கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துளி எண்ணெய் 12

Akhilanda bharati

Moderator
Staff member
12. பயணம்


"அம்மாவோட ஃபோன் மாத்தி மாத்தி அடிச்சுக்கிட்டே இருக்குப்பா.. நானும் எத்தனை கால் தான் அட்டென்ட் பண்றது? எனக்கே நிறைய அசைன்மென்ட் இருக்கு.. ஏன் இந்த அம்மா போனை வச்சுட்டு போயிருக்காங்க?" என்று தன் வேலை கேட்டுப் போன எரிச்சலில் ஜெயந்தியின் அலைபேசியைக் கொண்டு வந்து தியாகராஜனிடம் நீட்டினாள் சின்ரெல்லா.

"ஓ..இன்னும் ஷாப்பிங் போன அம்மா வரலையோ? குடு நான் பார்க்கிறேன்" என்றபடி தியாகராஜன் போனை வாங்கிக் கொண்டார். ஜெயந்தியின் உறவுக்கார பெண்மணி அவளை வம்படியாக ரங்கநாதன் தெருவுக்கு அழைத்துச் சென்றிருந்தாள். கிளம்பும் அவசரத்திலும், அவள் மேல் இருந்த கடுப்பிலும் ஜெயந்தி ஃபோனை மறந்து வைத்து விட்டுப் போன அன்றைய தினம் தான் முக்கியமான பல அழைப்புகள் வந்த தினமாக அமைந்தது.

தவறவிட்ட அழைப்புகளின் பட்டியலை தியாகராஜன் பார்க்க, அதில் ப்ரீத்தியின் எண்ணும் இருந்தது. மூன்று முறை அழைத்திருந்தாள். சட்டென்று அந்த எண்ணிற்கு ஜெயந்தியின் எண்ணில் இருந்தே அழைத்தார் தியாகராஜன். "ஜெயந்தி.. எனக்கு எத்தனையோ ஹெல்ப் பண்ணிருக்க.. அதோட இந்த ஹெல்ப்பும் சேர்த்து பண்ணிடேன்.. ஹுசைன்னு சொன்னேன்ல? என்னோட பெஸ்ட்டீ.. அவர் இப்ப ஒரு வேலை விஷயமா டெல்லிக்கு வந்திருக்காரு.. டெல்லி ஏர்போர்ட்ல டீடைன் பண்ணிட்டாங்களாம்.. அவருக்கு ஏதோ டெரரிஸ்ட் த்ரட் இருக்கு உள்ள வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம்.. இங்கே இந்தியால உள்ள ஃபிரண்ட்ஸ் யாராவது ஹெல்ப்புக்கு போனா நல்லா இருக்கும்னு சொல்றாரு. ஏதாவது செய், ப்ளீஸ்" என்றாள் ப்ரீத்தி.

அவளது குரலில் அபரிமிதமான பதட்டமும் லேசான கண்ணீரும் கலந்திருந்தது. குழந்தை காணாமல் போன போது தென்பட்ட அதே தவிப்பு இப்போது அதில் இருப்பதாக தியாகராஜனுக்குத் தோன்றியது. "ப்ரீத்தி ரிலாக்ஸ்! நான் தியாகு பேசுறேன்.. ஜெயந்தி ஃபோனை வச்சுட்டு வெளியே போயிட்டா.. இஃப் ஐ அம் ரைட், அஸ்வின் இன்னிக்கி டெல்லிக்கு கிளம்புறான்.. அவன் உனக்கு ஹெல்ப் பண்ண முடியும்னு நினைக்கிறேன்"

"ஓ! தாங்க் காட்! அண்ணா அப்படியே அவனோட நம்பர் அனுப்பி வைக்கிறீர்களா? இல்ல இல்ல என்கிட்ட இருக்கு.. நேத்து கூட பேசினேன். ஆனா இந்த சிட்டுவேஷன்ல அவனால ஹெல்ப் பண்ண முடியுமா தெரியலையே? நீங்களும் உங்க பிரண்ட்ஸ் சர்க்கிள்ல யாருகிட்டயாவது சொல்லி ரெக்கமண்ட் பண்ண சொல்றீங்களா? பொலிட்டிக்கல் பீப்பிள், அட்வகேட்ஸ் இந்த மாதிரி?" என்று குறிப்பிட்டுக் கேட்க,

"கண்டிப்பா சொல்றேன்.. ஆனா அஸ்வினோட கெப்பாசிட்டி உனக்குத் தெரியல.. அவன் பாக்குறதுக்குத் தான் காமெடி பீஸ் மாதிரி இருப்பான்.. காத்து நுழைய முடியாத இடத்தில் கூட அவனோட பேச்சு திறமையால நுழைஞ்சு வந்துடுவான். அவன் இப்ப தான் ஏர்போர்ட் போயிருப்பான்னு நினைக்கிறேன்.. போலீஸ் அஃபீசியல்ஸ் சிலர் இருக்காங்க.. முதல்ல அவங்க கிட்ட பேசிட்டு அப்புறம் அஸ்வினுக்கு நானும் கூப்பிட்டுப் பாக்குறேன்.." என்ற தியாகராஜன் தனக்குத் தெரிந்த நட்பு வட்டங்களிடம் என்ன ஏது என்று விசாரிக்கத் துவங்கினார்.

அஸ்வின் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தான் இருந்தான். அப்போதுதான் செக்கிங் சம்பிரதாயங்களை முடித்துவிட்டு போர்டிங் கேட்டில் அமர்ந்திருந்தான். சில நிமிடங்களுக்கு முன்பாக அவன் சந்தித்திருந்த ஒரு நபரால் அவனது வாழ்வில் புதிய ஒளி வீசுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகத் தெரிந்தது.

ப்ரீத்தி ஆசுவாசம் செய்து கொண்டு அஸ்வினுக்கு அழைப்பதற்கு முன் தியாகராஜன் அவனுக்கு அழைத்திருந்தார். "குரு ஒரு செம மாஸான விஷயம் நடந்திருக்கு குரு!" என்று உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தான் அஸ்வின். அருகில் இருந்த நபரிடம், "சார் ஒரு 2 மினிட்ஸ் ப்ளீஸ்!" என்று அனுமதி கேட்டு விட்டு சற்றுத் தள்ளி வந்தான்.

"குரு உங்களுக்குத் தெரியுமா, இப்ப நான் யார் கூட பேசிட்டு இருந்தேன்னு? நம்ம யுனிவர்சல் ஸ்டார் உதயகுமார் இல்ல அவரோட அண்ணன் கிருஷ்ணகுமார் கூட.. அன்னிக்கு மால்ல எங்க காருக்கு முன்னாடி ஒரு ஃபாரின் கார் பார்க் பண்ணி, அது ஸ்டார்ட் பண்ண முடியாம.. அப்படி ஒரு சின்ன கதை சொன்னேன்ல உங்ககிட்ட? உங்ககிட்ட சொல்லல.. மாதாஜி கிட்ட சொல்லிருப்பேன்.. அதை விடுங்க.. அது உதயகுமார் சார் கார் தானாம்.. அன்னிக்கு மாலுக்கு வந்தது கிருஷ்ணகுமார் சாரே தானாம்.. இப்ப அதே மாதிரி ஃபாரின் கார்ஸுக்கு ஆல் இந்தியா டீலர்ஷிப் எடுக்க போறாராம் நம்ம உதயகுமார் சார்.. அன்னைக்கு அவரோட காரைத் தான் நான் சரி பண்ணிக் கொடுத்து இருக்கேன்கிறது எவ்வளவு ஆச்சரியம் பாத்தீங்களா குரு? அன்னைக்கு நான் என்னோட விசிட்டிங் கார்டை கொடுத்ததை அந்த செக்யூரிட்டி இவர்கிட்ட குடுத்திருக்கிறார்.. இவர் அதை கையிலே வச்சிருந்து இப்ப தான் டைம் கிடைச்சதுன்னு ஏர்போர்ட்ல வச்சு ஃபோன் அடிக்கிறார்.. நான் பார்த்தா அவருக்குப் பக்கத்திலேயே தான் உட்கார்ந்து இருக்கேன்.. எவ்வளவு அதிசயம் இல்லை? நீங்க இந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் பாத்தீங்களா குரு?" என்றான் படபடப்பாக.

"டேய்.. எனக்குத் தலையும் புரியல வாலும் புரியலை.. சரி ஏதோ ஒரு பெரிய மனுஷனை சந்திச்சிருக்க.. உன் வாழ்க்கையில் அவருக்கு சின்னதா ஒரு உதவி பண்ணியிருக்க.. அதோட நிறுத்திக்கோ.. சினிமாக்காரங்க கூட ரொம்ப நெருங்காதே.."

"ஒரு நிமிஷம் குருஜி! அவ்வளவு பெரிய பெரிய மனுஷனே எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கார்.. உங்களுக்கு என்ன வந்துச்சு.. கவனிங்க.. என்ன சொல்ல வந்தேன்.. ஆங்.. காத்து வாக்குல ரெண்டு காதல்.. அதுல சொல்லுவாங்க தெரியுமா? வென் இட் ரெயின்ஸ் இட் போர்ஸ் (when it rains it pours) னு.. அதே மாதிரி இப்போ எனக்கும் நல்ல நேரம் ஸ்டார்ட் ஆயிடுச்சு குரு! என்னோட குவாலிஃபிகேஷன் எல்லாம் பாத்துட்டு 'ஃபாரீன் கார்ஸ்க்கு ஒரு சர்வீஸ் சென்டர் கம் சேல்ஸ் ஷோரூம் ஓபன் பண்ணலாமா? நீங்க பார்த்துக்குறீங்களா?' அப்படின்னு கேக்குறார் கிருஷ்ணகுமார் சார்.. எவ்வளவு பெரிய பிசினஸ் சாம்ராஜ்யம் தெரியுமா இவங்களோடது? "ஆர் யூ வில்லிங் டூ கம் டூ யுனிவர்சல் ஃபேமிலி?" அப்படின்னு அவ்வளவு தன்மையா கேட்கிறார் அந்தப் பெரிய மனுஷன்.. எனக்கு அப்படியே புல்லரிச்சிடுச்சு" என்று அஸ்வின் கூற,

"டேய் அடங்குடா! ஆக்டரோட அண்ணன் தானே உன் கிட்ட பேசுறது? என்னமோ அந்த நடிகனே பேசுற மாதிரி இவ்வளவு பில்டப் குடுக்குற? செலிப்ரிடீஸ் கூட எல்லாம் டிஸ்டன்ஸ் பண்ணனும்டா" என்றார் தியாகராஜன்.

"உங்களுக்கு பொறாமை குரு.. கிருஷ்ணகுமார் சார் தான் அவங்களோட யுனிவர்சல் நெட்வொர்க்ல பெரிய ஆள் தெரியுமா? இவரு சொல்றதைத் தான் உதய் சார் கேட்பார்.. சரி சரி! நீங்க சொல்ல வந்த விஷயத்தை சட்டுனு சொல்லுங்க" என்க, ப்ரீத்தியின் நண்பன் விஷயத்தை சுருக்கமாகச் சொன்ன தியாகராஜன், "நீ என்ன பண்ற.. டெல்லி டொமஸ்டிக் ஏர்போர்ட்ல இறங்கின உடனே அப்படியே சிரமம் பாக்காம இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்குப் போ.. அதுக்குள்ள இங்க நான் சில கிரவுண்ட் வொர்க் பண்ணி வைக்கிறேன். ஹுசைன் கூட இரு. அவர் இவங்களை விட பெரிய மனுஷன் டா.. உதயகுமார் தமிழ்நாட்டில் பெரிய ஆள்னா அந்த ஹுசைன் உலக அளவில் பிரபலமான மனுஷன் போல.. நானே இப்பதான் கூகுள் பண்ணி பார்த்தேன். உனக்கும் லிங்க் அனுப்புறேன். உன் பிசினஸ் பேச்சு வார்த்தையை முடிச்சுட்டு இதையும் பாத்துக்கோ" என்றார்.

"ஓகே குரு! நீங்க சொன்னா பில்டிங் மேல இருந்துனாலும் குதிப்பேன்.. ஆஃப்ட்டர் ஆல் டொமஸ்டிக் ஏர்போர்ட் டு இன்டர்நேஷனல் ஏர்போர்ட்.. அது போக மாட்டேனா? இப்ப நீங்க ஃபோனை வைங்க.. என்னுடைய தங்க முட்டை இடுற வாத்து வெயிட்டிங்ல இருக்கு.. நான் போறேன்" என்றபடி உதயகுமாரின் அண்ணன் கிருஷ்ணகுமாரிடம் வந்து அமர்ந்தான் அஸ்வின்.

"சாரி சார். ஒரு அன்புத் தொல்லை.. ஆனா ரொம்ப பாசக்கார தொல்லை சார்.. நீங்க சொல்லுங்க" என்றபடி அஸ்வின் அவரிடம் பேச,

"நீங்க செக்யூரிட்டி செக்குக்கு வெயிட் பண்ணும்போதே உங்களை கவனிச்சேன்.. உங்களோட இந்த கலகலப்பான ஆட்டிட்யூட் தான் உங்களை திரும்பி பார்க்க வச்சது மிஸ்டர் அஸ்வின். நான் பேசணும்னு நினைக்கிற நபர் நீங்கதான்னு தெரிஞ்ச உடனே ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டேன்" என்றவர், அதன்பின் வெளிநாட்டு கார்கள், அதன் சர்வீஸ், ஸ்பேர் பார்ட்ஸ், ஷோரூம் என்று வேறு சில விஷயங்களை பேசிவிட்டு,

"எங்க கம்பெனியிலிருந்து உங்க மெயிலுக்கு அபிஷியலா ஒரு இன்வைட் லெட்டர் வரும். டிசைட் பண்ணிட்டு சொல்லுங்க" என்றபடி தன்னுடைய விமானத்துக்கு அழைப்பு வரவும் அஸ்வினிடம் கைகுலுக்கி விட்டு விரைந்தார். 'அஸ்வின், உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடா' என்றபடி அதே ஃபிளைட்டில் எக்கனாமி க்ளாஸில் பயணிக்க தன் ட்ராலியைத் தள்ளிக் கொண்டு விரைந்தான் அஸ்வின்.

சரியாக அவன் விமானத்தில் அமர்ந்து சீட் பெல்ட் மாட்டி, ஏர் ஹோஸ்டஸ் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஃபோனை ஏரோபிளேன் மோடில் போட்ட நேரம் அவனது அலைபேசிக்கு அழைத்தாள் ப்ரீத்தி. இந்திய கணவன் மனைவியரின் ஆதிகாலத்துப் பழக்கம் அஸ்வின் வீட்டிலும் அச்சுப்
பிசகாமல் கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது அஸ்வினின் ஃபோன் சார்ஜ் இல்லாமலோ சுவிட்ச் ஆஃப் பண்ணியோ இருக்கும் பொழுது அஸ்வினியின் போனுக்கு அழைப்புகள் வருவது மாதிரி டைவர்ட் செய்து வைத்திருப்பான். இந்தப் பழக்கம் இத்தனை நாள் இல்லாமல் இன்று வினையாகிப் போய் முடிந்ததது. காரணம் இப்போது ப்ரீத்தியின் அழைப்பு அஸ்வினின் மொபைலை சென்றடைந்தது.

"ஹலோ!" என்று அஸ்வினியின் குரல் ப்ரீத்திக்கு கேட்க, இப்போது கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருந்த பிரீத்தி, "அஸ்வினோட வைஃபா நீங்க?" என்று உரையாடலை ஆரம்பித்தாள். பிஹைண்ட் டோர்ஸ் தளத்தில் வந்த செய்தியால் தன்மேலும் அஸ்வின் மேலும் அஸ்வினிக்கு சந்தேக பார்வை விழுந்திருக்கிறது, அதனால் அவர்களது வீட்டில் பூகம்பம் வெடித்து இப்பொழுதுதான் அடங்கி இருக்கிறது என்பதை அறியாத ப்ரீத்தி, "அஸ்வின்? அஸ்வின் இருக்காரா? அவர் டெல்லிக்கு கிளம்பிட்டாரா? இன்னைக்கு டெல்லிக்கு கிளம்புறதா சொன்னாரே?" என்று படபடவென்று பேச,

பேசுவது ப்ரீத்தி என்று உணர்ந்த அஸ்வினிக்கு கோபம் கோபமாக வந்தது. "நீ யாருடி எனக்கு ஃபோன் பண்ணி என் புருஷன பத்தி கேட்கிறது?" என்று அவள் ஒருமையில் திட்ட, இந்தியக் குடும்பங்களின் கால் டைவர்ட் நடைமுறைகள் பற்றி அறிந்திராத ப்ரீத்தி,

"உங்க நம்பருக்கா அடிச்சேன்? அஸ்வின் நம்பருக்கு தானே அடிச்சேன்?" என்றாள். அவளுக்கு இருந்த குழப்பத்தில் அஸ்வினியின் குரல் மாறுதலை அவள் கவனிக்கவில்லை.

"அது வேற செய்வியா நீ? தைரியமா பொண்டாட்டிக்கு கூப்பிட்டு உன் புருஷனுக்கு தான் கூப்பிட்டேன் அப்படின்னு வேற சொல்லுவியா நீ?" அஸ்வினி கத்தினாள்.

ஏன் திட்டுகிறாள் என்று அவளுக்கு சுத்தமாகப் புரியவில்லை. "ஹலோ அஸ்வினோட நம்பர்னு நினைச்சு தான் கூப்பிட்டேன்.. நேத்து இந்த நம்பருக்குப் பேசுறப்ப இன்னிக்கு டெல்லி கிளம்புறதா சொன்னார். எனக்கு அங்க ஒரு வேலை இருக்கு. பேச இஷ்டம்னா பேசுங்க இல்ல கட் பண்ணிடுங்க. நான் பாத்துக்குறேன்" என்று வைத்தாள் ப்ரீத்தி.

அஸ்வினிக்கு லேசாக புகைந்த கோபம் இப்போது கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. அவளும் அஸ்வினின் எண்ணிற்கு அழைத்தாள். அழைப்பு எடுக்கப்படாமல் போகவே உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தாள். அவளது மனதில முளை விட்டிருந்த சந்தேக விதை ஆலமரமாக வளரத் துவங்கியது. அஸ்வினின் கப்போர்ட்டைத் திறந்து அவனுடைய உடைகள், கோப்புகள் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டாள்.

எதைத் தேடுகிறோம் என்ற இலக்கே இல்லாமல் அவள் தேட, நீளமான லெட்ஜர் போன்ற அமைப்பில் இருந்த ஒரு நோட்டிற்குள் இருந்து 100 ரூபாய் 200 ரூபாய் 500 ரூபாய் என்று சில பல ரூபாய் நோட்டுகள் வந்து விழுந்தன. நோட்டின் பக்கம் வாரியாக அவள் புரட்டிப் பார்க்க, சென்னையில் அவன் இருந்த நாட்களில் பயிற்சிக்கு நடுவில் விடுமுறைக்கு வந்து விட்டுப் போன தினங்களில் சில கன்சல்டேஷன்களுக்கு சென்று வந்திருந்தான். சில சர்வீஸ்கள் செய்து கொடுத்திருந்தான். அதற்கு சம்பளமாகக் கிடைத்த பணத்தை தேதியிட்டு எழுதி அந்தந்தப் பக்கத்தில் அந்த ரூபாய் நோட்டை வைத்திருந்தான்.

'சொந்த வீட்டுக்குள்ளேயே எனக்கு தெரியாம இவ்வளவு பணம் பதுக்கி இருக்காரு.. அப்ப வெளியே என்ன செய்வாரு' என்று பல வேண்டாத எண்ணங்கள் தோன்றின. இன்னும் அவனுடைய ஆவணங்களைக் கலைத்துப் பார்க்க இன்னொரு பாஸ்புக் சிக்கியது. அதில் மூன்று லட்சத்திற்கு ஒரு ஃபிக்சட் டெபாசிட் இவர்களது வங்கி அல்லாத இன்னொரு வங்கியில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டிருக்க அத்தனையும் பார்த்து கோபத்தின் உச்சிக்கே சென்றாள் அஸ்வினி.

'எனக்கு தெரியாம எவ்வளவு திருட்டுத்தனம்? தனியா காசு ஒதுக்கி இந்த ப்ரீத்தி கூட எஸ்கேப்பாக பிளான் பண்ணிருப்பாரோ?' என்று அப்படியும் இப்படியுமாக யோசித்த அஸ்வினி இறுதியாக அந்த முடிவை எடுத்தாள்.

ஜெயந்தி இன்னமும் ரங்கநாதன் தெருவில் அந்தப் பெண்ணின் ஷாப்பிங் பைகளை வைத்துக்கொண்டு விழிபிதுங்கி நிற்க, அவளது ஃபோனிற்க்கு அன்றைய நாளின் கடைசி அழைப்பும் வந்தது. அதையும் ஏற்றது தியாகராஜன் தான். அழைத்தது ஈஸ்வரி. அவருமே ப்ரீத்தியை போல் எதிர் முனையில் யார் அழைப்பை ஏற்றார்கள் என்று கவனிக்காமல், "ஜெயந்தி! என் பொண்ணு அஸ்வினி எலி மருந்து சாப்பிட்டுட்டா ம்மா! என்ன பண்றதுன்னே புரியலை.. கொஞ்சம் வர்றியாம்மா?" என்றார் கண்ணீருடன்.


****

கையளவு கையளவு மனசு அதில்
கடலளவு கடலளவு கனவு
 
Top