கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துளி எண்ணெய் 16

Akhilanda bharati

Moderator
Staff member
16. வானத்தைப் போல


"அப்புறம்.."

"அப்புறம் என்ன.. உங்க குடும்ப விஷயம், தலையிடுறது தப்பு தான், நான் சொல்லக் கூடாது இதை, இப்படியே சிலபல டயலாக் விட்டு, டயலாக் விட்டு சொல்ல நினைச்ச எல்லாத்தையும் சொல்லிட்டேன்"

"இப்பப் புரியுது.. ஏன் உங்க பீல்டுல வேற யாரும் உங்கள அடிச்சுக்கிறதுக்கு இல்லைன்னு.." என்று கூறிய ஜெயந்தி தியாகராஜனின் தோளில் செல்லமாக ஒரு அடி போட்டாள். ஜெயந்திக்கு சொல்லாமலேயே அஸ்வினிக்கு உதவியது என்னவோ போல் இருந்தது தியாகராஜனுக்கு. விலாவாரியாக நடந்தது அனைத்தையும் கூறி, அம்மாவுக்கும் பெண்ணுக்கும் பிரெயின் வாஷ் பண்ணாத குறையாக அவிழ்த்துவிட்டு வந்த அறிவுரைகளையும் கூறி முடித்தார். அதற்கு முன் பல நாட்களாக ஜெயந்திக்கு செய்யாத கவனிப்புகள், கட்டிப்பிடி வைத்தியங்களையும் முடித்து அவளை மனதளவில் தயார் செய்த பின்பே இந்தக் கதையை ஆரம்பித்திருந்தார். அவருக்கே, 'ரொம்பவும் ஜெயந்தியை ப்ரொடக்ட் பண்றேனோ.. வரவர நல்ல விஷயம் மட்டும் தான் அவ காதுல விழனும்னு நான் ரொம்ப மெனக்கிடற மாதிரி எனக்கே தெரியுது.. சரி அப்படியே இருந்தாதான் என்ன' என்ற எண்ணம் தான்.

"இப்பவாவது ஐயாவோட திறமையை புரிஞ்சுகிட்டயே.. உன் வாயால இந்தப் பாராட்டைக் கேக்குறதுக்கு எத்தனை நாள் காத்திருந்தேன்?" என்று கூறி ஜெயந்தியை மேலும் தன்னருகே இழுத்தார் தியாகராஜன்.

அரிதாக அவர்களுக்குக் கிடைக்கும் தனிமையான ஒரு பகல் வேளையாக அது இருந்தது. "உங்க கூட சேர்ந்து எனக்கும் வாய் சாமர்த்தியம் ஜாஸ்தி ஆயிடுச்சு தெரியுமா.. ரேவதி அக்காவை நைசா ஏதேதோ சொல்லி பேக் பண்ணிட்டேன். நாளைக்கு ஊருக்குக் கிளம்புறதா சொல்லி இருக்காங்க" என்றாள் ஜெயந்தி பெருமையுடன்.

"பேசுறதுக்கு நீ என்கிட்ட படிச்சியா? அதை நான் நம்பணுமா? ஏ நாடே கேளு, ஏ ஊரே கேளு.. மாதாஜி என்கிட்ட பேசக் கத்துக்கிட்டாளாம்.." என்க, ஜெயந்தி மீண்டும் ஒரு அடியை வைக்க அப்படியே பேசிக்கொண்டே போனார்கள்.

"இப்படியே படுத்துக்கிட்டு ஸ்வீட் நத்திங்ஸ் பேசி எவ்வளவு நாளாச்சு!" இலக்கில்லாமல் நேரத்தைப் பற்றிய உணர்வில்லாமல் பேசிக் கொண்டே இருந்ததெல்லாம் அவர்கள் திருமணமான புதிதில் தான். அப்போதும் தியாகராஜன் தான் அதிகம் பேசுவார் ஜெயந்தி உம் கொட்டி கேட்டுக்கொண்டே இருப்பாள். தியாகராஜன் மேல் அவளுக்கு ஒரு விதமான மரியாதை கலந்த பயம். குழந்தைகள் பிறந்த பிறகு அதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

"நாமளாவது அப்பப்ப பேசி இருக்கோம்.. அஸ்வின் இப்படிப் பேசுவானான்னே தெரியலை.. அந்தப் பொண்ணும் அவ அம்மாவும் என்னடான்னா அவனோட வரவு செலவுக் கணக்கைப் பத்தி என்கிட்ட கேக்குறாங்க" என்ற தியாகராஜனிடம் ஆயிரத்து ஒன்றாவது முறையாக மருத்துவமனையில் நடந்தவற்றைப் பற்றி கேட்டு தெளிவுப் படுத்திக் கொண்டாள் ஜெயந்தி. தன் தலையீடே இல்லாமல் கணவர் இவ்வளவு பெரிய விஷயத்தை செய்திருக்கிறார் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை.

தியாகராஜன் எல்லாவற்றையும் சொல்லியவர் தங்கள் கடந்த காலத்தைப் பற்றி அஸ்வினியிடம் பகிர்ந்து கொண்டதையும், ஜெயந்தியைப் பெருமையாகப் பேசியதையும் பற்றி மட்டும் சொல்லவில்லை. "இனிமேலாவது அவங்களுக்குள்ள பிரச்சனை வராம இருக்குமா? அஸ்வினுக்கு எப்ப சொல்லப் போறீங்க?" என்று ஜெயந்தி கேட்க,

"நான் சொல்லப் போறதில்ல.. நீ தான் சொல்லப் போறே" என்றார் தியாகராஜன்.

"ஒய் ஒய் (why) இந்த விஷயத்துக்கு உங்களை தான் இன்சார்ஜா அப்பாயின்ட் பண்ணி இருக்கேன்… நீங்களே பாத்துக்கோங்க.. நான் சொன்னா அவன் எங்கே கேட்கிறான்? நக்கல் பண்றேன்னு மொக்கை போடத் தான் லாயக்கு.." என்று யோசித்தாள், "இதுக்கு மேலயும் அவன் கிட்ட சொல்லாம இருந்தா சரியா இருக்காது.. சாய்ங்காலம் பேசுங்க" என்றவள், "சரி நீங்க அப்படியே படுத்து ரெஸ்ட் எடுங்க குழந்தைகளுக்கு ஏதாவது ரெடி பண்றேன்.. சமோசா செஞ்சு தரியான்னு சிந்து கேட்டா" என்ற படியே ஜெயந்தி எழப்போக,

"அதெல்லாம் கடையில வாங்கிக்கலாம்.. கொஞ்ச நேரம் படு.." என்று ஜெயந்தியைத் தன்னுடன் சேர்ந்து அணைத்துக் கொண்டார். மெதுமெதுவே பற்றிய தீயைத் தான் அணைக்க முடியவில்லை. "இன்னிக்கு ஒரு நாள் தான் உங்களுக்கும்.. ரெஸ்ட் தூங்குங்க என்று ஜெயந்தி சொல்ல,

"அப்பப்ப மேஜிஸ்ட்ரேட்டை கோர்ட்டுக்கு லீவு விடச் சொல்லிடலாம். இல்லையா.. இந்த ஜூனியர் தடியன்களை ஆஜராக சொல்லிடலாம்.. இனிமேல் வாரம் ஒரு நாள் மேட்னி ஷோ தான்.. உன் கூட ஸ்பென்ட் பண்றதுக்கு கிடைக்கிற பொன்னான நேரங்களை நான் வீணாக்குறதா இல்ல.. அட்லீஸ்ட் கொஞ்ச நாளைக்காவது.. இன்னைக்கு அவ்வளவு பிரசங்கம் பண்ணிட்டு வந்திருக்கேன்.. நானே அதை ஃபாலோ பண்ணலைனா எப்படி" என்று என்னென்னவோ பேசியவர், முழுதாக முடிக்கும் முன் ஜெயந்தி தூங்கிப் போயிருந்தாள்.

தியாகராஜனுக்குத் தான் தூக்கம் வரவில்லை. பழைய நினைவுகள் காலையில் இருந்தே அலைமோதின. அதனாலேயே எந்த வேலையும் செய்யப் பிடிக்காமல் ஜெயந்தியுடனே இருந்தார். ஜெயந்திக்கு தன் மேலிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் அன்பும் அவரை எப்பொழுது நினைத்தாலும் மெய் சிலிர்க்கச் செய்யும். அப்போதிருந்த அந்த வட்டத்துடனான நட்பும், தீய பழக்கங்களையும் மட்டும்தான் அவள் வெறுத்தாள். அவரது ஒழுக்கத்தின் மேல் எந்த கட்டத்திலும் சந்தேகம் வரவே இல்லை. மாடல்கள், டிவி நடிகைகள் என்று ஒரு குடும்பம் உடைவதற்கான அத்தனை வாய்ப்புகளும் அந்த அத்தியாயத்தில் நிரம்பிக் கிடந்தன. விஷயத்தை லேசுபாசாகத் தெரிந்த தியாகராஜனின் வீட்டினரே கூட அவரை சந்தேகத்துடன் தான் பார்த்தார்கள். ஆனால் ஜெயந்தி அந்தக் கோணத்தில் ஒரு முறை கூட சிந்திக்கவில்லை.

அந்தக் காலத்தில் தியாகராஜனின் வீட்டிலிருந்து அவள் சந்தித்த பேச்சுக்கள் அதிகம். கணவனின் குற்றங்களுக்கு தயங்காமல் மனைவியை நோக்கி விரல் நீட்டும் வைபவம் அங்கும் நடந்தேறியது. கூட்டுக் குடும்பமாக இருந்த போது யாரிடமும் சொல்லாமல் இரவில் வயிற்றுப் பிள்ளையுடன் அவள் எப்படி வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே போகலாம் என்று பெரிய பஞ்சாயத்து வைத்தனர். கைதாகி வெளியில் வந்த அவமானத்தில் குன்றிப் போய் தியாகராஜன் அமர்ந்திருக்க, இது வேறா என்றிருந்தது அவருக்கு.

"அவ மட்டும் ராத்திரி வரலைன்னா இந்நேரம் நான் தூக்குல தான் தொங்கி இருப்பேன்.. வாய மூடுறீங்களா எல்லாரும்?" என்று தியாகராஜன் கத்திய பின்னரே அமைதியாக இருந்தனர். தான் வீட்டில் இருக்கும் பொழுது ஜெயந்தியை யாரும் எதுவும் சொல்வதில்லை, தன் தலை மறைந்த உடன் அவளை பாடாய்ப் படுத்துகிறார்கள், இப்போது தன் மதிப்பு கீழே இறங்கி விடவே, தயக்கமின்றி நேரடியாகத் திட்டுகிறார்கள் என்பதை அவரது புத்திசாலி மூளை கணக்கிட்டுக் கொண்டது. முந்தைய இரவு அந்தப் புயல் காற்றில் படகை தைரியமாக செலுத்தியவளாக, ஒரு ஆளுமையாக அதுவரை இருந்த ஜெயந்தி, வீட்டினர் முன் நனைந்த கோழிக் குஞ்சைப் போல் ஒடுங்கி இருந்ததையும் பார்த்தார். உறவுகளும், அவர்கள் மேல் கொண்ட மரியாதையும் அவளை எப்படி பலவீனப்படுத்துகின்றன என்பதை ஒரு நொடியில் கணக்கிட்டு விட்ட அவர், அதையும் சாதகமாக்கிக் கொண்டார்.

"ஏற்கனவே என் பொண்டாட்டியை நீங்க இப்படித்தான் நடத்துறீங்களா? அப்ப என் மேல எவ்வளவு மரியாதை வச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சிருச்சு.. இப்ப நான் வேற ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவன். சுத்தமா மதிப்பிருக்காது.. டெலிவரி நேரம் அது இதுன்னு அவளுக்கு இன்னும் மனக் கஷ்டத்தை நான் கொடுக்க விரும்பலை. நாங்க தனியாக போய்க்கிறோம்" என்றார்.

ஏற்கனவே இந்த மனையை வாங்கிப் போட்டு அதில் வீடு கட்டுவதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டுதான் இருந்தார். அருகிலேயே வாடகைக்கு ஒரு வீட்டைப் பிடித்து, அடுத்த ஒரு வாரத்தில் யார் சொல்லியும் கேட்காமல் ஜெயந்தியையும் கூட்டிக் கொண்டு வந்து விட்டார். வழக்குகளும் வருமானமும் சீராக வந்து கொண்டிருந்ததால் வீடு கட்டுவது கடினமாக இல்லை. அவளது பாஷையில் அந்த 'bad patch' மிகக் குறுகிய காலம்தான் என்றாலும் அதற்குள் அவள் அனுபவித்து விட்ட வலிகள் அதிகம். சட்டென்று வானிலை மாறி எல்லாம் நல்லபடியாக ஆனதில் ஜெயந்திக்குப் பெரும் நிம்மதியே. இப்போதெல்லாம் பழைய விஷயங்கள் ஜெயந்தியின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பதில்லை. இருந்தும், அவ்வப்போது அவள் அதை நினைப்பதும், அந்த நினைப்பில் அவரது உடல் விரைப்பாகி விடுவதையும் கவனிப்பார். நாளடைவில் அப்படியான இறுக்கமான தருணங்கள் குறைந்தே வந்தன.

குழந்தைகள் பள்ளியில் இருந்து வரும் வந்துவிட்ட அரவம் கேட்க, ஜெயந்தியைத் தொந்தரவு செய்யாமல் எழுந்து வெளியே சென்றார். குழந்தைகளுக்கு வியப்பு. தனக்கு நினைவு தெரிந்து ஒரு நாள் கூட தாங்கள் பள்ளியில் இருந்து வரும் போது அப்பா வீட்டில் இருந்த நினைவு சாய்க்கு இல்லை.

"அம்மா! சமோசா ரெடியா?" என்று கேட்டுக் கொண்டே இரண்டு ஷூக்களையும் திசைக்கொன்றாய் வீசியபடி வந்து தன் பையையும் லஞ்ச் பேகையும் பொத்தென்று கீழே போட்டாள் சிண்ட்ரெல்லா.

"அம்மா தூங்குறாங்க! வாங்க நாம இன்னிக்கு சேர்ந்து கிச்சன்ல ஃபன் பண்ணலாம்" என்று சொன்ன தியாகராஜன், சமையல் கட்டுக்குள் புகுந்தார். என்னென்ன இருக்கிறது என்று அவர் பார்க்க,

"அப்பா அப்பா நூடுல்ஸ் கிண்டலாம் பா" என்றாள் சிண்ட்ரெல்லா. அம்மா மறுத்து விடும் சில உணவுப் பொருட்களை அப்பாவை தாஜா செய்து வாங்கிக் கொள்வது அவளுக்குக் கைவந்த கலை.

"அப்பா வெஜிடபிள்ஸ் போட்டு பண்ணுங்க" என்று சாய் கூற, "சீஸ் போடலாமா?" என்றாள் சிண்ட்ரெல்லா.

"யாராவது ஒருத்தர் சைக்கிள்ல போய் நூடுல்ஸ் பாக்கெட் வாங்கிட்டு வாங்க.. வெஜிடபிள்ஸ் சீஸ் எல்லாமே வீட்ல இருக்கு" என்றார் தியாகராஜன்.

"நான் போறேன்" என்ற சாயிடம்,

"நீ வெஜிடபிள்ஸ் கட் பண்ணு.. நான் போறேன்" என்றபடி அவளிடம் இருந்து சைக்கிள் சாவியை பறித்துக் கொண்டாள் சின்ட்ரெல்லா. அப்போது தான் குரங்கு பெடல் போட்டு அண்ணன் சைக்கிளை ஓட்டப் பழகியிருந்தாள்.

"அதானே! பாய்ஸ் தான் கடைக்கு போகணுமா என்ன? நீ போயிட்டு வாடா செல்லம்" என்று தியாகராஜனும் ஊக்குவிக்க உற்சாகமாக கிளம்பினாள். ஜெயந்தி விழித்து எழுந்த நேரம் லேசாக இருள் மங்க ஆரம்பித்திருந்தது.

"அய்யய்யோ குழந்தைங்க வந்திருப்பாங்களே! பசியோட இருப்பாங்களே, ஏன் இன்னும் எழுப்பலை?" என்று அவள் பதறி அடித்து வெளியே வர அவளுக்காக கொஞ்சம் நூடுல்ஸும் காஃபியும் தயாராக இருந்தன. ஜெயந்திக்கு அவ்வளவு சந்தோஷம். குழந்தைகளிடம் அன்றைய தினத்தைப் பற்றிக் கேட்டுவிட்டு,

"சரி வாங்க, படிக்கலாமா?" என்று அவள் கேட்க,

"இன்னிக்கு படிப்பும் என்னுடைய டிபார்ட்மெண்ட் தான். நாளைக்கு நீ பாத்துக்கோ.. இப்ப போய் மொட்டை மாடியில் போய் நடந்துக்கிட்டே அஸ்வின் கிட்ட பேசிட்டு வா" என்று ஜெயந்தியை அனுப்பி வைத்தார் தியாகராஜன். கூகுள் வெதர் இன்று மழை வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்கிறதா, சொல்லாமல் கொள்ளாமல் இரவு நேரத்தில் மழை வந்து விட்டால் என்ன செய்ய, சென்னையில் சட்டென்று வெள்ளம் வந்து விடுமே என்று தன் மொபைலையும் தியாகராஜனையும் திரும்பி திரும்பிப் பார்த்தபடியே சென்றாள் ஜெயந்தி. 'நினைச்ச மாதிரியே என்னை பேச வைக்கிறார் பார். பிடிவாதம்!' என்று செல்லச் சலிப்பும் கூடவே கிளம்பியது.

அங்கு அஸ்வின் ஒரு நிலையிலேயே இல்லை. சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருந்தான். அங்கு வந்தும் கிருஷ்ணகுமார் அவனை தொடர்பு கொண்டு பேச, இவன் அவரைப் போய் பார்க்க, அடுத்த மாதத்தில் டிரெய்னிங் முடித்து ஓரிரு நாட்களில் அவர்கள் நிறுவனத்தில் அஸ்வின் இணைந்து கொள்ளலாம் என்று பேசி முடிக்க என்று அன்றைய நாள் பரபரவென இருந்தது. ஹுசைனை அந்தப் பெரிய மனிதர் மறுநாள் லஞ்சுக்கு அழைத்திருந்தார். அவரைப் பேட்டி எடுத்தது மிக வெற்றிகரமாக முடிந்திருந்தது. அனேகமாக அன்று இரவு அல்லது மறுநாள் தன் பேட்டி விவரங்களைத் தொகுத்து தான் சார்ந்து இருக்கும் பத்திரிக்கைக்கு அனுப்பி முடித்து விடுவார் ஹுசைன்.

தன்னை சந்திக்க வரும் மனிதர்களில் தனக்குப் பிடித்தவரை அழைத்து விருந்து வைத்து வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பது அந்தத் தலைவருக்குப் பழக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறான். பாரம்பரியமிக்க மூன்று தலைமுறைகள் அரசியல் செய்யும் குடும்பம் அவர்களுடையது. அப்படிப்பட்டவர் விருந்துக்கு ஹுசைனைக் கூப்பிடுவார் என்றும், ஹுசைன் துணைக்குத் தன்னையும் அழைப்பார் என்றும் நினைக்காத அஸ்வின் 'கிளவுட் நைனில்' இருந்தான்.

"மாதாஜி! அஸ்வின் ஓவர் நைட்ல ஒபாமா ஆகப்போறான்.. நடிகர்கள், அரசியல்வாதிகள் ஐயாவோட அப்பாயின்ட்மென்ட்காக க்யூவில் இருக்காங்க" என்ற பில்டப்புடன் அவனது வெற்றியைச் சொன்னான்.

ஜெயந்தி அவனது குரலில் இருந்த மகிழ்ச்சியை கொஞ்ச நேரம் ரசித்துக் கேட்டாள். அப்போதைய மனநிலையில் அஸ்வினியைப் பற்றி அவள் கூற விரும்பவில்லை. "இந்த வீக்கென்ட் இல்லன்னா, அடுத்த வீக்கென்ட் கண்டிப்பா சென்னைக்கு வா" என்று அவள் கூற,

இப்போது தானே போய்விட்டு வந்திருக்கிறேன் எதற்காக திரும்பியும் வரச் சொல்கிறாள் என்று யோசித்துப் பார்க்காத அஸ்வின், "சரி சரி வரேன் எப்படியும் ஐயா பெரிய ஆள் ஆகிட்டே போறேன்.. ட்ரீட் கேட்டாலும் கேட்பீங்க.. நீங்க கேக்குறதுக்கு முன்னாடி நானே குடுத்துடறேன்.. அதானே எனக்கு மரியாதை" என்று வளவளத்து விட்டு ஃபோனை வைத்தான்.

மறுநாள் ராஜியை பிக்கப் செய்ய ஏர் போர்ட்டுக்குப் போக வேண்டும், அதற்கு முன்பாக அஸ்வினியை போய்ப் பார்த்து டிஸ்சார்ஜ் நடைமுறைகளுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள் ஜெயந்தி. அஸ்வினியின் எண் அவளது அலைபேசியில் இருந்தது. இதுவரை அவளிடம் நேரில் பார்க்கும் போது ஹாய் ஹலோவைத் தவிர எதுவும் பேசியதில்லை. போன் உரையாடல்கள் சுத்தமாக இருந்ததில்லை.

"டேக் கேர். ஆல் வில் பீ ஃபைன். குட் நைட்!" என்று மெசேஜ் போட்டு விட்டாள். ஆன்லைனில் இருந்த அஸ்வினி உடனடியாக பார்த்து விட்டாள். நீண்ட நேரமாக 'டைப்பிங்' என்றே வந்தது. அதன் பின் ஒரு கட்டை விரல் ஸ்மைலியும், ஹார்ட்டினையும் மட்டும் அனுப்பி விட்டுவிட்டு "தேங்க்யூ" என்று பதிலளித்தாள் அஸ்வினி. நல்ல வேளையாக அன்று ஸ்டேட்டஸ் எதையும் அவள் மாற்றவில்லை.

ப்ரீத்திக்கு காலை முதலே லேசான ஜலதோஷம் பிடித்திருந்தது. வைதேகியை அண்ணா நூலகத்திற்கு அழைத்துச் செல்வதாக அன்று திட்டம். எங்கும் போகவில்லை. அந்த ஹோட்டல் அறையிலேயே அலைபேசியையும், டிவியையும் மாறி மாறிப் பார்த்து போர் அடித்துப் போய் தூங்கி விட்டாள் வைதேகி. மதியத்திற்கு மேல் லேசான குளிர் ஜுரம் வந்தது ப்ரீத்திக்கு. ஒன்றுக்கு இரண்டு போர்வைகளைப் போட்டு தன்னைப் போர்த்தினாள். மருத்துவ உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, ஹோட்டலில் எதும் இன் ஹவுஸ் டாக்டர் இருக்கிறார்களா என்று கேட்டாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் ஹோட்டலிலுள்ள டிஸ்பென்ஸரிக்கு அவர்கள் வரச் சொல்ல, மெல்ல எழுந்து தன்னை சுத்தம் செய்து கொண்டாள். கண்ணாடிக்கு முன் தலை வாருவதற்காக அமர, காரணமே இல்லாமல் கண்ணீர் வந்தது. எப்படி வந்தது என்றே தெரியாமல், ஹுசைனை உடனடியாகப் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் சூறாவளி போல் சுழன்றடித்து அவளைத் தாக்கியது.

அந்த கணம், தன் கடந்த கால வாழ்க்கை, மாஜி கணவன் ஆனந்த், அவன் குடும்பத்தினர் மேலிருக்கும் பயம், ஹுசைனின் வேலை குறித்த அச்சம், வைதேகியின் ஒப்புதல், இந்தியா- பாகிஸ்தான் கலாச்சார வித்தியாசங்கள் என்று எந்தத் தடைகளும் அவளுக்கு ஞாபகம் வரவில்லை. வைதேகியைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தாள். அவள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க, அறையைப் பூட்டிவிட்டு டாக்டரிடம் சென்று காட்டி விட்டு வந்தாள். வரும் பொழுது தீர்க்கமாக அந்த முடிவை எடுத்தாள்.

ஜெயந்திக்கு போன் அடித்தவள், 'எனக்கு ஒரு சின்ன ஹெல்ப், உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேன்' போன்ற எந்த வித முகமன்களும் இல்லாமல் நேரடியாக, "நாளைக்குக் காலைல வைதேகியை உங்க வீட்ல டிராப் பண்ணிட்டு நான் டெல்லிக்குப் போயிட்டு வரேன். ஹுசைனைப் பாக்கணும்.. நீ தான் ஒரு ரெண்டு நாளைக்கு வைதேகியைப் பாத்துக்கணும்" என்றாள்.


நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே என் மேல் பிழை!
 
Top