கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தீராநதி 27

Jeyalakshmi Karthik

Moderator
Staff member
ஃப்ளவுண்டர்(Flaunder) என்று அழைக்கப்படும் தட்டை மீன் இனத்தைச் சேர்ந்தது. மிதமான சுவையோடு இருக்கும் இவ்வகை மீன்கள் உப்புநீர் வகையை சேரும். அதாவது கடல் வாழ் மீனினம். எல்லா பிளாட்ஃபிஷையும் போலவே, ஃப்ளவுண்டருக்கும் தலையின் ஒரு பக்கத்தில் இரு கண்களும் உள்ளன.

- தீராவின் தகவல் பலகையில்

தேடல் 27

தன் கால்களை அலைகள் தழுவ, தன் அன்பின் வடிவானவர்களை தீரேந்திரன் தழுவிக்கொண்டு நின்றான்.

வானே அவன் வசப்பட்ட மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது. அந்த மோன நிலையை கலைத்து தன் சந்தேகக் கனைகளைத் தொடுத்தான் வருணேஷ்.

"ஏன் தியா நீ தான் மாமாவோட பொண்ணுன்னா வந்ததும் அதை நீ சொல்லி இருக்கலாமே. ஏன் இப்படி?" என்று கேட்டு நிற்க,

அவளோ அவனை முறைத்துக்கொண்டே "எத்தனை தடவை தாண்டா சொல்லுவேன். தீரா என் அம்மா போட்டோ பார்த்தும், என்கிட்ட அவர் தான் என் அப்பான்னு சொல்லல. அப்போ எனக்கு மனசுல ஒருவேளை அம்மாவை தப்பா நினைக்கிறாரோ? நம்ம பிறப்பு கேள்விக்குறி ஆகிடுமோன்னு பயந்துட்டேன் டா. "என்று சொல்லி மீண்டும் வாகாய் தந்தை மார்பில் சாய்ந்து கொண்டாள்.

"இல்ல கண்ணம்மா நான் அப்படி எல்லாம் நினைக்கல. உன் அம்மா தான் நீயா வராம நானா சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டா. அதுனால தான் அமைதியா இருந்தேன். எப்போ டா நீ வருவான்னு காத்திருந்தேன் கண்ணம்மா. அதான் உன்னைப் பார்த்ததும் என்னைத்தேடி வந்துட்டதா நினைச்சு சந்தோசப்பட்டேன். ஆனா நீ படிப்பு விஷயமா வந்தேன்னு சொன்னியா அமைதியா ஆகிட்டேன். இதுல அப்பாவைப் பார்க்க போகணும் வா தீரான்னு நீ சொன்னதும் என்ன டா புது குழப்பம், நான் தான் அப்பான்னு தெரியலையோன்னு குழம்பி தவிச்சிட்டேன் கண்ணம்மா." என்று தான் மார்போடு அவளை இறுக்கமாக அணைத்தான்.

பிறந்த நொடி தன் குழந்தையை தந்தை வலிக்காமல் இறுக்கமாய் தன்னோடு புதைத்துக்கொள்ளும் அதே பூரிப்பு அந்த அணைப்பில் இருந்தது.

இருவரையும் ஒரு அடி தள்ளி நின்று ரசித்த வருணேஷ் தன் மொபைலில் அந்த நொடியை அப்படியே சிறை பிடித்தான்.

தன் மாமனுக்கும் மாமன் மகளுக்கும் இதை விட சிறந்த பரிசை தர முடியுமா என்ன என்று நினைத்ததும் அவன் அதரங்களில் மென்னகை குடியேறியது.

"எப்படி கண்ணம்மா உன் அம்மா உனக்கு தெரிய வேண்டிய நேரத்தில் தெரிஞ்சுப்பன்னு ஏதோ எழுதி இருந்தா, நீயா வந்தா நல்லபடியா பார்த்துக்கணும்னு எழுதி இருந்தாளே. எப்படி உனக்கு தெரிஞ்சுது?" என்று அவள் தலையின் மீது தாடையை பதித்துக் கேட்டான்.

"மார்ட்டின் கிட்ட ஒரு பாக்ஸ் கொடுத்து வச்சிருந்தாங்க. அதுல ஒரு ரிங்கும் ஒரு பென்டிரைவ்வும் இருந்தது. அதுல அம்மா பேசின வீடியோ இருந்தது. அதை வச்சு நீ தான்னு கண்டுபிடிச்சேன் தீரா." என்று அவன் நெஞ்சில் அவள் முட்ட,

"இன்னும் என்ன டி தீரா. ஒழுங்கா அப்பான்னு கூப்பிடு." என்று அவள் தலையில் குட்டினான் வருணேஷ்.

"நீ போடா மங்கி. எனக்கு தீராவா தான் முதல்ல தெரியும். ஒருவேளை நான் தீராவை பார்க்காம என் அம்மா வீடியோ பார்த்திருந்தா கண்டிப்பா தீராவை தேடி வந்திருக்கவே மாட்டேன் தெரியுமா?" என்று விழி நீர் சுரக்க அவள் தீரேந்திரன் கழுத்தில் மாலையாய் கைகளை கோர்த்து நின்றாள்.

"ஏன் டி? உன் அம்மா அப்படி என்ன சொன்னாங்க? என்ன குறை கண்டாங்களாம் என் மாமா கிட்ட?" என்று எகத்தாளமாக வருணேஷ் கேட்க,

தீராவை விட்டு நகர்ந்து வந்தவள் அவனை கதிரவனை விட கோபமாய் தன் கதிர் வீசும் விழிகளால் முறைத்தாள்.

"என்ன டி முறைப்பு? என் மாமா எவ்ளோ பாவம்? பாரு டி தலை நரைச்சே போய்டுச்சு. உங்க அம்மாவை தேடியே இப்படி ஆகிட்டார் டி" என்று மேலும் நக்கலடித்த அவனை எரிச்சல் மண்டப் பார்த்தவள்,

"எல்லாம் உன்னால தான் டா டாக். உன்னால தான் என் அம்மா அப்பாவை விட்டுட்டு போனாங்க.. நீ தான் எருமை காரணம்" என்று சரமாரியாக அடிக்க அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

இதுவரை இருந்த மகிழ்ச்சியான நிலை மாறி, வருணேஷ் ஸ்தம்பிக்க, நதி கண்ணீரோடு அமர, தீரேந்திரன் குழப்பத்தில் நின்றான்.

"என்ன சொல்ற நதிம்மா, வருணுக்கும் உன் அம்மாவுக்கும் என்ன சம்மந்தம்? எனக்கு புரியல." என்றதும்.

"நான் சொல்றதை விட நீயே அம்மாவோட வீடியோ பாரு தீரா" என்று அவனை கைபிடித்து அழைத்தவள் ஒரு நிமிடம் நின்று மறுகையால் வருணையும் இழுத்து வந்தாள். வருண் தயங்க,

"சாரி டா ஏதோ கோபத்தில் உன்னை அடிச்சிட்டேன். ப்ளீஸ் வா டா." என்று அழைக்க கசங்கிய முகத்துடன் வந்தான் வருண்.

மூவரும் காரில் ஏறி ஏசியை ஆன் செய்து அமர்ந்தனர். நதியா தன் கைப்பையில் இருந்த பென்டிரைவை எடுத்து தன் மடிகணினியில் சொருகினாள்.

வருணின் கவலை நிறைந்த முகத்தை கவனித்தவள், தன் அவசரக்குடுகைத்தனத்தை நொந்தபடி,

"டேய் ரெயின், ப்ளீஸ் மூஞ்சியை நல்லா வை டா ப்ளீஸ் நான் ஒரு எரிச்சலில் சொல்லிட்டேன். சாரி டா.." என்று அவன் தோளில் ஒரு கரம் பதித்து மறுகரத்தால் அவன் தாடை தொட்டு முகத்தை தன் புறம் திருப்பினாள்.

"இல்ல நதியா, நீ சொல்றது மட்டும் நிஜமா இருந்தா என்னை நானே மன்னிக்க மாட்டேன்." என்று அவன் இறுகிப் போன குரலில் கூறினான்.

அவனே பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டவள், விடியோவை ஓட விட்டாள்.

அதில் சற்றே நலுங்கிய தோற்றத்தில் ஒரு பெண் தெரிய, அது தான் தன் மாமாவின் மனைவியாக இருக்கும் என்று வருண் கவனிக்க ஆரம்பித்தான்.

கண்டிப்பாக இறக்கும் தருவாய் வந்துவிட்டதை உணர்ந்த பின்னால் அவள் இந்த விடியோவை எடுத்திருக்க வேண்டும். அவள் முகத்தில் கலக்கமும் அதே நேரம் இயலாமையும் அதிகம் தெரிந்தது. அவளை கண்களில் அள்ளி நிறைத்துக்கொண்டான் தீரேந்திரன். கல்லூரி நாட்களில் அவள் செய்த குறும்புகளும், அவள் கலகல சிரிப்பும் பார்த்தே இருந்தவனுக்கு அவளின் இந்த தோற்றம் மனதில் பெரும் வலியைக் கொடுத்தது.

படுக்கையில் சற்றே சாய்ந்து அமர்ந்து தன் செல்போனில் பதிவை ஆரம்பித்திருக்க வேண்டும். பார்க்க அது அப்படித்தான் இருந்தது.

"நதியா" என்று அவள் அழைத்த அந்த அழைப்பில் கண்டிப்பாக பாசம் மட்டுமல்ல உன்னையன்றி எனக்கு யாருமில்லை என்ற செய்தி வலியோடு உள்ளம் வரை தைத்திருந்தது.

"நதியா, உனக்கு நான் அப்பா யாருன்னு இப்போ வரைக்கும் சொல்லல. ஏன் அவரை பேர் கூட உனக்கு தெரியாது. இங்க சிங்கிள் மதர் பெரிய விஷயம் இல்லாததால நீயும் அழுத்திக் கேட்கல. ஆனா இப்ப சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு. ஏன்னா இதை நான் உனக்கு தெரியப்படுத்தும்போது கண்டிப்பா உயிரோட இருக்க வாய்ப்பில்லை. நான் உங்க அப்பாவைப் பத்தி நெனச்சும், உன்னோட எதிர்காலத்துக்காக ஓடியுமே என் வாழ்க்கையை கடைசி கட்டத்துக்கு கொண்டு வந்துட்டேன். ஆமா நானே மரணத்தை தினமும் இன்விடேஷன் வச்சு கூப்பிட்டிருக்கேன்." என்று கசந்த முறுவல் ஒன்று பூத்தாள்.

"எனக்கு உன் அப்பா நினைவு வந்தா தூக்கம் வராது. தூங்கலன்னா அடுத்தநாள் வேலை செய்ய முடியாது. உன்னை வளர்க்க சம்பாதிக்கவும் முடியாது. அதுனால நான் தினமும் தூக்க மாத்திரை எடுத்துப்பேன். இன்னிக்கு நேத்து இல்ல. கிட்டத்தட்ட பதினைந்து வருஷமா. அது மட்டுமில்ல. தலைவலி, காய்ச்சல் எது வந்தாலும் ஒரு மாத்திரையை முழுங்கிட்டு வேலைக்கு போய் பழகிட்டேன். மருந்துக்கும் அளவு இருக்குன்னு மறந்து போயிட்டேன். அதான் மருந்தோட பக்க விளைவு கிட்னி பெயிலியர். அப்பறம் கூடவே உள்ளுறுப்புகள்ல நிறைய பாதிப்பு. விடு. நான் போய்ட்டு போறேன். எனக்கு உன்னைப் பத்தின கவலை தான்.

இந்த வீடியோ கண்டிப்பா நீ உன் அப்பாவை பத்தி மார்ட்டின் கிட்ட கேட்டா மட்டும் தான் உன் கைக்கு கிடைக்கும். அப்படித்தான் சொல்லிக் கொடுக்கப் போறேன். இதை நீ பாக்கறன்னா இப்போ நீ உன் அப்பாவை பத்தி தெரிஞ்சுக்க வந்திருக்க இல்லையா?

ம்ம்.. உன் அப்பா இந்தியால இருக்கார். பேரு தீரேந்திரன். நல்லா இருக்குல்ல. எனக்கும் அவனோட பேர் ரொம்ப பிடிக்கும். துரத்தி துரத்தி லவ் பண்ணினேன். ஆசையா அவசரமா கல்யாணமும் பண்ணினோம். ஆனா.. எல்லாம் ஒரு வருஷத்துக்குள்ள முடிஞ்சு போச்சு.

உன்னோட அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் இருக்குன்னு தெரிஞ்சப்போ என் நெஞ்சே வெடிச்சிடுச்சு நதியா. ஆமா நான் உண்மையை தான் சொல்றேன். நானா சொல்லல. நேர்ல பார்த்துட்டு வந்து தான் சொல்றேன்.

உங்க அப்பா என்னை இங்க விட்டுட்டு அவங்க அப்பாவுக்கு உடம்பு சரி இல்லன்னு போனாரு. ஏழு மாசம் ஆகியும் வரல. கொஞ்சம் வேலை இருக்குன்னு சொல்லிகிட்டே இருந்தார். நான் அப்ப கூட அவரை நம்பினேன். ஆனா.. அன்னைக்கு.. அதை எப்படி சொல்லுவேன் நதியா? என் வாழ்க்கையில் உன்னைத்தவிர யாருமே இல்லன்னு நான் தெரிஞ்சுகிட்ட நாள் அது.

2014 டிசம்பர் மாசம், எனக்கு ஏழாவது மாசம் அது. உங்க அப்பா ஊருக்கு போன பின்னாடி தான் நீ என் வயித்துல இருக்கறதே எனக்கு தெரியும். சரி இப்போ வந்திடுவாரு சொல்லிடலாம், அவர் சந்தோஷத்தை நேர்ல பார்க்கலாம். சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நெனச்சேன். ஆனா ஏழு மாசமாகியும் வரல. அப்போ தான் இந்தியாவுல சுனாமி வந்தது.

என் அப்பா, அம்மா, தங்கை எல்லாரும் கடலூர் பக்கத்துல மீனவ கிராமத்துல இருந்தாங்க. அந்த சுனாமி வந்த நேரம் யாருக்கு என்ன ஆச்சுன்னு ஒன்னும் புரியாம, அவசரமா டிக்கெட் போட்டு சென்னை வந்தேன். ஊருக்கு போனா அங்க என் கிராமமே இல்ல. எல்லாத்தையும் நான் அசையா அம்மாவா நினைச்ச கடல் வாரி சுருட்டிட்டு போயிடுச்சு. சில சொந்தக்காரங்க மட்டும் தான் உயிரோட இருந்தாங்க. படிக்க வந்த இடத்துல இருந்து பிள்ளையோட வந்ததால மிஞ்சி இருந்த சொந்த பந்தமும் என்னை தப்பா பேசினாங்க.

ரொம்ப உடைஞ்சு போன நிலையில் ரெண்டு நாள் கழிச்சு சென்னைல என் அம்மா உடல் கரை ஒதுங்கி இருக்குன்னு தகவல் வந்து சென்னை வந்தேன். அம்மா உடலை வாங்கிட்டு தீரேந்திரன் கிட்ட போகலாம்னு அவரை போன்ல கூப்பிட முயற்சி பண்ணினேன். ஆனா அவர் எடுக்கல. நானே எல்லாத்தையும் முடிச்சிட்டு நேரா அவர் வீட்டுக்கு போனேன். அங்க.. அங்க." என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் அழுதாள்.

கண்ணீர் தாரையாக பொழிய, "வாசல்ல நின்ன ஒருத்தர் கிட்ட தீரேந்திரனை பாக்கணும்ன்னு சொன்னேன். நீங்க யாருன்னு கேட்டார். நான் என் தாலியை எடுத்து நீட்டினேன். என்ன அவனுக்கு நீ மனைவியான்னு கேட்டார். எனக்கு ஒன்னும் புரியல. ஆமான்னு தலையாட்டினேன். அந்த ஆள் அங்க பாருன்னு கைகாட்டினார். அப்போ உங்க அப்பா ஒரு பையனோட நின்னு அவரோட அப்பாவுக்கு இறுதி காரியம் பண்ணிட்டு இருந்தார். டிசம்பர் 30ஆம் தேதி.. என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது.

அப்போ புரோகிதர், அவரோட வாரிசுகள் வாங்கன்னு சொன்னதும் அவரும் அந்த குழந்தையும் போனாங்க. நான் ஒன்னும் புரியாம முழிக்கும் போது என் பக்கத்துல இருந்த ஆளு அந்த குழந்தையை இங்க வான்னு கூப்பிட்டார். அந்த குழந்தை அப்பானு சொல்லி தீரேந்திரனை கட்டிக்கிட்டு அழுதது. நான் உடைஞ்சு போயிட்டேன் நதியா. கண்டிப்பா அந்த குழந்தைக்கு ரெண்டு வயசு இருக்கும். இவர் முன்னாடியே வீட்டுல கல்யாணம் பண்ணி வைக்கப் பாக்கறாங்கனு சொன்னார். ஆனா கல்யாணம் பண்ணி குழந்தை இருக்கும்ன்னு நினைக்கவே இல்ல மா.

நான் எதுவும் பேசாம வெளில வரும்போது, அதே ஆள் வந்து, பார்த்தியா? அவனுக்கு இங்க ஒரு குடும்பம் இருக்கு. இப்போ நீ வந்து அவன் பொண்டாட்டினு சொல்ற? அப்படின்னதும்,

நான் எதுவும் பேசாம வெளில வர பார்த்தேன் அவர், மறுபடி அவன் வாழ்க்கையில் வந்திடாதே. எங்க எல்லார் வாழ்க்கையும் அது பாதிக்கும்னு சொன்னார். நான் பேசாம வந்துட்டேன்.

இங்க வந்த பின்னாடி அவசரப்பட்டுட்டோமோ தீரேந்திரன் கிட்ட பேசி இருக்கலாமோன்னு தோணுச்சு. மறுபடி போன் பண்ணினேன். அதே ஆள் தான் எடுத்தார். அவ்ளோ சொல்லியும் உனக்கு அறிவு இல்லையா, வீட்டை பார்த்தல்ல பெரிய இடம்,பசங்க அப்படி தான் இருப்பாங்க. நீ தான் கவனமா இருந்திருக்கணும்னு சொன்னாரு. மனசு வெறுத்துப் போச்சு. மார்ட்டின் கிட்ட சொன்னேன். அவனும் அவனோட இந்திய பிரெண்ட்ஸ் மூலமா விசாரிச்சான்.

அவங்களும் அந்த வீட்டை பத்தி விசாரிச்சு அதே பதில் தான் சொன்னாங்க. எனக்கு சுத்தமா விட்டுப்போச்சு.

ஒருவேளை உங்க அப்பா என்னை ஆசைப்பட்டே கல்யாணம் பண்ணி இருக்கலாம். ஆனா இரண்டாவது மனைவியா மறைஞ்சு வாழ எனக்கு விருப்பம் இல்ல. அதான் என்னை அவர் கண்ணுல இருந்து மறைச்சுக்கிட்டேன். யார் மூலமாவும் என்னைப்பத்தி தகவல் தெரியாம பார்த்துக்கிட்டேன்.

இப்போ ஒருவேளை உனக்கு உன் அப்பாவை பார்க்கவோ, இல்ல போய் அவரோட இருக்கவோ தோணினா போய் பாரு. சரியா இருக்கும்ன்னா இரு. ஏன்னா நான் உன்னை எதுக்குமே கட்டாயப்படுத்தி வளர்க்கல. ஆனா உன் படிப்பை மட்டும் விட்டுடாதே. அது தான் என்னை வாழ வச்சது. உனக்கும் கைகொடுக்கும்.

அந்த சம்பவத்துக்கு அப்பறம் எனக்கு கடல்ன்னா பிடிக்கல. ஆனா உனக்கு அதுல இருக்கிற ஆர்வம் எனக்கு தெரியும். பார்த்து பத்திரமா இரு. எதுக்கும் தேவை இல்லாம மருந்து மாத்திரை சாப்பிடாத. நான் உனக்கு ஒரு பாடம். ஒருவேளை என்னோட எல்லா செயல்களும் தப்பாவே கூட இருக்கலாம். ஆனா எல்லா முடிவையும் நானே தான் எடுத்தேன். அதுனால நோ ரெக்ரெட்ஸ். இது என் வாழ்க்கை. வாழ்ந்துட்டேன். போகப்போறேன். நீ பத்திரமா இரு." என்று சொல்லி சிரித்தாள் உத்ரா.

அதோடு வீடியோ முடிந்துவிட்டது. தீரேந்திரன் உதட்டில் வெறுமையாய் ஒரு புன்னகை வந்தது. நதியா கண்கள் பனித்திருந்தது. ஆனால் வருண் இன்னும் குழப்பத்தில் இருந்தான்.

அவன் நதியை தன் பக்கம் திருப்பி, "அவங்க சொன்ன பையன் நானா நதியா?" என்று கேள்வி எழுப்ப, ஆமென்ற பதில் தீரனிடமிருந்து வந்தது.

"நீ எப்படி கண்ணம்மா இத்தனை கேட்டும் என்னைத் தேடி வந்த?" என்று ஆற்றாமையோடு கேட்டான்.

"இல்ல அப்பா உங்களை தான் இந்த விஷயமெல்லாம் தெரியறதுக்கு முன்னாடியே தெரியுமே! உங்க குடும்பம் பத்தி பாட்டியும் சொல்லி இருந்தாங்க. அதை வச்சு தான் இவன் தான் அந்த பையன்னு நெனச்சேன். ஆனா மார்ட்டின் கிட்ட விசாரிச்சப்ப தான் இதுக்கெல்லாம் யாரு காரணன்னு எனக்கு புரிஞ்சது." என்று மௌனமானாள்.

"யாரும்மா.. யாருன்னு சொல்லு. என் வாழ்கையை என் கையிலிருந்து தட்டி விட்டது யாரு?" என்று உணர்ச்சியின் பிடியில் தீரேந்திரன் சிக்குண்டு இருக்க,

"இதுக்கு மேல தனியா வேற சொல்லணுமா மாமா. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு? எல்லாம் எங்கப்பா தான். ஏன்னா நான் உங்ககிட்ட அப்பான்னு நெருங்கி வந்திருந்தா, அதுக்கு ஒரே காரணம் என் அப்பா என் கிட்ட வந்திருப்பார். உங்க கிட்ட அப்பா வர்றார்னு சொல்ல தான் நான் அப்பா அப்பான்னு சொல்லுவேன். அத்தை சொன்னதை வச்சு பார்த்தா, அன்னைக்கு அவர்தான் நம்ம கிட்ட வந்திருக்கணும்." என்று இறுகிய குரலில் கூறினான்.

அதை ஆமோதிக்கும் விதமாக, "மார்ட்டின் அப்போ பலமுறை உங்க கூட பேச முயற்சி செஞ்சிருக்கார். ஆனா முழுக்க முழுக்க அறிவு அப்படிங்கறவர் தான் பேசி இருக்கார். உங்களுக்கு இங்க ஒரு குடும்பம் இருக்கு தொந்தரவு செய்ய வேண்டாம்ன்னு திரும்பி திரும்பி சொல்லி இருக்கார். அதனால தான் அவரும் அம்மா சொன்னதை நம்பிட்டதா சொன்னார்."

தீரேந்திரன் கைகள் இறுகியது. அவன் வேகமாக எதிர் இருக்கையை ஓங்கி குத்தினான். ஆனால் வருண் வேகமாக இறங்கி ஓட்டுநர் இருக்கையை அடைய,

"டேய் ரெயின்.. இரு டா. அவசரப்படாத. இன்னும் நிறைய இருக்கு. அதை விட இதுல என் அம்மா தப்பும் இருக்கு டா. யார் சொன்னா என்ன இத்தனை வருஷத்துல ஒருமுறை கூட தீராவை பார்க்க முயற்சி பண்ணல அவங்க. நீ அவர் மேல மட்டும் கோவிச்சு ஒன்னும் ஆகப்போறது இல்ல டா." என்று கத்த, அதை காதில் வாங்காத வருண் இயக்க இந்திரா நகர் சாலையில் சீறிப்பாய்ந்தது ஜாகுவார்.

நதி பாயும்...

 
Top