கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தலைமைச் செயலகம் 3

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 3

அனுஸ்ரீக்கு அன்று மனதே சரியில்லை. அவள் அம்மா அழைத்து, "அட்வான்ஸ் பர்த்டே விஷஸ் செல்லம்! காலையில குளிச்சிட்டு கோயிலுக்குப் போயிட்டு காலேஜுக்குப் போ" என்றார்.

"போங்கம்மா எனக்கு வர வர சாமி மேலே நம்பிக்கையே இல்லை. அவர் நம்ம குடும்பத்துக்குக் குடுத்த கஷ்டத்துக்கு நான் எதுக்கு அவரைப் போய் பாக்கணும்? ஒன்னும் வேண்டாம்" என்க,

"கடவுளுக்கு எதை எப்ப கொடுக்கணும்னு நல்லா தெரியும் டா.. அம்மாவுக்காகப் போயிட்டு வா.. இங்கே இருந்திருந்தேன்னா உனக்குப் பிடிச்ச சக்கரைப் பொங்கல் செஞ்சு குடுத்திருப்பேன்.. இப்ப உன் பேரைச் சொல்லி நம்ம பக்கத்து பிள்ளையார் கோயிலில் பூஜைக்கும் பிரசாதத்துக்கும் சொல்லி இருக்கேன்" என்றார்.

"ம்ஹ்ம்.. எனக்கு பர்த்டே. ஆனா உங்களுக்கெல்லாம் மட்டும் சக்கரை பொங்கல். டூ உங்க கூட!" என்றாள். அவளிடம் மிச்சமிருக்கும் குழந்தைத்தனம் அம்மா அப்பாவிடம் மட்டும் வெளிவரும்.

யாரு கண்ணா உனக்கு லக் இருந்தா உனக்கு சக்கரை பொங்கல் கிடைச்சாலும் கிடைக்கும் என்று அம்மா கூட

"அம்மா.. இந்த பெங்களூரு ஊருல எனக்கு யாரு குடுக்கப் போறாங்க? ஏதோ சொல்றீங்க, போங்க.." என்றாள் அனுஸ்ரீ.

சென்னையில் அவளது குடும்பம் இருக்க பெங்களூரில் ஹாஸ்டலில் இருந்தவளுக்கு வழக்கமான ஹாஸ்டல் நண்பர்கள் செய்யும் பிறந்தநாள் கொண்டாட்டங்களுடன் பிறந்த நாளுக்கு முந்தைய நாள் கழிந்தது. 12 மணிக்கு கேக் வெட்டி அவள் முகத்தில் பூசி ஒரு அரை மணி நேரம் இருந்து ஜாலி பண்ணி விட்டுச் சென்றார்கள் தோழிகள். பிரகல்யா இல்லாமல் அவளுக்கு என்னவோ போல இருந்தது. வெகு நேரம் கழித்தே தூங்கினாள்.

காலையில் எழுந்திருக்கும் பொழுது சாப்பிட்டு விட்டுக் கையைக் கழுவாதவள் போல கையை நீட்டியே வைத்திருப்பதைப் பார்த்தாள். எழுந்து அமர்ந்து பிசுபிசுப்பாக ஏதாவது இருக்கிறதா, எறும்பு எதுவும் வந்ததா என்று தேடினாள். அப்போதுதான் தோன்றியது இவ்வளவு நேரம் நிஜம் என்று நினைத்தது வழக்கம் போல கனவு தான் என்று.

அசுவாரசியமாக அலைபேசியை எடுத்து ஆராய்ந்தவள் வழக்கமாகக் காலை எழுந்தவுடன் பார்க்கும் கதைவானம் ஆப்பிற்குள் (app) செல்ல, அன்றைய தலைப்பு 'பிரசாதம்' என்று கொடுத்திருந்தார்கள். அந்தத் தளத்தில் தினந்தோறும் ஒரு தலைப்பு தருவார்கள், அதைப் பற்றி குட்டிக் கதை எழுத வேண்டும், கவிதை கூட எழுதலாம். பல் துலக்கக் கூடப் போகாமல் வாய்ஸ் டைப்பிங் செய்து தனக்கு வந்த கனவை, கற்பனை சேர்த்து எழுதினாள்.

**

"ஹாப்பி பர்த்டே அனு! உனக்கு லக் இருந்தா கடவுள் உனக்கு நாளைக்கு சர்க்கரைப் பொங்கல் கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணுவார்" என்றார் அம்மா…

என்று துவங்கியவள் அதன்பின் தன் கனவை அப்படியே வார்த்தைகளால் வடித்தாள்.

குளித்து வெளியே வந்தேன். இந்த பெங்களூரு ஊரில் யார் சக்கரை பொங்கல் தரப் போகிறார்கள், 'ஏ கடவுளே உனக்கு ஒரு சவால்!' என்று நினைத்துக் கொண்டே வர, ஹாஸ்டல் வாசலில் பூவிற்கும் பாட்டி ஒரு தொன்னையைக் கொடுத்து, "இந்தா பாப்பா பிரசாதம்! சர்க்கரைப் பொங்கல் இருக்கு" என்று தொன்னையில் ததும்பி வழிந்த நெய் வடியும் கோவில் பொங்கலை நீட்டினார். அப்போதுதான் 'நாளைக்கு எனக்குப் பிறந்தநாள் பாட்டி! மல்லிகைப்பூ கொண்டு வாங்க' என்று அவரிடம் சொன்னது நினைவுக்கு வந்தது.

'அப்ப கடவுள் இருக்கானா குமாரு?' என்று யோசித்துக் கொண்டே அந்த சக்கரைப் பொங்கலை அப்படியே வாயில் சரித்துக் கொண்டேன். "தேங்க்ஸ் பாட்டி!" என்றபடி பூவையும் வாங்கிக் கொண்டு ஹாஸ்டலில் இருந்து கல்லூரிக்குச் செல்லும் பாதையில் நடந்தேன். அரை கிலோ மீட்டர் தூரத்திற்குள் என் அன்புக்குரிய ஜூனியர் மாலா என்னை நிறுத்தினாள்.

"அக்கா எங்க அம்மா அப்பாவுக்கு வெட்டிங் டே! இந்தாங்க சர்க்கரைப் பொங்கல்" என்றாள் அவளும்.

'அட ரெண்டாவது லட்டு திங்க ஆசையா!' என்று மகிழ்ந்த படி அந்த டிபன் பாக்ஸை வாங்கிப் பையில் வைத்துக் கொண்டேன். விறுவிறுவென்று வகுப்பறையை நோக்கி நடந்தேன். வகுப்பறை வாயிலில் குண்டுப் பையன் கோக்கு மாக்கு கிளாஸ் ரெப் யுகேந்திரன் வழியை அடைத்துக் கொண்டு நின்றான்.

'வழியை விடுடா தடிமாடு!' என்று சொல்லப் போனேன். அதற்குள், என்னிடம் சாக்லேட் பெட்டி ஒன்றை நீட்டி, "இன்னிக்கி நம்ம காலேஜ் ஃபவுண்டரோட பர்த்டே. இப்ப எல்லாருக்கும் சாக்லேட். அப்புறம் லேடீஸ் ஹாஸ்டல், ஜென்ட்ஸ் ஹாஸ்டல் இரண்டிலயும் மத்தியானம் ஸ்பெஷலா சர்க்கரைப் பொங்கல்" என்றான்.


கடவுளிடம் சவால் விட்டதை நினைத்து வெட்கம் அடைந்தேன். இருந்தாலும் பிறந்தநாள் இவ்வளவு இனிமையாக அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. ரெப் கொடுத்த சாக்லேட்டை வாயில் போட்டுக் கொண்டேன். தித்திப்பாக தொண்டைக்குள் இறங்கியது.

போனால் போகிறது, மாலையில் கோயிலுக்குப் போய் கடவுளைப் பார்த்து வரலாம் என்று நினைத்தேன்

**

திருத்தங்கள் செய்து உடனே அனுப்பினாள். தலைப்பு கொடுத்தே பத்து நிமிடம் தான் ஆயிருந்நது, அதற்குள் உப்புமா கதையைத் தயார் செய்து விட்டேனே என்று தன்னைத் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டாள். ஹாஸ்டலில் காலை உணவை உண்ணப் போனவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. கல்லூரி நிறுவனரின் பிறந்தநாள் என்று சேமியா கேசரி ஸ்பெஷலாகப் போட்டிருந்தார்கள்!

வாழ்த்துக் கூற அழைத்த பிரகல்யாவிடம் கனவை விளக்கி விட்டு, "பாருடி அதிசயத்தை! எனக்குக் கனவுல வந்த மாதிரியே இன்னிக்கு ஃபவுண்டரோட பர்த்டேயாம்.. அதுக்கு சர்க்கரைப் பொங்கல் இல்லைன்னாலும் வேற ஏதோ ஸ்வீட் போட்டு இருக்காங்க!" என்று ஆச்சரியப்பட்டாள் அனுஸ்ரீ.

"இதுல என்னடி அதிசயம்? போன வருஷம் உன்னோட பர்த் டே அப்பவே ஃபவுண்டருக்கும் பர்த்டே வந்துச்சுல்ல.. நாம கூட நம்மளோட பிறந்த நாளை ஷேர் பண்றவங்க யார் யாருன்னு டிஸ்கஸ் பண்ணினோமே, மறந்துட்டியா? அது உன் அடி மனசுல பதிஞ்சிருக்கும்.. அது தான் கனவா வந்திருக்கும். நான்தான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன். ஆழ் மனசுல இருக்குற எண்ணங்கள் தான் கனவா வரும்னு" என்றாள் பிரகல்யா.

"ஆமால்ல! இப்ப நீ சொன்ன அப்புறம் தான் ஞாபகம் வருது.. ஆனா போடி.. நான் கூட எனக்கு எதுவும் கடவுள் அருள், இஎஸ்பி எதுவும் வந்துடுச்சோ, கனவுல நடக்கிறது நிஜமாவும் நடக்குதே அப்படின்னு ஆச்சரியப்பட்டு இருந்தேன்.. நீ சயின்டிஃபிக் எக்ஸ்ப்ளனேஷன் சொல்லிக் கவுத்திட்டே.. ப்ச்.." என்றாள் அனுஸ்ரீ நிஜமான வருத்தத்துடன்.

"சட்டு சட்டுன்னு சந்தோஷப்படுறது, அப்புறம் உடனே கோவப்படுறது.. இதெல்லாம் உடம்புக்கு நல்லது இல்ல.. பர்த்டேயை ஜாலியா என்ஜாய் பண்ணு என்னோட ப்ரஸன்ட் ஹாஸ்டல் அட்ரஸ் ஷேர் பண்றேன்.. ஸ்விக்கில ஒரு மட்டன் பிரியாணி ஆர்டர் போட்டு விடு.. நானும் உன் பர்த்டேயை இங்க வச்சே கொண்டாடிக்கிறேன். அப்புறம் மூளை ரொம்ப சுறுசுறுப்பா இருந்துச்சுன்னா ஒன்னு பண்ணு.. அந்த பவித்ரா கதை இல்ல.. அதை இன்னும் கொஞ்சம் யோசிச்சோ, இல்ல உன் கனவுகள்ல இருந்து பாய்ண்ட்ஸ் எடுத்தோ எழுதி எக்ஸ்டென்ட் பண்ணு.. எழுத்து கூட்டி படிக்க கஷ்டமா இருந்தாலும் இன்ட்ரஸ்டிங்கா தான் இருக்கு.. புதுசா ஒரு ஆப் கண்டுபிடிச்சு இருக்கேன்.. டெக்ஸ்ட்டை காப்பி பண்ணி அதுல பேஸ்ட் பண்ணிணா அங்கே ஒரு மெக்கானிக்கல் வாய்ஸ் அப்படியே வாசிச்சுக் காண்பிக்குது.. அதை சொல்ல வைச்சுக் கேட்டுக்குறேன்" என்று இணைப்பைத் துண்டித்தாள் பிரகல்யா.

'அட! நம்ம கனவு அவ்வளவு நல்லாவா இருக்கு? சரி இன்னிக்கு மத்தியானம் ஒன் ஹவர் தான் கிளாஸ்.. அந்தக் கதையை இன்னும் கொஞ்சம் எழுதுவோம்..' என்று யோசித்தபடி வகுப்புக்குக் கிளம்பினாள் அனுஸ்ரீ. கோக்குமாக்கு குணசேகர் எதுவும் சாக்லேட்டுன் நிற்கிறானா என்று பார்த்தாள். கனவில் இன்னொரு பகுதியும் நிறைவேறாதா என்றொரு எதிர்பார்ப்பு தான். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. அவன் பாட்டுக்கு உட்கார்ந்து காதைக் குடைந்து கொண்டிருந்தான். வகுப்பில் தான் வழக்கமாக உட்காரும் இடத்தில் அமர்ந்து கற்பனை உலகிற்குள் நுழைந்தாள் அனுஸ்ரீ.


அனுஸ்ரீ தன் கூகிள் டிரைவில் இணைத்த பகுதிகள்:


சண்முகசுந்தரத்துக்குக் கொடுக்கப்பட்டது அவனுக்கு மிகவும் பழக்கமான பணி தான். ஏகப்பட்ட கம்ப்யூட்டர் சிபியூக்களை (CPU) ஒரு அறையில் அடுக்கி வைத்திருந்தனர். இந்தியாவிற்குள் கம்ப்யூட்டர் என்ற ஒரு வஸ்து வர ஆரம்பித்தவுடன் வந்த அரதப் பழமையான பாடல்கள். இதுவரை வந்த முதல் கணிணி தொடங்கி சமீபத்தியவை வரை ஏகப்பட்ட மாடல்கள் அதில் இருந்தன. அங்கிருந்த ஒரே ஒரு மானிட்டரில் இவற்றை ஒவ்வொன்றாக இணைக்க வேண்டும். அவற்றில் இருக்கும் ஃபைல்களை வரிசைப்படுத்த வேண்டும். ஏதாவது சப்போர்ட் செய்யாத பைலாக இருந்தால் அதை பொருத்தமானதாக மாற்ற வேண்டும். ஆயிரக்கணக்கான ஃபோல்டர்களில் எஸ் என்று எழுத்தில் துவங்கும் ஃபோல்டர்களை மட்டும் பிரித்தெடுத்துத் தனியாக ஒரே ஒரு சிபியூவில் ஒட்ட வேண்டும்‌ இதுதான் அவனுக்குக் கொடுக்கப்பட்ட பணி.


கணிப்பொறியில் புலியான சண்முகசுந்தரத்திற்கு இதெல்லாம் தண்ணீர் பட்ட பாடு. ஏழாம் வகுப்புப் படிக்கும் பொழுதே இதையெல்லாம் அவன் அநாயாசமாகச் செய்து விடுவான். இதற்கு ஏன் என்னைக் கூப்பிட்டார்கள் என்று யோசித்தான். ஏனென்றால் அவனுக்கு அவனது பழைய கம்பெனியில் இரண்டு லட்சம் சம்பளம் கொடுத்தார்கள். அதுக்கு முந்தைய கம்பெனியில் அதை விட அதிகம். சண்முகசுந்தரத்தின் பிரச்சனையே அவனால் மூன்று மாதத்திற்கு மேல் ஒரே இடத்தில் வேலை பார்க்க முடியாது. எப்படி அவனால் பத்து நிமிடத்துக்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க முடியாதோ, அதே மாதிரி.

மற்றவர்களுடன் பேச ஆசைப்படுவான் ஆனால் அவர்களுக்கும் இவனுக்கும் ஒத்து வராது‌ இவனும் எவ்வளவோ முயன்று பார்ப்பான் தான். சண்டை இருக்காது, வாக்குவாதம் இருக்காது ஆனால் இனியதொரு நாளில் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விடுவான். 'என்னைக்கானாலும் இவன் சீக்கிரமாப் போயிருவான்னு தெரியும்' என்று அவர்களுக்குள் பேசிக் கொள்ளும் ஊழியர்கள் வருத்தத்தையும் வெளிப்படுத்துவார்கள். மேலதிகாரிகளுக்கு இவனின் அதிமேதாவித்தனத்தை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என்ற வருத்தமும் இருக்கும், 'அப்பாடா போயிட்டான்! இல்ல நம்ம இடத்துக்கு போட்டியா வந்துடுவான்' என்ற நிம்மதியும் இருக்கும்.

இப்படியாக பல பணியிடங்களுக்கு மாறி மாறி வந்த சண்முகசுந்தரத்திற்கு கணிப்பொறியில் என்னென்னவெல்லாமோ தெரியும். இப்படி 'சப்பை மேட்டர்' செய்யச் சொல்வார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. இதுவரை வேலை பார்த்த இடங்களில் சந்தித்தவர்களை விட பவித்ராவையும் அஜித்குமாரையும் இவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால் அவர்களுடன் இவனாகப் பேச்சு கொடுக்க முயலவில்லை. இருவரும் பேசுவதைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான்.

'இந்த வேலையே டெம்பரெரியா தான் இருக்கும் போல.. எப்படியும் மூணு மாசத்துல அவங்களை அனுப்பி விடுவாங்கன்னு உறுதியாக தோணுது. அதுவரைக்கும் பெருசா எந்த பிராப்ளையும் மாட்டிக்காம பாக்கணும் அதுக்குள்ள நானும் வேற வேலை தேடுறேன்" என்று பவித்ரா கூற,

"ஜெயில்ல போட்டுருவாங்களோ? இல்லீகல் வேலையா இருக்குமோ?" என்று கேட்டான் அஜித்குமார். அவனுக்கு இருந்தது போன்ற பயன்கள் சண்முகசுந்தரத்துக்கு இல்லை. என்னதான் வரட்டும் பார்ப்போமே, ஜெயிலுக்கு போனாலும் தான் என்ன, அங்கு சுற்றி நிறைய மனிதர்கள் இருப்பார்கள் அல்லவா என்று நினைத்தான்.


இந்த உலகில் அவன் பயப்படும் ஒரே விஷயம் தனிமை. நினைவு தெரிந்தது முதல் தனியாகவே இருந்து பழகியவன். சில சமயங்களில் தனிமை ரொம்பவும் பயமுறுத்தும். கிளம்பிச் சென்று ரயில் நிலையம், கோவில், கட்சிக் கூட்டங்கள் போன்ற கூட்டமான இடங்களில் அமர்ந்து கொள்வான். சுற்றிலும் யாராவது எதையாவது பேசிக் கொண்டிருப்பதே அவனுக்கு ஆறுதலாக இருக்கும். கை கொள்ளாத பணமிருந்தும் அவனால் தனிமையைப் போக்க முடியவில்லை. அவனுடைய கதை வேறு மாதிரியானது. குடும்பம் இருந்தும் இல்லை. அம்மா ஒரு நாட்டில், அப்பா ஒரு நாட்டில் இருக்கின்றனர். இருவருக்கும் வெவ்வேறு குடும்பங்கள் இருக்கின்றன. இவனுக்கு இரண்டு தாத்தா வழிகளிலுமிருந்து வந்த சொத்துக்கள், அது போக பெற்றவர்களும் கணக்கில் போடும் பணம், எது இருந்தும் துணை தான் இல்லை.

தன் தனிமை பொறுக்க முடியாமல் 25 வயதிலேயே அனைத்து திருமணத் தகவல் மையங்களிலும் தன் பெயரைப் பதிந்து வைத்திருக்கிறான். உடற்பருமனும் உடன் யாரும் இல்லாததும் பெரும் குறைகளாக இருக்க, அவனுடைய அதிகபட்ச செல்வம், பலனை விட அதிகம் பாதிப்பையே தந்தது.

எளிமையாக உடுத்துவான், பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துவான், இருந்தாலும் இவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு ஏமாற்றுவதற்காக யாராவது நெருங்கி வருவார்கள். அதை உணர்ந்த அடுத்த நிமிடம் விலகி விடுவான். சில சமயங்களில் உண்மையான நட்புக்களையும் இழந்ததுண்டு.

ஒருவேளை போகப் போக இன்னும் கடினமான வேலைகளை கொடுப்பார்களோ, வேறு ஏதேனும் சைபர் கிரைம், ட்ராக்கிங், ஹேக்கிங் என்று செய்யச் சொல்வார்களோ, போகிறவரை போவோம் என்று முடிவு செய்து கொண்டு அன்றைய தினத்தின் பணியைத் தொடர்ந்தான். வேறு யாராக இருந்திருந்தாலும் அந்த எஸ் குறியிட்ட ஃபோல்டர்களில் என்ன இருக்கிறது என்று வாசித்து, இந்த வேலை எதற்கானது என்று ஆராய முற்பட்டிருப்பார்கள். இவனுக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. ஃபார்மட் சப்போர்ட் ஆகிறதா என்பதை மட்டும் பார்த்துப் பார்த்து ஃபைல்களை சேமித்தான்.


பவித்ராவுக்கும் அஜித் குமாருக்கும் அன்றைய தினம் பெரிதாக எந்த வேலைகளும் இல்லை. அன்று மாலை பக்கத்து அலுவலகத்தில் யாரோ ரிட்டையர்டு ஆகிறார்கள் என்று சொல்லி ஸ்வீட் காரம் காபி கொடுக்க, அப்பாடி ராத்திரி சாப்பாட்டை இப்பவே முடிச்சுக்குறேன் செலவு மிச்சம் என்று எண்ணத்துடன் களம் இறங்கினான் அஜித்குமார். பவித்ரா இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி தன் அணியினரிடம் ஏதாவது மந்திராலோசனையில் ஈடுபட முடியுமா என்று பார்த்தாள்.

கனவுகள் பூக்கும்
❤️
 
Last edited:

Latha S

Administrator
Staff member
அனு ஸ்ரீ ரொம்பவே கனவு காண்கிறாள். ஏதேட்சியா நடபதெல்லாம் நான் கண்டவை என எண்ணுவது எதனாலோ? எதாவது வியாதியா..

அவ டைரி குறிப்புகள் ல சுந்தரம் கொஞ்சம் வித்தியாசம்..

போகப்போக பார்ப்போம். எப்படி அணுவின் கற்பனைகள் அவள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்து மா என்று
 
Top