கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

திருப்பாவை 1

SudhaSri

Moderator
Staff member
திருப்பாவை 1


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.


மார்கழி மாதம் பாவை நோன்பு இருக்கும் பெண்களை எழுப்பும் போது கண்ணனின் அழகை பாடுகின்றனர் கோபியர்கள். மார்கழி மாதம் பிறந்து விட்டது முழு நிலவு ஒளிவீசுகிறது. செல்ல வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! எழுந்திருங்கள். இன்று நாம் அதிகாலையில் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற வீரம் நிறைந்த மகன். அவனுக்கு கரிய மேகத்தைப்போன்ற மேனி அதிலேயே அவன் கருணாசாகரனாக காட்சி தருகிறான். தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவன். அவனுக்கு கதிரவனைப் போல பிரகாசமாகவும், அதே நேரத்தில் குளிர் மதிபோல தண்மையான கருணை ஒளி நிரம்பிய முகம்!. அந்த நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் ஆண்டாள்.
 
Top