28
என் உளம் தேடும்
பெண் நீ!
நான் கண்ட மாசிலா
பொன் நீ!
என் நெஞ்சில் வாழும்
உயிர் நீ!
“ஐயய்யோ!”என் உளம் தேடும்
பெண் நீ!
நான் கண்ட மாசிலா
பொன் நீ!
என் நெஞ்சில் வாழும்
உயிர் நீ!
தங்கையின் அலறலில்
யோசனையில் இருந்து
நிமிர்ந்தான் மதிவதனன்.
“என்ன மயூ?என்னாச்சு”
“இதை நான் கேட்கணும்
பிரதர்.மதுவைக் கொசு
கடிச்சுதா...இல்லை எறும்பு
கடிச்சுதா?கவலைப்
படாதே.அந்தக்
கொசுவையும்,எ...”
“விளையாடாதே மயூ.
விஷயத்துக்கு வா”
“ஓகே ஓகே.விஷயம்
இல்லை பிரதர்.ரகசியம்!
நேத்திருந்து உன்கிட்ட
சொல்லத் துடிச்சுட்டு
இருக்கேன்.நீ கண்ணுலயே
படலை.நைட் தூங்காமக்
காத்துட்டு இருந்தேன்.
நீ வரவே இல்லை.எங்கப்
போனே,எப்ப வீட்டுக்கு
வந்தே?”
மது டிடெக்டிவ் என்று
மயூவிற்குத் தெரிந்து
விட்டதா?வசந்த்
சொல்லியிருக்க வேண்டும்.
“நான் வரக் கொஞ்சம்
லேட்டாயிடுச்சு.நீ சொல்ல
வந்ததை சொல்லு”
“மதிணா,உன் மது ஒரு
துப்பறியும் மான்!!!டெடேன்
டெடேன்!டிஷ்யூம் டிஷ்யூம்!
டூமீல் டுமீல்!ட...சிரிக்காதே
மதிணா”
“சரி சிரிக்கலை”
“இந்த உண்மையை...
நம்ம கிட்ட மதிணா நம்ம
கிட்ட மறைச்சிருக்கா.மது
இந்த ஊருக்கு வந்து எட்டு
மாசம் ஆச்சு.இந்த எட்டு
மாசத்தில ஒரு நாளாவது
வாய் திறந்திருக்காளா பார்.
பவி,அந்தப் பொடியன்,
வாயைத் திறந்தாலே
அக்காவைப் பத்தித் தான்
பேசுவான்.அவனும் மூச்சு
விடலை”
“அமைதி அமைதி.
டிடெக்டிவ் வேலை எல்லாம்
ரகசியமா இருக்கணும்
மயூ.வெளியில தெரி...”
“மதிணா,உனக்கு
உண்மை தெரியுமா?நீயும்
என் கிட்ட மறைச்சியா?”
“இல்லைடா.எனக்கே
நேத்து தான் தெரியும்.
உன்கிட்ட சொல்லலாம்னு
இருந்தேன்.நான் வர்றதுக்கு
லேட்டாகி சொல்ல முடியலை”
“அதானே பார்த்தேன்.இந்த
மதுவுக்கு நம்ம கிட்ட என்ன
ரகசியம்?நாம என்ன வெளி
ஆளுகளா?”
“பொறுமை பொறுமை.
மது சொல்லக் கூடாதுன்னு
நினைச்செல்லாம் சொல்லாம
இல்லை மயூ.மது அப்ப இருந்த
மனநிலை அப்படி மயூ.மது
யார்கிட்டயும் சரியா பேசக்
கூட இல்லையே.மது எவ்வளவு
அமைதியான
பொண்ணாயிட்டான்னு நாம
கூடப் பேசிக்கிட்டமே.நேசிச்ச
வேலையை விட்டுட்டோங்கிற
வருத்தம்,மிரட்டி விட
வைச்சுட்டாங்கங்கிற
கோபம்.மயூ...”
“........”
“பாவம்டா மது.மனசுலயும்
அமைதி இல்லை.
உடம்பும் சரியில்லை.
மதுவுக்குத் தலையில
அதிக வலி இருந்துச்சு
மயூ.ஆனா அவ அதைக்
காட்டிக்கிட்டதே இல்லை”
“மதுவை விடு.இந்தப்
பவிக்கு என்ன”
“பவி...அவன்...ராதாம்மா
யார்கிட்டயும் சொல்லக்
கூடாதுன்னு சொல்லி
இருப்பாங்க.
அதான் அவனும்
சொல்லலை”
“யார் கிட்டயும் சொல்லக்
கூடாதுன்னா,இந்தப்
பொடியன் நம்ம கிட்டக்
கூட சொல்லாம
இருந்திருக்கான்.மண்டூ”
“கோபப் படாதே மயூ.
விட்டுடேன்.ப்ளீஸ்”
“எனக்குத் தெரியுமே,நீ
மதுவுக்குத் தான் சப்போர்ட்
பண்ணுவே.நான் உன் கிட்ட
சொல்லி இருக்கவே
கூடாது.அப்புறம்,மது
ஒண்ணும் வேலையை
விடலை.ரெஜீஸ்ஸை
மறந்துட்டியா நீ?”
“அதூ...அவ ஒத்துக்கிட்ட
வேலை.முடிச்சுக்
கொடுத்திருக்கா.இனி
மதுவோட அம்மா
சம்மதிச்சா தான் மது
வேலை பார்க்க முடியும்.
டிடெக்டிவ்னு சொல்ல
முடியும்”
“நீ முதல்ல சம்மதிப்பியா
மதிணா”
“..........”
“தெரியுமே.நீயும்
ராதாம்மா மாதிரி தான்
யோசிப்பே”
“மதுவுக்கு எதாவதுன்னா...
எங்கனால தாங்க முடியாது
மயூ”
“மது உயிருக்குப் போராடி
மீண்டு வந்திருக்கா.
எனக்கும் அதை நினைக்கறப்ப
வருத்தமா தான் இருக்கு.
அதுக்காக,அதையே நினைச்சுட்டு
வேலை வேண்டாம்னு சொல்றது...
ரொம்ப அநியாயம் மதிணா.
ஒரு தடவை ஏமாறது தான்
அதுக்காக ஒவ்வொரு
தடவையும் ஏமாறுவமா என்ன?”
“ஒரு வழியா நீ விஷயத்துக்கு
வந்துட்டே.
மதுவுக்கு சப்போர்ட்
பண்ண வந்திருக்கே”
“ஆமாம்.மது வருத்தத்தில
இருந்தனாலயோ,
கோபத்தில இருந்தனாலயோ,
ஏதோ ஒண்ணுனால நம்ம
கிட்ட சொல்லலை.எனக்கு
அவ மேல கோபம் இல்லை
மதிணா.நாம மறுபடியும்
மதுவை டிடெக்டிவ்
ஆக்கணும் மதிணா”
“என்னது!!”
“எனக்கு நல்லா தெரியும்.
நீ மதுவோட ஆசையை
மறுக்கவே மாட்டே.
ராதாம்மா கிட்ட நாம
பேசுவோம்.அவங்க
சம்மதிச்சுடுவாங்க”
“வேண்டாம் மயூ.அவங்க
இன்னும் அந்த சம்பவத்தில
இருந்து மீண்டு வரலை.
மது உயிருக்குப் போராடினதை
அவ்வளவு சுலபமா
அவங்கனால மறக்க முடியாது.
அவங்க இப்ப பொண்ணுக்குக்
கல்யாணங்கிற சந்தோஷத்தில
இருக்காங்க.அந்த சந்தோஷத்திலயே
இருக்கட்டும்.மது வேலையைப்
பத்தி அப்புறம் பேசலாம்.நான்
பேசிக்குவேன்.நீ இந்தப்
பிரச்சனையை விட்டுடு”
“சரி.நீ இதமா,பதமா,
சுவையா சர்க்கரைப்
போட்டுப் பேசுவே.நீயே
பேசு.மது ஆசை
நிறைவேறினா சரி”
“முகில் கிட்ட மது பத்தி
சொல்லிட்டியா”
“சொல்லிட்டேன் மதிணா.
நம்ம மருமக துப்பாக்கியோட
வந்து விளக்கேத்தப்
போறான்னு நம்ம
அம்மாவுக்குத் தெரிஞ்சிருக்கும்
தானே மதிணா?உங்க கல்யாணப்
பேச்சு வந்ததும் ராதாம்மா
கண்டிப்பா சொல்லி இருப்பாங்க.
இந்த சாரு ஏன் ஒண்ணுமே
சொல்லலை?”
அது தானே?இதை நான்
யோசிக்கவில்லையே!அம்மா
ஏன் எதுவும் கூறவில்லை?நான்
மதுவை நினைத்துக்
கவலைப் பட்டிருக்க
வேண்டிய அவசியமே
இருந்திருக்காதே!
“எனக்கு என்ன தோணுதுன்னா
மதிணா...நம்ம சாருவும்,
ராதாம்மாவும் நகமும்,
சதையுமா இருந்தவங்க.
ராதாம்மா இவ்வளவு நாள்
துப்பறியும் மானோட
கதையை சொல்லாம
இருந்திருப்பாங்களா?”
மயூ சரியாகத்தான்
கேட்கிறாள்.அம்மாவும்,
ராதாம்மாவும் நெருங்கிய
தோழிகள்!ராதாம்மா
அம்மாவிடம் உண்மையை
மறைக்க வாய்ப்பில்லை.
“ராதாம்மா முன்னாடியே
அம்மா கிட்ட உண்மையைச்
சொல்லி இருந்தா,நமக்கு
எப்பவோ உண்மை
தெரிஞ்சிருக்குமே மயூ.
அம்மா நம்ம கிட்ட எதுக்கு
மறைக்கப் போறாங்க”
“ராதாம்மா அப்ப சொல்லி
இருந்தாலும் சரி,
இப்ப சொல்லி இருந்தாலும்
சரி,சாரு நம்ம கிட்ட
சொல்லலை பிரதர்.நானும்,
முகியும் ஒவ்வொரு வீடா
போய் எங்க மது டிடெக்டிவ்னு
சொல்லிடுவமோன்னு பயந்து
உண்மையை மறைச்சுட்டாங்களோ”
மது,முகி விளையாட்டுப்
பிள்ளைகள்.எதாவது பிரச்சனையை
இழுத்து வந்து விடுவார்கள்
என்று அம்மா உண்மையை
சொல்லவில்லை என்று
வைத்துக் கொள்ளலாம்.
என்னிடம் ஏன் சொல்லவில்லை?
இல்லை.நிச்சயம் அம்மா
என்னிடம் உண்மையை
சொல்லாமல் இருக்க
மாட்டார்கள்.இதில் ஏதோ
குழப்பம் இருக்கிறது.
மதுரா அங்கு வந்த முதல்
நாளை நினைத்துப் பார்த்த
மதிவதனன்,அதன் பின்
கடந்து போன நாட்களை
நினைவு கொண்டு மனம்
தெளிந்தான்.
“அம்மா நம்ம கிட்ட
சொல்லி இருக்காங்க மயூ.
நாம தான் அதை சரியா
புரிஞ்சுக்கலை”
“என்ன மதிணா சொல்றே”
“மது இங்க வந்த கொஞ்ச
நாள்லயே அம்மா நம்மளைக்
கூப்பிட்டுப் பேசுனாங்களே.
அதை ஞாபகப் படுத்திப்
பாரு மயூ”
“இரு பிளாஷ்பேக்குப்
போயிட்டு வர்றேன்”
“மதிக்கு நான் எதுவும்
சொல்ல வேண்டாம்.
அவன் புரிஞ்சு நடந்துக்குவான்.
ஆனா நீங்க ரெண்டு பேரும்
சும்மா இருக்க மாட்டீங்க.நல்லா
கேட்டுக்கங்க மயூ,முகி!நீங்க
மது வேலையைப் பத்தி
வெளியில யார் கிட்டயும்
பேசக் கூடாது.
அதே மாதிரி மது கிட்டயும்
அவ வேலையைப் பத்தி
எதுவும் பேசக் கூடாது.
கேட்கக் கூடாது.
ராதா கிட்டயும் பேசக்
கூடாது.மதுவா அவ
வேலையைப் பத்தி சொன்னா
மட்டும் கேட்டுக்கங்க.மதுவுக்கு
வேலையை விட்டுட்டோங்கிற
வருத்தம்,கோபம்.ராதாவுக்கு
பொண்ணு உயிருக்கு ஆபத்து
வந்துடுச்சேங்கிற கவலை,பயம்.
இந்த நேரத்தில போய் நீங்க
அங்க எதாவது பேசி
வைச்சுடாதீங்க.புரிஞ்சுதா?”
சாரதாவின் வார்த்தைகளை
நினைவு கூர்ந்து விட்டு,
அண்ணனின் முகத்தைப்
பார்த்தாள் மயூரி.
“புரிஞ்சுடுச்சு மதிணா.அம்மா
வேலை வேலைன்னு சொன்னது
டிடெக்டிவ் வேலையைப் பத்தி.
நாம ராதாம்மா பேச்சை நம்பி
பத்திரிக்கை வேலைன்னு
தப்பா நினைச்சுட்டோம்”
“ராதாம்மா மேல தப்பில்லை
மது.நாம முதல்முதலா மதுவைப்
பார்க்கப் போயிருந்தப்ப,அங்க
நம்ம குடும்பம் மட்டும் இல்லை
மயூ.மதுவோட அக்கம் பக்கத்து
வீட்டுக்காரங்களும் இருந்தாங்க.
அதான் ராதாம்மா மது
பத்திரிக்கையில வேலை
பார்த்ததை மட்டும் சொல்லி
இருக்காங்க”
“ஊர் ஊரா போனது போதும்.
சொந்த ஊருக்கே போயிடலாம்னு
முடிவு பண்ணி இருந்தப்ப தான்
மதுவுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு.
டாக்டர் மது நல்லா ரெஸ்ட்
எடுக்கணும்னு சொல்லிட்டார்.
அலைஞ்சு திரிஞ்சு பத்திரிக்கை
வேலை பார்த்தா உடம்பு
தேறாதுன்னு வேலையும்
வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்னு
சொல்லி கூப்பிட்டு வந்துட்டேன்.
பவியையும் இங்கயே வரச்
சொல்லி இருக்கேன்”ராதாவின்
பேச்சு நினைவில் வர,அண்ணன்
கூற்றை ஆமோதித்தாள் மயூரி.
“கரெக்ட் மதிணா.ராதாம்மா
மத்தவங்க முன்னாடி உண்மையை
சொல்லாம,தனியா நம்ம
அம்மாகிட்ட சொல்லி இருக்காங்க.
ஆனா இந்த மது பெவிகால்
போட்டு ஒட்டின வாயைத்
திறக்கவே இல்லை.நாமளும்
பாவம் இந்தப் பொண்ணு
மனசுக்குள்ள ஒரு பக்கம் வயலின்
வாசிச்சுட்டு இன்னொரு பக்கம்
ட்ரம்ஸ்ஸை அடிச்சு நொறுக்கிட்டு
இருக்குன்னு பரிதாபப் பட்டு,மது
மங்கி நார்மல் ஆகட்டும்னு
“நீ சென்னையில என்ன
பண்ணிட்டு இருந்தே மதுன்னு”
கேட்காம விட்டுட்டோம்”
“அம்மாவும்,ராதாம்மாவும்
மது நம்ம கிட்ட உண்மையை
சொல்லி இருப்பான்னு
நினைச்சிருப்பாங்க மயூ.நமக்கு இ
ப்ப தான் உண்மை தெரியும்னு
அவங்களுக்குத் தெரிய
வேண்டாம்.முகி கிட்ட
சொல்லி வை மயூ.
எதாவது உளறிடப் போறான்”
“சரிணா”
“அம்மா தினமும் மதுவைப்
பத்தி பேசுவாங்க.
ஆனா அவ வேலையைப்
பத்தி எதுவுமே பேசினதில்லை.
மது குணமானதுக்கு அப்புறம்
கூடப் பேசலை.மது வேலையைப்
பத்தின பேச்சையே
தவிர்த்திருக்காங்க மயூ”
“எஸ் பிரதர்.இந்த சாரு
டிடெக்டிவ்ங்கிற வார்த்தை
எங்களை காந்தமா இழுக்கும்.
மது கிட்டப் பேச சொல்லும்னு
சும்மா வேலை வேலைன்னு
சொல்லி எங்க வாயை ஈஸியா
ஆப் பண்ணி இருக்காங்க.சாரு
கண்டிப்பா சூப்பர் மாமியாரா
இருப்பாங்க மதிணா”
“ம்ஹூம்.மதுவுக்கு
அம்மாவா இருப்பாங்க”
“அட அட அட”
மதிவதனன் சிரிக்க,“ஆனாலும்
அம்மா எங்களை இவ்வளவு
ஓட்டை வாயா நினைச்சிருக்கக்
கூடாது மதிணா.மதுவுக்குப்
பிரச்சனை வர்ற மாதிரி
எல்லாம் நாங்க நடந்துக்க
மாட்டோம்”என்றாள் மயூரி சோக
பாவனையோடு.
“இல்லை மயூ.நீங்க மத்தவங்க
கிட்டப் பேச மாட்டீங்க.
விளையாட்டுத்தனமா...நிலைமை பு
ரியாம மது கிட்டப் போய்
எதாவது கேட்டுடுவீங்க.மது மேல
இருக்கிற அன்புல மதுவுக்கு
சப்போர்ட் பண்ணி ராதாம்மா
கிட்டப் பேசிடுவீங்கன்னு அம்மா
பயந்திருப்பாங்க”
“ஆஹா!ஆஹா!சாரு
என்னமா எங்களைப் புரிஞ்சு
வைச்சிருக்காங்க.முகி நான்
சொன்னதுமே மது வீட்டுக்குப்
போய் ராதாம்மாவை சமாதானப்
படுத்துவோம்னு சொன்னான்
பிரதர்.நான் தான் அண்ணன்
கிட்ட சொல்லிட்டுப் போவோம்னு
சொல்லி
அவனை நிறுத்தி வைச்சேன்”
“நான் பேசிக்கறேன்னு
முகி கிட்ட சொல்லு மயூ.இது நாம
பேசறதுக்கான சரியான நேரம்
இல்லை.பொறுமையா தான்
பேசணும்”
“இதோ இப்பவே போய் அந்தப்
பொடியனுக்கு புரிய வைக்கிறேன்
பிரதர்”
மயூரி சென்று விட,எழுந்து
அறைக்குள்ளேயே மெல்ல
நடந்தான் மதிவதனன்.
வசந்த் ரெஜீஸ்ஸைப் பற்றி
மயூவிடம் என்ன கூறியிருப்பான்?
நிச்சயம் ரெஜீஸ் உடனான
காதல் நாடகத்தைப் பற்றி
எதுவும் கூறியிருக்க
மாட்டான்.மதுவைப் பற்றி
யாரேனும் குறைவாக
நினைத்து விடுவார்களோ
என்ற பயம் வசந்த்திற்கு
நிறையவே இருக்கிறது.
மயூவிடம் கூட உண்மையைக்
கூற மாட்டான்.
மதிவதனன் கைபேசிக்கு
அலுவலகத்தில் இருந்து
அழைப்பு வர,அவன் கவனம்
வேலையில் திரும்பியது.
நீண்ட பல நிமிடங்களுக்குப்
பிறகு,“மதி... ராஜா...”என்ற
தாயின் பதட்டக் குரலில்,
பிறகு பேசுவதாகக் கூறி
இணைப்பைத் துண்டித்தான்
மதிவதனன்.
“என்னம்மா?என்னாச்சு?”
“வா ராஜா,ஹாஸ்பிடலுக்குப்
போகலாம்.கை ரொம்ப
வலிக்குதாப்பா”சாரதா மகன்
கையைத் தொட்டுப் பார்க்க.
“எனக்கு வலிக்கலைம்மா.
நான் நல்லா தான் இருக்கேன்”
“மயூ சொன்னாளேப்பா
.அண்ணன் பாவம் கை
வலிக்குதுன்னு சொல்லிட்டு
இருக்கான்னு...”
“அந்த வாலைப் பத்தி
உங்களுக்குத் தெரியாதாம்மா”
“தெரியலையே பிரதர்.நான்
முழுசா என் ரீல்லை சுத்தறதுக்குள்ள
விழுந்தடிச்சு ஓடி வந்திருக்காங்க
மதிணா”
“என்ன விளையாட்டு இது
மயூ?எதெதுல
விளையாடறதுன்னு இல்லையா”
“நான் என்ன செய்யறது
பிரதர்?என்னைப் பத்து
நிமிஷம் கூட உட்கார விடாமத்
தொல்லை பண்றாங்க
மதிணா.மதி என்ன பண்றான்னு
பாரு,வேலை செய்ய
வேண்டாம்னு சொல்லு,
மதிக்கு சாப்பிட எதாவது
வேணுமான்னு கேளு,கொஞ்ச
நேரம் தூங்க சொல்லு,அது
இதுன்னு...போதும் மதிணா.
இவங்க பையனை இவங்களே
கவனிச்சுக்கட்டும்.நான்
எதுக்கு நடுவுல?”
“எனக்கு வேலை இருந்தனால
உன்னைப் பார்க்க சொன்னேன்.
இதெல்லாம் ஒரு சிரமமா உனக்கு?”
“எனக்கே ரீல்லா?முகத்தில
ஏன் இவ்வளவு சோகம்னு
கேட்டு சரி பண்ணு மதிணா”
“அப்படி எல்லாம் ஒண்ணும்
இல்லை மயூ”
“பொய் சொல்லாதீங்க சாரு.
நான் போயிடறேன்.நீங்க உங்க
உத்தமப் புத்திரன் கிட்டப்
பேசி சமாதானம் ஆயிடுங்க.
உங்களோட சென்டிமென்ட்
சீன்னைப் பார்க்க,மயூவும்,
முகிலும் ஹால்ல காத்துக்கிட்டு
இருப்பாங்க.
பை பை,டாடா”
மயூரி ஓடி விட,தாயின் முகத்தை
யோசனையுடன் பார்த்தான்
மதிவதனன்.
மயூ சரியாகத்தான் சொல்கிறாள்.
அம்மா என் அறைக்கு வரவே
இல்லை.மயூவே தான் என்னை
கவனித்துக் கொண்டிருக்கிறாள்.
தாய் எப்போதிருந்து தன்
அறைக்கு வருவதில்லை என
யோசித்த மதிவதனனுக்குத்
தாயின் மனநிலை புரிந்தது.
“உட்காருங்கம்மா”தாயை
அமர வைத்துப் பேசத்
தொடங்கினான் மதிவதனன்.
“அம்மா,நான்...உங்களை
விட்டு,நம்ம குடும்பத்தை விட்டு,
ரொம்ப தூரம் போகணும்னு
நினைச்சது மதுவைக் காப்பாத்த
மட்டும் தான்மா.உடனே
கல்யாண ஏற்பாடு பண்ண
சொன்னது கூட மதுக்காகத்
தான்மா”
“என்ன சொல்றே மதி?
மதுவுக்கு என்ன?”சாரதா
பதட்டம் கொள்ள.
“நீங்க டென்சன்
ஆகாதீங்கம்மா.மதுவுக்கு
எந்தப் பிரச்சனையும்
இல்லை.நான் தான் தப்பா
புரிஞ்சுக்கிட்டு,மது கிட்ட
எதுவும் கேட்காம நானே
முடிவெடுத்து...உங்களை
வேதனைப் படுத்திட்டேன்”
“நீ அப்படி எல்லாம்
அவசரப்பட்டு முடிவெடுக்கிறவன்
இல்லையே மதி”
“நான் கண்ணால பார்த்தது,
மது மேல இருக்கிற அன்பு...
அவளுக்கு எதாவது
ஆயிடுமோங்கிற பயம்...
இதெல்லாம் என்னை யோசிக்க
விடலைன்னு நினைக்கிறேன்மா”
“நீ பயப்படற அளவுக்கு
என்ன நடந்துச்சுப்பா”
அம்மாவிடம் எவ்வாறு சொல்வது
எதையெல்லாம் சொல்வது?
“சொல்லுப்பா.ராதா
பயப்பட்ட மாதிரி...
மதுவைத் தேடி யாராவது
வந்துட்டாங்களா?எதாவது
பிரச்சனை பண்றாங்களா?
அப்பாவுக்கு போலீஸ்ல
பெரிய அதிகாரிகளைத்
தெரியும்.பேச சொல்லலாம்”
“அம்மா...மதுவைத் தேடி
யார் வருவா?நீங்க என்ன
சொல்றீங்கம்மா”
“அதான் ராஜா,மது எதோ
கொலையைப் பத்தி
விசாரிக்கப் போன இடத்தில
அடி பட்டு,
ஆண்டவன் அருளால
மீண்டு வந்தாளே.அந்தக்
கொலையில சம்மந்தப்பட்ட
ஆள் கூட ஏதோ கட்சியில
இருக்கிறவன்”
நாங்கள் நினைத்தது
போலவே அம்மாவிற்கு
உண்மை தெரிந்திருக்கிறது.
ராதாம்மாவும்,
அம்மாவும் நெருங்கிய
தோழிகள் ஆயிற்றே!
அவர்களுக்குள் எந்த
ரகசியமும் இருக்காது.
ஆக மொத்தத்தில் மது
டிடெக்டிவ் என்பது எனக்கும்,
மயூ,முகிக்கும் தான்
தெரியவில்லை.
எங்களுக்கு உண்மை
தெரியாது என்று
அம்மாவிற்கும் தெரியாது,
அத்தைக்கும் தெரிந்திருக்காது.
மது எங்களிடம் சொல்லி
இருப்பாள் என்று
நினைத்திருப்பார்கள்.
ஆனால் மது டிடெக்டிவ்
வேலையைப் பற்றி ஒரு
வார்த்தை கூடப் பேசியதில்லை.
வேலையை விட்டு விட்டக்
கோபமும்,வருத்தமும் அவளுக்கு!
“மது இப்ப குணமாயிட்டா
ராஜா.நீ அதையெல்லாம்
நினைக்காதேப்பா”மகன்
வருந்துவதாக நினைத்துப்
பேசினார் சாரதா.
“இல்லைம்மா.நான்
அதையெல்லாம் மறந்துட்டேன்”
“ராதா பாவம்பா.அந்தக்
கொலைகாரன் சுலபமா
வெளியில வந்துடுவான் சாரு.
மதுவைத் தேடி
வந்துடுவானோன்னு
பயமாயிருக்குன்னு ரொம்பக்
கவலைப் பட்டா.நம்ம மதுவுக்கு
எதுவும் ஆகாதுன்னு அவளுக்குப்
புரிய வைக்க முயற்சி
பண்ணேன்.
அவ பயம் குறையவே இல்லை”
“இது வேற பிரச்சனைம்மா.
மதுவோட பாஸ்சுக்குத் தெரிஞ்ச
பொண்ணு,ஒரு சிக்கல்ல
மாட்டிக்கிட்டா.அவளோட சிடி
தப்பான ஆள் கிட்ட இருந்திருக்கு.
அந்த ஆள் இங்க எதோ
ஏரியாவுல பதுங்கி இருக்கிறதா
தகவல் கிடைச்சிருக்கு.மதுவும்,
வசந்த்தும் அந்த சிடியை எடுக்கப்
போனப்ப நான் யதேச்சையா
அவங்களைப் பார்த்தேன்மா.
அங்க நடந்த சண்டையில
அந்த ஆள் மயங்கிக்
கிடக்கிறது தெரியாம,நான்
அவன் செத்துட்டான்னு
நினைச்சு...மது ஜெயிலுக்குப்
போகக் கூடாது...அவளைக்
காப்பாத்தணும்னு...”
“புரியுதுப்பா.என்ன ராஜா
இது?மது கிட்ட ஒரு வார்த்தை
கேட்டிருந்தா உண்மை
தெரிஞ்சிருக்கும்.இப்படி
நீயே உன்னைக் கஷ்டப்
படுத்திக் கிட்டயே மதி”
“நான் வேதனைப் பட்டா
ஒண்ணும் இல்லைம்மா.
உங்களை வேதனைப்
படுத்திட்டனே”
“பரவாயில்லைப்பா.மதுவுக்கு
எந்தப் பிரச்சனையும் இல்லை.
நீயும் எங்களை விட்டுப் போக
மாட்டே.இது போதும்பா எனக்கு”
“இல்லைம்மா.நான் உங்க
மனசை ரொம்பவே
நோகடிச்சிருக்கேன்.என்னை
மன்னிச்சுடுங்கம்மா”
“நீ மதுவைக் காப்பாத்த
நினைச்சிருக்கே.நானா
இருந்தாலும் உன்னை மாதிரி
தான் யோசிச்சிருப்பேன்.
உண்மை தெரியாம... நீ
எங்களை விட்டுப் போகணும்னு
நினைச்சுட்டியே...இந்த
வீட்டோட சந்தோஷத்தை,
இந்த அம்மாவை
நினைக்கலையேன்னு....மனசுக்கு
ரொம்ப கஷ்டமா இருந்துச்சு
மதி.அதான் நான் மயூவை
அனுப்பி உன்னை
கவனிச்சுக்கச் சொன்னேன்.
என் மகனை சரியா
புரிஞ்சுக்காம நடந்துக்
கிட்ட நான் தான் ம...”
“அம்மா ப்ளீஸ்...நாம
இந்த விஷயத்தை இதோட
விட்டுடலாம்”
“இல்லை ராஜா.நான்
யோசிச்சிருக்கணும்.என்
பையன் இந்தக் குடும்பத்து
மேல எவ்வளவு அன்பு
வைச்சிருக்கான்,மது
ஆசைக்காக எல்லாம் இப்படி
ஒரு முடிவு எடுக்க மாட்டான்.
மதுவும் அப்படி ஆசைப்
படற பொண்ணில்லை.
எங்களைப் பிரிஞ்சு
அவனாலயும் இருக்க
முடியாதே,அவனுக்கு
எவ்வளவு கஷ்டமாயிருக்கும்னு
எல்லாம் நான் நினைச்சுப்
பார்த்திருக்கணும்.உன் கிட்டப்
பேசி இருக்கணும்.அதை
விட்டுட்டு...”
“அம்மா,நான் சொல்றதைக்
கேளுங்கம்மா.
நீங்க இப்படி உங்களைக்
குறை சொல்லாதீங்க.
தப்பு என் மேல தான்.நான்
தான் உங்க மனசை
நோகடிச்சிருக்கேன்”
மகன் வேதனையைக்
காணச் சகியாமல்,
“சரிப்பா.நாம இனிமேல்
இதைப் பத்தி பேச
வேண்டாம்.கீழ வா,எல்லாரும்
சேர்ந்து டிபன் சாப்பிடலாம்”
என்று எழுந்தார் சாரதா.
“தேங்க்ஸ்மா”என்றான்
தாய் மனது புரிந்தவனாய்
மதிவதனனும்.
மதிவதனன் கையைத்
தொட்டுப் பார்த்து,
“நிஜமா வலிக்கலை தானே
மதி”என வினவினார் சாரதா.
“இல்லைம்மா”
“சரி.வா போகலாம்”
“அம்மா...”
“என்ன ராஜா”
“மது ஆபத்தான வேலை
செய்யறது...உங்களுக்கு
சம்மதமாம்மா”
“எனக்கும் கொஞ்சம்
பயமிருக்குபா.
இருந்தாலும்,நம்ம மது
விருப்பத்தையும்
பார்க்கணுமில்லே?”
“அப்பா என்ன சொல்றாரும்மா”
“பெண்கள் அதிகமில்லாத
துறையில நம்ம மது துணிச்சலா
வேலை பார்க்கறான்னு சொல்லி
பெருமையா தான் பேசினாருப்பா.
ராதா கிட்டப் பேசி பயத்தைப்
போக்கணும்னு சொல்லிட்டு
இருக்காருப்பா”
எனக்கும் பெருமையாகத்
தான் இருக்கிறது.ஆனால்,இந்த
அச்சத்தை என்ன செய்வது?
மதுரா மீது மதிவதனன்
கொண்ட பேரன்பு,
அவனை அச்சத்தின் பிடியிலேயே
வைத்திருந்தது.
“ராஜா”
“அம்மா...மதுவோட
அம்மாவுக்கு மதுவும்,
வசந்த்தும் சிடியைத் தேடிப்
போனது தெரிய வேண்டாம்மா.
பயந்துக்குவாங்க”
“சரிப்பா.நான் எதுவும்
சொல்ல மாட்டேன்”
“தேங்க்ஸ்மா.நீங்க போங்க.
நான் நம்ம மேனேஜருக்குப்
போன் பண்ணிட்டு வந்துடறேன்”
“சரி ராஜா”சாரதாவின்
முகமலர்ச்சி மீண்டிருக்க,
புன்னகையுடன் அறையில்
இருந்து வெளியேறினார்.
“சொன்னா கேளு மயூ.நான்
இங்க இனியும் இருக்க
முடியாது.இப்ப இருந்ததே
அதிகம்.புரிஞ்சுக்கோடா.நான்
இங்க தங்கறது சரியில்லை.
நல்லா இருக்காது.என் வேலை
முடிஞ்சுது.அடுத்த வேலை
வந்துடுச்சு.நான் போகணும்.
நான் போயிட்டு மது,மதியோட
நிச்சயதார்த்தத்துக்கு வர்றேன்.
என் செல்லமில்லே?அழகா
ஸ்மைல் பண்ணிட்டே பை
சொல்லுவியாம்”
மதிவதனன் அறையை
அடுத்திருந்த வசந்தன்
அறையைக் கடந்த
சாரதாவின் கால்கள்,
மயூரியின் பெயரைக்
கேட்டு சில விநாடிகள்
தாமதித்து விட்டுப் பின்
மெல்ல நகர்ந்தது.
தித்திக்கும்