கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துளி எண்ணெய் 18

Akhilanda bharati

Moderator
Staff member
18. வீடு


"மன்னிச்சிடு ப்ளஸ் இன்னொரு பெர்சனுக்கு மூவ் ஆன் ஆயிடுன்னு ரெண்டு வார்த்தை சொல்லலாம்னு தான் வந்தேன். இப்ப முதல் வார்த்தை மட்டும் போதும்னு தோணுது. ஐ அம் சாரி" என்றான் ஆனந்த். கொஞ்ச நேரமாகவே ப்ரீத்தியை கவனித்திருப்பான் போலும். டிவியில் வந்த செய்தியும், ஹுசைன் முகம் வந்ததும் ஏற்பட்ட பதட்டமும், அதற்கு அவள் முகத்தில் வந்து போன பாவனைகளையும் கவனித்து ப்ரீத்தியின் மனநிலையைப் புரிந்து கொண்டான். அவனை அறியாமல் ஒரு பெருமூச்சு வெளியே வந்தது.

ஆனந்த் வந்து கண்ணெதிரில் அமர்ந்ததையே ப்ரீத்தி இன்னும் ஜீரணிக்கவில்லை. காய்ச்சல் வேகத்தில் எதுவும் காட்சிப்பிழை தோன்றுகிறதா என்று தான் முதலில் பார்த்தாள். பின் அவனே பேசவும் பேசிய விஷயத்தை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

"வாட்?!" என்றாள்.

திருமணமாகி உடன் வசித்த கொஞ்ச நாட்களில் இவ்வளவு அருகிலிருந்து தன் முகத்தைப் பார்த்திருக்கிறானா, தான் அவன் முகத்தைப் பார்த்திருக்கிறோமா என்பதே நினைவில் இல்லை. 'நேற்று வரை.. இல்லை.. இரண்டு நாட்களுக்கு முன்பு வரை இவன் என்னை கண்காணிக்கிறானா, இவனது ஆட்கள் எங்கும் தென்படுகிறார்களா என்று பயந்து பயந்து இருந்தது என்ன.. இப்போது அந்த நினைப்பே இல்லாமல் இருப்பது என்ன' என்று யோசித்தாள்.

அவன் மட்டும்தான் வந்திருக்கிறானா என்று சுற்றும்முற்றும் பார்வையை ஓட்டினாள். அவள் நினைப்பது அவனுக்குப் புரிந்தது. "உன்னால எதுவும் தொந்தரவு வந்துடுமோன்னு உன்னை ரொம்ப நாள் வரை கண்காணிச்சது உண்மை. இப்ப நீ சென்னை வந்ததும் தெரியும். அப்பா அப்பப்ப உன்ன பத்தின தகவல் கலெக்ட் பண்ணிட்டு தான் இருக்கார்" என்றான்.

'அதானே! நாய் வாலை நிமிர்த்த முடியுமா' என்பது போல் அவள் பார்க்க,

"நீ ரொம்ப நல்ல பொண்ணு. ஆனா நான் உனக்கு ராங் சாய்ஸ். என்னடா காலம் கடந்த ஞானோதயம்னு பார்க்குறியா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு ஏதோ ஒரு பழமொழி சொல்லுவாங்களே.. அது தெரியாதவன் இல்ல நான்.. என்னைப் பொறுத்தவரை நம்மளோடது மேரேஜ் ஆஃப் கன்வினியன்ஸ். எங்க அப்பா சொன்னதுக்குத் தலையாட்டினேன். உனக்கே தெரியும் அதுக்கு முன்னாடியே லண்டன்ல நான் வேற பொண்ணோட லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல இருந்தேன். கட்டாயத்துக்காகத் தான் உன்னை பண்ணிக்கிட்டேன். அதனால அப்பாவுக்கு லாபம் கிடைச்சுது. லண்டன் போன பிறகாவது உண்மையை சொல்லி உன்னை ப்ராப்பரா டைவர்ஸ் பண்ணி இருக்கலாம். சராசரி இந்திய ஆம்பளை மாதிரி யோசிச்சுட்டேன்…"

அதுவரை ஒன்றும் பேசாமல் குனிந்திருந்த ப்ரீத்தி, சட்டென்று நிமிர்ந்து பார்க்கவும், "சாரி சாரி! சராசரிக்கும் கீழானவன் தான் நான். எப்படியோ உன்கூடவும் ஒரு லைஃப் ஸ்டார்ட் பண்ணி, பேபி வந்து அதுக்கப்புறம் நமக்குள்ள சண்டை வந்து, நான் நடந்துகிட்ட விதம் எதுவுமே சரியில்லை"

"எதுக்காக இப்ப இப்படி ஒரு கன்ஃபெஷன்?" என்று கடுமையான குரலில் பிரீத்தி கேட்க,

"யார்கிட்டயாவது கன்ஃபெஸ் பண்ணித் தானே ஆகணும்.. வாழ்க்கை எப்பவும் நம்மை உச்சாணி கொம்புல வெச்சிருக்குறதில்ல.. என்னிக்காவது தலை குப்புற தள்ளி விட்டுடுது தானே.. உன்னை கண்காணிக்க ஆள் வச்சேன் உன் குழந்தையை அழ அழத் தூக்கிட்டு ஓடி வந்தேன். இப்ப இன்னொரு மேரேஜ் ஆப் கன்வீனியன்ஸ்ல மாட்டியிருக்கேன். இதுல நான் தப்பிக்கவே முடியாது" என்றதும்,

'நீ எப்படி போனா எனக்கு என்ன' என்பதான அசுவாரசியமான பார்வையை ப்ரீத்தி அவன் மேல் வீசினாள். அவனைப் பார்த்த அதிர்ச்சி, அவன் மன்னிப்பு கேட்டதில் ஒரு திருப்தி, மனநிறைவு (gratification), ஒரு ஆசுவாசம் இனி தன்னை தொல்லை செய்ய மாட்டான் என்பதில் வந்த நிம்மதி, இவையெல்லாம் அடுத்தடுத்து வந்துபோக, அதன்பின் பழைய கால கோபங்கள் எல்லாம் திரண்டு வந்து இதோ வெடிக்கப் போகிறேன் என்று நின்றது. மாஸ்க் மட்டும் இல்லை என்றால் காரித் துப்பியே இருப்பாள்.

தன்னுடைய விமானத்திற்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்று விமான நிலைய அறிவிப்புப் பலகையையும், தன் கைக்கடிகாரத்தையும் பிரீத்தி திரும்பிப் பார்க்க, குறிப்பை உணர்ந்து கொண்ட ஆனந்த்,

"உன்கிட்ட சொல்லிட்டேன்னா இனிமே நிம்மதியா இருப்பேன்.. பிடிக்கலைன்னாலும் கேளேன். ஒரே ஒரு நிமிஷம் தான்" என்றவன், "அப்பாவுக்கு இப்பவும் அரசியல் வாழ்க்கையில ஏதோ பிரச்சனை. அதனால திரும்பியும் எனக்கு ஒரு கல்யாணம். அவர் காட்டின இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணியிருக்கேன். அவ ஒரு பக்கா ரவுடியோட பொண்ணு. அன்டர்வேர்ல்டு கனெக்ஷன் கூட இருக்கு. இப்ப என்னை கண்காணிக்கவே ஆள் சுத்திக்கிட்டு இருக்கு. இன்னைக்குக் கூட அவங்களோட திரை மறைவு வேலை ஒண்ணுக்காகத் தான் போய்க்கிட்டு இருக்கேன்.. எனக்கு விருப்பமே இல்லாம.." என்று ஒரு பெரிய பெருமூச்சை உதித்தவன்,

"முடிஞ்சா, உங்க டாடி சாரி கேட்டார்னு நம்ம பொண்ணு.. சாரி உன் பொண்ணு வைதேகி கிட்ட சொல்லிடு. சாரி ஃபார் எவ்ரிதிங்" என்று கூறிவிட்டு எழுந்தான் ஆனந்த். முதுகெலும்பு இருந்தும் இல்லாதவர்கள் நடை எப்படி இருக்கும் என்பதை ப்ரீத்தி நேரில் பார்த்தாள்.

ஐந்து நிமிடம் கழித்து, நடந்தவை நிஜம் தானா என்று கிள்ளிப் பார்த்துக் கொண்டாள் ப்ரீத்தி. அப்படி ஒரு ஆசுவாசம். கடவுள், அதிர்ஷ்டம் இதன் மேலெல்லாம் எப்போதோ விட்டுப் போயிருந்த நம்பிக்கை மீண்டும் வந்தது ப்ரீத்திக்கு. தன் வாழ்வும் தேவதைக் கதைகளில் வருவது போல் மாறப் போகிறதா என்று நினைத்தாள். விமானத்தில் ஏறுவதற்கான அறிவிப்பு வரவும் மகிழ்ச்சியை மறைக்க முடியாமல் 'கமிங் டு மீட் யு!' என்று ஹுசைனுக்கு ஒரு மெசேஜை டைப் செய்து கூடவே ஒரு ஹார்ட்டினையும் விட்டு, அதனை அனுப்பும் முன் அலைபேசியை ஏரோபிளேன் மோடுக்கு மாற்றினாள். எந்திரப் பறவை அவளுக்காகக் கதவுகளை விரியத் திறந்து வைத்துக் காத்திருந்தது.


தொடர்ந்த தொலைபேசி அழைப்புகள், அடுத்தடுத்து வந்த மெயில்கள், பாராட்டு மழைகள், புதிதாக வந்த வாய்ப்புகள் இப்படி ஒவ்வொன்றாக சமாளிக்கவே நேரம் சரியாக இருந்தது ஹுசைனுக்கு. தன் பணிக்காலத்தின் முக்கியமான நாட்களாக இந்த இரு நாட்களையும் கருதினார். கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துவிட்டதாக ஒரு நிறைவு இருந்தது. அந்தத் தலைவர், இதுவரை தான் வெளியில் சொல்லாத விஷயங்களை, சுதந்திரப் போராட்ட காலம் முதல் மக்கள் பார்வைக்கு வராத சில விஷயங்கள், தன் கட்சி, இளமைப் பருவம் என்று நிறைய மனம் திறந்திருந்தார். அவருடைய வாழ்நாளில் 'ஒன்ஸ் இன் எ லைஃப் டைம்' பேட்டியாக இது அமைந்திருக்கிறது என்று பேட்டியிலேயே குறிப்பிட்டார். அதை வீடியோ ரெக்கார்டிங் செய்து ஹுசைன் சில காட்சிகளை மட்டும் வலைத்தளங்களில் பகிர, ஊரெங்கும் இதே பேச்சாக இருந்தது. சமூக வலைத்தளங்கள் ஊடகம் முழுவதும் ஹுசைனும் அந்தத் தலைவருமே நிறைந்திருந்தனர்.

பரபரப்புகள் முடிந்து கிடைத்த கொஞ்ச நேரத்தில் வாட்ஸ் அப்பைத் திறந்து பார்த்த ஹுசைனுக்கு ப்ரீத்தி அனுப்பிய குறுந்தகவல் கண்ணில் பட்டது. 'எப்பொழுது வருகிறார். ஏன் வீண் அலைச்சல்' என்று பதில் அனுப்புமுன் வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. அஸ்வின் இரண்டு மூன்று நாட்களாக ஹுசைன் கூடவே சுற்றி விட்டு, "பாஸ் ஊருக்குப் போனது, உங்க கூட சுத்தினதுன்னு சரியாவே கோர்ஸ் அட்டென்ட் பண்ணல.. அப்புறம் இன்னும் எக்ஸ்டென்ஷன் கொடுத்துடுவாங்க. நான் வரேன்!" என்று ஹுசைனின் வீட்டிலேயே விட்டுச் சென்றிருந்தான்.

கதவைத் திறந்த ஹுசைன் ப்ரீத்தியைக் கண்டதும் அப்படியே நின்றார். குறைந்தது ஐந்து நிமிடத்திற்கு நின்றபடியே இருந்திருப்பார்கள். அடுத்ததாக ஹுசைனுக்கு வந்த அலைபேசி அழைப்பில் தான் உணர்வு பெற்றார்கள். காய்ச்சல் எங்கோ ஓடிப்போய் விட்டது ப்ரீத்திக்கு.

"எவ்ரிதிங் ஓகே?" என்று ஹுசைன் கேட்க, "ம்" என்று தலையாட்டினாள் ப்ரீத்தி. அதுவரை சுற்றுப்புறத்தையே கவனிக்காதவள், அஸ்வின் எங்கே, வேறு யாரும் இருக்கிறார்களா என்று பார்வையை ஓட்டினாள். அஸ்வினின் வீட்டைத் தன்னுடைய வீடு போல் பாவித்து தண்ணீரைக் கொண்டு வந்து நீட்டினார் ஹுசைன்.

"அப்புறம் என்ன ஸ்பெஷல்?" என்று ஹுசைன் கேட்க, தன் கல்லூரிக் காலத்திற்குப் பின் முதன் முறையாக நீளமாகப் பேசினாள் ப்ரீத்தி. பேசினாள், பேசினாள், பேசிக் கொண்டே இருந்தாள். தான் கடந்து வந்ததை, எதை நினைத்து பயப்படுகிறேன் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொன்னாள்.

"நவ் ஐ திங்க் ஐ அம் ஹோம்" என்று கடைசியாக அவள் கூற, எதிரிலிருந்த சோபாவில் இருந்து அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஹுசைன். 'ஐயோ நான் பாட்டு பேசிக்கிட்டே போறேனே! இவன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டே ஒரு வருஷம் இருக்கும். அதுக்கப்புறம் அதைப் பத்திப் பேசவே இல்லை. நானா லூசு மாதிரி ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேனோ?' என்ற எண்ணம் ஒன்று திடீரென்று தோன்ற, திருதிருவென்று விழித்தாள் ப்ரீத்தி.

"நீ.. நீங்க.. சாரி உங்க மனநிலை என்னன்னு கேட்காமலே பேசிட்டேன்" என்று அவள் கூற,

"எஸ்! இட் இஸ் ஹோம். யூ ஆர் மை ஹோம்! எப்ப நம்ம வீட்டுக்கு போகலாம்? என்று கேள்வி எழுப்பி விட்டு அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தான்.

தன் தயக்கம் பயம் குழப்பம் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு அவன் தோளில் தலை சாய்த்தாள் ப்ரீத்தி. வெகு நாட்களுக்குப் பின் இரு வேறு புயல்களில் சிக்கித் தவித்த படகுகள் இரண்டும் நிம்மதியாகக் கரை ஒதுங்கியது போல் இருந்தது.

வேலை முடித்து வந்த அஸ்வின், வீட்டில் புதிதாக ஒரு நபரைப் பார்த்துவிட்டு விசிலடித்து, "ஓஹோ! ஐயாவோட குட்டி அப்பார்ட்மெண்ட் இப்ப மினி காதல் கோட்டையா இருக்கு டோய்!" என்க, ப்ரீத்தி வெட்கப்பட்டு சிரித்தாள்.

"ஏய் ப்ரீத்தி! நீ இப்ப என்ன பண்ணின? வெக்கமா பட்ட? சொல்லிட்டு செய்மா! என் பிஞ்சு நெஞ்சு தாங்காது" என்று அவன் கூற, அருகிலிருந்த புத்தகத்தை எடுத்து அவன் தலையில் அடி வைத்தாள் ப்ரீத்தி.

"வாட் இஸ் ஹி டெல்லிங்?" என்று ஹுசைன் கேட்க,

"ரெண்டு நாளா மொழிபெயர்ப்பு வேலை பார்த்து முழி பிதுங்கிப் போச்சு. இனிமே நீயே ட்ரான்ஸ்லேட்டர் வேலை பாரும்மா தாயே.. நான் போய் என் பொண்டாட்டி கிட்ட போன் பேச போறேன்.. அன்னையில் இருந்து இன்னைக்கு வரைக்கும் இந்த லவ்வர்ஸ் சகவாசமே எனக்கு ஆகாது. இப்பப் பாரு.. எனக்கு என் பொண்டாட்டியைத் தேடுது.. அவ என்ன மூட்ல இருக்காளோ" என்று கூறிய அஸ்வின் உணவுக்கு ஆர்டர் செய்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்தான்.

அங்கு ஜெயந்தி அஸ்வினியை டிஸ்சார்ஜ் செய்து, தன் காரில் அஸ்வினியின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தாள். கூடவே, தளர்ந்து போன முகத்துடன் ஈஸ்வரியும், வீட்டிற்கு மூன்று நாட்களுக்குப் பின் வீட்டுக்குப் போகும் மகிழ்ச்சியுடன் குழந்தைகளும் வந்தன.

"நீங்க தானே மாதாஜி ஆன்ட்டி? டாடி சொல்லுவாங்களே!" என்று கிருத்திக் சொல்ல, "டாடி காணும்? எங்கே?" என்று வீட்டுக்குள் தேடினாள் அவன் தங்கை. ராஜியை, "வீட்ல ரெஸ்ட் எடுத்துக்கிட்டே குழந்தைகளைப் பார்த்துக்கோ!" என்று சொல்லிவிட்டு ஜெயந்தி மருத்துவமனைக்கு விரைந்திருந்தாள். அன்றைக்கு அவளது நாள் மிகவும் பரபரப்பாகக் கழிந்தது.

"வீட்ல எங்க ஃப்ரண்ட் ராஜி வந்திருக்கா. ப்ரீத்தியோட பொண்ணு கூட அங்கதான் இருக்கா.. நான் போகணும்.. உடம்பைப் பாத்துக்கோ.. எப்ப வேணாம் பேசு. எதுவானாலும் சரி. நாங்க இருக்கோம். பாத்துக்கலாம். ஃபீல் ஃப்ரீ. பீ ஹேப்பி!" என்று ஜெயந்தி அஸ்வினியிடம் கூறிவிட்டு கிளம்பிய சமயம் அஸ்வினியின் ஃபோன் அடித்தது.

பெருக்கெடுத்த காதல் உணர்வுடன் அஸ்வின் அவளுக்குத் தொலைபேசியில் அழைத்திருக்க, ஒரு முறை முழுவதுமாக ரிங் அடித்து அழைப்பு நின்றது. அதை எடுக்காமலேயே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அஸ்வினி. அடுத்த முறையும் அழைப்பு வரவே, ஃபோனை எடுத்து ஜெயந்தியிடம் கொடுத்து,

"அக்கா நீங்களே அவர்கிட்ட ஏதாவது பேசி சமாளிச்சிடுங்க. ப்ளீஸ்!" என்றாள். ஜெயந்தியை நேரடியாக அவள் விளித்துப் பேசுவது இதுதான் முதல் முறை. பொது நிகழ்ச்சிகளில் பார்க்கும்போது வேண்டா வெறுப்பான ஒரு புன்னகையுடன் நிறுத்திக் கொள்வாள். ஜெயந்தி கேட்கும் கேள்விகளுக்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்வாள்.

'அக்காங்குறா! சமாளிக்கச் சொல்றா, ப்ளீஸ் வேறு போடுறா! நம்ம வீட்டுக்காரர் பெருசா பேய் ஓட்டியிருக்கார் போலவே' என்று ஜெயந்திக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம். ஃபோனை வாங்கி அழைப்பை ஏற்று, "டேய் அஸ்வின்! நான் தான் டா!" என்றாள். பின்னே, மனைவிக்கு போன் செய்யும் கணவன் முதலில் முத்தம் கித்தம் கொடுத்து விட்டால் என்ன செய்வது.

"நீ எப்படி எங்க வீட்ல? அதுவும் அஸ்வினி ஃபோன்ல? உனக்கு எதுவும் உடம்பு கிடம்பு சரியில்லையா?" என்றான் அஸ்வின். 'டேய் லூசு நான் நல்லா தான்டா இருக்கேன்.. உன் ஓவர் கான்ஃபிடன்ஸ்க்கு ஒரு அளவே இல்லையா?' என்று நினைத்த ஜெயந்தி, "அஸ்வினிக்கு கொஞ்சம் ஃபுட் பாய்சனிங் ஆயிடுச்சு. ஹாஸ்பிடல் போயிட்டு இப்பதான் வந்தோம்.
ஹெல்ப்க்காக கூப்பிட்டிருந்தா. இப்ப நல்லா இருக்கா. நீ என்னத்த வெட்டி முறிக்கிற. இங்கே கிளம்பி வா!" என்றாள்.

"அச்சச்சோ என் செல்லத்துக்கு என்ன ஃபுட் பாய்சனிங்? அன்னைக்கு நான் செஞ்சு வெச்சிட்டு வந்த புளிக்குழம்பு ரொம்ப டேஸ்டா இருந்துச்சுன்னு கிருத்திக் சொன்னானே.. ஒருவேளை அதை வச்சு வச்சு சாப்பிட்டாளா? என் பொண்டாட்டிக்கு என் மேல ரொம்ப அன்புன்னு தெரியும். ஆனால் இப்படி பழைய குழம்பை நக்கி நக்கி சாப்பிடுற அளவுக்கு அன்புன்னு இப்பதான் தெரியும்" என்றான் அஸ்வின்.

"டேய் மரமண்டை! உன் கிட்ட பேசுறதுக்கு எனக்கு ஆவியில்லை.. ராஜி வந்திருக்கா.. நான் கிளம்புறேன். ஒழுங்கு மரியாதையா அடுத்த ஃப்ளைட் புடிச்சு வீடு வந்து சேரு"

"இப்படி மாத்தி மாத்தி டெல்லிக்கும் சென்னைக்கும் யாராவது ஸ்டண்டிங் அடிச்சுக்கிட்டே இருந்தா இந்த ஏர்லைன்ஸ் எல்லாம் நஷ்டத்தில் இருந்து மீண்டுரும்ல மாதாஜி?" என்று அஸ்வின் கேட்க,

"நீ மட்டும் பக்கத்துல இருந்தேன்னா இந்நேரம் சட்னி தான்டா மகனே" என்றாள் ஜெயந்தி.

"என்னைக் கிளம்பி வர சொல்ற சரி.. இங்க ரெண்டு காதல் புறாக்கள் அதுவும் வயசான காதல் புறாக்கள் ஜொள்ளு விட்டுட்டு உட்கார்ந்து இருக்கே.. அவங்களை எப்படி தனியா விட்டுட்டு வர்றது? காதல் கோட்டையா இருக்கிற என் அப்பார்ட்மெண்ட்ல எதுவும் கசமுசா ஆயிடுச்சின்னா?" என்றான்.

"யாரைடா சொல்ற?" என்று ஜெயந்தி கேட்க,

"நம்ம ப்ரீத்தி அக்காவும் ஹுசைன் மாமாவும் தான். ஒரு காவியக் காதலுக்கு நான் சாட்சியா உட்கார்ந்து இருக்கேன் மாதாஜி! இந்த ப்ரீத்தி பொண்ணு நம்ம கிளாஸ்ல ரெண்டு மூணு பேரை அலையவிட்டு நோ சொன்னாளே, அதுவும் நல்லதுக்குத் தான் போல. அப்புறம் ஒருத்தன் அவ வாழ்க்கையில விளையாடிட்டு எஸ்கேப் ஆயிட்டானே அதுவும் ரொம்ப நல்லதுக்கு போல. இப்படி ஒரு காதல் காவியத்தைப் படைக்கிறதுக்குத் தான் இவ்வளவும் நடந்திருக்குன்னு நினைக்கிறேன். அதுவும் ஸ்டேட் விட்டு ஸ்டேட் லவ்வு, நாடு விட்டு நாடு லவ்வு இதெல்லாம் பாத்துருப்ப.. இங்கே பாரு.. கண்டம் விட்டு கண்டம் அளவுக்கான லவ்வு.. தெரியும்ல.. உலகத்துல பாதிய சுத்தி வந்து என் கண்ணு முன்னாடி லவ் பண்றாங்க.. சரி நீ என்ன பண்ற, அத்தனை பேரையும் உங்க வீட்ல வச்சுப் பாக்குற இல்ல.. அப்படியே என் பொண்டாட்டி பிள்ளைகளையும் கூட்டிட்டு போய்ப் பாரு.. அந்த மாமியார்க் கிழவியை மட்டும் விட்டுட்டு போயிடு" என்று அவன் கூற,

"எஃப்எம் ஒளிபரப்பைக் கூட ஒரு நிமிஷம் நிறுத்துவாங்கடா. நீ உன் வாயை மூடவே மாட்டே.. இப்ப நான் போன் லவ் ஸ்பீக்கர்ல இருக்குன்னு சொன்னா என்னடா செய்வே?" என்று ஜெயந்தி கேட்க,

"அந்த வார்த்தையை மட்டும் சொல்லிடாத மாதாஜி.. அப்புறம் கன்ஃபார்மா டைவர்ஸ் தான். அப்புறம் ப்ரீத்திக்கு ஒரு பாகிஸ்தான் மாப்பிள்ளை பார்த்த மாதிரி எனக்கு ஒரு ஆப்கானிஸ்தான் பொண்ணோ ஆப்பிரிக்கா பொண்ணோ நீ தான் பாக்கணும் சொல்லிட்டேன்" என்றான்.

"இப்ப எனக்கு லைட்டா நெஞ்சு வலிக்குது.. ஃபோனை வை தெய்வமே" என்றவாறு ஃபோனை கட் பண்ணிய ஜெயந்தி, அஸ்வினியிடம் மீண்டும் "டேக் கேர்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

பார்த்தது பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் அஸ்வினி. எவ்வளவு இயல்பாகப் பேசிக் கொள்கிறார்கள்? கணவன் பேசும் முறை ஏற்கனவே தெரியும். இவள் எப்படி அம்மா போல் அக்கா போல் அவனை அதட்டுகிறாள்? இவளை எல்லாம் எனக்கு எதிரி போல் நினைத்திருக்கிறேன்? என்னை வீட்டில் விட்டுவிட்டு இப்போது அடுத்து சிலரை கவனிக்க ஓடிவிட்டாள். என்னுடைய அழுக்கான எண்ணங்கள் மற்றும் அவளுக்குத் தெரிந்தால்! 'சே!' என்று நொந்து கொண்டாள் அஸ்வினி.

அப்படியே அமர்ந்த வாக்கில் அவள் கண் மூட, "இந்த ஜெயந்தி நல்ல பொண்ணு தான்.. ஆனா மாப்பிள்ளை கிட்ட இவ்வளவு உரிமையா பேச வேண்டாம் அவ.. இந்த மாப்பிள்ளையும்.." என்று ஈஸ்வரி ஆரம்பிக்க,

"அம்மா தாயே! போதும்மா! முடியலைம்மா!" என்று இரண்டு கைகளையும் கூப்பியவள் சோர்வையும் பொருட்படுத்தாது அடுக்களைக்குள் சென்று எளிதான உணவைத் தயார் செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தாள். உடனடியாக கணவனின் மடியில் சாய்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது.
**
ஆனந்தம் விளையாடும் வீடு- இரு
அன்றில்கள் ஒன்றான கூடு


தொடரும்
*
 
Last edited:
Top