங்களோன்னு தோணுச்சு. இந்த வார்த்தையை இப்ப சொல்றது எனக்கு கரெக்டா தெரியல.. இருந்தாலும் சொல்றேன். சாரி.. உங்க எல்லாருக்கும் சாரி!" என்றார் செல்லப்பா உள்ளார்ந்து.

"என்னைத் தெரியும்னு சொன்னீங்களே?" என்று வினோதா கேட்க,

"நீ 'நலம் வாழ' ஹாஸ்பிடல்ல கொரோனா டைம்ல ரிசப்ஷனிஸ்ட் மாதிரி வேலைக்கு போனியே.. அப்ப சில விஷயங்கள் கண்டுபிடிச்சியே நினைவிருக்கா?"

"ஆமா அதெல்லாம் வேற ஆட்கள் பெயர்கள்ல தான் நியூஸா வந்துச்சு. நான்தான் போனேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? என் முகத்தைக் கூட யாரும் பார்த்திருக்க மாட்டாங்களே? கொரோனா ட்ரீட்மென்டக்கு டாக்டர்ஸ் போடுற கிட்டை முழு நேரமும் போட்டிருந்தேனே?" என்று வினோதா கேட்க,

"உன்னோட காட்ஃபாதர் சீனியர் ஜர்னலிஸ்ட் சாமுவேல் துரைராஜ் தானே உன்னை அங்கே அனுப்பினது?"

"ஆமா"

"அவர்கிட்ட உன்னை அனுப்பச் சொல்லி கேட்டது நானும் மெடிக்கல் ஃபீல்டில் உள்ள ஒரு டைரக்டரும். பல டிபார்ட்மெண்ட்ல நல்லெண்ணம் கொண்டவங்க ஒரு டீமா இப்பவும் காண்டாக்ட்ல இருக்கோம். சின்னச் சின்னதா சில விஷயங்களை வெளியே யாருக்கும் சந்தேகம் வராம கொண்டு வந்திருக்கோம். இப்ப செஞ்சது ரொம்பவே ரிஸ்க்கானது. ஆபத்தான நபர்கள் கூட மோதியிருக்கோம்"

"அப்ப நல்லவங்கள்லயும் ஸ்லீப்பர் செல்லுங்க அங்கங்க தூங்கிகிட்டு இருக்கீங்கன்னு சொல்லுங்க"


"எனக்கு ஒரு மாதிரி அமெச்சூர் பிளானா தான் இது தெரிஞ்சது. இருந்தாலும் நேரம் குறைவா இருந்ததால் அந்த இடிக்கிற நிலைமையில் இருந்த கட்டிடத்தை யூஸ் பண்ணிக்கிட்டேன். அந்த காண்ட்ராக்டர்ட்ட வேற நீங்க பேசி இருக்கீங்கன்னு தெரிஞ்சது. உங்க சேப்டிக்காக சில ரெக்வஸ்ட் வைக்கிறேன். சண்முகசுந்தரம்! என்னோட ஃப்ரண்டோட இதே சாஃப்ட்வேர் கம்பெனிக்கு புனேயில் ஒரு பிரான்ச் இருக்கு. அங்கே போக முடியுமா? பவித்ரா உனக்கும் வெளியூர்ல ஒரு ஆபீஸ் சொல்லி வச்சிருக்கேன்", என்றவர் அஜித்தை நோக்கித் திரும்ப,

"ஆணியே புடுங்க வேண்டாம். எங்க கிராமம் 1947 ல எப்படி இருந்துச்சோ அப்படித்தான் இப்பவும் இருக்கு. ஒரு ஈ காக்கா, போலீஸ், ரவுடி யாரும் வர மாட்டாங்க.. அதனால எங்க ஊரே எனக்குப் பாதுகாப்பு தான். நான் அங்கேயே போறேன். ஏன்டா அங்கே இருந்து வந்தோம்னு இருக்கு" என்றான் அஜித் குமார்‌.

"நான் இப்ப ரெசிக்னேஷன் கொடுத்துட்டேன். அதை அப்ரூவ் பண்ற வரைக்கும் இங்கே இருக்க வேண்டாம் என்று தான் நார்த் சைடு போய் தங்கிட்டு வரேன். என்னோட பையன் யூ.எஸ். ல இருக்கான். இன்னும் இரண்டு நாள்ல நானும் போகப் போறேன். கர்ணபிரபு இல்லனாலும் அவரோட ஆட்கள் நம்மைத் தொந்தரவு பண்ண முயற்சி பண்ணலாம். நீங்களும் முடிஞ்ச அளவு சீக்கிரம் கிளம்பிடுங்க. சொல்ல கஷ்டமா தான் இருக்கு. இருந்தாலும்.."

"சாரி..! அதானே சொல்லப் போறீங்க?" என்றாள் வினோதா.

"ஆமா.. அப்புறம் நீ?" என்று வினோதாவைப் பார்த்தாள் செல்லப்பா.

"நான் காத்து மாதிரி. எங்கேயாவது போவேன், வருவேன். இதுவரைக்கும் நான் இந்த விவகாரத்தில் இருக்கேன்னு யாருக்குமே தெரியாது. இதோ இவங்க மூணு பேரைத் தான் செக்ரெட்டரியேட்ல நுழைச்சு, நிறைய பேர் கண்ணில் பட வச்சு, சிசிடிவில முதற்கொண்டு பதிய வச்சிருக்கீங்க. அவங்களை சீக்கிரம் பேக்கப் பண்ணுங்க" என்றாள் வினோதா.

கூடவே, "ஆனா கர்ணபிரபு வர்றதுக்கு முன்னாடி இங்கே அவருக்கு ஆப்பு ரெடியா இருக்கும். அதை பப்ளிக்கும் எதிர்கட்சிகளும் பாத்துக்குவாங்க"

"எப்படி இவ்வளவு கான்ஃபிடென்ட்டா சொல்ற?" என்று செல்லப்பா கேட்டதற்கு "டிவியைப் பாருங்க", என்று தொலைக்காட்சியை இயக்கினாள்.

ஜெயந்த், வினோதா தனக்குக் கொடுத்த சின்னப் புள்ளிகளை வைத்துப் பெரிய கோலமே போட்டிருந்தான். அதைப்பற்றி மற்ற ஊடகங்களும் பேச ஆரம்பித்திருந்தன. "இந்த மாதிரி ஏதாவது நடக்கணும்னு தான் நினைச்சேன். உங்க மூலமா செய்தி பரவனும்கிறது தான் என்னோட ஐடியா. ஆனா கொஞ்சம் தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டுட்டேன்" என்றார் செல்லப்பா.

"இருந்தாலும் ஆதன்ட்டிக்கா ஃபைல்ஸ் எல்லாம் கொடுத்தது நீங்க தானே.. எனி ஹவ் தேங்க்ஸ்! இப்பவும் கர்ணபிரபு கைல விலங்கை மாட்டிடலாம், ஜெயில்லயே இருப்பாரு, அடுத்து மாதம் மும்மாரி பொழியும்னு எல்லாம் சொல்ல முடியாது. இவன் இல்லேன்னா இன்னொருத்தன் வந்துட்டு தான் இருப்பான். இவனே கூட தப்பிச்சாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல. ஆனா ஏதாவது ஒரு வகையில நம்ம எதிர்ப்பு தெரிவிச்சுக்கிட்டே இருக்கணும். அப்பத்தான் தப்பு செய்றவங்க கொஞ்சமாவது பயப்படுவாங்க. கேப் விட்டு தப்பு செய்வாங்க" என்றாள் வினோதா. மௌனத்தின் மூலமாய் எல்லாரும் அதை ஆமோதித்தனர்.


"சார் ஒரே ஒரு கேள்வி" என்றான் சண்முகசுந்தரம். பின்னே, அந்த மாடியில் மறைக்கப்பட்டிருக்கும் அந்த 70 அடி இடம் அவனுடைய கண்டுபிடிப்பு அல்லவா? அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? "சார் கிரவுண்ட் ஃப்ளோர்ல நார்த் வெஸ்ட்டா இருக்கிற காரிடர்ல மொத்தம் 210 அடி இருக்கு. ஆனா மாடில அதே காரிடர்ல 70 அடி குறையுது. அது சம்பந்தமாகவும் நாங்க தலையைப் பிச்சிக்கிட்டு இருக்கோம். அது என்னன்னு சொல்ல முடியுமா? இதுக்கும் அதுக்கும் எதுவும் தொடர்பு இருக்கா?" என்க,


"அதுவும் உங்க கண்ணுல பட்டுடுச்சா? அது ஒன்னும் இல்லப்பா. அதுக்கு நேரே மேலே இருக்கிற கட்டிடத்தோட சுவரில் மரம் வளர்ந்து விரிசல் விட்டுடுச்சு. இடிஞ்சு கீழ விழலாம்ங்கிற நிலைமை. இடிஞ்சு கீழே விழுந்துட்டாலோ இல்ல விரிசல் மத்தவங்க கண்ணுல பட்டுட்டாலோ சிக்கல். அதனால அப்படியே அந்த பிளாக்கை சுவர் வச்சு மறைச்சிட்டாங்க. லிமிடெட்டா கொஞ்சம் பேருக்குத் தான் இது தெரியும்"

"அவ்வளவு தானா? அவ்வளவே தானா?"

"அப்ப அதுல ஒண்ணுமே இல்லையா? நாங்க கூட கடத்தப்பட்ட சிலைகளை அங்கே வந்து ஒளிச்சு வச்சிருப்பாங்களோ, அரசாங்கக் கட்டிடம்னா யாரும் சந்தேகப்பட மாட்டாங்கல்ல அப்படி இப்படின்னு பல கற்பனை பண்ணி இருக்கோம்"


சண்முகசுந்தரத்தின் முதல் மாடி அப்பார்ட்மெண்டில் இருந்து செல்லப்பா விடை பெற, அவரை வழியனுப்பக் கீழே சென்றாள் பவித்ரா. "சார்! அப்புறம் எனக்கு எந்த ஊர்ல வேலைக்கு பிளான் பண்ணி இருக்கீங்க? அங்கே ஹாஸ்டல் அரேஞ்ச் பண்ணித் தர முடியுமா? தமிழ் மக்கள் இருக்கிற ஊரா இருந்தா நல்லா இருக்கும்" என்பது போன்ற சில கோரிக்கைகளுடன் பேசிக்கொண்டே படியிறங்க, பின் தொடர்ந்த சண்முகசுந்தரம்,

"சார்! பவித்ராவுக்கும் புனேல எனக்கு வேலை கொடுக்குற ஆபீஸ்லயே வேலை ஏற்பாடு பண்ண முடியுமா? நாங்க இனிமே ஒரே வீட்டில் தான் இருப்போம்" என்றான்.


திரும்பி அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் பவித்ரா. அதற்குப்பின் அஜித்குமார் வேக வேகமாக வர, "நீ என்னடா இவன் கிட்ட சொல்லி வச்சே? நீதானா இதுக்கு காரணம்?" என்று பார்வையாலே கேள்வி கேட்டவள், அவனை அருகில் கிடந்த பூந்தோட்டியை தூக்கித் தாக்குவது போல் உயர்த்த,

"டேய் அண்ணா! இப்படியா ப்ரபோஸ் பண்ணுவாங்க? பவித்ரா அக்காவுக்கு உன் மேல இன்ட்ரஸ்ட் இருக்கோன்னு லேசு பாசா சொன்னேன். அதுக்குள்ள தனி வீடு வரைக்கும் முடிவு பண்ணிட்டே? வாயே பேசாதவன் பேசினா இப்படித்தாண்டா பண்ணுவீங்க" என்று தலையில் கை வைத்து அமர்ந்தான்.

தேங்காய்க்குக் கல் எரியும் பொழுது தவறிப் போய் மாங்காயும் சேர்த்து விழுந்த கதையாக பவித்ராவுக்கு ஏதோ ஒரு வேலை கொடுக்கப் போய் அவள் நல்லதொரு வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டாள் என்பது சற்று ஆறுதலாக இருந்தது செல்லப்பாவுக்கு. இளைஞர்களின் செல்லச் சண்டைகளைக் கண்டு கொள்ளாமல் பெரிய மனிதராய் புன்னகையுடன் நகர்ந்தார்.

"ஜர் சார்! யுஎஸ்ல போய் இந்தியன் தாத்தா அவதாரம் எடுத்துராதீங்க!" என்று உரக்கக் கூறினான் அஜித்குமார்.

***


( நிஜக்கதை மற்றும் புனைவுக் கதை இரண்டுக்குமான பின் கதை- எபிலாக் விரைவில்...)
 
Last edited:
Top