கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தலைமைச் செயலகம் 5

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 5

"இந்தாங்க.. இந்த பில்டிங் கட்டும்பொழுது இதுக்குப் போட்ட பிளான். அதுக்கப்புறம் புதுசு புதுசா கட்டடங்கள் சேர்த்து கட்டி இப்போ ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்த கட்டிடத்தோட லேஅவுட்" என்று ஒரு சில தாள்களை பவித்ராவும் சண்முகசுந்தரமும் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த மேஜை மேல் போட்டான் அஜித்குமார்.

பொதுவாக உணர்ச்சிகளை வெளியே காட்டாத சண்முகசுந்தரம் கூட ஒரு லேசான ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தான். ஆச்சரியத்தில் வாய்பிளந்த பவித்ரா அடுத்த வாய் உணவை உள்ளே கொண்டு செல்லவில்லை. அப்படியே உணவை ஒதுக்கிவிட்டு பரபரவென இவன் கொடுத்ததைப் பிரித்துப் பார்த்தாள். அதைப் பார்த்தால் ஒன்றும் புரியவில்லை.

"சாப்பிட்டு முடிங்க துப்பறியும் புலியக்கா.‌ நாம சேர்ந்து பார்க்கலாம்.. எனக்குக் கொஞ்சம் புரியுது இல்லைன்னா நம்ம அண்ணே ஹெல்ப் பண்ணுவாப்ல" என்று அஜித்குமார் சொல்ல பரபரப்புடன் சாப்பிட்டு முடித்து அந்த கட்டிடத்திற்கான வரைபடத்தை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தார்கள்.

"இது சமீபத்தில் ஃபயர் சேஃப்டி சர்டிஃபிகேட்க்காக வாங்கின வரைபடமா இருக்கும்னு நினைக்கிறேன்" என்று சண்முகசுந்தரம் திருவாய் மலர்ந்தருளினான். இவர்கள் பணிக்குச் சேர்ந்து ஒரு வாரம் கடந்திருந்தது. இதே மாதிரியான பணிகள் பவித்ராவுக்கு சலிப்புத் தட்ட ஆரம்பித்தன. இருந்தாலும் முதலில் கொடுத்த ஐயாயிரம் ரூபாய்க்கு ஐந்து நாட்கள் வேலை செய்ததில் கழிந்து விட்டதாகக் கணக்குச் சொல்லிவிட்டு அதன்பின் நாள் தோறும் ஆயிரம் ரூபாய் தந்தார் அவர்களின் மேலாளர். "மேனேஜர் சார்" என்று கூப்பிட ஆரம்பித்து, பின் அதைச் சுருக்கி இவர்களுக்குள் பேசிக்கொள்ளும் போது 'ஜர்', 'ஜர்' என்று அழைத்தனர். அஜித்குமார் பவித்ராவை இயல்பாக அக்கா என்றும் சண்முகசுந்தரத்தை அண்ணே என்றும் அழைத்தான். மற்ற இருவரும் பெயரும் சொல்லாமல் உறவு
முறையும் சொல்லாமல் நீங்க வாங்க போங்க என்று மொட்டை கட்டையாகப் பேசினர்.

"எனக்கு ஒரு மாசத்துக்கு மேக்சிமம் ஆறாயிரம் ரூபாய் தான் செலவாகும். மீதி எல்லாம் சேவிங்ஸ் தான். அதனால இந்த போரடிக்கிற வேலைக்கும் பல்லைக் கடிச்சிட்டு டைப் பண்ணிக்கிட்டு இருக்கேன்" என்பாள் பவித்ரா.

முதலில் உங்களுக்குள்ளேயே அதிகம் பேசக்கூடாது, பணியிடம் தவிர வெளியில் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது, இங்கு நடக்கும் செய்திகளை வெளியே எங்கும் சொல்லக்கூடாது என்று பல கண்டிஷன்களை போட்டார் இந்த ஜர். ஆனால் அதன் பின் அது எதையும் வலியுறுத்தவில்லை. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை வந்து சென்றார். ஓரிரு முறை புதிதாக இன்னொருவரும் வந்து போனார். அதுபோக வேறு யாரும் வரவில்லை.

அறையை சுத்தம் செய்வதற்கு யாரையும் நியமித்ததாகவும் தெரியவில்லை. ஓரமாகக் கிடந்த விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு பவித்ரா தரையைக் கூட்ட ஆரம்பிக்க, அஜித் குமார் வந்து தானும் உதவினான்.

ஓரிரு வாரங்கள் கடந்த நிலையில் அஜித்குமார் வெளியூரில் இருந்து வந்த ஒரிஜினல் சரவணனிடம் விஷயத்தைச் சொன்னான். "டேய் நான் ஆள் மாறாட்டம் பண்ணி உன் பேர்ல வேலைல சேர்ந்திருக்கேன் டா.. சப்பை வேலைதான்.. ஏதோ கூரியர் சர்வீஸ்னு சொல்லி கூப்பிட்டானுங்க.. டீ வாங்கிக் குடு, காபி வாங்கிக் குடுன்னு வெட்டி வேலை தான் குடுக்கிறாங்க.. இதுவரைக்கும் இரண்டு இல்ல மூணு தடவை ஏதோ ஒரு சின்ன பார்சலைக் கொண்டு போய் ஒரு அட்ரஸ்ல கொடுக்கச் சொன்னாங்க.. என்ன நடக்குதுன்னு எதுவும் புரியல" என்று அஜித்குமார் சொல்ல, சரவணன் பதறிவிட்டான்.

"அடப்பாவி ஏண்டா உனக்கு வேலை வேணும்னா உன் பேர்ல தேட வேண்டியது தானே.. நீ கேட்டேன்னு நானும் நாலஞ்சு இடத்துல சொல்லி வச்சிருக்கேன்.. நியாயமாவே எங்கேயாவது கிடைக்காதா? ஏன் என் பெயரைச் சொல்லிப் போற? எதுவும் பிரச்சனைனா ஆப்பு எனக்குத் தானடா.. நீ ஒண்ணு உங்க வீட்ல கோவம் குறைஞ்சுருச்சுன்னா ஊருக்குப் போயிருவ.. இல்ல இந்த ஊர் பிடிக்கலன்னா இன்னும் வேற எங்கேயாவது கம்பி நீட்டுவ..நான் இல்லடா மாட்டணும்" என்றான்.

"நீ ஏன் மாட்டப் போறே.. கேட்டா என் மேல பழியைப் போட்டுரு" என்றான் அஜித் சர்வசாதாரணமாக.

"நீ அந்தக் காலத்திலேயே ஃபிராடு பண்ணினவன் தானடா.. நான் பரீட்சை எழுதிட்டு இருக்கும் பொழுது எனக்கே தெரியாம என் பேப்பரை எடுத்து காப்பி அடிச்சவன் தானே நீ?" என்று சரவணன் கூற,

"ஆமா இவரு பெரிய பில் கேட்ஸ்ஸு.. பெருசா எழுதிக் கிழிச்சிட்டாரு.. இவரைப் பார்த்து எழுதி நாங்க முன்னேறிட்டோமாம். டேய் நீயும் ஃபெயிலா போயிட்ட, உன்ன பார்த்து எழுதின நானும் ஃபெயிலாப் போயிட்டேன்.. எத்தனை தடவை சொல்லி இருப்பேன் டா.. உனக்கு முன்னாடி உட்கார்ந்திருந்த கணேஷ்குமார் முத்து முத்து முத்தான கையெழுத்துல லட்டு மாதிரி எழுதி இருக்கான்.. அவனைப் பார்த்து எழுதுன்னு? அதைச் செய்யாம என்னையும் சேர்த்து ஃபெயில் ஆக்கிவிட்டுட்டு இப்பப் பேசுறியா நீ? அப்பவே ஒழுங்கா காப்பி அடிச்சி இருந்தேன்னா இந்நேரம் நாம ரெண்டு பேருமே டாப் வேலையில இருந்திருப்போம்" என்றான் அஜித்.

"நான் என்ன சொல்ல வந்தா நீ என்ன சொல்ற? ஒழுங்கு மரியாதையா வேலை பிடிக்கலைன்னு சொல்லிட்டு கிளம்பி வரப் பாரு.. ஊர்ல உங்க அக்காவுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டாங்களாம். கல்யாணத்துக்கு வச்சிருந்த காசைத் தானே நீ திருடிட்டு வந்தே? போய் கைல கால்ல விழு.. சமாதானம் ஆகிடுவாங்க. போய்ட்டு கல்யாண வேலைகளை பாத்துட்டு வா.. நான் உனக்கு வேற வேலை பார்த்து வைக்கிறேன்" என்றான் சரவணன்.

மீண்டும் அன்று இரவும் மறுநாள் காலையில சரவணன் அடித்த வேப்பிலையால் கொஞ்சம் மனம் மாறிய அஜித்குமார், "சரி, வேலைய விடுங்க விட்டு அனுப்புங்கன்னு கேட்டுப் பார்க்கிறேன்.. இருந்தாலும் இந்த ஆபீஸ்லயும் கொலீக்ஸ் கூடயும் நல்லா பழகிட்டேன்.. அதான்.." என்று இழுத்தான்.

"அடேய் போடா. அதுக்குள்ள கொலீக்ஸாம், ஆபீஸாம்" என்று அவனைத் துரத்தி அனுப்பினான் சரவணன்.

ஜர்ரிடம் மறுநாள் கேட்டதற்கு முடியவே முடியாது என்று அவர் மறுத்தார். "நான் வரமாட்டேன் வேலைக்கு.. அப்ப என்ன செய்வீங்க?* என்று அஜித்குமார் கேட்க, "உன் பயோடேட்டா ஃபுல்லா என்கிட்ட இருக்கு.. இது டாப் சீக்ரெட் ஆன மேட்டர் அதை நீ திருடிட்டு ஓடிட்டேன்னு புகார் கொடுப்போம்.. நீ கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு போயிட்டேன்னு குடும்பம் மொத்தத்தையும் தூக்கி உள்ள வச்சுருவோம்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார் ஜர்.

அஜித் குமார், "ஓகே சார்! நோ தேங்க்ஸ் சார்! தேங்க்யூ சார்!" என்று வாய்க்கு வந்ததைச் சொல்லி விட்டு வந்தான். நண்பர்களைப் பார்த்து எப்போதடா தன் கஷ்டத்தைப் பகிர்வோம் என்று மாலை வருவதற்காகக் காத்திருந்தான்.

***

அதற்கு மேல் எவ்வளவு முயன்றும் அனுஸ்ரீயால் தன் கூகிள் டிரைவில் பக்கங்களை நிரப்ப முடியவில்லை. வழக்கம் போல் டிரைவின் இணைப்பை பிரகல்யாவிற்கு அனுப்பி வைத்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தாள். அம்மாவிற்கு போன் செய்து பேசுவோம் என்று
நினைத்து அவள் அலைபேசியை எடுக்க, அம்மா 'கோயிலுக்குப் போறேன். வந்து பேசுறேன்.. இன்னிக்கி அப்பாவுக்கு என்குயரி. நீயும் வேண்டிக்கோ' என்று மெசேஜ் போட்டிருந்தார். தன்னை அறியாமல் கண்கள் தேதியைப் பார்த்தன.

'ஆமால்ல இன்னைக்கு ஜனவரி 22.. அப்பா என்குயரி இருக்குன்னு சொன்னாங்களே! கடவுளே எல்லாம் நல்லபடியாக நடக்கணும்' என்று வேண்டிக் கொண்டாள். கல்லூரியில் நண்பர்கள் மத்தியில் இருப்பதால் வீட்டுக்கவலைகள் சற்றுத் தாமதமாகவே தலைக்குள் உரைக்கின்றன. அப்பா எவ்வளவு பெரிய நியாயவான், பெயர் பெற்றவர். முந்தைய ஆட்சியில் எப்படி அவரைப் பெருமையாக வைத்திருந்தார்கள். இப்போது ஏன் இப்படி பாடாய்ப்படுத்துகிறார்கள் என்று வருந்தினாள்.

'வாழ்க்கைல உயர்வும் தாழ்வும் சகஜம். அது மாதிரி பொறுப்பான பதவின்னா எல்லாம் வரத்தான் செய்யும். சொல்ற வேலையை செஞ்சுட்டு இருக்குற பியூனுக்கே வேலையில் எவ்வளவு கஷ்டம் வருது தெரியுமா.. அப்ப மொத்த டிபார்ட்மெண்டையும் நிர்வாகம் பண்ண வேண்டிய எனக்கு எவ்வளவு சிக்கல் வரும்.. அதுவும் ஊரே காசு பணம் பின்னாடி அலையும் போது நான் மட்டும் நியாயவானா இருந்தா நாலு பேர் கண்ணை உறுத்தத் தான் செய்யும். கவலைப்படாதே' என்றார் அப்பா.

தற்சமயம் அவர் ஒரு உருப்படாத புகாரின் அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டிருந்தார். அது தொடர்பாக தமிழகத்தின் எல்லா பத்திரிகைகளும் பேசி முடித்து இப்போதுதான் அடங்கி இருக்கின்றன. "உங்க அப்பா ஒரு 20, 25 வருஷம் வேலை பார்த்து இருக்க மாட்டாரு? பேசாம வேலையை ரிசைன் பண்ணச் சொல்லு.. பண்ணினா டெல்லில மாதிரி அரசியலில் சேர்ந்து சீப் மினிஸ்டர் ஆயிடலாம். இல்ல ஏதாவது தேசியக் கட்சியில் சேரச் சொல்லு.. உடனே கட்சியோட மாநிலத் தலைவரா ஆக்கிடுவாங்க.. ஒண்ணுமே இல்லை என்றாலும் அடுத்த அஞ்சு வருஷத்துக்குள்ள ஏதாவது ஒரு ஸ்டேட்க்கு கவர்னர் ஆக்கிடுவாங்க.. அப்புறம் என்ன நீ ராஜ்பவன்ல இருப்ப.. உன்ன பாக்கணும்னா நாங்க வந்து அங்க அப்ளிகேஷன் போட்டு காத்திருக்கணும்" என்பாள் பிரகல்யா.
இப்போதே தட்டில் வைத்து கவர்னர் பதவியை நீட்டுவது போல் இருக்கும் அவள் சொல்வது. சிரித்துக் கொள்வாள் அனுஸ்ரீ.

"கொஞ்சம் அங்க இங்க டிவியேட் ஆனாலும் கதை நல்லாத தான் போகுது.. பேசாம உன்னோட ஃபேவரிட் சைட் இருக்கே.. கதை வானம். அதுல ஏதோ போட்டி அறிவிச்சிருக்காங்களாம்.. அதுல போட்டு விடு" என்றாள் பிரகல்யா.

"அச்சச்சோ அதில் தினசரி ஒரு அத்தியாயம் கொடுக்கணும்.. எக்ஸாம் வேற வருது. எனக்கும் வர வர கதையில ஒண்ணுமே தோண மாட்டேங்குது. அது எப்படி டி முதல்ல வரிசையா இந்த மாதிரி கனவா வந்தது.. அதுல நிறைய சம்பவங்கள் சினிமா சீன் மாதிரி ஒன்னு மாத்தி ஒன்னு வந்துச்சு.. இப்ப இது சம்பந்தமான கனவே வர மாட்டேங்குது.. வேற வித்தியாசம் வித்யாசமா வருது..நேத்து என்ன தெரியுமா கனவு வந்துச்சு..?" என்று அனுஸ்ரீ தொடங்க,

"அய்யோ அதைக் கேகாக எனக்கு நேரமில்லை.. நீ பேசாம அந்த கதை வானம்லயே போடு.. நாலு லைக்காவது கிடைக்கும்" என்று முடித்தாள் பிரகல்யா.

நேற்றைய தினத்தின் பழக்கத்தால் அனுஸ்ரீ தன் கதைக்கு எத்தனை லைக்குகள் வந்திருக்கின்றன என்று போய்ப் பார்த்தாள். வழக்கம் போலத் தான் வந்திருந்தது. விதுஷா க்ளாஸ் குரூப்பில் போட்ட பின் புதிதாக சப்ஸ்கிரைப் செய்வார்கள் அல்லது கமெண்ட்கள் கூடும் என்று நினைத்தவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான்.

கொஞ்சம் யோசித்து தன்னுடைய டிரைவில் தூங்கிக் கொண்டிருந்த கதையை எடுத்துப் போட்டி பக்கத்தில் பதிவிட்டு விட்டு அதை நண்பர்களுக்குப் பகிர்ந்தாள் அனுஸ்ரீ. 'இரண்டு ஃபேக் ஐடி இருக்கே.. அதை வச்சு நாமே கதையை பிரமோட் செஞ்சா என்ன' என்று ஒரு எண்ணம் திடீரென்று வந்தது. 'பிரகல்யா சொல்லி இருக்கா.. ஃபேக் ஐடி வச்சு நம்ம கதையை நாமளே ப்ரொமோட் பண்ணனும்னா அதுக்கு முன்னாடி அந்த ஐடியில் போய் மத்தவங்க கதைக்கு கொஞ்சம் பாராட்டைப் போடணும், நிறைய பேரை ஃபிரண்டா சேர்த்துக்கணும்னு.. நானும் ரெண்டு வருஷமா கதை எழுதுறேன் எனக்கு தெரியாத பாயிண்ட் எல்லாம் எப்படி இவளுக்குத் தெரியுது?' என்று நினைத்தவள் பிரகல்யா கொடுத்த பேக் ஐடிக்கலை மூலமாக முகநூலில் நுழைந்து சிலருக்கு நட்பு அழைப்பு கொடுத்துவிட்டு வைத்தாள்.

ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்ட உணர்வில் கை கால் எல்லாம் வியர்த்துக்கொண்டு, படபடவென வந்தது அனுஸ்ரீக்கு. தன்னுடைய ஃப்ரண்டு ரிக்வெஸ்ட்க்கு எத்தனை பேர் பதில் சொல்கிறார்கள் பார்ப்போம் என்று அலைபேசியை எடுத்துப் பார்க்க கையும் காலும் பரபரத்தது. பிடிவாதமாக மொபைலை சுவிட்ச் ஆப் செய்து விட்டு போர்த்திப் படுத்துத் தூங்கினாள்.

கனவுகள் பூக்கும்
❤️
 
Last edited:

Latha S

Administrator
Staff member
ஏதோ தப்பா தான் நடக்குது.. இனி அனு ஸ்ரீ கனவு வந்தாதான் அடுத்து என்ன நடக்கும்னு தெரியும்.
 

Chellam

Well-known member
அந்த ஆபிஸில் அப்படி என்ன தான் நடக்கிறது.
 
Top