கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தானா வந்த சந்தனமே...அத்தியாயம்-6

Nilasubramanian

Moderator
Staff member
அத்தியாயம்-6

ஆர்த்தியின் திருமணம் முடிந்து சில மாதங்கள் கடந்திருந்தது.அவள் திருமண டென்சனில், கீர்த்தி வேலை விஷயத்தை மறந்திருந்த கேசவன்,கொஞ்ச நாட்களிலேயே,

'என்னாச்சு'??
என்று கேட்க ஆரம்பித்திருந்தார்.

தினமும், என்ன சொல்லி சமாளிப்பது என கீர்த்தி முழித்துக்கொண்டிருந்தாள்.
அப்பொழுது தான் அவள் தோழி,திருச்சியில், ஒரு கணினி பயிற்சி மையத்தில், கணினி வரைகலை பற்றிய ஆறு மாத டிப்ளமோ கோர்ஸ் ஒன்று படித்தால்,வேலை வாய்ப்பு அதிகம் என்று கூறியது ஞாபகம் வந்தது.

அவள் சேரப்போவதாக கூறியதும்.இவளையும், அவள் சேர சொல்லி கேட்க தான், தொலைபேசியில் இவளோடு பேசினாள்.

இவள் தான்,
"போடி, யாரு திரும்ப படிச்சுக்கிட்டு, நானெல்லாம் பட்டம் வாங்குனதே பெருசு,இதுல, அது படி,இது படினுட்டு,வைடி போனை "
என்று கூறிவிட்டு வைத்திருந்தாள்.

இப்பொழுது அந்த விஷயத்தை மீனாட்சியின் மூலம் கேசவனிடம் கூறி, படிக்க அனுமதி வாங்கி தருமாறு,ஒரு வாரமாய் நச்சரித்து கொண்டிருந்தாள்.
முதலில் அவள் படிக்க போகிறேன் என்றதும், நம்பாமல் பார்த்த மீனாட்சி.பிறகு அவள் வற்புறுதலில், எங்கே,என்ன படிப்பு என்று விசாரித்தார்.

திருச்சியில் தான் அந்த மையம் இருந்தாலும்,இரண்டு பேருந்து மாறி செல்வது போன்ற தூரத்தில் இருந்தது.போகும் நேரமே இரண்டு மணி நேரம் ஆகும்.வர இரண்டு மணி நேரம்.

இவளின் பள்ளிக்கல்வி,உள்ளூரிலேயே என்பதால்,போக,வர பிரச்சனை இல்லாமல் சென்றது.கல்லூரிக்கு, கல்லூரி பேருந்தில் சென்றாள். இப்பொழுது, ரெண்டு பேருந்து மாறி செல்ல, கேசவன் ஒத்துக்கொள்ளுவாரா தெரியவில்லை.

அதை பற்றி கீர்தியிடம் கேட்டார்.அவள் தோழி, மகளிர் விடுதியில் தங்கி படிப்பதாகவும், தானும், அங்கேயே சேர்ந்துகொள்வதாகவும் கூறினாள்.

"ஏண்டி,விளையாடுறியா??பஸ்ல போய்ட்டு வரத்துக்கே,உங்க அப்பா சம்மதிக்கிறாரா,தெரியலை. இதுல, நீ ஹாஸ்டல்ல தங்குறேங்குற.உங்க அப்பா குணம் தெரிஞ்சும்."

"சும்மா,வேலைக்கு போ,போன்னு சொன்னா ஆச்சா??எதுக்கும் ஒத்துக்க மாட்டீங்க.அப்புறம், வேலை என்னாச்சுன்னு வேற கேட்பீங்க…இப்போ நீ ,அப்பா கிட்ட கேட்க முடியுமா, முடியாதா??"

"நான் கேட்கலைனா, நீ கேட்கப்போறியா??"

புசு,புசுவென்று கோப மூச்சு விட்டுக்கொண்டு அங்கிருந்து சென்றாள். அவள் வீரமெல்லாம் மீனாட்சியிடம் மட்டுமே.

மகளிடம் இப்படி சொன்னாலும், கணவரிடம் இது பற்றி பேசினார் மீனாட்சி.

"என்ன?? படிக்க போறாளா??இவ படிக்குற லட்சணம் தான் தெரியுமே.திரும்ப என்னத்தை படிக்குறாளாம்??"

"அவ தோழியும் போறாளம். அவளும் வேற என்ன பண்ணுவா??ஏதாவது வேலை கிடைச்சா தானே.இது படிச்சா கிடைக்கும்குறா.படிக்கட்டுமே."

"சரி, அந்த இடம் எங்க இருக்கு.."

அவர் சொன்னதும்,
"படிக்குற நேரம் 3மணி நேரம்,அதுக்கு போக வர 4 மணி நேரமா??ரெண்டு பஸ் வேற மாறனுமாமா.அப்டி ஒன்னும் அவ படிக்க வேண்டாம்."

"அவ தோழி கூட, ஏதோ ஹாஸ்டல்ல தங்கிகுறேங்குறா.."

"என்ன??ஹாஸ்டல் அஹ்..அதெல்லாம் வேண்டாம்.இங்க ஏதாவது வேலை கிடைச்சா போக சொல்லு..கம்மி சம்பளம்னாலும் பரவால்ல"

அதன் பிறகு மீனாட்சியின், பல்வேறு கட்ட முயற்சியின் பின்,அரைமனதாக சம்மதித்தார்.

திருச்சியில் அவருக்கு தெரிந்தவர்கள்,நண்பர்கள் மூலம் அந்த மையத்தை பற்றி விசாரித்து, சற்று தெளிந்ததும்,அவரே நேரடியாக சென்று ஹாஸ்டெலை பற்றியும் விசாரித்து,சேர்த்துவிட்டு வருவதாக கூறினார்.

அவர்கள் திருச்சிக்கு செல்வதாக இருந்த நாளுக்கு, முதல் நாள்,ஆர்தியிடம் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது.அதை எடுத்து பேசிய மீனாட்சி,அவளிடம் பேசிவிட்டு வைத்ததும், மகிழ்ச்சியுடன்,கேசவனிடம்,

"ஆர்த்தி, உண்டாயிருக்காளாம்"
என்றார்.

அனைவருக்கும் மகிழ்ச்சி.இனிப்பு செய்து கொடுத்தார் மீனாட்சி.மறுநாள் அனைவரும் திருச்சி சென்று அவளை பார்த்துவிட்டு,கீர்தியையும் சேர்த்துவிட்டு வர முடிவு செய்தார்கள்.

முதலில் ஆர்த்தி வீட்டுக்கு செல்வது, என்று முடிவு செய்து, அங்கு சென்றார்கள்.இவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றாள் ஆர்த்தி.

அகிலாண்டமும் ,மரியதையுடனே வரவேற்றார்.இவர்கள் வரும் தகவல் முன்னவே சொல்லி இருந்ததால்,ஆரவும் கடைக்கு செல்லாமல்,அங்கே இருந்தான்.
அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஆர்த்தியும்,கீர்த்தியும் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கு பேச, பல நாள் கதைகள் இருந்தது.
சிறிது நேரம் கழித்து, மீனாட்சியிடம் கண் ஜாடை காட்டி விட்டு எழுந்த கேசவன்,அகிலாண்டத்திடம்,

"கொஞ்சம் வேலை இருக்கும்மா,முடிச்சுட்டு வரோம்" என்றார்.

"இப்போ தானே வந்திங்க…உங்களுக்கு மதியம் விருந்து தயாராகிட்டு இருக்கு.எங்க கிளம்பிட்டீங்க??"

'போகையிலேயே எங்கன்னு கேட்குது..விளங்கிடும்.'

"இங்க கீர்த்தியை, ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ்ல சேர்க்கணும்.அப்படியே ,அவ தங்க, ஏதோ அவ தோழி தங்கி இருக்குற ஹாஸ்டல் இருக்காம், அதையும் விசாரிச்சு சேர்க்கணும்."

"என்ன, ஹாஸ்டல்ல விட போறீங்களா??"

'இது ஏன் ஓவர் ஷாக் ஆகுது??'

"ஆமா மா.அங்க இருந்து தினமும் பஸ்ல வந்தா கஷ்டம்.ரெண்டு பஸ் வேற மாறனும்.இவளை, நாங்க எங்கேயும் தனியா விட்டதில்லை.அதான் பக்கத்துலயே, ஹாஸ்டல்ல விட்டா, போக வர சுலபமா இருக்கும்."

"அதுக்காக, பொம்பளை பிள்ளையை தனியா ஹாஸ்டல்ல விடுவீங்களா??"

'போச்சு,குட்டையை குழப்புது பூசணி..'

"வேறென்னமா செய்யுறது.இவ ,அது படிச்சா தான் வேலை கிடைக்கும்ங்குறா.தனியா அனுப்பவும் பயமா இருக்கு."

"அந்த இடம் எங்க இருக்கு…?"

"இங்கிருந்து பக்கம் தான்மா.பதினைஞ்சு நிமிஷத்துல போய்டலாம்.டவுன் பஸ்ல போனா."

"அப்புறம் என்ன??அவ இங்க இருந்தே போகட்டும்."

'ஆத்தாடி…புலி குகையுல இருந்து தப்பிச்சு,கும்கி யானை கிட்ட மாட்டுன மாறி ஆயிடுச்சே.கேஸு இந்த லூசு பேச்சை கேட்கக்கூடாதே,ஆண்டவா.'

ஆண்டவன் அவள் கோரிக்கையை, தயவு தாட்சண்யம் இன்றி நிராகரித்தார்.

சம்மந்தி வீடு என்று தயங்கியவரை,
"உங்க பொண்ணை,என்னை நம்பி விடமாட்டீங்களா சம்பந்தி?"
என்ற ஒரே கேள்வியில், கிளீன் போல்ட் ஆக்கினார்.

"ச்சே ...ச்சே ...உங்களை நம்பாம யாரை நம்ப போறேன்.இங்கிருந்தே போகட்டும்."

என்று அனுமதி குடுத்து, கீர்த்தியின் தலையில் இடியை இறக்கினார்.

மீனாட்சி மட்டும், மகளின் விளையாட்டு குணம் அறிந்து சிறிது தயங்கி,
"அண்ணி,அவ குழந்தை மாதிரி,சின்ன பிள்ளை தனமா ஏதாவது செய்வா.."

'இவளா குழந்தை,நிமிஷத்துல எனக்கே பீதி கிளப்புனவ..'
ஆரவ் தான் வேற யாரு.

"அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் சம்பந்தி.ஆர்த்தி மாதிரி தானே இவளும்.."

அவர் வாக்குறுதியில், சிறிது தெளிந்த மீனாட்சி, அரை மனதாய் சம்மதித்தார்.
அன்று அவளை சேர்த்துவிட்டு, மறுநாள் அவள் உடமைகளை எடுத்துக்கொண்டு வந்து, இங்கு விடுவதாய் கூறி, அழைத்து சென்றனர்.

மீனாட்சி, அவளுக்கு ஏகப்பட்ட அறிவுரைகளை கூறினார்.

"உன் வாலுத்தனம் எல்லாம் அங்க காட்டாத. சம்மதியம்மா குணம் தெரியுமில்லை."

"அப்புறம் ஏன் அங்க விடுறீங்க??.நான் ஹாஸ்டல்லேயே இருந்துக்குவேன் இல்ல."

"பொம்பளைப்பிள்ளையை அப்படி எல்லாம் விடமுடியாது."

ஹாஸ்டலில் விடுவதாய் முடிவு செய்து தானே கூட்டி போனார்கள்.இப்பொழுது இப்படி கூறுவதை பார்த்து கடுப்பானாலும்

"அங்க இருக்கவங்க எல்லாம் பொண்ணுங்க தான்.. அவங்க அம்மா,அப்பா எல்லாம் விடலியா??"

"அதெல்லாம் எனக்கு தெரியாது.உங்க அப்பா இந்த அளவு சம்மதிச்சதே பெருசு.ஒழுங்கா போய் ,போன வேலையை மட்டும் பார்த்துட்டு,படிச்சு முடிச்சுட்டு வா.. ஏதாவது வம்பு,தும்பு இழுத்துட்டு வந்த, அப்புறம் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது."

'நானே ஹிட்லர் தொல்லையில இருந்து தப்பிச்சு, ஒரு ஆறு மாசம் இருக்கலாம்னு பார்த்தா, இந்த வெள்ளை பூசணி, அதுக்கு ஆப்பு வச்சுடுச்சு.இதுல, அப்டி இரு,இப்டி இருன்னு ஓராயிரம் அட்வைஸ் வேற'

"நான் சொல்லுறது காதுல விழுந்துச்சா??"

"ஹ்ம்ம்…திவ்யமா.."

"நீ பண்ணுற வேலையில, உங்க அக்கா வாழ்க்கையும் இருக்குனு யோசிச்சு, எது பண்ணாலும் பண்ணு. உங்க அக்கா, அங்க தான் வாழுறா ,ஞாபகம் இருக்கட்டும்."

"ஹப்பா.. என்ன மாதிரி பிளாக்மெயில்.சீரியல்ல நடிக்க போலாம் மம்மி நீ.. அதுக்கு தேவையான பத்து பொருத்தமும் இருக்கு.செண்டிமெண்ட்டை புழியுற…பெர்போர்மன்ஸ்ல பின்னுற போ."

"ஏண்டி, எவ்ளோ பொறுமையா பேசிட்டு இருக்கேன்.கிண்டல் பண்ணிட்டு இருக்க.எருமை."

அதன் பிறகும், ஆயிரம் அறிவுரையுடன் அவளை, அகிலாண்டத்தின் வீட்டிற்கு அனுப்பிவைத்தார் மீனாட்சி.
கேசவன் அவர் பங்கிற்கு, அவர்கள் வீட்டை சென்றடையும் வரை, அவள் காதில் ரத்தம் வரும் அளவு அறுத்து,இல்லை இல்லை, அறிவுரை கூறிவிட்டு, விட்டு வந்தார்.

அவரிடம் ஏதும் பேசமுடியாமல்,ஆயிரம்
'சரிங்க பாவும்',லட்சம் தலையாட்டலும் கொடுத்து, அவளுக்கு வாய் வலியும்,கழுத்து வலியும் வந்தது தான் மிச்சம்.

மாலை வேளையில் அவளை விட்டுவிட்டு,ஆர்தியிடமும் அகிலாண்டத்திடமும் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, உடனேயே கிளம்பிவிட்டார்.

அவளுக்கு, அந்த வீட்டின் மாடியில் உள்ள, விருந்தினர் அறை ஒதுக்கபட்டிருந்தது.மாடியில் மொத்தம் நான்கு அறைகள் இருந்தது.வலது பக்கம் இரு அறையும், இரு மகன்களுக்கு ஒதுக்கி இருந்தார் அகிலாண்டம்.இடது பக்கம் இரண்டு அறை, விருந்தினர்களுக்கு.அதில் ஒன்றில் தான், இப்பொழுது கீர்த்தி தங்க வைக்க பட்டிருந்தாள்.

அகிலாண்டதுக்கு, அடிக்கடி மாடி ஏற முடியாததால்,கீழே உள்ள அறையில் இருந்தார்.
இரவு உணவை, அனைவரும் டைனிங் ஹாலில் அமர்ந்து உண்டார்கள்.

ஆதவ் குடும்பம், பெங்களுரில் இருந்ததால்,ஆரவ்,ஆர்த்தி,அகிலாண்டம் மற்றும் கீர்த்தியுடன் இரவு உணவு வேளை கடந்தது.

அவ்வேளையில், அகிலாண்டத்தை தவிர யாரின் குரலும் கேட்கவில்லை.
ஆரவும்,ஆர்த்தியும் அவர் சொல்வதை தலையாட்டி ஆமோதிப்பதோடு, வேறெதுவும் பேசவில்லை.

'ஏற்கனவே கேஸு சொல்லுறதுக்கு, தலையாட்டி கழுத்து வலி, இதுல இங்க வேற ஆட்டனுமா.முடியலடா சாமீ.'

அகிலாண்டம் கூறும் அறிவுரைக்கெல்லாம், சிரித்த முகமாகவே தலையாட்டினாள் கீர்த்தி.
கடைசியில்,
"இதை உன் வீடு மாதிரி நெனச்சுக்கோ.கூச்சப்படாம இரு."
என்று கூறிவிட்டு எழுந்து கொண்டார்.

'என் வீடு மாதிரியா,அதுவும் கரெக்ட் தான், அது புலிக்கூண்டு,இது யானைகள் சரணாலயம்.அங்க கேஸு இங்க இந்த லூசு.'

அனைவரும் சாப்பிட்டு முடித்ததும்,சிறிது நேரத்தில், அகிலாண்டம் படுக்க போவதாக சென்றுவிட்டார். ஆரவும், அக்கா தங்கை இருவரும் பேசட்டும் என்று, பெருந்தன்மையாய் மாடிக்கு, தங்கள் அறைக்கு சென்றுவிட்டான்.

இருவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
அங்கே ஒரு புகைப்படம், பெரிதாக மாட்டப்பட்டிருந்தது.அதில் இருப்பவரை பார்க்கும் போது,பழைய கமல் படத்தில் வரும் பீம் பாய்,பீம் பாய் என்ற வசனமும்,அதில் நடித்த பீம் பாயும் ஞாபகம் வந்தார்கள்.

வாட்ட சாட்டமாய் உயரம், மற்றும், அதற்கு தகுந்த உடல் எடையுடன், கம்பீரமாக இருந்தார் அதில் இருந்தவர்.

"இவரு யாருடி??"

"என் மாமனார் டி. இறந்து, ஆறு வருஷம் ஆச்சாம்."

"ஓ..இவரு, எந்த கடையில டி அரிசி வாங்குனார்."

"ஏய்,நீ ஓதை வாங்க போற..போய் தூங்கு.நாளைக்கு, எத்தனை மணிக்கு கிளாஸ்."

"மதியம் கிளாஸ்க்கு தான் டைம் வாங்குனேன்.யாரு காலையில, அரக்க ,பரக்க கிளம்பி,கூட்டத்துல இடி பட்டு போவா."

"திரும்பி வரையிலே கூட்டம் இருக்காதா??"

"இம்புட்டு கார் வச்சுருக்கிங்கல்ல,தங்கச்சிக்கு ஒரு கார் அனுப்ப மாட்டியா??. இவ்ளோ தான் உன் தங்கச்சி பாசமா…"

"ஹ்ம்ம்..அது சரி,ஆமா…காலேஜ் நாளுலேயே மதியம் கிளாஸ்ல தூக்கம் வருதும்ப..இப்போ மட்டும், மதியம் கிளாஸ் கேட்டு வாங்கி இருக்க."

"தூங்குறதுக்கு தான். மதியம் பாடம் எடுக்கையில வர்ற தூக்கம் இருக்கே..சொர்க்கம் தான் போ."

"அடிப்பாவி, அப்போ நீ படிக்க வரலியா??"

"என்னை பத்தி தெரிஞ்சும், இப்படி கேட்குற பார்த்தியா..கேஸு கிட்ட தப்பிக்க நெனச்சு,இந்த லூசு கிட்ட மாட்டிக்கிட்டேன்."

பதறி, அவசரமாய் அவள் வாயை மூடி விட்டு, சுற்றும், முற்றும் பார்த்தாள் ஆர்த்தி.

"வாயை மூடுடி. யாராவது கேட்டுற போறாங்க."

"ஆமா..நீ ஏன் இப்போ, சுத்தி முத்தி பாக்குற??கொள்ளையடிக்க போறியா??"

"உன் கூட பேசுறேன் பாரு, என்னை சொல்லணும். நான் தூங்க போறேன்.நீயும் ஒழுங்கா தூங்கு."

"புருஷனை பார்க்கனும்னா, நேரா சொல்லிட்டு போ.அதுக்கு, இது ஒரு சாக்கு.இதுக்கு தான், கல்யாணம் ஆனா பொண்ணுங்க கூட சேரக்கூடாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க."

"எந்த பெரியவங்க.."

"ஸ்ரீ, ஸ்ரீ கீர்தியானந்தா ஸ்வாமிகள்."

"போடி வாலு, போய் தூங்கு."
என்று, அவள் தலையை கலைத்து விட்டு சென்றாள்.

புது இடம் என்பதால், இரவில் சரியாய் தூக்கமில்லாமல், புரண்டு புரண்டு படுத்து,ஒரு வழியாய் தூங்கி, காலையில் எழும் போது, மணி எட்டு.

'ஓ..மை ..காட்…முதல் நாளே, இவ்ளோ லேட்டா போனா.. கும்கி தூக்கி போட்டு மிதிச்சுறாமா இருக்கனுமே'
என்று வேகவேகமாக கிளம்பி, கீழே சென்றாள்.

திருமணம் ஆனதிலிருந்து, ஆர்த்தியும் இவர்கள் கடையை தான் பார்த்துக்கொள்கிறாள்.எனவே, ஆரவும் ஆர்த்தியும், சாப்பிட்டு கிளம்பி இருந்தார்கள்.

அகிலாண்டமும் ,சாப்பிட்டு முடிக்க போகும் நிலையில் இருந்தார்.அனைவரையும் பார்த்து அசட்டு சிரிப்பை உதிர்த்து விட்டு நின்றாள்.

"வாம்மா…வந்து சாப்பிடு."
என்று அழைத்தார் அகிலாண்டம்.

'பரவால்ல.. வேற எந்த கேள்வியும் கேட்கலை'
என்று திருப்தி பட்டுக்கொண்டு சாப்பிட அமர்ந்தாள் கீர்த்தி.

அவளுக்கு,
கிச்சனில் இருந்து வந்து, ஒரு அறுபது வயது மதிக்க தக்க பெண்மணி பரிமாறினார்.

"இவங்க பங்கஜம் மாமி,இங்க தான் நெறைய வருசமா சமைக்குறாங்க."

என்று அறிமுகப்படுத்தி வைத்தார் அகிலாண்டம்.

அவருக்கு ஒரு மென்னகையை கொடுத்து விட்டு, சாப்பிட துவங்கினாள்.
அகிலாண்டம் சாப்பிட்டு விட்டு, எழுந்து சென்று விட்டார்.

அவள் மட்டும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்,ஆர்த்தியும் ஆரவும், அப்பொழுதே கடைக்கு சென்று விட்டார்கள்.

கடமையே கண்ணாக, சாப்பாட்டில் இருந்து கவனம் சிதறாமல், சாப்பிட்டு கொண்டிருந்தவளின் கவனத்தை கலைப்பது போல் ,அவளுக்கு எதிரில் இருக்கும் நாற்காலி இழுக்க பட்டது.

யார்?? என்று நிமிர்ந்து பார்த்தவள் முன்,உயரமாய், வாட்ட சாட்டமாய்,கம்பிரமாய் ஒருவன் அமர்ந்தான்.

அவனுக்கு தேவையானதை, அவனே தட்டில் போட்டுக் கொண்டு, சாப்பிட ஆரம்பித்தான்.
அவனை, வைத்த விழி எடுக்காமல், பார்த்து கொண்டிருந்தாள் கீர்த்தி.

'யாரு இந்த பீம் பாய்??'

பீம் பாய் என்றதும் அவளுக்கு சட்டென்று, ஹாலில் மாட்டி இருக்கும் நிழற்படம் ஞாபகம் வந்தது.அதில் இருப்பவரை, உரித்து வைத்தது போல இவன் இருந்தான்.

'அட நம்மாளு..'

இவளின், இவ்வளவு சிந்தனைக்கும்,அவன் இவளை நிமிர்ந்து பாராமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

'என்ன?? இவன் நிமிரவே மாட்டேங்குறான்.நிமிர்ந்தா, ஒரு ஹாய் சொல்லலாம்.கொஞ்ச கூட கண்டுக்க மாட்டேங்குறான்.இவன் சைஸ்க்கு, யானை கூட சின்னதா தான் தெரியும்.இருந்தாலும், நாம இவன் கண்ணுக்கு தெரியாத அளவா இருக்கோம்.நாமலே, ஒரு ஹாய் சொல்லுவோமா..'

இவள் சிந்தனை ஓட்டத்தை, தடை செய்வது போல், அகிலாண்டத்தின் குரல் கேட்டது.

"இதென்ன சத்திரமா? சாவடியா? கண்ட கண்ட தண்ட சோத்துக்கெல்லாம் வடிச்சு கொட்ட."

'இது யாரை சொல்லுது..'

கீர்த்தி எண்ணி முடிப்பதற்குள்,
'டொயின்….'
அவன் கையில் இருந்த பீங்கான் தட்டு, சுவற்றில் மோதி, தரையில் விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டது.தட்டை தூக்கி எறிந்திருந்தான், அவன்.

அதிர்ச்சியில், சாப்பிடுவதை விட்டு எழுந்து நின்றுவிட்டாள் கீர்த்தி.

அகிலாண்டமும் அவனும் கண்ணில் நெருப்பு பொறி பறக்க, முறைத்து நின்றார்கள்.

அவன் சில நொடிகளில், தன் கோவத்தை எல்லாம் தன் நடையில் காட்டியபடி, அங்கிருந்து சென்றுவிட்டான்.
பிரம்மை பிடித்தவள் போல, அவன் போன திசையை பார்த்துக்கொண்டு, அப்படியே நின்றாள் கீர்த்தி .

….தொடரும்.









 

Padma

Active member
கீர்த்தியோட mind voice comments super 👌 👌 👌
கேஸு - லூஸு ரைமிங்கா பேசறா 😂😂😂
பார்த்தி டெரர் பார்ட்டியா :unsure::unsure::unsure:
 

Sundarji

Active member
அச்சச்சோ சித்தி கொடுமை...
இன்னும் இருக்கா என்ன?
 
Top