கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துணையாக நான் வருவேன்-9

Akila vaikundam

Moderator
Staff member
9


முதலில் மகனைப் பார்த்த பாட்டி இங்க பாரு ரத்தினம் நீ செய்ய வேண்டிய வேலை வேதாவோட அம்மாவும் அப்பாவும் நம்ம வீட்டுக்கு வராத மாதிரி பார்த்துக்க வேண்டியது என்று கூறினார்.


அது எப்படி ம்மா முடியும் அவங்க கிளம்பி வந்துகிட்டு இருக்காங்க காலையில இந்த வந்ததும் காரை அனுப்பி அவங்களை நம்ம வீட்டுக்கு கூப்பிடறது தானே முறை என்று சற்று கவலை தேய்ந்த குரலில் ரத்தினம் கூறவும்.


அதாண்டா மடையா சொல்ல வரேன்... அவங்க நம்ம வீட்டுக்கு வரக்கூடாது அதுக்கு பதிலா அவங்கள வேறு எங்காவது நாம கூட்டிட்டு போகணும் அதுக்கு சரியான யோசனையை உடனே தயார் பண்ணனும்..


என்ன செய்யலாம் என்று எல்லோருமே யோசிக்க…


தீடிரென கனகாவிற்கு ஒரு யோசனை பிறந்தது...அத்தை இப்படி பண்ணினா என்ன…? என்று கேட்டவர் ராதிகாவை பார்த்துவிட்டு ம்ச்...இது சரி வராது என்று அவருக்கு அவராகவே சமாதானப்படுத்திக் கொண்டார்.


என்னன்னு சொன்னாதானே சரியா வருமா வராதானா சொல்லமுடியும் என்று பாட்டி ஊக்கப்படுத்த.


அது என்னனா அத்தை மாறனுக்கு கல்யாணம் ஆனதும் திருப்பதிக்கு அடிவாரத்தில இருந்து நடந்து வர்றதா வேண்டி இருக்கேன்... வேணும்னா நாம நாளைக்கு காலையிலேயே திருப்பதிக்கு எல்லாருமே இங்கிருந்து கிளம்பி போகலாம்...போற வழியில வேதாவோட அம்மா அப்பாவையும் கூப்பிட்டுகலாம் ஆனா ராதிகாவும், மாமாவும் இந்த நிலைமையில் இருக்கும் போது அங்களை எப்படி அவ்வளவு தூரம் கூட்டிட்டு போக முடியும் ...தனியாவும் விட்டுட்டு போக முடியாது அதான் யோசனையா இருக்கு…



இங்கப்பாரு கனகா உன் மாமா எல்லாமே பார்த்து அவருடைய வாழ்க்கையே ரொம்ப அழகா வாழ்ந்த முடிச்சிட்டாரு அதனால அவரை விட்டுட்டு போறதுக்காக நீ கவலைப்படாதே நாம மாறனுக்காக தான் அவரை விட்டுட்டு போறோம்னு தெரிஞ்சா நிஜமா சந்தோஷம் தான் படுவாரு….



அதனால அவரை பத்தின கவலை வேணாம்…. அதுவுமில்லாம அவரை நாம தனியா விட்டுட்டு போகல அவருக்குத் துணையா வேதாவையும் மாறனையும் விட்டுட்டு தான் போறோம்...நம்மளோட டாக்டர் கிட்ட சொல்லி வழக்கமா தினமும் வந்து பாக்குற நர்ஸ் பொண்ணை ரெண்டு நாள் இங்க தங்கறது போல கேட்டுக்கலாம்...இல்லனாலும் பிரச்சினை இல்ல... என்றார்.


உடனே செழியன் தயங்கியபடி அப்போ ராதிகாவை என்ன செய்ய என்று கேட்டான்.


அவ நிறைமாசம்ங்கறதால அவளை இங்க தனியா விட்டுட்டு போகமுடியாது அதனால அவளை அவ வீட்டுக்கு போக சொல்லிடலாம் அவ அம்மாவை காலைல வந்து கூட்டிட்டு போக சொல்லு இல்லனா நாம. போகும் போது அவ வீட்ல விட்டுட்டு போய்க்கலாம்….


பாட்டி நான் பாவம்...என்னை தயவு செஞ்சு என் வீட்ல விட்டுடாதீங்க...அதுக்கு என்னை இங்கேயே விட்டுட்டு போங்க...அத்தானும் வேதாக்காவும் இருப்பாங்கல்ல நான் அவங்களோடவே இருந்துக்கறேன் என்று ராதிகா கூறினாள்.



யாரடி இவ உள்ளதையும் கெடுத்துடுவா போல இருக்கு... உன்னை இங்க விட்டுட்டு போனா புதுசா கல்யாணம் ஆனவங்க உன்ன பார்த்துக்குவாங்களா இல்ல அவங்களுக்குள்ள ஏதாவது பேசி சகஜமாய் இருப்பாங்களா…



உன்னை வளைகாப்பு பண்ணினப்பவே உன் அம்மா வீட்டுக்கு துரத்தி விட்டிக்கணும் அங்க உன் அம்மா அப்பா சரியா பார்த்துக்க மாட்டாங்க எப்பவும் பிசினஸ் பிசினஸ்னு ஊர் சுத்துவாங்க வீட்ல தங்க மாட்டாங்க அதனால தயவு செஞ்சு என்னை அங்க அனுப்பிடாதீங்கனு நீ கெஞ்சி கேட்டதால தான் வளைகாப்பு பண்ணுன ஒரே ஒரு நாள் மட்டும் பெத்தவங்களோட அனுப்பி வச்சிட்டு மறுநாளே நாங்க இங்க கூப்பிட்டு கிட்டோம்... அது தான் தப்பா போச்சு ஒழுங்கா உன் பிரசவத்துக்கு உன் அம்மா வீட்டுக்கு போற வழிய பாரு என்று பாட்டி ராதிகாவிடம் கடிந்து கொண்டார்.


உண்மையிலேயே ராதிகாவின் பெற்றோர்கள் பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அவர்களுக்கு ராதிகா ஒரே ஒரு பெண்தான் ஆனால் பிறந்ததிலிருந்தே அவள் வளர்ந்தது எல்லாமே வீட்டில் வேலை செய்பவர்களிடம் மட்டுமே.


ராதிகா பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான் செழியனின் வீட்டில் இருந்து வெறும் பத்து கிலோ மீட்டர் தூரம் தான் அவளின் தாய் வீடு... ஆனால் மாதத்திற்கு ஒருமுறை கூட அவளின் பெற்றோர்கள் வந்து அவளை சந்திக்க மாட்டார்கள் அவர்களை பார்க்க வேண்டும் என்று கூறினால் கூட ஏதாவது ஒரு நாட்டில் இருந்து கொண்டு வீடியோ காலில் தான் பேசுவார்கள் அதுவும் மிகவும் சம்பிரதாயமாக மட்டுமே பேசுவார்கள்.


தாயும் தந்தையும் சேர்ந்து பல தொழில்களை செய்வதினால் இருவரும் நாடு விட்டு நாடு பறந்து கொண்டே இருப்பார்கள் எப்படியோ அவளின் திருமண வயது வரவும் மணம் முடித்து வைக்க வேண்டும் என தோன்றியது…


அதற்கான முயற்சியில் இறங்க அப்பொழுதுதான் மாறனின் குடும்பத்தைப் பற்றி தெரிந்தது.
சென்னையில் பலகாலமாக சொந்தமாகத் தொழில் புரிபவர்கள் சென்னை நடுப்பகுதியில் மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸை சொந்தமாக வைத்து நடத்துபவர்கள் என்று புரிந்ததும் யோசிக்காமல் பெண் தர முன்வந்தார்கள்...முதலில் மாறனுக்காகதான் ராதிகாவின் ஜாதகத்தை கொடுத்து விட்டார்கள்.


ஆனால் மாறன் முற்றிலும் திருமணத்துக்கு மறுத்து விட்டதால் வேறு வழியில்லாமல் செழியனின் ஜாதகத்தை கொடுத்தார்கள். முதலில் அண்ணனுக்கு பார்த்த பெண்ணை எப்படி தம்பிக்கு மணம் முடிப்பது என்று பெற்றவர்கள் தயங்கிக் கொண்டுதான் ராதிகாவின் பெற்றோர்களிடம் பேசினார்கள்...



ஆனால் ராதிகாவின் பெற்றோர்கள் எதற்குமே அலட்டிக்கொள்ளவில்லை... தங்களுக்கு உங்கள் வீட்டில் சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும் அது மட்டும் தான் விருப்பம் அது மூத்த மகனாக இருந்தால் என்ன இளைய மகனாக இருந்தால் என்ன என்று கூறிவிட



அதன் பிறகுதான்
ராதிகாவின் ஜாதகத்தையும் செழியனின் ஜாதகத்தையும் பார்த்தனர்.ஜாதகம் மிக அழகாக பொருந்தி இருந்ததால் அவர்களுக்கே திருமணம் செய்து வைக்கலாம் என்று இருவீட்டாரும் ஒரு மனதாக முடிவெடுத்தார்கள்...


ராதிகாவிற்கு திருமணத்திற்குப் பிறகுதான் அவள் வாழ்ந்த வாழ்க்கை எந்த மாதிரியான நரகம் என்பது தெரிந்தது... பெண் பிறந்த வீட்டில் எப்பொழுதுமே தனிமை…. தனிமை…. தனிமை மட்டுமே….



எல்லாம் நேரத்திற்கு கிடைக்கும் அளவுக்கு அதிகமாகவும் கிடைக்கும் ஆனால் அதில் துளி அன்பு கூட இருக்காது.


ஆனால் செழினின் வீட்டில் நேர்மாறு அவளைச் சுற்றி எப்பொழுதுமே ஒரு கூட்டம் இருக்கும் நாத்தனார் ஒருபக்கம் தம்பியின் மனைவி என்று தாங்கினால் மாமியார் மறுபக்கம் மருமகள் என தாங்குவார்…


மாறன் தம்பியின் மனைவி ...இனிமேல் இந்த வீட்டின் மகள்...என்று பாசம் காட்டினால் தர்ஷினி அத்தை என்று அன்பு பாராட்டுவாள்.


அவ்வளவு ஏன் வேலை செய்யும் ஆட்கள் கூட அவளிடம் அன்பாக இருப்பார்கள்.


இங்கு வந்த கொஞ்ச நாளிலேயே அவள் செழியனின் குடும்பத்தோடு முழுமையாக ஒன்றி விட்டாள்.


வசதியான வீட்டில் பிறந்தது வளர்ந்தது என்று எந்த இடத்திலும் அவள் வெளிக் காட்டிக் கொள்ளவே மாட்டாள்.


செழியனின் வீட்டில் இருக்கும் அனைவருமே எளிமைக்கு பெயர் போனவர்கள் இவர்களுக்கு இருக்கும் சொத்தில் அவர்கள் எப்படி எல்லாமோ பகட்டாக வாழலாம் ஆனால் யாருக்குமே அப்படி வாழ பிடிப்பதில்லை…


பணம் இருக்கிறது என்பது நமக்குத் தெரிந்தால் போதும் அது ஏன் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்று அவ்வப்போது கனகா கூறுவார் அதை வேத வாக்காக எடுத்துக்கொண்ட ராதிகாவும் இங்கு வந்த நாளிலிருந்து அப்படித்தான் வாழ்கிறாள்.


யாரிடமும் அவளின் பிறந்த வீட்டு ஆடம்பரத்தையும் வெளிக்காட்டியது இல்லை அவளும் புகுந்த வீட்டினரோடு எளிமையாக வாழ பழகிக் கொண்டாள்.


அவளின் மாற்றம் ராதிகாவின் தாய் தந்தையருக்கு சுத்தமாக பிடிக்க வில்லை இருந்தாலும் மகளை திருமணம் செய்து கொடுத்தாகிவிட்டது அவளது வாழ்க்கையில் ஏன் தலையிட வேண்டும் என்று அவர்கள் கண்டுகொள்வதில்லை .


அவள் இங்கு வந்த சில நாட்களிலேயே தாய்மை அடைந்து விட குடும்பத்தினர் அத்தனை பேரும் சந்தோஷத்தில் திளைக்க ராதிகாவின் பெற்றோர்களோ அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை .



அவர்களின் கவலை எல்லாம் மகள் பிரசவத்திற்கு வந்துவிட்டால் அந்த சமயத்தில் தங்களுடைய பிசினஸ் பாதித்து விடுமோ அவளை எப்படி கவனிப்பது என்றிருந்தது.
அந்த அளவிற்கு பணப்பேய் அவர்களை ஆட்டிவித்தது .



அதை நன்கு அறிந்த ராதிகா ஏழாம் மாதத்தில் வளைகாப்பு முடித்ததும் தாய் வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக செழியன் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் பொழுது வெளிப்படையாகவே அவளின் தாய் தந்தையர்களை பற்றி கூறி தான் அங்கு இருக்க விரும்பவில்லை தயவுசெய்து என்னை அங்கே அனுப்ப வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.


ஏற்கனவே மருமகளை தலையில் தூக்கி வைத்து ஆடும் குடும்பம் மருமகளே போக விருப்பம் இல்லை என்று கூறும்பொழுது அவளை அனுப்பி வைப்பார்களா என்ன..?

இதுதான் சாக்கு என்று முதல் நாள் மட்டுமே அவளை அங்கு தங்க வைத்தனர்.


மறுநாளே செழியனை அனுப்பி அழைத்து வந்துவிட்டனர் உள்ளூரில் பெண் எடுத்தது இவர்களுக்கு மிகப்பெரிய வசதியாகப் போய் விட்டது.



ஆனால் இப்பொழுது பாட்டி ராதிகாவை அவளின் வீட்டிற்கு போ என்று சொல்லவும் ராதிகா சினிங்கி கொண்டிருக்கிறாள் போகமாட்டேன் என்று…


செழியனுக்கு ராதிகாவை பார்க்க மிகவும் பாவமாக இருந்தது... ஆனால் என்ன செய்ய இப்பொழுது அண்ணனின் வாழ்ந்து மிக முக்கியமாயிற்றே…. அதனால் அவனே ராதிகாவை சமாதானமும் செய்யத் தொடங்கினான்.


இங்க பாரு ராதிகா நீ காலைல இருந்தே பார்த்துக்கிட்டு தான இருக்க அண்ணன் அண்ணி கிட்டே எப்படி நடத்துகிறாருன்னு... இப்போ நாமளும் அண்ணனை அவர் போக்கில் விட்டுட்டா காலத்திற்கும் அவர் தனி மரமா தான் வாழனும்.


கொஞ்சம் யோசிச்சு பாரு நாமல்லாம் இருக்கிறவரைக்கும் அண்ணனை பார்த்துக்கலாம் அதுக்கப்புறம் அண்ணனை யார் பார்த்துக்குவாங்க..



அண்ணனுக்கும் ஒரு குடும்பம் அவருக்கும் ஒரு வாரிசு வேணும் இல்லையா அதனால தயவு செஞ்சு எங்களுக்காக கொஞ்சம் ஒத்துழைப்பு கொடு நம்ம வீட்டுல வேலை செய்யுற லட்சுமி அக்காவை உன்னோட துணைக்கு கூட்டிட்டு போ.


ஒரு ரெண்டு நாள் மட்டும் பொருத்துக்கோ மூன்றாவது நாள் நானே வந்து உன்னைக் கூப்பிட்டுக்கறேன் என்று அவளிடம் கூறினான்.


அவளும் சரி எல்லாரும் போய்ட்டு வாங்க அத்தானுக்காக எல்லாருமே முயற்சி எடுக்கும் போது நானும் என் பங்கிற்கு என்னோட பிறந்த வீட்டுக்கு போக சம்மதிக்கிறேன் என்று கூறினாள் .


உடனே அடுத்தடுத்து திட்டங்கள் ஆரம்பமாயிற்று நாளை வேதாவின் பெற்றோர்கள் எந்த நேரத்தில் வந்து இறங்குவார்கள் அதன் பிறகு அவர்களை யார் அழைப்பது எப்படி எல்லோரும் மாறனை சமாதானப் படுத்திவிட்டு திருப்பதி சொல்வது.
என்று அனைவரும் மாற்றி யோசிக்கத் தொடங்கினார்கள்.


இதில் ரத்தினம் தான் மிகவும் பாவம் சற்று முன்புதான் அவரின் காலில் பெரிய மகன் விழுந்து கெஞ்சியிருக்கிறான் ...தனக்கு திருமண பந்தமே வேண்டாம் என்று அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புலம்பிக் கொண்டிருக்க.

கனகா தான் நீங்க அவன் கண்ணுலயே மாட்ட வேண்டாம் முத ஆளா ரெயில்வே ஸ்டேஷன் போயிடுங்க ‌...வர்ற சம்மந்தி குடும்பத்தை நம்ம கார்ல பிக்அப் பண்ணிக்கோங்க...பக்கத்துல இருக்கற ஏதாவது ஹோட்டல்ல தங்க வச்சி அவங்களை அங்கிருந்தே திருப்பதி கிளப்புங்க... பின்னாடியே நாங்க வந்து ஜாயின் பண்ணிக்கறோம்...இப்பவே அவங்களோட பேசுங்க கல்யாணம் முடிஞ்சதும் ரெண்டு குடும்பமும் சேர்த்து வர்றதா வேண்டிருக்கறதா சொல்லுங்க….போகலனா தெய்வ குத்தம் ஆயிடுச்சு பயமுறுத்துங்க...எதும் பேசாம கூட வருவாங்க என்று கணவரிடம் கூறினார்.

அவரும் சமாதானமடைந்து விடிவதற்காக காத்திருக்க ஆரம்பித்தார்.


இங்கே செழியன் அந்த நேரத்திற்கே ராதிகாவை அவளின் பிறந்த வீட்டுக்கு அனுப்புவதற்காக என்னென்ன பொருட்கள் தேவைப்படுமோ அது எல்லாவற்றையும் பேக் செய்ய ஆரம்பித்திருந்தான்.


அனைவருமே சத்தமில்லாமல் கோயில் செல்வதற்கு ஆயத்தம் ஆகி கொண்டிருக்க அப்பொழுது தான் ஞாபகத்துக்கு இந்து வந்தாள்.


அவளை எப்படி இங்கே விட்டு செல்வது திடீரென்று காலையில் எழுந்து ஏதாவது கலாட்டா செய்து விட்டால் மாறனே அக்காவையும் தங்கையையும் அழைத்துகொண்டு கிளம்பி விடுவானே என்று யோசித்தவர்கள் அறையில் தூங்கும் அவளை எப்படி இங்கே கூட்டி வருவது என்று ஒருவர் முகத்தை மாற்றி மாற்றி பார்க்க ஆரம்பித்தனர்.


பாட்டி தான் அனைவருக்கும் தைரியம் கூறினார் இங்க பாருங்க எதுக்காக எல்லாரும் பயந்து பயந்து கோவிலுக்குப் போகணும் மாறன் கிட்ட சொல்லிட்டு அவனோட சம்மதத்தோடவே நாளைக்கு காலையில எல்லாரும் கோவிலுக்கு போகலாம்.


அப்போ இந்துவையும் நாம அழைச்சிக்கலாம் என்றவர் இப்போ அக்காவும் தங்கச்சியும் தூங்கட்டும் என்று கூறியவர் அவரின் அறைக்குள் சென்றுவிட்டார்.


மாறன் இடையில் குளிர் அதிகமாக இருக்கிறது என்று அவனது பெட்சீட்டை எடுப்பதற்காக அறைக்குள் வர அங்கு வேதாவும் தங்கையும் அருகருகே கட்டிப்பிடித்து படுத்துக் கொண்டிருக்க அவர்களுக்கு ஒரு பெட்சீட்டை எடுத்து போர்த்தி விட்டவன் உடனே வெளியில் சென்றுவிட்டான்.


விடிய விடிய உறக்கம் வராமல் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தவனுக்கு விடிய காலை நான்கு மணிக்கெல்லாம் குடும்பமே பரபரப்பாக காணவும் என்னவென்று உற்றுநோக்க ஆரம்பித்தான்.


இங்கு கனகா மாறனின் அறைக்கு வந்து இந்துவை எழுப்பி விட ஆரம்பித்தார்.


பின் வந்த மாறன் எதற்காக இவ்வளவு காலையில இந்துவை எழுப்பறீங்க…. ஆமா எல்லாரும் எங்க கிளம்பறீங்க என்று விசாரித்தான்.


எல்லாருமே திருப்பதி கோவிலுக்கு தரிசனத்திற்காக போவதாக கூறவும் அவனுக்கு மிகுந்த ஆச்சரியம் உண்டாயிற்று.



என்ன திடீர்னு எல்லாரும் போறீங்க என்று கேட்டான்.


அதற்கு அவர் ஏற்கனவே ஒரு வேண்டுதல் இருந்தது பத்தாததுக்கு உனக்கு கல்யாணம் ஆனதும் குடும்பத்தோட நடந்து வருவதாக வேண்டிக்கிட்டோம் அதனால இப்போ நாங்க கிளம்புறோம் என்று கூறினார்.


சரி நீங்க போங்க…. எதுக்காக இந்துவை எழுப்பறீங்க….


பின்ன ரெண்டு குடும்பமும் சேர்ந்து தானே போறதா வேண்டி இருக்கோம் இந்துவோட அம்மா அப்பா ஏற்கனவே ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து நமக்காக காத்துக்கிட்டு இருக்காங்க உன்னோட அப்பா அவங்களை பிக்அப் பண்ண எப்பவோ கிளம்பி போயாச்சு... இவளை கிளப்பிட்டு நாங்களும் உடனே போகணும் .



என்னம்மா விளையாடுறீங்களா…?
வேதாவோட அம்மாவும் அப்பாவும் அவளை பாக்க தானே இங்க வர்றதா சொன்னாங்க... அதுக்காக தானே நானும் அவங்கள வர சொன்னேன் இப்படி திடீர்னு கோவிலுக்கு போறதா எப்போ ப்ரோக்ராம் பிக்ஸ் ஆச்சு.. நேத்து நைட்டு கூட அவங்களோட பேசும்போது இது பற்றி ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லலையே என்று சற்று அதிர்ச்சியுடன் கேட்டான்.



இங்க பாரு மாறா அவங்க ஏற்கனவே திருப்பதிக்கு குடும்பத்தோட போறதா வேண்டி இருக்காங்க வேதாவுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் ஆனதும் சாதாரணமா ஒரு நாள் கோவிலுக்கு போகலாம்னு... நீ போன் பண்ணி வரச் சொன்னதும் மொதல்ல கோயிலுக்கு போயிட்டு அதுக்கப்புறமா பொண்ணையும் மாப்ளையும் பார்த்திருக்கலாம்னு மனசை மாத்திகிட்டாங்க...



நேத்து நைட்டு ட்ரெயின்ல வரும்போது தான் எங்களுக்கே ஃபோன் பண்ணி சொன்னாங்க உடனே எங்களுக்கும் வேண்டுதல் இருந்ததால எல்லாருமே சேர்ந்து போயிட்டு வந்திடலாம்னு பிக்ஸ் பண்ணியாச்சு.


கோயிலுக்கு போறதுக்கு எல்லாம் நாம மட்டும் நினைச்ச பத்தாது அங்கே தெய்வமும் உத்தரவு கொடுக்கணும் எங்களுக்கு உடனே உத்தரவு கொடுத்துட்டாரு அதனால நாங்க கிளம்புறோம் என்று கூறியவர் இந்துவை எழுப்ப ஆரம்பித்தார்.


அவள் கண்களை கசக்கிக் கொண்டே எழவும் சத்தம் கேட்டு வேதாவும் அடித்துப்பிடித்து எழுந்தாள்.



கனகா வேதாவைப் பார்த்து நீ தூங்குமா நாங்க கோவிலுக்கு போயிட்டு வர்றோம்... வேலைக்காரங்க எல்லாரும் இருப்பாங்க கொஞ்சம் சொந்தக்காரங்களும் இருக்காங்க... உனக்கு என்ன வேணும்னாலும் கேளு செஞ்சு தருவாங்க நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடு …



அப்புறம் வீட்ல தாத்தா இருக்காங்க கொஞ்சம் அப்பப்போ போய் பாத்துக்கோ என்று கூறியபடி அரை தூக்கத்தில் இருந்த இந்துவை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார்.


அக்கா வரலையா என்று கேட்ட இந்துவிடம் நாம முதல்ல கிளம்பற கார்ல போறோம் அவங்க பின்னாடி வேற கார்ல வராங்க நீ கேள்வி மேல கேள்வி கேட்காமல் சீக்கிரமாக கிளம்பு என்று கூறினார்.


தூக்கம் வருது அத்தை என்று சிணுங்கிய இந்துவிடம் சீக்கிரமா டிரஸ் மாத்திட்டு காரில் போய் தூங்கலாம் என்று அவளை விரட்டினார்.


மாறனுக்கு ஒன்றுமே புரியவில்லை நான் தந்தையிடம் அவ்வளவு தூரம் சொல்லியும் கூட தந்தை புரிந்து கொள்ளாமல் எப்படி வேதாவின் தாய் தந்தையை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்ல சம்மதித்தார்.


வேதாவின் தாயும் தந்தையும் வந்ததும் பேசி அவர்களுடன் வேதாவை அனுப்பி விடலாம் என்று பார்த்தால் இப்போது ஒட்டுமொத்த குடும்பமும் இவளை என்னுடைய தலையில் கட்டிவிட்டு கோவிலுக்கு செல்கிறது எப்படி அவர்கள் வரும்வரை இவளை சகித்துக் கொள்வது என்று குழம்பித் தவிக்க.



பாட்டியும் பட்டு சேலை அணிந்து கம்பீரமாக வந்தவர் மாறா கோவிலுக்கு போயிட்டு ரெண்டு நாள்ல வந்திடுவோம் தாத்தாவை உன் பொறுப்பில் தான் விட்டுட்டு போறேன் பத்திரமா பாத்துக்கோ என்று கூறியபடி சென்றுவிட…



என்ன நடக்கிறது இந்த வீட்டில் நேற்று இரவு வரை இருந்த இலகுத்தன்மை இந்த வீட்டில் இல்லையே படுக்கையில் இருக்கும் தாத்தாவை விட்டுவிட்டு பாட்டி கோவிலுக்கு செல்கிறாரா...


தாத்தாவுக்கு சுகமில்லை அவரை விட்டுட்டு எல்லாம் கல்யாணத்துக்கு வரமாட்டேன்னு சொன்ன பாட்டியா இப்பொழுது தழைய தழைய பட்டு புடவை அணிந்து கொண்டு கோவிலுக்குச் செல்வது.


எப்படி ஒரே நாள் இரவில் மனதை மாற்றிக் கொண்டு கோவிலுக்கு செல்கிறார்.


அதுகூட பரவாயில்லை வயதான காலத்தில் கோவிலுக்கு என்றால் கொஞ்சம் ஆர்வத்துடன் தான் கிளம்பிச் செல்வார்கள் விட்டுவிடலாம்.



இந்த ராதிகா நிறைமாத கர்ப்பிணி பெண்...சில நாட்களுக்கு முன்பு வளைகாப்பு முடிந்து அவளின் பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பொழுது ஒரு நாள் கூட அங்கு வீட்டில் இருக்க மாட்டேன் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தவள் இன்று சத்தமில்லாமல் செழியனின் பின் செல்கிறாளே…


என்னதான் இந்த வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது அனைவரும் சேர்ந்து ஏதாவது சதித்திட்டம் தீட்டுகிறார்களா... இந்த அரிசி மூட்டையை கடைசி வரைக்கும் என்னுடைய தலையில் கட்டும் எண்ணத்தில் ஏதாவது நாடகத்தை நடத்துகிறார்களோ... என்று தூங்கும் வேதா வைத்தான் பார்த்தபடி யோசித்துக் கொண்டிருந்தான்.



எப்படித்தான் இந்த புளிமூட்டைக்கு மட்டும் உடனடியாக தூக்கம் வந்து தொலைகிறதோ இந்தத் திருமணப் பேச்சு எடுத்த நாளில் இருந்து என்னால் நிம்மதியாக கண்ணயற முடியவில்லை ஆனால் இவள் மட்டும் இடம் பொருள் ஏவல் எதையும் பார்க்காமல் உடனே படுத்து தூங்கி விடுகிறாள் என்று மனதுக்குள் திட்டிக் தொடங்கியிருந்தான்.



செழியன் ராதிகாவையும் லட்சுமி அக்கா என்று கூறும் பணிப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு காரில் சென்ற சற்று நேரத்தில்.



பாட்டி இந்து கனகா மூவரும் மற்றொரு காரில் பின் சென்றனர். நல்ல தூக்க கலக்கத்தில் இருந்த இந்துவிற்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை கனகா சொன்னவற்றை எல்லாம் செய்தவள் காரில் இடம் கிடைத்ததும் சொகுசாக கால்களை நீட்டி படுத்து தூங்க ஆரம்பித்து விட்டாள்.


கனகாவிற்கு அதுவே மிகப்பெரிய நிம்மதி… ஏதாவது வாய் துடுக்காக மாறனின் முன்பு கேள்விகளாக கேட்டு கோவிலுக்கு வர மறுத்து விடுவாளோ என்று பயந்து கொண்டிருந்தார் நல்லவேளை அப்படி எதுவும் கேட்கவில்லை.


தூக்கத்தில் எழுப்பி தூக்கக் கலக்கத்திலேயே கோயிலுக்கும் அழைத்துச் செல்வது நல்லது தான்...


ஒருவேளை இரவே அவளை தன்னுடைய அறைக்கு அழைத்து வந்திருந்தால் அவர் கண்டிப்பாக காலை கோவிலுக்கு வர சம்மதித்திருக்க மாட்டாள்... என்று நினைத்துக் கொண்டவர்.


பரவாயில்லை வேதாவும் தூங்க ஆரம்பித்து விட்டால் என்ன ஏது என்று எதுவும் கேட்க மாட்டாள் போல நல்ல அக்கா தங்கை என்று மனதுக்குள் நினைத்து சிரித்துக் கொண்டார்.



சில நிமிடங்களிலேயே வீடு பயங்கர நிசப்தம் ஆனது நன்கு விடிவதற்காக செழியன் தலையில் கை வைத்தபடி ஹாலிலேயே அமர்ந்து காத்திருக்க ஆரம்பித்தான்.


காலை பொழுது ஆரம்பிக்கத் தொடங்கவும் தான் மாறனுக்கு சற்று கண் அயர ஆரம்பித்தது அவனுக்கு அவனது அறையைத் தவிர வேறு எங்குமே உறங்கி பழக்கம் இல்லை.



இப்பொழுது அவனின் அறையில் வேதா சாஷ்டாங்கமாக உறங்கிக் கொண்டிருக்கிறாள் அவள் எழுந்து வெளியே வந்தாலாவது இவன் சென்று சற்று நேரம் தூங்கலாம்.



ஆனால் வேதா எதைப்பற்றியும் கவலை இல்லாமல் கும்பகர்ணி போல் உறங்கிக் கொண்டிருக்கிறாள்.


அவளை பார்க்க பார்க்க மாறனுக்கு ஆத்திரம்தான் வந்தது என்ன பெண் இவள் எப்படி ஒரே நாள் இரவில் அடுத்து வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்ற சிறு சங்கோஜம் கூட இல்லாமல் கிடைத்த இடத்தில் எல்லாம் படுத்துத் தூங்குகிறாள் என்று அவளை தான் அவ்வப்போது பார்த்து திட்டிக் கொண்டே காத்திருக்க ஆரம்பித்தான்.



ஒருவழியாக காலை சூரியன் நன்றாக அதனின் வேலையை செய்ய கோபத்தில் இருந்த மாறன் அவனின் அறைக்குள் சென்று ஜன்னல் திரை அனைத்தையும் ஒதுக்கிவிட்டு சூரிய வெளிச்சம் நன்றாக வேதாவின் மேல் படும்படி செய்தான். அப்படியாவது அவள் எழுகிறாளா என்று பார்ப்பதற்காக…


ம்கூம்... வாய்ப்பேயில்லை எவ்வளவு வெயில் முகத்தில் பட்டாலும் என் உறக்கம் கலையாது என்பது போல் வேதா மிகப் பொறுமையாக எட்டு மணி அளவில் தான் எழுந்தாள்.



உடனே படுக்கையை விட்டு எழுந்து அமரவும் இல்லை அவளுக்கு திருமணமாகி இங்கு வந்ததே சற்றும் நியாபகத்தில் இல்லை அவள் வீட்டில் எழுவது போல மிகப் பொறுமையாக கைகளை நீட்டி சோம்பல் முறித்த படி கண்விழித்து பார்க்க அப்போதுதான் உறங்கும் இடத்தின் சூழல் மாறுபட்டு இருப்பதை உணர்ந்து வேகமாக எழுந்து அமர்ந்தாள் .


கனகா கோவிலுக்கு செல்லும் முன் அவளிடம் கூறிய எதுவுமே ஞாபகத்தில் இல்லை. கனகா வந்தது கூறியது எல்லாம் ஏதோ கனவு போல் இருந்தது.. இருபத்தி நான்கு மணி நேரத்தில் தான் அவளது வாழ்வில் எத்தனை மாற்றங்கள்...
 
Last edited:
Top