கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தானா வந்த சந்தனமே...அத்தியாயம்-17

Nilasubramanian

Moderator
Staff member
அத்தியாயம்-17

ஒரு மணி நேரம் கடந்திருந்தது.மாடியில் நின்று கொண்டு, கீழே பார்த்தாள்.ஹாலில் அகிலாண்டம் இல்லை.

கீழிறங்கி வந்து, ஹாலில் அமர்ந்து கொண்டாள்.இன்னும் கொஞ்ச நேரம், கடந்தது.ஆர்த்தி, அகிலாண்டம் அறைக்கும், சமையல் அறைக்கும், கொஞ்சம் பரபரப்புடன் சென்று வந்தாள்.

சிறிது நேரத்தில் மாமி, கையில் ஏதோ எடுத்துக்கொண்டு, அகிலாண்டம் அறைக்கு சென்றார்.

'என்ன எடுத்துட்டு போறாங்க..??'
இவளும் பின்னோடு சென்று, அந்த அறைக்குள் நுழைந்தாள்.

"இதை குடிச்சேள்னா, சட்டுன்னு நின்னுடும்.இந்த கஷாயம் ரொம்ப நல்லது."

அகிலாண்டம், சோர்ந்து போய் படுக்கையில் அமர்ந்திருந்தார்.
அந்த கஷாயத்தை வாங்கி, வாயின் அருகே கொண்டு சென்றவர் ,முகம் சுழித்தார்.

"கொஞ்சம் கசக்கும் தான் மா..ஆனா, வயித்து போக்கை சட்டுன்னு நிறுத்திடும்.கண்ணை மூடிட்டு குடிச்சுடுங்கோ ."

'ஆத்தி, ஒரு வேளை நின்னுடுமோ??'

கீர்த்தி 'திக்' என்று பார்த்திருந்தாள்.

ஆர்தியை நெருங்கி,அவள் காதருகே மென் குரலில்,

"என்னாச்சு..??"

"தெரியல டி.. அத்தைக்கு டிசென்றி ஆகுது.அஞ்சாறு தடவை ஆகிடுச்சு.எலுமிச்சை சாறு,டீ டிகாசன்,வரக்காப்பி எல்லாம் கொடுத்துட்டேன், சரி ஆகலை. அதான், மாமி கிட்ட சொல்லி, கஷாயம் போட சொன்னேன்."

'சும்மாவே இருக்க மாட்டா, எருமை.ஒரு வேளை நின்னுடுமோ.ஆண்டவா,ஹெல்ப் பண்ணு.'

கஷாயம் குடித்த சிறிது நேரத்தில்,அகிலாண்டம் மறுபடியும், பாத்ரூம் நோக்கி வேகமாய் சென்றார்.
வெளியே வந்தவர்,மிகவும் சோர்ந்து காணப்பட்டார்.

"என்னாச்சு அத்தை??"

"முன்னை விட ஜாஸ்தி, ஆயிடுச்சு.என்னத்தை கொடுத்தீங்க நீங்க??"

உடல் உபாதையில், மாமியிடம் எரிந்து விழுந்தார்.

"நல்ல மருந்து தான் மா.என்னாச்சுன்னு தெரில??"

மாமி கையை பிசைந்தார்.அவரை பார்க்க பாவமாய் இருந்தது.

"இன்னொரு கஷாயம் இருக்கு..போட்டு எடுத்துட்டு வரவா??"

"ஒரு மண்ணும் வேண்டாம்..நீங்க போய் எலுமிச்சை சாறு, கொஞ்சம் கொண்டு வாங்க.."

"சரி மா.."

அவர் சென்றதும்,ஆர்த்தி,

"அவருக்கு வேணா போன் பண்ணவா அத்தை.??."

"வேண்டாம்..கொஞ்ச நேரம் பார்ப்போம்.."

மெதுவாக அங்கிருந்து நழுவி, சமையல் அறைக்குள் வந்தாள் கீர்த்தி.

மாமி, புலம்பி கொண்டே எலுமிச்சை பிழிந்து கொண்டிருந்தார்.

"நல்லத்துக்கே காலமில்லை…"

அங்கு சமையலுக்கு கரைத்த, புளி தண்ணிர் இருந்தது.மாமி உப்பு எடுக்க நகர்ந்த போது, அந்த எலுமிச்சை சாற்றில், கொஞ்சம் புளி தண்ணீர் கலந்தாள்.நிறம் மாறாத அளவு,கொஞ்சமாய்.

உப்பு எடுத்து வந்த மாமி,
"என்னடி குழந்தே இங்க நிக்குற??"

"ஒண்ணுமில்லை மாமி.உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு.."

'நீ பண்ண ஹெல்ப்க்கு தான், இப்போ மாமி வாங்கி கட்டுனாங்க.இன்னும் என்ன ஹெல்ப் பண்ண போற??'
கேள்வி கேட்ட மனசாட்சியை, தலையில் தட்டி அடக்கினாள்.

"நோக்காவது, என் மேல அக்கறை இருக்கேடி குழந்தே,பகவான் உன்னை ஷேமமா வச்சுப்பார்.இரு, இதை கொண்டு போய் கொடுத்துட்டு வரேன்."

அவர் கொடுத்துவிட்டு வந்த சிறிது நேரத்தில்,ஆர்த்தி ஹால்க்கு பரபரப்பாய் வந்து,ஆரவ்க்கு போன் செய்தாள்.

"ஆரவ்,அத்தைக்கு ரொம்ப லூஸ் மோஷன் ஆகுது.சீக்கிரம் வாங்க.டாக்டர் கிட்ட போலாம்.."

"….."

"கொஞ்ச நேரம் முன்ன இருந்து.."

"…."

"அத்தை தான் பார்த்துகிட்டு சொல்லலாம்ன்னு சொன்னாங்க.."

"…."

"ஹ்ம்ம்..சீக்கிரம் வாங்க…"

சமையல் அறையில் இருந்து,அவள் பேசுவதை கேட்ட கீர்த்தி,
"சக்சஸ்…"
இரு கைகளையும் மடக்கி, காற்றில் குத்தி, குதூகளித்தாள்.

மாமி சோகமாய் உள்ளே வந்தார்.

அவரை இறுக்கி அணைச்சு, உம்மா தரலாம் போல இருந்தது.
அப்படி செய்தால்,என்ன காரணம் கூறுவது!!எனவே, மகிழ்ச்சியை அடக்கிக் கொண்டாள்.

"இத்தனை வருஷத்துல,இப்படி யாருக்குமே ஆனதில்லடி குழந்தே..இவாளுக்கு மட்டும்,எல்லாம் எதிராவே இருக்கு."

'வினை விதைச்சா, அறுவடை பண்ணி தான் ஆகனும்.'

"கவலை படாதீங்க மாமி.அதான், டாக்டர் கிட்ட போறாங்கல்ல சரி ஆயிடும்.."

"ஆகனும் டி மா.."
கூறிவிட்டு, அவர் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

ஆரவ் வந்ததும், அகிலாண்டத்தை கை தாங்கலாக பிடித்து ,அழைத்து சென்று, காரில் ஏற்றி,மருத்துவமனை சென்றான்.அரூ மாசமாக இருப்பதால்,வர வேண்டாம் என்று அகிலாண்டம் கூறிவிட்டார்.

ஆரவ், சிறிது நேரத்தில் ஆர்திக்கு தொடர்பு கொண்டு,
அகிலாண்டத்தை பெட்டில் சேர்த்திருப்பதாகவும்,குளுக்கோஸ் ஏற்றி இருப்பதாகவும்,பார்த்துக் கொண்டு வருவதாக கூறினான்.

"என்னாச்சு அரூ.."

சோகமாய் அரூ,
"பெட்ல சேர்த்துருக்காங்களாம்.குளுக்கோஸ் ஏறுதாம்."

"ஓ…எப்போ வராங்களாம்..??"

"தெரில டி. டாக்டர் சொல்லுறதை கேட்டுகிட்டு, சொல்லுறேனார், ஆரவ்."

"ஹ்ம்ம்..வயசான காலத்துல, கண்டதையும் திண்ணா, அப்படி தான்.கிருஷ்ண ஜெயந்தி பட்சணம் எல்லாம், பார்த்ததும் ஆசையா தான் இருக்கும்.அதுக்குன்னு, ஒரு அளவு வேண்டாம்."

"ஏய்,அவங்க அதெல்லாம் சாப்பிட மாட்டாங்க டி. கண்ட்ரோல் அஹ் தான், இருப்பாங்க.."

"ஓ..அதான் ஸிரோ சைஸ்ல, ஸ்லிம் பியூட்டி அஹ் இருக்காங்களா..??"

"போடி..இருக்க டென்சன்ல இவ வேற.."
சொல்லிவிட்டு, ஆர்த்தி அங்கிருந்து சென்று விட்டாள்.

மாலையில் சோர்ந்து போய், ஆரவ் மட்டும் வீடு திரும்பினான்.

"என்னாச்சுங்க..??"

"ஏதோ, அவங்க சாப்பிட்ட மாத்திரை ஒத்துக்கலையாம்.சைடு எபெக்ட் போல..நைட் வரை ட்ரிப்ஸ் போட்டு, நாளைக்கு பார்த்துகிட்டு, காலையில டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு டாக்டர் சொல்லிட்டார்."

"ஓ..இப்போ என்னங்க பண்ணுறது..??"

"அம்மா,விசேஷத்தை நடத்த சொன்னாங்க.சொந்தம்,தெரிஞ்சவங்க எல்லாம் கூப்பிட்டோம்,நடத்தாட்டி நல்லா இருக்காது.அதுனாலே,நீயும் ஆர்த்தியும் நடத்துங்க,ஒரு குறையும் வர கூடாதுனு சொன்னாங்க.நர்ஸ் அஹ், கூட துணைக்கு வச்சுட்டு, நான் கிளம்பி வந்தேன்."

"ஹ்ம்ம்..சரிங்க..நீங்க குளிச்சுட்டு வாங்க..எல்லோரும் வர ஆரம்பிச்சுடுவாங்க. அத்தை சொன்ன மாதிரி நடத்திடுவோம்."

"ஹ்ம்ம்…"

ஆரவ் எழுந்து மாடிக்கு சென்றான்.
ஹாலில் நின்று, இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த கீர்த்திக்கு, மௌன புன்னகை தோன்றியது.

சிறிது நேரத்தில், ஒவ்வொருவராய் வர ஆரம்பித்ததும்,வீடு விழா கோலம் பூண்டது.

லாவெண்டர் நிற பாவாடை தாவணியில், லாவெண்டர் பூ போல, அழகாய் தயாராகி வந்தாள் கீர்த்தி.

பல பேர் வந்தாலும்,அவள் கண்கள் ஒருவனுக்காய் காத்திருந்தது.

அவள் எதிர்பார்த்தவனும் வந்தான்.இவள் உடை அலங்காரத்தை, விழுங்கி விடுவது போல ஒரு நிமிடம் பார்த்துவிட்டு,கண்களால் பாராட்டி விட்டு, ஐந்து நிமிடத்தில் கிளம்பி வருவதாய் ஜாடை காட்டி விட்டு, தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

அவன் வெளியே வருவதற்கும், பூஜை ஆரம்பிப்பதற்கு, சரியாய் இருந்தது.
அவனை, ஆச்சர்யம் பொங்க பார்த்த சில சொந்தங்கள்,நலம் விசாரித்தார்கள்.

புன் முறுவலுடன், அவர்களுக்கு பதில் அளித்தவன் கண்கள், அடிக்கடி தன்னவளை தேடி கண்டு பிடித்து மகிழ்ந்தது.

அவளும், இவனுக்கு சளைக்காமல், இவனை தான் அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தாள்.

"விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம், அரங்கில் ஏறுதாம்!!"

ஐயர் வரவழைக்க பட்டு, பூஜை சிறப்பாக நடந்துகொண்டிருந்தது.

அவன் அங்கு இருப்பதை, ஆர்த்தியும் ஆரவும் ஆச்சர்யமாய் பார்த்தார்கள்.ஆனால், ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை.

மாமிக்கு, அவன் வந்ததில் மிக மகிழ்ச்சி.அவனை நன்றாக கவனித்துக் கொண்டார்.

"என்ன வேண்டும்??,காபி சாப்பிடு,பட்சணம் சாப்பிடு"
என்று பயங்கர உபசரிப்பு.

இதை கண்டு, கீர்த்திக்கு மகிழ்ச்சி.

அகிலாண்டத்தை பற்றி விசாரித்த சொந்தங்களுக்கு,மேம்போக்காய் பதில் அளிக்க பட்டது,ஆரவ் தம்பதியர்களால்.

"யாராவது பாடுங்கோ"
கண்ணன் பாடல்கள் பாடப்பட்டது.

ஆர்த்தி,
"கீர்த்தி, ஒரு பாட்டு பாடு டி.."

"ஹ்ம்ம்.."

அவளுடைய கண்ணனை நினைத்து பாட ஆரம்பித்தாள்.அவள் பாட போகிறாள் என்றதும்,பார்த்தி கவனம் முழுதும்,இவள் புறம் திரும்பியது,

"ஆயிரம் சூரியன் ஓர் உருவாக
ஆடுகிறான் கண்ணன்.!!
ஆயற்பாடி இந்த, ஆனந்த பூமியில்
ஆடுகிறான் கண்ணன்!!
அழகான கடலில், அலை அலையாய் எழுந்தான்.!!
நுழைவான திடலில் முகிலாகி நிறைந்தான்!!
ஆடுகிறான் கண்ணன்.!!"

உன்னை தான் கண்ணனாக நினைத்து பாடுகிறேன் என, அவள் ஒவ்வொரு அசைவிலும் உணர்த்தினாள் பெண்.

"நித்தம் கோபியர் தாவணி எடுத்து
சத்தமில்லாமல் சேகரித்தான்!!
புத்தம் புதிதாய் ,சேலையை நெய்து
பாஞ்சாலிக்கதை பரிசளித்தான்!!
கொடுப்பதில் வள்ளல்!! எடுப்பதில் கள்வன்!!
அடடா!! இவனே துணையாய் வருவான்!!
ஆடுகிறான் கண்ணன்.!!

விளையாட்டு பிள்ளை இவன்,
கிள்ளி விட்டு தாலாட்டி,
வேடிக்கை காட்டுகிறான்,தலை ஆட்டும் பொம்மைகளை, தடம் பார்த்து இடம் மாற்றி,
ஞானத்தை ஊட்டுகிறான்.
நெஞ்சே அணுஅணுவாய், நீ தெளிவாய்!!
அனுபவம் அவன் தானடா!!"

இந்த இடத்தில் பார்த்தியை பார்த்து, புருவம் உயர்த்தினாள்,

"அவனே கதி என்று, நீ பணிந்தால்!!
அதிசயம் உணர்வாயாட!!
முதலானவன், எதிலும் முடிவானவன்,
புதிரானவன் ,என்றும் புதிதானவன்,
கண்ணிலே, ஒளி விடும், கருமணி என
கனவுகள் வரைபவன்.!!"

அவள் செய்கையில் புன்னகைத்து, அவளை பார்வையால் விழுங்கினான் அவன்.

"கார்மேக பந்தல் இவன்,
மழையூரில் பயிர் நெய்து,
பசியாற பாடுகிறான்.!!
மணிவண்ண ஊஞ்சல் இவன்,
மனதோடு உனை தாங்கி,
அசைந்தாடி ஏந்துகிறான்.!!
புல்லாங்குழலோரம், பூவிதலால்,
இதயத்தை தீண்டுகிறான்.!!
நிழலே, இருளாக நீ மிரண்டால்,
ஒளியாய் அவன் தோன்றுவான்!!
கலையாதவன் ,என்றும் களைக்காதவன்,
நிலையானவன், நெஞ்சின் நிழலானவன்,
விண்ணிலும்!! மண்ணிலும்!!
நிரந்தரமென, என்னிலும் நிலைப்பவன்.!!"

இங்கு 'உன்னிலும்' நிலைப்பவன் என்னும் வார்த்தையை 'என்னிலும்', என்று மாற்றி பாடினாள்.

என்னிலும் என்று பாடி விட்டு,அவனை பார்த்து யார்க்கும் தெரியாமல்,கண் சிமிட்டினாள்.
இவனும் பதிலுக்கு, அவளை பார்த்து உதடு குவித்தான்.

இதை எதிர்பார்க்காதவள். ஒரு நொடி அதிர்ந்து, கண்ணில் வியப்பை காட்டினாள்.

பின் புன்னகையோடு, முக சிவப்பை மறைக்க தலை குனிந்தாள்.

அவளை கண் எடுக்காமல் ரசித்தான் பார்த்திபன்.அது பொது இடம் என்பதை மறந்து.இவர்கள் பார்வை பரிமாற்றத்தை,ஜாடைகளை, இரு விழிகள் கண்டு கொண்டது.

யோசனையில் ஆழ்ந்தது.

அவள் பாடி முடித்ததும்,மாமி,
"அருமையா பாடுனடி குழந்தை..!!"
என்று பாராட்டினார்.

அதன் பின், பூஜை முடிந்து,அனைவர்க்கும் பிரசாதம் கொடுத்து,இரவு உணவு வழங்கி,தாம்பூலம் கொடுத்து அனுப்பினார்கள்,ஆரவ்,ஆர்த்தி தம்பதியர்.

இரவு,அகிலாண்டத்திற்கு துணை தேவை என்று,ஆரவ் விழா முடிந்ததும் கிளம்பிவிட்டான்.

ஆர்திக்கு,அனைத்தையும் ஒழுங்கு செய்ய மாமி உதவினார்.எல்லாம் முடிய நள்ளிரவானது. மாமி அன்று, அங்கேயே தங்கிக் கொண்டார்.

நள்ளிரவுக்கு மேல், மொட்டை மாடியில் சந்தித்த பார்த்தியும் கீர்த்தியும், ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டார்கள்.

"யாரை நெனச்சு பாடுன??"

"இன்னிக்கு கிருஷ்ண ஜெயந்தி,வேற யாரை பத்தி நெனைப்பாங்க. கண்ணனை பத்தி தான்."

கள்ள சிரிப்போடு சொன்னாள்.

"யார் அந்த கண்ணன்னு, தான் கேக்குறேன்.??"

"கண்ணனை தெரியாதா??நம்ம பூஜை அறையில கூட இருக்கார்.இன்னிக்கு அலங்காரம் எல்லாம் செஞ்சு இருந்தாங்களே.."

அப்பாவியாய் விழிகள் சிமிட்டி சொன்னாள்.

"ம்ஹம்ம்…"
அவன் பாவனையில் சிரித்து,

"என் கண்ணனை நினைச்சு தான்."
அவன் மீசையை பிடித்து இழுத்து சொன்னாள்.

"எல்லோரும், ராமர் மாதிரின்னு தான் சொல்லுவாங்க..நீ வித்யாசமா கண்ணன்ங்குர??"

"எனக்கு கண்ணன் தான் பிடிக்கும்.மனைவியை சந்தேக பட்ட ராமரை விட.."

"ஆனா, நான் ராமன் தான், மனைவியை சந்தேக படாத ,ராமன்."

"ம்ஹம்ம்…"
அவனை மாதிரியே, சொன்னவளை பார்த்து,சிரித்தான்.

பின் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, கிளம்ப போகையில்,
"ஆமா,இன்னிக்கு அவங்க விழாக்கு வரலியா??ஏன்..??"

"நான் தான் சொன்னேன்ல, அவங்க வர மாட்டாங்கன்னு.."

"ஏன் வரல..??"

"நீங்க வர்றத்துக்காக.."

புரியாமல் பார்த்தவனை பார்த்து, மர்மமாய் புன்னகைத்து,

"உங்களுக்கு எதுக்கு அதெல்லாம்,எதையும் யோசிக்கமா போய் தூங்குங்க.."

அவன் முதுகை பிடித்து தள்ளி, போக சொன்னாள்.

அவனும் மென் நகையுடன், தலை
அசைத்து விட்டு, அங்கிருந்து சென்றான்.

மறுநாள் காலையில், அகிலாண்டத்தை மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்தார்கள்,ஆர்த்தியும் ஆரவ்வும்.

"இப்போ பரவால்லிய அத்தை??"-கீர்த்தி.

"ஹ்ம்ம்..பரவால்ல"

குரலே,வெளி வராமல் பதில் சொன்னார்,அகிலாண்டம்.பிறகு, அவர் அறைக்கு ஓய்வெடுக்க சென்று விட்டார்.

அவர் மீண்டும் தேற, மூன்று நாள் ஆனது.


அதன் பின், நாட்கள் அதன் போக்கில் சென்றது.
ஒரு வாரம் கழித்து,ஒரு இரவில்,இவள் அறைக்கு வந்த ஆர்த்தி,

"இந்தா டி பாதம் பால்.மாமி, சாயங்காலம் போகும் போதே ,உனக்காக போட்டு, பிரிட்ஜ்ல வச்சுட்டு போய்ட்டாங்க..மறக்காம கொடுக்க சொன்னாங்க.என்னையும் குடிக்க சொன்னாங்க.."

"ஹ்ம்ம்.."
என்று வாங்கியவள்.

அதில் இருக்கும் ஸ்பூன் கொண்டு, அதை கலக்க ஆரம்பித்தாள்.

"மாசமா இருக்குறது நான்.எனக்கு பாதம் பால் போடாம ,உனக்கு போட்டு, என்னையும் குடிக்க சொல்லுறாங்க.மாமிக்கு, என்ன வசிய மருந்து கொடுத்தியோ.."

பேசி கொண்டே அவளை பார்த்தவள், ஒரு நிமிடம் பேச்சற்று நின்றாள்.

"எப்படியோ, பாதம் பால் கிடைக்குதுன்னு, குடிக்க வேண்டியது தானே.."

பேசிக்கொண்டே திரும்பியவள்,இவள் வெறித்த பார்வை கண்டு,

"என்னாச்சு டி அரூ..??"

"கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கு, இப்படி தானே,அத்தை குடிக்குற காபில ஸ்பூன் போட்டு கலக்கிட்டு இருந்த,என்ன கலந்த..??"

ஒரு நொடி திகைத்தவள்,

"அதான், அன்னைக்கே சொன்னேனே,சுகர் கலந்தேன்.மாமி போட்டுருப்பாங்கன்னு."

"சுகர் போட்ட மாமிக்கு, கலக்க தெரியாதா??ஆமா, நீ ஏன் அங்க போன??மாமி கிட்ட தானே காபி கேட்டாங்க அத்தை.."

"அது…மாமியை கூப்பிட்டாங்க..அதை சொல்ல போனேன்.."

"யார் கூப்பிட்டா??"

"அலங்காரம் பண்ணுறவங்க.."

"அவங்களுக்கு, மாமியை தெரியவே தெரியாது.எல்லோரும் வேற ஊர் ஆட்கள்."

"எனக்கு என்ன தெரியும்??இங்க வந்து பேசுனாங்களோ?? என்னவோ??"

ஆர்தியின் பார்வை, இவளை நம்ப மாட்டேன் என்றது.

"என்ன பார்க்குற??"

"இன்னும் எத்தனை பொய் சொல்லுவ??"

ஒரு நிமிடம் அமைதி ஆன கீர்த்தி,ஒரு பெரு மூச்செடுத்து,

"ஆமா, நான் தான், அந்த காபில, பேதி மாத்திரை கலந்தேன்.அதுக்கு என்ன இப்போ..??"

அவள் பதிலில் அதிர்ந்து,
"ஏய்,ஏண்டி..??"

…..தொடரும்…
















 

Padma

Active member
அச்சச்சோ கீர்த்தி அரூ கிட்ட மாட்டிட்டாளோ அதுவும் இரண்டு தடவை.இதை தான் பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்னு சொல்றாங்களோ என்னவோ போ நீ பாவம் தான் கீர்த்தி
😜😜
 
Top