கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துளி எண்ணெய் 14

Akhilanda bharati

Moderator
Staff member
14. அவள் ஒரு தொடர்கதை


ராஜி நாளை வருகிறாள் என்றவுடன் லேசாக எட்டிப் பார்த்த தூக்கம் அப்படியே ஓடிப் போய்விட்டது ஜெயந்திக்கு. 'ஐயையோ போன தடவை வரும்போது நிறைய சொல்லிட்டுப் போனாளே.. அதெல்லாம் செஞ்சு வைக்காட்டி திட்டுவாளே' என்றபடி பரபரப்புடன் எழுந்தாள். பெட் ரூமை விட்டு அவள் வெளியே எட்டிப் பார்க்க, அப்போதுதான் கிளம்பிக் கொண்டிருந்த தியாகராஜன்,

"ஏய் உன்னை இன்னைக்கு ரூமை விட்டு வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல" என்று மிரட்டி அனுப்பி வைத்தார். பரபரப்பு அடங்கி மீண்டும் கட்டிலில் அமர்ந்து யோசித்தாள் ஜெயந்தி, ராஜி என்னவெல்லாம் சொன்னாள் என்று.

மற்ற விஷயங்களில் ஜெயந்தி மேல் அவ்வளவு மரியாதை, பிரமிப்பு இருந்தாலும் ஜெயந்தியின் எளிமையான நகைகள், உடைகள் வீட்டின் எளிமை இதெல்லாம் ராஜிக்குப் பிடிக்காது. 'நீட்டா இருக்கணும் அதே சமயம் அதிக செலவில்லாமல் சிம்பிளா இருக்கணும். அது போதும்' என்பது ஜெயந்தியின் கருத்து. ஓரிருமுறை போடப் போகிற உடைகளுக்காக அதிகம் செலவழித்து விட்டு பின் அவற்றை விரைவில் தூரப் போடுவதும் அறவே பிடிக்காது.

"இது என்ன டிரஸ்? இதைப் போய் போட்டிருக்க? மாதாஜிங்குற பேரை ஜஸ்டிஃபை பண்ற மாதிரி போட்டுருக்கியா?" என்பாள் ராஜி. "அவ அவ எழுவது வயசுல ஐப்ரோ த்ரெட்டிங் பண்ணிட்டு, வாரத்துக்கு ஒரு தடவை பியூட்டி பார்லர் போய்கிட்டு இருக்கா.. நீ என்ன இப்பவே பாட்டி மாதிரி இருக்க.. ஜடை பின்ற பழக்கம் இன்னும் போகலையா உனக்கு? லேயர் கட் பண்ணு.. உன் ஃபேஸ்க்கு சூப்பரா இருக்கும்.. இந்த ரூம்ல அடுத்த தடவை வரப்ப இந்த பாடாவதி பச்சை கலர் ஸ்கிரீனை மாத்தலைன்னு வையேன்.. தீப்பெட்டி எடுத்து சரசரன்னு கொளுத்திடுவேன்" என்று நிறைய கூறியிருந்தாள். அது மட்டும் இல்லாமல் காரை மாற்று, பாத்திரங்களை மாற்று என்று ஏகப்பட்ட அலப்பறை.

"ஏன் டி படுத்துற? இதெல்லாம் மூணு தலைமுறையா இருக்குற பாத்திரம் டி.. எவ்வளவு பலமா இருக்கு பாரு.. இப்ப வர்ற தட்டு இரண்டு தடவை கீழே விழுந்தாலே நெளிஞ்சுடுது.. இதைப் பாரு. இது எங்க மாமியார் சீர் கொண்டு வந்தது.." என்பாள் ஜெயந்தி.

"இப்படி நீ பழைய காலத்துலேயே இருக்கிறதுனால தான் உன் தலைல எல்லாரும் மொளகா அறைக்கிறாங்க.. காலத்துக்குத் தகுந்த மாதிரி அப்டேட் ஆகு.. வாழ்க்கையைப் புதுசா வாழு" என்பாள் ராஜி. ராஜியிடம் யாரும் சாதாரணமாக எதிர்த்துப் பேசி விட முடியாது. அப்படியே தலை குனிந்து அமர்ந்து கொள்வாள் ஜெயந்தி. அதன் பின் யோசித்துப் பார்த்தால், என் வாழ்க்கை நான் வாழ்கிறேன், இவள் யார் அவளது கருத்துக்களை என் மேல் திணிக்க என்று கோபம் கோபமாக வரும். அவள் சொன்னாளே என்று ஒருமுறை த்ரெட்டிங் செய்து பார்த்தாள், வலியில் கண்ணீர் வந்தது. ஒரு முறை ஹேர் கட்டிங் செய்தாள். சுருள் சுருளாகத் தன் முடி கீழே விழுந்ததை பார்த்து ரத்தக்கண்ணீரே வந்துவிட்டது.

'நான் என்னைக்காவது யார் வீட்டிலையாவது போய் நாட்டாமை பண்றேன்னா? அவங்களைக் கண்டிக்கிறேனா? அவ போட்டுட்டு வந்து டிரஸ் கூட எனக்கு பிடிக்கவே இல்லை.. அதை நான் சொன்னேனா?' என்று தனக்குள்ளே பேசிக் கொள்வாள். அடுத்த முறை திட்ட வேண்டும் என்று தான் நினைப்பாள். நினைப்புடன் சரி, சுத்தமாக மறந்து விடுவாள்.

'ப்ரீத்தி, ராஜி ரெண்டு பேரையும் மீட் பண்ண வைப்போமா? ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகுமா? ராஜி ப்ரீத்தியை ஹர்ட்டிங்கா ஏதாவது சொல்லிட்டா என்ன பண்றது.. ஊர்ல இருந்து வந்து டேரா போட்டுருக்கே இந்த சொந்தக்காரம்மா.. அது நாளைக்கு என்ன பிளான் போடுமோ?' என்று பலவாறாக யோசித்து மண்டையைக் குழப்பிய ஜெயந்தி, கடைசியாக "வாவ்! சூப்பர்! வார்ம் வெல்கம்!" என்று ராஜிக்கு மெசேஜ் போட்டாள். கூடவே எத்தனை மணிக்கு அவளது ஃபிளைட் வருகிறது, மதிய உணவுக்கு வருவாளா, அவளது மகன் வருகிறானா என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.

பின் நிறைய நாட்களுக்குப் பிறகு முகநூலை எட்டிப் பார்த்தாள். ராஜ்குமார் நட்பு அழைப்பு அனுப்பியிருந்தான். 'எவ்வளவு தெனாவட்டு இருக்கணும் இந்த பக்கிக்கு? ஊர்ல எல்லாரையும் ஏமாத்தி கம்பி நீட்டிட்டு.. அதுவும் ராஜி வாழ்க்கையில கும்மி அடிச்சிட்டு எனக்கே ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்புறானா? எவ்வளவு ஏத்தம் இவனுக்கு?' என்று கோபம் பொங்கியது. தன் கோபத்தை இன்னும் இரண்டு பேருக்குப் பகிர்ந்தளிப்போம் என்ற நல்ல எண்ணத்தில் அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பரபரவென்று ராஜிக்கும் அஸ்வினுக்கும் அனுப்பி வைக்க, அஸ்வின் பார்க்கவில்லை. ராஜிதான் ஆன்லைனில் இருந்தாளே, உடனடியாக பதிலுக்கு இன்னொரு ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பி வைத்தாள். 'இது என்ன பிரமாதம்.. எனக்குப் போன மாசமே அனுப்பிட்டான். பன்னாடை' என்று ஆங்க்ரி ஸ்மைலி போட்டிருந்தாள்.

"இவனுகளுக்கு எல்லாம் வெட்கமே இருக்காதாடி.. எனக்காச்சு இன்னைக்குத் தான் அனுப்புறான்.. உன்னை லவ் பண்ற மாதிரி சீன் போட்டு, உன் வாழ்க்கையையே கெடுக்கப் பார்த்தவன்.. இப்ப என்ன தைரியம் பாரேன்.. அவன் பொண்டாட்டி நம்பர் கிடைச்சா கூப்பிட்டு போட்டுக் குடுக்கணும் டி" என்று ஜெயந்தி நீளமாக மெசேஜ் அனுப்ப,

"விடுடி உன் கேரக்டருக்கு இந்த கோபம் எல்லாம் செட் ஆக மாட்டேங்குது.. விடு விடு.. இவனைக் கட்டினவ எப்படி இருப்பா.. இவனை விட கழிச்சுப் போட்ட பொறம்போக்கா தான் இருப்பா.. அவ கிட்ட போய் பேசி என்ன ஆகிடப் போகுது" என்றாள். இந்த சடாரென்று முடிவெடுக்கும் பாங்கும் ராஜிக்கே தனித்துவமான ஒன்று.

அஸ்வினிடம் உடனடியாக பேசி தன் இன்ஸ்டன்ட் கோபத்தை இன்ஸ்டன்டாக தீர்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது ஜெயந்திக்கு. அன்று ஹுசைன் தன் அலுவல் போக, ஆசைக்காக சில போட்டோக்களை எடுக்க வேண்டும் என்று விரும்பினார். மாலையில் தான் அவருக்கு அந்த மிகப்பெரிய மனிதருடன் நேர்காணலுக்கான நேரம் அமைந்திருந்தது. "ரொம்ப நாளா எனக்கு ஒரு ஆசை. ஏதாவது ஒரு பழைய பாரம்பரியமான சிட்டியை செலக்ட் பண்ணி, அங்க இருக்கிற பழைய காலத்து மக்கள் எப்படி இருக்காங்க.. மைக்ரேட் ஆகி வந்த பாப்புலேஷன் எப்படி இருக்கு.. ஒரே இடத்துல வேற வேற கல்ச்சரோட மக்கள் எப்படி இருக்காங்க அப்படின்னு ஃபோட்டோகிராஃபிக் ஸ்டடி பண்ணனும்னு நினைப்பேன்.. லண்டன்ல ஓரளவு பண்ணி வச்சிருக்கேன்.. அதுக்கப்புறம் இந்த விஷயத்துக்கு டெல்லி ஆப்டா இருக்கும்னு தோணுது.. ஓல்ட் டெல்லில ஒரு நாள் ஷுட் பிளான் பண்ணி இருந்தேன்.. அது இந்த ட்ரிப்ல முடியுமான்னு தெரியல.. இங்க நியூ டெல்லில ட்ரை பண்ண முடியுமா?" என்று ஹுசைன் அஸ்வினைக் கேட்க,

"அதுக்கு என்ன பாஸ்! வாங்க நீங்க.. எங்க இன்ஸ்ட்டிட்யூட்டே ஒரு மினி பாரத விலாஸ் தான்.. வலது பக்கத்துல பார்த்தா அசாம், இடது பக்கம் பார்த்தா ஒரிசா.. முன்னாடி பெங்காலி, பின்னாடி பங்காளின்னு ஒரே மஜா தான் போங்க.. செமையா செட் ஆகும். நான் போறது ஒரு ஷார்ட் டேர்ம் ட்ரைனிங் தானே.. ஒரு மாதிரி கேஷுவலா இருக்கும். நான் பர்மிஷன் வாங்கித் தரேன். என்ன ஒண்ணு லேடீஸ் க்ளிக்ஸ் கம்மியா தான் கிடைக்கும்" என்று கூட்டிப் போனான் அஸ்வின்.

அவர்கள் போகுமிடத்தில் பாதுகாப்பு குறைவு கிடையாது என்பதால் அந்த போலீஸ் அதிகாரியும் ஒத்துக்கொண்டார். காலையிலேயே அஸ்வின் பிளாட்டிற்கு அவர் வந்து விட்டார். "உங்க புண்ணியத்துல எனக்கும் போலீஸ் பாதுகாப்பு" என்று கூறிக்கொண்டே ஹுசைனுடன் தன் ஊர் சுற்றலை ஆரம்பித்திருந்தான் அஸ்வின்.

ஜெயந்தி போட்ட மெசேஜைப் பார்க்கவில்லை. அஸ்வினிடமிருந்து பதில் இல்லையே என்று நினைத்தவள் அவனுடனான முந்தைய தின உரையாடல்களை ஸ்க்ரோல் செய்து பார்த்தாள். தியாகராஜன் சொல்லி ஹுசைனை அவள் சந்தித்தது தெரியும், ஹுசைனுடன் சேர்ந்து சில பல செல்பிக்களை அனுப்பினான். 'பிஸியா இருக்கானோ.. ஏன் இன்னும் இது சம்பந்தமா போன் பண்ணி பேசாம இருக்கான். ஹுசைன் எப்படி? ப்ரீத்தி அவளுக்கும் சம்திங் சம்திங் இருக்கா இல்லையா? ஒத்து வருமா.. புதுசா எதுவும் விஷயம் நடந்தா லைவ் கமெண்ட்ரி மாதிரி பிராட்காஸ்ட் பண்ணிக்கிட்டே இருப்பானே.. ஒரு வேளை அவர்கிட்ட சொல்லி இருப்பானா இருக்கும்' என்று தியாகராஜனை நினைத்தாள்.

'இந்த மனுஷன் ஏன் ரெண்டு நாளா ஓவரா குழையடிக்கிறாரு.. செய்ங்க செய்ங்கன்னு சொன்னாலும் நமக்காக ஒரு துரும்பைத் தூக்கி போட மாட்டார். இப்ப அவரே ஹுசைனுக்கு உதவுறாரே..' என்று சிந்திக்க, திடீரென ஒரு எண்ணம் மின்னல் போல் வந்து போனது. ராஜியுடனான உரையாடல்களும் அவள் நாளை வருவதுமாகச் சேர்ந்து இன்னொரு விஷயமும் நினைவுக்கு வந்து ஜெயந்தியின் மனதை அழுத்தியது. 'எப்பவும் கண்டுக்காத புருஷன் நம்மகிட்ட பாசமாய் இருக்குதா.. அப்ப எக்ஸ்ட்ராவா ரெண்டு காது, ரெண்டு கண்ணு இருக்கிற மாதிரி கவனிக்கணும் டி.. ஓவர் கொஞ்சல்ஸ் ஈக்குவல் டு ஓவர் காரியம் சாதிச்சுஃபையிங்.. இந்த தடவை உன் வீட்டுக்காரர் முழி சரியில்லை.. பார்த்து நடந்துக்கோ' என்றாள் ஒரு முறை. அப்படி ஏன் டி நினைக்கிற என்று ஜெயந்தி கேட்டதற்கு,

"நீ தான் கடமை கண்ணியம் இருக்கிறவ.. உலகம் தெரியாத பாப்பா.. நான் பிறந்து வளர்ந்தது நூத்துக்கணக்கான சீரியல் வில்லிகளுக்கு நடுவுலங்குறதை நீ அப்பப்ப மறந்துடுற.. ஒரு ஆளோட அடுத்த நடவடிக்கையை முழியை வச்சே கண்டுபிடிச்சுடுவேன்.. இவ்வளவு நாள் அதே மாதிரியான வில்லத்தனம் உள்ள என் குடும்பத்துல பிரச்சனை இல்லாம காலத்தை ஓட்றேன்னா அதுக்கு நம்ம டேலண்ட் தான் காரணம்" என்று கொஞ்சம் சுயதம்பட்டம் அடித்தவள், "ஏதோ இப்ப தோணுது.. ஜாக்கிரதையா இருந்துக்கோ.. சொன்னாக் கேளு" என்றாள்.

அதற்கு அடுத்து நடந்த அதிரடி சம்பவங்கள் அப்படித்தான் இருந்தன. இங்கு ஜெயந்தி அந்த வலி மிகுந்த நாட்களைப் புரட்டிப் பார்த்து அதிலிருந்து தான் மீண்டு வந்ததே வலியுடன் நினைத்துக் கொள்ள, அவள் உடலில் ஒரு நடுக்கம் ஓடி மறைந்தது. உடலை ஒருமுறை குலுக்கி அந்த எண்ணங்களைத் துரத்திவிட முயன்றாலும் சிற்றலைகளாய் அவை வந்து வந்தே போயின. அவற்றை அசை போட்டு முடித்த நேரம் அப்படியே உறங்கிப் போயிருந்தாள். அவள் கண்களின் ஓரத்தில் ஒரு சில துளிகள் கண்ணீர் அப்படியே காய்ந்து போய் இருந்தது.

கிட்டத்தட்ட அதே நேரம் அதே வலி மிகுந்த நாட்களை தியாகராஜனும் நினைவு படுத்திக் கொண்டுதான் இருந்தார். இங்கு ஜெயந்தி தனிமையில் அவற்றைப் புரட்டிப் பார்க்க, அங்கு தியாகராஜனுக்கு இரண்டு பார்வையாளர்கள் இருந்தார்கள். அந்தக் கதைகள் கேட்டு முடித்த அவர்கள் கண்ணிலும் கண்ணீர்.

தான் என்றாவது தன் குற்றங்களை, தவறுகளை வெளியே சொல்வேன் என்றோ, அதைக் கேட்டு தனக்கு சம்பந்தமே இல்லாத இரண்டு பேர் அழுவார்கள் என்றோ தியாகராஜன் நினைத்தே பார்த்ததில்லை. அந்த இரண்டு பேர் அஸ்வினியும் ஈஸ்வரியும்!

சிகிச்சை ஓரளவுக்கு முடிந்து உடல்நிலை திடமானவுடன் அஸ்வினிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. எதுவும் பேசாமல் இறுக்கமாக வெகு நேரம் அமர்ந்திருந்தவள், ஆலோசகரிடம் கொஞ்சமாக மனம் திறந்து மன அழுத்தங்களைக் கொட்டியதில், சற்றே தெளிந்திருந்தாள். இரண்டு நாட்களில் வீட்டுக்குப் போய்விடலாம் என்று சொல்லி இருந்தார்கள். ஈஸ்வரி வீட்டிற்கு போய் கொஞ்சமாக சமைத்து குழந்தைகளையும் நர்சரிக்கு அனுப்பி விட்டு மீண்டும் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

முதல் முறையாக அலட்டல், அகங்காரம் இல்லாத தாயை அஸ்வினி பார்க்கிறாள். ஈஸ்வரியின் உண்மையான வயது இப்போது தான் தெரிந்தது. இவ்வளவு கனிவு அம்மாவின் கடுமையான முகத்தில் ஒளிந்து கொண்டிருந்ததா என்று ஆச்சரியமாகப் பார்த்தாள் அஸ்வினி. தியாகராஜன் தன் அலுவலகத்துக்குச் சென்று சிலபல வேலைகளை தங்கள் ஜுனியர்களிடம் ஒப்படைத்துவிட்டு மருத்துவமனைக்கு வந்தார். அவரிடம் வேலை கேட்டு நச்சரித்த அந்த ஆர்வக்கோளாறு இளைஞன் அன்றும் வேலை கோரி வந்திருந்தான். "நீ பண்ணி வச்ச வேலையோட ரியாக்ஷன் பாக்கறியா? வா!" என்று தன் காரில் அவனையும் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தார் தியாகராஜன்.

மற்ற ஜூனியர்களுக்குப் பொறாமை. இன்னும் வேலைக்கு சேரலை.. "இவனைப் போய் கார்ல ஏத்துறார்.. மாங்கு மாங்குன்னு உழைக்கிற நம்மை ஒருநாளாவது கார்ல வாடான்னு கூப்பிட்டு இருக்காரா?" என்று ஒருவன் கூற,"கூட்டிட்டுப் போறது மட்டும் தானே உனக்குத் தெரியும்.. அவன் என்ன பல்பு வாங்கப் போறானோ.. வெயிட் பண்ணிப் பாரு" என்றான் இன்னொருவன்.

வரும் வழியெங்கும் தன் பிரதாபங்களை அந்த அரைவேக்காடு கூறிக் கொண்டே வர, மருத்துவமனை வளாகத்தில் நுழையும் போது தான் தியாகராஜன் அதைச் சொன்னார். "நீ யூ ட்யூப்ல போட்டியே ஒரு நியூஸ்.. அதைப் பார்த்து டென்ஷன் ஆகி ஒருத்தர் வீட்ல அதிகமா பிரச்சனை வந்து, அவங்க மனைவி சூசைட் அட்டெம்ப்ட் பண்ணி இருக்காங்க.. உன் சாதனையோட எஃபெக்ட் தெரிஞ்சுக்க வேண்டாமா? உள்ளே வா" என்று கூற, அந்த ஜூனியருக்கு ஐயோ வென்றிருந்தது.

தியாகராஜன் உள்ளே நுழைந்ததும், வணக்கமும் நன்றியும் கூறிவிட்டு ஈஸ்வரி வெளியில் போய் அமர்ந்து கொண்டார். "எப்படிமா இருக்க?" என்று அஸ்வினியை தியாகராஜன் கேட்க,

"நீங்க எதுக்கு இதெல்லாம் எனக்கு பண்ணுறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்றாள் அஸ்வினி. அவளிடம் இருந்து இப்படி ஒரு பேச்சை எதிர்பார்த்துத் தான் இருந்தார் தியாகராஜன். இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை.

"உங்களுக்கு சென்னைல ரிலேட்டிவ்ஸ் இல்லையா? பிரெண்ட்ஸ் கொலீக்ஸ்.. இந்த மாதிரி யாராவது?" என்று தியாகராஜன் கேட்க புரியாமல் பார்த்தாள் அஸ்வினி.

"உங்க அம்மா நீ பாய்சன் சாப்பிட்ட உடனே ஜெயந்திக்கு தான் போன் பண்ணினாங்க தெரியுமா?"

அஸ்வினிக்கு அதுவே அதிர்ச்சி செய்தி. தனக்கு ஜெயந்தியைப் பிடிக்காது என்றால் அம்மாவுக்கு சுத்தமாகப் பிடிக்காது. அவளுக்கு ஏன் அழைத்தார் என்று யோசித்து, "அப்ப ஏன் அவங்க வரலை?" என்றாள் அஸ்வினி.

"அவங்க அம்மா கூப்பிடறப்ப அவ வீட்ல இல்ல. ஏற்கனவே உனக்கும் உங்க அம்மாவுக்கும் அவளைப் பிடிக்காதுன்னு தெரியும்.. விஷயம் தெரிஞ்சா கண்டிப்பா உதவிக்கு வராம இருக்க மாட்டா.. உங்ககிட்ட அவளை சிக்க வைக்க எனக்கு விருப்பமில்லை" என்று தியாகராஜன் நேரடியாகக் கூற,

ஒரு நிமிடம் அதிர்ந்த அஸ்வினி, "அப்படி இஷ்டம் இல்லாம நீங்க ஏன் வந்து ஹெல்ப் பண்றீங்க?" என்று கேட்க, வாசலில் நிழலாடியது.

"ஈஸ்வரியம்மா! ஏன் மறைவா நின்னு நாங்க பேசுறதைக் கேக்குறீங்க.. ரகசியம் எல்லாம் இல்லை.. உள்ளே வாங்க" என்று தியாகராஜன் கூறவும் உள்ளே வந்தார் ஈஸ்வரி.

"நான் செய்றது எல்லாம் என்னோட ஜெயந்திக்காக தான்மா.. அவளோட ஃப்ரெண்ட் அஸ்வினுக்காக.. அவன் மனசு கஷ்டப்படக்கூடாதுக்காக.. அவளை சுத்தி உள்ளவங்க எல்லாரும் நல்லா இருந்தா தான் ஜெயந்தி நிம்மதியா இருப்பா. இல்லைன்னா அவகிட்ட சந்தோஷமே இருக்காது. அவ சந்தோசம் எனக்கு ரொம்ப முக்கியம். அதனால வந்தேன்" என்றார் தியாகராஜன்.

ஜெயந்தியைப் பற்றி அஸ்வினும், சில சமயம் அஸ்வினை பார்க்க வரும் அவனுடைய கல்லூரி தோழர்களும் பெருமையாகப் பேசியதைக் கேட்டிருந்த அஸ்வினிக்கு அவள் மேல் ஒரு எரிச்சல் வந்திருந்தது. 'எல்லா ஆம்பளை தடியன்களும் புகழ்றாங்க.. அவ்வளவு பெரிய இவளா அவ?' என்பதுதான் அவள் அடி மனதில் ஓடும் எண்ணம். அதற்கு அடிப்படையான எண்ணம், 'என்னைப் பாராட்ட மாட்டேங்கிறான் என் புருஷன்.. வேற எவளையோ பாராட்டுறான்' என்பதுதான். அது ஜெயந்திக்கு ஓரளவுக்குத் தெரியும். தியாகராஜனுக்கு நன்றாகவே புரியும்.

இப்போது தியாகராஜனும் ஜெயந்தி வானில் இருந்து வந்த தேவதை போல் பேசவும் அவளுக்கு எரிச்சலோ எரிச்சல்.
"பெரிய தேவதை ரேஞ்சுக்கு பில்ட் அப் பண்றாரு.. பொண்டாட்டி ஆம்பளைங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்கு மொத ஆளா நிப்பா.. புருஷன் பொம்பளைங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்கு வந்துருவார் போல" என்று அவள் வாய்க்குள் முணுமுணுக்க,

"நீ சொன்னாலும் சொல்லாட்டிலும் அவ தேவதை தான்மா.. நான் இன்னைக்கு ஒரு மனுஷனா, லீடிங் லாயரா, சமுதாயத்துல மதிப்புமிக்க ஆளாக இருக்கிறேன்னா அது அந்த தேவதையால் தான். சொல்லப்போனா நான் உயிரோட இருக்கிறதே அவளால் தான்.. இல்ல இந்நேரம் கஞ்சா கேஸ்ல கம்பி எண்ணிட்டு இருப்பேன்" என்றார் தியாகராஜன். அஸ்வினியும் ஈஸ்வரியும் அதிர்ந்து போய் அவரைப் பார்த்தார்கள்.



"உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே!"
 
Top