23
அழகிய வானவில்லை
என் வாயிலில்
தோரணமாக்குவாய் என
கனவுகள் வளர்த்தேன் அன்பே!
உன்னுயிரை
நிராசையுறச் செய்வது
நியாயமோ?
சொல்!என் அன்பே!
அழகிய வானவில்லை
என் வாயிலில்
தோரணமாக்குவாய் என
கனவுகள் வளர்த்தேன் அன்பே!
உன்னுயிரை
நிராசையுறச் செய்வது
நியாயமோ?
சொல்!என் அன்பே!
தான் கொடுத்தப்
பூங்கொத்தை வாங்காமல்,
அசையாமல் நின்றிருந்த
மதுராவைக் கேள்வியுடன்
பார்த்தான் மதிவதனன்.
“மதீ...”
“என்னடா”
“நான் உன் கிட்ட உண்மையை
மறைச்சிருக்கேன்.நம்ம
கல்யாணப் பேச்சை
ஆரம்பிச்சதுக்கு அப்புறம்
கூட,நான் உண்மையைச்
சொல்லலை.நீ நியாயமா
என் மேல கோபப்
பட்டிருக்கணும்.என் கூட
சண்டைப் போட்டிருக்கணும்.
நீ எப்படி வாழ்த்து சொல்றே?”
பூங்கொத்தை வைத்து விட்டு,
அவள் தோள்களில் கை வைத்து
அவள் முகம் பார்த்தான் மதிவதனன்.
“உன் மதிக்கு உன் மேல
எப்பவும் கோபம் வராது மது.
உண்மை தெரிஞ்சதும்,நம்ம
கிட்டக் கூட மறைச்சுட்டாளேன்னு
வருத்தம் தான் ஏற்பட்டுச்சு.
அந்த வருத்தமும் கொஞ்ச
நேரத்தில சரியாயிடுச்சு.என்
மது சொல்லலைன்னா,அதுல
எதாவது காரணம் இருக்கும்னு
என்னை நானே சமாதானப்
படுத்திக்கிட்டேன்.இப்ப
சந்தோஷம் மட்டும் தான்
என் மனசுல நிறைஞ்சிருக்கு”
“உனக்குப் பெரிய மனசு
மதி.நேத்து நைட் தான்
உன்கிட்ட உண்மையை
சொல்லிடணும்னு
நினைச்சேன்.நீ நான்
இல்லாதப்ப வீட்டுக்கு
வந்துட்டு,உடனே கிளம்பிப்
போயிட்டே.போன்ல சொல்ல
வேண்டாம்,நாளைக்கு நேர்ல
பார்த்து சொல்லிக்கலாம்னு
நினைச்சுட்டு இருந்தேன் மதி”
“நாளைக்கு வரைக்கும் நீ
காத்திருக்க வேண்டாம்
மது.நீ போய் தலைப்
பின்னிட்டு வா.நாம
பொறுமையா பேசலாம்”
“மதீ...நான்...உன் கிட்ட
மறைக்கணும்னு
நினைச்செல்லாம்
உண்மையைச் சொல்லாம
இல்லை மதி.நான் இங்க
வந்தப்ப இருந்த மனநிலையில...
யார்கிட்டயும் பேசவே
பிடிக்காம இருந்தேன்.என்
மனசு சரியானப்ப...ரெஜீஸ்
விஷயம் முடிஞ்சதுக்கு
அப்புறம் சொல்லிக்கலாம்னு
சொல்லலை”
அப்போது மதுவின்
வாட்டத்திற்கு காரணம்
உடல் சோர்வு இல்லையா?
மனச் சோர்வா?
“சரிடா.முதல் சிரி.இல்லைன்னா...
நான் போயிடுவேன்”
“தேங்க்ஸ் மதி”என்று
புன்னகைத்தாள் மதுரா.
“சரி போய் தலைப் பின்னிட்டு வா”
“நீ என்னைக் கிண்டல் பண்ணக்
கூடாது”
“எதுக்கு”
“நான் தினமும் தூங்கறப்ப,
ரெண்டு ஜடை பின்னிட்டுத்
தூங்குவேன்”
“ரொம்ப வருஷம் கழிச்சு,
அந்தக் குட்டிப் பொண்ணு
மதுவைப் பார்க்கிற வாய்ப்புக்
கிடைச்சிருக்கு.அதைக் கிண்டல்
பண்ணிக் கெடுப்பனா?நீ
பொறுமையா ரெண்டு ஜடை
பின்னிட்டு வா.நான் வெயிட்
பண்றேன்”
“ம்”
மதுரா கண்ணாடி முன் அமர,
அங்கிருந்த சோபாவில்
அமர்ந்தான் மதிவதனன்.
தன்னையே பார்த்துக்
கொண்டிருக்கும் மதிவதனனை
கண்ணாடியில் பார்த்த மதுரா,
நேர் வகிடு எடுக்க முடியாமல்
திணறினாள்.
மதுராவின் தடுமாற்றம் கண்டு,
தன் பார்வையைத் திருப்பி
டீப்பாய் மீதிருந்த பைலை
மதிவதனன் எடுக்க,அதிலிருந்த
காகிதங்கள் நழுவி விழுந்தது.
என்ன பேப்பர் இது என்று
எடுத்துப் பார்த்தான் மதிவதனன்.
“ராங் கால் காதல்கள்”என்று
தலைப்பிடப் பட்டிருந்த
கட்டுரையைப் படிக்கத்
தொடங்கினான் மதிவதனன்.
கல்லூரியில் பயிலும்
இளம்பெண் தேஜா.
படிப்பில் ஆர்வம் கொண்ட
தேஜாவிற்கு,பெரிய வேலைக்குச்
செல்ல வேண்டுமென்ற கனவு
இருந்தது.ஒரு நாள் அவள்
கைபேசிக்கு,அறிமுகமில்லாத
எண்ணில் இருந்து அழைப்பு
வருகிறது.எடுத்துப் பேசி விட்டு,
“ராங் நம்பர்”என்று கூறி கட்
செய்து விடுகிறாள்.
சில மணி நேரங்கள் கழித்து,
“தொந்தரவிற்கு மன்னியுங்கள்,
தவறுதலாக அழைத்து விட்டேன்”
என்று பொருள் படும்படி,அதே
எண்ணிலிருந்து குறுஞ்செய்தி
வருகிறது.இரண்டு நாட்கள் கழித்து
மீண்டும் அதே எண்ணிலிருந்து
குட்மார்னிங்,குட்ஈவ்னிங்
போன்ற செய்திகள்.தேஜா
பதிலளிக்காத போதும்,
தொடர்ந்து அந்த எண்ணிலிருந்து
அழகானப் புகைப்படங்கள்,
வாழ்க்கைத் தத்துவங்கள்,
காதல் கவிதைகள் வரத்
தொடங்குகிறது.
தேஜா அவ்வகையான
செய்திகளை ரசிக்கத்
தொடங்குகிறாள்.பின்
மெல்ல,“whats ur name,
how r u”என்று பேசத்
தொடங்கி,தகவல்கள் பரிமாறி
நட்பு வளர்கிறது.சில மாதங்கள்
கழித்து,அந்நட்பு காதலாக
மாறுகிறது.தேஜா அளவில்லாத
காதலில் உருகிக் கொண்டிருந்த
வேளையில்,தேஜாவின்
நட்பு வட்டம்,தேஜாவின்
காதலன், திருமணமானவன்
என்பதை அறிந்து,தேஜாவிடம்
உண்மையை எடுத்துரைக்கிறது.
உண்மை அறிந்த தேஜா,
மனநிலை பாதிக்கப்பட்டு
சிறகடித்துப் பறக்க வேண்டிய
வயதில்,ஓர் அறையில்
அடைபட்டுக் கிடக்கிறாள்.
இதே போன்று “ராங் கால்”
காதலில் விழுந்த ரிதாவின்
கதை பரிதாபத்திற்குரியது.
ராங் கால் காதலனை சந்திக்கச்
சென்ற ரிதா,வீடு திரும்பவே
இல்லை.தன் இச்சையைத்
தீர்த்துக் கொண்டு,ரிதாவை
கொன்றும் விடுகிறான் அக்கயவன்.
தங்கள் பெண்ணை இழந்து
நடைபிணமாக வாழ்ந்து
வருகின்றனர் ரிதாவின் பெற்றோர்.
“ராங் கால்”காதலில் தன்
வாழ்க்கையைத் தொலைத்த
சாயாவின் நிலை,மற்றவர்களை
விடப் பரிதாபத்திற்குரியது.
“ராங் கால்”காதலனைச்
சந்திக்கச் சென்ற சாயாவிற்கு,
போதை மருந்து கொடுக்கப்பட்டு,
புகைப்படங்கள் எடுக்கப்பட்டு,
தனக்கு நேர்ந்ததை அறியாமலே
வீடு திரும்புகிறாள்.அன்பு சொட்டப்
பேசிய காதலன்,அவள் புகைப்படங்களை
அனுப்பி,இணையத்தில் உலவ
விடப் போவதாக மிரட்டுகிறான்.
தான் ஏமாற்றப் பட்டதை
அறிந்து கதறுகிறாள் சாயா.
தன் புகைப்படங்களை மீட்க,
தன் சொந்த வீட்டிலேயே
பணத்தைத் திருடும் நிலைக்குத்
தள்ளப்பட்ட சாயா,தான்
செய்த தவறை நினைத்து,
ஒவ்வொரு நொடியும் கண்ணீர்
சிந்திக் கொண்டிருக்கிறாள்.
இவ்வாறு “ராங் கால்”
காதல்களால் நேரும் துன்பம்
மிகக் கொடியதாகவே இருக்கிறது.
“ராங் கால்”ஆசாமிகளின்
காதல் வலை பள்ளிச்சிறுமி,
கல்லூரிப் பெண்,இல்லத்தரசி,
உயர் பதவி வகிக்கும் பெண்
வரை நீள்கிறது.
அறிமுகமில்லா எண்ணில்
ஏற்படும் காதலானது,
புதைகுழிக்குச் சமமானது.
மீண்டு வரவே முடியாதது.
கட்டுரை முடிந்திருக்க,
பக்கத்தைத் திருப்பிப்
பார்த்தான் மதிவதனன்.
மது இன்னும் எழுதி
முடிக்கவில்லை.
பத்திரிக்கைக்கு எழுதுகிறாள்
போலிருக்கிறது.
மது எங்கே?இன்னுமா தலை
பின்னுகிறாள்?
மதிவதனன் நிமிர்ந்து
பார்த்த போது,கண்ணாடி முன்
நின்று கழுவி வந்த முகத்தைத்
துடைத்துக் கொண்டிருந்தாள்
மதுரா.
பைலினுள் காகிதத்தை
வைத்துப் பழையபடி டீப்பாயின்
மீது வைத்தான் மதிவதனன்.
பாவம் இந்தப் பெண்கள்.
இவர்கள் வாழ்க்கை இது
போல் ஆகியிருக்கக் கூடாது.
நேருக்கு நேர் பார்த்து,பல
வருடங்கள் பேசிப் பழகிய
காதல்களே பொய்த்துப்
போகும் காலத்தில்,ராங்காலில்
அறிமுகமானவனின் பேச்சை
நம்பிக் காதலித்து,தங்கள்
வாழ்க்கையைத் தொலைத்துத்
தீராத துன்பத்தில் உழல்கின்றனர்.
மதுரா தன் அருகில் வந்து
அமர்ந்தது தெரியாமல்,பாவம்
இந்த அப்பாவிப் பெண்கள்
என்று பரிதாபப் பட்டுக்
கொண்டு மௌனித்திருந்தான்
மதிவதனன்.
மதிக்கு என்னவானது?மகிழ்ச்சி
பொங்க வந்தவன்,ஏன் இப்படி
முகம் வாடி இருக்கிறான்?
ஓ!இந்த பைல்...படித்து விட்டானா?
இவன் மனது எத்துயரத்தையும்
தாங்கொணாதது!சிறு வயது
முதலே மதி இப்படித்தான்!
“மதி..”மதுரா அவன் தோள் தொட.
“இந்தப் பொண்ணுக பாவம் மது.
எவ்வளவு கனவுகளோட
இருந்திருப்பாங்க?அவங்க
வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே”
“ராங்கால் மெசேஜ்களை
கண்டுக்காம விட்டிருந்தா,
இவங்களுக்கு இந்த நிலைமை
வந்திருக்காது மதி.
பொண்ணுகளை எப்படி
ஏமாத்தலாம்னு பார்த்துட்டு
இருக்கிறவங்களுக்கு நடுவுல
நாம வாழ்ந்துட்டு
இருக்கோம்கிறதை ஞாபகம்
வைச்சு,உஷாரா இருந்தா,
நம்ம வாழ்க்கை எப்பவும்
நம்ம கையிலயே இருக்கும்”
“ம்”
சில நிமிடங்கள் மௌனமாக
இருந்த மதிவதனனுக்கு ரெஜீஸ்
ஞாபகம் வந்தது.
“மதூ...ரெஜீஸ்சும் இந்த
மாதிரி “ராங்கால்” பிராடா?
அவனைப் பிடிக்கத்தான் நீ
அவன் கூடப் பழகினயா?”
“ஆமாம் மதி.ஆனா
ரெஜீஸ்சுக்கு ட்ரக்ஸ்தான்
முதல் தொழில் மதி.
பொண்ணுக கூடப் பழகி
ஏமாத்தறது,போட்டோ எடுக்கிறது,
பிளாக்மெயில் பண்றதெல்லாம்
அடுத்தது தான்.காதல் வலை
விரிச்சுப் பொண்ணுகளை
ஏமாத்தி தன் வேலை
முடிஞ்சதும்,அவங்க
போட்டோவைக் காட்டி
யார்கிட்டயும் சொல்லக்
கூடாதுன்னு மிரட்டிட்டு
இருந்திருக்கான்.
அதுவே வசதியான வீட்டுப்
பொண்ணா இருந்தா,போட்டோ
எடுத்து பிளாக்மெயில்
பண்ணி பணத்தைக்
குவிச்சுட்டு இருந்திருக்கான்
மதி”
“ரெஜீஸ்ஸைப் பத்தி
உங்களுக்கு எப்படித்
தெரிஞ்சுது மது?அவனால
பாதிக்கப் பட்டவங்க
யாராவது உங்ககிட்ட
உதவி கேட்டாங்களா?
போட்டோ இருக்கிறனால...
ரொம்பவே தயங்குவாங்க.
யாருக்கும் தெரியக்
கூடாதுன்னு நினைப்பாங்க”
“ஆமாம் மதி.இந்த மாதிரி
விஷயத்தை அவ்வளவு
சீக்கிரம் யாரும் வெளியில
சொல்ல மாட்டாங்க”
எங்கிருந்து தொடங்குவது
என யோசித்தவளாய்,
மதிவதனன் முகம்
பார்த்தாள் மதுரா.
“சென்னையில ஒரு
பெரும்புள்ளி,எங்க பாஸோட
பேமிலி பிரெண்ட்டும் கூட.
அவங்க எங்க பாஸ்கிட்ட
உதவி கேட்டிருக்காங்க மதி”
“உங்க பாஸ் உன்கிட்ட
பொறுப்பை ஒப்படைச்சிருப்பார்”
“இல்லை மதி.நான் அப்ப
ஹாஸ்பிடல்ல இருந்தேன்”
“மதூ...நீ எதுக்கு
ஹாஸ்பிடல்ல...”என கேட்கும்
போதே,மதுரா தலையில்
கட்டுடன் வந்து நின்றது
அவன் நினைவில் வந்து போனது.
“மதூ...உனக்கு...அத்தை
ஆக்ஸிடென்ட்டுன்னு சொன்னது
பொய் தானே?”தவிப்புடன்
மதுராவின் முகத்தைப்
பார்த்தான் மதிவதனன்.
மதியிடம் நான் உயிருக்குப்
போராடினேன் என்று
சொல்ல வேண்டுமா?
“மதூ...என்கிட்ட எதையும்
மறைக்காதே.உனக்கு
எப்படி அடி பட்டுச்சு?சொல்லு”
“மதீ...”
“சொல்லுடா”
“நானும்,வசந்த்தும் ஒரு
பிளாட்ல நடந்த கொலையை
விசாரிக்கப் போனப்ப,அந்தக்
கொலைகாரங்க எங்களைத்
தாக்கினதுல...என் தலையில
கொஞ்சம் பலமா அடி
பட்டுடுச்சு மதி.டாக்டர்ஸ்...
நான் பிழைக்க மாட்டேன்,
கோமாவுக்கு போயிடுவேன்னு
எல்லாம் சொல்லி இருக்காங்க.
ஆனா நான் பிழைச்சு வந்துட்டேன்”
பூகம்பம் வந்த பூமியாய்
அதிர்ந்து போனது மதிவதனன்
நெஞ்சம்.
கைகள் நடுங்க மதுரா
தலையைத் தொட்டுத்
தொட்டுப் பார்த்த மதிவதனன்,
அவள் தலையைத் தன்
மார்போடு சேர்த்து
அணைத்துக் கொண்டான்.
நெடு நேரத்திற்கு அவள்
தலையை வருடியபடியே
அமர்ந்திருந்தான் மதிவதனன்.
இந்த வேலையில் இருக்கும்
ஆபத்தை அறியாமல்
ஆனந்தப் பட்டேனே!
மது!என் மது!மரணத்தின்
விளிம்பைத் தொட்டு
வந்திருக்கிறாள்.நன்றி
கிருஷ்ணா!என் மதுவை
நீயே காத்திருக்கிறாய்!
“எனக்கு ஒண்ணும் இல்லை
மதி.நீ பயப் படாதே.நான்
இதை உன்கிட்ட
சொல்லியிருக்கவே கூடாது”
“இல்லை இல்லை.நான்
தைரியமா இருக்கேன்.நீ
என்கிட்ட எதையும்
மறைக்காதே மது.என்கிட்ட
இருந்து எதையும் மறைக்க
மாட்டேன்னு எனக்குப்
பிராமிஸ் பண்ணு மது”
“மறுபடியும் பிராமிஸ்ஸா?
சரி பண்றேன்.
நிஜமான பிராமிஸ் இது.
உன்கிட்ட இருந்து எதையும்
மறைக்க மாட்டேன் மதி”
“தேங்க்ஸ் மது”
“உனக்குத் தெரியுமா மதி,
எனக்கு அடி பட்டப்ப,நான்
ரொம்ப வருத்தப் பட்டேன்.
எல்லார் மேலயும் கோபப்
பட்டேன்.அம்மாகிட்ட
பேசாமக் கூட இருந்தேன்.
ஆனா அ...”
“என்ன!!அத்தை கிட்டப்
பேசாம இருந்தயா?உனக்கு
அடிபட்டதுக்கு அத்தை
என்ன பண்ணுவாங்க மது?”
“அம்மா தான் டாக்டர்ஸ்
பேச்சைக் கேட்டுப் பயந்து,
“உனக்கு அம்மா வேணுமா,
வேலை வேணுமான்னு”
என்னை மிரட்டி,வேலையை
விட வைச்சு,அப்பாவை
விஆர்எஸ் வாங்க வைச்சு,
அந்த ஊர்லயே இருக்கக்
கூடாதுன்னு சொல்லி இங்க
கூப்பிட்டு வந்தாங்க மதி”
“நான்...இப்ப...டிடெக்டிவ்
இல்லை மதி.என் வேலையை
விட்டுட்டுத்தான் நான் இந்த
ஊருக்கே வந்தேன்.அம்மா...
நான் டிடெக்டிவ் வேலையை
நினைச்சே பார்க்கக் கூடாது...
எப்பவும் அந்த வேலைக்கு
போகவும் கூடாதுன்னு...அவங்க
மேல சத்தியம் வாங்கிட்டாங்க மதி”
“அத்தை சரியான முடிவு
தான் எடுத்திருக்காங்க.உன்
உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தற
வேலை உனக்கு வேண்டாம் மது”
மதிவதனன் தன் கனவுகளுக்கு
உயிர் கொடுப்பான் என்று
எண்ணியிருந்த மதுராவின்
நம்பிக்கை பொய்த்துப் போனது.
தித்திக்கும்