கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துளி எண்ணெய் 15

Akhilanda bharati

Moderator
Staff member
15. மயங்குகிறாள் ஒரு மாது


"நான் சின்ன வயசுல பொறுப்பில்லாதவனா ஃப்ரீக் அவுட்டா சுத்திகிட்டு இருந்தேன்" தியாகராஜன் தன் மனதை திறந்து காட்டத் துவங்க,

'அப்படியா? இவரா? மனுசனைப் பார்த்தா தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரி வெறப்பா இருக்காரு.. இவர் எப்படி பொறுப்பில்லாமல் சுத்தி இருப்பாரு?' என்பது போல் ஈஸ்வரி அஸ்வினியை நோக்கி ஒரு பார்வையை வீசினார். அந்தப் பார்வை பரிமாற்றத்தை தியாகராஜனும் கவனிக்கத் தான் செய்தார். 'என்ன ஆனாலும் இந்த அம்மாவுக்கு குசும்பு போகாது' என்று மனதிற்குள் நினைத்தவர் அதைக் கண்டு கொள்ளாமல் மேலும் பேசத் தொடங்கினார்.

"ஓரளவுக்கு தொழில்ல கால் ஊனி நல்ல‌ வருமானம் வர ஆரம்பிச்சிருந்த நேரம்.. எதுக்கும் கட்டுப்படாம என் இஷ்டப்படி தான் இருந்தேன்.. எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கணும்னு வரும் பொழுது ஜெயந்தியோட வரன் வந்தது. எங்கள் வீட்ல எல்லாரையும் ரொம்ப அட்ராக்ட் பண்ண விஷயம் ஜெயந்தியோட பொறுமையும் பொறுப்பும் தான். யார்கிட்ட கேட்டாலும் இப்படி ஒரு நல்ல பொண்ணை இந்தக் காலத்துல பார்க்கவே முடியாது அப்படின்னு தான் சொன்னாங்க. குறிப்பா அவ காலேஜ்ல யாரா இருந்தாலும் அவகிட்ட வந்து கருத்து கேட்கிறதும் இவ அவங்களை பார்த்துக்கிறதும் பத்தி நிறைய பேர் சொல்லிருக்காங்க.. எங்க வீட்லயும் இவனைத் திருத்துறதுக்கு இதைவிட பொருத்தமான பொண்ணு கிடைக்காது.. ஒரு ஆள் அப்படி இருக்குறப்ப ஒரு ஆள் இப்படி இருந்தா தான் வண்டி ஓடும்ங்கிற நினைப்பு. அதனால ஜெயந்தியையே செலக்ட் பண்ணிட்டாங்க.. கல்யாணம் ஆன புதுசுல ஜெயந்திக்கிட்டே நான் நிறைய பொய் சொல்லி இருக்கேன். சிகரெட்டை விட்டுட்டேன்னு சொல்லுவேன். ஆனா விட மாட்டேன். தண்ணி அடிக்கிறது இதுதான் லாஸ்ட்னு ஒவ்வொரு தடவையும் சொல்லுவேன். அவளும் நம்புவா. ஆனா நான் நிறுத்தல. ஒரு காலகட்டத்துல அவ ரொம்ப மனசுக்குள்ள வச்சு வச்சு வருத்தப்படுறா அப்படின்னு தெரிஞ்ச உடனே அவளுக்குத் தெரியாம தப்பு பண்ண ஆரம்பிச்சேன். இல்லவே இல்லைன்னு சொல்லுவேன் அவர் நம்பிடுவா. அதான் நம்புறாளே, இப்படியே போவோமேன்னு கொஞ்ச நாள் போனேன். அதுக்கப்புறம் என்னை குற்றவுணர்ச்சி வாட்ட ஆரம்பிச்சது.. இவ்வளவு நல்ல பொண்டாட்டியை, நம்ம எது சொன்னாலும் நம்புறவளை இப்படி ஏமாத்துறோமே, அப்படியாவது நமக்கு இந்தப் பழக்கங்கள் எல்லாம் தேவையான்னு மொத்தமா நிறுத்திட்டேன்..

"நான் பண்ணினதைப் பாத்து எங்களோட வீடும் அவளை அவளோட நல்ல குணத்தை மிஸ் யூஸ் பண்ணினாங்க. என் அக்கா குழந்தைகள், தங்கை குழந்தைகள், எங்க அம்மா அப்பா எல்லாரையும் அவ்வளவு நல்ல கவனிச்சுக்குவா.. அவ பார்த்துக்கிறாளேன்னு அவ தலைல எல்லா வேலையும் கட்டிட்டு மத்தவங்க எஸ்கேப்பாக ஆரம்பிச்சாங்க.. அதைக் கூட புரிஞ்சுக்க முடியாத ஏமாளி தான் அவ. இதுக்கு இடையில சாய் அவ வயித்துல வந்தான். வயித்துப் புள்ளையோட அவ கஷ்டப்படுறதைப் பார்க்க முடியாம நான் தான் அவளுக்காகப் பேசி அவ சுமைகள் எல்லாம் குறைச்சேன். அதுக்கும் எங்க வீட்டுல உள்ளவங்களுக்கு என் மேல கோபம் தான்.

"கெட்ட பழக்கங்களைக் குறைச்சுட்டு தொழில்ல கவனமா இருக்கிறப்ப பெரிய பெரிய ஹை ப்ரொஃபைல் கேஸ் வந்தது. வெற்றிகரமா பண்ண ஆரம்பிச்சேன்.. என் அடிப்படை குணம் தான் மாறாதே. மற்ற போதைகள் குறைஞ்ச உடனே வெற்றிங்கிற போதை தலைக்கு ஏற ஆரம்பிச்சது. அப்பதான் ஒரு டிவி நடிகை சம்பந்தப்பட்ட ஒரு சென்சேஷனல் கேஸ் எனக்கு வந்தது. அந்த டிவி நடிகை, அவங்க டைரக்டர் அப்படின்னு அந்த சர்க்கிள் பழக்கம் ஆச்சு. மறுபடியும் பார்ட்டிகளுக்குப் போக ஆரம்பிச்சேன். ஆனா லிமிட்டோட தான் இருந்தேன். ஒரு தடவை அப்படி ஒரு பார்ட்டிக்கு போகும் பொழுது என்னோட தொழில் போட்டியாளர்கள் எனக்கு எதிரா சதி செஞ்சுட்டாங்க. அப்பதான் தெரிஞ்சது நண்பர்கள் என்ற போர்வையில் இருக்கிறவங்க எந்த அளவுக்கும் போவாங்கன்னு.. அந்த பார்ட்டி ஒரு ரேவ் பார்ட்டி. ‌ ஆமா! போதை மருந்துகள் எல்லாம் புழங்குற இடம். நான் சாதாரண பார்ட்டின்னு நினைச்சுட்டு போய் லேசா ஒரு பீர் கிளாஸ் வச்சிட்டு பிரண்ட்ஸ் கூட பேசிட்டு இருந்த சமயம் போலீஸ் அந்த ஏரியாவை ரவுண்ட்அப் பண்ண வந்தாங்க. அந்தக் கூட்டத்துக்கு மத்தியில நிறைமாச கர்ப்பத்தோட ஜெயந்தியும் வந்தா. எனக்கு ஒரு நிமிஷம் இதயமே நின்னுடுச்சு. என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி அங்க இருந்த வேற சிலரோட சேர்த்து என்னையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க" என்று சொல்லி தியாகராஜன் ஒரு நிமிடம் நிறுத்த, ஈஸ்வரி அஸ்வினி இருவர் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள்.

அதுவரை, 'இதெல்லாம் ஒரு விஷயமா? எல்லா குடும்ப இஸ்திரியும் பண்றது தானே.. தியாகச் செம்மல் ரேஞ்சுக்கு பீத்திக்கிறார்' என்று நினைத்திருந்தவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

"நான்தான் அந்த பார்ட்டிக்கு போதை மருந்து சப்ளை பண்ணிருக்கேன் அப்படிங்கறது போலீஸ்க்கு கிடைச்ச தகவல். அது கடைசி நேரத்தில் தெரிஞ்சு என்னை காப்பாத்துறதுக்காக கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தன்னோட ஸ்கூட்டியில் அந்த ராத்திரி நேரத்துல வந்திருக்கா.. என்ன பண்ணா ஏது பண்ணான்னு இன்னும் தெரியலை. அவ்வளவு அமைதியா இருந்த ஜெயந்தி அன்னைக்கு அப்படி ஒரு ருத்ர தாண்டவம் ஆடி இருக்கா. வயித்துப் பிள்ளையை வச்சுக்கிட்டு போலீஸ் கிட்ட வாதாடி, விடிய விடிய அலைஞ்சு மறுநாள் காலையில விடியறதுக்குள்ள என்னை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டா. சாதுமிரண்டால் காடு கொள்ளாதுங்கறது அப்பதான் புரிஞ்சுகிட்டேன். எவ்வளவோ மன்னிப்பு
கேட்க ட்ரை பண்ணியும் ஜெயந்தி என்கிட்ட அடுத்து ஒரு மாசம் வரைக்கும் பேசவே இல்ல. குழந்தை பிறந்து நான் கால்ல விழாத குறையா கெஞ்சின பிறகு தான் மறுபடியும் இயல்பானா.

"இன்னைக்கு வரைக்கும் எனக்கு அந்த சம்பவத்துல என்ன நடந்ததுன்னு முழுசா தெரியாது. அதுக்கப்புறம் என்னுடைய எல்லாத்தையும் அவகிட்டே தூக்கிக் கொடுத்துட்டேன். அவ போடுற கோட்டுப் தான் நடக்குறேன். நானாவது அவளோட கணவன். எனக்கு கவலை படுற மாதிரியே அவளோட ஃப்ரெண்ட்ஸ், கூட பிறந்தவங்க, என்னோட ரிலேட்டிவ்ஸ், வேலைக்காரங்க எல்லாருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனைன்னா அவளோட மனசைப் போட்டு அவ்வளவு குழப்பிக்குவா.. அவளுக்கு இயல்பாவே ஒரு தாய்மை உணர்வு இருக்கிறதால அஸ்வினை, ப்ரீத்தியை, ராஜியை இன்னும் மத்தவங்க நிறைய பேரை அவளோட தம்பிகளாவும் தங்கைகளாவும் தான் நினைக்கிறா.. தயவு செஞ்சு அவளை எந்தக் காரணத்தை கொண்டும் தப்பா பேசிடாதம்மா.. உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியல. என்னவா இருந்தாலும் அந்த எண்ணத்தை மாத்திக்க முயற்சி பண்ணு" என்று கையெடுத்து கும்பிட்டார் தியாகராஜன்.

அவர் கண்களின் ஓரம் கண்ணீர் துளிர்த்து இருந்தது. இதையெல்லாம் எதற்கு நம்மிடம் சொல்கிறார், அதுவும் ஏன் கைகூப்புவது, கண்ணீர் விடுவது என்று இத்தனை உணர்ச்சிகள் என்ற எண்ணம் அஸ்வினிக்கு. அவர் கூறியது ஆழமாக மனதில் இறங்கத் தான் செய்தது. ஜெயந்தி கணவருக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறாள், அதுவும் தவறான பாதையில் போய்த் திரும்பிய மனிதருக்காக? எந்தத் தவறும் செய்யாமல், உழைப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டும் இயங்கும் அஸ்வினுக்கு இதில் ஒரு சதவீதமாவது நான் செய்திருக்கிறேனா என்று யோசித்துப் பார்த்தாள்.

"இல்லை நான் ஒன்னும் அவங்களை தப்பா எல்லாம் நினைக்கல" என்றாள் அஸ்வினி தியாகராஜனிடம். அவள் குரலில் அத்தனை வலு இல்லை.

"அஸ்வின் ஒவ்வொரு முறை எங்க வீட்டுக்கு வரும் பொழுதும், ஜெயந்தி கிட்ட பேசும்போது நீ கோபப்படுறதை என்னால சென்ஸ் பண்ண முடியும்மா.. எந்த ஒரு மனைவிக்கும் கணவன் தன்னைவிட இன்னொரு பொண்ணு கூட குளோஸ் இருந்தா பிடிக்காது. அது அம்மாவா இருக்கட்டும், அக்காவா இருக்கட்டும், பிரண்டா இருக்கட்டும் அவளுக்கு ஒரு வித வருத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனா என்னோட ஜெயந்தி இதுல எந்த கேட்டகரியிலும் வரமாட்டா.. நான் இதுக்கு மேல சொன்னா கொஞ்சம் ஓவரா சொல்ற மாதிரி தான் உங்களுக்கு தெரியும்.. ஆனால் உண்மை அதுதான்"

தன் ஆகப்பெரிய சந்தேகத்தை மீண்டும் அவர் முன் வைத்தாள் அஸ்வினி. "இப்ப நான் அட்மிட்டாகி இருக்கேன்னு அவங்களுக்குத் தெரியுமா, தெரியாதா?" என்றாள். இதை ஏன் கேட்கிறேன், யாரையோ கேட்பதற்கு தனக்கென்ன உரிமை இருக்கிறது என்றும் அவளுக்குத் தோன்றாமல் இல்லை.

"தெரியாதும்மா.. நான் அவளுக்கு சொல்லவே இல்லை.. ஏற்கனவே பல விதமான ஸ்ட்ரஸ்ல இருக்கா.. உங்களோட மேரேஜ் லைப் அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே டிஸ்டர்ப் பண்ற விஷயம். அடிக்கடி புலம்பிக்கிட்டே இருப்பா. அஸ்வினுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் அப்படின்னு சொல்லுவா.. அஸ்வினை அவளுக்கு அவ்வளவு பிடிக்கும்.. என் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது கூட அஸ்வினை அவ சஜஸ்ட் பண்ணா.. வேற ஜாதியா இருந்தாலும் பரவாயில்லை அவனுக்கு கல்யாணம் பண்ணி குடுங்க, நல்லா வச்சுக்குவான் அப்படின்னு சொன்னா. அவங்களோட நட்பை சொந்தத்துல அவ்வளவு பிராட் மைன்டடா எடுத்துக்க மாட்டாங்க அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக நான் வேண்டாம்னு சொன்னேன்" என்று தியாகராஜன் நிறுத்த,

"என்னை அவங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காதுல்ல" என்றாள் அஸ்வினி.

"அப்படி எல்லாம் இல்லவே இல்லம்மா.. இதுவரைக்கும் அவ உன்ன பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசினதில்லை.. அஸ்வினைத் தான் இப்படி இரு, அப்படி இருன்னு சொல்லி இருக்கா.. அதுவும் போக, நாம நடந்துக்குற முறைல தான் குடும்ப அமைப்பு சிதையாம இருக்கிறது இருக்கு அப்படிங்கறது அவர் திரும்பத் திரும்ப சொல்ற விஷயம்.. ஒருத்தர் ஸ்ட்ராங்கா இருந்தாலும் ஒரு மேரேஜை காப்பாத்திடலாம் அப்படின்னு அடிக்கடி சொல்லுவா" என்றார்.

கூடவே, "இன்னொண்ணு கேக்குறேன்.. உனக்கே உள்மனசுல ஒரு பிரச்சனைன்னா ஜெயந்தி வருவான்னு எண்ணம் இருக்கப் போய் தானே அவ வரலையான்னு கேக்குற.. ஈஸ்வரிம்மா, உங்க ரிலேட்டிவ்ஸ் எல்லாரையும் விட்டுட்டு ஜெயந்தி நம்பருக்கு ஃபோன் பண்ணனும்னு உங்களுக்கு எப்படித் தோணுச்சு?" என்க, இருவரிடமும் பதிலில்லை.

"நான் இப்படி எல்லாம்.. இவ்வளவு நல்லவ இல்லை.. ஆரம்பத்துல இருந்து நிறைய சொதப்பி இருக்கேன் இல்ல.. இப்ப கூட இந்த சூசைட் அட்டெம்ப்ட்.. ப்ச்.. தப்பு தான்.. அவருக்கு அவருக்கும் இன்னும் நான் பாய்சன் சாப்பிட்டது தெரியாதுல்ல?" என்று அஸ்வினி சரியாக யோசித்துக் கேட்க,

"ஆமாம்மா.. அவனுக்கும் இன்னும் தெரியாது.. சொல்லிடலாம்னு ஒன்னு ரெண்டு தடவை பேசினேன்.. அவன் புதுசா ஒரு ஜாப் ஆபர்ச்சுனிட்டி வந்திருக்குன்னு ஒரு மாதிரி எக்சைட்டடா இருக்கான்.. அதான் நான் நீ சரியாகி வீட்டுக்குப் போன அப்புறம் இந்த வீக்என்ட் அவனை வரச் சொல்லலாம்னு நெனச்சி இருக்கேன்மா" என்றார்.

சொல்லி முடித்தவுடன் தான், 'ஐயோ அஸ்வின் கூறாமல் அந்த ஜாப் ஆபர்ச்சுனிட்டி ஆபர்சுனிட்டியைப் பற்றி தான் கூறிவிட்டோமோ? இதற்கும் அஸ்வினி கோபிப்பாளே.. அவளிடம் தானே அஸ்வின் முதலில் சொல்லியிருக்க வேண்டும்' என்று நினைத்து தியாகராஜன் நாக்கைக் கடிக்க,

"பரவால்ல அண்ணா.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு, நாம எங்கேயோ போகப் போறோம் அப்படின்னு ஒரு மெசேஜ் போட்டு இருக்காரு" என்றாள் அஸ்வினி.

"நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகிக்கலாம்னு சொல்லிட்டாங்கம்மா.. அதுக்கு முன்னாடி நல்லா கவுன்சிலிங் எடுத்துக்கோ.. இனி ஒரு தடவை இந்த மாதிரி முடிவு எடுக்கவே எடுக்கக் கூடாது. அவ்வளவு நல்ல கப்பிள் நீங்க ரெண்டு பேரும்.. நீங்க சேர்ந்து இருக்குறதைத் தான் நாங்க எப்பவும் விரும்புவோம். சரியா?" என்று கூறிவிட்டு தியாகராஜன் கிளம்ப,

இன்னும் குழப்பம் விலகாத முகத்துடன் கவனத்தை எங்கேயோ வைத்துக் கொண்டு தலையாட்டினாள் அஸ்வினி. ஈஸ்வரி ஏதோ கேட்க வருவதும் வாயை மூடிக் கொள்வதுமாக இருக்க, வாயில் வரை சென்ற தியாகராஜன், "என்னம்மா ஏதும் கேட்கணுமா என்கிட்ட?" என்று கேட்க,

"இல்ல தம்பி.. நீங்களே பிசியான ஆளு எங்களுக்காக ஏற்கனவே நிறைய செஞ்சுருக்கீங்க.." என்றவர்,

"இல்ல.. பாப்பாவுக்குத் தெரியாம தம்பி நிறைய பணம் வச்சிருந்தாரு, அக்கவுண்ட்ல ஆரம்பிச்சுருக்காருன்னு பாப்பா சொல்லுச்சு அதான்.." என்று அவர் இழுக்க, சரியாக அவர் எதைக் கேட்க வருகிறார் என்பது தியாகராஜனுக்குப் புரியவில்லை.

"இப்ப என்ன கேட்க வரீங்கம்மா? உங்களுக்குத் தெரியாம அவன் பண்ற விஷயம் எல்லாம் எனக்கும் ஜெயந்திக்கும் தெரியுமான்னு கேட்க வரீங்களா.. இல்ல, அவன் பண்ணது தப்பு தானே அப்படின்னு நியாயம் கேட்கிறீங்களா?" என்று அவர் கேட்க, ஈஸ்வரி விழித்தார்.

"அம்மா சும்மா இரும்மா!" என்றாள் அஸ்வினி.

"அதில்ல பாப்பா.."
என்று அவர் கூற, ஒரு விதமான சிரிப்பைச் சிந்திய தியாகராஜன், "அவளை பாப்பான்னு கூப்பிடுறீங்க.. நீங்களுமே இன்னும் குழந்தைத்தனமா தான்மா இருக்கீங்க.. இப்படி சொல்றதுக்கு மன்னிச்சுக்கோங்க. உங்க குடும்ப விஷயத்துல தலையிடறது தப்பு தான்.. இருந்தாலும் ரொம்ப நாளா என் மனச உறுத்துற விஷயம் இது. நீங்களும் அஸ்வினியும் அஸ்வினுக்குத் தெரியாம எதுவுமே செய்றதில்லையா என்ன?" என்றார்.

நேரடியாக ஈஸ்வரியும் அஸ்வினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, "அஸ்வின் விலாவாரியா எதையும் சொன்னதில்லைன்னாலும் அப்பப்ப அவன் விளையாட்டா சொல்றதுக்கு நடுவுல சொல்லாம மறைச்சதை வச்சு நானும் ஜெயந்தியும் நிறைய விஷயம் கெஸ் பண்ணி இருக்கோம்.. ரீடிங் பிட்வீன் த லைன்ஸ்னு சொல்லுவாங்களே, அது மாதிரி. உங்க கணவர் இறந்து போகும்போது உங்களுக்கு எவ்வளவு வச்சிட்டு போனார், அதுல நீங்க எவ்வளவு மிச்சம் வச்சிருக்கீங்க.. அதுக்கு முன்னாடியும் பின்னாடியும் உங்களோட லைப் எப்படி இருந்தது, சிக்கனம் சேமிப்பு அதெல்லாம் என்னன்னு உங்களுக்குதா தெரியுமா, இந்த கேள்விகள் நீங்களே உங்களை கேட்டுப் பாருங்க..கடன் வாங்கி ஆடம்பர செலவுகள் நீங்க பண்றது நீங்க சொல்லலேன்னாலும் அஸ்வினுக்கு நல்லா தெரியும்மா.."

"அவரும் தானேங்க வீட்டை விட்டு பிரிஞ்சு இருக்கிறார்.. இரண்டு இடத்தில் குடும்பம் நடத்துறதுன்னா செலவு எவ்வளவு ஜாஸ்தியாகும்?" என்று ஈஸ்வரி கேட்க,

"நல்லா யோசிச்சுப் பாருங்க.. எந்த ஊர்ல, எந்த நாட்டுல இருந்தாலும் அஸ்வின் வீட்டுக்கு வராம இருக்கானா, உங்களுக்குத் தேவையானது எல்லாம் யாரு செய்றா? உங்களுக்கும் வருமானம் வர்ற மாதிரி உங்க கணவரோட கம்பெனியை ஒழுங்குப்படுத்தி இருக்கான்.. பழைய வீட்டு வாடகை, இப்ப புது வீட்டோட லோன், மளிகை பொருட்கள் இதெல்லாம் யார் வாங்கி கொடுக்குறாங்க, குடும்பத்துக்கு அத்தியாவசிய செலவு யார் பாத்துக்குறாங்க நீங்களே யோசிச்சு பாருங்க.. இப்ப கூட ஒரு பாதுகாப்புக்காக தான் பிக்சட் டெபாசிட் போட்டு வச்சிருக்கான். ஏதோ நீங்க ஃபாரின் டூர் போகணும் அதுக்கு லோன் போடணும்னு பேசிட்டு இருந்தீங்களாம். இதெல்லாம் செஞ்சு நடுத்தெருவில் நின்ன குடும்பங்களைத் தான் நான் பார்த்திருக்கேன். இது மட்டும் இல்ல இன்னும் ரெண்டு மூணு இன்வெஸ்ட்மென்ட் கூட பண்றான். எத்தனையோ பார்ட் டைம் ஜாப்ஸ், அதுல இருந்து வர்ற பணம் எல்லாம் உங்களுக்காகத் தான் இன்வெஸ்ட் பண்ணி இருக்கான்" என்று அஸ்வினியைப் பார்த்து பேசிய தியாகராஜன்,

"இதெல்லாம் அஸ்வினும் நீயும் பேசிக்கணும்மா.. நான் பேசலாம் என்று தெரியவில்லை ஆனா ஒன்னு மட்டும் சொல்லுவேன். அவனுடைய இளமை, சக்தி எல்லாத்தையும் உங்க குடும்பத்துக்காக மட்டும் தான் செலவழிச்சிட்டு இருக்கான். அவன் பெத்தவங்களுக்கோ, கூடப் பிறந்தவங்களுக்கோ ஒரு சதவீதம் கூட செய்யல.. அதை எப்பவும் புரிஞ்சுக்கணும்.. ஒரு பொழுதுபோக்கு கூட இல்லாம ஓடிக்கிட்டு இருக்கான். அவனைக் கொஞ்சம் புரிஞ்சுக்கம்மா. ஏற்கனவே அதிகமா பேசிட்ட மாதிரி தோணுது. தப்பா பேசிருந்தா மனசுல வச்சுக்காதீங்க. வரேன்!" என்ற தியாகராஜன்,

"அப்புறம் ஒரு விஷயம், யார் கேட்டாலும் உங்களுக்கு ஃபுட் பாய்ஸனிங்னு சொல்ற மாதிரி ஹாஸ்பிடல்ல சொல்லி வச்சிருக்கேன்.. நீங்களும் ரிலேட்டிவ்ஸ், அப்பார்ட்மெண்ட்ல யாரும் கேட்டாலும் அப்படியே சொல்லுங்க" என்றுவிட்டுக் கிளம்பினார்.

வாழ்வில் முதல் முறையாக ஈஸ்வரியும் அஸ்வினியும் வேறு கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்து இருந்தனர்.


""சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை""
 
Top