கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தீராநதி 30( பாகம் 1 நிறைவுற்றது)

Jeyalakshmi Karthik

Moderator
Staff member
தேடல் 30

வெள்ளைத் திரையாய், வெருவுதரு தோற்றமதாய்
கொள்ளை ஒலிக்கடலே நல்லற நீ கூறுதிகாண்,

விரிந்த பெரும்புறங்கள் மேலெறிந்துன் பேயலைகளை
பொருந்து மிடையே புதைத்த பிளவுகள்தாம்,

பாதலம்போ லாழ்ந்திருப்பப் பார்க்கவரி தாயவற்றினை
மீதலம்பி நிற்குமொரு வெள்ளைச் சிறு தோணி

என்ற பாரதியார் பாடலுக்கிணங்க, விரித்த பெரிய கடலில் உயரமாக எழுந்த அலைகளுக்கு இடையில், அரிய வகைகளை தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கும் பெருங்கடலுக்கு மேலே வெள்ளையாய் அந்த கப்பல் மிதந்து கொண்டிருந்தது.

கப்பல் சற்று தொலைவு சென்றதும் வீசிய குளிர்காற்றை தன் நாசிகளுக்குள் நிறைத்தபடி தன் வேட்டி காற்றில் படபடக்க நின்றிருந்தான் தீரேந்திரன்.

அவன் கண்களில் நிறைவு இருந்தது. மனம் ஏதோ ஒரு வகையில் நிம்மதியை அடைந்திருந்தது. சின்ன உறுத்தல் என்றால் அது இன்னும் நம்பியை ஒன்றும் செய்யாமல் விட்டு வைத்திருப்பது மட்டும் தான்.

நதியா சொன்னதற்காக அவனை விடவில்லை. சில காலம் அவன் தொல்லை இல்லாமல் நதியாவோடு நேரம் செலவு செய்ய வேண்டும். கண்கட்டி வித்தை போல நம்பியின் கண்ணை கம்பெனி என்று சொல்லி மறைத்து அவருடைய செயல்களை முடக்கி மகளோடு நிம்மதியாக விடுமுறையை கழிக்க வந்திருக்கிறான்.

கரை தொடும் நாள் நம்பியின் மகிழ்ச்சி தரை தொடும் நாளாக இருக்க வேண்டும் என்பதில் தீரேந்திரன் தெளிவாக இருந்தான்.

அவன் எண்ணம் மெல்ல உத்ராவை நோக்கிச் சென்றது. அவளை தவறாக நினைக்க முடியவில்லை. அவளுக்கு அந்த வயதில் பக்குவம் இருந்திருக்காது என்றே மனம் சொன்னது.

கூடவே அவளின் ஆதரவற்ற சூழ்நிலை. யாருமற்ற நிலையில் கணவனும் பொய்யன் என்று ஆழமாக மனதில் பதியும் படி சொன்னதும் அவளும் துவண்டு தன் வாழ்வை விட்டு வெளியேறி இருப்பாள். இது மனித மனத்திற்கே உள்ள விசித்திர குணம்.

நமக்கான பதில் கண்களுக்கு முன்னே மூடிய பெட்டிக்குள் இருக்கும். ஆனால் நாம் அதை திறந்து கூட பாராமல் இது தான் இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டு அதற்கேற்ப முடிவுகளையும் உணர்ச்சியின் பிடியில் எடுத்து விடுகிறோம்.

அந்த மூடிய பெட்டியை திறக்க மனித மனதிற்கு பயம். இப்படி இருந்து விட்டால் என்னால் தாங்க முடியாது என்று தானே ஒரு முடிவுக்கு வந்து, அதன் பலனை தான் மட்டுமல்லாது நம் அன்பானவர்களையும் அனுபவிக்க வைத்து விடுகிறோம். முகத்தில் அறையும் எந்த உண்மையையும் ஜீரணிக்க மனதை நாம் பழக்காத வரை, இப்படியான அவசர முடிவுகளை நாம் எடுத்துக்கொண்டு அதற்கான பலாபலன்களை அடையத்தான் வேண்டும்.

மனதில் யோசனை தறிகெட்டு எங்கெங்கோ தத்துவத்தில் மிதந்து சென்று கொண்டிருக்க, வேகமாக மேலே வந்து இடித்த மகளை திடுக்கிட்டு பார்த்துவிட்டு பின் மென்மையாக சிரித்தான் தீரேந்திரன்.

"என்ன டா?" என்று கேட்க, "பாரு தீரா இந்த ரெயின் என்னை வம்பு பண்றான். நான் தம்மாதுண்டு இருக்கேனாம். ரிசர்ச் ஸ்டூடெண்ட் போல இல்லையாம். கிண்டல் பண்றான் பாரு." என்று வருணேஷை மாட்டி விட, அவனோ கொஞ்சமும் அதைப்பற்றி கவலையற்றவனாக,

"மாமா நீயே சொல்லு, கத்திரிக்காய்.. இல்ல இல்ல. . பீன்ஸுக்கு கைகால் முளைச்சது போல இருக்கற இவ ஆராய்ச்சி மாணவியா?" என்றதும் தீரேந்திரன் சிரிப்புடன்,

"எந்த ஒருத்தரையும் உருவத்தை வச்சு எடை போடக்கூடாது வரு கண்ணா.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

இது திருவள்ளுவர் வாக்கு. அவ்ளோ பெரிய தேருக்கு அச்சாணி இல்லன்னா வேலைக்கு ஆகாது. அச்சாணி சின்னது தான். ஆனா அது செய்யற வேலை ரொம்ப பெரிசு. இவ்ளோ பெரிய கப்பல் ஒரு சின்ன பட்டனுக்கு கட்டுப்பட்டு இருக்குல்ல அது போல தான் அவ உருவத்தை வச்சு பேசாத, அவளோட குறிப்பு புத்தகத்தை வாங்கி பாரு. பவளப்பாறைகள் பத்தி நிறைய தகவல் வச்சிருக்கா. எப்படியும் இன்னும் கொஞ்சநேரத்துல மீன் குஞ்சா மாறி என் பொண்ணு கடலுக்குள்ள நீந்தபோறதை பார்க்க தானே போற" என்று மகளை பெருமையாக பேசினாலும் மருமகனை காயப்படுத்தாமல் பேசினான்.

"அப்படி சொல்லு தீரா" என்று கன்னத்தில் அவள் முத்தம் பதிக்க, மகளின் முதல் முத்தத்தை அனுபவித்த தீரேந்திரன் விழிகள் பனித்தது. உத்ரா மீது இத்தனை நேரம் இருந்த பரிதாபம் போய் கோபம் தலை தூக்கியது. தனக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய என் மகளின் இளம்பிராய மகிழ்ச்சி எதுவும் இல்லாமல் போய்விட்டதே என்று மனம் வலியை அனுபவித்தது. அவனும் சாதரண மனிதன் தானே! ஞானி இல்லையே! தான் இழந்த இழப்பின் வலி அவனுக்கும் இருக்கத் தானே செய்யும்.

உத்ரா மீது தலை தூக்கிய கோபம் அப்படியே நம்பி மீது அதிகரித்து விஸ்வரூபம் எடுத்து நின்றது. அப்போது கப்பலுக்குள் அறிவிப்பு வெளியானது.

முதல் வலை வீசப்பட்டதும் வேலையில் வேகமாக இறங்கும்படி கேப்டன் வேலையாட்களுக்கு கட்டளை பிறப்பித்துக்கொண்டிருந்தார்.

அதைக்கேட்டு துணுகுற்ற நதியா, "ஏம்பா இது கரையை விட்டு ரொம்ப தொலைவுல இல்லை தானே, சின்ன சின்ன கட்டுமரம் இங்க வந்து தானே மீன் பிடிப்பாங்க. இவங்க என்னப்பா இங்க மீன் பிடிக்கிறாங்க?" என்று கேட்டதும்,

"தெரியலமா" என்று திரும்பிய தீரன் அங்கிருந்த ஒருவரிடம் விசாரிக்க, கடற்கரையை ஒட்டிய பகுதியில் கிடைக்கும் மீன் வகைகளுக்காக இங்கே வலை வீசப்படும் என்று சொன்னார் அவர்.

எல்லா வகை மீனும் வேண்டுமல்லவா என்று தீரன் நகர்ந்து விட, சற்று நேரத்திற்கெல்லாம் நீளமாக பெரிய வலையில் பலவகை மீன்கள் மாட்டி மேலே கப்பி(pulley) மூலமாக கப்பலுக்குள் வந்தது.

உள்ளே வலையில் மீன் வர வர அதனை கப்பலின் கீழ் தளத்திற்கு செல்லும்படியாக அமைத்திருந்த வழியில் ரகம் வாரியாக அனுப்பும் வேலையில் வேலையாட்கள் இறங்கினார்கள்.

கீழே ரகம் வாரியாக செல்லும் மீன்கள், இயந்திரத்தின் உதவியுடன் தலை வால் துண்டிக்கப்பட்டு, செதில்கள் களையப்பட்டு காற்றுப்புக்காத வெற்றிடப் பையில்(vacuum pack) அடைத்து அது பெரிய அட்டைப்பெட்டியை அடைந்து விற்பனைக்கு தயாரானது.

இதயெல்லாம் பார்த்த தீரன், "பரவால்ல நிறைய யோசிச்சு தான் இந்த தொழில்ல இறங்கி இருக்கார் போல." என்று வருண் தோளில் கைபோட்டு அனைத்தையும் வேடிக்கை பார்த்தான்.

சற்று நேரத்தில் அவர்களுக்கு உறுத்தலாக இருந்தது, வந்த மீனின் அளவு. பெரிய கப்பல் இவ்வளவு மீனை பிடித்து விட்டால் அன்றாடம் சற்று தூரம் வந்து வலைவீசும் சிறு மீனவர்கள் நிலை என்ன என்று அவன் மனம் சிந்திக்க ஆரம்பித்தது.

இருந்தாலும் தனக்குத் தெரிந்த மீன் வகைகளை தன் மகளுக்கும் மருமகனுக்கும் சொல்லிக் கொடுத்து மகிழ்ச்சியாக இருக்க, வருண் வேகமாக "மாமா பிரஷ்ஷா நீங்க மீன் சமைச்சு தாங்க மாமா. ப்ளீஸ் ப்ளீஸ்" என்றதும் நதியாவும் அவனுடன் இணைந்து கொண்டாள்.

அவனும் மகிழ்ச்சியாக அவர்களுக்கு எந்த மீன் மிகவும் விருப்பம் என்று கேட்டு சமைத்துக் கொடுத்தான்.

சற்று தூரம் கடலுக்குள் செல்லும்வரை நன்றாக இருந்த வருண் நேரமாக ஆக உவர்நீர் காற்றின் தன்மை தாங்காமல் தவிக்க ஆரம்பித்தான். அவனுக்கு வாந்தி வந்து கொண்டே இருந்தது. தீரேந்திரன் பயந்துவிட, நதியா அவனுக்கு ஸீ சிக்னஸ்( sea sickness) என்று சொல்லி தன்னிடம் இருந்த மருந்தைக் கொடுத்தாள்.

முதல் முறை கடல் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இதெல்லாம் சகஜம் என்று சொல்லி தீரனையும் சமாதானம் செய்தாள்.

சற்று நேரத்தில் எல்லாம் சரியாகி விட, இரவு கவிழ ஆரம்பித்தது. நதியா கடலுக்குள் செல்லப் போவதாக சொன்னதும் தீரேந்திரன் தடுத்துவிட்டான். காலையில் சூரியன் உதித்த பின்னர் கடலுக்குள் போனால் போதும் என்று கறாராக உரைத்துவிட அவளும் தந்தையின் பேச்சை சரியென்று கேட்டுக்கொண்டாள்.

வருண், " ஏன் மாமா அவ ரிசர்ச் பண்ண வந்தது உங்களுக்கு நல்லா தெரியும் இருந்தாலும் இப்படி போகக்கூடாதுன்னு சொன்னா எப்படி ?" என்று கேட்டதும்,

"அது அப்படி இல்லை வருண், கடலுக்குள்ள பகல் நேரத்துல போனா, கடல் அடி மட்டத்துக்கு போனாலும் சூரிய வெளிச்சம் வச்சு மேலே நீந்தி வந்துடலாம். ராத்திரியில போனா, நேரா நீந்துறோமா, பக்க வாட்டுல போறோமான்னு தெரியாது. அதை விட நீரோட்டம் எப்படி இருக்குமோ அதெல்லாம் பகல்ல ஓரளவு நம்மளால கணிக்க முடியும். அதே போல பெரிய வகை மீன்கள் இரவுல உணவு தேடும். அதுக்கு இவ தலையில் மாட்டிட்டு போகற லைட் வெளிச்சம் ஈர்ப்பா இருக்கும். அதெல்லாம் எதுக்கு இப்போ ரிஸ்க் எடுக்கணும். பகல்ன்னா நாமளும் இங்க இருந்து அவளோட கேமரா புட்டேஜ் மூலமா மானிட்டர் பண்ணலாம் வரு" என்று விவரித்தான்.

"ஓ. அப்போ கடலுக்குள்ள டைவர்ஸ் நைட்ல போக மாட்டாங்களா மாமா?" என்று கேட்டான்.

"அப்படி இல்லை அவங்க பல வருஷ எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவங்களா இருப்பாங்க. டீமா போவாங்க. இங்க இவ மட்டும் தானே போகறா. அதனால நாம தான் கவனமா இருக்கணும். " என்று மகள் தலையை கலைத்து விட்டு வேலையாட்கள் தங்க இருந்த சிறு அறையில் அவர்கள் மூவரும் தங்கிக்கொண்டனர்.

அதிகாலை வேளையில் கடல் காற்றை ரசித்து டீ குடித்துக்கொண்டு கப்பலின் கைப்பிடிக் கம்பியில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள் நதியா.

கப்பல் சற்றே ஆழ்கடலை அடைந்திருந்தது. இங்கு அலைகள் சுத்தமாக இருக்காது, ஆனால் காற்று வேகமெடுக்கும் போது நீரின் ஆட்டம் அவ்வளவு வேகமாக இருக்கும். அதுவே காற்றின் வேகமில்லா நேரங்களில் ஆழ்கடல் அமைதியாக இருக்கும் இப்போது அவர்கள் செல்லும் இடமும் அவ்வித அமைதியாகத் தான் இருந்தது.

மனமும் இதே போல எந்த பிரச்சனையையும் ஆரம்பத்தில் இருக்கும் போது அலைகடலாக ஆர்ப்பரிப்பதும், மனம் பக்குவப்பட்ட பின் மெல்ல மெல்ல அமைதியாக மாறி விடுவதும் என்று அவள் யோசனையில் இருக்க, தன் மகளின் பின்னால் வந்த தீரன் அவள் கைகளில் இருந்த தேநீர் கோப்பையை வாங்கிக்கொண்டதும் திடுக்கிட்டுத் திரும்பியவள், "நீயா தீரா? பயந்துட்டேன்" என்று சலுகையாக அவன் கையிலிருந்த கோப்பையில் டீயை அவன் உயரத்திற்கு எம்பிக் குடித்தாள்.

மகளின் சேட்டையை ரசித்தவன் இன்னும் உயரத்திற்கு கோப்பையைத் தூக்கிப் பிடித்தான்.

அவள் எட்டி குதிக்க அவளை அள்ளித் தூக்கிக் கொண்டான் வருண். அவன் உதவியால் தந்தையின் கையிலிருந்த கோப்பைத் தேநீரை காலி செய்தாள்.

வருண் அவளை கீழே இறக்க, அவன் கழுத்தோடு அணைத்தவள், "ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ரெயின். இப்படி நான் யாரோடவும் விளையாடியது இல்ல. அப்படி விளையாட நினைச்சாலும் உதவிக்கு யாருமில்லாம இருந்தேன்." என்று அவனை அணைத்து விடுவித்தாள். வேகமாக தந்தையின் கைகளுக்குள் அடைக்கலமானவள், "லவ் யூ பா" என்று மகிழ்ச்சியாகச் சொன்னாள்.

கப்பல் வேகம் குறைந்து ஒரு கட்டத்தில் நின்று விட என்னவென்று விசாரித்தனர். அடுத்த மீன்பிடி இடம் வந்துவிட்டதாக கூறியதும் வேகமாக உள்ளே சென்ற நதியா டைவிங் உடையோடு வந்தவள், அவளின் கேமரா மானிட்டரை தீரன், வருணிடம் ஒப்படைத்துவிட்டு, தன்னை ஒரு கயிற்றில் இணைத்துக்கொண்டாள், ஏதேனும் அசம்பாவிதமாக நிகழ்ந்து தன்னால் நீந்த முடியாத நிலை வந்தால் இதனை வைத்து மேலே இழுக்கச் சொல்லி அவனுக்கு விளக்கம் கொடுத்துவிட்டு கடல் பரப்பை நோக்கி தலைகீழாக அவள் குதிக்க, வருண் வயிற்றில் பயம் கவ்விப்பிடித்தது.

அவள் உள்ளே சென்றதும் அவனும் தீரேந்திரனுடன் இணைந்து மானிட்டர் அருகில் அமர்ந்தான்.

கடலுக்குள் அழகிய மீன்களும், விதவிதமான கடல்வாழ் உயிரினங்களும் இருக்க,அவள் திரும்பிய திசையில் கப்பலில் இருந்து ஆழமான கடல் பரப்பை நோக்கி வலை சென்றிருந்தது. அதில் மெதுமெதுவாக மீன்கள் சிக்கிக்கொள்ள ஆரம்பித்தன. அதயெல்லாம் கண்ணுற்றபடி வந்தவள், ஓரிடத்தில் திகைத்து நின்றாள்.

கப்பலின் நங்கூரம் பாய்ந்திருந்த இடத்தில் அழகிய பவளப்பாறைத் திட்டு இருந்தது. அதில் பலவகை உயிரினங்கள் இருக்க, நங்கூரத்தின் கூர் முனையால் பவளப்பாறை பெரிதும் சேதமடைந்திருந்தது. அதைச் சுற்றி மீன்கள் அங்கும் இங்கும் அலைப்புறுதலோடு செல்வதைக் கண்டவள் மனம் கனத்தது.

மீண்டும் நீந்தி வலை வீசியிருக்கும் பகுதிக்கு அருகே செல்ல, அங்கும் முழுக்க பவளப்பாறைகளே அதிகம் இருந்தது.

சாதாரணமாகவே பவளப்பாறைகள் உள்ள பகுதியில் மீன்கள் மிகுதியாக இருப்பதால் கப்பலில் இந்த இடத்தில் மீன் பிடிக்க தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் இவர்கள் ஒவ்வொருமுறை இப்படிப்பிடிக்கும் போதும் பவளப்பாறைகள் பாதிப்புக்கு உள்ளாக்கும். அது கடலுக்கே ஆபத்து என்று அவள் மனம் எச்சரித்தது.

மெதுவாக நீந்தி மேலே கடல்பரப்புக்கு வந்தாள்.

அவள் கப்பலில் ஏற கைகொடுத்து உதவினான் வருண், மேலே வந்ததும் தீரேந்திரனிடம் புகாராக சொன்னவள் கேப்டனை பிடித்து கிழித்தெடுத்தாள்.

அவரோ, 'இது எல்லாமே நம்பி குறித்துக்கொடுத்த இடங்கள்' என்று சாதித்தார்.

"அவர் கொடுக்கும் கோ ஆர்டினெட்ஸ் படி தான் நாங்க கடலில் மீன் பிடிப்போம். அதே போல மீன் இத்தனை கிலோ இருக்கணும்னு தெளிவா முன்னாடியே சொல்லிடுவார். அந்த அளவு இல்லன்னா கரைக்கு போக முடியாது" என்று அவர் கூற, தீரேந்திரன் திகைத்தான்.

இத்தனை நாட்கள் இதெல்லாம் அவன் பார்வைக்கு வரவே இல்லையே என்று தன்னையே நொந்தவன், அவரிடம் மேலும் விபரங்கள் கேட்டுவிட்டு அமைதியானான்.

ஆனால் நதியாவால் அப்படி இருக்க முடியாமல் வருண் உதவியோடு கப்பல் முழுவதும் ஆய்வு செய்தாள். அவ்வப்போது கடலுக்குள் அவளது ஆராய்ச்சிக்காக சென்றாலும் அவள் ஆராய்ச்சி முழுக்க முழுக்க கப்பலிலேயே இருந்தது.

கப்பல் கரை சேரும் நாளும் வந்தது. கப்பலில் இருந்து பதப்படுத்தப்பட்ட மீன்கள் அனைத்தையும் அதிகாரிகள் சோதித்தபின் துறைமுகத்தை விட்டு வெளியேறியது. அனைத்தையும் சோதித்த அதிகாரிகள் பயணிகள் உடமையை மட்டும் சோதிக்காமல் அனுப்பியது. அது அவர்கள் கம்பெனி மேல் உள்ள நல்ல எண்ணம் என்று தீரேந்திரனிடம் அந்த அதிகாரி உரைக்க, அவனோ சோதித்து அனுப்புங்கள் என்று கறாராக சொல்லிவிட்டான்.

எல்லா சோதனைகளுக்குப் பின் அந்த அதிகாரியை தனியே அழைத்த தீரேந்திரன், "மீனின் அளவு அதிகமாக இல்லையா இதை கவனிக்க மாட்டீர்களா?" என்று கேட்டார். அவரோ, இதற்கான சரியான ஆவணங்கள் இருப்பதாகவும், இத்தனை எடை கொண்டு வருவதற்கு ஏற்கனவே ஒப்புதல் வாங்கி இருப்பதாகவும், இது அதிகப்படி மீன் பிடித்தலின் கீழ் வராது என்றும் கூறினார்.

யோசனையோடு வீட்டிற்கு கிளம்பினர் மூவரும். அங்கே தோட்டத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் நம்பி. அவரைக் கண்டதும் நதியாவுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை.

நேராக அவருக்கு முன்னே சென்றவள், "நீங்க செய்யறது உங்களுக்கே நல்லா இருக்கா, இப்படி மாசம் மூணு தடவை இவ்ளோ அதிகமா மீன் பிடிச்சு, அதுவும் பவளப்பாறைகள் திட்டெல்லாம் சேதப்படுத்தி, கழிவைத் திங்க பூச்சி வளர்த்து.. சை.. என்ன மனுஷன் நீங்க" என்று எகிறினாள்.

அவள் கடைசியாக சொன்னது தீரேந்திரனுக்கே புரியாததால் அவளை என்னவென்று கேட்டான்.

அதிகப்படி மீன் பிடிக்க மாட்டோம் என்று ஒப்பந்தம் கொடுத்து மீன் பிடிப்பதெல்லாம் சரியாக செய்வது போல பாவலா காட்டும் அவர், மீனின் முழு உடலுக்கான எடையை காட்டுவதில்லையே, அதை அங்கேயே அறுத்து வேண்டாதவைகளை களைந்தால் மீன்பிடி அதிகமாக தானே இருக்கும். இது யார் கண்ணுக்கும் அதிகம் புலப்படாது. அந்த தலை, வால், செதில் கழிவுகளை உண்ண, கப்பலில் ஒரு பகுதியில் மீன் பூச்சிகள் வளர்க்கப்படுகிறது என்று அவள் அதனை படம் பிடித்த வீடியோவைக் காட்டினாள். அதில் ஐசோபாட்(isopod) பல இவர்கள் வீசும் மீதி மீன்களை தின்று கொண்டிருந்தது.

"இவர் செய்யற எல்லாமே தப்பு அப்பா, அதிகமா மீன் பிடிக்கிறது, பவளப்பாறைகளை சேதப்படுத்துறது எல்லாத்துக்கும் மெஷினை வச்சு வேலைக்கு ஆள் குறைப்பு செய்யறது, சரியான சம்பளம் கொடுக்காம அவங்களை தகாத வார்த்தையால பேசுறது.. எனக்கு பிடிக்கல பா. நான் தான் உங்க கிட்ட சொன்னேன். எனக்கு சொந்தம் வேணும், இவரை ஒன்னும் செய்ய வேண்டாம்ன்னு. ஆனா நான் ரொம்ப நேசிக்கிற கடலை இவரால் எவ்ளோ முடியுமோ சேதப்படுத்துறார் பா. எனக்கு சுத்தமா பிடிக்கல பா. இப்படி ஒருத்தர் எனக்கு ரிலேடிவா இருக்க வேண்டாம்.

எனக்கு துரோகம் பண்ணினத கூட மன்னிச்சிடுவேன். ஆனா இயற்கைக்கு துரோகம் பண்ற இவரை மன்னிக்கவே மாட்டேன்."

என்று அவள் அதிகப்படி குரலில் கத்தும் போதே கல்பனாவும் வாணியும் வந்து விட்டனர்.

"ஏய் எதுக்கு இப்படி குதிக்கிற? அவ்ளோ பெரிய கடல்ல நான் நூறு கிலோ அதிகமா மீன் பிடிச்சதுனால தான் அப்படியே உலகம் அழியுதா? போவியா" என்று அலட்சியமாக பேசினார் நம்பி.

அவரை புழுவினும் கேடாய் பார்த்த வருணும் நதியாவும் ஒரே குரலில் "உங்களுக்கு எதுக்குமே குற்றவுணர்வு இருக்காதா?" என்று கேட்டு இருவரும் தங்கள் கரங்களை இணைத்துக்கொண்டனர்.

தீரேந்திரன் தாடை இறுக அவரைப்பார்த்து, "தொழில் தொழில்ன்னு நீங்க ஓடினப்போ உங்களுக்கு ஆர்வம் இருக்கும்னு நெனச்சேன். இப்படி அழிக்க கிளம்பி ,இருப்பிங்கன்னு தோணாம போச்சு. அன்னைக்கே வரு சொன்னான், வேலைக்கு ஆளெல்லாம் நிறுத்துறாரு மாமா என்னவோ சரி இல்லன்னு. நான் தான் அக்கா புருஷனாச்சேன்னு விட்டேன். என் வாழ்க்கையை நீங்க கெடுத்தது தெரிஞ்சப்போ கூட நாங்க இவ்ளோ கலங்கல. எப்படி உங்களால இப்படி மனிதாபிமானமே இல்லாம நடந்துக்க முடியுது. அப்படி மீன் பிடிச்சு சம்பாதிச்சு என்ன சாதிக்க போறீங்க? போய் பாருங்க, சின்ன சின்ன மோட்டார் போட் வச்சிருந்தாலும் தேவையில்லாம அதிகமா மீன் பிடிக்காத அன்னாடம் காய்ச்சி மீனவர்கள் எவ்ளோ பேர் இருக்காங்கனு. மீன்பிடி காலம் வந்தா அவங்களுக்கு சம்பாத்தியம் இருக்காது. ஆனாலும் மீன் பெருகினா தான் வாழ்நாள் முழுக்க மீன்பிடிக்க முடியும்ன்னு வறுமையில கூட இயற்கையை காப்பாத்த நினைக்கிற அவங்க எங்க? நீங்க எங்க?" என்று அவன் பங்குக்கு சத்தம் போட்டதும்,

"இந்திரா நீ இப்போ என்ன சொன்ன?" என்று அழுத்தமாகக் கேட்டாள் கல்பனா. அப்போது தான் கோபத்தில் இருவருமே நம்பியை பற்றி உளறியதை உணர்ந்தனர். ஆனால் அதற்காக வருத்தமெல்லாம் கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

கடல் ஆய்வு மாணவியாக அவளுக்கு இவர் செயல்களால் கடலுக்கு எவ்வித ஆபத்துகள் வரும் என்று நன்றாகவே தெரியும் என்பதால் கடலை நேசிக்கும் அவளால் அவரை மன்னிக்கவே முடியவில்லை. இதன் விளைவாக கடல்வாழ் உயிரினங்கள் குறைவதோடு, கடல் நீர்மட்ட உயர்வு, கழிவுகளின் அளவால் ஏற்படும் அபாயங்களும் அவள் அறியாததில்லை.

"ஆமா அத்தை இவர் தன் என் அம்மாவையும் அப்பாவையும் பிரிச்சது. நாங்க அதை மன்னிச்சிட்டோம்னு சொல்ல மாட்டேன். ஆனா உங்களுக்காக மறக்க முயற்சி பண்ணினோம். ஆனா இவரோட கப்பல், இவர் செய்த வேலையெல்லாம் பார்த்து நான் ரொம்ப கடுப்பா ஆகிட்டேன். என்கிட்ட இதுக்கான எல்லா ஆதாரமும் இருக்கு. இவர் மேல நான் கேஸ் போடுவேன். இவரை சும்மா விட மாட்டேன்." என்று நதியா கோபத்துடன் கல்பனாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

அதைக்கேட்ட கல்பனா கணவன் மேல் உச்சபட்ச கோபத்துடன் பேசத் துவங்கும் நேரம் கலகலவென்று சிரித்த நம்பி,

"வாம்மா இயற்கையின் பாதுகாவலரே.. வா வா.. உன்னைத்தான் தேடிக்கிட்டு இருக்காங்க எல்லாரும். நீ கொண்டு போற ஆதாரத்தை வாங்கி பார்த்துட்டு, அப்படியே உங்கப்பனை தூக்கி உள்ள வச்சிடுவாங்க. நான் ஜாலியா என் வேலையை பார்ப்பேன்" என்று சொல்ல,

மொத்த குடும்பமும் திடுக்கிட்டது. வேகமாக முன்னே சென்று அவர் சட்டையைப் பிடித்த கல்பனா, "என்ன சொன்னிங்க? நீங்க செஞ்ச தப்புக்கு என் தம்பி ஜெயிலுக்கு போகணுமா? அப்படி என்ன செஞ்சு வச்சிருக்கீங்க?" என்று உலுக்க,

"கப்பல் மட்டும் தான் என் பேர்ல இருக்கு. தொழில் மொத்தமும் அவன் பேர்ல தான் இருக்கு. நான் கப்பலை அவனுக்கு வாடகைக்கு விட்டிருக்கறதா தான் அக்ரிமெண்ட்ல எழுதி இருக்கேன். இவன் வேற ஏற்கனவே என்னை கம்பெனி மேனேஜிங் டிரெக்டர் பதவியிலிருந்து தூக்கிட்டானா, அதுனால இப்போ நீங்க என்ன ஆதாரம் கொண்டு போனாலும் அது அவனுக்கு எதிராதான் இருக்குமே தவிர எனக்கு அதுனால எந்த பாதிப்பும் இல்லை. இதை இப்படியே விட்டுட்டு அவங்கவங்க அவங்கவங்க வேலையைப் பார்த்தா காசு பணம் குடும்பம்ன்னு சந்தோசமா இருக்கலாம். சும்மா என் தம்பி வாழ்க்கை போயிடுச்சு, அது இதுன்னு பேசாம, அவன் பொண்ணை நம்ம பையனுக்கு கட்டி வச்சு எல்லாரும் ஒண்ணா இருக்க வழி பண்ணு கல்பனா" என்று சொல்லிவிட்டு அவர்களை விட்டு அகன்றார்.

அவர் போவதை நதியா, வாணி, கல்பனா மூவரும் இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். வருண் கோபத்தின் உச்சியில் இருந்தான். அப்படியாவது இவர் தனக்கு தந்தையாக இருந்தே ஆகவேண்டுமா என்று யோசித்தவன் தாயிடம் சென்று,

"மா ப்ளீஸ் மா இந்தாள் வேண்டாம் மா. நான் படிச்சு வேலைக்கு போய் உன்னை நல்லா பார்த்துப்பேன் மா. அந்த ஆளை மட்டும் வீட்டை விட்டு போகச் சொல்லிடு மா ப்ளீஸ்" என்று தாயிடம் மன்றாடினான்.

அவள் உடைந்துவிடும் தருவாயில் இருந்தாள். அவளுக்கு கணவன் தன் தம்பி வாழ்வைக் கெடுத்திருக்கிறான் என்பதே அதிர்ச்சி என்றால் அவனின் ஒவ்வொரு பேச்சும் அவனின் மன வக்கரத்தைப் பறை
சாற்றியத்தில் அவள் நொந்திருந்தாள்.

இவர்கள் இப்படி பேசிக்கொண்டு வாசலில் நிற்க, உள்ளே சென்ற நம்பி சில பத்திரங்களோடு வெளியே வந்தார்.

"பேசியபடி நீ ட்ரிப் போயிட்டு வந்ததும், கம்பெனி, கப்பல் ரெண்டுமே எனக்குதான். இதோ பேப்பர். சைன் போடு" என்று திமிராகக் கேட்க அதற்குமேல் தாளாதவளாக,

"வெளில போங்க, இப்போவே இந்த நிமிஷமே வீட்டை விட்டு மட்டும் இல்ல. எங்க வாழ்க்கையை விட்டும் போங்க" என்று கல்பனா கத்த,

"ஏண்டி உனக்கும் கடலுக்கும் என்ன சம்மந்தம். அவதான் ஏதோ ஒளறிட்டு இருக்கா. பேசாம இரு" என்று மீண்டும் பத்திரத்தை தீரேந்திரனிடம் நீட்ட,

வாங்கியவன் அதைக் கிழித்து வீசினான். நம்பி சண்டைக்கு செல்ல நினைத்த நொடி, "இதை பத்தி அப்பறமா பார்ப்போம் மாமா. ரொம்ப டயர்டா இருக்கு" என்று அவன் உள்ளே செல்ல, அவனைத் தொடர்ந்து உள்ளே வந்தான் வருண். "மாமா" என்று அருகே வந்தவன், கண்களால் ஏதோ கேட்டுவிட்டு,

"எனக்கு கப்பல்ல சமைச்சு தந்தது போல வேணும் மாமா. நீங்களே குக் பண்ணுங்க ப்ளீஸ்" என்று சமையல் மேடையில் ஏறி அமர்ந்தான்.

தீரேந்திரனும் பிரிட்ஜில் இருந்து மீனை எடுத்தவன் சமைக்கத் துவங்கியதும், நதியா அவர்கள் இருவரையும் வெறித்துப்பார்த்தவள் வேகமாக மாடியேறி அறைக்குச் சென்று விட்டாள்.

மார்டினுக்கு போன் செய்து நலமாக திரும்பிவிட்டதையும் நடந்தவைகளையும் சொன்னவள், நம்பிக்கு ஏதாவது வழியில் தண்டனை அனுபவிக்க வைக்க முடியமா என்று கேட்டதும்,

"எனக்கு தெரிஞ்சு தீரேந்திரன் ரொம்ப ஷார்ப். அவ்ளோ சீக்கிரமா அவனோட மாமாவை விட்டுட மாட்டான். நீ கொஞ்சம் பொறுமையா இரு" என்று அவளை சமாதானம் செய்தார்.

"எனக்கு தீரா மேல கோபமெல்லாம் இல்ல. நானும் அவரை மன்னிக்க தான் நினைச்சேன் முதல்ல. ஆனா இப்போ மனசு வரல மார்ட்டின்." என்று சொல்லிவிட்டு, மெர்சி, ஹென்ரி பற்றி விசாரித்தாள். விடுமுறை முடிந்து வந்து விடுவதாக சொல்லிவிட்டு சற்று நேரம் கண்மூடிக்கிடந்தாள்.

"ஏ தியா சாப்பிட வா டி" என்று அவள் கைப்பற்றி வருண் அழைத்ததும், "உன் அப்பாவை மன்னிச்சிட்டியா டா ரெயின்?" என்று கேட்டாள். அதில் அத்தனை வலி இருந்தது.

அவளை தட்டிக்கொடுத்து டைனிங் டேபிளில் அமர்த்தியவன், அனைவரையும் சாப்பிட அழைத்தான்.

கல்பனா சினத்துடன் மறுத்ததோடு, "அந்த ஆளை வீட்டை விட்டு அனுப்புங்க டான்னா விருந்து செஞ்சு சாப்பிடுறீங்க?" என்று தம்பி மீதும் மகன் மீதும் பாய்ந்தவள்,

"இங்க பாருங்க ஒரு பொண்ணுக்கு எந்த வயசுலையும் அம்மா அப்பா துணைக்கு மனசு ஏங்கும். அவளை சின்னதுல இருந்து அப்பா இல்லாம வளர காரணமாகி, அம்மா சாகவும் இவர் தான் காரணமாகி இருக்கார். அவ சொல்ற கடலை பத்தி எனக்கு தெரியல. ஆனா உலகத்துக்கே ஆபத்துனா இவர் எவ்ளோ மோசமான மனுஷனா இருக்கணும். நான் இவரை எவ்ளோ நம்பினேன் தெரியுமா?" என்று அழ, அவளுக்கு ஆறுதலாக கைப்பற்றி தன் தந்தை சமைத்த உணவை ஊட்டி விட்டு சமாதானம் செய்தாள் நதியா.

இவர்கள் இங்கே சாப்பிட, நம்பி தள்ளி நின்று கவனித்துக்கொண்டிருந்தார். யாரும் அவரை சாப்பிட அழைக்கவில்லை. அவர் கல்பனாவின் மேல் அளப்பரிய அன்பை வைத்திருந்தார். ஆனால் அவரின் தீய எண்ணங்கள் அவர் மனைவிக்கு பிடிக்காமல் போகும் என்பதை மறந்திருந்தார்.

அனைவரும் சாப்பிட்டு சென்றதும், அவர் சாப்பிட அமர்ந்தார். முக்கால்வாசி உணவு காலியான நிலையில் கிச்சனில் ஒரே ஒரு கிண்ணம் மட்டும் ஏதோ மீன் கறி இருக்கக்கண்டு, 'நல்ல வேளை எதையோ இவனுங்க மறக்கப் போய் நமக்கு இப்படி கிடைக்குது. இல்லனா இன்னிக்கு தயிர் சோறு தின்னுருக்கணும்.' என்று நினைத்து சாப்பிட ஆரம்பித்தார்.

அவருக்கு இவர்கள் விரைவில் இதேயெல்லாம் மறந்து விடுவார்கள் எப்போதும் போல தொழிலிலும் வீட்டிலும் தானே கோலோச்சலாம், கூடவே நதியாவை வருணுக்கு மணம் முடித்துவிட்டால் எல்லாமே அவர் குடைக்குக்கீழ் வந்து விடும். அதுவரை இவர்கள் புறக்கணிப்பை பெரிதாக நினைக்கக்கூடாது என்று எண்ணியபடி சாப்பிட்டவர், சற்று நேரத்தில் தொடர்ந்து வாந்தி எடுக்க ஆரம்பித்தார்.

நேரம் செல்ல செல்ல துவண்டு விழுந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

யாருக்கும் எந்த பதற்றமும் இல்லை. வாணி வீட்டில் இருக்க, நதியா தீரன், வருண், கல்பனா நால்வரும் மருத்துவர் வருகைக்காக காத்திருந்தனர்.

"அவர் ஏதோ கடல் உணவு சாப்பிட்டு இருக்கார். அது சேரல. உடம்பு கொஞ்சம் கொஞ்சமா மரத்துப் போகுது. நாளைக்கு வரை கண்ணு முழிக்கலன்னா கோமாவுக்கு போயிடுவார்" என்று சொல்லிச் செல்ல, நதியா வருணையும் தீராவையும் முறைத்தாள்.

தீரா, "சத்தியமாக தனக்கு ஒன்றும் தெரியாது" என்று சொல்ல, "இல்ல நீங்க கண்ணால பேசியதை நான் பார்த்தேன். அவர் பத்திரம் காமிச்சு சண்டை போடும் போது. நீங்க மட்டும் சமைக்க போனீங்க. ஏதோ இருக்கு" என்றதும்

தீரேந்திரன், "நிஜமா மா. அவன் என்கிட்ட நேத்தே சொன்னான், அப்பா பிரச்சனை பண்ணினா உடனே ரியாக்ட் பண்ண வேண்டாம் மாமா. நான் பார்த்துக்கறேன்னு சொன்னான். அதுனால தான் நான் அமைதியா அவன் கேட்டத சமைச்சுக் கொடுத்தேன்." என்று சொல்ல, "நிஜமா தான் நதியா" என்று வருணும் அடித்துப் பேசினான்.

'புட் பாய்சன்' என்று மூன்று நாள் மருத்துவ மனையில் இருந்தவர் சற்றே தேறினாலும் அவர் இடது கை கால் விழுந்து விட்டது.ஆம் பேராலிசிஸ் வந்து கை கால் அசைக்க முடியாது முடமானார் நம்பி.

வீட்டிற்கு அழைத்து வந்து பார்த்துக்கொள்ள ஆள் ஏற்பாடு செய்ததோடு அனைவரும் விலகிவிட, வருண் மட்டும் தந்தையைத் தேடி வந்தான்.

"வா டா. நான் தான் இப்படி ஆகிட்டேன் டா. நீயாவது புத்தியோட பொழச்சுக்கோ. உன் மாமா பொண்ணை கல்யாணம் பண்ணிட்டா எல்லா சொத்தும் உனக்கு தான் டா" என்று எடுத்துக்கொடுத்தார்.

வெறுப்பில் உச்சத்தில் தந்தையை பார்த்தவன், "நான் அந்த மீனை முழுசா உன் சாப்பாட்டுல போட்டு இருக்கணும். போனா போகுதுனு ஒரே ஒரு துண்டு போட்டு தப்பு பண்ணிட்டேன். என் மாமாவும் அவர் பொண்ணும் வேணா தயாள குணத்தோட உன்னை மன்னிக்கலாம். நான் கண்டிப்பா உன்னை மன்னிக்க மாட்டேன். நீ நல்ல அப்பாவா இல்லாம போயிருக்கலாம், நல்ல மாமாவா இல்லாம போயிருக்கலாம். ஏன் நல்ல குடிமகனா கூட இல்லாம போயிருக்கலாம். ஆனா நீ மனசே இல்லாம மனுஷத்தன்மையே இல்லாதவனா எந்த குற்றவுணர்வும் இல்லாம என்னை நதிக்கு கல்யாணம் பண்ணி வச்சு சொத்தை நீ அடையணும்ன்னு நெனச்ச பாரு. அது என்னை கடுப்பாக்கிடுச்சு. அதான் அந்த மீன் சரியா சமைக்கலன்னா உடம்புக்கு வரும்ன்னு தெரிஞ்சே மாமாவுக்கு தெரியாம அதை சாப்பாடுல கலந்து உனக்கு தனியா எடுத்து வச்சேன். இப்பவும் சொல்றேன். இதோட நிறுத்தினா நீ ஏதோ நடமாடுவ, இல்ல சொத்து வேணும், தொழில் வேணும்ன்னு மறுபடி என் மாமா வழிக்குப் போனா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" என்று எச்சரித்துவிட்டு திரும்ப, நம்பியின் புலம்பல் அவனைத் தொடர்ந்தது.

அறை வாயிலில் மகன் பேசியதைக் கேட்டபடி நின்ற கல்பனா அவன் வந்ததும் கண்டும் காணாததைப் போல நகர்ந்தாள். அவளுக்கு மகனின் செயல் தவறாகத் தோற்றவில்லை.

உயிரை பறிக்கவில்லை. ஆனால் உயிர் பயத்தை விதைத்துவிட்டான் என்று நிம்மதிப் பெருமூச்சுடன் வேலையைத் தொடர்ந்தாள்.

வாணிக்கு பேரனுடனும் பேத்தியுடனும் வாயாடியே நேரம் சரியாக இருந்தது. கல்பனாவை அழைத்து தொழில் நுணுக்கங்களை கற்றுத் தந்த தீரேந்திரன், கபிலனை அவளுக்கு உதவிக்கு வைத்தான்.

நதியா விடுமுறை முடிந்து மியாமி கிளம்பும்போது தீரேந்திரன் அவளுடன் கிளம்பிவிட்டான். அவனால் அவன் மகளைப் பிரிந்து இனி இருக்க முடியுமென்றுக்கு தோன்றவில்லை. ஆறுமாத விசாவில் சென்றவன் அடுத்த அங்கேயே உணவகம் துவங்க ஏற்பாடுகளை கவனித்தான்.

பவளப்பாறைகள் பற்றிய அவளின் ஆய்வை சமர்ப்பித்தவள், கப்பல் மாலுமிகளுக்கு பொதுவெளியில் ஒரே ஓது கோரிக்கையை மட்டும் வைத்து தன் யூட்டியூப் சேனலில் அவள் பதிவு செய்த நங்கூரம் பவளப்பாறையை சேதப்படுத்தும் காட்சியை பதிவேற்றினாள்.

"நீங்க செய்யற சின்ன விஷயம் கூட இந்த உலகத்தை அழிவுப்பாதைக்கு கொண்டு போகணும்ன்னு நான் சொன்னா உங்களுக்கு சிரிப்பா தான் இருக்கும். கிறுக்குத்தனமாத் தான் தோணும். ஆனா உண்மை அது தான். சார்ஜர் போட்டு நீங்க ஆஃப் பண்ண மறக்கர ஸ்விட்சல இருந்து, நீங்க நசுக்கித் தூக்கிப் போடாத பிளாஸ்டிக் பாட்டில்ல இருந்து, நாம கவனக்குறைவா விடுற சின்ன சின்ன விஷயம் நமக்கு விஷமா மாறிக்கிட்டு இருக்கு. அதுனால கவனமா இருங்க. மாலுமிகளே, உங்க கப்பல் நங்கூரம் போடுறதுக்கு முன்னாடி அங்க பவளப்பாறை இருக்கான்னு உங்க ஜி பி எஸ் கருவி மூலமா தெரிஞ்சுக்கோங்க.

நீரின்றி அமையாது உலகு. ஆனா அந்த நீரே நம்மை அழிக்கிற நிலைக்கு நாமே அதை தள்ளிடக்கூடாது" என்று வீடியோ பதிவேற்றி இருந்தாள். அது வைரலாகி அவளின் எண்ணங்களை பல இயற்கை, மற்றும் கடல் ஆர்வலர்கள் ஏற்றுக்கொண்டு அவள் சில நாட்கள் உலக ஊடகங்களின் வெளிச்சத்தில் நின்றாள்.

தன் தந்தையோடு அவர் உணவகத்திற்கு செல்வது, மார்ட்டின் ஹென்ரியோடு வம்பு வளர்ப்பது என்று அவளின் நாட்கள் அழகாகக் கழிந்தது.

வருண் இந்தியாவிலேயே உயர் கல்வியை தொடர்வதாக அறிவிக்க கடுப்பானவளை சின்ன புன்னகையோடு சமாளித்தவன், பாட்டிக்கும் அம்மாவுக்கும் துணை என்று சொல்லி அவளின் கோபத்தை ஒன்றுமில்லாமல் செய்தான். நம்பியால் எதுவும் முடியாமல் அவர் அறையிலேயே முடங்கினார்.

நாட்கள் வண்ணமயமாக கடந்து கொண்டிருந்தது நதியாவுக்கும் தீராவுக்கும்.

அன்று மாலை கல்லூரி முடிந்து தந்தையோடு கடற்கரை மணலில் கைகோர்த்து நடந்தாள்.

"ஏன் தீரா நானும் நீயும் பார்க்காமலே போயிருந்தா என்ன ஆகி இருக்கும்?" என்று கவலையோடு அவள் வினவ,

"இந்த தீராவோட தேடல் நதியை சேராம போயிருக்கும்" என்று சொன்னான்.

அவளோ, "இப்போ தீராவும் நதியும் சேர்ந்து இந்த கடலோடவும் சேர்ந்துட்டோம். உன் தேடல் தான் தீரா எல்லாத்துக்கும் காரணம்" என்று தந்தை மார்பில் தஞ்சம் கொண்டாள்.

தேடலோடு துவங்கிய தீராவின் பயணம் நதியோடு இணைந்து கடலை அடைந்தது.

தேடல்களோ தீராநதி இனிதே நிறைவுற்றது.

★★★★

* வருண், நதி இருவரின் வாழ்வை மற்றொரு பாகத்தில் பின்நாளில் காண்போம்.

* நம்பிக்கான தண்டனை குறைவாக தோன்றலாம். ஆனால் மொத்த குடும்பத்தின் ஒதுக்கம், கை கால் முடமானதோடு, உயிர் மீது ஏற்பட்ட பயமே ஒரு மனிதனை செயலிழக்க வைக்க போதுமானது. அப்பறம் பார்ட் 2 ல இந்த நம்பி வேணும். அதான் போனா போகுதுன்னு உயிரை விட்டு வச்சிருக்கேன்.

* வருண் உணவில் கலந்ததாக சொல்லப்படும் மீன் வகை நிஜத்தில் உண்டு. அது சரியாக சமைக்காத பட்சத்தில் உடல் மரத்துப்போகச் செய்து, கோமா நிலைக்கு தள்ளிவிடும் அதே நேர வாதம் வரவழைக்கக்கூடியது. அதன் பெயரை பொதுநலன் கருதி சென்சார் செய்து விட்டேன்.

★★★

இந்த கதைக்கான தகவல்கள் அனைத்தும், ஒரு உணவாக நிறுவனரிடமும், டைவிங் கோச் ஒருவரிடமும் நேரடியாக கேட்டு எழுதியது.

கடல் மீன்கள் மற்றும் பவளப்பாறைகள் பற்றிய தகவல்கள் இணையத்தில்
Wikipedia, Britannica, noaa, cnn, live science. போன்ற உண்மைத்தன்மை பொருந்திய தளங்களில் இருந்து எடுக்கப்பட்டது.

தொடர்ந்து படித்து ஆதரவு நல்கிய அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள் 🙏🙏

 
Top