கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தீராநதி 26

Jeyalakshmi Karthik

Moderator
Staff member
காலநிலை மாற்றம் காரணமாக 2100 வாக்கில் பூமியின் பவளப்பாறை வாழ்விடங்கள் அனைத்தையும் அழிக்கக்கூடும் என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது. பூமி வெப்பமயமாதல், அமில நீர் மற்றும் மாசுபாடு காரணமாக தற்போதுள்ள அனைத்து பவளப்பாறைகளிலும் சுமார் 70-90% மறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஹவாய் மனோவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சி.என்.என் செய்தி

- நதியாவின் குறிப்பேட்டிலிருந்து

தேடல் 26

எப்பொழுதும் போலவே தன் கம்பீர நடையோடு தீரேந்திரன் வர, அதை கண் நிறையக் கண்டு உள்ளம் பூரித்து நின்றாள் நதியா.

அவள் அவனை நோக்குவதை கண்டுகொண்டவன் உதடுகளில் மெல்லிய முறுவல் வந்து பின் அது அழகிய புன்னகையாக மலர்ந்தது.

இடது கரம் வேட்டியை பற்றியிருக்க, வலது கரம் தன் அடர்ந்த மீசையை நீவியது. அதில் தான் எத்தனை பெருமிதம்!

தன் மகள் தன்னை உற்று நோக்குவதில் தந்தைக்குத் தான் எத்தனை மகிழ்ச்சி! ஆனால் எதுவுமே வெளிப்படையாக இல்லாது போனது தான் துர்பாக்கியம்.

அவள் பின் இருக்கையின் கதவில் சாய்ந்து நின்ற அழகில் அவனும் லயிக்கவே செய்தான். அதிலும் அவளின் இளநீல ஜீன்ஸுக்கு இளம் பிங்க் வண்ணத்தில் அங்கும் இங்குமாக சிதறிய இளநீலப் பூக்கள் கொண்ட பிளோரல் டாப் முட்டிக்கு சற்று மேல் வரை பளிச்சென்று நீண்டிருந்தது. அவளின் இரண்டடி கூந்தல் போனி டெயிலுக்குள் அடங்கி இருந்தாலும் கீழ் பகுதி அவள் சொல் பேச்சுக் கேளாமல் இரு தோள்களிலும் அவளை அணைத்திருந்தது.

மகளை உச்சி முதல் பாதம் வரை தெவிட்டாமல் ரசித்து அவளருகில் வந்தவன், "ஏன் கண்ணம்மா வெளில நிக்கிற, வா வண்டில ஏறு." என்று கதவைத் திறக்க, ஓட்டுநர் இருக்கையை வருணேஷ் ஆக்கிரமிப்பு செய்திருந்தான்.

"என்ன கண்ணா நீ ட்ரைவ் பண்றியா? " என்று கேட்டு முன் இருக்கையில் தீரன் அமர,

மெல்லிய புன்னகையை உதிர்த்தவன், "நீங்க உங்க கண்ணம்மா கிட்ட பேசிக்கிட்டே வாங்க மாமா. உங்க கண்ணன் நான் சாரதியா இருக்கேன்" என்று சொல்லி கண்ணாடி வழியே அவன் பொன்வண்டின் முகம் நோக்கினான்.

காய்ந்த எண்ணெயைப் போல புகைந்து கொண்டிருந்தவள், அவன் வார்த்தைகள் கேட்டு, "உன்னை டிரைவரா ஒன்னும் வர சொல்லல. எனக்கு தீரான்னா இஷ்டம். தீராவுக்கு நீன்னா இஷ்டம். உன்னை விட்டுட்டு வெளில போனா தீரா மனசு வருத்தப்படுமேன்னு தான் வர சொன்னேன். சும்மா உன்னை வேலை வாங்க கூப்பிட்டது போல ஸீன் போடாதே." என்று கடுக்காய் வெடித்தாள்.

அவள் பேச்சைக் கேட்டு தீரேந்திரன் சிரித்தானென்றால் வருணுக்கு கண்ணீரே வந்து விட்டது.

"உங்க அன்பு எனக்கு புரியும். நீங்க தனியா போகணும்ன்னா போங்க. நான் பீல் பண்ண மாட்டேன்" என்று கதவைத் திறக்க முயன்றான்.

"ஏய் லூசா டா நீ? நான் என்ன சொல்றேன் இவன் என்ன பேசுறான்? தீரா அவனை வண்டி எடுக்க சொல்லுங்க." என்று அவனிடம் சண்டையிட்டு, தீராவிடம் சமாதானத்துக்கு வந்தாள்.

இருவரின் பேச்சையும் கேட்ட தீரேந்திரன் சிரிப்புடன், மருமகனின் தோளில் தட்டி, "வரு கண்ணா வண்டி எடுங்க. நான் அப்பறமா உன் கிட்ட சிலதெல்லாம் சொல்லணும்." என்றதும், வருண் சரியென்று தலையசைத்தான்.

அதை கேட்ட நதியா, "தீரா, இங்க எம்.ஏ.கே மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் போகணும்." என்று மெல்லிய குரலில் கூறியதும் வீட்டு வாயிலை கடந்திருந்த வாகனம், சடன் பிரேக் போட்டு நின்றது.

இருவரும் பயத்துடன் "அங்க எதுக்கு?" என்று ஒரே குரலில் வினவ,

"எனக்கு ஒன்னும் இல்ல. அங்க போங்க சொல்றேன்." என்று பொதுவாக பதில் தந்தவள், "டேய் வண்டியை எடு டா" என்று வருணிடம் கத்தினாள்.

"சும்மா உன் முட்டை கண்ணை உருட்டாத. ஆளைப்பாரு. ஒரு நிமிஷத்துல உசுரே போயிடுச்சு. என்னவா இருந்தாலும் விஷயத்தை தெளிவா சொல்லணும்ன்னு மண்டையில் எதாவது இருக்கா பாரு. லூசு" என்று முணுமுணுக்க,

"என்ன டா முணுமுணுக்குற? தைரியம் இருந்தா சத்தமா சொல்லு டா" என்று அவனிடம் எகிறினாள்.

மியாமியில் தான் பேசினாலும் பதில் பேசாது போனவள், இப்போது பேசாமல் போனாலும் இழுத்து வைத்து சண்டை பிடிப்பது அவனுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியென்றாலும் மறுபக்கம் ஒரே மகிழ்ச்சி தான். தன் பொன்வண்டின் பேச்சைக் கேட்க அவனுக்கு கசக்குமா என்ன?

"இப்போ எதுக்கு கண்ணம்மா ஹாஸ்பிடலுக்கு?" என்று கவலையோடு ஒலித்த தீரேந்திரன் குரலில் சொல்லிவிட அவள் வாய்வரை விஷயம் வந்தாலும் மனம் சற்று பொறு என்றது.

வெளியே வேடிக்கை பார்த்தபடி, "உங்களுக்கு என் அம்மா போட்டோ காட்டினேனே நினைவு இருக்கா தீரா?" என்று கேட்டு ஓரக்கண்ணால் தந்தையை நோக்கினாள்.

அவனோ சட்டென்று குளம் கட்டிவிட்ட கண்ணை மறைக்க முகத்தை வெளியே திருப்பிக்கொண்டான்.

"ம்ம் இருக்கு நதிம்மா.." என்று பதில் வந்தாலும் அதில் பிசுறு தட்டிய அவன் குரலை நதியா கண்டுகொண்டாள்.

"எனக்கு அஞ்சு, ஆறு வயசு இருக்கும் தீரா, அப்போ ஸ்கூல்ல எல்லாரும் பேரெண்ட்ஸ் கூட வருவாங்க. அப்பான்னு ஒருத்தர் சிலருக்கு இருக்க மாட்டாரு. அதுனால நானும் பெருசா என் அம்மா கிட்ட அவரை பத்திக் கேட்டதில்ல. ஆனா சிலர் அவங்க அப்பா கூட போகும் போது எனக்கும் உள்ளே ஏக்கமா இருக்கும். மார்ட்டின் கூட அம்மா இறந்த பின்னாடி அடிக்கடி கேட்பார். உன் அப்பாவை பார்க்க உனக்கு ஆசை இல்லையான்னு. இருக்கும். இல்லாம போகுமா? ஆனா யாருன்னே தெரியாத ஒருத்தரை நான் எங்கன்னு தேடுவேன்.

பாதுகாப்பு குறைவா நான் நினைக்கும்போதெல்லாம் அம்மாவோட போட்டோ தான் என் ஆறுதல், அப்படி ஒருநாள் அவங்க போட்டோ பார்க்க பெட்டியை எடுத்தப்போ தான் ஒரு லெட்டர் கிடைச்சுது. அப்பாவை பத்தி." என்று நிறுத்திவிட்டு தீராவின் முகத்தை ஆராய்ந்தாள்.

அவனோ தெருவோரம் வாழ்பவரின் உலகம் அறியக் கிளம்பியவன் போல முகத்தைத் திருப்பவே இல்லை. ஆனால் ரியர் வியூ மிரரில் தெரியும் அவன் கண்ணீர் தாங்கிய விழிகளைக் கண்டு உள்ளம் வலித்தாலும், தன் தந்தையின் மனத்தடையை உடைக்க அவளுக்கும் வேறு வழி இல்லையே.

"அப்பா இந்தியாவுல இருக்கிறதா அம்மா அதுல சொல்லி இருக்காங்க." என்று மீண்டும் நிறுத்தினாள்.

இப்போது வருண் வேகமாக, "உங்க அப்பாவை தேடணுமா? அதுக்கு தான் வந்தியா? இல்ல அவர் ஹாஸ்பிடலில் இருக்காரா? அதான் அங்க போக சொன்னியா?" என்று கேள்விக்கனைகளைத் தொடுக்க,

கடுப்பானவள், "டேய் நீ ஒழுங்கா ரோட்டைப் பார்த்து ஓட்டு டா" என்று கூறி, "தீரா" என்றழைத்தாள்.

"ம்ம்" என்று மட்டுமே பதில் வந்தது. "என் அப்பாவை பார்க்க போகலாமா?" என்று கேட்டதும் அவன் கண்களில் திரண்ட கண்ணீர் கன்னத்தில் இறங்கியது.

"இந்தா நீ சொன்ன இடம் வந்தாச்சு. போயிட்டு வா தாயே" என்று தன் பொன்வண்டுப் பெண்ணை கும்பிடு போட்டு அனுப்பி வைத்தான் வருணேஷ்.

தீரேந்திரன் மனதில் குழப்பம் இருந்தாலும், அவள் தாய் அவளுக்கு என்ன கூறினாள்? யாரை தந்தையென்றாள்? இங்கு வந்த காரணம் என்ன? என்று புரியாமல் அவளிடம் வாய் விட்டுக் கேட்கவும் முடியாமல் நிற்க,

"உள்ள போகலாம் வாங்க"என்று அவன் கைப்பற்றியதும்,

"நாங்க எதுக்கு? நீ போய் உன் அப்பாவை பாரு" என்றதும், தீரேந்திரன் நிறுத்து எனும் விதமாக கைகாட்ட, வருண் அமைதியானான்.

தொண்டையை செருமிய தீரேந்திரன், "கண்ணம்மா இங்க எதுக்கு?" என்று கேட்டதும், இழுத்துக்கொண்டு ரிசெப்ஷன் வந்தவள், மருத்துவர் பெயர் சொல்லி அப்பாயின்மெண்ட் தகவல் சொன்னாள்.

"மேடம் நீங்க அப்பாயின்மெண்ட் எடுத்திருக்கும் தேதிக்கு இன்னும் 10 நாள் டயம் இருக்கு. இப்போ பார்க்க முடியாது" என்றதும்,

"ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கெஞ்சினாள் நதியா.

அவள் அப்படி பேசி பார்த்திராத வருண் வாய் பிளந்து ரசித்திருக்க,

தன் மகள் கெஞ்சுவது பொறுக்காதவன், "நான் அப்பாயின்மெண்ட் வாங்கி தர்றேன் வா கண்ணம்மா. ஏன் கெஞ்சுற?" என்று கண்டிக்கும் குரலில் கேட்டதும் முகம் சுருங்கியவள்,

"நமக்கு தேவை இருக்கும் போது கெஞ்சுறதுல தப்பில்ல தீரா. இதுக்கே இப்படின்னா என் அப்பா யாருன்னு தெரிஞ்ச பின்னாடி, அவர் கிட்ட என்னை ஏத்துக்க சொல்லி கெஞ்சனுமே. அதுக்கு என்னங்கற?" என்று கண் சிமிட்ட,

"இப்போ எதுக்கு இங்க டாக்டரை பார்க்கணும்?" என்று கேள்வியை திசை திருப்பினான்.

"எனக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கணும் தீரா." என்றதும் மனதில் பலமாக அடிவாங்கினான் தீரேந்திரன்.

"என்ன கண்ணம்மா விளையாடுற? எதுக்கு ? யார் எடுக்க சொன்னது?" என்று படபடத்தான்.

"கூல் தீரா கூல். என் அம்மா மாசமா இருந்த விஷயமே என் அப்பாவுக்கு தெரியாதாம். அம்மா கோவப்பட்டு தன் அடையாளத்தை மறைச்சு அவர் கண்ணுல படாம வாழ்ந்துட்டாங்க. இப்போ நான் போய் அவர் பொண்ணுன்னு சொன்னா அவர் நம்புவாரா?" என்று புருவத்தைத் தூக்கிக் கேட்டதும்,

"ஏம்மா நம்பாம போகப் போறாரு. நீ அவர் ரத்தம் இல்லையா கண்டிப்பா நீ அவர் பொண்ணுன்னு சொன்னதும் உன்னை கட்டி பிடிச்சு தன் மகளா ஏத்துப்பார்." என்றான் தட்டுத்தடுமாறி.

"அவர் சரி, அவரோட குடும்பம். திடீர்னு நான் போனா அவங்க அதை நம்பணுமே" என்று கைகட்டி கேட்டபடி வாயிலுக்கு வர,

"அதெல்லாம் நம்பாம எங்க போக போறாங்க தியா? என்ன இப்படி பேசுற? டி.என்.ஏ டெஸ்டெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்" என்று வருணுக்கு கோபப்பட,

"சரி சரி கத்தாத டா. வண்டியை பீச்சுக்கு விடு" என்று அவள் முன்னிருக்கையை ஆக்கிரமித்தாள்.

தீரன் மனதில் பெரும் போராட்டம் எழுந்தது. 'மகள் தெரிந்து தான் பேசுகிறாளா? உத்ரா அவளிடம் தன்னை தந்தை என்று சொல்லவில்லையா? ஏன் நதியா தன்னிடம் தந்தையை பார்க்க போகலாமா என்று கேட்கிறாள்' என்று புரியாமல் தலையில் பல வண்டுகள் குடைய பின் இருக்கையில் அமர்ந்து தலையைப் பின்னே சாய்த்துக்கொண்டான்.

தலை வலி விண் விணென்று தெறித்தது. அவளிடம் கேட்டுவிட நா எழுந்தாலும், உத்ராவின் கோபம் மகளுக்கும் இருந்தால், அவள் தன்னை ஏற்காமல் போனால் என்று பைத்தியக்கரத்தனமாக யோசனை செய்தது. என்ன யோசித்தும் ஒன்றும் புரியவில்லை. அவளிடம் நீ என் மகள் என்று கூறிட தவித்த இதயத்தை முயன்று அடக்கி, அவளே அப்பா என்று அழைக்காமல் உன்னை வெளிப்படுத்தினால் இருக்கும் நட்பும் அறுந்துவிட்டால் என்ன செய்வது என்று பயம் சூழ்ந்தது.

கண்களை இறுக மூடித்திறந்தான். கார் எலியாட்ஸ் பீச்சில் மொட்டை வெயிலில் சென்று நின்றது.

ஆனால் வெயிலுக்கு சம்மந்தமே இல்லாமல் கடலின் குளுமையான காற்று தேகத்தைத் தீண்டிச் சென்றது.

மூவரும் இறங்கி நடக்க, தீரேந்திரன் வேட்டி காத்துக்கு படபடத்தது. எடுத்து மடித்துக் கட்டிக்கொண்டான். அதை கண்ணுற்ற அவள் விழிகள் அழகாய் விரிந்தது.

"தீரா உனக்கு எத்தனை வயசு?" என்று கேட்டதும், "முப்பது" என்று வேகமாக சொன்னான் வருணேஷ்.

"டேய் தடியா உன்னை கேட்டேனா டா?" என்று அவனை ஒதுக்கியவள்,

"நீ சொல்லு தீரா" என்று வலது கரத்தைப் தோளோடு பற்றி ஊஞ்சலாய் தொங்கினாள்.

"நாற்பது ஆரம்பிச்சாச்சு டா" என்று சிரித்தான்.

"நீ ஏன் கல்யாணம் பண்ணிக்கல?" என்றதும்,

"மாமா இவளுக்கு தெரியாதா?" என்று தன் மாமா மனதுக்கு நெருக்கமானவர்களிடம் மறைக்க மாட்டாரே என்ற சந்தேகத்தில் கேட்டான்.

"ஓ உனக்கும் தெரியுமா? வசதியா போச்சு". என்று சொல்லிவிட்ட நதியா தொடர்ந்து,

"நீ ஏன் வேற கல்யாணம் பண்ணிக்கல? "

"அவளை மறக்க முடியல." என்று மொட்டையாக பதில் வந்தது.

"ஒருவேளை உனக்கப்பறம் அவங்களுக்கு ஒரு கல்யாணம் நடந்து குழந்தை இருந்தா?" என்று தூண்டில் போட

மெல்லிய எரிச்சல் வந்தது தீரேந்திரனுக்கு.

"அவ அப்படி கிடையாது. " என்று முடித்தவன், கடலலை காலில் படும் தொலைவில் கைகட்டி நின்று கொண்டான்.

"ஒருவேளை அவங்களுக்கும் உனக்கும் ஒரு குழந்தை இருந்திருந்தா.." என்று கேட்டு அவன் முகம் பார்க்க, அதில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்ததும்,

"இருந்திருந்தா.. இப்போ என்ன வயசு இருக்கும் தீரா?" என்று கேட்டவள், அலையோடு முன்னும் பின்னும் ஓடி விளையாடினாள்.

வருணேஷ் அவள் விளையாடுவதை ரசித்தானே அன்றி அவள் சொல்வதில் அவன் மனம் செல்லவில்லை.

இறுகிய குரலில் தீரேந்திரன், "பதினாறு வயசு இருக்கும்" என்று சொல்லிவிட்டு கட்டியிருந்த தன் கைகளுக்குள் முடிந்தவரை தன் உணர்வுகளை அடக்கினான்.

"ஏன் தீரா ஒருவேளை உன் குழந்தை வளர்ந்து உன் கண்ணு முன்னாடி வந்து நின்னா என்ன பண்ணுவ?" என்று கேட்கும்போதே உடையத்துவங்கிய குரலை இழுத்துப்பிடித்தாள்.

இப்போது தான் பேச்சு போகும் பாதையை உணர்ந்த வருண், "என்ன சொல்லிட்டு இருக்க நீ?" என்றதும்

கை நீட்டி அவனைத் தடுத்தவள், "சொல்லு தீரா உன் முன்னாடி உன் வாரிசு வந்து நின்னா நீ என்ன பண்ணுவ?" என்று அழுத்தமாகக் கேட்டாள்.

"இது என்னம்மா கேள்வி சந்தோசத்துல பூரிச்சு போயிடுவேன். அவளை வாரி அணைச்சு, என் பொண்ணு என் பொண்ணுன்னு ஊர் பூரா பெருமையா சொல்லுவேன். தவற விட்ட பதினாறு வருஷத்தையும் எப்படியெல்லாம் ஈடு செய்ய முடியுமோ செய்யப் பார்ப்பேன்." என்று உணர்ச்சி வசப்பட்டு கண்ணீரோடு பேசும் தீரேந்திரனை ஆராய்ச்சியாக பார்த்தான் வருணேஷ். 'அவள் வாரிசு என்கிறாள். இவர் பொண்ணு என்று சொல்கிறார். என்ன நடக்கிறது இங்கே?' என்று கேள்வியெழுப்பிய மனதிடம், பொறு பொறு என்று கூறி கவனிக்கலானான்.

"அப்போ.. அப்போ நீ அதை உன் குழந்தைன்னு நம்புவியா?" என்று கேட்கும்போது விட்டால் அழுதுவிடுபவள் போலக் கேட்க,

"இதுல என்ன சந்தேகம்?" என்று தீரேந்திரன் நெற்றி சுருக்கும் போதே,

"அப்பறம் ஏன் பா நான் உன் பொண்ணுன்னு தெரிஞ்சும் என்கிட்ட சொல்லாம இருந்த? ஏன் என்னை கட்டிப்பிடிக்கல, ஏன் ஊர் பூரா நான் தான் உன் பொண்ணுன்னு சொல்லல.. சொல்லுப்பா.. சொல்லுப்பா.." என்று கதறியபடி தீரேந்திரனை கழுத்தோடு கட்டிக்கொண்டு அவள் அழ,

பதில் சொல்லக்கூட முடியாத அளவுக்கு தன் மகள் தன் கரம் சேர்ந்த மகிழ்வில் ஸ்தம்பித்து நின்றான் தீரேந்திரன்.

"சொல்லு தீரா. என்னை பிடிக்கலயா? இல்ல நான் உன் பொண்ணா இருக்க மாட்டேன்னு நெனச்சியா? உன் மனைவியோட குழந்தைன்னு நெனச்சு தான் அன்பு காட்டினியா? எனக்குள்ள ஆயிரம் கேள்வி இருக்கு தீரா.. பேசு.. ப்ளீஸ் பேசு தீரா." என்று அவள் கதறிக்கொண்டே இருக்க, கால்களில் அலை வந்து தீண்டியதும் தான் சுய உணர்வே பெற்றவன்,

"கண்ணம்மா.. நதிம்மா" என்று அவள் கன்னம், நெற்றி என்று முகமெல்லாம் முத்தமிட்டான். அவளைத் தூக்கி சுற்றியவன், "என் பொண்ணு எனக்கு கிடைச்சுட்டா.. என் பொண்ணு என்னைத் தேடி வந்துட்டா" என்று அவளை இறுக அணைக்க, இருவரும் தங்கள் உறவு முன்னிலைப்படுத்தி ஆரத் தழுவிக் கொண்டனர்.

"அப்பா" என்று அவளும் "கண்ணம்மா" என்று அவனும் அரற்றியபடி அணைத்து நிற்க, கடலை சேரும் நதி போல அவன் கரம் சேர்ந்த மகளை உச்சி முகர்ந்து அவள் ஸ்பரிசத்தில் அவன் தொலைத்த அவளின் குழந்தை உருவத்தை மனதில் நினைத்து பெருமூச்சொறிந்தான்.

இருவரையும் விழி அகலாது கண்ட வருண், அவர்கள் சற்று ஆசுவாசம் ஆனதும்,

"மாமா, தியா" என்று இருவரையும் சேர்த்தணைத்தான்.

"மாமா" என்று அவன் கண்ணீர் விட, "என் அப்பா போடா" என்று சலுகையாக அவன் வலது தோளில் சாய்ந்து கொண்டாள்.

முகம் சுருங்கி அவன் நகரும் வேளை, அவன் கரம் பற்றி இடது தோளைக் காட்டிக் கண் சிமிட்டினாள்.

"எப்பவும் நீ என் அப்பாவுக்கு செல்லம் தான் டா. நான் வந்தா அது மாறிடாது", என்று சிரித்தாள்.

அவன் "தேங்க்ஸ் தியா" என்று கூற, அவன் விளிப்பைக் கண்டு திகைத்தாள்.

தீரேந்திரன் கண்கள் மூடி தன் ஆருயிர் மகளையும், உள்ளம் கவர் மருமகனையும் அணைத்து நின்றான். அவன் உலகம் அந்த நொடியில் அப்படியே உறைந்து நின்றது.

நதி பாயும்...
 
Top