16
உனை நினைத்துக்
கொண்டிருந்தால் போதும்!
நகரும் நொடிகள்
சுகமாகும்!
கனவுகள் வரவாகும்!
மாலை நேரம்.உனை நினைத்துக்
கொண்டிருந்தால் போதும்!
நகரும் நொடிகள்
சுகமாகும்!
கனவுகள் வரவாகும்!
உறவுகளின் ஆரவாரத்தால்
நிரம்பி இருந்த மதுராவின்
இல்லம்,அமைதிக்குத்
திரும்பி இருந்தது.
தாங்கள் இருவரும் காதலைச்
சொல்லிக் கொள்ளும் முன்பே,
அது திருமணம் வரை சென்று
விட்டதை எண்ணி வியப்புடன்
அமர்ந்திருந்தாள் மதுரா.
அவள் கையிலிருந்த கனமான
தங்க வளையல்கள்
நடந்தவை கனவல்ல என
அவளிடம் சொல்லிக்
கொண்டிருந்தது.
இந்த மதிக்கு அப்படி என்ன
அவசரம்?என்னிடம் எதுவும்
பேசாமலே,திருமணம் வரை
சென்று விட்டான்.
அம்மாவும்,அப்பாவும்
என்னிடம் சொல்லாமல்
வெளியில் சென்றது,எங்கள்
திருமண விஷயம் பற்றிப்
பேசவா?மதியின்
பெற்றோரைச் சந்தித்துப்
பேசி விட்டு,அப்படியே
குடும்பத்தாரிடம் தெரிவிக்கச்
சென்றிருக்கிறார்கள்.
நல்ல சம்மந்தம் என்று
அம்மா அகமகிழ்ந்து
போயிருப்பார்கள்.நான்
மதியிடம் பழகுவதை
வைத்து,நான் மறுக்க
மாட்டேன் என்று முடிவு
செய்திருப்பார்கள்.
இன்னும் பத்து நாட்களில்
எங்களுடைய நிச்சயதார்த்தம்
நடக்க இருக்கிறது.
இருபது நாட்களில் ஒரு
நல்ல முகூர்த்தம் இருக்கிறது.
திருமணத்தை அப்போது
வைத்துக் கொள்ளலாம்
என்று பேசிக் கொண்டார்கள்.
மதி வீடு மாளிகை.
தாராளமாக வீட்டில்
திருமணம் செய்யலாம்.
ஆனாலும்,இத்தனை
அவசரமாக எதற்கு?
திடீரென்று நிச்சயம்!
உடனே திருமணம்!
“மதுக்கா,என்ன உன்
முகத்தில இப்படி ஒரு
ஜொலிஜொலிப்பு?இது
தான் கல்யாணக் களையா”
மதுராவின் அருகில்
அமர்ந்து தன் கேலியைத்
தொடங்கினான் பவித்திரன்.
“பேசாம இரு பவி”
“உன்னைப் பழைய மாதிரி
சிரிப்போட பார்க்க,
சந்தோஷமா இருக்குக்கா.
இனிமேல் இப்படியே இருக்கா”
நான் என் கோபத்தால்,
அனைவரையும் சங்கடப்
படுத்தி உள்ளேன்.
“என்னக்கா யோசிக்கறே?
மதி அண்ணா...ம்ஹூம்.
மாமா உன் மேல நிறைய
அன்பு வைச்சிருக்கார்
மதுக்கா.அவர் வீட்டிலயும்
எல்லாரும் உனக்குப்
பழக்கமானவங்க.உன்
சந்தோஷத்துக்கு அங்க
குறைவே இருக்காது
மதுக்கா.எதையாவது
யோசிச்சு உன்
சந்தோஷத்தைக்
கெடுத்துக்காதே"
“இல்லை பவி.திடீர்னு
எல்லாம் வேகமா
நடக்குதே,அதான்
யோசிச்சேன்”
“மாமா காத்திருந்து
காத்திருந்து பொறுமை
இழந்துட்டார்.அவ்வளவு
தான்கா.சும்மா ஆராய்ச்சி
பண்ணாதே”
“சரிங்க சார்.நான்
சொன்ன விஷயம் என்னாச்சு”
“எந்த விஷயம் மதுக்கா”
“உன்னை எவ்வளவு
சீக்கிரம் முடியுமோ,
அவ்வளவு சீக்கிரம் இங்க
வர சொல்லி இருக்கேன் பவி”
“ஞாபகம் இருக்குகா.
இங்க வேலை கிடைச்சதும்
வர்றேன்”
“நீ அங்க தனியா
இருக்கிறது,எனக்கு
ரொம்ப பயமாயிருக்கு பவி”
“என் மது அக்காவுக்குப்
பயமா?”என்று சிரித்தான்
பவித்திரன்.
“உனக்குப் புரியாது பவி.
என்னால என் குடும்பத்துக்கு
எதாவதுனா....என்னால
அதைத் தாங்கிக்க முடியாது.
அம்மா,அப்பாவோட நீயும்
என் கண் முன்னாடியே
இருக்கணும்.அப்ப தான்
என்னால நிம்மதியா இருக்க
முடியும்”
“நீ என்னை நினைச்சுக்
கவலைப் படாதேக்கா.
நான் ஜாக்கிரதையா
இருப்பேன்.வசந்த்
அண்ணாவும் என்னை
அடிக்கடி வந்து
பார்த்துக்கிறார்.எனக்கு
எதுவும் ஆகாது.நான்
கூடிய சீக்கிரமே,இங்க
வந்துடுவேன்.நீயும்,
மாமாவும் சந்தோஷமா
வாழ்றதைப் பக்கத்தில
இருந்து பார்ப்பேன்”
“மது,பவி கீழ வாங்க”
தாயின் அழைப்பைக்
கேட்டு,படிகளில் இறங்கி
ஓடினர் மதுராவும்,
பவித்திரனும்.
சோபாவில் அமர்ந்திருந்த
தாயிடம் சென்று,அவர்
மடியில் தலை வைத்துப்
படுத்துக் கொண்டாள் மதுரா.
தந்தையின் அருகில்
அமர்ந்து கொண்டான்
பவித்திரன்.
“சாரிம்மா.நான்...காலையில....
உங்க கிட்ட கோபமா
பேசிட்டேன்.உங்க மேல
ரொம்பக் கோபப்
பட்டுட்டேன் என்னைத்
திட்டுங்கம்மா.நான்
ரொம்பக் கெட்டப்
பொண்ணும்மா”
“இல்லைடா.நான் தான்
உன்கிட்ட விளையாடி,
உன்னைக் கோபப்
படுத்தினேன்.அம்மா தான்
சாரி சொல்லணும்”
“இல்லை இல்லை.நீங்க
எனக்கு சர்ப்ரைஸ்
கொடுக்கணும்னு
நினைச்சிருக்கீங்க.
நான் புரிஞ்சுக்காமக்
கோபப் பட்டுட்டேன்”
“பரவாயில்லை தங்கம்.
எந்திரிச்சு ஸ்வீட் சாப்பிடு.
நீயும் எடுத்துக்கப் பவி”
“எனக்கு ஊட்டி விடுங்கம்மா”
“அம்மா,எனக்கும்”
“நீங்க ரெண்டு பேரும்
என்ன சின்னக் குழந்தைகளா”
எனக் கேட்டாலும்,
இருவருக்கும் பாதுஷாவைப்
பிய்த்து ஊட்டினார் ராதா.
“நீங்களும் சாப்பிடுங்க”
என்று தாய்தந்தைக்கு
ஊட்டி விட்டனர் மதுராவும்,
பவித்திரனும்.
“அம்மா உனக்கு சர்ப்ரைஸ்
கொடுக்கணும்னு ரொம்ப
ஆசைப்பட்டா மது.அதான்
நான் மாப்பிள்ளையைப்
பத்தி எதுவும் சொல்லலை.
யாரையும் எதுவும் சொல்லக்
கூடாதுன்னு சொல்லிட்டோம்”
தந்தையின் வார்த்தையில்
மகிழ்ந்து,“என் செல்ல ராது”
என்று தாயின் கழுத்தைக்
கட்டிக் கொண்டு
கொஞ்சினாள் மதுரா.
“மதி உன் மனசுல
இருக்கிறதை,உன் முகத்தைப்
பார்த்தே நான் புரிஞ்சுக்கிட்டேன்
மது.மதியால தான் உன்
முகத்தில இந்தப் பழைய
சிரிப்பு வந்திருக்குன்னு
எனக்குத் தெரியும்டா.உன்
மனசு புரிஞ்சு தான் நான்
கல்யாணப் பேச்சை
எடுத்தேன்.ஆனா நீ ரொம்பக்
கோபப் பட்டே.நீயே
சொல்லட்டும்னு நான்
அமைதி ஆயிட்டேன்”
“சாரிம்மா...நான்...”
“பரவாயில்லை தங்கம்.
மாப்பிள்ளை வீட்டில
சொல்லிப் பேச சொல்லி
இருக்கார் மது.சாரதா
எங்களைக் கூப்பிட்டுக்
கேட்டாங்க,நாங்க உடனே
சம்மதம் சொல்லிட்டோம்”
“தேங்க்ஸ்மா.லவ் யூம்மா”
மகளுக்குத் தன் மீதிருந்த
கோபம் முற்றிலும்
தீர்ந்திருக்கும் என்று நம்பி
மனம் மகிழ்ந்தார் ராதா.
படுக்கையில் சாய்ந்து
அமர்ந்திருந்த மதிவதனன்
அருகில் கன்னத்தில் கை
வைத்து அமர்ந்திருந்தனர்
மயூரியும்,முகிலனும்.
அவர்கள் செயலைச்
சிரிப்புடன் பார்த்திருந்தான்
மதிவதனன்.
“வாலுகளா!எதுக்கு இப்படி
என்னை ஏதோ அதிசயம்
மாதிரி பார்த்துட்டு இருக்கீங்க”
“அதிசயம் தான் மதிணா.
அதிசயம் தான்.ஒரு வருஷமா
காதலை சொல்லத்
தயங்கிட்டு இருந்த எங்க
மதி அண்ணா,இன்னைக்கு
அதிரடியா கல்யாணம்
வரைக்கும் போயிட்டாரே!
எப்படி?ஏன்?எதற்கு?சரியா
சொல்லணும்னா...எப்படி
இந்த மெடிக்கல் மிராக்கிள்
நடந்துச்சு மதிணா?
சொல்லுங்க உண்மையைச்
சொல்லுங்க”
“நடுராத்திரில மது
வீட்டுக்குப் போய்
மிரட்டினயே மயூக்கா.
அது வேலை செய்யுதுன்னு
நினைக்கிறேன்”
“ஐயகோ!என்ன வார்த்தை
சொல்லிட்டே முகிலா!நான்
மதுவை மிரட்டினனா?பிரதர்,
இவன் பொய் சொல்றான்.
நம்பாதே”
“இவ தான் பொய் சொல்றா
மதிணா.உங்க காரை ஷெட்ல
நிறுத்திட்டு,அண்ணன்
கார்ல கிப்ட்டும்,
பொக்கேவும் பார்த்தேன்னு
மட்டும் தான் நான்
சொன்னேன் மதிணா.இவ
உடனே அந்த ராத்திரி
நேரத்தில,நான் சொல்ல
சொல்லக் கேட்காம,
என்னையும் இழுத்துட்டு
அண்ணி வீட்டுக்குப்
போய் அவங்களை
மிரட்டினா மதிணா”
“இவங்க அண்ணி
அப்பாவி.நான் மிரட்டினதும்
அப்படியே பயந்து
நடுங்கிடுவாங்க.பிஸ்டல்
பிசாசு!நான் தான்
பயந்து போய் வந்தேன்”
“பாருங்கண்ணா,உங்க
முன்னாடியே அண்ணியைப்
பிஸ்டல் பிசாசுன்னு சொல்றா”
“ஐயோ!மதுவுக்குப் பிஸ்டல்
பிசாசுன்னு பேர் வைச்சதே
இவன் தான் மதிணா”
“பொய் பொய்!மதிணா,இவ
மதுவுக்கு மட்டும் பேர்
வைக்கலை.உங்களுக்கு
மதியானந்த சுவாமிகள்னு
பேர் வைச்சிருக்கா”
“டேய் பொடியா!அ...”
“யாரு பொடியன்?நீ தான்
சுண்டெலி!ம..”
“அமைதி அமைதி”மதிவதனன்
இடையிட முயற்சிக்க.
“நீங்க ரெண்டு பேரும்
இங்க என்ன பண்றீங்க?
அண்ணன் ரெஸ்ட் எடுக்க
வேண்டாமா”சாரதா அங்கு
வந்ததும்,அவர்கள் சத்தம்
அடங்கியது.
“இருக்கட்டும்மா.நான்
நல்லா தான் இருக்கேன்”
தாயின் கண்டிப்பான
பார்வையில்,“சாரிணா.
நீ ரெஸ்ட் எடு.நாங்க
அப்புறம் வர்றோம்”
என்று மயூரியும்,முகிலனும்
வெளியேற,தனயன்
அருகில் அமர்ந்தார் சாரதா.
“நீ போ முகி.நான் பத்து
நிமிஷம் கழிச்சு வர்றேன்”
தம்பியை அனுப்பி விட்டு,
வசந்தன் அறைக்குள்
சென்றாள் மயூரி.
“மயூ,எதுக்கு இந்த திடீர்
விஜயம்?நம்ம காதலைப்
பத்தி உன் வீட்டில பேசவா?
ரெண்டு கல்யாணம்,ஒரே
நேரத்தில!டபுள் சந்தோஷம்,
டபுள் கொண்டாட்டம்.மயூ...”
அவள் யோசனை கண்டு
பேச்சை நிறுத்தினான்
வசந்தன்.
“என்ன விஷயம் மயூ”
“அண்ணாவுக்கும்,மதுவுக்கும்
கல்யாணம் நடந்தா என்னை
விட யாரும் அதிக
சந்தோஷப்பட மாட்டாங்க
வசு.அண்ணன் தனியாவே
இருந்துடுவானோன்னு
கவலைப்பட்டு இருந்தேன்.
மதுவை விரும்பறான்னு
தெரிஞ்சதுல இருந்து தான்
நிம்மதியா இருக்கேன்.
அண்ணாவுக்கு மது மேல
இருக்கிற காதலை எப்படி
சொல்றது?மதுவை நினைச்சு
நினைச்சு உருகியே கரைஞ்சு
போயிடுவேன்னு நாங்க
கேலி பண்ணுவோம்”
“இப்ப என்ன பிரச்சனை மயூ”
“அண்ணன் கிட்ட அவன்
காதல் நிறைவேறின
சந்தோஷம் தெரியலை
வசந்த்.ரெண்டு மூணு
நாளாவே,நான்
கவனிச்சுட்டு இருக்கேன்.
அண்ணா ஏனோ
பதட்டமாவே இருக்கான்.
அவன் சிரிப்பு
பொய்யானது.ஏதோ
ஒண்ணு இருக்கு வசந்த்”
“மயூ செல்லம்,ரொம்ப
கற்பனை பண்ணாதீங்க.
இதெல்லாம் ஊடல்
படுத்தற பாடு.நாலு
நாளானா சரியாயிடும்”
“ஊடல்னா சொல்றே?
சரி பார்ப்போம்.நாலு
நாள்ல அண்ணன்
சரியாகலைன்னா...
சம்திங் ராங்னு அர்த்தம்”
மதி அந்த ரெஜீஸ்ஸை
நினைத்துக்
குழம்புகிறானோ?அவன்
மனம் மதுவை ஏற்க
மறுக்கிறதா?
இல்லையில்லை.அப்படி
இருக்காது.குழம்புபவன்
எதற்கு திருமணப் பேச்சை
எடுக்கிறான்?வேறு ஏதாவது
விஷயமாக இருக்க வேண்டும்.
மகிழ்ச்சியில் திளைத்திருந்த
வசந்தனின் மனதில்
சஞ்சலத்தை விதைத்து
விட்டுச் சென்றாள் மயூரி.
மாலை ஆறு மணியாகி
இருந்தது.
தோட்டத்தில் காற்று
வாங்கியபடி நடந்து
கொண்டிருந்தாள் மதுரா.
அவள் முகத்தின் புன்னகை,
மயக்கும் பூக்களையும்
மயக்குவதாக இருந்தது.
கைபேசி ஒலி எழுப்ப,
யோசனையுடன் காதிற்குக்
கொடுத்தாள் மதுரா.
“ஹலோ”
“மது,நான் அத்தை பேசறேன்டா”
“சொல்லுங்கத்தை”
“மதூ...நான் உன் வீட்டுப்
பக்கத்தில கார்ல இருக்கேன்.நீ..”
“நான் உடனே வர்றேன் அத்தை”
இவர் குரலில் ஏன் இத்தனை
வேதனை?மதிக்கு எதுவும்
பிரச்சனையா?
நான்கெட்டில் கேட்டை
அடைந்து,சாலையில் சற்றுத்
தள்ளி நின்றிருந்த கார்
அருகே ஓடினாள் மதுரா.
“அத்தை...மதி...”
“மதி நல்லாயிருக்கான்
மது.நீ பதட்டப் படாதே”சாரதா
கார்க் கதவைத் திறக்க,
உள்ளே ஏறி அமர்ந்தாள்
மதுரா.
“என்ன விஷயம் அத்தை”
மதுராவின் கைகளைப்
பிடித்துக் கொண்டு,சில
நிமிடங்கள் அமைதியாக
அமர்ந்திருந்தார் சாரதா.
“தயங்காம சொல்லுங்க.
என்ன விஷயமா இருந்தாலும்
நான் தாங்கிக்குவேன்”
“மதூ..மதி..மதி தான் என்
குடும்பத்தோட உயிர் நாடி.
என் வீட்டோட ஜீவன்..என்
பையன் இல்லாம,என் வீடு
முழுமை அடையாது.என்
வீட்டோட உயிர்ப்பை,
என்கிட்ட இருந்து
பிரிக்காதே மதூ...என்
பையனை என்கிட்டயே
கொடுத்துடு மதூ..”
சாரதா விழிகளில்
பொங்கிய கண்ணீர்,
மதுராவின் கைகளில்
விழ,அவள் காதல் உள்ளம்
கலங்கியது.
உன் மதி முகம் காணாது
ஒளிராது எந்தன் உலகம்!
உனை நீங்கிச் சென்றாலே
காரிருளில் கரைந்து போகும்
எனது ஜென்மம்!
தித்திக்கும்


