கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தலைமைச் செயலகம் 6

Akhilanda bharati

Moderator
Staff member
அனுஸ்ரீயின் கூகிள் டிரைவில் இருந்து..


பவித்ரா பழைய பிளானையும் புது ப்ளானையும் வைத்துக்கொண்டு தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் இன்னொரு பேப்பர். அதில் எண்களாக எழுதப்பட்டு இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஒன்றும் பிடிபடாமல் தலையைப் பிடித்தவாறு அமர, "டீ கொண்டு வந்து கொடுத்த அஜித், அக்கா டீ குடிச்சிட்டு தெம்பா யோசிங்க.. மொத்தமே இதுவரைக்கும் இரண்டு தடவை தான் என்கிட்ட பார்சல் கொடுத்துவிட்டு இருக்கீங்க. நானும் ஏதோ போதப்பொருள் கள்ளக் கடத்தல் பொருள் கொண்டு போற மாதிரி கொண்டு போயிட்டு வந்துட்டு இருக்கேன்.. அடுத்து எப்போ குடுப்பீங்க" என்றான்.

"தெரியல சரவணா.. நம்ம ஜர் இப்பல்லாம் டைப் அடிக்குற வேலை தான் குடுக்குறார்.. இன்னும் எல்லாத்தையும் பென்டிரைவில் காப்பி பண்ணச் சொல்லலை.. ஒரு வேளை பென் டிரைவ் பற்றாக்குறையோ என்னமோ?" என்றபடி பார்வையைத் தன் முன் இருந்த தாள்களிலேயே வைத்திருந்தாள்.

'என் பெயர் சரவணன் இல்லை, அஜித் குமார்' என்று ஆரம்பித்து அனைத்தையும் கொட்டி விட ஆவலாக இருந்தது. இதுவரையில் வாழ்வில் உண்மையை மறைத்துப் பழக்கமே கிடையாது. ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அஜித்திடம் மட்டும் சொல்லாதீர்கள் என்பது அவர்களின் ஊரில் எழுதப்படாத விதி.

"மாஞ்சு மாஞ்சு டைப் அடிக்கிறியே அக்கா.. உனக்கு இங்கிலீஷ் புரிஞ்சுக்க தெரியுமா தெரியாதா? அதை வச்சு இது என்ன மேட்டர் சம்பந்தப்பட்டதுன்னு கண்டுபிடிக்கலாம்ல? எவ்வளவோ துப்பறியிற.. இதை செய்ய மாட்டியா?" என்றான் அவன்.

"அதை முயற்சி பண்ணாமலாடா இருப்பேன்.. தலையும் புரிய மாட்டேங்குது.. வாலும் புரிய மாட்டேங்குது.. நூத்துக் கணக்கான டிபார்ட்மெண்ட்ல எந்த டிபார்ட்மெண்டுக்கு நாம வேலை செய்றோம்னு கூட நமக்குத் தெரியல பாரு.. இந்த ஐடென்டிடி கார்டு.. இதுல கூடப் போடல.. எனக்கு என்ன தோணுதுன்னா, பத்துப் பக்கம் டைப் அடிச்சா அதுல ஒரு பக்கம் தான் முக்கியமானதோன்னு தோணுது.. மத்ததெல்லாம் தேவையில்லாத ஆணி மாதிரி தோணுது" பதில் வந்தாலும் அவளது பேச்சு தொடர்ச்சியாக வராமல் கவனம் முழுவதும் அந்த வரைபடத்தின் கணக்கீடுகளிலேயே குவிந்திருந்தது.

"அட! நம்ம பம்ப்ளிமாஸ் அண்ணன் இன்ஜினியர் தானே.. இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்.. அண்ணே இங்க வாங்க!" என்று கூற சண்முகசுந்தரம் தனக்குக் கொடுக்கப்பட்ட கணினியில் ஆழ்ந்திருந்தான்.

"இவரு சாஃப்ட்வேர் இன்ஜினியர்ல.. இதுக்கு சிவில் இன்ஜினியர் தேவை" என்று பவித்ரா கூற, எழுந்து வந்த சண்முகசுந்தரம் இரண்டு பிளான்களையும் எடுத்துப் பார்த்தான். நின்று கொண்டே தன் மொபைலில் இரண்டொரு நிமிடங்கள் தேடி ஏதோ ஒரு ஆப்பை இன்ஸ்டால் செய்தான். அதன் மூலமாக இரண்டு வரை படங்களையும் புகைப்படம் எடுப்பது போல் ஸ்கேன் செய்தான். இரண்டுக்குமான ஒப்பீடுகள் கடகடவென்று வந்து விழுந்தன. அதை பவித்ராவின் மெயிலுக்கு அனுப்பியவன், 'ப்ரின்ட் அவுட் எடுத்து செக் பண்ணிக்கோங்க' என்றான்.

இவை அனைத்தும் ஐந்தே நிமிடங்களில் முடிந்திருந்தன. "அட! நான் மூணு நாளா மண்டைய உடைக்கிறேன்.. நீங்க இப்படி இப்படிக்குறதுக்குள்ள முடிச்சிட்டீங்களே!" என்று சொடுக்கிட்டுக் காட்டினாள் பவித்ரா.

"அண்ணே.. நீங்க சின்சியரா கம்ப்யூட்டருக்குள்ளே தலையை விட்டுட்டு இருக்கிற மாதிரி இருந்துச்சு? நாங்க பேசுறதெல்லாம் கவனிக்கத் தான் செய்றீங்களா?" என்றான் அஜித்.

"எனக்கு உங்க கூட பேசத் தான் தயக்கம். நீங்க பேசுறதை கேட்டுக்கிட்டே இருப்பேன்" என்றான் சண்முகசுந்தரம்.

அவனுடைய உயரத்திற்கு அவன் தோளில் கை போட முடியாது அஜித் அவன் மேல் லேசாகச் சாய்ந்து அணைத்தவாறு நின்று, "நானும் நம்ம துப்பறியும் புலியக்காவும் இருக்கும்போது நீங்க இந்த மாதிரி எல்லாம் பேசலாமா? பேசுறதுக்குனே பொறப்பு எடுத்தவங்க நாங்க.. வேணா எக்ஸ்ட்ராவா ஒரு ரெண்டு மணி நேரம் உங்களுக்கு டெய்லி செலவழிச்சு பேசுறதுக்கு டியூஷன் எடுக்கிறேன். இரநூறு ரூபாயும் நைட் சாப்பாடும் தான் என் ஃபீஸ்.. அது போதும்" என்றான் பெருந்தன்மையாக.

'இது என்னடா புது டீலாக இருக்கிறது!' என்று சண்முகசுந்தரம் பார்க்க,

"நம்ம கூட சேர்ந்துட்டாருல்ல.. இனிமே தானாவே பேசிப் பழகிடுவாரு.. நீ ஒன்னும் டியூஷன் எல்லாம் எடுக்க வேண்டாம்.. இப்ப இதைப் பாருங்க. நான் சொன்ன மாதிரியே இங்கே ஒரு 70 அடி இடம் மிஸ் ஆகுது. இந்த புது வரைபடத்துல அதை ஏதோ ஒரு மூணு அறைகள் இருந்த மாதிரி குறிச்சிருக்காங்க.. நடுவுல அதெல்லாம் ஏன் காணாமே போச்சு? ஒருவேளை காரிடரோட அந்த பக்கத்தில் இருந்து வர்ற மாதிரி பொழுது இதுக்கு வாசல் விட்டு, புதுசா ஆஃபீஸ் ஏதாவது ஆரம்பிச்சு இருப்பாங்களோ?" என்றவள், அந்தபுறம் என்ன அலுவலகங்கள் இருக்கின்றன என்று பார்த்தாள்.

"அப்படி எதுவும் தெரியலையே.. அப்ப கன்ஃபார்மா இதை க்ளோஸ் பண்ணத் தான் செஞ்சிருக்கணும்.." என்று அவளே முடிவாகச் சொன்னாள்.

"ஆமா.. வருஷக்கணக்கா இங்கே வேலை பார்க்கிற ஸ்டாஃப்ஸ், என்ன ஆச்சு திடீர்னு இதை ஏன் அடைச்சிட்டீங்கன்னு கேக்கக மாட்டாங்களா?" என்று அஜித் ஆகப்பெரிய சந்தேகத்தை வைக்க, "இதே டவுட் எனக்கும் இருந்துச்சுடா.. ஆனா இந்த கொரோனா டைம்ல நிறைய மாசம் யாரும் ஆபீஸ் வரல பாரு.. அப்ப ஏதோ நடந்திருக்கலாம்.. இந்த சுவருக்கு வயசு ரெண்டு மாசம் வருஷமா, கூட இருக்குமான்னு பாக்கணும்.. வரியா இன்னைக்கு பிரேக் டைம்ல மேல போய் கேஷுவலா பாக்குற மாதிரி பாத்துட்டு வருவோம்?" என்று கேட்டாள் பவித்ரா.

"அய்யோ! நான் மாட்டேன் பா.. அந்த ஃப்ளோர் செக்யூரிட்டி அய்யனார் மாதிரி கெடா மீசையோட பாக்கவே பயமா இருக்காப்ல.. நம்ம பம்ப்ளிமாஸ் அண்ணன் தான் அவரை விட பெருசா இருக்காப்ல.. வேணா இவரைக் கூட்டிட்டுப் போங்க.. கேட்டா இவரு வெயிட்டை குறைக்கிறதுக்கு வாக்கிங் வந்ததா சொல்லிடுங்க" என்றான் அஜித். அவன் எடைக் குறைப்புப் பற்றிப் பேசியது பவித்ராவுக்கு ரசிக்கவில்லை. சண்முகசுந்தரம் கண்டு கொள்ளவில்லை.

"உண்மை தானேங்க.. நானே வெயிட்டைக் குறைக்கத் தானே தொடர்ந்து நடந்துட்டே இருக்கேன்.. ஆனா அப்படியும் வெயிட் ஒன்னும் குறையிறதில்லை.. வேணா ஏறாம அப்படியே இருக்கு. போன மாசம் 120 கிலோ, இந்த மாசமும் 120 கிலோ" என்றான் சண்முகசுந்தரம்.

"ஆ! 120 கிலோவா? எங்க பசங்க மூணு பேரோட உடம்பு இந்த சட்டை பேண்ட்டுக்குள்ள அடங்கியிருக்கா?" என்ற அஜித் சண்முகசுந்தரத்தின் தொப்பையில் தட்ட,

"டேய் சரவணா! இந்த மாதிரி கிண்டல் பண்ணாதே!" என்று அவன் தலையில் கொட்டினாள் பவித்ரா. "மொத்தத்தில் யாரையும் யாரும் கிண்டல் பண்றதே எனக்குப் பிடிக்காது" என்றாள்.

"அக்கா இதெல்லாம் கிண்டல் என்றால் அப்ப கிண்டலுக்கு என்ன பெயர் சொல்லுவீங்க? அப்புறம் உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு ரகசியம் சொல்லணும். இவ்வளவு பழகிட்டு மறைக்க மனசு வரல.. அன்னைக்குப் போனோமே ஒரு டீக்கடை.. அதுக்கு வரீங்களா சாயங்காலம்? இன்னிக்கு ட்ரீட் நீங்க தான் தரணும் அக்கா" என்று அஜித் கேட்க,

"அந்த பாடாவதி காபி ஷாப்பா? பரவால்ல அங்க உருளைக்கிழங்கு போண்டா நல்லா இருந்துச்சு..
போகலாம்" என்றாள் பவித்ரா. "அப்புறம் பிரேக் டைம்ல நீங்க வாங்க.. நம்ம மாடி வரைக்கும் போயிட்டு வந்துடுவோம்" என்று சண்முகசுந்தரத்தையும் அழைத்தாள்.

"சரியாக அந்த சமயம் உள்ளே வந்தார் இவர்கள் மேனேஜர் என்று அழைக்கும் அந்தப் பெரிய மனிதன். ஏற்கனவே நீங்க வேலை நேரத்தையே பிரேக் மாதிரி தான் பாக்குறீங்க.. இதுல தனியா பிரேக் வேறயா? வேலையப் பாரும்மா" என்றவர்,

"இந்தாங்க.. இந்த பென்டிரைவ்ல இதுவரைக்கும் டைப் செய்த பைல் எல்லாம் காப்பி பண்ணுங்க" என்றார்.

"சார்.. இந்த மூணு இஞ்ச் பென்டிரைவைக் குடுக்கிறதுக்கு எனக்கு எதுக்கு சார் வெட்டிச் சம்பளம் கொடுத்து வேலைக்கு வச்சிருக்கீங்க.. இதை நீங்களே போகும் போது வரும் போது கொண்டு போய் கொடுத்தா பத்தாதா?" என்றான் அஜித்.

"பேச்சைக் குறை.. பிடிச்சா இரு.. இல்லேன்னா.."

"போயிடலாமா?!" என்று அஜித்தும் பவித்ராவும் ஆர்வமாய் கேட்க, "பிடிக்கலைன்னாலும் இருந்துதான் ஆகணும்" என்று சொல்லிவிட்டு கிளம்பினார் மேனேஜர்.

"மிடில் கிளாஸ் ஃபேமிலியோட அப்பா கேரக்டர் மாதிரி இருந்துட்டு பேசுற பேச்சைப் பாரு! அண்டர் கிரவுண்ட் தாதா மாதிரி.." என்று நொடித்தாள் பவித்ரா.

"அக்கா நீ படம்லாம் நிறைய பாப்பியா?" என்றான் அஜித்.

"போடா.. கொரோனா டைம்ல ரெண்டு வருஷமும் ஒரு படம், ஒரு சீரியல் விடாமல் பார்த்துப் பார்த்து தான் பொழுது போச்சு.. கண்ணாடி கூட அதனால் தான் போட்டேன். புண்ணியத்துக்கு என் ஹாஸ்டல் மேட்ஸ் ரெண்டு மூணு பேரு அவங்களோட ஓடிடி பாஸ்வேர்ட் எனக்குக் கொடுத்துட்டுப் போயிட்டாங்க. ப்ரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார்னு அத்தனை ஓடிடிலயும் ஓசியில் பார்த்துடுவேன்.. சினிமான்ன உடனே ஞாபகம் வருது.. இந்த பில்லா படத்துல பென் டிரைவ், பென் டிரைவ்னு பினாத்துவாங்களே.. அதே மாதிரி இந்த ஜர் எதுக்கு அலைபாயுறார்? இப்ப உள்ள காலத்துல இத்துனூண்டு ஃபைல்ஸை ட்ரான்ஸ்பர் pl பண்ண மெயில் அனுப்பலாம், டெலிகிராம், டிரைவ்னு எவ்வளவு இருக்கு? எதுக்கு ரெசிடென்ஷியல் ஏரியால உள்ள ஒரு வீட்டுக்கு இதைக் கொடுத்து கொடுத்து விடணும்?" மீண்டும் வானத்தைப் பார்த்து யோசித்தாள் பவித்ரா.


அவள் முதலில் பேசியதைப் பிடித்துக்கொண்டு, "அக்கா அக்கா! எனக்கும் அப்படி ஃபிரண்டு யாரையாது இண்ட்ரடியூஸ் பண்ணி விடுங்களேன்.. ஓடிடி பாஸ்வேர்ட் குடுக்குற மாதிரி?" என்று அஜித் குமார் கேட்க,

"பேசாம என்னோட ஃப்ளாட்டுக்கு என் கூட வந்துடேன்.. எல்லா ஓட்டிட்டு சப்ஸ்கிரைப் பண்ணிருக்கேன். நீ ஃப்ரீயாவே பயன்படுத்திக்கலாம்" என்றான் சண்முகசுந்தரம். முதன் முறையாக அவனாக பேச்சில் கலந்து கொள்கிறான்.

"அட! இது கூட நல்ல ஐடியாவா இருக்கே.. ஆனா சரவணன் மனசு கஷ்டப்படுமேன்னு பார்க்கிறேன்" என்றான் அஜித்.

"அவர் கூட ஓசில தங்குறது உனக்கு மனசு கஷ்டமா?" என்று பவித்ரா கேட்க, 'அட உளரிட்டோமே!' என்று நாக்கைக் கடித்த அஜித், "அது விஷயமாகத் தான் சாயங்காலம் பேசணும், வேலையை முடிச்சுட்டு சொல்லுங்க" என்றான் அஜித்.

***
இந்தப் பகுதியை எழுதி முடித்து அனுஸ்ரீ நிமிர, வாட்ஸ் அப்பிலும் மெசேஞ்சரிலும் ஃபேஸ்புக்கிலும் பல நோட்டிஃபிகேஷன்களும் வந்து குவிந்தன. அவற்றைத் திறந்து பார்த்த என்னை ஏதென்று அவள் புரிந்து கொள்வதற்குள் பிரகல்யா அழைத்தாள்.

"டீ அனு! நீ என்னை இதுக்கு திட்டுவியா இல்ல பாராட்டுவியான்னு தெரியலை.. ஆனா நீ ஃபேமஸ் ஆயிட்டு வர்ற.. அதை மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்.. நீ இதுவரைக்கும் எனக்கு அனுப்புனதைக் கதையாக்கி கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து புதுசா போட்டி நடக்கிற ஒரு சைட்ல சேர்த்து விட்டுட்டேன்.. இன்னைக்கு தேதிக்கு அந்த சைட்டுக்குத் தான் ரீடர்ஸ் அதிகம் சின்சியரா படிச்சு கருத்து சொல்லக் கூடியவங்க.. உன்னோட கதைவானம் ஆப் ப விட நேர்மையா நடத்தி பரிசு தருவாங்க.. அதுல நீ இதுவரை எழுதினதை அஞ்சு அத்தியாயமா பிரிச்சுப் போட்டு அப்லோட் பண்ணிட்டேன். இன்னும் போட்டி முடிய ஒரு மாசம் இருக்கு. அதுக்குள்ள நிறைய எழுதி கதையை முடிக்க வேண்டியது உன்னோட வேலை" என்றாள்.

அதிர்ந்தாள் அனுஸ்ரீ. "எக்ஸாம் வருது நிறைய படிக்கணும், கதையில கான்சன்ட்ரேட் பண்ணாதன்னு நீதானடி சொன்னே?" என்றாள்.

"அது போன மாசம், இது இந்த மாசம்.. நீ தான் ரிலாக்சேஷனுக்காக எழுதுற ஆளாச்சே! பாடத்தைப் படி.. ரிலாக்ஸ் பண்ணனும்னு தோணுச்சுன்னா கதை எழுது.. கனவு வரலையேன்னு யோசிச்சு டென்ஷன் ஆகுறதை விட கனவுல வந்த காட்சிகளுக்கு என்ன முடிவு கொடுக்கலாம்னு உன்னோட கற்பனையால சொல்லலாம் இல்லையா?* என்றாள் பிரகல்யா.

அவள் சொல்வதும் உண்மைதானா என்று யோசித்த அனுஸ்ரீக்கு திடீரென்று ஒன்று தோன்றியது. "வெயிட் வெயிட் வெயிட்! ஆமா உன்னை ஒண்ணு கேட்கணும்.. நீ தானே எனக்கு எதுவும் படிக்கத் தெரியாது.. ஒரு ஆயிரம் வார்த்தையை எழுத்துக் கூட்டிப் படிக்க ஒன்றரை மணி நேரம் ஆகும் அப்படி இப்படி எல்லாம் சொன்னே? நீ எப்படி பட்டி டிங்கரிங் பார்த்தே?" என்றாள் அனுஸ்ரீ.

"அட போடி! அதெல்லாம் அசால்டா படிச்சிருவேன்.. சும்மா லுல்லுலாய்க்கு சொன்னது.. எனக்கு நிறைய கதை படிச்சு அனுபவம் இருக்குன்னு சொன்னா நீ எழுதுனதெல்லாம் எனக்கு காட்டுவியா? மாட்டேல்ல.. நான் எதுவும் நெகட்டிவ் கமெண்ட் பண்ணிடுவேனோன்னு நீயே வச்சிருப்ப.. அதான் உன்னோட குணம் அதான் நான் ரீடிங்ல பிகினர் மாதிரி உன்கிட்ட ஆக்சன் கொடுத்து உன்னை ஒரு ஆரம்பக்கட்ட எழுத்தாளர் நிலையிலிருந்து புகழ்பெற்ற எழுத்தாளர்ங்கிற நிலைக்கு மாத்துறதுக்குக் களமிறங்கி இருக்கேன். உன்னோட மேனேஜர் பிஆர்ஓ எல்லாம் நான் தான்" என்றால் பிரகல்யா அவளது அன்பில் கண்கலங்கியது அனுஸ்ரீக்கு.

"என்ன அங்க வாட்டர் ஃபால்ஸ்ஸை ஓபன் பண்ணிட்டியா? சரி விடு.. அம்மா அப்பாகிட்ட பேசினியா? அங்கே ஏதோ என்குயரின்னு சொன்னியே? அது என்ன ஆச்சாம்?" என்று பிரகல்யா கேட்டாள்.

நின்றிருந்த கண்ணீர் இப்போது கோடாக இறங்கியது அனுஸ்ரீயின் கன்னத்தில். "என்குயரி நல்ல விதமாப் போகலையாம் டி.. ஏதாவது பனிஷ்மென்ட் கிடைக்கும்னு அப்பா சொல்றாங்க. அப்பாவோட எக்ஸ்பிளநேஷன் எதையுமே கேக்குறதுக்கு அவங்க தயாரா இல்லையாம். எவ்வளவு கான்ஃபிடண்டா, எவ்வளவு ஹேப்பியா எங்க அப்பா வேலைக்குப் போவார்.. இப்ப வேலையில்லாத டம்மி போஸ்ட்ல இருந்துகிட்டு, அப்பப்ப என்குயரிக்கு போய்கிட்டு.. அதுவே பாக்க கஷ்டமா இருக்கு.. இன்னும் என்ன வரப்போகுதோ?" என்றாள் அனுஸ்ரீ.

"அதுல இருந்து டைவர்ட் பண்ணத் தான் உன்னை கதை எழுதுற மோடுக்கு மாத்தி விட்டிருக்கேன்"

"நீ வேறடி! எங்க அம்மா, அப்பா கூட சப்போர்ட்டிவ்வா சும்மா இருந்தாலே போதும்.. அதை விட்டுட்டு சென்னையில இருக்கிற ஒரு கோயில் விடாம பூஜை, விரதம்னு சுத்திக்கிட்டே இருக்காங்க.. அவங்க ஹெல்த்தை நினைச்சாலும் வருத்தமா இருக்கு. பேசாம ஊருக்கு போயிடவா?"

"நீயும் அங்க இருந்தா அவங்களுக்கு இன்னும் கொஞ்சம் வேலைதான்.. நீ ஹாப்பியா இருக்கிற மாதிரியே காட்டிக்கோ.. நீ இப்ப க்ரோன் அப் ஆகிட்ட.. அப்பா அம்மாவுக்கே அட்வைஸ் பண்ற ஸ்டேஜ் தான்.. கவலைப்படாதீங்கப் பா! எல்லாம் சரியாயிடும் அப்படின்னு ரெண்டு பேர் கிட்டயும் சொல்லு ஓகேவா?" என்றாள் பிரகல்யா.

"ஓகே ஆகி தான் ஆகணும். வேற என்ன செய்ய?" என்று பெருமூச்சு விட்ட அனுஸ்ரீ, "தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்!" என்று பிரகல்யாவிடம் கூற,

"உதை வாங்குவ.. போய் உனக்கு வந்திருக்கிற பாராட்டுக்களை எல்லாம் பாரு.. நிறைய பேர் கேரக்டராவே மாறி கமெண்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நான் பவித்ராவா இருந்தா இப்படி செய்வேன், அப்படி செய்வேன்னு ட்ரென்டிங் போஸ்ட் கூட போகுது.. அதுல இருந்து கூட அடுத்து கதையைக் கொண்டு போறதுக்கு உனக்கு லீடு கிடைக்கும்" என்றாள் பிரகல்யா.

"சரி வை! நான் அதை பார்த்துக்கிறேன்.." என்று இணையத்தைத் திறந்து தன் கதைக்கான பாராட்டுச் செய்திகளின் படையெடுப்பை வாசிக்கத் துவங்கினாள் அனுஸ்ரீ.
 
Last edited:

Latha S

Administrator
Staff member
அனு அப்பா பாவம்.

சுந்தரம் good. எனக்கென்னவோ அந்த பவித்ரா தான் அனுவா.. அவ ஏதோ மர்ம் மா டைப் அடிச்சி பண்ணறது அவ அப்பா வோடு எண்குயரி மேட்டரோ..
 

Chellam

Well-known member
அனு அப்பா பாவம்.

சுந்தரம் good. எனக்கென்னவோ அந்த பவித்ரா தான் அனுவா.. அவ ஏதோ மர்ம் மா டைப் அடிச்சி பண்ணறது அவ அப்பா வோடு எண்குயரி மேட்டரோ..
எனக்கெல்லாம் சந்தேகமே இல்லை.பவித்ராவும் அனுவும் ஒரே கதாபாத்திரங்கள் என்று தான் தோன்றுகிறது.
 
Top