கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துணையாக நான் வருவேன் -18 முடிவு

Akila vaikundam

Moderator
Staff member
18


சரி இப்போ உன் சந்தேகம் கோபம் எல்லாம் தீர்ந்ததா வேதா என்று கேட்டான்.



அவளும் வெட்கப்பட்டுக்கொண்டே தீர்ந்தது என்பதுபோல் தலையை அசைத்தாள்.



ம்ம்...நல்லது ஒருவழியா என்னை புரிஞ்சிகிட்டியே அதுவே போதும் என்று கூறியவன் சரி இப்போ சாப்பிடலாம் சாப்பாடு வந்து ரொம்ப நேரம் ஆச்சு ஆறினா நல்லா இருக்காது என்று கூறியபடி சர்வர் வைத்து விட்டு சென்ற உணவை இருவரும் பகிர்ந்து உண்டனர்.



சாப்பிடும் வரை பொறுமை காத்த வேதா மாறனை பார்த்து சரி வாங்க இப்பவே போய் ஆசிரமத்திலிருந்து விஷாகாவை கூட்டிட்டு வீட்டுக்கு போகலாம் என்று கூறினாள்.




உடனே மாறன் அவசரப்படாதே நீ இன்னைக்கு காப்பகத்தில அடித்த கூத்துக்கு அவங்களுக்கு இனி மேல் என்கூட குழந்தையை அனுப்புற எண்ணமே காணாம போயிடுக்கும்.





இனி மறுபடியும் பொறுமையா அவங்ககிட்ட நம்மள பத்தி புரிய வச்சு தான் குழந்தையை நம்மகிட்ட வாங்குற மாதிரி இருக்கும் அதுக்கு நம்மளோட சக்தி மட்டும் பத்தாது…கடவுளோட சக்தியும் தேவைப்படும்.



அப்போ என்ன செய்யறது என்று கவலையாக அவனைப் பார்த்து கேட்டாள்.




இப்போ எதுவும் செய்ய வேண்டாம் நாம ரெண்டு பேரும் இப்ப செய்யவேண்டியது நேரா திருப்பதி கோவிலுக்கு போறது என்று கூறவும் யோசனையாக அவனைப் பார்த்தாள்.




அவளின் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் வேதா நீயும் நானும் சேரனும்ங்கறதுக்காக நம்ம குடும்பத்துல இருக்கிற அத்தனை பேரும் நம்மளை தனிமைப்படுத்திட்டு திருப்பதிக்கு போனாங்க இல்லையா…?



அந்த நிகழ்வு தானே என்னை உன் பக்கம் திரும்பிப் பார்க்க வைச்சது நீ மட்டும் அந்த சமயத்தில் தாத்தாவை கவனிக்காமல் இருந்தா ராதிகாவுக்காக பதறாம இருந்திருந்தா உன் நல்ல குணம் எனக்கு புரியாமலே போயிருக்கும்.




உன் குணம் தெரியாமலே உன்னை அனுப்பியும் வெச்சி இருப்பேன் இதெல்லாம் ஏன் நடந்தது சொல்லு…. எல்லாமே அவனோட விளையாட்டு நமக்குள்ள ஒரு சண்டையை உருவாக்கி ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரியவச்ச அந்த கடவுளுக்கு ஒரு நன்றியை தெரிவிக்க வேணாமா…




அதனால இப்போ நாம ரெண்டு பேரும் நேரா திருப்பதிக்கு போறோம் நாளைக்கு காலையில கடவுளை தரிசனம் பண்ணிட்டு அதே பாதைக்கு காப்பகத்துக்கு போய் தேவகி அம்மாகிட்ட நம்மள பத்தி தெளிவா சொல்லிட்டு விஷ்வாவை கையோட அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு வரலாம்…




எல்லாம் சரி நானும் வீட்டை விட்டு வந்து ரொம்ப நேரமாயிடுச்சு நீங்களும் வந்து ரொம்ப நேரமாயிடுச்சு வீட்ல தேட மாட்டாங்களா…?





இதுக்குதான் இவ்வளவு தயக்கமா ஒரு நிமிஷம் இரு என்றவன் செழியனுக்கு அழைத்து வேதா தன்னுடன் இருப்பதாகவும் யாரும் தங்களை பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டவன்….இப்பொழுது இருவருமே நேராக திருப்பதி செல்வதாகவும் நாளை கடவுளை தரிசித்து விட்டு வீட்டிற்கு வருவதாக கூறிய படி அலைபேசியை அணைத்து வைத்தான்.




இப்போ உன்னோட குழப்பம் போயாச்சா என்று கூறியவன் அங்கிருந்து அவளை அழைத்துக்கொண்டு ஒரு வாடகை வாகனத்தில் திருப்பதியை நோக்கிப் பயணித்தான் நள்ளிரவில் அங்கு சென்றவர்கள் அடிவாசலிலே தங்கிவிட்டு விடியற்காலை நடைபயணமாக தரிசனம் பார்க்க கிளம்பினர்.



மதிய வேளையில் திருப்தியாக தரிசனம் முடித்தவர்கள் அதன் பிறகு கீழே இறங்கி வந்து அவர்கள் சென்ற வாடகை வாகனத்திலேயே மீண்டும் சென்னை திரும்பினார்கள்.




வரும் வழியிலேயே விஷாகா தங்கியிருக்கும் காப்பகம் இருந்ததால் அப்படியே நேராக காப்பகத்திற்கு விடச் சொன்னான் அதன்பிறகு காப்பக நிர்வாகியை சந்திப்பதற்காக நேரம் கேட்டு காத்திருக்க சற்று நேரத்திற்கெல்லாம் அவரும் வந்து அவர்களை சந்தித்தார் என்ன விஷயம் என்று கேட்கவும்




வணக்கம் மேடம் நாங்க விஷாகாவை சட்டப்படி எங்களோட அழைச்சிட்டு போக வந்திருக்கோம் இந்தாங்க அதுக்கான டாக்குமெண்ட்ஸ்…. என்று கேட்டபடி வேதாவும் மாறனும் தேவகியை அம்மாவின் முன் அமர்ந்திருந்தார்கள்.




அதை வாங்கிப் பிரித்துக் கூட பார்க்காத தேவகி சாரி மிஸ்டர் மாறன் இத சொல்றதுக்கு எனக்கு இப்போ கஷ்டமா தான் இருக்கு ஆனா இதைச் சொல்லிதான் ஆகனும்….



விஷாகாவோட விஷயத்துல ஆரம்பத்திலிருந்தே நிறைய குழப்பங்கள் ஆனாலும் அவளுக்கு நீங்க ஸ்பான்சர் பண்ணறீங்கனு அவளோட பாதுகாப்பு விஷயத்துல நாங்க அக்கறையில்லாமல் இருக்க முடியாது இல்லையா .




ஏற்கனவே அவளை தத்து எடுப்பதற்கு சில பெற்றோர்கள் தயாராக இருந்த நிலையில தான் நீங்களே அவளை தத்தெடுத்துக்கறதா சொன்னீங்க அதனாலதான் நாங்க அவளை இவ்ளோ நாள் வச்சிருந்தோம்.




ஆனா கணவன் மனைவிக்குள்ள சரியான புரிதல் இல்லாமல் உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல அந்த குழந்தை மாட்டிகிட்டு அவளுடைய எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாதுனு நினைச்சு நாங்க வேற ஒருத்தருக்கு அவளை இன்னிக்கி காலைல தான் தத்து கொடுத்தோம்.




கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அவங்க வந்து கூட்டிட்டு போனாங்க என்று கூற மாறனுக்கு இதயமே நொறுங்க ஆரம்பித்தது அவர் கூறுவது உண்மைதானா என்று காதுகளையே நம்ப மறுக்க கண்களிலிருந்து கண்ணீர் அவனின் அனுமதி இல்லாமல் கீழே இறங்கியது.




தேவகி கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த வேதா கோபமாக எப்படி மேடம் இத்தனை நாள் அந்த குழந்தையோட எல்லா செலவுகளையும் இவர்தான் பாத்துக்கிட்டு இருக்காரு அதுமட்டுமில்லாம உங்களோட ஆப்னேஜ்க்கு பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தவருக்கு குழந்தையை கொடுக்காம யாரோ ஒருத்தருக்கு கொடுத்து இருக்கீங்க இது எந்த வகையில் நியாயம் என்று பொரியத் தொடங்கினாள்.





அமைதியான தேவகி அம்மா இங்க பாருங்க மிஸஸ் மாறன் இந்த காப்பகத்தை பொருத்தவரைக்கும் இங்கு இருக்கிற ஒவ்வொரு குழந்தைகளையும் யாரோ ஒருத்தர் பராமரிப்பில் தான் வளர்ந்த கிட்டு இருக்காங்க.




ஒரு சிலர் தொடர்ந்து ஒரே குழந்தைக்கு கொடுப்பாங்க ஒரு சிலர் வருஷா வருஷம் குழந்தையை மாத்திப்பாங்க.




சில குழந்தைகளுக்கு மட்டும் தான் நேரடியாக பெற்றோர்கள் கிட்ட இருந்து பணம் வந்து சேரும் மீதி எல்லா குழந்தைகளுக்கும் இது தான் நடைமுறை.




என்னைக்கு விஷாகாவோட அம்மா தவறினதா அவங்களோட டெத் சர்டிபிகேட் எங்களோட ஆபீசுக்கு வந்ததோ அந்த நிமிஷமே விஷாகாவும் பொது குழந்தைகள் லிஸ்ட்க்கு போயிட்டாங்க.





ஒருவேளை மாறன் அந்த குழந்தைக்கு ஆகும் செலவுகளை செய்யலனா கூட வேற யாராவது ஒருத்தர் செய்ய தான் போறாங்க கடவுள் கண்டிப்பா யாரையும் கைவிட போறது கிடையாது.




எங்களுக்கு இங்கு இருக்கிற ஒவ்வொரு பெண் குழந்தைகளோட பாதுகாப்பும் ரொம்ப முக்கியம் இப்படி ரெண்டு பேரும் சண்டை கோழி மாதிரி சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது எந்த நம்பிக்கையில் நாங்க அந்த குழந்தையை உங்க பின்னாடி அனுப்ப முடியும் சொல்லுங்க.




இன்னைக்கு வேணும்னு சொல்ற நீங்க நாளைக்கு வேணாம்னு யோசிச்சா அந்த குழந்தை எங்கே போகும் மறுபடியும்




கொஞ்ச நாளாவது அந்த வீட்டோட ஆடம்பரத்தாலயும்,வீட்டு சூழ்நிலைல இருந்த பிறகு மறுபடியும் இங்க வந்து இயல்பா இருக்குமா.. அதான் எல்லாம் யோசிச்சி அவங்ககிட்ட குடுத்துட்டோம் என்றார்.




அவர் கூறியவற்றில் இருந்த நிதர்சனத்தை புரிந்துகொண்ட மாறன் நா தழுதழுக்க அவரிடம் மேடம் அவங்களோட அட்ரஸ் தரமுடியுமா நான் ஒருமுறை போய் பேசிப் பார்க்கிறேன் என்று கேட்டான்.




முகத்தில் அடித்தது போல முடியாது மாறன் அது இந்த காப்பகத்தோட ரூல்ஸ் கிடையாது ஒரு வேளை நீங்க ரெண்டு பேரும் ஒரு குழந்தையை தத்தெடுக்கறதுல உறுதியா இருந்தா வேற குழந்தைகளை பாருங்க அந்த குழந்தைக்கு விருப்பப்பட்டா நீங்க தாராளமா கூட்டிட்டு போலாம் மேற்கொண்டு விஷாகாவை பற்றி பேச ஒன்றுமில்லை என்பதுபோல் முடித்துக்கொண்டார் .



அதற்கு மேல் அங்கு இருந்தால் மரியாதை இல்லை என உணர்ந்த மாறனும் வேதாவும் அங்கிருந்து மனவருத்தத்துடன் கிளம்பினார்கள்.




வீட்டிற்கு காரில் வரவரவே மாறனின் கரத்தை ஆறுதலாக பிடித்துக்கொண்டாள் வேதா.




கலங்காதே உனக்கு நான் இருக்கிறேன் என்பதுபோல ஒரு வழியாக வீடு வந்து சேரவும் இருவருமே மன பாரத்துடன் இறங்கினர்.



அப்பொழுது டாடி என்றபடி விஷாகா ஒடிவரவும் ….மாறன் கண்களில் கண்ணீருடன் என்னால முடியல வேதா எங்க பார்த்தாலும் விஷாகா என்னை பார்த்து டாடினு கூப்பிட்டு கிட்டு ஓடி வர்ற மாதிரியே இருக்கு என்று கூறினான்.





இல்லங்க நிஜமாகவே விஷாகா தான் உங்களை பார்த்து ஓடி வர்றா என்று சந்தோஷத்துடன் கூறினாள்.




விஷாகா எப்படி இங்க என்று ஆனந்தத்தில் வீட்டின் உள்ளே பார்க்க அவனின் செல்ல மகள் தான் அவர்களை பார்த்து ஓடி வந்து கொண்டிருந்தாள்.





வேகமாக வந்தவளை இவனும் ஓடிச்சென்று தூக்கி சந்தோஷத்துல் ரங்கராட்டினம் சுற்றினான்.



பிறகு அவளை சேர்த்து அணைத்தவன் முகமெங்கும் முத்தமிட்டு எப்படி குட்டிமா டாடிகிட்ட நீ வந்த என்று கேட்க ரத்தினமும் கனகாவும் உள்ளிருந்து சிரித்தபடியே வந்தார்கள்.





நாங்க தான்டா அவளை சட்டப்படி தத்தெடுத்திருக்கோம் என்று கூறினார்.




நீங்களா….?ஏன் மா…?




நாங்கதானடா அவ அம்மாக்கு மிகப்பெரிய பாவத்தை செஞ்சோம் அப்போ பிராயசித்தமும் நாங்க தான செய்யனும்...





உன் மேல ஆசைப்பட்டு தப்பை தவற அவளோட அம்மா வேற எந்த தப்பும் செய்யல ஆனா அதுக்கு நாங்க கொடுத்த தண்டனை மிகப் பெருசு.




நான் மட்டும் அன்னைக்கு மணிமேகலை கிட்ட சீதாவை பத்தி பேசலனா கொஞ்சம் பொறுமையா வேற ஒரு நல்ல இடத்தில் அவளைக் கட்டிக் கொடுத்து இருப்பா.




என்னோட வாய்க்கு பயந்து தானே அவசர அவசரமா கிடைச்சவனுக்கு கட்டிக் கொடுத்தா…




அதனால தான அந்த பொண்ணோட வாழ்க்கையை பாழாகிச்சி.




சீதா இந்த வீட்டுக்கு வந்து எப்படி எல்லாம் வாழணும்னு கனவு கண்டாலோ அதே மாதிரி அவளோட பொண்ணு இந்த வீட்டில் வளரனும்….நாங்க வளத்துவோம் தயவு செஞ்சு எங்களுக்கு அந்த வாய்ப்பை குடு மாறா என்று கனகா கண்களில் நீருடன் கையெடுத்து கும்பிட்ட படி கேட்டார்.




தாயின் கரங்களை தனது கைகள் கொண்டு இறக்கியவன் ப்ளீஸ் மா இப்படி என் முன்னாடி எப்பவுமே கேக்காதீங்க….விஷாகா நம்ம வீட்டு பொண்ணுமா அவளை வளர்ந்த இந்த வீட்ல எல்லாருக்குமே உரிமை இருக்கு என்றவன் யோசனையாக விஷாகா அங்க இருக்கறது உங்களுக்கு எப்படி தெரியும்... என்று கேட்டான்.



வேதா இங்கிருந்து சண்டை போட்டுட்டு போனதுமே டிரைவர் கிட்ட அவ எங்க போயிட்டு வந்தானு கேட்டோம் அவர் விவரம் சொல்லவும் உடனே நானும் அப்பாவும் கையோட நம்ம லாயரையும் அழைச்சிகிட்டு அங்க போனோம்.




தேவகி அம்மாகிட்ட உன்னைப்பற்றியும் சீதாவைப் பற்றியும் முழு விவரத்தையும் சொல்லி விஷாகாவை சட்டப்படி நாங்க தத்தெடுக்க விரும்பறதை சொன்னோம்.





முதல்ல அவங்க ரொம்ப தயங்கினாங்க...உடனே நாங்க உங்க மூனு பேருக்கும் கொடுக்கற அதே அளவு சொத்தை அவ பேரில அப்பவே எழுதி தர்றதா வாக்கு தந்தோம்...அதுமட்டுமில்லாம வக்கீல் கிட்ட அப்பவே உன்னோட அப்பா பான்ட் சீட்ல ஒரு உயில் மாதிரி எழுதியும் கொடுத்துட்டாங்க…



காப்பகத்துக்கும் மாதாமாதம் ஒரு பெரிய தொகை போறது போல நாங்க வாக்கு தரவும் அவங்க முழு மனசோட இன்னைக்கு காலைல விஷாகாவை எங்களோட அனுப்பி வச்சிட்டாங்க என்றார்.




ரொம்ப சந்தோஷம் ஆனா விஷாகா என்னோட பொறுப்பு அப்படி இருக்கும் பொழுது நீங்க எங்களைப் போலவே அவளுக்கும் ஒரு மடங்கு சொத்து கொடுக்கறதுக்கு அக்காவும் செழியனும் ஒத்துக் கொள்ளனுமே அம்மா அவசரப்பட்டுடிங்களே என்று கேட்டான்.





சிரித்தபடியே வந்த செல்வி தம்பி நாம எல்லாருமே ஒரே குடும்பம்டா…. இங்க ஒவ்வொருத்தரோட சந்தோஷமும் எல்லாருக்கும் முக்கியம் நாங்கள் எல்லாருமே நிறைவான வாழ்க்கை வாழறோம்.




ஆனா நீ அப்படியில்ல... உன் சந்தோஷத்தை தொலைச்சிட்டு நிம்மதியில்லாமல் இந்த பத்து வருஷமா வாழ்ந்துட்டு இருக்க...அப்படி இருக்கும்போது உன்னோட சந்தோஷம் எங்களுக்கு முக்கியம் இல்லையா விஷாகாதான் உன்னோட சந்தோசம்னு தெரிந்ததும் எங்களுக்கு எப்படி சொத்து முக்கியம் ஆகும் சொல்லு…






உன் சந்தோஷத்துக்காக ஒரு பங்கு மட்டும் இல்ல எங்களோட மொத்த பங்கையும் கொடுக்க தயாராக இருக்கறோம் என்று செல்வி கூறி முடிக்கவும்.




செழியனும் அதை வழி மொழிந்தபடி ஆமா அண்ணா உனக்கு இவ்வளவு பெரிய வலியும், வேதனையும் மனசுக்குள்ள இருக்கற விஷயம் எங்க யாருக்கும் இவ்வளவு நாள் தெரியாம போயிடுச்சு.




ஒருவேளை முன்னமே எங்களுக்கு தெரிஞ்சு இருந்தா விஷாகாகா என்னைக்கோ நம்ம வீட்டுக்கு வந்து இருப்பா நீயும் விஷாகாவும் சந்தோஷமா இந்த வீட்டில் இருக்கிறதை நாங்களும் கண் நிறைவோட பார்த்துட்டு இருந்திருப்போம் என்றான்.



வீட்டின் ஒருவரின் சந்தோஷத்திற்காக மற்றவர்கள் துணையாக இருப்பது கண்டு மனம் நெகிழ்ந்த மாறன் அனைவரையும் பார்த்து இவ்வளவு அழகான குடும்பத்துல வாழ வாய்ப்பு கொடுத்த அந்த கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்.




என்னோட சந்தோஷத்துக்காக இந்தக் குடும்பமே துணையா வருவதைப் பார்க்கும்போது நாம் எவ்வளவு பெரிய பாக்கியசாலினு இப்பதான் புரியுது.





உங்க கிட்ட ஆரம்பத்திலேயே என் நிலைமையை சொல்லி புரிய வைக்க வேண்டிய கடமைல இருந்து நான் தவறிட்டேன்.





என் மௌனத்தால நானும் கஷ்டப்பட்டு எல்லாரையும் கஷ்டப்படுத்தி இருக்கேன் அன்னைக்கே தாத்தா சீதாவை பத்தி அம்மாகிட்ட சொல்லறதுக்கு முன்னாடி நான் வந்து சொல்லி இருந்தா கண்டிப்பா அம்மா எனக்கு அவளையே கல்யாணம் பண்ணி வச்சு இருப்பாங்க.



அன்னைக்கும் அம்மா கிட்ட இருந்து அத மறைச்சேன் அதுக்கப்புறமாவது விஷாகாவைப் பத்தி சொல்லி இருக்கலாம்…




சொல்லியிருந்தா கண்டிப்பா அம்மா அப்பவே விஷாகாவை இங்க கூட்டிட்டு வருவாங்கனு தெரியாமல் இவ்வளவு நாள் நானும் கஷ்டப்பட்டு உங்க எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டு இருந்திருக்கேன் எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க என்று அனைவரையும் பார்த்து கை கூப்பினான்.




அவனின் பேச்சை கேட்ட எல்லாருமே இல்லை என்பது போல தலையசைத்து நீ எங்களை பார்த்த அப்படியெல்லாம் சொல்லக்கூடாது நீ இந்த வீட்டோட ஆணிவேர் உன் சந்தோஷம் எங்க எல்லாருக்கும் ரொம்ப முக்கியம் .




உன் சந்தோசத்திற்காக இந்த குடும்பம் இன்னைக்கு மட்டும் இல்ல காலம்பூரா உனக்கு துணையாக வரும் என்று கூறியபடி கட்டி அணைத்துக் கொண்டனர் .





வேதா தயங்கியபடி ஒதுங்கி நிற்க அவளை பிடித்து இழுந்து வந்த செல்வி அவர்களுடன் வைத்துக் கொண்டார்.





ஆனாலும் வேதாவால் அவர்களுடன் உடனே ஒன்று விட முடியவில்லை அவள் பேசிய பேச்சுக்கள் கொஞ்சமா நஞ்சமா எந்த முகத்தை வைத்துக்கொண்டு பாட்டியின் முகத்தையும் கனகாவின் முகத்தையும் பார்ப்பது என்று தனக்குள்ளாகவே தவிக்க அருகில் வந்த கனகா .




ஏன் வேதா இப்படி எல்லா இடத்திலும் ஒதுங்கி நிற்கற என்று கேட்டார்.



கண்கலங்கியபடி அத்தை என்னை மன்னிச்சிடுங்க கோபத்துல உங்களை எல்லாம் ஏதேதோ பேசிட்டேன் என்று திடீரென்று அவரின் காலில் விழப் போக தடுத்து நிறுத்திய கனகா எதுக்காக உனக்கு இவ்ளோ குற்ற உணர்வு உன் மனசிலிருந்த ஆதங்கத்தை எங்ககிட்ட கொட்டின…அதனால தான எங்களுக்கே தெரிஞ்சது உன் மனசோட ஆதங்கம்...





இத்தனை நாளும் இந்த வருத்தத்தோட தான் இந்த வீட்டுக்குள்ள வலம் வந்து இருக்கே அத பத்தி தெரிஞ்சுக்காம தானே நாங்களும் இருந்திருக்கோம் நாங்க தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கனும்….




நீ என்னைக்குமே எங்க கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டியது இல்ல உன்னோட நியாயத்தை உன் ஆதங்கத்தை கொட்டின அவ்வளவுதான் அதை இன்னும் நினைச்சுகிட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.





இங்கே மன்னிப்பு கேட்கிற அளவுக்கு நீயும் பெரிய தப்பு பண்ணல மன்னிக்கிற அளவுக்கு நாங்களும் பெரிய மனுஷங்க இல்லை என்று கூறியபடி அவருடன் வேதாவை இழுத்து அணைத்துக் கொண்டார் அதன் பிறகு அந்த குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.





அன்றைய இரவில் மாறன் யோசனையாக அறையில் அமர்ந்திருக்க உள்ளே வந்த வேதா இப்போ என்ன ஆச்சு எதுக்கு இவ்வளவு பெரிய யோசனை என்று அவனின் மீது தலையணையை தூக்கி வீசியபடி கேட்டாள்‌





தலையணையை லாவகமாக பிடித்தவன் இல்ல வீட்டுக்கு மூத்த பையன் அத்தனை பேரும் என்னோட சந்தோஷத்துக்காக விஷாகாவுக்கு ஒரு பங்கு சொத்தை விட்டு கொடுத்திருக்காங்க.




அதையெல்லாம் ரெண்டு மடங்கா இந்த வீட்டுக்கு சம்பாதிச்சு கொடுக்கணும் அது மட்டும் கிடையாது உன்னோட தம்பி தங்கைகளை செட்டில் பண்ணனும் விஷாகாவை நல்ல விதமாக வளர்த்தனும் இதை எல்லாம் நினைக்கும் பொழுது ரொம்ப பிரமிப்பா இருக்கு எப்படி தனியாக நான் செய்ய போறேனு நெனச்சாலே நடுக்கம் வருது என்றான்.




அவன் பேசுவதை கேட்டு முறைத்துக் கொண்டிருந்தவளை பார்த்து என்ன ஆச்சு ஏன் முறைக்கற எதும் தப்பா சொல்லிட்டேனா என்று கேட்டான்.




ஆமா தப்பா தான் பேசுறீங்க எல்லாத்தையும் லிஸ்ட் போட்டீங்க என்னை விட்டுட்டீங்களே என்று சினுங்கினாள்.




ஆமால்ல நீயும் ஐஏஎஸ் படிக்கணும்னு ஆசைப் பட்டல கவலைப்படாத அதுக்கான ஏற்பாடுகளை நாளைக்கே பண்ணலாம் என்று கூற .




அதெல்லாம் இல்லை என்று மீண்டும் பொய்க் கோபம் காட்டினாள்.




வேற என்ன என்று குழப்பத்துடன் கேட்டான்.




என்னோட தம்பி தங்கச்சிகளை செட்டில் பண்ணனும் உங்க அக்காக்கும் தம்பிக்கும் அவங்க விட்டு கொடுத்ததை விட நிறைய சொத்துக்கள் சேர்க்கனும் விஷாகாவை நல்லபடியா வளர்க்கனும் எல்லாம் சரி…ஆனா முக்கியமானதை விட்டுட்டீங்க…



அதான் என்ன வேதா என்று அவளை இழுத்து கைவளைவில் வைத்துக்கொண்டான்.




நெஞ்சில் சாய்ந்து படுத்தவள் அவன் அணிந்திருந்த சட்டையின் பட்டனை திருகியபடி அது வந்து என்று சற்று கூச்சப்பட்டுக் கொண்டே விஷாகாவிற்கு சீக்கிரமா ஒரு தம்பி பாப்பா வேணுமாம் என்று கூறியபடி அவனது நெஞ்சினில் அவளின் இறுக்கமாக முகத்தை

முடிக்கொண்டாள்.




அவள் கூறியவற்றை முதலில் புரியாமல் மெதுவாக வாய்க்குள் சொல்லிக் கொண்டவன் புரிந்ததும் ஹேய் அது இல்லாமலா ஒரு தம்பி என்ன தங்கச்சி...அதுக்கு தம்பி….அப்புறம் அவனுக்கு ஒரு தங்கச்சினு தர இப்பவே நான் தயாரா இருக்கேன் என்று கூறியபடி மீண்டம் அவளை சேர்த்தணைத்து இருந்தான்.




அதன் பிறகு அவர்களுக்கு அழகானதொரு கூடல் முடிந்தது...யார் ஆண் யார் பெண் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பின்னி பிணைந்தார்கள் எல்லாம் முடிந்த களைப்பில் அவனின் நெஞ்சினில் சாய்ந்திருந்தவளிடம் உனக்கு என் மேல எந்த வருத்தமும் இல்லையே என்று கேட்டான்.



அவள் இல்லை என்பது போல் மீண்டும் அவனது நெஞ்சினில் இறுக்கமாக சாய்ந்து கொண்டாள்.




பிறகு அவனது கைகளுக்குள் அவளின் கைகளை கோர்த்துக்கொண்டு இன்னைக்கு மட்டும் இல்லங்க என்னைக்குமே உங்களோட எல்லா முயற்சிகளுக்கும் துணையாக நான் வருவேன்.




ஆனா நீங்க மட்டும் எந்த ஒரு விஷயமா இருந்தாலும் மனசுல வெச்சு கஷ்டப்படாம அப்பவே அதை என்கிட்ட சொல்லனும் அதை மட்டும் எனக்காக செய்வீங்களா என்று சத்தியம் கேட்பது போல் அவனை பார்த்து கேட்க கண்டிப்பாக செய்கிறேன் என்பது போல் அவளது உச்சியில் முத்தமிட்டு நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் பிறகு அன்றைய இரவை தூங்காத இரவாக இருவருமே மாற்றினார்கள்.




சரியாக ஆறு மாதம் கழித்து தனது வயிற்றில் ஐந்து மாத கருவுடன் சோர்ந்தபடி அறையில் படுத்திருக்க

விஷாகா வேதாவிடம் வந்து மம்மி தலைவாரி விடுங்க என்று கையில் சீப்புடன் நின்றாள்.




மிகவும் கடினப்பட்டு எழுந்த வேதா சரி இப்படி உட்காரு ஜடை பின்னி விடறேன் என்று கூறியபடி கட்டிலின் முன்பு ஒரு சேரை இழுத்துப் போட்டு அவளை அமர வைத்தாள்.



வேதா கருவுற்ற நாளிலிருந்து அவளுக்கு காலை வேளையில் வரும் மார்னிங் சீக் வந்துவிடுகிறது.




என்ன மருந்துகள் உட்கொண்டும் அவளால் சரிசெய்ய முடியவில்லை எதை உண்டாலும் உடனடியாக அவளுக்கு வாந்தி வந்துவிடும் எப்பொழுதுமே படுக்கையை விட்டு எழுவது கிடையாது .



வீட்டில் உள்ளவர்களும் அவளை எழ விடுவது இல்லை.




அவ்வப்போது விஷாகா தான் அவளை தட்டி எழுப்புவது….தாய் நீண்ட நேரம் படுக்கையில் இருப்பதை பார்த்து பயந்தவள் அவ்வப்போது இப்படித்தான் ஏதாவது ஒரு வேலையை கொண்டு வந்து கொடுப்பாள்.



தலைவார தொடங்கும் பொழுதே வெளியிலிருந்து உள்ளே வந்த கனகா விஷாகாவிடம் குட்டிமா எத்தனை முறை சொல்லி இருக்கேன் அம்மாவை தொல்லை பண்ணக் கூடாதுனு பாட்டி கிட்ட வந்து இதெல்லாம் பண்ணிக்கோன்னு என்று கூறியவர் வேதாவை பார்த்து நீ சீப்பை இப்படி குடு தான் நான் அவளை ஸ்கூலுக்கு கிளம்புறேன் என்று கூறியபடி அழைத்துச் சென்றார்.





உள்ளே படுத்திருப்பது சோம்பலாக தோன்ற எழுந்து மெதுவாக வெளியே வர அங்கே வர்ஷினி பள்ளிக்கு தயாராக கிளம்பி இருந்தாள்.




கல்லூரிக்குச் செல்ல இந்துவும் வேலைக்கு செல்ல வேதாவின் தம்பி கவினும் ரெடியாக இருந்தார்கள்.




மாறன் எப்பொழுதோ வேதாவின் தம்பி தங்கைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சென்னை அழைத்து வந்து விட்டான்.




ஆனால் வேதாவின் தாய் தந்தை மட்டும் உறுதியாக மறுத்து விட்டார்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக படிப்பு வேலை என்று சென்னையில் செட்டில் ஆகட்டும் எங்களுக்கு இந்த கிராமம் தான் சொர்க்கம் இங்கிருந்து நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிட்டார்கள் .



அன்றிலிருந்து இந்துவும் கவினும் இங்கு மாறனின் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் தான் இருக்கிறார்கள்.




இந்துவிற்கு மிகபெரிய கல்லூரியில் அவள் ஆசைப்பட்ட படிப்பும் தம்பிக்கு ஒரு கம்பெனியில் உயரிய பதவியையும் மாறன் வாங்கிக் கொடுத்திருக்கிறான்.



இப்பொழுது கவின் வேலைக்குச் சென்றுகொண்டே உயர்படிப்பும் படித்துக் கொண்டிருக்கிறான்.




எல்லோரும் பரபரப்பாக கிளம்புவதை சந்தோஷத்துடன் அங்கிருந்தே பார்த்துக்கொண்டிருக்க கையில் குழந்தையுடன் வந்த ராதிகா அக்கா ப்ளீஸ் கொஞ்ச நேரம் இவளை பாத்துக்கோங்களேன் செழியன் வேலைக்கு போறதுக்கு முன்னாடி என்னை ஒருவழி பண்ணிடுவாரு…




இவ ஒரு பக்கம் படுத்தறா... உங்க கொழுந்தனார் ஒரு பக்கம் படுத்துறாங்க நான் என்ன செய்ய என்றவள் ப்ளீஸ் அக்கா என்று கூறியபடி கையில் இருந்த குழந்தையை வேதாவின் கையில் திணித்து விட்டு ஓடி விட்டாள்.




அதை கண்ட பாட்டி இந்த ராதிகாவுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புத்தியே வராது உடம்பு சரி இல்லாம இருக்கிற உன் கிட்டயே தான் அவ பிள்ளையை கொண்டு வந்து குடுத்துட்டு போவா என்று சற்று ராதிகாவை கடிந்து கொண்டபடி குழந்தையை வாங்கிக்கொண்டு போக.




வேதாவிற்கு தான் அச்சோ என்றானது. அத்தனை பேரும் இப்படி பார்த்து பார்த்து அவளை கவனித்தால் அவளின் நிலமை என்னாவது.




இத்தனை அன்பையும் தன் ஒருத்தியாள் தாங்க முடியாது இறைவா இதை எப்பொழுதும் எனக்கு கொடு என்று கண் கலங்க கடவுளை வேண்டியவாறு அமர்ந்திருக்க அருகில் வந்த மாறன்.




ஓய் பொண்டாட்டி காலிலேயே என்ன கனவா என்று கேட்டபடி அவளின் அருகில் வந்தான் .




அவனது கையில் இரு இட்லிகளை வைத்த ஒரு தட்டும் இருந்தது உடனே அவனை முறைத்தவாறு எத்தனை முறை சொல்லி இருக்கேன் எனக்கு சாப்பிட்டுக்க தெரியும் இப்படி எல்லாரும் முன்னாடியும் கொண்டு வராதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று கூறியபடி அவளது கையில் இருந்த தட்டை பிடுங்க செல்ல அவளிடம் இருந்து தட்டை எட்டிப் பிடித்தவன்.






யாரும் உன்னை இங்க தப்பா எடுத்துக்கவே போறதில்ல இதைப் போட்டுக் கொடுத்து அனுப்பினதே என்னோட அம்மாதான் சரியா.

இன்னைக்கு நான் தான் உனக்கு ஊட்டி விடுவேன் வாயைத் திற என்று கூறியபடி இட்லியை பிய்த்து அவளது வாயில் வைத்தவன் .




இப்போ கூட ஒண்ணும் கெட்டுப் போயிடல வேதா ….ஐஏஎஸ் கொச்சிங் போறியா….இந்த வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறியே இப்போ இருந்து போனா எக்ஸாம் வரும்போது குழந்தையும் பிறந்திடும் நீயும் ஃப்ரீயா எக்ஸாம் எழுதிட்டு ட்ரெய்னிங் முடிக்கலாம் என்று ஆர்வமாக அவளின் முகத்தை பார்த்து கேட்டான் .




அதற்கு வேதா ஆரம்பிச்சிட்டீங்களா காலையிலேயே நம வீட்ல நாலு பொம்பள பிள்ளைங்க ஐஏஎஸ் படிக்க தயாரா இருக்கு ராதிகா குழந்தை,தர்ஷினி,இந்து,விஷாகானு இவங்க எல்லாரையும் படிக்க வைத்து அழகு பாருங்கள் .




அவங்க நாலு பேரையும் பாதுகாக்க இவன் ஒருத்தன் பத்தாது இன்னும் நாலு பேரை நான் பெத்துக்கனும் அந்த வேலையை மட்டும் நான் பாக்கறேன் என்று அவளின் வயிற்றை காண்பித்த படி பேசினாள்.




உடனே அவன் எப்போ பாரு உனக்கு இதே நினைப்புதானா நாலு என்ன நாப்பது வேணாலும் பெத்துக்கோ அதுக்கு முன்னாடி ஐஏஎஸ்-ஐயும் படியேன் என்றான் ‌





எனக்கு நாப்பது எல்லாம் வேண்டாம் உங்கள மாதிரி நாலு பிள்ளைங்க போதும் நாலு அக்காவுக்கும் ஒவ்வொரு தம்பிக அவங்களுக்குள்ள சண்டை வரக்கூடாதுல்ல என்று பொறுப்பாக கூறியவள் பிறகு பொய்க் கோபத்துடன் அவனைப் பார்த்து ஆமா ஏதோ சொன்னீங்களே ….ம்ம் என்று யோசிப்பதுபோல் நடித்தவள் எனக்குதான் அதே நினைப்பா…. இருக்கட்டும் இன்னைக்கு என் பக்கத்தில் வருவீங்கல்ல அப்போ கவனிச்சிக்கறேன் என்றாள்.



அம்மா தாயே ஆள விடு நீ என் பக்கத்துல இல்லனா ராத்திரியில எனக்கு சுத்தமாக தூக்கம் வராது என்று கூறி முடிக்கும் பொழுது அவன் கையில் இருந்த தட்டு காலியாக இருந்தது.




இரத்தினமும் செழியனும் கடைக்கு செல்வதற்காக காரில் காத்திருந்தவர்கள் மாறனின் வரவிற்காக ஹாரன் அடித்தனர்.




வேகமாக எழுந்த மாறன் வேதாவின் நெற்றியில் ஒரு மென்முத்தம் வைத்த படி சரி நான் கடைக்கு போயிட்டு வரேன் ஏதாவதுனா எனக்கு கூப்பிடு என்று கூறினான்.



சரி என்று தலையை அசைத்தவளுக்கு இன்று உணவு ஒத்துக்கொண்டது போல் தோன்றியது….தலைசுற்றலும் குறைந்து இருந்தது.



சற்று நேரத்திலேயே கடைக்கு செல்வதற்காக கிளம்பி வந்தவனைப் பார்த்து என்னங்க தாத்தாவை வெளியே விட்டுட்டு போங்களேன் கொஞ்சநேரம் வெளிச்சம் பார்த்திட்டு இருப்பார் என்று கூறினாள்.



சரி என்றவன் நேராக தாத்தாவின் அறைக்குச் சென்று அவரை வீல் சேரில் வைத்து தள்ளிக்கொண்டு வெளிவந்தான்.



இப்பொழுது மாறனுக்கு தாத்தாவின் மீது துளி கூட வருத்தமோ கோபமோ கிடையாது அவர் பக்கம் இருந்து பார்த்தால் அவரின் கோபம் நியாயமாகத்தான் பட்டது...அதனால் தாத்தாவிடம் தினமும் சென்று ஏதாவது பேசுவான்.



தாத்தாவிற்கு தான் மிகவும் தர்மசங்கடமாக இருக்கும் இப்படி ஒரு பேரனுக்கா நான் மிகப்பெரிய அநியாயத்தை செய்தேன் என்று. அவ்வப்போது அவனிடம் தன்னை மன்னித்துவிடு என்று ஜாடையில் கூறியபடி கண்கலங்குவார் அதற்கெல்லாம் ஆறுதல் கூறியபடி மாறன் அவரை சமாதானப்படுத்துவான்.




பள்ளி முடிந்து வந்ததும் விஷாகா தாத்தாவுடன் தான் விளையாடுவாள் வீடு நிறைய குழந்தைகள் விளையாடும் பொழுது அவரும் ஒரு குழந்தையாக அவ்வப்போது எழுந்து நிற்க ஆசைப்பட்டு முயற்சி செய்வார் அதுவே இப்பொழுது வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பெரியதொரு சந்தோஷம்.




தாத்தா எந்தளவு சீதாவை வெறுத்தாரோ இருமடங்காக இப்பொழுது விஷாகாவை நேசிக்கிறார்.



சில சமயங்களில் அவரது அறையில் விஷாகாவை தங்க வைக்கச் சொல்லி பாட்டியிடம் கேட்பார்.அவரும் பலமுறை விஷாகாவை தன்னுடன் அழைத்து படுக்க வைத்துக் கொள்வார் இப்படியாக அவர்களின் குடும்பம் முழுமை பெற்ற சந்தோஷத்தில் திளைத்திருந்தது.



இன்று மட்டுமல்ல என்றுமே அவர்களின் குடும்பம் ஒருவருக்கு ஒருவர் துணையாக செல்வார்கள்.




அந்த சந்தோஷத்தில் நாமும் அவர்களை வாழ்த்தி விட்டுச் செல்லலாம்.



நன்றி.

வணக்கம்.

அகிலா வைகுண்டம்.
 
Top