2
உனைக் கண்டே
நான் புத்துயிர் கொண்டேன்!
காதல் சொல்ல
நான் காத்திருக்க
கண் மறைந்து
நீ போனதெங்கே?
உனைக் கண்டே
நான் புத்துயிர் கொண்டேன்!
காதல் சொல்ல
நான் காத்திருக்க
கண் மறைந்து
நீ போனதெங்கே?
வெயில் கொஞ்சம்
கொஞ்சமாக ஏறிக்
கொண்டிருக்க,அந்தக் கார்
சீரான வேகத்தில் விரைந்து
கொண்டிருந்தது.
காரை ஓட்டியபடியே அருகில்
அமர்ந்திருந்த மதுராவைப்
பார்த்தான் மகேந்திரன்.
அவன் உள்ளத்தில் மகிழ்ச்சி
கும்மாளமிட்டது.
இவள் இத்தனை அழகாக
இருப்பாள் என்று நான்
நினைக்கவே இல்லை.ஏழு
மாதங்கள் காத்திருந்தது
வீண் போகவில்லை.
பாவம் இவள்!ஆண்டவன்
அழகை வைத்த அளவிற்கு,
அறிவை வைக்காமல் போய்
விட்டான்.நான் என்ன
சொன்னாலும் நம்பி
விடுகிறாள்.கோபப் பட்டால்
அழுது விடுகிறாள்.என் மீது
பைத்தியமாக இருக்கிறாள்.
“ஏன் டார்லிங்,எதுவும் பேச
மாட்டீங்கறே?என் மேல
கோபமா?”
“இல்லை மகேன்”
“நான் நேத்து அப்படிப்
பேசியிருக்கக் கூடாது.என்னை
மன்னிச்சுடு,ரெண்டு அடி
வேணா அடிச்சுக்கோ”
மகேந்திரன் கரம் நீண்டு,
அவள் கை தொட வர,நகர்ந்து
கதவை ஒட்டி அமர்ந்தாள்
மதுரா.
“எனக்குக் கோபம் இல்லை
மகேன்.ரோட்டைப் பார்த்து
ஓட்டுங்க”
“என் பர்த்டேவை உன் கூடக்
கொண்டாடணும்னு ஆசையா
இருந்துச்சு.என் ஆசை
நிறைவேறாதோன்னு அப்படிப்
பேசிட்டேன்.சாரிடா”
“இந்தப் பேச்சை விடுங்க
மகேன்.பங்ஷனுக்கு யார் யார்
வருவா?உங்க வீட்டில என்னை
யாருன்னு சொல்லுவீங்க”
“ஒரு சின்ன விஷயம்டா.
கோவிச்சுக்கக் கூடாது”
“சொல்லுங்க”
“அம்மாவும்,அப்பாவும்
முக்கியமான வேலையா
அவசரமா வெளியில
போயிட்டாங்க.முடிஞ்ச
அளவுக்கு சீக்கிரம் வர்றோம்னு
சொல்லி இருக்காங்க.நாம
போறதுக்குள்ள வந்தாலும்
வந்துடுவாங்க”
“என்ன மகேன்...அவங்க
இல்லாம எப்படி...”
“எனக்கும் கஷ்டமா தான்
இருக்கு.முக்கியமான
விஷயம்னா போய் தானே
ஆகணும்”
“ம்”
“பெரிசா எதுவும் பண்ணலைடா.
என் பெஸ்ட் பிரெண்ட்ஸ்
ரெண்டு பேரை மட்டும்
தான் இன்வைட் பண்ணி
இருக்கேன்”
“ரெண்டு பேரா?பெரிய
பார்ட்டி,நிறைய பேர்
வருவாங்கன்னு சொன்னீங்க”
மதுராவின் விழிகள்
கண்டிப்பைக் காட்ட.
“உன்னை சம்மதிக்க
வைக்கிறதுக்காக சொன்னேன்
பேபி.இந்த பர்த்டேவை
உன் கூட மட்டும் தான்
நான் கொண்டாடுவேன்.நீ
என் வீட்டுக்கு வந்தா
போதும்.வேற யாரும் எனக்கு
வேண்டாம்”
மதுரா மௌனமாக
கைபேசியைப் பார்க்க,
அவள் அமைதியில்
நிம்மதியுற்றான் மகேந்திரன்.
“அந்த ஹேண்ட்பேக்கைக்
கழட்டி வை.எதுக்கு
சுமந்துட்டு இருக்கே”
“இதுல தான் உங்களுக்கு
வாங்கின கிப்ட்டை
வைச்சிருக்கேன்.அதான்
பத்திரமா கையிலயே
வைச்சிருக்கேன் மகேன்”
ஐயோ பாவம்!பர்த்டே என்று
நான் சொன்னதை நம்பி
கிப்ட்டெல்லாம் வாங்கி
வந்திருக்கிறாளா?
“இன்னும் எவ்வளவு தூரம்
போகணும் மகேன்”
“கொஞ்ச தூரம் தான்.ஒரு
மணி நேரத்துல போயிடலாம்”
“ஒரு மணி நேரமா?ரொம்ப
தூரம் போகணும்னு சொல்லுங்க”
“இல்லைடா.சீக்கிரம் போயிடலாம்”
“நான் ரெண்டு மணிக்கு
வீட்டில இருக்கணும் மகேன்”
“போயிடலாம்.சாப்பிட்டு,
கொஞ்ச நேரம் பேசிட்டு
இருந்துட்டுக் கிளம்பிடலாம்”
சிறிது நேரம் இருவரும்
அமைதியாக இருந்தனர்.
மதுரா புன்னகையுடன்
வெளியில் வேடிக்கை
பார்ப்பதும்,தன் கைபேசியைப்
பார்ப்பதுமாய் இருக்க,தன்
அதிர்ஷ்டத்தை எண்ணி
அகமகிழ்ந்து கொண்டிருந்தான்
மகேந்திரன்.
“உனக்கு கேம்ஸ்னா
ரொம்பப் பிடிக்குமா”
“ம்.அஞ்சு நிமிஷம்
கிடைச்சாலும் விளையாட
ஆரம்பிச்சுடுவேன்”
பொதுவான பேச்சுக்களுடன்
அவர்கள் பயணம் தொடர்ந்தது.
தன் வேலைகளை எல்லாம்
விட்டு விட்டு,சிறிது இடைவெளி
விட்டு,மதுரா பயணித்த
காரைத் தொடர்ந்து
கொண்டிருந்தான் மதிவதனன்.
அவன் முகத்தில் குழப்ப
ரேகைகள்!
நான் எதற்கு மதுராவைத்
தொடர்ந்து கொண்டிருக்கிறேன்?
இது சரியா?ம்ஹூம்!
மதுரா என்ன நினைப்பாள்?
அவளைக் கண்காணிப்பதாக
நினைத்து,என்னுடனான
நட்பை முறித்துக் கொண்டால்...
கூடாது.அப்படி மட்டும்
நடக்கவே கூடாது.நான்
திரும்பிச் செல்வதே நல்லது.
இல்லை.அப்படி என்னால்
செல்ல முடியாது.அவன் யார்?
இது வரை அவனை நான்
இங்கு பார்த்ததில்லையே.
மதுவின் நட்பு வட்டத்தில்
நான் அறியாதவர் என்று
எவரும் இல்லையே.
புகை பிடித்துக் கொண்டு,
காரில் சாய்ந்து நின்ற
அவனைப் பார்த்தால்,எனக்கு
ஏனோ பிடிக்கவில்லை.அவன்
பார்வையே சரியில்லை.
அவனுடன் இவள் எங்கு
செல்கிறாள்?
மதுராவின் அம்மாவிடம்
கேட்கலாமா?ஆம்,அது தான்
சரி.அப்போது தான் என்னால்
நிம்மதியாக இருக்க முடியும்.
தன் கைபேசியில் இருந்து
மதுராவின் லேண்ட்லைன்
எண்ணிற்கு அழைத்த
மதிவதனன்,ஹெட்போனில்
பேசியபடியே காரைச்
செலுத்தலானான்.
“ஆன்ட்டி,நான் மதி பேசறேன்”
“நல்லா இருக்கீங்களா தம்பி.
அம்மா அப்பா எல்லாம் நல்லா
இருக்காங்களா”
“எல்லாரும் நல்லா இருக்கோம்
ஆன்ட்டி.மது கிட்ட முக்கியமான
விஷயம் பேசணும்.அவ
மொபைல்லை எடுக்கலை.
அதான் லேண்ட் லைனுக்குக்
கூப்பிட்டேன் ஆன்ட்டி”
“மது அவ பிரெண்ட்ஸ்ஸோட
பர்த்டே பங்ஷனுக்குப் போயிருக்கா
தம்பி.நானும் எங்கிருக்கான்னு
கேட்கலாம்னு கூப்பிட்டேன்.
எடுக்கலை தம்பி”
“சரிங்க ஆன்ட்டி.நானே
கூப்பிட்டுப் பார்க்கறேன்.நீங்க
கவலைப் படாம இருங்க.
மதுவைப் பேச சொல்றேன்.
வைச்சுடறேன் ஆன்ட்டி”
“சரிங்க தம்பி”
இவர் என்ன இப்படி
சொல்கிறார்?மது தனியாகத்
தான் செல்கிறாள்.மது ஏன்
தன் தாயிடம் பொய்
சொல்ல வேண்டும்?பொய்
சொல்ல வேண்டிய
அவசியமென்ன?அவள்
வீட்டில் அவள் வைத்தது
தானே சட்டம்?
நான் மது எங்கு
செல்கிறாள் என்பதை
அறிந்தே தீருவேன்.அவள்
பொய் உரைக்க என்ன
காரணமென்பதை நான்
அறிந்தாக வேண்டும்.
தெளிந்த மனதோடு,சீரான
இடைவெளியில் மதுராவைப்
பின் தொடர்ந்தான் மதிவதனன்.
தன் மனம் உடையும்
வேதனையைத் தானே தேடிச்
செல்கிறான் இவன்!
வீழ்வானோ?மீள்வானோ?
தித்திக்கும்



ஹாய் பிரெண்ட்ஸ்,
இரண்டாம் அத்தியாயம்
கொடுத்துள்ளேன்.வாசித்து
சில வார்த்தைகள் பகிர்ந்து
கொண்டாலும் பெரும்
மகிழ்ச்சி அடைவேன்.
வாசிப்பதோடு உங்கள்
கருத்தையும் பகிர்ந்து
கொள்ளுங்கள் தோழமைகளே.
நன்றி


அன்புடன்,
நித்திலா