கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தானா வந்த சந்தனமே...அத்தியாயம்-21

Nilasubramanian

Moderator
Staff member
அத்தியாயம்-21

இவர்கள் பேசுவதை கவனித்து கொண்டிருந்த மாமிக்கு,பார்த்தியை பார்த்தால்,பரிதாபமாக இருந்தது.

'யாரோ,செய்த தவறுக்கு,இந்த பிள்ளைகளுக்கு தண்டனை கொடுப்பது சரியா??'

மனதில் கேள்வியுடன் நின்றார்.

"என்ன புரியலியா..??என் தங்கச்சி மகன்,ஐடி கம்பெனில வேலை பார்க்குறான்..மாசத்துக்கு, ரெண்டு லட்சம் சம்பளம்.சொந்தமா வீடு,கார் எல்லாம் இருக்கு.உன்னை மாதிரி வெட்டிப் பையன் இல்ல..அவனை, கீர்திக்கு பேசி முடிக்க போறேன்..என் தங்கச்சி கிட்ட பேசிட்டேன்..அவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

ஆரவ் கல்யாணத்துலயே விசாரிச்சா..கீர்த்தி பத்தி..அவங்க, இன்னும் ரெண்டு வருஷம் போகட்டுமுன்னு சொன்னதால.. நானும் விட்டுட்டேன்..இப்போ ,அவனுக்கு தான், கீர்த்தியை பேசப் போறேன்..கல்யாண செலவுக்கு கூட..,நானே பார்த்துக்குறேன்..பொறுமையா, திருப்பி கொடுங்க சம்பந்தின்னு சொல்லிட்டேன்..

கீர்த்தி அப்பாக்கு, பரம சந்தோசம்..என்னை, தெய்வம் மாதிரி பார்க்குறார்..இப்போ, அவர் கண்ணு முன்னாடி, உன் தட்டு, ரொம்ப தாழ்ந்து போய் இருக்கும். அவர் மனசு ,ஒரு வேளை மாறிட்டா, என்ன பண்ணுறதுன்னு..??உடனே, இந்த விஷயத்தை போட்டுட்டேன்..அவர் காதுல.


ஐடி மாப்பிள்ளை பெருசா..??ஈ ஓட்டுற மாப்பிள்ளை பெருசா..??அப்படின்னு, அவரே யோசிப்பார் தானே..அதோட, அவர் பொண்ணுங்க ரெண்டு பேரும், அப்பா பேச்சை மீறாதுங்க ..ஆர்தியை பொண்ணு பார்க்க போகையில..,பொண்ணு கிட்ட, பேருக்கு கூட சம்மதம் கேட்கலை அவரு..


நீ ஆசை பட்டது..எப்போவுமே நடக்காது..நான் ஆசைப்பட்டது தான் நடக்கும்..
சொல்ல மறந்துட்டனே,இன்னும் பத்து நாளுல பொண்ணு பார்த்து,அன்னைக்கே சிம்பிள் அஹ், வீட்டுலேயே நிச்சயதார்த்தம்..அப்புறம், ஒரு மாசத்துல கல்யாணம்..அவசியம் வந்துரு..

ஆரவ் கல்யாணத்துக்கு தான், கூப்பிட முடியல..இதுக்கு, உனக்கு தான் முதல் பத்திரிகை..என்ன இருந்தாலும்,அவ காதலன் இல்லியா நீ..??"
நமட்டு சிரிப்போடு கூறினார்..

"உன்னை பார்க்கையில் எல்லாம்,உன் அப்பா ஞாபகம் வரும்..அவர் செஞ்ச துரோகமும்.அதுனால தான், உன்னை பார்க்கையில எரிஞ்சு விழுவேன்..இப்போ நானே ஒத்துக்குறேன்..நீ ,உன் அப்பா மாதிரி தான்..அவரை மாதிரியே காதல்ல உருகுற,அவ்வளவு காதல், உன் அம்மா மேல அவருக்கு..அதுக்கு குறையாம, நீயும் இருக்க..சும்மா சொல்ல கூடாது..பார்க்க மட்டும் இல்ல..குணத்துலயும், உன் அப்பா மாதிரி தான் நீ.. வாழ்கையிலயும் அவரை மாதிரியே இரு..என்ன புரியலியா.??.

கீர்தியையே கடைசி வரை நினைச்சிட்டு..வேற ஒருத்தி கூட குடும்பம் நடத்து.. உன் அப்பா, உன் அம்மாவை நினைச்சிட்டு, என் கூட நடத்துன மாதிரி..
அப்புறம்,இந்த கல்யாணத்தை நிறுத்திரலாம்னு நினைக்காத..

மாப்பிள்ளை வீட்டுல சொல்லி..அப்படி ஏதாவது நடந்துச்சு..அப்புறம், உன் காதலிக்கு தான் கஷ்டம்..இன்னொருத்தனை விரும்பினவள் தானே நீன்னு, அவ புருஷன், அவளை வாழ்நாள் முழுக்க, சந்தேகப்படுவான்.. அந்த கஷ்டம், உன் காதலிக்கு தேவையா..??எப்படியும், இந்த கல்யாணம் நடக்காம, விட மாட்டேன் நான்.."

சொல்லிவிட்டு எழுந்தவர்.

"ஹ்ம்ம்..நீ ,வேற யாரை வேணா கல்யாணம் பண்ணிக்கலாம்.. எனக்கு, ஒரு தடையும் இல்லை..அதுல நான் பிரச்சனை பண்ண மாட்டேன்..இதுல,என் பெருந்தன்மையை புரிஞ்சுக்கோ.."

அவனிடம் சொல்லி விட்டு,திரும்பி மாமியை பார்த்து,

"மாமி, ஒரு நல்ல ஸ்வீட் செய்ங்க..நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்..இன்னிக்கு சுகர் பத்தி எல்லாம் யோசிக்காம, நெறைய ஸ்வீட் சாப்பிட போறேன்.."

அதன் பின், பார்த்தி அங்கு நிற்கவில்லை.

வேகமாய் அங்கிருந்து வெளியேறினான்.
அவன் போவதை, வெற்றி சிரிப்போடு பார்த்தார் அகிலாண்டம்.
மாமி,மனதில் கவலை பொங்க, சமையல் அறைக்குள் சென்றார்.


தூங்கி எழுந்த கீர்திக்கு, உடம்பெல்லாம் பயங்கரமாய் வலித்தது.
கை கால்களை, அசைக்க முடியவில்லை.
முதலில் ஒன்றும் புரியாமல் விழித்தவள், பின், நடந்தது அனைத்தும் நினைவில் வந்து,மனதில் பாரமேறியது.

அவளை, அடிக்கடி கவனித்து கொண்டிருந்த மீனாட்சி.

அவள் எழுந்தது அறிந்து,உணவு எடுத்து வந்தார்.
அவள் அருகில் அமர்ந்து, உணவை எடுத்து, அவள் வாய் அருகே, கொண்டு போனார்.

முகத்தை திருப்பி கொண்டாள், கீர்த்தி.

"சும்மா..முரண்டு பண்ணாத கீர்த்தி..உன் அப்பா கோவம் தெரியும் தானே..??"

"வைச்சுட்டு போ..நான் சாப்பிட்டுக்குறேன்.."

"இல்ல..நீ சாப்பிடு.."

அதன் பின்,அடம் பிடிக்கவில்லை கீர்த்தி..மறுக்காமல், அவர் கொடுத்த உணவை உண்டாள்.

அன்று மட்டும் அல்ல,அதன் பின் வந்த நாட்களும்,எந்த மறுப்பும் சொல்லவில்லை..அறையை விட்டு வெளியே வரவில்லை..மீனாட்சி, நேரா நேரத்திற்கு தரும் உணவை உண்டாள்.. கேட்ட கேள்விக்கு பதில் கூறினாள்.. காயத்திற்கு மீனாட்சி மருந்திட்ட போது, மறுக்காமல் ஏற்றுக்கொண்டாள்..
எந்த குறையும் கூற முடியாது..

ஆனால், முன்பு இருந்த துறுத்துறுப்பு இல்லை.. ருசித்து, விரும்பி சாப்பிடவில்லை..
எல்லா செயலும், கடமைக்கு செய்தாள்..
கேசவனை, அதற்கு பிறகு பார்க்கவில்லை, அவள்.

அவரும்,இவளை வந்து பார்க்கவில்லை.
அவர் சம்பந்தியுடன் பேசி,அவள் கல்யாணத்தை முடிக்கும் முனைப்பில் இருந்தார்.

இரண்டு நாட்கள் சென்றது,
"கீர்த்தி.."

அவர் குரலுக்கு,தன் தலையை திருப்பி பார்த்தாள் கீர்த்தி..'என்ன' என்று கூட கேட்கவில்லை..

'எப்படி இருந்த பெண்..இன்று,இப்படி சோர்ந்து போய்..நோய் வந்தவள் மாதிரி இருக்கா... எல்லாம் இந்த பாழப்போன..காதலினால்'

மனதிற்கு கஸ்டமாய் இருந்தது மீனாட்சிக்கு.

"சாப்பிடியா..??"

அதற்கும், தலை அசைப்பு மட்டுமே, பதிலாய் வந்தது.

"இங்க பாருடி..நாங்க அந்த பையனை பத்தி, சம்பந்திக்கிட்ட நல்லா விசாரிச்சுட்டோம்.அவனுக்கு, எடுத்ததுக்கெல்லாம் கோவம் வருமாம்..எதுகெடுத்தலும் கை ஓங்குவானாம்.சரியான முரடனாம்..இதெல்லாம் நமக்கு சரி பட்டு வருமா,சொல்லு.."

அவரை ஒரு நொடி அமைதியாய் பார்த்த கீர்த்தி..

"உன் புருஷன் என்ன, அகிம்சாவாதியா??"

தன் காயங்களை பார்த்துக்கொண்டே, அமைதியாய் கேட்டாள்.

"என்ன பேச்சு டி பேசுற..??கழுதை.. உன் புருசனாம்ல..அவரு உன் அப்பா..அது ஞாபகம் இருக்கா..??"

"ஹ்ம்ம்..திவ்யமா..அதான் அடிக்கடி,வலிக்க, வலிக்க ஞாபக படுத்துறாரே..சின்ன வயசுல இருந்து.."

அவர் குடுத்த அடிகளின் வலிகளை நினைத்து சொன்னாள்.

அது புரிந்த மீனாட்சி,
"நீ அப்படி நடந்துக்குற..அவரை குறை சொல்லாத..அந்த பையனை மறக்க பாரு..அவன் ஒரு பொம்பளை பொறுக்கியாம்..குடிக்காரனாம்"

"நாங்க, தினமும் நைட்ல தான் பலமணி நேரம் பேசுவோம்..ரெண்டு பேரும் தனியா..அவரை பத்தி எனக்கு தெரியும்..அவர் நினைச்சுருந்தா.. என்னை, என்ன வேணா பண்ணி இருக்கலாம்.நான் இப்போ, உன் பொண்ணா தான் திரும்பி வந்துருக்கேன்..இதுலயே, அவரை பத்தி நீ புரிஞ்சுக்கோ.

ஒரு பொண்ணுக்கு,ஆணோட பார்வை எப்படி பட்டதுன்னு புரியும்..உடனே புரியாட்டியும்.. பழக பழக, புரியும்..உன் பொண்ணு முட்டாள் இல்ல..எனக்கு, அவர் பார்வை புரிஞ்சுது.அவர் பார்வையில, காதலை தவிர, நான் ஏதும் பார்த்ததில்லை.."

அவள் பேசி முடித்ததும்,அவள் கன்னத்தில் அறைந்தவர்.

"எவ்வளவு தைரியம்டி உனக்கு.??.பெத்தவ கிட்டேயே..அவனை, நைட்ல தினமும் பார்ப்பேன்னு சொல்லுற.."

"நீ மட்டும், அவரை தப்பா சொல்லலாமா..??அவரை நீ, முன்ன பின்ன பார்த்துருக்கியா..??எப்படி தான், தெரியாத ஒருத்தரை பத்தி,இவ்ளோ தப்பா பேசுறீங்களோ.."

"அவங்க பிள்ளையை பத்தி,சம்பந்தியம்மாவே சொன்னப்புறம்.. நம்பாம இருக்க சொல்லுறியா..??"

"அவரு ,அவங்க பிள்ளை இல்ல..அதையும் யோசிக்கணும் நீ.. ஆர்த்தி கல்யாணத்துக்கு கூட, அவங்க அவரை கூப்பிடலை..ஒதுக்கி வச்சுட்டாங்க.. நீ என்னன்னா..அவங்க ஐ எஸ் ஐ முத்திரை குத்தல..அதுனால..அவர் சரி இல்லைனு சொல்லுற.."

"கல்யாணத்துக்கு கூப்பிடுற அளவு, அவன் ஒழுங்கா இருந்தா, கூப்பிட்டுருப்பாங்க இல்ல..??"

"ச்சு.. திரும்ப,திரும்ப அவரை பத்தி தப்பா பேசாத..அந்த வெள்ளை பூசணி சொல்லுறதை வச்சு..அன்னைக்கு, அப்பா என்னை அடிக்கையில, வந்து தடுத்தியே..உன் பொண்ணுன்னு தானே..??

சின்ன வயசுல, அவர் அடி வாங்குனதே,இவங்களால தான்.. அவரை அடிக்கையில, தடுக்க கூட ஆள் இல்லாத நிலைமையில வளந்தவரு ம்மா அவரு..அவரை பாத்து, பாவப் படாட்டியும்..இப்படி தப்பா பேசாத.."

"பெரியவங்கன்னு, ஒரு மரியாதை இல்ல..எல்லோருக்கும் ஒரு பேர் வச்சுட வேண்டியது..சரி,அவனுக்கு வேலை கூட இல்லையாம்..அவனை கட்டிக்கிட்டு..சாப்பாட்டுக்கு என்ன பண்ண போற??

ரெண்டு பேரும் வேலை இல்லாம..ஒருத்தர் முகத்தை இன்னொருத்தர் பார்த்து, பசி ஆற போறீங்களா..??"

"அவர் ஒன்னும் வெட்டியா இல்ல..பார்ட் டைம் வேலைக்கு போறார்..அவர் படிப்புக்கு, நல்ல வேலையே கிடைக்கும்..அவர் சரியான வேலைக்கு போகாததுக்கு காரணமும், அந்த பூசணி தான்.

படிச்சு முடிச்சதுக்கு அப்புறம், அந்த பூசணி கிட்ட இருந்து, ஒரு பைசா எதிர்பார்க்காம, சுயமரியாதையோட வாழுறார்.அப்படி பட்டவரை போய்…

அப்படி நாங்க பட்டினி இருந்தாலும்,உங்க கிட்டேயோ, இல்ல, அந்த பூசணி கிட்டேயோ, கை ஏந்த மாட்டோம்..நீ கவலை படாத.. உன் வீட்டுல வந்து செட்டில் ஆகிடுவேனோன்னு.."

"திமிர் எடுத்த கழுதை, என்ன பேச்சு பேசுற..??காதலிகையில, எல்லாம் அப்படி தான் தோணும்..எல்லாம் துச்சமா..கல்யாணத்துக்கு அப்புறம் தான், ஓராயிரம் பிரச்சனை வரும்..அப்போ புரியும், காதலிச்சது தப்புன்னு.."

"ஓ..அப்போ புரிஞ்சுக்குறேன்..இப்போ நீ போ."

"போறேன் டி.. அதுக்கு முன்ன, இந்த போட்டோவை பாரு..இந்த பையனை பிடிச்சுருக்கான்னு..இவரை தான் உனக்கு பேசி முடிக்க போறோம்..உங்க அப்பா காட்ட சொன்னார்..இந்த போட்டோவை.."

அவர் பேச்சில் அதிர்ந்தவள்.

"அம்மா..என்னமா..இதெல்லாம்..??இப்போ என்ன?? நான், தீபனை கல்யாணம் பண்ணிக்க கூடாது, அவ்ளோ தானே..பண்ணிகல..அதுக்காக, உடனே வேற ஒருத்தரை கொண்டு வந்து நிறுத்தி, கல்யாணம் பண்ண சொல்லுறது..சரி இல்ல ம்மா.. புரிஞ்சுக்கோ..ம்மா.."

"இங்க பாரு கீர்த்தி..வீண் பிடிவாதம் பிடிக்காத..இது, சம்பந்தி கொண்டு வந்த சம்மந்தம்..அவங்க தங்கச்சி பையன்..நீ பண்ண வேலைக்கு, ஆர்த்தியை ஒன்னும் சொல்லாம, பொறுமையா சம்பந்தி இருக்கதே, பெரிய விஷயம்..

இப்போ உன் முடிவுல தான், ஆர்த்தி வாழ்க்கையும் இருக்கு..அவளை யோசிச்சு, முடிவெடு.அங்க உன்னை அனுப்பும் போதே, உன் கிட்ட சொன்னேன்..

போன வேலையை மட்டும் பார்த்துட்டு வா.. வீண் வம்பு இழுக்காதேனு..ஆர்த்தி வாழ்க்கை இதுல இருக்குனு, படிச்சு படிச்சு சொன்னேன்..அதை தான் கேட்கலை,இதையாச்சும் கேளு..."

"அவளை யோசி,இவளை யோசி..எல்லாரையும் நான் யோசிக்கணும்..ஆனா நீங்க யாரும், என்னை பத்தி யோசிக்க மாட்டீங்க..நீங்க கொண்டு வந்த மாப்பிள்ளைனாலும்,எனக்கு பிடிச்சுருக்கானு கேட்க மாட்டீங்களா??இல்ல, ஆர்திக்கு செஞ்ச மாதிரி,உங்க கவுரவம் முக்கியம்னு..அவளை கேட்காம முடிவு பண்ண மாதிரி, முடிவெடுப்பீங்களா??"

"இப்போ அதுனால, ஆர்த்தி என்ன குறைஞ்சு போய்ட்டா..??நல்லா தான், சந்தோசமா..இருக்கா.."

ஒரு கசந்த முறுவல் கொடுத்தவள்.

"ஹ்ம்ம்..ரொம்ப நல்லா இருக்கா.. கையெழுத்து போட்டு கொடுக்காத அடிமை மாதிரி..அவ மாமியார் முன்ன, தைரியமா எதிர்த்து பேசிடுவாளா??இல்ல, அவ புருஷன் கூட, சகஜமா பேச முடியுமா..அவங்க முன்னாடி.அவ்வளவு ஏன், அவ வீட்டு நிர்வாகத்துல,அவ கருத்து சொல்லிடுவாளா..??இல்ல, அவ கருத்தை தான் கேட்டு செய்வாங்களா..அந்த வீட்டு மகாராணி.."

"மாமியார் சொல் படி கேட்டு நடக்குறது தப்பா..??அவங்களை, எதிர்த்து பேசினா தான் தப்பு..அவளை நான், சரியா தான் வளர்த்துருக்கேன்..உன்னை தான், ஒழுங்கா வளர்க்கலை.."

"மாமியார் மேல, மரியாதை இருக்கலாம்..பயம் எதுக்கு..??அவங்க செய்யுறது தப்புன்னு தெரிஞ்சும், அமைதியா இருக்கதுக்கு பேரு, அடிமை தனம் தான்..உரிமை இல்லாத, அடிமை வாழ்க்கை, எனக்கு வேண்டாம்..என்னால அப்படி வாழ முடியாது.."

"நல்லா பேசுற டி.. ஆனா, உன் பேச்செல்லாம் வேலைக்கு ஆகாது..ஒழுங்கா, நாங்க சொல்லுறதை கேட்டு நடந்துக்க.. அதான் உனக்கு நல்லது..நடை முறை வாழ்க்கைக்கும், சாத்தியப்படும்."

"ஏம்மா..நீங்களே, இப்போ தீபனை பார்த்து முடிவு செய்துருந்தா.. ஒத்துக்குவீங்கள்ல..நானே காதலிச்சது தானே, உங்க பிரச்சனை.. எத்தனை பொண்ணுங்க..பிடிக்காத வாழ்க்கையை, அப்பா அம்மாக்காக, வாழுறாங்க..

ஆனா நீங்க, அவங்க மனசை பத்தி, யோசிக்குறதே இல்ல..காதல் பெரிய குற்றம் மாதிரி பார்க்குறிங்க..பிள்ளைங்க மனசை புரிஞ்சுக்க, முயற்சி கூட பண்ண மாட்டேன்குறிங்க..பிடிக்காத வாழ்க்கையை,அவ எப்படி வாழ்வானு, யோசிக்க மாட்டேன்குறிங்க.."

"அதெல்லாம், ஆரம்பத்துல அப்படி தான் இருக்கும்..அப்புறம், பெத்தவங்க நமக்கு நல்லது தான் செஞ்சுருக்காங்கன்னு புரிஞ்சா..சரி ஆகிடும்.."

இதற்கு மேல், இவரிடம் பேசி ப்ரியோஜனம் இல்லை என்று நினைத்து,

"சரி ம்மா.. இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்..அதுக்காவது ஒத்துக்கோ.."

"உன் திட்டம் தெரியும் டி.. இப்படி பேசிட்டு..அவன் கூட போகலாம்னு, நினைக்காத..அது, கனவுல கூட நடக்காது.."

"அச்சோ..ஏன் இப்படி படுத்துற...நான் ஓடி போக மாட்டேன்..போறதுன்னா.. உன் கிட்ட சொல்லிட்டு தான் போவேன்..நான் தப்பு செய்யல..ஓடி போக..மறைச்சு செய்ய..எனக்கு, இந்த கல்யாணம் வேண்டாம்..உன் பொண்ணா கடைசி வரை இருக்குறேன்..போதுமா..??என்னை விட்டுடுங்க..பிளீஸ்.."

கை எடுத்துக் கும்பிட்டாள்.

"நீ என்ன தான் போராடுனாலும், உனக்கும், இந்த பையனுக்கும், அடுத்த வாரம் நிச்சயம்..ஒரு மாசத்துல கல்யாணம்..உன் அப்பா பத்தி தெரியும்ல..உன் மனசை மாத்திக்குற வழியை பாரு..உன் அப்பா முடிவு பண்ணா, பண்ணது தான்.."

சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றார்.

அவர் சென்றதும், கவிழ்ந்து படுத்து,அழ ஆரம்பித்தாள்..தன் கோபம், வருத்தம், எல்லாவற்றையும், கண்ணீரில் கரைத்தாள்.

அங்கு, இரண்டு நாட்களாக வீட்டுக்கு செல்லாமல், மாதுவின் மெக்கானிக் ஷெட்டில் பொழுதை கழித்தான், பார்த்தி.

"நீ ஏன்டா ??அந்த பொம்பளை கிட்ட போய் கெஞ்சிக்கிட்டு இருக்க..வா, நாளைக்கே..கீர்த்தி வீட்டுக்கு போவோம்..பொண்ணு கேட்போம்..அவங்க அப்பா கொடுத்தா சரி, இல்லைன்னா..

கீர்த்தியை கூட்டிட்டு வந்து, கோயில்ல தாலி கட்டு.. இதுக்கு போய், அந்த பொம்பளை முன்னாடி நின்னு, கெஞ்சிக்கிட்டு..அது பேசுனதை எல்லாம் கேட்டுட்டு, அமைதியா வந்துருக்க..அது மூஞ்சில ரெண்டு குத்து விடாம.."

மாதுவிற்கு மனம் ஆறவில்லை.

'அவளை போய் கூப்பிடுறதுல, பிரச்சனை இல்ல..அவ வருவாளா??அன்னைக்கே, அப்பாக்கு அவ்ளோ பயம்னு சொன்னா..நான் போய் கூப்பிட்டு,வர மறுத்துட்டா..என்னால தாங்க முடியாது..'

"என்னடா, நான் பேசிட்டே இருக்கேன்..அமைதியா இருக்க..??நான் பார்த்துக்குறேன்..நான் பார்த்துக்குறேன்னு..கீர்த்தி கிட்ட உறுதிமொழி சொல்லிட்டு,இப்படி ஒன்னுமே செய்யாம, மரம் மாதிரி இருந்தா, பாவம் அந்த புள்ள, என்னடா செய்யும்..??"

"இப்போ நான் போனா.. அவளுக்கு இன்னும் பிரச்சனை தான் ஜாஸ்தி ஆகும், மாது.. இப்போவே, என்ன கஷ்டப்படுறாளோ தெரியல.."

"அதுக்காக..இப்படியே விட போறியா.. உன் சித்தி, அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து,நிச்சயம் வரை போய்ட்டாங்க..நீ, இன்னும் ஒன்னும் செய்யாம இருக்க..எங்கிருந்தாலும் வாழ்கனு, பாடிட்டு இருக்க போறியா..??"

"இல்லடா.அவ, என்னை தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா.."

"அவங்க அப்பா பத்தி தெரிஞ்சும், இப்படி சொல்லுறியே டா.. அவ ,அப்பாக்கு பயந்த பிள்ளை டா.. கட்டாய படுத்தி கட்டி வச்சா, அவ என்ன பண்ணுவா..??"

"இல்ல டா.. எவ்ளோ கட்டாயபடுத்தினாலும்,அவ யாரையும்,அவ நிழலை கூட நெருங்க விட மாட்டா.."

"ச்சு.. அப்போ,இப்படியே விட போறியா..??ஏதும் செய்யாம..அவ நிச்சயம் நடக்குற வரை.."

ஒரு பெரு மூச்சு விட்ட பார்த்தி..

"அதான் யோசிச்சுட்டு இருக்கேன்..என்ன பண்ணலாம்னு.."

"நல்லா யோசிச்ச போ..அந்த பிள்ளையை, அவங்க அப்பா கூட்டிட்டு போய் ரெண்டு நாள் ஆகுது..இன்னும் ஒரு வாரத்துல, அவளுக்கு நிச்சயம் வேற..நீ பொறுமையா யோசிக்குற.."

"இல்ல மாது.. இப்போ தான் ,பொறுமை அவசியம்..என்ன பண்ணனும்னு, எனக்கு தெரியும்..கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு..உன் மெக்கானிக் ஷெட்ல தங்கிக்குறேன்..கொஞ்ச நாள், அதுக்கு மட்டும் அனுமதி கொடு.."

"பல்லை உடைச்சுடுவேன்..அனுமதி,அது இதுன்னா.. எவ்ளோ நாள் வேணா இரு..இது உன் இடம்..ஆனா, சீக்கிரம் முடிவெடு..உன் வாழ்க்கை மட்டும் இல்ல..அந்த பொண்ணு வாழ்க்கையும், இதுல தான் இருக்கு.."

"ஹ்ம்ம்..சரி டா.."

கூறிவிட்டு, அங்கு உள்ள கட்டிலில் படுத்து, விட்டத்தை வெறிக்க ஆரம்பித்தான்.

அவனை கவலையாய் பார்த்துவிட்டு,மாது அங்கிருந்து சென்றான்.



 
Top