கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துளி எண்ணெய் 13

Akhilanda bharati

Moderator
Staff member
13. வட்டம்


"என்னடா ஜெய்யு? என்ன தேடுற? உடம்புக்கு எதுவும் பண்ணுதா?" மாத்திரைகள் வைத்திருக்கும் கப்போர்டில் உருட்டிக் கொண்டிருந்த ஜெயந்தியை பின்னால் இருந்து அணைத்தவாறே கேட்டார் தியாகராஜன். தன் அலுவல்களை ஒதுக்கி விட்டு மனைவி என்ன செய்கிறாள் என்று அவர் கவனிக்கும் மிக அபூர்வமான நாள்களில் அதுவும் ஒன்று.

"அதிசயமா இருக்கு? கிச்சன் பக்கம் எல்லாம் வந்துருக்கீங்க! எத்தனை வருஷம் இருக்கும் உங்க காலடித்தடம் இந்த சமையல்கட்டு வாசலில் பட்டு?" என்று கேள்வி எழுப்பிய ஜெயந்தி தன் தேடுதலைத் தொடர்ந்தாள்.

"அவசியம் வந்தால் வர்றது தான்.. நீ தான் எனக்கு அவசியமே இல்லாம பண்ணிடுறியே.. சரி சொல்லு.. உனக்கு என்ன பண்ணுது?" என்று தியாகராஜன் கேட்க,

"ஒரே தலை வலி, கால் வலி. அது மட்டும் இல்ல மண்டைக்குள்ள ஏதோ குடைச்சலாவே இருக்கு.. அலைஞ்சது, சத்தம், தூசி எதுவுமே பிடிக்கல.. பேசாம தலைவலி மாத்திரையோட ஒரு தூக்க மாத்திரையும் போட்டுட்டு தூங்கிடலாமான்னு பார்க்கிறேன்" என்றாள் ஜெயந்தி. நச்சு பண்ணும் உறவுக்கார பெண்ணுடனான ஷாப்பிங்கில் இருந்து தாமதமாகவே திரும்பி வந்திருந்தால் அவள்.

"அதெல்லாம் வேண்டாம்.. லெஹர் சோடா இருக்கு பிரிட்ஜ்ல.. லெமன் சோடா போட்டுத் தரேன்.. அப்புறம் நானே காலையும் தலையும் பிடிச்சு விடுறேன்.. ஜம்முன்னு தூங்கிடலாம்" என்று தியாகராஜன் களத்தில் இறங்கினார். பத்து வருடங்கள் இருக்கலாம், தியாகராஜன் தன் கை வண்ணத்தை சமையலில் காட்டி. ஜூஸ், ஸ்வீட் என்று டெசர்ட் ஐட்டங்களில் அசத்துவார் ஒரு காலத்தில்.

ஆவென்று பார்த்தாள் ஜெயந்தி. பட படவென ஒரு பெரிய குடுவையில் சோடாவை ஊற்றி, அதில் கொஞ்சம் எலுமிச்சைச் சாறு பிழிந்து கூடவே சிறிது உப்பும் சர்க்கரையும் சேர்த்து அவளிடம் நீட்டினார். "புதினா இருக்கான்னு பார்த்தேன்.. இல்ல.. இருந்தா லெமன் மின்ட் சோடா ரெடி ஆயிருக்கும்" என்றார்.

ஜெயந்தி மடக்கென்று குடித்து விட்டு அப்படியே படுக்கையில் சாய்ந்தாள். சின்ட்ரெல்லாவும் சாய் ப்ரகாஷும் சற்றுமுன் தான் படுத்திருந்தனர். அவளது கால்களை மெதுவாகப் பிடித்து விட்டு, "நாளைக்கு எங்கேயும் போகாம ரெஸ்ட் எடு" என்று தியாகராஜன் சொல்ல,

"எங்கே ரெஸ்ட்.. பசங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டப் போகணும்.. அந்த அக்கா வேற மாங்காடு, திருவேற்காடுன்னு ப்ளான் போட்டு இருக்காங்க" என்றாள் ஜெயந்தி.

"ஸ்கூலுக்கு நான் போறேன்.. அவங்களுக்கு வேணும்னா ஒரு கார் ஏற்பாடு பண்ணி அனுப்பிடலாம்.. நீ ரூமை விட்டே வராதே.. ஏதாவது கேட்டா என் பொண்டாட்டிக்கு பீரியட்ஸ்னு சொல்லிடுறேன்" என்றார் கிசுகிசுப்பாக.

"ஏதோ சொல்றீங்க.. நம்புறேன். வழக்கமா நீங்க சொல்றதெல்லாம் தண்ணில தான் எழுதணும்.. இன்னிக்கு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.. இப்பவே நீங்க பேசுறதெல்லாம் கனவா நனவான்னு இருக்கு" என்று ஜெயந்தி கண்மூட,

"அப்பா.. நான் வாலிபால் விளையாடிட்டு வந்தேன்.. கை கால் வலிக்குது புடிச்சு விடுங்கன்னு நேத்து கேட்டேன்.. என்னமோ காரணம் சொன்னீங்க?" என்று சாய் கேட்டான்.

*சின்ன வயசு தானே உனக்கு.. விளையாடினா தானாவே தூக்கம் வரும்டா" என்று தியாகராஜன் கூற, "யானைக்கு ஒரு காலம் வந்தா, பூனைக்கு ஒரு காலம் வராமலா போயிடும்? அப்போ நான் வச்சிக்கிறேன் உங்கள" என்று சாய் மிரட்டினான்.

"என்னடா பழமொழி எல்லாம் பயங்கரமா இருக்கு? யார்கிட்ட கத்துக்கிட்ட?"

"அதுவா.. என் ஃப்ரெண்ட் ஒருத்தன் அடிக்கடி சொல்லுவான்"

"சரி சரி தூங்கு" என்ற தியாகராஜன் இப்போதைக்கு அஸ்வினி விஷயத்தை ஜெயந்தியிடம் கூற வேண்டாம் என்று முடிவெடுத்தார். அவரே ஜெயந்தியின் போனில் இருந்த கால் ஹிஸ்டரியில் அஸ்வினி தொடர்பான அழைப்புகளை அழித்து விட்டார்.

தன் ஃபோனில் தவறவிட்ட, ஏற்கப்பட்ட அழைப்புகளை வீட்டுக்கு வந்ததும் ஜெயந்தி பரிசோதிக்கையில், ஹுசைன் ப்ரீத்தி விஷயத்தை மட்டும் சொல்லி அதற்குத் தான் எடுத்திருக்கும் நடவடிக்கைகளையும் கூறியிருந்தார். அஸ்வினி சாப்பிட்டது குறைந்த வீரியமுடையது, அதுவும் வாங்கி பல நாட்களாகி விட்ட எலி மருந்து. அதனால் பெரிய ஆபத்து இல்லை என்று கூறி விட்டார்கள். இன்னும் அவள் டிஸ்சார்ஜ் ஆகும் அளவிற்கு குணமான பின் ஜெயந்திக்கு சொல்லிக் கொள்ளலாம், அவள் தன்னுடைய எத்தனையோ பிரச்சனைகளைத் தன் கவனத்திற்குக் கொண்டு வராமலேயே தீர்த்து வைத்ததைப் போல், தானும் இந்த விஷயத்தைத் தீர்த்து விட்டுத் தான் சொல்ல வேண்டும், என்று பேசாமல் இருந்து கொண்டார்.

அங்கே டெல்லியில் தியாகராஜன் கூறியது போலவே அஸ்வின் ஹுசைனை சென்று பார்த்து, தன் பேச்சுத் திறமையால் அதிகாரிகளுக்கு நம்பிக்கை கொடுத்து, நானாச்சு அவருக்குப் பாதுகாப்பு என்று கூட்டிக் கொண்டு தன் அறைக்கே வந்திருந்தான். தியாகராஜனும் சில நடவடிக்கைகள் எடுத்திருக்க விரைவில் ஹுசைன் தன் புகைப்படம் மற்றும் செய்தி சேகரிப்புப் பணியை முடித்துக் கொண்டு போய் விட வேண்டும், ஒதுக்குப்புறமான இடங்களுக்கு செல்லக்கூடாது, அவரது அப்பாயிண்ட்மெண்ட்களை பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்து டெல்லி போலீசார் அவரை அனுப்பி வைத்தனர். பிரபலமான ஒரு வெளிநாட்டு நபருக்கு இந்திய நாட்டில் வைத்து எதுவும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பது அவர்களுக்கு வந்திருந்த உத்தரவு.

ஹுசைன் வந்திருந்தது அரசியல் தலைவர் ஒருவரை பேட்டி எடுக்க. உலகின் மதிப்பு மிக்க முதல் பத்து நபர்களின் பட்டியலில் அவரும் இருந்தார். பிரதமர், ஜனாதிபதி என்று பெரிய பதவிகள் இல்லாவிட்டாலும் ஒரு கிங் மேக்கராக, செல்வாக்கு மிகுந்த நபராக அறியப்பட்டவர். அவரைப் பேட்டி எடுக்க ஹுசைனுக்கு கிடைத்திருந்தது ஒரு அரிய வாய்ப்பு. ‌ வெகு நாட்கள் காத்திருந்து அந்த அப்பாயின்மென்ட் கிடைத்திருந்ததால் அதனைத் தவற முடியாத விட முடியாத சூழல்.

ஹுசைனைக் கூட்டிக்கொண்டு டாக்ஸியில் தன் இருப்பிடத்திற்கு அஸ்வின் திரும்ப, உடன் ஒரு போலீஸ் அதிகாரியும் துணைக்கு வந்தார். அஸ்வினுக்குத் தெரிந்தது ஓட்டை ஹிந்தியும், ஓரளவுக்கு ஆங்கிலமும். ஹுசைனுக்குத் தமிழ் தெரியவே தெரியாது. இவன் ஏதாவது சொல்ல, அதற்கு அவர் ஏதோ ஒன்று சொல்ல என்று சிரிப்பாகப் போனது அவர்களின் டாக்சி பயணம்.

ஹுசைன் பேசிய நாக்கைச் சுழற்றிப் பேசும் மேல்நாட்டு ஆங்கிலம் அஸ்வினுக்குப் புரியவில்லை, அஸ்வின் பேசிய தமிழ் வாடை வீசும் ஆங்கிலம் அவருக்குப் புரியாததால், "கேன் யூ டாக் இன் ஹிந்தி மிஸ்டர் அஸ்வின்?"
என்றார் ஹுசைன்.

"ஹிந்தியா?! இப்ப பேசுறேன் பாருங்க" என்ற அஸ்வின்,"ஏக் காவ் மேம் ஏக் கிசான் ரகு தாத்தா, ஏக் துஜே கேலியே, தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, ஹம் ஆப்கே ஹைங் கவுன்" என்று பேச, காரில் இருந்த மற்ற ஒவ்வொரிடமும் மூன்று விதமான எதிர்வினைகள்.

டிரைவர் பக்கென்று சிரித்தார். "வாட்! ஆர் யூ டாக்கிங் இன் சம் கோட் வேர்ட் (code word)?" என்று அந்தப் பாதுகாப்பு அதிகாரி கேட்க, ஹுசைனோ ஒன்றும் புரியாமல் திருதிருவென்று விழித்தார்.

"அண்ணா நீங்க தமிழா? உங்களுக்குப் புரியுதா நான் பேசுறது?" என்று அஸ்வின் டிரைவரை கேட்க,

"ஆமா தம்பி! நான் தமிழ் தான்.. இங்க வந்து 20 வருஷத்துக்கு மேல ஆச்சு. நீங்க வந்த புதுசுல எனக்கும் நீங்க சொல்ற நாலு வார்த்தை தான் ஹிந்தியில் தெரியும்" என்றார் டிரைவர்.

"என்னங்க டிரைவரண்ணா! நல்லா எண்ணிப் பாருங்க.. 15, 20 வார்த்தை பேசி இருக்கேன்" என்றான் அஸ்வின்.

சரிதான் தம்பி என்று டிரைவரும் சிரித்தார். இன்னும் பாதுகாப்பு அதிகாரி சந்தேகமாக பார்க்க டிரைவர் தனக்குத் தெரிந்த வகையில் அஸ்வின் கூறியதை ஹிந்தியில் அவரிடம் விளக்கினார்.

இப்போது ஹுசைனுக்கும் கலகலவென்று சிரிப்பு. "இந்த மாதிரி ஜாலியா சிரிச்சு எவ்வளவு நாள் ஆச்சு!" அஸ்வினை செல்லமாக ஒரு தட்டு தட்டினார்.

"வலிக்குது பாஸ். உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறேன்னு நான் கூட்டிட்டு வந்திருக்கேன்.. நீங்களே 'ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் கேட்டகரி' போல" என்று அஸ்வின் கூற,

"கியா?" என்றார் ஹுசைன்.

"சார்! இந்த சார் பேசுறதை எல்லாம் மொழிபெயர்த்துக் கொடுக்கணும்னா நான் உங்க கூட தான் சார் ரூம் போட்டுத் தங்கணும். என்னால முடியாது" என்று அவர்களை இறக்கி விட்டுவிட்டு டிரைவர் செல்ல பாதுகாப்பு அதிகாரியும் மறுநாள் வருவதாகக் கூறிச் சென்றார்.

அஸ்வினின் அப்பார்ட்மெண்ட் பாதுகாப்பு நிறைந்தது தான். அதனால் இங்கு இருக்கும் பொழுது போலீஸ் தேவையில்லை. வெளியே பயணிக்கும் போது மட்டும் உடன் ஒரு நபர் வருவது போல் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதுவே பெரிய உதவி தான் ஹுசைனைப் பொறுத்தவரை. அவரது உயிருக்கு இருக்கும் ஆபத்துக்கள், தீவிரவாத அச்சுறுத்தல்கள் பற்றி அவரும் அறிவார். ஆனால் இந்த அளவுக்கு வேற்றுநாட்டு உளவுத்துறை கண்டுபிடித்து தன்னை விமான நிலையத்திலேயே பிடித்து நிறுத்தி வைக்கும் அளவுக்கு விஷயம் இருக்கிறது என்பதைத் தெரிந்ததில் அவருக்குமே அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியில் தான் ப்ரீத்தியிடம் ஃபோனைப் போட்டு விஷயத்தைச் சொல்லி அவளையும் குழப்பி விட்டார். இதுவரை இது போன்ற விஷயங்களை அவள் காது வரைக்கும் கொண்டு செல்லவே இல்லை.

"இந்தியாவில் தான் இந்த அளவுக்கு பாதுகாப்பு, கர்ட்டஸி காட்டுறதை பார்த்து இருக்கேன்.. மத்த ஊர்ல யாரு செத்தா என்ன, சாகாட்டி என்ன என்கிற நிலைமை தான்" என்று அவர் கூற,

அஸ்வின் அப்படியா என்பது போல் பார்த்தான். "ரியலி ஐ மீன் இட்!" என்கையில் அஸ்வின் தன் காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.

"சரி சரி நீங்களும் இந்தியப் பொண்ணை கட்டிட்டு இந்தியாக்காரர் ஆயிடுங்க.. ப்ரோப்லேம் சால்வ்ட்" என்று கூற ஹுசைனுக்கு மீண்டும் மொழிபெயர்த்துக் கூற வேண்டியதாக இருந்தது. அவன் விரிவாகக் கூறவும்
பெருமூச்சு விட்டார் ஹுசைன்.

"வை சர் யூ ஆர் யூசிங் யுவர் நோஸ் அஸ் பீரங்கி?' என்று அஸ்வின் கேட்க, "பீரங்கி??" என்று ஹுசைன் விழித்தார். கூகுளைப் பார்த்து பீரங்கிக்கு ஆங்கிலத்தில் கேனன் என்று தேடி அந்தப் படத்தையும் ஹுசைனுக்குக் காட்ட மீண்டும் ஒரு குபீர் சிரிப்பு ஹுசைனிடம்.

அதன் பின் யாரிடமும் திறந்திடாத தன் மனதை திறந்து அஸ்வினிடம் வார்த்தைகளால் கொட்டினார். தன்னுடைய பிளாஷ்பேக், ப்ரீத்தியின் மேல் கொண்டிருக்கும் அன்பு, எதிர்காலத்தைக் குறித்த தன்னுடைய பயம், இப்படி எல்லாம் அவர் பேச அஸ்வினுக்கு மனம் உருகிப் போனது.

"ப்ரீத்தியோட பாஸ்ட் கதையைக் கேள்விப்பட்டிருக்கேன்.. ரொம்ப கஷ்டப்பட்டுட்டா.. நீங்க ரொம்ப்ப்ப நல்லவரு பாஸ்.. நீங்க தான் அவளை சந்தோஷமா வச்சுக்க முடியும். ஐயோ பாவம். வாழ்க்கை கொடுங்க" என்று கூறினான். தன்னுடைய வேலை, அதில் இருக்கும் ஆபத்துகள் அதனால் ப்ரீத்திக்கும் வைதேகிக்கும் எதுவும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்ற தன்னுடைய பயத்தை மறுபடியும் ஹுசைன் முன்வைக்க,

"நீங்க வேற பாஸ்! ரைட்ல இண்டிகேட்டர் போட்டு, லெஃப்ட்ல கையைக் காட்டிட்டு, ஸ்ட்ரைட்டா போய்க்கிட்டே இருங்க" என்றான் அஸ்வின். ஹுசைன் விழிக்கவும் யூடியூபில் விவேக் நடித்த காமெடியை சப்டைட்டிலுடன் போட்டுக் காட்டி, அப்படியே தமிழ் பட காமெடிகள், வடிவேலு ஜோக்குகள் என்று பேசிப் பேசி ஹுசைனை மனதளவில் தமிழ்நாட்டு மாப்பிள்ளையாக மாறுவதற்கு தயார் படுத்தினான்.

"இந்த ஸ்மார்ட் போன் இருக்கிறதால கம்யூனிகேஷன் எவ்வளவு ஈசியா ஆயிடுச்சு பாத்தீங்களா.. ஸீ யு பிகேம் தமிழ் பர்சன்.. யூ டெல் மோர்.. ஐ வில் பிக்கம் இங்கிலீஷ் பர்சன்" என்றான் அஸ்வின். அவனது ஆங்கிலப் பிரயோகத்தில் ஹுசைனுக்கு ஒரே சிரிப்பு தான்.

விளையாட்டுக்காகத் தான் இப்படி பட்லர் இங்கிலீஷில் பேசுகிறான் என்று அவருக்குப் புரிந்தது. நடுநடுவே வந்த அலுவலக அழைப்புகளில் தெளிவாகவே ஆங்கிலம் பேசி இருந்தான் அஸ்வின். அவனுடைய வேலை, குடும்பம் இப்படி பேசி முடித்து அவர்கள் உறங்கும் போது இரவு இரண்டு.

அந்த இரவு இன்னொருவருக்கும் தூங்காத இரவாகிப் போனது. அது ஈஸ்வரி. இப்படி நடக்கும் என்று அவர் சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. மருமகனின் மேல் தனக்குக் கீழான ஸ்டேட்டஸ் உள்ளவன் என்ற எண்ணம் இருந்தாலும், அவன் நல்லவன் என்பதில் அவருக்கு மாற்றுக் கருத்து கிடையாது. அவரது அடி மனதில் அஸ்வினியையும் விட்டுவிட்டால் தனக்கு இருக்க இடம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் தான். பிறந்தது முதலே எங்கிருந்தாலும் அங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆளாகவே இருந்து பழகி விட்டார் ஈஸ்வரி. அரட்டலும் உருட்டலும் அவருக்குக் கையும் காலும் போல கூடவே வருவது. கணவனின் இறப்புக்குப் பிறகு அஸ்வினி தான் அவருக்கு சிறந்த துணையாகத் தோன்றினாள். மூத்த மகள் தெளிவானவள். அம்மாவின் குணத்தை பற்றித் தெரியும். பக்குவமாக வெட்டி விட்டு விட்டாள். எங்கே இந்தியாவில் இருந்தால் அம்மா வந்து ஒட்டிக் கொள்வாளோ, தன் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவாளோ என்ற பயம் காரணமாக வெளிநாட்டில் தன் கணவனை வேலை தேட வைத்து வம்படியாக அழைத்துக் கொண்டு போய் செட்டில் ஆகிவிட்டாள். தன்னைப் போன்றே தன் வசதியைப் பார்த்துக் கொண்டு தப்பித்துக் கொள்ளும் சுபாவம் தான் மூத்த மகளுக்கும் என்பதால் ஈஸ்வரியும் அதைத் தெரிந்தே வைத்திருந்தார்

அஸ்வினிக்கு சின்னச் சின்ன பொருட்கள் மேல் இருக்கும் பிடித்தம் போல் வாழ்க்கையில் கிடையாது. சிறிய விஷயங்கள் மேல் கவனத்தை செலுத்தி விட்டு, பெரிய விஷயத்தை அப்படியே விட்டு விடுபவள். அந்த குணத்தை அப்படியே பிடித்துக் கொண்டு, சண்டை மூட்டி அந்த நெருப்பில் ஈஸ்வரி குளிர்காய்ந்து, தான் நினைத்ததை சாதித்து வருகிறார். சாதாரணமாக இருந்தாலே அஸ்வினும் அஸ்வினியும் ஈஸ்வரியை வைத்துப் பார்ப்பார்கள் தான். அதை ஒரு தியாகம் போல் நினைக்க மாட்டார்கள்.

சொல்லப்போனால் அஸ்வினுக்கு இருக்கும் பெருந்தன்மையில் தன்னுடைய குடும்பம், அஸ்வினியின் குடும்பம் எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து ப் பார்க்க விரும்புபவன் தான். ஈஸ்வரி தன்னுடைய திட்டங்கள் மூலமாக அஸ்வினை மகளிடமிருந்து சற்று விலக்கியே வைத்திருந்தார். வெற்றி வேதத்தை அஸ்வினியின் மனதில் விதைத்தவன் அவரே. இப்படி எல்லாம் நடக்கும், மகள் தற்கொலை முடிவுக்குப் போவாள் என்பது அவர் எதிர்பார்த்திராத ஒன்று. தன் ஆணிவேரே ஆட்டம் கண்டதில் ரொம்பவே ஆடிப் போய் மருத்துவமனையில் இரண்டு பேரப்பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு தூக்கமின்றி அமர்ந்திருந்தார்.

விவரம் தெரியாத குழந்தைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, சிகிச்சை தந்த அயர்வில் அஸ்வினியும் இருக்க, இதுவரை தான் செய்ததை எல்லாம் மனதில் ஒட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் ஈஸ்வரி. அதுவும் தற்கொலை முயற்சி என்றவுடன் அது தனியார் மருத்துவமனை தான் என்றாலும் போலீஸ் வந்து, "என்ன பிரச்சனை? எதுவும் அடிதடியா? கணவன் அடித்தானா? அவனது பெயர் என்ன? வரதட்சணை எதுவும் கேட்டார்களா? மாமனார் மாமியார் எந்த ஊர்? அட்ரஸ் என்ன?" என்று நிறைய கேள்விகளை கேட்க, ஈஸ்வரிக்கு அதிக பதற்றம்.

புகுந்த வீட்டினரை குறை கூறும் அளவுக்குத் தான் எதுவுமே இல்லையே. தான் யாரையும் அண்ட விட்டதில்லையே.. "ஐயோ அதெல்லாம் இல்லங்க.. அதெல்லாம் இல்லைங்க.. நான் தான் கொஞ்சம் திட்டிட்டேன்.. அதான்" என்று ஈஸ்வரி கூற, நம்பாமல் பார்த்தார் பெண் கான்ஸ்டபிள்.

பின் அஸ்வினியிடம் கேட்க, அவளும் "கணவன் தரப்பில் இருந்து எந்தத் தொல்லையும் இல்லை" என்று கூறிவிட்டாள்.

"ஏன்மா கதை விடுறீங்க?" என்ற போலீஸ் ஆதிகாலம் முதல் தற்கொலைக்கு முயலும் அனைவரும் கூறும் காரணமான, அதிக வயிற்று வலி தாங்காமல் தற்கொலைக்கு முயன்றேன் என்று ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதி அதில் அஸ்வினி யின் கையெழுத்தை வாங்கிக் கொண்டு நகர்ந்தார். கூடவே, "அடுத்த தடவை இதே மாதிரி சூசைட் அட்டெம்ப்ட் பண்ணினா மொத்த குடும்பமும் உள்ள இருக்கும் பார்த்துக்கோ" என்று ஒரு மிரட்டலையும் கொடுத்து விட்டே சென்றார்.

தியாகராஜன் வந்து உதவியதையும் மருத்துவமனையில் சேர்த்ததையும் அஸ்வினி பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். அதை எல்லாம் அலசி ஆராயும் நிலையில் அவள் இல்லை. அம்மா என் அவருக்குக் கூப்பிட்டார், அவர் ஏன் ஜெயந்தி இல்லாமல் வந்திருக்கிறார் என்ற கேள்விகள் எழுந்தாலும், அஸ்வினுக்கு விஷயம் தெரியுமா தெரியாதா, அப்படி தெரிய வந்தால் அங்கே வேலையை அப்படியே போட்டுவிட்டு அடுத்த ஃபிளைட் பிடித்து தன்னைப் பார்க்க வருவானா என்று சின்ன பிள்ளைத்தனமாக யோசித்துக் கொண்டிருந்தாள் அஸ்வினி.

மறுநாள் காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிய பின் ஜெயந்தி அரை மணி நேரம் சும்மாவே படுத்திருந்தாள். "அப்பாடி! அந்த அம்மா நம்ம விட்டுட்டு தனியா கோயில் குளம்னு கிளம்பிடுச்சு.. இன்னும் ரெண்டு நாள் முழுக்க ரெஸ்ட் தான்" என்று அவள் நினைத்திருக்க, "நான் இந்தியா வரேன் டி நாளைக்கு.. உங்க வீட்டுக்குத் தான் வரப் போறேன்" என்று துபாயிலிருந்து உற்சாகத்துடன் போன் அடித்தாள் ராஜலட்சுமி.



"நான் உப்பு விக்கப் போனா மழை பெய்யுது
பஞ்சு விக்கப் போனா காத்தடிக்குது"
 
Top