கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தலைமைச் செயலகம் 2

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 2

"நான் ஒரு மூணு மாசம் ஏரியா பக்கம் இருக்க மாட்டேன். இன் பிளான்ட் டிரையினிங்க்காக மைசூர் போறேன். அங்க மொபைல் சோசியல் மீடியான்னு வர்றதுக்கு டைம் இருக்காது. அதனால நீ என்ன பண்ற, கனவுல வர்றதெல்லாம் அப்பப்ப எழுதி வைக்கிற.. இல்ல வாய்ஸ் மெசேஜ் போட்டுப் போட்டு வை.. நான் டைம் இருக்கப்ப கேட்டுக்கிறேன்"

பிரகல்யா சொல்லச் சொல்ல முகம் சுருங்கி விட்டது அனுஸ்ரீக்கு. "அட அட! என்னடி கல்யாணம் ஆகிப் புருஷன் வீட்டுக்கு போற பொண்ணு மாதிரி முகத்தை வச்சிருக்க.. எல்லார் மேலயும் இப்படி டிப்பன்டென்ட் ஆகக் கூடாது. மிஞ்சிப் போனா இன்னொரு ஆறு மாசம்.. அதுக்கப்புறம் படிப்பு முடிஞ்சுடும். எப்படியும் நாம பிரிஞ்சு தானே ஆகணும்"

"அதில்ல பிரகல்! நீ சொன்ன ஐடியாக்கு அப்புறம் உடனே என்னோட கனவை எல்லாம் ஒரு கதையா மாத்தி உன் கிட்ட ஓப்பீனியன் கேட்டுப் பழகிடுச்சா? இப்ப டைரி எழுதுற மாதிரி எழுதி சேர்த்து வைக்கணும்னு சொன்னா நான் என்ன பண்றது? வெளியே சொல்றப்ப தான் மைண்ட் ரிலாக்ஸ் ஆகுது. இல்ல என் கனவுகள் என் மனசைப் போட்டு அழுத்திக்கிட்டே இருக்கு" என்றாள் அனுஸ்ரீ.

"ஒரு ஐடியா சொல்லவா? கிட்ட வா!" என்ற பிரகல்யா, "ரெண்டு மூணு ஃபேக் ஐடி ஆரம்பி பேஸ்புக்ல.. ரீடர்ஸ் நிறைய இருக்கிற குரூப்பா பார்த்து சேர்ந்துக்கோ.. அதுல இஷ்டத்துக்கு அடிச்சு விடு. உன் அடையாளமும் தெரியாது. ஜாலியா மக்களோட எதிர்வினையைப் பார்க்கலாம். சரியா?" என்க,

"அடிப்பாவி! கேடி வேலையெல்லாம் என்னைப் பார்க்க சொல்ற?"

"ஏன் டி? இந்தியா அரசியலமைப்புச் சட்டத்தில் ஃபேக் ஐடி ஆரம்பிக்கிறது குற்றம்னு எங்கேயாவது சொல்லி இருக்கா என்ன?" என்று எதிர்ககேள்வி கேட்டாள் பிரகல்யா.

"இல்லையா பின்ன?" என்று அனு ஆச்சரியப்பட,


"அதெல்லாம் எனக்குத் தெரியாது. சோஷியல் மீடியா பிரபலமான இந்த அஞ்சாறு வருஷத்துல யாரும் சட்டம் போட்டதாவோ, அதை அப்டேட் பண்ணதாவோ எனக்கு ஞாபகம் இல்லை.. என் ரேஞ்சுக்கு நானே நாலு ஃபேக் ஐடி வச்சிருக்கேன்னா பார்த்துக்கோயேன்" என்றாள் பிரகல்யா.

அதிர்ச்சியில் அனுஸ்ரீ வாய் பிளக்க, "வேணும்னா ஒண்ணு செய்றேன்.. என்னோட ஐடில ரெண்டையும் பாஸ்வோர்ட்டையும் உனக்குக் குடுக்கிறேன்.. அதை வச்சு என்ஜாய் பண்ணு. இதுவும் ஒரு த்ரில்லிங்கான கேம் தானே? யார் கண்டது.. பின்னாடி இதையே வச்சு நீ ஒரு கதை எழுதினாலும் எழுதுவே" என்க, நிஜமாகவே தான் சமூக ஊடகங்களில் நடக்கும் கேலிக்கூத்துகளைப் பற்றியும் கதை எழுதினால் என்ன என்று தோன்ற ஆரம்பித்தது அனுஸ்ரீக்கு.


அவள் அப்படியே தூரத்தில் பார்த்து யோசிக்க ஆரம்பிக்க, அவள் தலையில் தட்டிய பிரகல்யா, "படிப்பு முக்கியம் பிகிலு! சைடுக்கு தான் இந்தக் கதை கிதை அதெல்லாம்.. அதுவும் மைண்ட் ரிலாக்சேஷனுக்காகத் தான். படிப்பைக் கோட்டை விட்டுடாதே.. எப்பவும் போலவே டாப்பராக இருக்கணும். சரியா?" என்றாள்.

"சொல்ல மறந்துட்டேனே.. நேத்து எங்க அப்பா ஃபோன் பண்ணி எனக்கு ஒரே அட்வைஸ். எப்பவும் படிச்சுக்கிட்டே இருக்காதே அனு. அப்பப்ப ரிலாக்ஸ் பண்ணு. டாப்பராவே இருக்கிறது பல விஷயத்துல டிஸ்அட்வான்டேஜ் தான். நான்லாம் அதனாலதான் இப்ப வரைக்கும் கஷ்டப்படுறேன்னு சொன்னார்"

"விடு விடு அவரோட ஒர்க் பிரஷர் அப்படி சொல்லிட்டார். இப்பல்லாம் சின்ன வயசுல படிப்புல டாப்பா இருந்த பேரன்ட்ஸ் பிள்ளைங்க கிட்ட கம்மியாக படின்னு சொல்றாங்க போல்.. எங்க அப்பா அம்மா அப்படி இல்லை. தினசரி மூணு வேலை போன் பண்ணி, படி படின்னு உயிரை வாங்குறது. நீ அதை எந்த விதத்திலும் மைண்ட்ல ஏத்திக்காதே. உனக்கு அது நன் ஆஃப் த பிசினஸ். புரியுதா?" என்றவாறு தன் பயண ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றாள் பிரகல்யா.


சிறிது நேரத்தில் அனுஸ்ரீயின் மொபைலில் டிங் என்று சத்தம் வந்துவிட சொன்ன மாதிரியே பிரகல்யா தான் போலியாக ஆரம்பித்திருந்த கணக்குகளின் ஐடியையும் அவற்றின் பாஸ்வேர்டையும் அனுப்பி இருந்தாள். 'அட நிஜமாகத்தான் சொல்லி இருக்காளா?' என்றபடி அந்த ஐடிக்களுக்குள் நுழைந்து என்ன நடக்கிறது என்று பார்த்தாள் அனுஸ்ரீ.

பார்க்க பார்க்க சுவாரசியமாகத்தான் இருந்தது. 'இனிமேல் தான் இந்த ஐடிக்களை மேய்க்க வேண்டும் என்றால் சிறிது நாட்கள் இதில் ஏற்கனவே வந்த பதிவுகளை வாசிக்க வேண்டும். ஒன்று கிடக்க ஒன்று போட்டு வைத்து, யாராவது கண்டுபிடித்து ஏதாவது பஞ்சாயத்து ஆகிவிடக்கூடாது, இருக்கிற பிரச்சினை போதாதா' என்று நினைத்தவள், அந்த ஐடியாவை ஓத்தி வைத்துவிட்டு கூகிள் டிரைவில் தலைமைச் செயலகம் என்று பெயரிட்ட ஃபோல்டரில் நேற்று தான் விட்ட இடத்தில் இருந்து தன் எண்ணங்களை கொட்ட ஆரம்பித்தாள்.


அனுஸ்ரீயின் கூகிள் டிரைவில் இருந்து:

உறங்கும் தருவாயில் பவித்ராவின் டிடெக்டிவ் மூளை விழித்துக் கொண்டது. புதிதாக உங்களுக்கு ஒரு பணி தருகிறோம் என்று அழைப்பு வந்ததிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை, சண்முகசுந்தரமும் அஜித்குமாரும் சொன்ன விஷயங்களை ஒன்று விடாமல் வரிசைப் படுத்திப் பார்த்தாள்.

"நீங்க ரெண்டு பேரும் நடந்ததை எல்லாத்தையும் அப்படியே சொல்லுங்க" என்று கேட்டு குறிப்பும் எடுத்துக் கொண்டாள். அகதா கிறிஸ்டியின் கதைகளைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்ததிலிருந்து பேசுபவர்களிடம் நுணுக்கமாக விஷயத்தை கேட்டுக் கொள்ளும் பழக்கம் தானாகவே ஏற்பட்டிருந்தது. லைட்டைப் போட்டுக் கொண்டு கையடக்கக் குறிப்பேட்டை எடுத்து, அதில் குறித்து வைத்திருந்தவற்றை வாசித்தாள். காஃபி ஷாப்பில் வைத்து, வரிசையா சொல்லுங்க என்று பவித்ரா கேட்டு, இவர்கள் சொல்லச் சொல்ல அவள் ஒவ்வொன்றாக எழுதி வைத்ததை சண்முகசுந்தரமும் அஜித்குமாரும் வித்தியாசமாகத்தான் பார்த்தார்கள். இருந்தாலும் நடந்ததைச் சொன்னார்கள்.

சண்முகசுந்தரம் அவனோட ஐடி மாதிரியே ஒரு ஐடில இருந்து மெயில் வந்திருக்குன்னு சொன்னான், அதுவும் அவன் தன்னோட மேட்ரிமோனி ப்ரோஃபைல மாத்தின அஞ்சாவது நிமிஷம். எதுவும் ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ் சமாச்சாரமா? இல்லை வேவு பாக்குறாங்களா?

அஜித் குமார் இப்ப சரவணன்கிற பெயரில் தான் வேலைக்கு சேர்ந்து இருக்கான். சரவணனோட கையெழுத்து மாதிரியே அந்த தபால்ல உள்ள கையெழுத்து இருந்துச்சாம். எனக்கும் ஃபோன் பண்ணின பொண்ணோட குரலும் என் குரலும் ஒண்ணு போலவே இருக்கிறதா தோணுச்சு. இந்த மூன்றும் எங்களுடைய மன பிரம்மையா இல்ல நிஜமாகவே பிளான் பண்ணப்பட்ட ஒண்ணா? என்று யோசித்தாள். திட்டமிடப்பட்டவை என்றால், தங்களை ஈர்ப்பதற்காக கவனமாக பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள், உண்மையிலேயே விஷயமும் அதை நடத்தும் ஆட்களும் பெரிதுதான் என்று அர்த்தம் என்று நினைத்தாள்.

அன்று அந்த ஹாஸ்டலில் அவள் தங்கியிருக்கும் கடைசி தினம். மறுநாள் நிச்சயம் ஏதாவது இடத்திற்குப் போய்த் தான் ஆக வேண்டும். காதல் படத்தில் வருவது போல பஸ்ஸில் ட்ரெயினில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணித்தால் சில நாட்களை ஓட்டலாம். இல்லையென்றால் ஒரு ஐம்பதாயிரம் இருந்தால் ஏதாவது கோர்ஸ் படிக்கிறேன் என்று ஹாஸ்டலுடன் கூடிய கல்லூரியில் சேரலாம். அதற்கும் வழி இல்லை.
இந்தப் பரந்த பாரத தேசத்தில் ஒரு பெண்ணுக்கு எளிதாக இடம் கிடைத்து விடாது. அதனால் இந்த வேலையை விட்டு விட அவளுக்கு சுத்தமாக மனதில்லை.

பவித்ராவின் பூர்வாசிரமக் கதை பல சீரியல் நாயகிகளையும் குடும்ப நாவல் நாயகிகளையும் ஒத்தது. ஆம் நீங்கள் நினைப்பது சரிதான். அனாதை இல்லத்தில் வளர்ந்தவள். ஓரளவுக்கு படித்து வேலைக்கு வந்த பிறகு, இந்த
வொர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டலில் வந்து சேர்ந்தாள். பாழாய்ப் போன கொரோனா வந்தாலும் வந்தது, பவித்ராவுக்கு வேலை போனது. ஹாஸ்டலில் இருந்த பலருக்கும் வீட்டிலிருந்தபடியே பணி செய்யும் வாய்ப்பு வந்தது. ஹாஸ்டலை நடத்தி வந்த அக்கா கொரோனாவால் இறந்து போனார். அவரது குடும்பத்தார்கள், "பில்டிங் ஓனர் கொடுத்த அட்வான்ஸ் கழிஞ்ச உடனே காலி பண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டார். இன்னும் மூணு மாசம் இருக்கலாம். அதுக்குள்ள நீங்க எல்லாம் வேற இடத்தைப் பார்த்துட்டு போயிடுங்க" என்று இவளையும் இன்னும் இவளைப் போன்ற இரண்டு போக்கிடம் இல்லாதவர்களையும் பார்த்துச் சொல்லி விட்டார்கள்.

நாம மூணு பேரும் சேர்ந்து ஒரு வீடு பார்த்து போவோமா என்று அவர்களிடம் கேட்பதற்குள், அந்த இரண்டு பேரும் ஏற்கனவே சைட் அடித்துக் கொண்டும் கமிட்மெண்டிலும் இருக்கிறோம் என்று சொல்லி, திருமணம் செய்து கொண்டு வெளியேறி விட்டார்கள். இங்கு சமையலுக்கு உதவியாக இருந்த சரோஜாக்காவும் இவளும் மட்டும் தான் இப்போது. சரோஜா அக்காவுக்கு வீடு இருக்கிறது, அங்கு படுக்க இடம் இல்லாததால் இவ்வளவு நாள் ஹாஸ்டலில் படுத்துக் கொண்டிருந்தாள். இனி வீட்டுக்கு போய் விடுவாள். நாளை காலை சாவியை கொடுக்க வேண்டும். இந்த அளவுக்கு அவர்கள் அனுமதித்ததே பெரிய விஷயம்.

சரி போய் தான் பார்ப்போமே என்று நினைத்தவள் அன்றைய தினம் நடந்ததை வரிசைப் படுத்தி நினைத்துப் பார்த்தாள். போனவுடனேயே வேலைக்கு சேர்ந்ததாக சில படிவங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். அட்வான்ஸாக இதை வைத்துக் கொள் என்று ஒரு 5000 ரூபாய் கொடுத்தார்கள். அந்த பணத்தை கையில் வாங்கிய உடனே வயிறு நிறைந்தது போல் இருந்தது பவித்ராவுக்கு, குறைந்தது ஒரு மாதத்துக்கு இதை வைத்து நன்றாகச் சாப்பிடலாமே. அஜித்குமாருக்கும் ஐயாயிரம் கொடுத்தார்கள். அவன் அதை வாங்கிக் கொண்டு அஜித் என்று கையெழுத்திடப் போக, திடீரென்று சுதாரித்தவனாக சரவணன் என்று வளைத்து வளைத்துக் கையெழுத்து போட்டுவிட்டு அப்பாடி என்று வெளியே வந்தான். சண்முகசுந்தரம், இதெல்லாம் எனக்கு டீ குடிக்கிற காசு என்பது போல் அதை வாங்கி பாக்கெட்டில் செருகினான்.


பணத்தைக் கொடுத்த கையோடு ஒரு டீயும் பிஸ்கட்டும் கொடுத்து வெகு நேரம் காக்க வைத்தார்கள். தலைமைச் செயலகம் என்பது ஒரு சிறிய ஊர் அளவுக்கு இருக்கும் என்று பவித்ரா எதிர்பார்க்கவில்லை. அதில் ஒதுக்குப் புறமாக, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடுவேன் என்பது போல் இருந்த ஒரு அலுவலகத்தில் தான் இவர்கள் அமர வைக்கப்பட்டிருந்தார்கள்.‌

மூன்று பேரையும் தனித்தனியாக அறைக்குள் அழைத்துச் சென்றவர்கள், பவித்ராவிடம், "ஹையர் எல்லாம் பாஸ் பண்ணி இருக்கீங்க. உங்களுக்கு ஃபுல்லா டைப் அடிக்கிற வொர்க் தான். குறைஞ்சது எட்டு மணி நேரம் விடாமல் டைப் அடிக்கணும். முடியுமா?" என்றார்கள்.

முடியும் என்று தலையை ஆட்டினாள் பவித்ரா. "பாருங்கம்மா.. நாங்க கொடுக்கிறது ஏன் என்னனு கேக்காம சிஸ்டம்ல டைப் பண்ணிக்கிட்டே இருங்க. அப்பப்ப பென்டிரைவ் கொடுப்போம். அதை காப்பி பண்ணி இதோ இந்த கவர்ல போட்டு உங்களுக்கு அன்னன்னைக்கு மெயில் அனுப்புவோம், அந்த அட்ரஸ் எழுதி இந்த சரவணன் கிட்ட கொடுத்து விடுங்க. அதோட உங்க வேலை முடிஞ்சுது. ஏன் எதுக்குன்னு எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது. மத்த ஆபீஸ் ஸ்டாஃப்ஸ், கொலீக்ஸ் கூட அனாவசியமா எந்த பேச்சும் இருக்கக் கூடாது. முக்கியமா நாங்க கொடுக்கிற டீடைல்ஸ், அட்ரஸ் எதையும் நீங்கள் சேவ் பண்ணி வைக்கக் கூடாது" என்றார் தலையில் பாதி நரைத்திருந்த அந்த பெரிய மனிதர். எதுவும் சீரியலில் அப்பாவாக நடிக்கிறீர்களா என்ன என்று அவரிடம் கேட்க வேண்டும் போல் தோன்றியது. அடக்கிக் கொண்டாள் பவித்ரா.

இவளுக்கு முன்னால் சண்முகசுந்தரமும் பின்னால் அஜித்குமாரும் சென்று வந்தார்கள். 'இவங்க கூட தான் வேலை பார்க்கணுமா, வேற யாரும் லேடிஸ் கிடையாதா' என்று நினைத்தவள் இவர்களின் எண்ணை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். சண்முகசுந்தரமும் இவளைப் பார்த்து அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தான் போலும், 'ஒரு பொண்ணு கிட்ட போய்
ஃபோன் நம்பர் கேட்டா கொடுப்பாளா' என்பது போல் பார்த்தான்.

யோசிக்காமல் தன் மொபைல் எண்ணை கையில் எழுதி அவனிடம் நீட்டினாள் பவித்ரா. அவன் அங்கிருந்த நாற்காலியில் வசதியாக உட்கார முடியாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது இவளுக்கு வசதியாக போயிற்று. மொபைலில் பவித்ராவின் எண்ணைப் பதிந்து கொண்டு, தன்னுடையதிலிருந்து ஒரு குறுந்தகவல் அனுப்பினான்.

'அந்த மூணாவது ஆள் வந்தவுடன் அவர்கிட்டயும் நம்பர் வாங்கிடுங்க.. அப்புறம் பேசுவோம்' என்று பவித்ரா சண்முகசுந்தரத்திற்கு மெசேஜ் அனுப்பினாள். பேசினால் என்ன தான் செய்து விடுவார்கள், இங்கு கண்காணிக்க யாரும் இல்லையே என்று தோன்றினாலும் வாய் விட்டுப் பேசிக்கொள்ள தயக்கமாக இருந்தது. ஏதோ பெரிய திருட்டுத்தனத்தை செய்து முடித்தது போல் இருவருக்கும் குறுகுறுவென்று இருந்தது.


எப்படி இந்த வேலை மேல் சந்தேகம் வந்தது, எப்படி இரண்டு பேருக்கும் ஒன்று போல மறைவாக, எண்களைப பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தோம் என்று இருவருக்குமே புரியவில்லை. அதைத்தொடர்ந்து சண்முகசுந்தரம் அஜித்குமாரிடம் பேச, அதன்பின் நடந்ததுதான் அவர்கள் மூவருக்குமான அந்த காபி ஷாப் உரையாடல். தங்களுக்குள் அறிமுகம் செய்து கொண்டார்கள்.

சண்முகசுந்தரம், "என்கிட்ட நிறைய பணம் இருக்கு.. உறவுகள் இருந்தும் இல்லை. எத்தனையோ வேலை பார்த்துட்டேன். எதுலயும் மனசு திருப்தி அடைய மாட்டேங்குது. அதுதான் சம்திங் ஃபிஷ்ஷி என்று தெரிஞ்சும் இதை ஏத்துக்கிட்டேன்" என்றான் தடாலடியாக.


அஜித்குமாருக்கு தான் மட்டுமே காத்து வந்த ரகசியம் மனதை அழுத்தியிருக்கும் போல, எடுத்த உடனே சொல்லி விட்டான் "நான் ஆள் மாறாட்டம் பண்ணி தான் வந்திருக்கேன். ஊரை விட்டு ஓடி வந்தவன்" என்று.

அப்போது தான் பவித்ராவுக்குத் தோன்றியது, மூன்று பேருக்குமே இப்போதைக்கு உறவுகள் யாருமே இல்லை என்பதும், தாங்கள் காணாமல் போனால் யாரேனும் தேடுவதற்கு குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் என்றும்.
 
Last edited:

Latha S

Administrator
Staff member
அனு ஸ்ரீ யின் கற்பனை டிரைவ் மர்மமாக வே இருக் கும்.. சுந்தரம், அஜித் சரவணன், பவித்ரா இவங்களுக்கு யாருமே இல்லைன்னா ஏதோ தப்பான காரியம் செய்ய யூஸ் பண்ணிப்பாங்களா இவங்களை..
 
Top