கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துணையாக நான் வருவேன்-1

Akila vaikundam

Moderator
Staff member
1

ரம்மியமான காலை வேளை...திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சிற்றூர்…விவசாயத்தை நம்பி வாழும் மக்களும் வியாபாரத்தை நம்பிவாழும் மக்களும் கலந்து வாழும் இடம் அது.

அங்கு வாழும் நாயகி வேதவள்ளியின் குடும்பம்...ஒரு தம்பி...ஒரு தங்கை மற்றும் தாய் தந்தையர் என ஐவரை கொண்டது…

தம்பி கவின் பாளையங்கோட்டை விடுதியில் தங்கி கணிதவியல் இரண்டாம் ஆண்டு பயில்கிறான்.

தங்கை இந்துமதி...ஊள்ளூர் அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயில்கிறாள்.

தாய் பாக்யா...குடும்பதலைவி….
தந்தை லோகநாதன் டவுனில் பலசரக்கு கடை…
நாயகி வேதவள்ளி உள்ளூர் கல்லூரியில் பிஎ முடித்தவள்... ஐஏஎஸ் கனவோடு இருந்தவள் ஆனால் வீட்டில் குடும்பச் சூழ்நிலை அவளால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை.


அவள் படித்த உள்ளூர் கல்லூரி அதிக பெயர் வாங்கியது இல்லை உள்ளூரில் சிறிய அளவில் நடந்து கொண்டிருப்பது அப்படி ஒரு காலேஜ் இருப்பதே வெளியூர் வாசிகளுக்கு தெரியாது கட்டணம் மிகக் குறைவு என்று தந்தை அக்கல்லூரியில் சேர்த்துவிட இவளது அறிவுபசிக்கு தீனி கிடைக்கவில்லை…

அத்தோடு ஐஏஎஸ் கனவும் போனது...படிப்பின் ஆர்வமும் போனது...ஒரு வழியாக படிப்பை முடித்தவள் தாய்க்கு துணையாக வீட்டிலேயே இருந்து கொண்டாள்.

நன்கு சமைப்பாள்...நன்கு சாப்பிடுவாள்...நன்கு தூங்குவாள்...சற்று புசுபுசுவென இருப்பதால்... அவளுக்கு தம்பியும் தங்கையும் அடிக்கடி செல்ல பெயர் சூட்டுவர்.

சில சமயம் புளிமூட்டை ,சில சமயம் அரிசி மூட்டை பப்ளிமாஸ், தக்காளி, என்று நேரத்திற்கு தகுந்தபடி அவளின் பெயர்களும் மாறுபடும்.

இப்பொழுது வயது இருபத்தி மூன்றை கடந்து இருப்பதால் அவளுக்கு திருமணம் செய்வதற்காக தந்தை மிகத் தீவிரமாக மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தார்…


திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் குடியேறிய வெற்றி மாறனை பார்த்திருந்தனர்... அவனுக்கு வயது முப்பத்தி ஒன்று…


மகளை விட எட்டு வயது வித்தியாசம் சிறு உறுத்தலாக இருந்தாலும் மாப்பிள்ளைக்கு சென்னையில் சொந்த வீடு வாகனம் கடை என ஓரளவு வசதியாக இருந்ததால் மகள் இந்த சிற்றூரில் வாழ்வதைவிட பட்டணத்தில் சென்று சௌகரியமாக வாழட்டும் என்று முடிவெடுத்து பேசி முடித்தார்.

வெற்றி மாறனுக்கு ஒரு மூத்த சகோதரியும் இளைய சகோதரனும் உண்டு... சகோதரிக்கு திருமணமாகி பதினைந்து வயதில் ஒரு மகள் இருக்கிறாள்... தம்பிக்கும் திருமணமாகி அவனின் மனைவி இப்பொழுது கர்ப்பம் தரித்து இருக்கிறாள்.

ஏனோ மாப்பிள்ளை திருமணமே வேண்டாம் என்று கூறிக் கொண்டிருந்தார்.உங்கள் மகளின் புகைப்படத்தை பார்த்ததும் ஒத்துக் கொண்டதாக தரகர் கூறினார்.

அதை கேட்டதும் வேதாவின் பெற்றொருக்கு மகிழ்ச்சியே

இதோ இன்று பத்துமணிக்கு வேதாவை மாறனின் குடும்பம் முறைப்படி பெண் பார்க்க வருகிறது ஆனால் நாயகி வேதா காலை ஏழு மணிவரை உறங்கிக் கொண்டிருக்கிறாள்.

"வேதா...எந்திரி…
ம்ச்ச்... எந்திரினு சொல்றேன்ல பத்து மணிக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க இன்னும் படுத்து தூங்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் வீட்டில போட்டதெல்லாம் போட்ட மாதிரி இருக்கு எப்படி தான் உன்னை கட்டிக்கிட்டு போயி அந்த மனுஷன் பாடு பட போறாரோ"...

"ம்மா...ப்ளீஸ்மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேனே"….


"அதெல்லாம் முடியாது எழுந்திரு"…


"ம்ச்… ம்மா பத்துமணிக்கு வர்றதுக்கு ஏன்மா இப்பவே எழுப்பறீங்க"…


"இங்க பாரு வேதா இப்போ நீ எழல கண்டிப்பா தண்ணி எடுத்துட்டு வந்து முகத்தில கொட்டிடுவேன்,இவ்ளோ தான் மரியாதை எழுந்து பாயை மடிச்சி வை வீட்டை கூட்டு..பின்னாடி கொல்லைல பாத்திரம் கிடக்கு போய் அதை துலக்கு" என்று வரிசையாக வீட்டு வேலைகளை அடுக்க எப்போதடா மாப்பிள்ளை வீட்டினர் வந்து தன்னை காப்பாற்றிவார்கள் என வேண்ட தொடங்கினாள்.


ஒருவழியாக நேரம் பத்தை கடக்க மாப்பிள்ளை வீட்டினர் ஒரு இன்னோவா காரில் வந்து இறங்கினார்கள். சென்னையில் இருந்து வாகனத்திலே வந்திருக்கிறார்கள் அதும் அவர்களது சொந்த வாகனத்தில் என்று தெரியவும் வேதாவின் பெற்றோருக்கு சந்தோஷத்திற்கு அளவேயில்லை.


மாப்பிள்ளை வீட்டினர் மொத்தம் ஏழு பேர் வந்திருந்தனர் ...மாறனின் சகோதரி செல்வி,மகள் தர்ஷினி,கணவர் ரகு,தாய் கனகா,தந்தை ரத்தினம், அவனின் தம்பி செழியன் உறவினர் ஒருவர் வந்திருக்க மாப்பிள்ளை வரவில்லை.

வேதாவின் வீட்டைப் பார்த்ததுமே செல்விக்கு சுத்தமாக பிடிக்கவில்லை தாயின் காதை கடித்தாள்.

"என்ன அம்மா வீடு இவ்வளவு சின்னதா இருக்கு அந்த காலத்து ஓட்டுவீடு இந்த காலத்துக்கு ஏத்தது போல எடுத்து கூட கட்டல.. இந்த வீட்டல இருந்து பொண் எடுக்குறீங்களா நமக்கு இதெல்லாம் சரியா வருமா கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க" என்று கூறினாள்.


" இங்க பாரு செல்வி உன் தம்பி கல்யாணத்துக்கு ஒத்துகிட்டுதே பெருசு இதுல வீடு நல்லா இருக்கா பெருசா இருக்கான்னு பாத்துட்டு இருந்தோம்னு வெச்சுக்கோ..


அவன் மனசு மாறி மறுபடியும் கல்யாணம் வேண்டாம்னு பிரச்சனை பண்ண ஆரம்பிச்சிடுவான் அதனால தயவு செஞ்சு நீ எதுவும் பேசாம இரு எப்படியோ என் பையனுக்கும் ஒரு கல்யாணம் ஆனா போதும் என் மனசு சாந்தி அடைஞ்சிடும் சின்னவன் அவனை விட ரெண்டு வயசு சின்னவன் அவன் கல்யாணம் பண்ணி ஒரு குழந்தையே பெத்துக்க போறான்.


ஆனா பெரியவன் இன்னும் ஒண்டிக்கட்டையா இருக்கான் அதனால வீட்டை காரணம் காட்டி தயவு செஞ்சு அங்க வந்து எதையும் பேசிடாதே "என்று கனகா தன்மையாக செல்வியிடம் கூறினார்.


"என்னம்மா தம்பிக்கு கல்யாணம் ஆக கூடாதுன்னு நினைச்சுட்டு இதெல்லாம் சொல்றேன்னு நினைக்கிறீங்களா..? சின்னதம்பி மனைவி நல்ல வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவ நிறைய நகையும் போட்டுட்டு வந்தா இவ ஒண்ணுமே இல்லாம வரும்பொழுது அவளுக்கும் இவளுக்கும் மனஸ்தாபம் வர கூடாது இல்லையா அதுக்காக சொன்னேன்.


உங்களுக்கே பிரச்சனையில்லங்கற போது எனக்கு என்னமா பிரச்சனை தம்பிக்கு ஒரு கல்யாணம் ஆனா போதும் வீடு எப்படி இருந்தா என்ன…?" என்று கூறிய செல்வி மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை…. அதன்பிறகு எல்லோருமே வீட்டிற்குள் சொல்லத் தொடங்கினார்கள்.


முதலில் வீட்டிற்குள் செழியன் தான் சென்றான் அவனுக்கு அண்ணியைப் பார்க்க வேண்டும் அவனின் நீண்ட நாள் ஆசை .


அண்ணனுக்கும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பெண் பார்க்கிறார்கள் திருமணமே வேண்டாம் என பிடிவாதமாக மறுத்துவிட்டார் .


இப்பொழுதுதான் கடைசியாக ஒரு வழியாக தலையாட்டி இருக்கிறார் அதுவும் வேதாவின் புகைப்படத்தை பார்த்ததும்…!


அப்படி என்ன இருக்கிறது வேதாவிடம்…? அதை கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுடன் உள்ளே வந்தவனுக்கு ஏமாற்றம்.


குட்டி குட்டியாக அந்த வீட்டில் நான்கு அறைகள்...பழைய காலத்து ஒட்டு வீடு….தரை காரையால் ஆனது...நன்கு சாணம் போட்டு மொழுகியிருந்தார்கள்.


முதல் அறையில் இவர்கள் அனைவரும் வந்தால் உட்காருவதற்கு தயாராக சில சேர்களும் பாயும் போடப்பட்டிருந்தது.


அந்தப்பக்கம் வேதாவின் அறை போல எட்டிப்பார்த்தால் கூட உள்ளே அவளின் தலையைக் காணோம்.


இந்தப்பக்கம் ஒரு தடுப்பு போல அமைத்திருந்தது அனேகமாக பெண்கள் உடை மாற்றுவதற்காக போட்டிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டான்.


பின்புறம் சமையலறை எல்லாமே ஒரு யூகம்தான் உறுதியாக தெரியவில்லை ஆண்கள் அனைவரும் சேரில் அமர பெண்கள் அனைவரும் தரையில் போட்டிருந்த பாயில் அமர்ந்தார்கள்.


அவர்களை புன்னகையுடன் வரவேற்ற
வேதாவின் பெற்றோர்கள் "மாப்பிள்ளை வரவில்லையா"?...என்று சற்று அதிச்சியாக கேட்க…


"அவனுக்கு நிறையா வேலை அதான் எங்களை மட்டும் அனுப்பி வச்சான்.அதான் பொண்ணை ஃபோட்டோல பாத்தாச்சே நேர்ல ஏன் பாக்கனும்னு வரல நீங்க தப்பா எடுத்துக்காதீங்க... எங்களுக்கு பிடிச்சாலே அவனுக்கு பிடிச்ச மாதிரி தான்"….



"அதுக்கில்ல சம்மந்தி நேர்ல பார்த்து கல்யாணம் பண்ணினாலே ஆயிரத்தெட்டு பிரச்சினை வருது இதுல மாப்பிள நேர்ல பார்க்கலனா எப்படி ..
என் பொண்ணும் பையனும் நேர்ல ஒருவாட்டி பார்த்துட்டா அவளுக்கு ஒரு திருப்தியா இருக்கும் இல்லையா"…
என்று பாக்யா நேரடியாகவே மாப்பிள்ளையின் தாயாரை பார்த்து கேட்டார்.


பதில் கூற தெரியாத கனகா "அது வந்து சம்மந்தி அவனோட வேலை அப்படி கண்டிப்பா பாக்கனும்னா இடையில ஒருநாள் வரச்சொல்லறோம் இப்போ நாங்க பொண்ணை பாக்கறோம்...அவன் வந்து பாத்ததும் உங்க பொண்ணுக்கு பிடிச்சா மேற்கொண்டு பேசிக்கலாம்"…என்று சற்று அசட்டையாக கூறினார்.



எங்கே வரன் தட்டி போய் விடுவோமோ என்று பயந்த வேதாவின் பெற்றொர்கள் "பரவால்ல சம்மந்திமா...நீங்க பாருங்க நாம இன்னைக்கே மேற்கொண்டு பேசலாம் "என்று கூறிவிட்டு வேதாவை அழைக்க…


பக்கத்து வீட்டு பெண்மணியுடம் மங்சள்நிற பட்டுபுடவையை அணிந்து தலைநிறைய மல்லிகைப்பூவைச் சூடியபடி எல்லோரும் ஃகாபி எடுத்து வந்தாள்.


சராசரி உயரம் மாநிறம் குட்டையான சுருள் முடி சற்று சற்று பூசினால் போல உடல்வாகு ஆனாலும் வேதவள்ளிக்கு அதுதான் அழகாக தெரிந்தது...



அவளை உடல் பருமனான பெண் என்று ஒதுக்கவும் முடியாது ஒல்லியான தேகம் என்று எடுத்துக் கொள்ளவும் முடியாது... சற்று உடல் பருமனாக இருப்பதால் உயரம் கம்மி போல் தோன்றுவாள் ஆனால் அருகில் நின்று பார்க்கும் பொழுது தான் அவளின் உயரத்தை மற்றவர்களால் கணிக்க முடியும்.


அனைவருக்கும் காபியை கொடுத்தவள் கடைசியாக செழியனுக்கு கொடுக்கும் பொழுது ஆர்வமாக அவனைப் பார்க்க


"அண்ணி பார்த்து மேல கொட்டிட போறீங்க" என்று சொல்லவும் தான் உரைத்தது இவன் மாப்பிள்ளை அல்ல மாப்பிள்ளையின் சகோதரன் இது என்ன வம்பு என்று ஒரு நிமிடம் அசடு வழிந்தாள் .


அவன் சிரித்தபடியே "அண்ணா வேலை இருக்குன்னு இன்னைக்கு வரல எங்களுக்கெல்லாம் பிடித்தாலே போதும்னு சொல்லிட்டாங்க எங்க எல்லாருக்குமே உங்களை பிடிச்சிருச்சு உங்களுக்கு எங்க எல்லாரையும் பிடிச்சிருக்கா "என்று பளீர் சிரிப்புடன் கேட்டான்.


சற்று வெட்கப்பட்டுக் கொண்டே உள்ளே சென்று விட்டாள் வேதா.


அவளுக்கு மாப்பிள்ளையின் புகைப்படத்தை காட்டவும் இல்லை மாப்பிள்ளை வராததை கூறவும் இல்லை வீட்டு வாசலில் வாகனம் வந்து நிற்கும் பொழுது மாப்பிள்ளை வீட்டினர் வந்து விட்டார்கள் என்று கூறியதால் மாப்பிள்ளையும் வந்து இருப்பார் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டாள்.


நேராக வீட்டுக்குச் சென்றவள் உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு ஒரு சேரில் அமர்ந்து விட்டாள்.


வெளியில் மாப்பிள்ளை வீட்டினருக்கு வேதாவை மிகவும் பிடித்து விட்டதால் அவர்கள் நிச்சயதார்த்தம் என்று வைத்துக்கொள்ளலாம் திருமணத்தை எப்போழுது நடத்தலாம் என்பதை பற்றியெல்லாம் பேசத் தொடங்கினார்கள் .


வேதாவின் பெற்றோருக்கும் மாப்பிள்ளை வரவில்லையே என்ற சிறு உறுத்தலை தவிர வேறு எதுவுமே இல்லை... அதனால் அவர்களும் ஆர்வமுடன் திருமண விஷயத்தில் கலந்து கொண்டனர்.



அனைவருக்கும் எல்லா விஷயத்திலும் திருப்தி ஏற்பட்டுவிட பெண்ணிற்கு பூவை வைத்து விட்டுச் செல்கிறோம் என்று கூறினார்கள் சற்றும் யோசிக்காத வேதாவின் தாயும் தந்தையும் உடனே ஒத்துக்கொள்ள சரி பெண்ணை அழைத்து வாருங்கள் என்று கூறினார்கள்.



சந்தோஷமாக உள்ளே ஓடிவந்த பாக்யா மகளிடம் "வேதா நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாருக்கும் உன்னை ரொம்ப பிடிச்சி போச்சு இப்போ உனக்கு பூ வைக்கணும்னு ஆசை படுறாங்க வா போகலாம்".


" என்னம்மா இது மாப்பிள்ளையை நான். பாக்கவேயில்ல ஆனா பூ வைக்கனும்னு சொல்லறீங்க…


மாப்பிள்ளை பாத்ததுக்கு அப்புறமா இதெல்லாம் பண்ண கூடாதா…? என்று மனதில் சிறு ஆதங்கத்தை வைத்து படி கேட்டாள்.


"இங்க பாரு வேதா இவங்க ரொம்ப நல்ல வசதியான குடும்பம் நம்ம வீடு மாதிரி ஓட்டு வீடு கிடையாது… கான்க்ரீட் வீடு... கார் இருக்கு எங்கனாலும் நீ காரிலேயே போயிட்டு வரலாம் இங்க மாதிரி நடந்து போக வேண்டாம்…


பார்த்தல்ல எப்படி ஜம்முனு இருக்க அந்த குடும்பம் அந்த குடும்பத்துக்கு நீ போனா எங்களுக்கு எவ்வளவு பெருமையா இருக்கும் உனக்கு கீழ ஒரு தங்கச்சி இருக்கா ஒரு தம்பி இருக்கான் நீ இப்படி பொறுப்பில்லாமல் பிடிவாதம் பிடிச்சா என்ன அர்த்தம் சொல்லு.

அதனால நல்ல பிள்ளையா வந்து நிப்பியாம் மாப்பிள்ளை போட்டோவ நான் உனக்கு வாங்கி தரேன் நீ பாத்துக்கோ" என்று அவளை சமாதானப்படுத்த தாயின் பேச்சை மீற முடியாத வேதா மௌனமாக தலையசைத்த படி வீட்டின் முன்னறைக்கு வந்து நின்றாள்.

எல்லோரையும் பார்த்து சம்பிரதாயமாக சிரித்தவள் அவர்கள் ஆட்டி வைக்கும் பொம்மை போல் சொல்படி கேட்டு நடக்க ஆரம்பித்தாள்.

கடைசியாக செல்வியும் கனகாவும் சேர்ந்து அவள் தலையில் பூ சூட வேதாவிற்கு காரணமே இல்லாமல் கண்களில் நீர் கட்டியது.

' மாப்பிள்ளை யார்... என்ன என்று எதுவுமே தெரியவில்லை கருப்பா சிவப்பா எப்படி இருப்பார் அதுவும் தெரியாது பெண் பார்க்க கூட வரவில்லை எதை நம்பி தான் இவர்கள் முன்பு வந்து நிற்கிறேன்.

வாழ்க்கை துணையாக வரும் பெண்ணை கூட காண ஆர்வம் இல்லாத ஒருவனை திருமணம் செய்து கொண்டு என்னுடைய காலத்தை எப்படி கடத்த போகிறேன் 'என்று பலவாறாக நினைத்தவளுக்கு எவ்வளவு அடக்கியும் கண்களில் வழிந்த கண்ணீரை அடக்க முடியவில்லை தானாக கண்களை விட்டு கண்ணீர் இறங்க.


"என்னம்மா இப்பவே அம்மா அப்பாவை பிரிந்து போறதை நினைச்சு கவலைப் படறீயா கவலைப்படாதே நீ போற இடத்துல ரொம்ப நல்லா இருப்ப" என்று பாக்யா வேதாவின் கண்ணீரைத் துடைத்து விட மரக்கட்டை போல் கண் சிமிட்டாமல் தாயையே பார்த்துக் கொண்டிருந்தாள் வேதவள்ளி.

தொடரும்....
 
Top