கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தலைமை செயலகம் 4

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 4

"ஏய் மெதுவாப் போடி! பயமா இருக்கு" முப்பதாவது முறையாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த விதுஷாவிடம் கெஞ்சினாள் அனுஸ்ரீ. பெங்களூரு நகரில் அந்த ஐந்து கிலோமீட்டர் பயணத்திற்குள் அத்தனை முறை சொல்லியும் விதுஷா தன் வேகத்தைக் குறைக்கவே இல்லை. வழக்கமாக பிரகல்யாவுடன் மட்டும் தான் செல்வாள் அனு. இப்போது பிரகல்யா இல்லாததால் அடுத்த வெளி வட்டத்து நட்பான விதுஷாவைத் தன் இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்குக் கூப்பிட்டிருந்தாள். ஆம் அனுஸ்ரீயிடம் சொந்த வண்டி இருந்தும் ஓட்டத் தெரியாது. கிரவுண்டில், ஆள் இல்லாத தெருவில், ஓட்டுவாள். எதிரில், பக்கவாட்டில் வண்டி வந்தால் பயப்படும் ஆள் அவள். சில சமயங்களில் பயத்தில் நட்டநடுத் தெருவில் ஸ்டாண்ட் போட்டுவிட்டு இறங்கி ஓடிவிடுவாள். டிராஃபிக் போலீஸ் வந்து சத்தம் போட்டு, பின் அவரே வண்டியை ஓட்டி ஓரமாக நிறுத்திய கதை எல்லாம் நடந்திருக்கிறது. அதிலிருந்து ட்ராஃபிக் கான்ஸ்டபிள் என்றாலே பயம் அவளுக்கு.

தூரத்தில் ஒரு டிராஃபிக் பீட் தெரிந்தது. "பாருடி! ஓரங்கட்டு ஓரங்கட்டுன்னு எல்லா வண்டியையும் ஒதுக்கிட்டு இருக்காங்க.. இப்பவாவது மெதுவாப் போடி.. ப்ளீஸ் விது!" என்று 31 வது முறையாகக் கோரிக்கை வைக்க, "பாரு! நான் வண்டி ஓட்டுறேன்.. நீ என்னை ஓட்டுறியா? என் முதுகுல கைய வச்சு அழுத்து அழுத்துன்னு அழுத்துற.. நல்லா இருப்ப தெய்வமே.. கையை என் தோள்ல இருந்து எடுத்து அந்த சீட்டைப் பிடிச்சுக்கோ.. பசங்களை தான் நிப்பாட்டுறாரு பாரு அந்ஊ டிராபிக் போலீஸ்.. நாம அப்படியே காத்து மாதிரி வந்தோம் காத்து மாதிரியே இந்த சிக்னலையும் கடந்து போயிடலாம்" என்று விதுஷா கூற அனுவுக்கு நம்பிக்கை இல்லை. அவள் பயந்தது மாதிரியே இவர்களையும் நிறுத்திவிட்டார் டிராபிக் போலீஸ்.

"என்னம்மா இங்கே ஸ்பீட் லிமிட் 30 கிலோமீட்டர் தான்.. தெரியுமில்ல? ஓவர் ஸ்பீடா வரீங்க?" என்று அவர் கன்னடத்தில் திட்ட, கன்னடம் தெரியாத அனுஸ்ரீ திருதிரு என்று விழித்தாள். 'லைசன்ஸ் எடுங்க.. வண்டி யாரோடது' என்று அடுத்த கட்ட கேள்விகளுக்கு நகர்ந்தார் டிராபிக் கான்ஸ்டபிள்.

"வண்டி இவங்களோடது தான்..‌ஓட்டுறது‌ தான் நான்" என்று படையப்பா ரஜினி ஸ்டைலில் உடைந்த கன்னடத்தில் விதுஷா சொல்ல, தலையில் அடித்துக் கொண்டார் டிராபிக் கான்ஸ்டபிள்.

"தமிழாம்மா நீங்க? ஏன்மா வெளியூருக்கு வந்து இப்படி மானத்தை வாங்குறீங்க?" என்று அவர் கேட்க, "ஓ! சார் நீங்களும் தமிழா?அப்புறம் எப்படி சார் கர்நாடகா போலீஸ் ஆனீங்க?" என்று விதுஷா விசாரணையைத் துவங்கினாள்.

"அதெல்லாம் இருக்கட்டும்.. ஓவர் ஸ்பீடுக்கு ஃபைன் போடணும்.. பேர் வயசு சொல்லுங்க" என்க,

"அனுஸ்ரீ" என்றாள் அனுஸ்ரீ.

"அப்பா பேரு?"

"ஜனார்த்தனன்"

டிராஃபிக் போலீஸின் முகம் சட்டென்று பிரகாசமானது. "அனுஸ்ரீ ஜனார்த்தனன்னா.. இந்த கதைவானம் ஆப்ல கதை எழுதுறவங்களா நீங்க?" என்றார் பரவசத்துடன்.


இவ்வளவு சின்னப் பெண் எங்கே கதை எழுதப் போகிறது என்பது போன்ற தொனியும் அதில் இருக்க,

"ஆமா நான் தான்!" என்றாள் அனுஸ்ரீ.

"அட! சூப்பர் மா! நான் உங்க ஃபேன்.. தினசரி காலைல உங்க கதையைப் படிச்சிட்டு தான் வேலைக்கே போவேன்.. பாருங்க, என் ஸ்டேஷன் ஸ்டாஃப் கிட்ட எல்லாம் சொல்லி இருக்கேன்" என்றவர், அருகில் நின்றிருந்த இன்னும் இரண்டு காவலர்களை அழைத்து, "நான் தான் சொல்லி இருக்கேன்ல.. அனுஸ்ரீ ஜனார்த்தனன்.. இவங்க தான். அவங்களைப் பாருங்க, எவ்வளவு சின்னப் பொண்ணா இருக்காங்க? இன்னைக்கு என்னோட லக்கி டே! நம்பவே முடியல.. வாங்க ஒரு செல்ஃபி எடுப்போம். அப்படியே ஒரு ஆட்டோகிராஃப் போடுங்க. என் மனைவி கிட்ட போய் காட்டணும். அவங்களும் உங்களோட பயங்கர ஃபேன். சொன்னா நம்பவே மாட்டாங்க" என்று அவர் படபடவென பேசிக் கொண்டே போக அனுஸ்ரீக்கு நம்பவே முடியவில்லை.


ஏதோ என் ஆசைக்காக எழுதுகிறேன், யார் படிக்கப் போகிறார்கள் என்று இவ்வளவு நாள் நினைத்திருந்தாள். தினசரி 500, 600 எண்ணிக்கையில் அவளுடைய கதைகள் ரீடிங் எண்ணிக்கை காட்டும். அதெல்லாம் சும்மா கம்பெனிக்காரர்கள் மார்க்கெட்டிங் டெக்னிக்காகப் போட்டு வைக்கும் எண்கள் என்று நினைத்துக் கொண்டாள். நிஜமாகவே படித்து ஞாபகம் வைத்திருப்பார்கள், இப்படி ஒரு 50 வயதைக் கடந்த போலீஸ், அதுவும் சாலைப் பரிசோதனையின் போது அதைச் சொல்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் தன் வாழ்வில் தன்னிடமும் ஆட்டோகிராப் கேட்பார்கள் என்பதையும் இதுவரை நினைத்து பார்த்திராத அனுஸ்ரீ அவர் கேட்டபடிக்கு அவர் நீட்டிய தாளில் கையெழுத்து போட்டுக் கொடுத்தாள்.

அந்தக் காட்சியை தன் அலை பேசிக்குள் கைப்பற்றிக் கொண்ட விதுஷா அதை அப்படியே அவர்கள் வகுப்பு whatsapp குரூப்பில் போட்டு விட்டாள். அவளுக்கு அனுஸ்ரீ கதை எழுதுவாள் என்று தெரியும். பெயரைச் சொன்னாலே தெரியும் அளவிற்கு நம்ம அனு ஃபேமஸா என்ன என்று ஆச்சரியம் தாங்காமல், இந்த ஆச்சரியப்படத்தக்க ஆட்சியில் நானும் இருந்தேன் என்று சொல்லும் விதமாக வகுப்பு மொத்தத்துக்கும் டமாரம் அடித்தாள்.

அனுஸ்ரீக்கும் கால்கள் தரையில் இல்லை.‌‌ "எங்கே போனாலும் ஐ ஏ எஸ் ஆபிஸர் ஜனார்த்தனனேட பொண்ணு அப்படின்னு அடையாளப் படுத்தியே பாத்துட்டேன்.. லைஃப்ல ஃபர்ஸ்ட் டைம் என்னோட பெயரை வச்சு என்னை அடையாளம் தெரியுது.. ஊ ஹா!" என்று கத்தியவள் அதன் பின் விதுஷாவின் வேகத்தைக் கண்டு கொள்ளவே இல்லை.


கல்லூரி செல்லும் வரையில் கனவுலகத்தில் இருப்பது போலவே மிதந்து கொண்டு வந்தவள், வகுப்பில் இறங்கி ஃபோனை சுவிட்ச் ஆப் செய்யு முன் பார்க்க, அதில் அத்தனை பாராட்டுக்கள் வந்து விழுந்திருந்தன. கூடவே அவளது வகுப்பை சேர்ந்தவர்கள் அவளைச் சுற்றி வந்து கை கொடுத்தனர்.

"நீ இவ்வளவு பெரிய ஆளா டி? இவ்வளவு நாள் உன் கதையோட லிங்க் அனுப்புறப்ப எல்லாம் நாங்க கண்டுக்கவே இல்லை.. இப்ப அனுப்பு டி. நாங்களும் படிக்கிறோம்" என்றாள் இன்னொருத்தி.

"எனக்கு தமிழ் தெரியாது. ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் வருமா?" என்றாள் இன்னொருத்தி. சிரித்தபடி, "ட்ரான்லேஷன் இல்லையே" என்றாள் அனுஸ்ரீ.


எதிர்பாராத விதமாக மண்டைக்கனம் பிடித்த கோக்கு மாக்கு குணசேகர் அன்று வகுப்பு முடிந்தவுடன் அனுஸ்ரீயின் அருகில் வந்தான். "அனு! இஃப் யூ டோன்ட் மைண்ட், எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?" என்றான்.

'இவனே பெரிய படிப்பாளி. கிளாஸ் ரெப். இவனுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும்?' என்று வினோதமாக அவனை அனுஸ்ரீ பார்க்க,

"ஒண்ணுமில்ல.. எங்க அக்கா பொண்ணு ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறா. ஸ்கூல்ல காந்தி ஜெயந்திக்கு ஸ்பீச் ப்ரிப்பேர் பண்ணிட்டு வரச் சொல்லி இருக்காங்களாம்.. நாளைக்குள்ள ஒன்னு எழுதித் தர முடியுமா?" என்று கேட்டான்.

'அட! நம்மளை ஒரு மருந்துக்கும் மதிக்காத ஹெட்வெயிட் பார்ட்டி வந்து எழுதச் சொல்லி அப்ளிகேஷன் போடுது!' என்று நினைத்தவள், "சரி! ட்ரை பண்றேன்" என்றாள்.

அதற்குள் பிரகல்யாவிடம் இருந்தும் மெசேஜ் வந்தது. "ஒரே நாள்ல கிளாஸ் ஹீரோயின் ஆயிட்டியே! இதே சுறுசுறுப்போட அந்த பவித்ரா கதையை எழுதி முடி.. எனக்கே சஸ்பென்ஸ் தாங்க முடியல!" என்று.

'சக்கரைப் பொங்கல் அது இதுன்னு கனவு வந்துச்சு.. வரவர இந்த பவித்ரா கதை பத்தி எதுவும் வரமாட்டேங்குதே' என்று யோசித்த அனுஸ்ரீ, அன்றைய வகுப்பில் தூங்கினாலாவது தலைமைச் செயலகம் கனவில் வருகிறதா என்று பார்ப்பதற்காக வரப்போகும் பேராசிரியருக்காகக் காத்திருந்தாள்.

அனுஸ்ரீ தன் கூகிள் டிரைவில் எழுதியது

வந்த மூன்றாம் நாளே தங்களை வேறு ஃப்ளோருக்குக் கூட்டிப் போவார்கள் என்று பவித்ரா நினைக்கவில்லை. பெரிய மர்ம பங்களா ரேஞ்சுக்கு அவள் நினைத்திருக்க, சாதாரணமாக ஒரு அலுவலகத்தில் புதிய ஊழியர்கள் எப்படி இருப்பார்களோ அப்படித்தான் இவர்களை நடத்தினார்கள். முதல் நாள் வாசலுக்கு வெளியே வந்து கூட்டிப் போனவர்கள், இரண்டாவது நாள், "இந்த ஐடெனிட்டி கார்டுகளை மாட்டிக்குங்க.. செக்யூரிட்டி கேட்ல போலீஸ் உள்ள விட்டுருவாங்க" என்று சொல்லிவிட்டார்கள்.


இரண்டாவது நாள் பவித்ராவுக்கு டைப்பிங் செய்ய வேண்டிய பணி நிறைய இருந்தது. அந்த ஃபைலை படித்துப் பார்த்தால் ஏதேனும் புரிகிறதா, எதைப் பற்றிய சீக்ரெட் ஆபரேஷன் இது என்று தெரிந்து கொள்ள முடிகிறதா என்று அனுஸ்ரீ பார்க்க, அது ஏதோ வழக்குகள் அறிக்கைகள் சம்பந்தப்பட்ட ஃபைல்களாக இருந்தன. எல்லாம் சட்டம் சம்பந்தமாக இருக்க, அனுஸ்ரீக்கு ஒன்றும் புரியவில்லை.

அன்று ஒரு பணி ஓய்வு பாராட்டு விழா தலைமைச் செயலகத்தில் இருக்கும் எத்தனையோ அலுவலகங்களில் ஒன்று பணிபுரியும் ஒரு ஊழியர் அன்று ஓய்வு பெறுவதாக இருக்க அவருக்கு பாராட்டு விழா வைத்திருந்தார்கள். மத்தியானம் அவரது செலவில் உணவு ஜாம் ஜாம் என்று நடந்து கொண்டிருந்தது. அதில் சாப்பிடுவதற்காக பவித்ரா, அஜித் குமார், சண்முகசுந்தரம் மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு சென்றிருந்தார் செல்லப்பா. அவரது பெயர் இன்று தான் தெரியும். இவர்கள் மூவருக்கும் வேலை கொடுப்பது அவர்தான். பார்த்தாலே என்னிடம் வராதே எதுவும் பேசாதே என்பது போல் முறைத்துக் கொண்டிருப்பவர் அன்று ஓரிருவருடன் இயல்பாகப் பேசினார்.

இவ்வளவு நாட்கள் உணவை பார்சல் மூலமாக வாங்கித் தருவார் அல்லது டோக்கன் ஒன்றைக் கையில் கொடுத்து அஜித்குமாரை வாங்கி வரச் சொல்லுவார். எப்போதும் ஏதோ வேலை இருப்பது போலவே பரபரப்பாக எழுதிக் கொண்டும் எழுந்து எங்கோ செல்வதும் வருவதுமாகவும் இருப்பார், முதல் நாள் இன்டர்வியூ நடத்தியது மட்டும்தான் தனியான ஒரு அலுவலகத்தில். அதன் பின் மூன்று பேருக்கும் ஆளுக்கு ஒரு அடையாள அட்டையை கொடுத்து தலைமைச் செயலகத்தின் ஒரு கட்டிடத்தில் முதல் தளத்தில் ஒரு அறையில் அவர்களை வேலை பார்க்கச் சொன்னார்கள்.

சண்முகசுந்தரம் முதல் நாளில் மூன்று கணினிகளை ஆராய்ந்து கிட்டத்தட்ட 30 40 ஃபைல்களை எடுத்து வைத்திருந்தான். மறுநாள் அவை அனைத்தையும் தட்டச்சு செய்ய வேண்டிய பணியை பவித்ராவுக்குக் கொடுத்தார்கள். கணினியில் இருப்பதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்தால் போதாதா எதற்காக மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டும் என்று பவித்ரா கேட்டதற்கு "சொன்ன வேலையைச் செய்!" என்றார் செல்லப்பா.

இவர்களுக்கு அவ்வப்போது டீ வாங்குவதும், சாப்பாடு வாங்குவதும் தவிர வேறு எந்த வேலையும் அஜித் குமாருக்கு இல்லை. அவன் பாட்டுக்கு ஓரமாக அமர்ந்து கேண்டி கிரஷ் விளையாடினான். செல்லப்பா இவர்கள் பணி புரிந்த அறைக்கு அருகில் தான் இருந்தார். ஆனால் அவர் எத்தனையோ கோப்புகளை வைத்துக்கொண்டு எழுதுவதும் ஒரு அலமாரியில் வைப்பதும் மீண்டும் ஏதோ கணக்கு போடுவது போல் செய்வதுமாக இருந்தார். தேவை என்றால் மட்டுமே பேசினார். இவர்களையும் பேசக்கூடாது என்றார். யாரிடமும் தொடர்பு கொள்ள கூடாது என்று கூறியது எதற்கு என்றும் பவித்ராவுக்கு புரியவில்லை. அன்றைய தினம் அந்த ரிட்டயர்மென்ட் பார்ட்டிக்கு கூட்டிட்டு போனது ஏன் என்பதும் அவளுக்குப் புரியவில்லை.

"இங்கே நம்மை ஓசி பிரியாணி சாப்பிட வச்சுட்டு நம்ம சாப்பாட்டு காசை அபேஸ் பண்ணிடுவாரோ இந்த செல்லப்பா?" என்றாள். இது எதையும் பற்றி கவலைப்படாமல் மற்ற இரண்டு ஜீவன்களும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தனர். கடந்த நான்கு நாட்களாக தனக்கு தனிமை உணர்வு வரவே இல்லையே என்பதை நினைத்து சந்தோஷப்பட்டான் சண்முகசுந்தரம். அன்று பிரியாணியை ஒரு பிடி பிடித்தான். உடன் அமர்ந்து சாப்பிட இரண்டு பேர் இருப்பதே அவனுக்கு பெரு மகிழ்ச்சியைத் தந்தது. 'மெஸ் சாப்பாடா இது.. வாயில வைக்க முடியலை' என்று பவித்ரா கூறிய முந்தைய நாள் உணவைக் கூட துணை இருந்ததால் ரசித்து சாப்பிட்டான்.

பிரியாணி சாப்பிட்டு விட்டு கைகழுவும் போது "அட அசீத்து.. நீ எங்கடா இங்கனக்குள்ள நிக்கிற?"என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் வெள்ளை வேட்டி சட்டையுடன் ஊரிலிருந்து திரவியம் என்ற இடும்பு பிடித்த ஒன்று விட்ட பெரியப்பா.

"பெரியப்பா!" என்று அதிர்ந்தவன் அவர் ஆர்ப்பாட்டமாக அருகிலுள்ளவரிடம் இவனை அறிமுகம் செய்யப் போக, பாய்ந்து அவரைத் தடுத்து தனியாக தள்ளிக் கொண்டு போனான். போகும் வழியிலேயே ஞாபகமாக தன் கழுத்தில் கிடந்த சரவணன் என்ற பெயர் பொறித்த அடையாள அட்டையைக் கழற்றி பேண்ட் பாக்கெட்டில் செருகினான்.

"என்னை இங்கே பார்த்ததை ஊர்ல யாருகிட்டயும் சொல்லிடாதீங்க.. ஒரு ரெண்டு மாசம் கொஞ்சம் காசு சம்பாதிச்சுக்கிட்டு நானே ஊருப் பக்கம் வருவேன்" என்றான்.


திரவியம் ஒரு தடாலடி பேர்வழி. வேலை வாங்கித் தருகிறேன், ட்ரான்ஸ்பர் வாங்கி தருகிறேன் என்று காசை வாங்கிக் கொண்டு கம்பி நீட்டும் ஆள். பத்து பேரிடம் பணம் வாங்கினால் ஒருவருக்கு வேலையை முடித்துத் தருவார். எல்லா அரசு அலுவலகங்கள் இவரை போன்ற ஒரு ஆளை நீங்கள் பார்க்க முடியும். தான் அங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தவன் என்பது போல் காட்டிக் கொண்டு, அங்குமிங்கும் அலைவார். அதிகாரிகளிடம் ரொம்ப பழக்கமானவர் போல் நடந்து கொள்வார். அதைப் பார்த்து ஏமாறும் ஜனங்களிடம், "ஒரு 2000 குடு. அடுத்த வாரம் புது ரேஷன் கார்டு உங்க வீட்ல இருக்கும்" என்று கூறி காசை கறந்து விடுவார். நிறைய பேரிடம் பணம் வாங்கி வேலை முடியாவிட்டால் அவ்வப்போது ஊரிலிருந்து காணாமலும் போய்விடுவார்.

அதனால் அஜித்குமாரின் தற்போதைய நிலைமை அவருக்குத் தெரியவில்லை. "அட! நானே ஊர்ப் பக்கம் போய் மூணு மாசம் ஆச்சு.. நீ என்ன புதுக் கதை சொல்றே?" என்றார் அவனை ஆர்வத்துடன் பார்த்து.

"அப்ப, நான் ஊரை விட்டு ஓடி வந்தது உங்களுக்குத் தெரியாதா? நான் தான் வாயைக் குடுத்து மாட்டிக்கிட்டேனா?" என்றான் அஜித்.

"ஆமா.. அந்த வெள்ளத்துரைக்கும் எனக்கும் கொஞ்சம் கைகலப்பாகிப் போச்சு.. அவன் பொண்டாட்டிக்கு சத்துணவுல வேலை வாங்கி தரேன்னு சொல்லிருந்தேன்ல.. என்ன, அரசியல் நிலைமை கொஞ்சம் சரியில்லை.. இழுபறியாப் போச்சு.. அதுக்கு என்னென்னமோ பேசிட்டான். நானும் பதிலுக்குப் பேச, அவன் என் மேல கை வச்சுட்டான்.. சரின்னு ஊரை விட்டு வந்துட்டேன். என்னடா பெரிய வேலை, நான் நினைச்சா ஆயிரம் பேருக்கு வேலை வாங்கி தருவேன். வேலைக்கான ஆர்டரோட வரேன் அப்படின்னு சொல்லி அதுக்காகத்தான் இங்கே அலஞ்சுகிட்டு இருக்கேன்" என்று தீவிரமாகச் சொல்லி ஒரு பெரிய ஏப்பத்தை வெளியேற்றினார்.

"தெரியுது தெரியுது நீங்க அலையிறது நல்லாவே தெரியுது.. போன வருஷம் வரை கரை வேட்டி கட்டியிருந்தீங்க.. இப்ப அப்படியே வேட்டியில இருக்கிற கரையோட கலர் மாறிடுச்சு.. ஆமா எத்தனை வேட்டி தான் வச்சிருக்கீங்க பெரியப்பா?" என்றவன், அவர் அசடு வழியவும்,

"சரி சரி! உங்களை இங்கே பார்த்ததை நான் ஊருக்குள்ள சொல்லலை.. அதே மாதிரி நான் வீட்ல கோவிச்சுட்டு வந்துட்டேன்.. நீங்களும் நான் இங்கே இருக்கேன்னு சொல்லிட வேண்டாம். சரியா?" என்று அவர் தோளில் தட்டி லேசாக ஒரு மிரட்டலையும் போட்டுவிட்டுக் கிளம்பினான். "டேய் அசீத்து.. பெரியப்பாவால முன்ன மாதிரி அலைஞ்சு திரிஞ்சு தொழில் பார்க்க முடியல.. அப்படியே என் கூட சேர்ந்துக்கிறியா?" என்று திரவியம் கேட்க, அதை காதில் வாங்காமல் விறுவிறுவென்று நண்பர்களை நோக்கி நடந்தான்.


'நிறைய சாப்பிட்டுட்டேனே' என்று அந்த காரிடாரில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான் சண்முகசுந்தரம். பவித்ரா ஓரமாகக் கிடந்த பெஞ்ச்சில் அமர்ந்து தனது துப்பறியும் மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்க, இவன் அந்த நீள வரண்டாவில் நடப்பதைப் பார்த்து "டேய் அண்ணா.. வயிறு நிறைய சாப்பிட்டுட்டு இப்படி நடக்க கூடாது டா.. அது இதயத்துக்கு நல்லதில்ல" என்றான் அஜித்குமார். அவன் அதற்குள் அண்ணா, வாடா போடா என்று கூப்பிட ஆரம்பித்து விட்டான். சண்முகசுந்தரம் கேட்கவில்லை. மூன்று முறை அந்த முனையில் இருந்து இந்த முனைக்கு நடந்தவன் நான்காவது முறை ஏனோ கொஞ்சம் மெதுவாக நடந்தான்.

"என்ன ஆச்சு? உடம்புக்கு எதுவும் பண்ணுதா?" என்று பவித்ரா அவன் அருகில் சென்று கேட்க, "இல்லை இல்லை.. ஒரு விஷயம் ரொம்ப வித்தியாசமா பட்டுச்சு.. அதான் மெதுவா நடக்குறேன்" என்றான்.

"என்ன?" என்று அஜித், பவித்ரா இரண்டு பேரும் ஒன்று போல் கேட்க,

"இந்த ஃப்ளோர் நம்ம ஆஃபீசுக்கு அப்படியே மேல இருக்கு.. அப்படித்தானே?" என்றான் சண்முகசுந்தரம்.

"ஆமா நேர் மேலே தான்" என்று பவித்ரா கூற, "நம்ம ஆபீஸ் வாசல்ல உள்ள வராண்டால என்னால நூறு ஸ்டெப்ஸ் நடக்க முடியும்.. இங்க பாருங்க, 60 அடி தான் நடந்தேன் அதுக்குள்ள வராண்டா முடிஞ்சிடுச்சு.. சுவர் ஆரம்பிக்குது.. இந்த 40 அடில ஏதோ மர்மம் இருக்கு" என்றான் சண்முகசுந்தரம்.

"போச்சுடா.. இந்த அக்கா தான் துப்பறியிற வேலை பார்த்துட்டு இருந்துச்சுன்னா, இப்ப நீங்களும் சேர்ந்துட்டீங்களா?" என்று அஜித் குமார் சலித்துக் கொள்ள, "இது என்ன புதுக் கதை? வாங்க பார்ப்போம்" என்று அவன் சொன்ன சுவர் பக்கமாகப் போய் நின்று பார்த்தாள் பவித்ரா.

"அண்ணன் சொல்றது கரெக்ட்டான்னு போய் கீழே நம்ம ஃப்ளோர்ல நடந்து பாத்துட்டு வா" என்று அஜித்குமாருக்கும் ஒரு வேலை கொடுத்தாள்.

"உங்களோட ஒரே அக்கப்போரு" என்று அவன் கீழே செல்ல, சண்முகசுந்தரம் பவித்ராவிடம், "தேங்க்ஸ்" என்றான்.

"எதுக்கு? நீங்க சொன்னதை நம்பினதுக்கா?" என்று அவள் பட்டென்று கேட்க, "இல்லை இல்லை.. எனக்கு உடம்புக்கு எதுவும் செய்யுதா என்னன்னு கேட்டீங்கல்ல.. இதுவரைக்கும் யாருமே என்னை அப்படி கேட்டதில்லை" என்றான் கண் கலங்க.

கனவுகள் பூக்கும்
❤️
 
Last edited:

Latha S

Administrator
Staff member
Nice.. தலைமை செயலகத்தை இப்போ ஆராய ஆரம்பிச்சாச்சு
 
Top