கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துளி எண்ணெய் 17

Akhilanda bharati

Moderator
Staff member
17. நட்புக்காக


"இன்னும் என்மேல் கோபம் போகல போல" தியாகராஜன் கேட்க, ஒன்றும் பேசாமல் தலையைத் திருப்பிக் கொண்டாள் ராஜி. காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த தியாகராஜன் லேசாகத் திரும்பி ராஜியைப் பார்த்து சிரித்தார். அருகில் அவளது மகன் பிரித்வி கடமையை கண்ணாக செல்போனை பார்த்துக் கொண்டிருந்தான்.

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லங்கண்ணா" என்றாள் ராஜி.

"இல்லையே அந்த அண்ணா ல ஏதோ ஒன்னு மிஸ்ஸிங் ஆகுதே! இது தெரியுமாண்ணா, அது தெரியுமாண்ணான்னு வாய மூடாம பேசுற ராஜியா இது?" தியாகராஜன் விடாமல் கேட்கவும், ஒரு பெருமூச்சு விட்ட ராஜி, மீண்டும் மகனைப் பார்த்தாள். அவன் எப்போது ஏதோ ஒரு வீடியோவை ஆன் செய்திருந்தான். அவனது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஹெட் செட்டை எடுத்து ஃபோனில் மாட்டி, "இதுல கேளு!" என்றாள். அவன் தங்கள் உரையாடலை கவனிக்கவில்லை என்று உறுதியான பின்,

"உங்களைப் பத்தி நான் வச்சிருந்த இமேஜே வேற. இப்படி எல்லாம் நடக்கும்னு நினைச்சே பாக்கல.. அதான் பழைய மாதிரி இருக்க முடியல" என்றாள்.

ஒன்றும் சொல்லாமல் காருக்கு வெளியே வெகு தூரத்தில் தன் பார்வையை நிலைத்த தியாகராஜன், "பரவால்லம்மா எனக்கும் பழைய மாதிரி.. உங்க காலேஜ் லைஃப், அப்புறம் எங்களோட மேரேஜ் முடிஞ்ச அந்த சில நாட்கள்ல இருந்த மாதிரி இருக்கலாம்ன்னு தான் ஆசை. எல்லா மனுஷனுக்கும் ஒரு காலகட்டத்தில் ஒரு சறுக்கல் வருது. எனக்கும் வந்துச்சு. இனிமேல் அந்தத் தப்பு நடக்காது. அதான் ஜெயந்தி என்னை காப்பாத்திட்டாளே, சத்தியவானை மீட்டுட்டு வந்து சாவித்திரி மாதிரி.. நீயும் தான் அவளுக்கு எவ்வளவு மாரல் சப்போர்ட் குடுத்திருக்கே.. தேங்க்யூ! தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்" என்றார் தியாகராஜன். கூடவே, "அதுக்கப்புறம் நாம மீட் பண்ணவே இல்லல்ல?" என்று அவர் கேட்க,

"இருந்தாலும் உங்களுக்கெல்லாம் எப்படிங்கண்ணா அப்படி மனசு வருது? ஏமாளி பொண்டாட்டியை ஏமாத்துறதுக்கு? என்னைக்காவது ஒரு நாள் அவ கண்டுபிடிச்சா நம்ம மேல உள்ள மரியாதை போயிடுமே.. அவ முகத்துல எப்படி முழிக்கிறது.. இதெல்லாம் யோசிக்கவே மாட்டீங்களா?" என்று ராஜி பல ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த பிரச்சனையை நினைத்து படபடக்க,

ஹெட்ஃபோனை மீறியும் அம்மாவின் குரல் உரக்கக் கேட்கவும் லேசாக நிமிர்ந்து பார்த்தான் பிரித்வி. பின் தன் வழக்கம் போல் மீண்டும் மொபைலில் மூழ்கினான். "இப்ப கேட்டு பாரு ஜெயந்தியை. அவ நில்லுன்னா நிக்கிறேன். உட்காருன்னா உட்கார்றேன்.. என்னை மாதிரி ஒரு இளிச்சவாய் புருஷனைப் பார்க்க முடியுமா? அத விடு.. ஒரு நாள் பொழுது என் மேல கோபப்பட்டு, என்னை விட்டு இருக்க முடியாம அவ அம்மா வீட்டுக்கு போய் இருப்பாளா என்ன?" என்று தியாகராஜன் பெருமிதத்துடன் சொல்ல,

"இதுதான்! இதுதான் உங்களோட பிரச்சனையே.. ஏன் நீங்கல்லாம் நில்லுன்னு சொல்லாமையே நாங்க நிக்கிறோம். உக்காருன்னு சொல்லாமலே நாங்க உட்கார்றோம். ஒன்னு ரெண்டு தடவ நாங்க சொன்னதைக் கேட்டா தான் என்ன? வைஃப் பேச்சைக் கேட்டா இளிச்சவாயனா? எனக்கு என்னமோ இந்த ஆம்பளை இனத்து மேலேயே நம்பிக்கை வர மாட்டேங்குது?"

"ஏன்மா! உன் வீட்டுல ஏதாவது பிரச்சனையா? எனித்திங் சீரியஸ்?"
என்று தியாகராஜன் கேட்க,

"சீரியஸும் இல்லை. ஒன்னும் இல்ல. எல்லாருக்கும் அவங்கவங்க காரியம் ஆகணும். அவ்வளவுதான். மாசம் பூரா வானத்திலிருந்து இறங்காதவர் மாதிரி இருப்பார் என் வீட்டுக்காரர். அவருக்கு ஏதாவது காரியம் நடக்கணும், அதுவும் எனக்கு பிடிக்காத ஏதாவது ஒரு விஷயத்தை நடத்திக்கணும்னா அதுக்கு ரெண்டு நாள் முன்னாடியே போடுவாரு பாருங்க ட்ராமா.. கொஞ்சுறது என்ன, குழையுறது என்னன்னு பின்னாடியே வர்றது.. சின்ன பிள்ளைங்க தோத்துடும் போங்க.. நாங்க யாராவது அப்படி பண்றோமா? இந்த ஆம்பளைங்க தான பொம்பளைங்களை நம்ப வச்சு கழுத்தறுக்கிறீங்க" என்றாள் ராஜி.

"அப்ப தலையணை மந்திரம்.. அது இதெல்லாம் பொம்பளைங்க போடுறது இல்ல.. இப்ப ஆம்பளைங்க தான் போடுறாங்கன்னு சொல்றியா?" என்று தியாகராஜன் கேட்க,

"இப்படி சீரியஸா எதையாவது பேசினா டிராக் மாத்தி விட்டுட வேண்டியது.. அதுவும் உங்க இனத்துக்கே உரிய பழக்கம் தானே.." என்றாள் ராஜி.

"நாம எல்லாருமே மனித இனம் தான் மா.. அப்படித்தான் நான் நினைச்சுகிட்டு இருக்கேன். இல்லையா? பின்ன, நீ வேற இனமா?"

"இதுல நக்கல் வேற.." என்றபடி திரும்பிக் கொண்டாள் ராஜி. மனதில் ஓரத்தில் எவ்வளவு பெரிய வக்கீல் அவர், தன்னை விட எவ்வளவு பெரியவர். ஏன் இப்படி வாக்குவாதம் செய்கிறோம். முன்பெல்லாம் இவரோடு சேர்ந்து கொண்டு ஜெயந்தியைக் கிண்டல் அடித்திருக்கிறோம். அஸ்வின் வந்தான் என்றால் அவனையும் சேர்த்துக் கொண்டு ஜாலியாகக் கிண்டல் செய்திருக்கிறோம். இப்போது என்ன இது சண்டை மாதிரி என்ற எண்ணம் தோன்றினாலும் 'மூச்' என்றவாறு அதை புறம் தள்ளினாள்.

இவர்களது நட்பில் எப்போதும் இருக்கும் எதிர்பார்ப்பில்லாத அன்பு தியாகராஜனை எப்போதும் வியப்படைய வைக்கும். 'நமக்கும் ஃப்ரண்ட்ஸ் எத்தனை பேர் இருக்காங்க.. எல்லாத்தையும் ஷேர் செய்ய முடியலையே.. ஃபீஸ் இவ்வளவு வாங்கினேன், இவ்வளவு இன்வெஸ்ட் பண்ணினேன்ங்குற மாதிரி மனம் திறந்து சொல்றதில்லை.. பொண்ணுங்க அசால்ட்டா நடக்குறதை அப்படியே ஷேர் பண்ணிக்கிறாங்க' என்று அவருக்கு அடிக்கடி தோன்றும். சொல்லப்போனால் மெல்லிய பொறாமை கூட தோன்றும்.

ஜெயந்தி முதல் குழந்தையைக் கருவுற்ற சில நாட்களில் அவ்வளவு பூரிப்புடன் இருந்தாள். தியாகராஜனுக்கும் ஏதோ சாதித்து விட்ட உணர்வு. இளம் வயது, இளரத்தம். அந்த சமயத்தில் நடந்த வழக்குகள் சிலவற்றில் வெற்றி கிடைத்திருக்க, ஒருவித மிதப்பிலேயே இருந்தார். அப்போது வந்தது தான் பிரச்சினைகளுக்குக் காரணமான இந்த டிவி நடிகையின் வழக்கு. ப்ரீத்தியின் வழக்கைப் போலவே இதுவும் செய்தித்தாள்களில் பேசப்பட்டது. ஆனால் எதிர்மறையாக. அந்த டிவி நடிகை நடத்திவந்த ஒரு நிதி நிறுவனத்தில் ஏகப்பட்ட மோசடிகள் என்று வழக்கு பதியப்பட்டிருந்தது. நிறைய பேரிடம் காசு வாங்கிவிட்டு அவளது கணவன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட, எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் ஏற்கனவே அவரை டைவர்ஸ் செய்து விட்டேன் என்றாள் அந்த டிவி நடிகை.

சற்று பிரபலமானவள் அவள். நான்கைந்து தொடர்களில் நடித்துக் கொண்டும் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் இருந்தாள். அத்தகைய ஹை ப்ரோபைல் வழக்கு தியாகராஜனுக்கு வந்தபோது அவரது தந்தை உட்பட நிறைய பேர் வேண்டாம் இதை எடுத்துக் கொள்ளாதே என்றார்கள். "பொறாமைல சொல்றீங்களா?" என்று அவர்களிடம் சொன்ன தியாகராஜன் வழக்கை எடுத்துக் கொண்டார். அது நடந்த ஆறு ஏழு மாதங்களில் அவரது போக்கு ஜெயந்திக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. கருவுற்றிருக்கும் தோழியைப் பார்க்க வந்திருந்த ராஜிக்கு ஜெயந்தி விஷயங்களைச் சொல்ல, அவ்வளவு கோபம் ராஜிக்கு.

தியாகராஜனுக்கும் அந்த நடிகைக்கும் தொடர்பு என்றெல்லாம் பத்திரிக்கையில் கிசுகிசு வந்தது. "இப்படி எல்லாம் செய்ய மாட்டார் டி!" என்றாள் ஜெயந்தி உறுதியாக.

"இந்த அளவுக்குப் போறவர் அதை மட்டும் விட்டு வைப்பாராக்கும். தானா மேலே வந்து விழுகிற டைப் அந்த பொம்பளை. அப்பன்னா எந்த ஆம்பளை தான்டி விட்டு வைப்பான்? நீ இன்னும் நம்பிகிட்டே இருக்க.. உன்கிட்ட நல்லா பேசிப் பழகுனா உடனே அவரை நம்பிடுவியா?" என்று ராஜி திட்ட, அப்போதும் ஜெயந்திக்கு தியாகராஜனின் மேல் அபார நம்பிக்கை.

கர்ப்ப காலத்தில் ஒரு முறை அழுத்தம் தாங்காமல் ஜெயந்திக்கும் தற்கொலை எண்ணம் வந்தது. அதைப் பேசிப் பேசியே மாற்றியவள் ராஜி. ஊருக்கே அறிவுரை சொல்லும் ஜெயந்தியின் வலிகளை அப்போது ராஜி வாங்கிக் கொண்டாள். அதனால் அவளது நெஞ்சில் பாரம் ஏறிப் போனது. அந்த பாரம் இன்னும் எங்கோ ஓரிடத்தில் ஒழிந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த கஷ்டமான காலகட்டத்தில் கணவன் மேல் ஜெயந்தி வைத்திருந்த நம்பிக்கையே இன்று வரை அவர்களது நிம்மதியான வாழ்விற்கு அடித்தளமாக இருக்கிறது. அந்த வழக்கில் ஜெயித்து அந்த டிவி நடிகையைக் காப்பாற்றி விட்ட பின் நடந்தது தான் அந்த பார்ட்டி. பார்ட்டி, கைது, அவமானம் அனைத்தும் பார்த்தபின் விழித்துக் கொண்ட தியாகராஜன், தனக்குத் தெரிந்த எல்லா வழிகளிலும் விசாரித்தார்.

தன்னுடைய முட்டாள்த்தனம் அவருக்குப் புரிந்தது. ஏற்கனவே அந்த நடிகை செய்த ஏமாற்று வேலையைத் தெரிந்தே தான் களத்தில் இறங்கியிருந்தார். அது கூடத் தெரியாத அளவிற்குக் குழந்தை இல்லை அவர்‌. நம்பிக்கை, மனைவியிடம் விசுவாசம் எல்லாவற்றையும் தாண்டி பல சராசரி ஆண்களையும் போல் அந்தப் பெண்ணின் மீது லேசாக ஒரு ஈர்ப்பும் அவருக்கு இருந்தது. காரியம் ஆனவுடன் தியாகராஜனுக்குத் தெரியாமல் நடந்த சில விவகாரங்கள், இவரை மாட்டி விட்டுவிட்டுத் தப்பிக்க அந்த நடிகை, டைவர்ஸ் செய்து விட்டதாகக் கூறிய அந்தக் கணவன், அவர்களை அறிமுகப்படுத்தி வைத்த நண்பர் எல்லாரும் கூட்டாளியாக செயல்பட்டது தெரிந்தது.

கணவனிடம் பேசுவதை சுத்தமாக நிறுத்தினாள் ஜெயந்தி. 'உனக்கெல்லாம் இது தேவையா ராசா? நேர்மையா, நல்ல கேஸா எடுத்து கொஞ்சமா சம்பாதிக்கறதே போதாதா?' என்பது போல் ஜெயந்தி ஒரு முறை பார்க்க, அத்துடன் விட்டவர் தான், ஜெயந்தி சொல்லும் வழக்குகளை மட்டும் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார். இதற்காக ஜெயந்தி ஒரு கிராஷ் கோர்ஸ் கூட படிக்க போனாள். கிட்டத்தட்ட ஒரு டியூஷன் மாதிரி. அதன் பின் தியாகராஜனுக்கு அறிவுரை கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டாள்.

அப்போதெல்லாம் ராஜிக்குத் திருமணமாகவில்லை. தன்னுடைய ஆணாதிக்கம் நிரம்பிய ஊரை, அதன் கட்டுப்பாடுகளை ராஜிக்கு அறவே பிடிக்காது. "இதைப் போலவே ஒரு ஆளைத்தான் கட்டிக்கனும். வேற வழியில்லை" என்று அடிக்கடி புலம்புவாள். ஏதேனும் அதிசயம் நடந்து தான் எதிர்பார்க்கும் நற்குணங்களுடன் ஒரு ராஜகுமாரன் வந்துவிட வேண்டும் என்பது அவளது அடிமனதின் ஆசை. படித்து முடித்த கையுடன் வெளிநாட்டு வேலைக்குப் போய் விட்ட மாப்பிள்ளை, தான் சம்பாதித்துத் தான் இங்கு ஊரில் குடும்பத்தையே தலைநிமிரச் செய்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் பெரும் நம்பிக்கை இருந்தது அவளுக்கு. அது முழுதும் நிறைவேறவில்லை. 'நான் நம் குடும்பத்து ஆள் போல் பிற்போக்குவாதி இல்லை' என்று சொல்லிக் கொண்டு அதே பிற்போக்குத்தனத்தைக் கடைபிடிப்பவனாக இருந்தான் அவள் கணவன் சரவணன். வெகு சில நாட்கள் ராஜி வீட்டிலிருந்தபடியே வேலை செய்தது கூட அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு வேண்டும் என்றால் தான் பேசுவான், அவசியத்திற்குத் தான் ராஜியும் பேச வேண்டும். பேச்சே உயிர் மூச்சு என்ற வகையைச் சேர்ந்த ராஜிக்குக் கையை கட்டி, வாயையும் கட்டி போட்டது போல் இருந்தது துபாயில். அதுதான் அத்தனை மன அழுத்தத்துக்கும் காரணம்.

"நான் மாறிடலையா? அதை மாதிரி காலம் எல்லாத்தையும் மாத்தும்.. அவர் உன்னைப் போல் மாறுவார், நீயும் அவருக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாறுவே.." என்றார் தியாகராஜன்.

பரபரப்பாக இருந்த அந்த ஏர்போர்ட் பார்க்கிங்கில் அவ்வளவுதான் அவர்களால் பேச முடிந்தது. துபாயிலிருந்து விடுமுறைக்காக வந்த ராஜியை பிக்கப் செய்வதும், திடீர் பயணமாக ப்ரீத்தி டெல்லிக்குக் கிளம்பியதால் ஏர்போர்ட்டில் வைத்து வைதேகியை அழைத்துக் கொள்வதும் சேர்ந்து அமைந்துவிட்டது. இன்றும் எனக்கு கோர்ட் இல்லை, உனக்கு டிரைவர் வேலை பார்க்க வருகிறேன் என்று தியாகராஜன் சொல்ல ஜெயந்தி ஒரு நிமிடம் மயக்கமே போட்டுவிட்டாள்.

ஏர்போர்ட்டுக்கு வந்த இடத்தில் தான் தியாகராஜனுக்கும் ராஜிக்கும் பல வருடத்தைய கோபங்களை, வருத்தங்களை வெளிக்காட்டிக் கொள்ள நேரம் அமைந்தது. அதற்குள் வைதேகியைக் கைப்பிடித்து அழைத்து வந்து காருக்குள் ஏறினாள் ஜெயந்தி. வைதேகியைப் பின்புறம் அமர வைத்து விட்டு அவள் தியாகராஜனுக்கு அருகில் அமர, காருக்குள் சூழ்ந்திருந்த அசாதாரணமான சூழலைக் கவனித்து விட்டு, "என்ன ரெண்டு பேருக்கும் ஏதாவது சண்டையா?" என்றாள் தியாகராஜனைப் பார்த்து.

"ஹாய்! நீதான் குட்டி ப்ரீத்தியா? உன் பெயர் என்ன?" என்று ராஜி வைதேகியிடம் கேட்க,

"ஐ அம் வைதேகி ஆன்ட்டி. ஹவ் டு யு டூ?" என்று கையை நீட்டினாள்.

"வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த பிள்ளைன்னா இப்படி இருக்கணும்.. எவ்வளவு மரியாதை தெரிஞ்சவளா இருக்கா.. இதோ இவனும் இருக்கானே" என்று பிரித்வியின் தலையில் ஒரு கொட்டு கொட்ட, அம்மாவைத் திரும்பி முறைத்து விட்டு மீண்டும் தன் விளையாட்டில் மூழ்கினான் அவன்.

"ப்ரீத்தி எங்கே? என்ன, இவளை உன்கிட்ட தள்ளிவிட்டுட்டாளா?" என்று ராஜி ஆரம்பிக்க,

"ராஜி கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா? வீட்ல போய் பேசலாம்" என்றாள் ஜெயந்தி. இருந்தாலும், அந்த ஒரு வாசகம் அரைகுறையாக வைதேகியின் காதில் விழுந்து விட்டது. லேசாக முகம் கசங்கிப் போனது அவளுக்கு‌.

அதை உணர்ந்து கொண்ட தியாகராஜன், "வெல்கம் ட்ரின்க் மாதிரி வெல்கம் ஐஸ் கிரீம் சாப்பிடலாம். நேச்சுரல்ஸ் ஐஸ்கிரீம் பார்லர் ஒண்ணு பக்கத்துல இருக்கு. போகலாமா?" என்று கேட்க, "ஓகே அங்கிள்!" என்று வைதேகிக்கு முன்பாகக் கூறினான் ப்ரித்வி.

அங்கே செக்கிங் செய்துவிட்டு போர்டிங் கேட் அருகிலிருந்த ஒரு சிறிய உணவகத்தில் அமர்ந்திருந்தாள் பிரீத்தி. கண்கள் கலங்கி சிவுசிவு என்று இருந்தன. காய்ச்சல் மாத்திரை எடுத்திருந்தாலும் லேசாக அசதி இருந்தது. ஒன்றுக்கு இரண்டு மாஸ்க்குகளை அணிந்திருந்தாள். உடல் சூடு தெரிந்தால் எங்கே ஃப்ளைட்டில் ஏற்றாமல் விட்டுவிடுவார்களோ என்ற பயம். வெகுநாட்களுக்குப் பிறகு கோவிட் பயம் இல்லாமல் கொஞ்சம் இயல்பாக இருந்தது விமான நிலையம். மொபைலை எடுப்பதும், ஹுசைனின் எண்ணைப் பார்ப்பதும், மீண்டும் வைப்பதுமாக இருந்தாள். திடீரென்று உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த செய்தியில் திரையில் முழுவதுமாக ஹுசைனின் முகம்.

'என்ன ஆச்சு?' என்று அவள் பார்க்க அது ஹுசைன் அந்த பெரிய தலைவரை பேட்டி எடுத்ததைப் பற்றிய செய்திச் சுருக்கம். ஒன்றும் இல்லாததையே ஊதி பெரிதாக்கும் அகில இந்திய மீடியா அதையும் பெரிதாக்கித் தான் காட்டியது. முதலில் ஹுசைனைப் பற்றி இவர் யார் இப்படி அப்படி என்று பெருமையாகக் கூறினார்கள். அவர் ஏற்கனவே எடுத்திருந்த புகழ்பெற்ற புகைப்படங்கள், அவருடைய வேலை பின்னணி இவற்றைக் காட்டினார்கள். 'எப்படியாவது இதெல்லாம் கலெக்ட் பண்ணிடறாங்க' என்று நினைத்த பிரீத்தி, 'அதான் கூகுள்ல எல்லாம் வருதே.. போதாதா?' என்றும் நினைத்துக் கொண்டாள். அறிமுகம் முடிந்ததும் அந்தப் பெரிய தலைவர், அவருடைய முக்கியத்துவம் எல்லாம் சொன்னவர்கள் ஹுசைன் அவரை எடுத்த பேட்டியைப் பற்றியும் அதன் முக்கியமான விபரங்களையும் பற்றி கூறினார்கள். இதை எல்லாம் ஐந்து நிமிடத்திற்குள் முடித்துவிட்டு, ஹுசைனுக்கு விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது, அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் போலீஸ் பாதுகாப்பு, இதையெல்லாம் பற்றி சொல்லச் சொல்ல, பிரீத்தியின் முகத்தில் பய ரேகைகள். கண்களில் நீர் வடிந்து விடுமோ என்ற நிலையில் திரையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது என்ன தீவிரவாத அச்சுறுத்தல் என்று அவளுக்கு தெரிந்து கொள்ள வேண்டும். இந்த டிவியிலாவது சொல்கிறார்களா என்று அவள் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்ததில் தனக்கு எதிரே வந்து அமர்ந்தவனை அவள் கவனிக்கவே இல்லை.

இதற்கு முன் உலகம் முழுவதும் இப்படி பத்திரிக்கையாளர்கள், போட்டோகிராபர்கள் என்று தீவிரவாத அச்சுறுத்தல் யார் யாருக்கு இருந்திருக்கிறது, அதில் சிலரை எப்படி தீவிரவாதிகள் பிடித்தார்கள், பிடிபட்டபின் தப்பி வந்த பத்திரிக்கையாளர்கள் யார் யார், கொலையானவர்கள் யார் யார், கடத்தப்பட்டவர்களின் நிலை என்னவென்று வெளியே தெரியாமலே போன பத்திரிக்கையாளர்கள் யார் யார் என்று அந்த செய்தி நீண்டு கொண்டே போக, ப்ரீத்திக்கு கண்களும் இதயமும் வெளியே வந்து விடும் போல இருந்தது.

அவ்வப்போது கண்ணை மூடியும் திறந்து அவள் அதையே பார்க்க, அவளுக்கு எதிரே வந்து அமர்ந்திருந்தவன் அந்தத் திரையையும் அவள் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான். கடைசி வரை அந்த செய்தியில் ஹுசைனை அச்சுறுத்துபவர்கள் யார் என்றும், அது என்ன விதமான அச்சுறுதல் என்றும் சொல்லவே இல்லை. யூகங்களாகவும் பழைய கால சம்பவங்களின் தொகுப்பாகவும் அது இருந்தது. தலைப்பில்‌ ஏதோ போட்டுவிட்டு, செய்தியில் வேறு ஏதோ சொல்வது இவர்களுக்குப் புதிதா என்ன, இதைப் பார்ப்பதற்கு சும்மா இருக்கலாம். இன்னும் இரண்டு மணி நேரம் பொறுத்தால்‌‌ நேரிலேயே போய் பார்த்துவிடலாம் என்று திரையிலிருந்து பார்வையை விலக்கிக் கண் மூடினாள்.

ஹுசைனை பார்த்தவுடன் என்ன சொல்வது, எங்கே போய்த் சந்திப்பது என்று ஒரு முறை கண் மூடி யோசித்த ப்ரீத்தி, கண்களைத் திறந்த போதுதான் எதிரே அமர்ந்திருந்த அவனைப் பார்த்தாள். அந்த நிமிடத்தில் கொஞ்சமும் அவள் எதிர்பார்த்திராத ஆள் அவன். இதுவரையிலான ப்ரீத்தியின் கசப்பான வாழ்க்கைக்கு ஒரே காரணமும், வாழ்வின் முழு முதல் எதிரியாகவும் இருந்த அவளது முன்னாள் கணவன் ஆனந்த் அவள் முகத்தையே பார்த்திருந்தான்.


தொடரும்



தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?
 
Top